Print Page Options
Previous Prev Day Next DayNext

Book of Common Prayer

Daily Old and New Testament readings based on the Book of Common Prayer.
Duration: 861 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 89

எஸ்ராகியனாகிய ஏத்தானின் ஒரு மஸ்கீல்

89 கர்த்தருடைய அன்பைக்குறித்து என்றைக்கும் நான் பாடுவேன்.
    என்றென்றுமுள்ள அவரது உண்மையைப்பற்றி நான் பாடுவேன்.
கர்த்தாவே, உமது அன்பு என்றென்றும் நிலைக்கும் என்று உண்மையாகவே நான் நம்புகிறேன்.
    உமது உண்மை வானத்தைப்போலத் தொடர்கிறது.

தேவன், “நான் தேர்ந்தெடுத்த அரசனோடு ஒரு உடன்படிக்கை செய்துகொண்டேன்.
தாவீதே, உன் குடும்பம் என்றென்றும் நிலைத்திருக்கும்படிச் செய்வேன்.
    என்றென்றைக்கும் உமது அரசு தொடருமாறு செய்வேன்” என்றார்.

கர்த்தாவே, நீர் வியக்கத்தக்க காரியங்களைச் செய்கிறீர்.
    வின்ணுலகம் இதற்காக உம்மைத் துதிக்கும்.
ஜனங்கள் உம்மைச் சார்ந்திருக்கமுடியும்.
    பரிசுத்தரின் கூட்டம் இதைப்பற்றிப் பாடும்.
பரலோகத்தில் கர்த்தருக்கு நிகரானவர் எவருமில்லை.
    “தெய்வங்களில்” எவரையும் கர்த்தரோடு ஒப்பிட முடியாது.
தேவன் பரிசுத்தமானவரைச் சந்திக்கிறார்.
    அவருடைய தூதர்கள் அவரைச் சுற்றியிருப்பார்கள்.
அவர்கள் தேவனுக்குப் பயந்து அவரை மதிப்பார்கள்.
    அவரைக் கண்டு பயபக்தியோடு நிற்பார்கள்.
சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, உம்மைப் போன்றோர் வேறெவருமில்லை.
    உம்மை நாங்கள் முழுமையாக நம்பமுடியும்.
நீர் பெருமிதத்தோடு கடலை ஆளுகிறீர்.
    அதன் கோபமான அலைகளை நீர் அமைதிப்படுத்த முடியும்.
10 தேவனே, நீர் ராகாபைத் தோற்கடித்தீர்.
    உமது சொந்த வல்லமைமைமிக்க கரங்களால் நீர் உமது பகைவர்களைச் சிதறடித்தீர்.
11 தேவனே, பரலோகத்திலும், பூமியிலுமுள்ள அனைத்தும் உமக்குரியவை.
    உலகையும் அதிலுள்ள அனைத்தையும் நீரே உண்டாக்கினீர்.
12 வடக்கு, தெற்கு, அனைத்தையும் நீர் படைத்தீர்.
    தாபோர் மலையும் எர்மோன் மலையும் உமது நாமத்தைத் துதித்துப் பாடும்.
13 தேவனே, உமக்கு வல்லமை உண்டு!
    உமது வல்லமை மேன்மையானது! வெற்றியும் உமக்குரியதே!
14 உண்மையிலும் நீதியிலும் உமது அரசு கட்டப்பட்டது.
    அன்பும் நம்பிக்கையும் உமது சிங்காசனத்திற்கு முன்பு நிற்கும் பணியாட்கள்.
15 தேவனே, உம்மை நேர்மையாகப் பின்பற்றுவோர் உண்மையிலேயே மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
    அவர்கள் உமது தயவின் ஒளியில் வாழ்கிறார்கள்.
16 உமது நாமம் அவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக்கும்.
    அவர்கள் உமது நன்மையைத் துதிக்கிறார்கள்.
17 நீரே அவர்களின் வியக்கத்தக்க பெலன்.
    அவர்களுடைய வல்லமை உம்மிடமிருந்து வரும்.
18 கர்த்தாவே, நீரே எமது பாதுகாவலர்.
    இஸ்ரவேலின் பரிசுத்தமானவரே எங்கள் ராஜா.
19 உம்மைப் பின்பற்றுவோருக்குத் தரிசனம் தந்த நீர், “கூட்டத்திலிருந்து ஒரு இளைஞனை நான் தேர்ந்தெடுத்தேன்.
    அந்த இளைஞனை முக்கியமானவனாக்கினேன். அந்த இளம் வீரனை ஆற்றலுடையவனாக்கினேன்.
20 நான் எனது பணியாளாகிய தாவீதைக் கண்டெடுத்தேன்.
    விசேஷமான எண்ணெயால் அவனை அபிஷேகம் செய்தேன்.
21 என் வலது கரத்தால் தாவீதைத் தாங்கினேன்.
    எனது வல்லமையால், அவனை வலிமையுள்ளவனாக்கினேன்.
22 தேர்ந்தெடுத்த அந்த அரசனைப் பகைவன் தோற்கடிக்க முடியாமற்போயிற்று.
    தீயோர் அவனைத் தோற்கடிக்க இயலவில்லை.
23 அவனது பகைவர்களை நான் அழித்தேன்.
    நான் தேர்ந்தெடுத்த அரசனைப் பகைத்தவர்களை நான் தோற்கடித்தேன்.
24 நான் தேர்ந்தெடுத்த அரசனை எப்போதும் நேசித்து அவனைத் தாங்குவேன்.
    அவனை எப்போதும் ஆற்றல் பெறச்செய்வேன்.
25 நான் தேர்ந்தெடுத்த அரசனைக் கடலுக்கு அதிகாரியாக வைத்தேன்.
    அவன் ஆறுகளைக் கட்டுப்படுத்துவான்.
26 அவன் என்னை நோக்கி, ‘நீரே என் தந்தை.
    நீர் என் தேவன், என் பாறை, என் மீட்பர்’ என்பான்.
27 நான் அவனை என் முதற்பேறான மகனாக்குவேன்.
    அவன் பூமியின் முதன்மையான அரசனாக இருப்பான்.
28 நான் தேர்ந்தெடுத்த அரசனை என் அன்பு என்றென்றும் பாதுகாக்கும்.
    அவனோடு நான் செய்த உடன்படிக்கை ஒருபோதும் மாறாது.
29 அவன் குடும்பம் என்றென்றும் தொடரும்,
    அவன் அரசு வானங்களிருக்கும்வரை நிலைக்கும்.
30 அவனது சந்ததியினர் என் சட்டத்தைப் பின்பற்றாது விலகும்போதும்,
    அவர்கள் என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாது மீறும்போதும் நான் அவர்களைத் தண்டிப்பேன்.
31 நான் தேர்ந்தெடுத்த அரசனின் சந்ததியினர் எனது சட்டங்களை மீறி,
    என் கட்டளைகளை உதாசீனப்படுத்தினால்,
32 அப்போது நான் அவர்களைக் கடுமையாகத் தண்டிப்பேன்.
33 ஆனால் அந்த ஜனங்களிடமிருந்து என் அன்பை விலக்கமாட்டேன்.
    நான் அவர்களிடம் எப்போதும் நேர்மையாக இருப்பேன்.
34 நான் தாவீதோடு செய்த உடன்படிக்கையை மீறமாட்டேன்.
    நான் எனது உடன்படிக்கையை மாற்றமாட்டேன்.
35 எனது பரிசுத்தத்தினால் நான் அவனுக்கு ஒரு வாக்குறுதி அளித்தேன்.
    நான் தாவீதிடம் பொய் கூறமாட்டேன்!
36 தாவீதின் குடும்பம் என்றென்றும் நிலைத்திருக்கும்.
    சூரியன் இருக்கும்வரை அவன் அரசு நிலைக்கும்.
37 சந்திரன் இருக்கும்வரை என்றென்றும் அது தொடரும்.
    வானங்கள் அந்த உடன்படிக்கைக்கு சான்று.
    அந்த உடன்படிக்கையை நம்பலாம்” என்றீர்.

38 ஆனால் தேவனே, நீர் தேர்ந்தெடுத்த அரசனிடம் கோபங்கொண்டு,
    அவனைத் தன்னந்தனியாகவிட்டீர்.
39 நீர் உமது உடன்படிக்கையைத் தள்ளினீர்.
    நீர் அரசனின் கிரீடத்தைத் தரையிலே வீசினீர்.
40 அரசனின் நகரத்தின் சுவர்களை நீர் கீழே வீழ்த்தினீர்.
    அவனது கோட்டைகளையெல்லாம் அழித்தீர்.
41 கடந்து செல்லும் ஜனங்கள் அவனிடமிருந்த பொருட்களைத் திருடினார்கள்.
    அவனது அயலார் அவனைக் கண்டு நகைத்தனர்.
42 நீர் அரசனின் பகைவர்கள் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்தீர்.
    அவனது பகைவர்கள் போரில் அவனை வெற்றிக்கொள்ள அனுமதித்தீர்.
43 தேவனே, அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள உதவினீர்.
    உமது அரசன் யுத்தத்தில் வெல்ல நீர் உதவவில்லை.
44 நீர் அவனை வெல்ல விடவில்லை.
    நீர் அவனது சிங்காசனத்தை தரையில் வீசினீர்.
45 நீர் அவனது ஆயுளைக் குறைத்தீர்.
    நீர் அவனை அவமானப்படுத்தினீர்.

46 கர்த்தாவே, இது எத்தனை காலம் தொடரும்?
    எதுவரைக்கும் நீர் எங்களை உதாசீனப்படுத்துவீர்?
    என்றென்றும் உமது கோபம் நெருப்பைப் போல் எரியுமா?
47 என் ஆயுள் எத்தனை குறுகியது என்பதை நினைவுகூரும்.
    குறைந்த காலங்கள் வாழ்ந்து, மடியும்படி நீர் எங்களைப் படைத்தீர்.
48 ஒருவனும் வாழ்ந்து, பின் மடியாமல் இருப்பதில்லை.
    ஒருவனும் கல்லறைக்குத் தப்புவதில்லை.

49 தேவனே, கடந்த காலத்தில் நீர் காட்டிய அன்பு எங்கே?
    நீர் தாவீதின் குடும்பத்திற்கு நேர்மையாக இருப்பதாக அவனுக்கு வாக்குப்பண்ணினீர்.
50-51 ஆண்டவரே, உமது பணியாளை எவ்வாறு ஜனங்கள் அவமானப்படுத்தினார்கள் என்பதைத் தயவாய் நினைவு கூரும்.
    கர்த்தாவே, உமது பகைவரின் எல்லா அவமானச் சொற்களுக்கும் நான் செவிகொடுக்க நேரிட்டது.
    நீர் தேர்ந்தெடுத்த அரசனை அந்த ஜனங்கள் அவமானப்படுத்தினார்கள்.

52 கர்த்தருக்கே என்றென்றும் ஸ்தோத்திரம்!
    ஆமென், ஆமென்!

எண்ணாகமம் 16:1-19

சில தலைவர்கள் மோசேக்கு எதிராகத் திரும்புதல்

16 கோராகு, தாத்தான், அபிராம், ஓன் ஆகியோர் மோசேக்கு எதிராகக் கிளம்பினார்கள். (கோராகு இத்சேயாரின் மகன். இத்சேயார் கோகாத்தின் மகன். கோகாத் லேவியின் மகன். தாத்தானும், அபிராமும் சகோதரர்கள். இவர்கள் எலியாபின் பிள்ளைகள். ஓன் பேலேத்தின் மகன். இவர்கள் அனைவரும் ரூபன் சந்ததியைச் சேர்ந்தவர்கள்.) இவர்கள் நான்கு பேரும் 250 இஸ்ரவேல் ஜனங்களைச் சேர்த்து மோசேக்கு எதிராக நின்றனர். இவர்கள் அனைவரும் ஜனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டத் தலைவர்கள். அவர்களை அனைவருக்கும் தெரியும். அவர்கள் அனைவரும் ஒரு குழுவாகி மோசேக்கும், ஆரோனுக்கும் எதிராகப் பேச வந்தனர். அவர்கள் மோசேயிடமும், ஆரோனிடமும் வந்து, “நீங்கள் அளவை மிஞ்சிப் போய் விட்டீர்கள். நீங்கள் தவறானவர்கள்! இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் பரிசுத்தமானவர்கள். அவர்கள் மத்தியில் கர்த்தர் வாழ்கிறார்! கர்த்தரின் மற்ற ஜனங்களைவிட, நீங்கள் உங்களை மட்டும் மிக முக்கிமானவர்களாக்கிக் கொண்டீர்கள்” என்றனர்.

இதைக் கேள்விப்பட்டதும் மோசே தரையில் முகம்குப்புற விழுந்து வணங்கி, தான் பெருமை இல்லாதவன் என்பதை வெளிப்படுத்தினான். பிறகு மோசே, கோராகிடமும் அவனைப் பின்பற்றி வந்தவர்களிடமும்: “நாளை காலையில் கர்த்தர், தனது உண்மையான ஊழியன் யாரென்றும் உண்மையில் யார் பரிசுத்தமானவன் என்பதையும் காட்டுவார். அந்த மனிதனை அவர் தன்னருகில் அழைப்பார். அந்த மனிதனைத் தேர்ந்தெடுத்து, கர்த்தர் தன்னருகே சேர்த்துக்கொள்வார். எனவே, கோராகே! நீயும் உன்னைப் பின்பற்றுகிறவர்களும் நாளை தூபகலசங்களில் நெருப்பை உண்டாக்கி, அதில் நறுமணப் பொருட்களையிட்டு, அவற்றை கர்த்தருக்கு முன்னால் கொண்டு வாருங்கள். உண்மையில் பரிசுத்தமானவன் யார் என்பதை கர்த்தர் தேர்ந்தெடுப்பார். லேவியர்களாகிய நீங்கள்தான் மிதமிஞ்சி போகிறீர்கள். நீங்கள் தவறானவர்கள்” என்றான்.

மேலும் மோசே கோராகிடம், “லேவியர்களாகிய நீங்கள் நான் சொல்வதைக் கேளுங்கள். இஸ்ரவேல் ஜனங்களின் தேவன் உங்களைச் சிறப்பாகத் தேர்ந்தெடுத்திருப்பதால், நீங்கள் மேலும் மகிழ்ச்சி அடையவேண்டும், இல்லையா? மற்ற இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து நீங்கள் வேறுபட்டவர்கள். பரிசுத்தக் கூடாரத்தில் பணிவிடை செய்வதற்காக கர்த்தர் உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அவர் தம்மருகே உங்களை வரச்செய்திருக்கிறார். இஸ்ரவேல் ஜனங்களின் ஆராதனைக்கு நீங்கள் உதவ வேண்டும். இது போதாதா? 10 ஆசாரியர்களுக்கு உதவும்படி லேவியர்களாகிய உங்களை கர்த்தர் தன்னருகே அனுமதித்திருக்கிறார். ஆனால் நீங்கள் இப்போது ஆசாரியர்களாக மாறப் பார்க்கிறீர்கள். 11 நீயும் உன்னைப் பின்பற்றுகிறவர்களும் சேர்ந்து கர்த்தருக்கு எதிராக நிற்கிறீர்கள். ஆரோன் ஏதாவது தவறு செய்தானா? இல்லையே! அவ்வாறு இருக்க அவனுக்கு எதிராக ஏன் முறையிடுகிறீர்கள்?” என்றான்.

12 பிறகு மோசே எலியாப்பின் மகன்களான தாத்தானையும், அபிராமையும் அழைத்தான். ஆனால் அவர்களோ, “நாங்கள் வரமாட்டோம்! 13 நீர் ஏராளமான நன்மைகள் நிறைந்த நாட்டிலிருந்து வெளியேற்றி எங்களை கொல்வதற்காக இப்பாலைவனத்துக்கு கொண்டு வந்திருக்கிறீர். இப்போது எங்களை விட உம்மை திறமை மிக்கவராக காட்ட விரும்புகிறீர். 14 நாங்கள் ஏன் உம்மை பின்பற்ற வேண்டும்? தேவன் வாக்களித்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்குள் நீர் எங்களைக் கொண்டு வரவில்லை. நீர் எங்களுக்கு வயல்களோ, திராட்சை தோட்டங்களோ கொடுக்கவில்லை. இந்த ஜனங்களையெல்லாம் உங்கள் அடிமைகளாக்குவதுதான் உங்கள் எண்ணமா? முடியாது. நாங்கள் அங்கே வரமாட்டோம்” என்றனர்.

15 எனவே, மோசே மிகவும் கோபம் கொண்டான். அவன் மீண்டும் கர்த்தரிடம், “நான் இந்த ஜனங்களுக்கு எதிராக எந்தத் தவறும் செய்யவில்லை. நான் அவர்களிடமிருந்து எதையும், ஏன் ஒரு கழுதையையும் கூட எடுத்துக்கொள்ளவில்லை! கர்த்தாவே, இவர்களது அன்பளிப்பை ஏற்றுக்கொள்ளாதிரும்” என்றான்.

16 பிறகு மோசே கோராகிடம், “நாளை கர்த்தருக்கு முன்னால் நீயும், உன்னைப் பின்பற்றுகிறவர்களும் நிற்கவேண்டும். அங்கே உங்களோடு ஆரோனும் நிற்பான். 17 நீங்கள் ஒவ்வொருவரும் நறுமணப் பொருட்களை இடுகின்ற தூபகலசத்தைக் கொண்டு வந்து அவற்றை கர்த்தருக்கு முன்பு வைக்க வேண்டும். மூப்பர்களுக்குரிய 250 தூபகலசத்தோடு உனக்கும், ஆரோனுக்குமாக இரண்டு தூப கலசங்கள் இருக்கும்” என்றான்.

18 எனவே, ஒவ்வொரு தலைவரும் தனக்கென்று தூபகலசமும், அதில் இடுவதற்கு நறுமணப் பொருட்களும் கொண்டு வந்தனர். ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் அவர்கள் வந்து நின்றனர். மோசேயும் ஆரோனும் அங்கே நின்றனர். 19 கோராகும் அனைத்து ஜனங்களையும் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூடுமாறு செய்தான். பிறகு அங்குள்ள ழுழு சபையினருக்கும் கர்த்தரின் மகிமை காணப்பட்டது.

ரோமர் 3:21-31

நீதி செய்யும் தேவன்

21 சட்டவிதிகளின் உதவி இல்லாமலேயே தேவன் மக்களைச் சரியான வழியில் நடத்துகிறார். தேவன் இப்போது நமக்குப் புதிய வழியைக் காட்டியுள்ளார். சட்டங்களும், தீர்க்கதரிசிகளும் இப்புதிய வழியைப்பற்றிப் பேசியுள்ளனர். 22 இயேசு கிறிஸ்துவின் மேல் வைத்த விசுவாசத்தின் மூலம் தேவன் மக்களை சரியான வழிப்படுத்துகிறார். கிறிஸ்துவில் விசுவாசம் வைத்திருக்கும் எல்லாருக்கும் தேவன் இதைச் செய்தார். எந்த வேறுபாடும் இல்லை. 23 மக்களனைவரும் பாவம் செய்து தேவனுடைய மகிமையைப் பெறத் தகுதியில்லாதவராகிவிட்டனர். 24 இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவில் உள்ள இரட்சிப்பைக் கொண்டு நீதிமான்களாக்கப்படுவார்கள். 25 விசுவாசத்தின் மூலம் பாவிகள் மன்னிக்கப்பட தேவன் இயேசுவை ஒரு வழியாக வகுத்தார். இயேசுவின் இரத்தத்தால் தேவன் இதைச் செய்தார். எது சரியானதோ, நியாயமானதோ அதையே தேவன் செய்வார் என்பதை இது காட்டும். கடந்த காலத்தில் தேவன் மிகப் பொறுமையாக இருந்தார். மக்களின் பாவங்களுக்காக அவர்களைத் தண்டிக்காமல் விட்டார். 26 இவ்வாறு தேவன் சரியான வழியில் நியாயம்தீர்ப்பார் என்பதை இன்று இயேசு கிறிஸ்துவின் மூலம் வெளிக் காட்டியுள்ளார். அதே நேரத்தில் இயேசுவில் விசுவாசம் உள்ள எவரையும் தேவன் நீதிமான்களாக்குகிறார்.

27 எனவே நம்மை நாமே மேன்மை பாராட்டிக்கொள்ள ஏதேனும் காரணம் உள்ளதாக இல்லை. எதற்காக இல்லை? சட்ட வழிகளின்படி வாழ்வதால் அல்ல, விசுவாசத்தால் மட்டுமே. நாம் பெருமை பாராட்டுவதை நிறுத்த வேண்டும். எதற்காக? 28 ஏனென்றால் ஒருவன் சட்டவழிகளின்படி வாழ்வதால் நீதிமானாக முடியாது; இயேசுவை விசுவாசிப்பதன் மூலமே நீதிமானாக முடியும். இதுவே நமது நம்பிக்கை. 29 தேவன் என்பவர் யூதர்களுக்கு மட்டும் உரியவர் அல்லர். அவர் யூதர் அல்லாதவர்களுக்கும் உரியவரே. 30 ஒரே ஒரு தேவனே உள்ளார். அவரே யூதர்களையும் அவர்கள் விசுவாசத்தின் மூலம் நீதிமான்களாக்குகிறார். அவ்வாறே யூதரல்லாதவர்களையும் ஆக்குகிறார். 31 விசுவாசத்தின் வழியைப் பின்பற்றுவதன் மூலம் சட்ட விதிகளை அழித்துவிடுகிறோமா? இல்லை. இவ்வாறு நாம் உண்மையாகச் சட்டத்தைக் கைக்கொள்கிறோம்.

மத்தேயு 19:13-22

இயேசுவும் குழந்தைகளும்(A)

13 பிறகு, இயேசு தம் குழந்தைகளைத் தொடுவார் என்பதற்காகவும் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வார் என்பதற்காகவும் மக்கள் தம் குழந்தைகளை அவரிடம் அழைத்து வந்தனர். இதைக் கண்ட சீஷர்கள் இயேசுவிடம் குழந்தைகளை அழைத்து வருவதை நிறுத்துமாறு மக்களிடம் கூறினார்கள். 14 ஆனால் இயேசு,, “குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்க வேண்டாம், ஏனென்றால் பரலோக இராஜ்யம் இக்குழந்தைகளைப் போன்ற மக்களுக்கே உரியது” என்று கூறினார். 15 அதன் பின் குழந்தைகளைத் தொட்டு ஆசீர்வதித்தார். பின்னர் இயேசு அவ்விடத்தை விட்டுச் சென்றார்.

பணக்காரனும் இயேசுவும்(B)

16 ஒரு மனிதன் இயேசுவை அணுகி,, “போதகரே நித்திய ஜீவனைப் பெற நான் என்ன நல்ல செயலைச் செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.

17 இயேசு அவனிடம்,, “எது நல்லது என்பதை பற்றி என்னிடம் ஏன் கேட்கிறாய்? தேவன் மட்டுமே நல்லவர். நீ நித்திய ஜீவனைப் பெற விரும்பினால், கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நட” என்று பதிலுரைத்தார்.

18 ,“எந்தக் கட்டளைகளை” என்று கேட்டான் அம்மனிதன்.

அதற்கு இயேசு,, “நீ யாரையும் கொலை செய்யக்கூடாது. விபசாரம் செய்யக் கூடாது. திருடக்கூடாது. பொய் சாட்சி சொல்லக் கூடாது. 19 உன் தாய் தந்தையரை மதிக்க வேண்டும். [a] ‘தன்னைப் போலவே மற்றவர்களையும் நேசிக்க வேண்டும்’” [b] என்று பதில் சொன்னார்.

20 அதற்கு அந்த இளைஞன்,, “இவை அனைத்தையும் கீழ்ப்படிந்து நடந்திருக்கிறேன். வேறென்ன செய்ய வேண்டும்?” என்றான்.

21 இயேசு அவனிடம்,, “நீ நேர்மையாய் இருக்க விரும்பினால், (போய்) உன் உடமைகள் எல்லாவற்றையும் விற்றுவிடு. இதனால் கிடைக்கும் பணத்தை ஏழைகளுக்குத் தானம் செய்துவிடு. நீ இதைச் செய்தால், நீ பரலோகத்தில் மதிப்பு வாய்ந்த செல்வத்தைப் பெறுவாய். பின் என்னிடம் வந்து, என்னைப் பின்பற்றி நட,” என்றார்.

22 ஆனால், இதைக் கேட்ட அம்மனிதன் மிகுந்த வருத்தமடைந்தான். மிகச் செல்வந்தனான அவன், தன் செல்வத்தை இழக்க விரும்பவில்லை. எனவே, அவன் இயேசுவை விட்டு விலகிச் சென்றான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center