Print Page Options
Previous Prev Day Next DayNext

Book of Common Prayer

Daily Old and New Testament readings based on the Book of Common Prayer.
Duration: 861 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 83

ஆசாபின் துதிப் பாடல்களுள் ஒன்று.

83 தேவனே, அமைதியாய் இராதேயும்!
    உமது செவிகளை மூடிக்கொள்ளாதேயும்!
    தேவனே தயவாய் எதையாவது பேசும்.
தேவனே, உமது பகைவர்கள் உமக்கெதிராகத் திட்டங்கள் வகுக்கிறார்கள்.
    உமது பகைவர்கள் உடனே தாக்குதல் ஆரம்பிக்கக்கூடும்.
உமது ஜனங்களுக்கு எதிராக அவர்கள் இரகசிய திட்டஙகளை வகுக்கிறார்கள்.
    நீர் நேசிக்கும் ஜனங்களுக்கு எதிராக உமது பகைவர்கள் திட்டங்களை கலந்து ஆலோசிக்கிறார்கள்.
பகைவர்கள் இவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்: “வாருங்கள், நாம் பகைவர்களை முற்றிலும் அழிப்போம்.
    பின்பு ஒருநாளும் ஒருவனும் ‘இஸ்ரவேல்’ என்னும் பெயரை நினைவு கூரமாட்டான்.”
தேவனே, அந்த ஜனங்கள் எல்லோரும் உமக்கும்
    நீர் எங்களோடு செய்த உமது உடன்படிக்கைக்கும் எதிராகப் போராட ஒருமித்துக் கூடினார்கள்.
6-7 அப்பகைவர்கள் எங்களை எதிர்க்க ஒருமித்துச் சேர்ந்தார்கள்.
    இஸ்மவேலராகிய ஏதோமியரும், மோவாபியரும், ஆகாரின் சந்ததியினரும், கேபாலரும், அம்மோனியரும், அமலேக்கியரும், பெலிஸ்தரும், தீருவில் வசிக்கும் ஜனங்களும், ஆகிய எல்லோரும் எங்களை எதிர்க்க ஒருமித்துக் கூடினார்கள்.
அசீரியரும்கூட அந்த ஜனங்களோடு சேர்ந்தார்கள்.
    லோத்தின் சந்ததியினர் மிகுந்த வல்லமை பெறும்படிச் செய்தார்கள்.
தேவனே, மீதியானியரைத் தோற்கடித்ததைப் போலவும்
    கீசோன் நதியருகே சிசெரா மற்றும் யாபீன் ஜனங்களைத் தோற்கடித்ததைப்போலவும் பகைவனைத் தோற்கடியும்.
10 நீர் அவர்களை எந்தோரில் தோற்கடித்தீர்.
    அவர்கள் சரீரங்கள் நிலத்தில் விழுந்து அழிந்தன.
11 தேவனே, பகைவனின் தலைவர்களைத் தோற்கடியும்.
    ஓரேபுக்கும் சேபுக்கும் செய்தபடியே செய்யும்.
    சேபாவுக்கும் சல்முனாவுக்கும் செய்தபடியே செய்யும்.
12 தேவனே, அந்த ஜனங்கள்
    உமது தேசத்தை விட்டுப் போகும்படியாக எங்களை வற்புறுத்த விரும்பினார்கள்!
13 தேவனே, அந்த ஜனங்களைக் காற்றில் பறக்கும் பதராகப் பண்ணும்.
    காற்றுப் பறக்கடிக்கும் புல்லைப்போல் அந்த ஜனங்களைச் சிதறடியும்.
14 நெருப்பு காட்டை அழிப்பதைப்போலவும்
    பெருநெருப்பு மலைகளைச் சுடுவது போலவும் பகைவனை அழித்துப்போடும்.
15 தேவனே, புயலில் அலைக்கழிக்கப்படும் துகளைப்போல அந்த ஜனங்களை துரத்திவிடும்.
    அவர்களை அசையும், அவர்களைப் பெருங்காற்றைப்போல நின்று பறக்கடியும்.
16 தேவனே அவர்கள் உண்மையிலேயே சோர்வுடையவர்கள் என்பதை அந்த ஜனங்கள் அறியும்படி அவர்களுக்குப் போதியும்.
    அப்போது அவர்கள் உமது நாமத்தை தொழுதுகொள்ள விரும்புவார்கள்!
17 தேவனே, அந்த ஜனங்களை அச்சுறுத்தி, அவர்கள் என்றென்றும் வெட்கமடையச் செய்யும்.
    அவர்களை இழிவுப்படுத்தி, அழித்துப்போடும்.
18 அப்போது நீரே தேவனென்று அவர்கள் அறிவார்கள்.
    உமது நாமம் யேகோவா என்பதையும் அவர்கள் அறிவார்கள்.
மிக உன்னதமான தேனாகிய நீர்
    உலகம் முழுவதற்கும் தேவன் என்பதையும் அவர்கள் அறிவார்கள்.

சங்கீதம் 34

தாவீதின் வேஷத்தைக் கண்டு அபிமெலேக்கு அவனைத் துரத்தியபோது தாவீது பாடியது. இவ்வாறு தாவீது அவனை விட்டுப் பிரிந்தான்.

34 நான் எந்த காலத்திலும் கர்த்தரை ஸ்தோத்தரிப்பேன்.
    என் உதடுகள் எப்போதும் அவரைத் துதிக்கும்.
தாழ்மையான ஜனங்களே, செவிக்கொடுத்து மகிழுங்கள்.
    என் ஆத்துமா கர்த்தரைக் குறித்துப் பெருமைகொள்ளும்.
தேவனுடைய மேன்மையை எனக்குக் கூறுங்கள்.
    அவரது நாமத்தை என்னோடு சேர்ந்து துதியுங்கள்.
உதவிவேண்டி தேவனிடம் போனேன்.
    அவர் கேட்டார், நான் அஞ்சிய எல்லாக் காரியங்களிலிருந்தும் அவர் என்னை மீட்டார்.
உதவிக்காக தேவனை நாடுங்கள்.
    அவர் உங்களை ஏற்றுக்கொள்ளுவார். வெட்க மடையாதீர்கள்.
இந்த ஏழை உதவிக்காக கர்த்தரைக் கூப்பிட்டான்.
    கர்த்தர் எனக்குச் செவிகொடுத்தார்.
    என் தொல்லைகளிலிருந்து என்னை மீட்டார்.
கர்த்தரை நம்புவோரைச் சுற்றிலும் கர்த்தருடைய தூதன் ஒரு பாளையமிடுகிறான்.
    கர்த்தருடைய தூதன் அவர்களைக் காத்து அவர்களுடைய துன்பங்களிலிருந்து விடுதலை அளிக்கிறான்.
கர்த்தரை நல்லவர் என்று ருசித்து அறியுங்கள்.
    கர்த்தரைச் சார்ந்து வாழும் மனிதன் உண்மையாகவே சந்தோஷமடைவான்.
கர்த்தருடைய பரிசுத்த ஜனங்கள் அவரைத் தொழுதுகொள்ளட்டும்.
    கர்த்தரைப் பின்பற்றுவோருக்கு வேறெந்த அடைக்கலமும் தேவையில்லை.
10 வல்லமையுள்ள ஜனங்கள் சோர்ந்து பசியடைவார்கள்.
    ஆனால் தேவனிடம் உதவி வேண்டிச் செல்வோர் நல்லவற்றையெல்லாம் அடைவார்கள்.
11 பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்.
    கர்த்தரை எப்படி மதிக்கவேண்டுமென்று உங்களுக்குப் போதிப்பேன்.
12 தன் வாழ்க்கையை நேசித்து, நீண்ட ஆயுளை விரும்பும்,
13 மனிதன் தீயவற்றைப் பேசக்கூடாது.
    அம்மனிதன் பொய் பேசக்கூடாது.
14 தீமை செய்வதை அவன் விட்டுவிட வேண்டும்.
    நல்லவற்றைச் செய். சமாதானத்திற்காகப் பாடுபடு.
    அதை அடையும்வரை அதற்கென முயற்சி செய்.
15 நல்லோரை கர்த்தர் பாதுகாக்கிறார்.
    அவர்கள் ஜெபங்களை அவர் கேட்கிறார்.
16 கர்த்தர் தீயோருக்கு எதிரானவராயிருந்து
    அவர்களை முற்றிலும் அழிக்கிறார்.

17 கர்த்தரிடம் ஜெபியுங்கள்.
    அவர் உங்கள் விண்ணப்பங்களைக் கேட்பார்.
    உங்கள் எல்லாத் தொல்லைகளிலிருந்தும் உங்களைக் காப்பார்.
18 சிலருக்குத் தொல்லைகள் மிகுதியாகும்பொழுது அவர்கள் பெருமையை விட்டொழிப்பர்.
    கர்த்தர் அவர்களருகே இருந்து தாழ்மையான அந்த ஜனங்களைக் காக்கிறார்.
19 நல்லோருக்குத் தொல்லைகள் பல நேரிட்டாலும்
    அவர்கள் தொல்லைகளிலிருந்து கர்த்தர் அவர்களை மீட்பார்.
20 அவர்கள் எலும்புகளில் ஒன்றும் முறிந்து போகாதபடி
    கர்த்தர் அவற்றைப் பாதுகாப்பார்.
21 தீயோரைத் தொல்லைகள் கொல்லும்.
    நல்லோரின் பகைவர்கள் அழிக்கப்படுவார்கள்.
22 தமது ஊழியர்களின் ஆத்துமாக்களை கர்த்தர் மீட்கிறார்.
    அவரைச் சார்ந்திருக்கும் ஜனங்களை அழியவிடமாட்டார்.

சங்கீதம் 85-86

கோராகின் குடும்பம் இராகத் தலைவனுக்கு அளித்த ஒரு துதிப் பாடல்

85 கர்த்தாவே, உமது தேசத்தின்மேல் தயவாயிரும்.
யாக்கோபின் ஜனங்கள் ஒரு அந்நிய தேசத்தில் அடிமைகளாக இருக்கிறார்கள்.
    அடிமைப்பட்டவர்களை மீண்டும் அவர்கள் தேசத்திற்கு அழைத்து வாரும்.
கர்த்தாவே, உமது ஜனங்களை மன்னியும்!
    அவர்கள் பாவங்களை போக்கிவிடும்!

கர்த்தாவே, சினமாயிருப்பதை நீர் நிறுத்தும்.
    கடுங்கோபமாக இராதேயும்.
எங்கள் தேவனும் இரட்சகருமானவரே,
    எங்களிடம் கோபமாயிருப்பதை விட்டு விட்டு எங்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளும்.
நீர் என்றென்றும் கோபங்கொள்வீரோ?
தயவுகூரும், எங்களை மீண்டும் வாழச் செய்யும்.
    உமது ஜனங்களை சந்தோஷப்படுத்தும்.
கர்த்தாவே, எங்களைக் காப்பாற்றும்.
    நீர் எங்களை நேசிப்பதை எங்களுக்குக் காட்டும்.

தேவனாகிய கர்த்தர் கூறியதை நான் கேட்டேன்.
    அவரது ஜனங்களுக்கும், உண்மையான சீடர்களுக்கும் சமாதானம் உண்டாகுமென்று கர்த்தர் கூறினார்.
    எனவே மூடத்தனமான வாழ்க்கை முறைக்கு அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்லக் கூடாது.
தேவன் தம்மைப் பின்பற்றுவோரை விரைவில் மீட்பார்.
    நமது தேசத்தில் நாம் பெருமையோடு விரைவில் வாழுவோம்.
10 தேவனுடைய உண்மையான அன்பு அவரை பின்பற்றுவோரை வந்தைடையும்.
    நன்மையும் சமாதானமும் முத்தமிட்டு அவர்களை வாழ்த்தும்.
11 பூமியின் ஜனங்கள் தேவனிடம் நேர்மையானவர்களாயிருப்பார்கள்.
    பரலோகத்தின் தேவனும் அவர்களுக்கு நல்லவராக இருப்பார்.
12 கர்த்தர் நமக்குப் பல நல்ல பொருள்களைத் தருவார்.
    நிலம் பல நல்ல பயிர்களை விளைவிக்கும்.
13 நன்மை தேவனுக்கு முன்பாகச் செல்லும்.
    அது அவருக்கு வழியை ஆயத்தப்படுத்தும்.

தாவீதின் விண்ணப்பம்

86 நான் ஒரு ஏழை, உதவியற்ற மனிதன்.
    கர்த்தாவே, தயவாய் எனக்குச் செவிகொடுத்து என் ஜெபத்திற்குப் பதில் தாரும்.
கர்த்தாவே, நான் உம்மைப் பின்பற்றுபவன்.
    தயவாய் என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்! நான் உமது பணியாள்.
நீரே என் தேவன். நான் உம்மை நம்புகிறேன்.
    எனவே என்னைக் காப்பாற்றும்.
என் ஆண்டவரே, என்னிடம் தயவாயிரும்.
    நாள் முழுவதும் நான் உம்மிடம் ஜெபித்துக்கொண்டிருக்கிறேன்.
ஆண்டவரே, உமது கைகளில் என் ஜீவனை வைக்கிறேன்.
    என்னை மகிழ்ச்சியாக்கும். நான் உமது பணியாள்.
ஆண்டவரே, நீர் நல்லவர், கிருபையுள்ளவர்.
    உமது ஜனங்கள் உதவிக்காக உம்மைக் கூப்பிடுவார்கள்.
    நீர் உண்மையாகவே அந்த ஜனங்களை நேசிக்கிறீர்.
கர்த்தாவே, என் ஜெபத்தைக்கேளும்.
    இரக்கத்திற்கான ஜெபத்திற்குச் செவிகொடும்.
கர்த்தாவே, தொல்லைமிக்க காலத்தில் நான் உம்மிடம் ஜெபித்துக்கொண்டிருக்கிறேன்.
    நீர் பதிலளிப்பீர் என்பதை நான் அறிவேன்.
தேவனே, உம்மைப் போன்றோர் வேறெவருமில்லை.
    நீர் செய்தவற்றை வேறெவரும் செய்ய முடியாது.
ஆண்டவரே, நீர் ஒவ்வொருவரையும் உண்டாக்கினீர்.
    அவர்கள் எல்லோரும் வந்து உம்மை தொழுதுகொள்வார்கள் என்றும், அவர்கள் எல்லோரும் உமது நாமத்தை பெருமைப்படுத்துவார்கள் என்றும் நான் நம்புகிறேன்.
10 தேவனே, நீர் மேன்மையானவர்!
    நீர் அற்புதமான காரியங்களைச் செய்கிறீர்.
    நீரே, நீர் மட்டுமே தேவன்!
11 கர்த்தாவே, உமது வழிகளை எனக்குப் போதியும்.
    நான் வாழ்ந்து உமது சத்தியங்களுக்குக் கீழ்ப்படிவேன்.
உமது நாமத்தைத் தொழுது கொள்வதையே
    என் வாழ்க்கையின் மிக முக்கியமான காரியமாகக்கொள்ள எனக்கு உதவும்.
12 என் ஆண்டவராகிய தேவனே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிக்கிறேன்.
    உமது நாமத்தை என்றென்றும் துதிப்பேன்.
13 தேவனே, என்னிடம் மிகுந்த அன்பு காட்டுகிறீர்.
    கீழே மரணத்தின் இடத்திலிருந்து என்னைக் காப்பாற்றும்.
14 தேவனே, பெருமைமிக்க மனிதர்கள் என்னைத் தாக்குகிறார்கள்.
    கொடிய மனிதர்களின் கூட்டம் என்னைக் கொல்லமுயல்கிறது.
    அம்மனிதர்கள் உம்மை மதிப்பதில்லை.
15 ஆண்டவரே, நீர் தயவும் இரக்கமும் உள்ள தேவன்.
    நீர் பொறுமையுடையவர், உண்மையும் அன்பும் நிறைந்தவர்.
16 தேவனே, நீர் எனக்குச் செவிகொடுப்பதை எனக்குக் காண்பித்து, என்மீது தயவாயிரும்.
    நான் உமது பணியாள்.
எனக்குப் பெலனைத் தாரும்.
    நான் உமது பணியாள்.
என்னைக் காப்பாற்றும்.
17 தேவனே, நீர் எனக்கு உதவுவீர் என்பதற்கு ஒரு அடையாளத்தைத் தாரும்.
    என் பகைவர்கள் அந்த அடையாளத்தைக் கண்டு, ஏமாற்றம்கொள்வார்கள்.
    நீர் என் ஜெபத்தைக் கேட்டு எனக்கு உதவுவீர் என்பதை அது காட்டும்.

எண்ணாகமம் 12

மிரியாமும் ஆரோனும் மோசே பற்றி முறையிடல்

12 மிரியாமும், ஆரோனும் மோசேக்கு எதிராகப் பேச ஆரம்பித்தனர். அவன் ஒரு எத்தியோப்பிய பெண்ணை மணந்துகொண்டதால் அவனைப் பற்றி அவர்கள் அவதூறு பேசினார்கள். அவன் எத்தியோப்பிய பெண்னை மணந்துகொண்டது சரியல்ல என அவர்கள் எண்ணினார்கள். அவர்கள் தமக்குள், “ஜனங்களோடு பேசுவதற்கு கர்த்தர் மோசே ஒருவனை மட்டும் பயன்படுத்தவில்லை. எங்கள் மூலமாகவும் கர்த்தர் பேசினார்” என்று கூறிக்கொண்டனர்!

கர்த்தர் இதனைக் கேட்டார். (மோசே மிகவும் தாழ்மையான குணமுள்ளவன். அவன் தனக்குள் பெருமையுள்ளவன் அல்ல. பூமியிலுள்ள மற்ற மனிதர்களைவிட அவன் மிகவும் சாந்த குணமுள்ளவன்.) எனவே கர்த்தர் மோசே, ஆரோன், மிரியாம் ஆகிய மூவருடனும் பேசி, “நீங்கள் மூவரும் இப்பொழுது ஆசரிப்புக் கூடாரத்திற்குள் வாருங்கள்” என்று சொன்னார்.

உயரமான மேகத்திலிருந்து கர்த்தர் இறங்கி வந்து கூடாரத்தின் வாசலில் நின்று: “ஆரோன்! மிரியாம்!” என்று அழைத்தார். ஆரோனும் மிரியாமும் அவரிடம் சென்றனர். தேவன், “நான் சொல்வதைக் கேளுங்கள். உங்களுக்குத் தீர்க்கதரிசிகள் இருக்கிறார்கள். கர்த்தராகிய நான் அவர்களுக்குக் காட்சியளிப்பேன். அவர்களோடு கனவில் பேசுவேன். ஆனால் மோசே அத்தகையவன் அல்ல. மோசே எனது உண்மையான ஊழியன். நான் அவனை எனது வீட்டில் எல்லா விதத்திலும் நம்பிக்கையும், உண்மையுள்ளவனாகவும் காண்கிறேன். நான் அவனோடு பேசும்போது, முகமுகமாய் பேசுகிறேன். மறைபொருளான கதைகளையல்ல, அவன் தெரிந்துகொள்ள வேண்டியவற்றை நான் தெளிவாகக் கூறிவிடுவேன். கர்த்தரின் தோற்றத்தையே மோசே பார்க்க இயலும். எனவே, ஏன் நீங்கள் எனது ஊழியனான மோசேக்கு எதிராகப் பேசத் துணிந்தீர்கள்?” என்று கேட்டார்.

கர்த்தர் அவர்கள் மீது பெருங்கோபத்தோடு இருந்தபடியால் அவர்களைவிட்டு கர்த்தர் விலகினார். 10 மேகம் கூடாரத்திலிருந்து மேலே எழும்பிச் சென்றது. ஆரோன் திரும்பி மிரியாமைப் பார்த்தான். அவளது தோல் பனியைப் போன்று வெளுத்திருந்தது. அவளுக்குப் பயங்கரமான தொழுநோய் ஏற்பட்டது!

11 பிறகு ஆரோன் மோசேயிடம், “ஐயா, தயவு செய்து எங்களை மன்னித்து விடுங்கள். நாங்கள் முட்டாள்தனமாக பாவம் செய்துவிட்டோம். 12 மரித்துப் பிறந்த குழந்தையைப் போல அவள் தன் தோலை இழக்க விட்டுவிடாதிரும்” என்றான். (சில வேளையில் சில குழந்தைகள் பாதிதோல் அழுகிய நிலையில் மரித்துப் பிறப்பதுண்டு.)

13 எனவே மோசே கர்த்தரிடம் விண்ணப்பம் செய்து, “தேவனே தயவு செய்து இவளது தொழு நோயைப் போக்கிவிடும்” என்றான்.

14 கர்த்தர் மோசேயை நோக்கி, “அவளது தந்தை அவள் முகத்தின் மீது உமிழ்ந்தால், அவளுக்கு ஏழு நாட்கள் அவமானமாக இருக்கும். எனவே, அவளை முகாமிற்கு வெளியே ஏழு நாட்கள் வைத்திரு. அதற்குப் பிறகு அவள் குணமாவாள். பின்னர் அவள் கூடாரத்திற்குத் திரும்பலாம்” என்றார்.

15 ஆகையால் அவர்கள் மிரியாமை ஏழு நாட்கள் முகாமிற்கு வெளியே வைத்திருந்தனர். அவளைத் திரும்பக் கூடாரத்திற்குள் அழைத்துக்கொள்ளும்வரை அவர்கள் அந்த இடத்தை விட்டு நகரவில்லை. 16 அதன்பின் அவர்கள் ஆஸ்ரோத்தை விட்டு பாரான் பாலைவனத்துக்குச் சென்று, அங்கே முகாமிட்டனர்.

ரோமர் 2:12-24

12 தேவனுடைய சட்டத்தை அறிந்தவர்களானாலும், அதைப்பற்றிக் கேள்விப்பட்டிராத மக்களாயினும் பாவம் செய்யும்போது ஒத்த நிலை உடையவர்ளாக ஆகிறார்கள். சட்ட அறிவு அற்றவர்களாகவும், பாவிகளாகவும் இருப்பவர்கள் கைவிடப்படுவார்கள். அதேபோல், சட்டம் தெரிந்தும் பாவம் செய்தவர்கள் அதே சட்டத்தின்படி தீர்ப்பளிக்கப்படுவார்கள். 13 ஒருவன் சட்ட அறிவைப் பெறுவதன் மூலம் தேவனுக்கு முன்பாக நீதிமானாக முடியாது. சட்டம் சொல்லும் வழி முறைகளின்படி வாழும்போது மட்டுமே தேவனுடைய முன்னிலையில் ஒருவன் நீதிமானாக வாழமுடியும்.

14 யூதரல்லாதவர்களுக்கு நியாயப்பிரமாணம் இல்லை. எனினும் அவர்கள் இயல்பாக நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது நியாயப்பிரமாணம் இல்லாவிட்டாலும் தங்களுக்குத் தாங்களே நியாப்பிரமாணமாய் இருக்கிறார்கள். 15 அவர்களின் மனதுக்கு எது சரி, எது தவறு என்று தெரிகிறது. அவர்களின் சிந்தனையே குற்றமுள்ளது எது என்றும், சரியானது எது என்றும் கூறுவதினால் அவர்கள் நியாயப்பிரமாணத்திற்கேற்ற செயல்கள் தங்கள் இதயங்களில் எழுதியிருக்கிறதென்று காட்டுகிறார்கள்.

16 தேவன் மறைவான எண்ணங்களுக்கும் தீர்ப்பளிப்பார். அந்நாளில் மக்களின் மனதுக்குள் இருக்கும் மறை பொருட்கள் வெளிவரும். நான் மக்களுக்குச் சொல்லும் நற்செய்தியின்படி தேவன் இயேசு கிறிஸ்துவின் மூலம் தீர்ப்பளிப்பார்.

யூதர்களும் நியாயப்பிரமாணமும்

17 நீ என்ன செய்யப்போகிறாய்? நீ யூதனென்று சொல்லிக்கொள்கிறாய். நீ நியாயப் பிரமாணத்தில் விசுவாசம் வைத்து தேவனுக்கு நெருக்கமாய் இருப்பதாகப் பெருமையோடு சொல்லிக்கொள்கிறாய். 18 தேவன் உனக்கு என்ன செய்ய விரும்புகிறார் என்று உனக்குத் தெரியும். நீ நியாயப்பிரமாணத்தைக் கற்றவனாதலால் உனக்கு எது முக்கியமானது என்றும் தெரியும். 19 என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிற மக்களுக்கு நீங்களே வழிகாட்டி என எண்ணிக்கொள்கிறீர்கள். பாவ இருட்டில் உள்ள மக்களுக்கு நீங்களே வெளிச்சம் என்று நினைத்துக்கொள்கிறீர்கள். 20 அறிவற்ற மக்களுக்குச் சரியானதைக் காட்ட முடியும் என்று கருதுகிறீர்கள். இன்னும் கற்கவேண்டிய அவசியம் உள்ளவர்களுக்கு நீங்களே குரு என்றும் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்களிடம் நியாயப்பிரமாணம் இருப்பதால் எல்லாம் உங்களுக்குத் தெரியும் என்றும், எல்லா உண்மைகளும் உங்களிடம் இருப்பதாகவும் எண்ணுகிறீர்கள். 21 நீங்கள் மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறீர்கள். நீங்கள் ஏன் கற்றுக்கொள்ளக் கூடாது? நீங்கள் மற்றவர்களிடம் களவு செய்யக்கூடாது என்று கூறுகிறீர்கள். ஆனால் நீங்களே களவு செய்கிறீர்கள். 22 நீங்கள் மற்றவர்களிடம் விபச்சாரம் செய்யக் கூடாது என்று கூறுகிறீர்கள். ஆனால் நீங்களே அதே பாவத்தைச் செய்யும் பாவிகளாக இருக்கிறீர்கள். சிலைகளை நீங்கள் வெறுக்கிறீர்கள். ஆனால் அதே கோவில்களைக் கொள்ளையடிக்கிறீர்கள். 23 நீங்கள் தேவனுடைய நியாயப்பிரமாணம் பற்றிப் பெருமையாகப் பேசுகிறீர்கள். ஆனால் அதை மீறி நடந்து தேவனுக்கு அவமானத்தை உருவாக்குகிறீர்கள். 24 “யூதர்களால்தான் யூதர் அல்லாதவர்கள் தேவனைப் பற்றி இழிவாகப் பேசுகிறார்கள்” [a] என்று வேத வாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளது.

மத்தேயு 18:10-20

காணாமல் போன ஆட்டைப்பற்றிய உவமை(A)

10 ,“எச்சரிக்கையாயிருங்கள். இச்சிறு பிள்ளைகள் மதிப்பற்றவர்கள் என்று எண்ணாதீர்கள். இவர்கள் பரலோகத்தில் தேவதூதர்களைப் பெற்றுள்ளார்கள் என்று நான் சொல்லுகிறேன். மேலும் அத்தூதர்கள் எப்பொழுதும் பரலோகத்தில் என் பிதாவானவருடன் இருக்கிறார்கள். 11 [a]

12 ,“நூறு ஆடுகளை வைத்திருப்பவன் ஒரு ஆட்டை இழந்தால் மீதி தொண்ணூற்றொன்பது ஆடுகளைக் குன்றில் விட்டுக் காணாமல் போன ஆட்டைத் தேடிப்போவான் அல்லவா? 13 காணாமல் போன ஆட்டை அவன் கண்டுபிடித்தால், காணமல் போகாத தொண்ணூற்றொன்பது ஆடுகளைக் காட்டிலும் அதனால் மிக மகிழ்ச்சியடைவான். 14 அதைப்போலவே, பரலோகத்தில் இருக்கும் என் பிதா இப்பிள்ளைகள் யாரையும் இழக்க விரும்பவில்லை என்று மெய்யாகவே உங்களுக்குக் கூறுகிறேன்.

ஒரு மனிதன் தவறு செய்தால்(B)

15 ,“உங்கள் சகோதரனோ அல்லது சகோதரியோ உங்களுக்கு ஏதாவது தீமை செய்தால், அவர் செய்த தீமையை அவரிடம் எடுத்துக் கூறுங்கள். அதைத் தனிமையில் அவனிடம் சொல்லுங்கள். அதை அவர் கவனமாகக் கேட்பாரானால், அவர் மீண்டும் உங்கள் சகோதரனாகவோ அல்லது சகோதரியாகவோ இருக்க நீங்கள் உதவி செய்தவர்களாவீர்கள். 16 ஆனால் நீங்கள் கூறுவதைக் கேட்க அவர் மறுத்தால், மீண்டும் இரண்டு மூன்று பேருடன் சென்று நடந்தவற்றை எடுத்துச் சொல்லுங்கள். அப்பொழுது, நடந்ததை உறுதிசெய்ய இரண்டு மூன்று பேர் இருப்பார்கள். 17 அப்பொழுதும் அவன் கேட்க மறுத்தால், சபையாரிடம் சொல்லுங்கள். சபையார் சொல்வதையும் கேட்காமற் போனால், தேவ நம்பிக்கையற்றவனைப்போல் அவனை நடத்துங்கள். வரி வசூல் செய்பவனைப்போல் நடத்துங்கள்.

18 ,“நான் உன்மையைச் சொல்லுகிறேன். நீங்கள் இவ்வுலகில் நியாயத்தைப் பேசும்பொழுது, அது தேவனின் நியாயமாக இருக்கும். இவ்வுலகில் நீங்கள் மன்னிப்பளித்தால் அது தேவனின் மன்னிப்பாக இருக்கும். 19 மேலும், நான் சொல்லுகிறேன். உங்களில் இருவர் இவ்வுலகில் எதைக் குறித்தேனும் ஒரே மனமுடையவர்களாயிருந்தால் அதற்காக நீங்கள் பிரார்த்திக்கலாம். நீங்கள் கேட்பது பரலோகத்தில் உள்ள எனது பிதாவால் நிறைவேற்றப்படும். 20 இது உண்மை. ஏனென்றால், இரண்டு மூன்று பேர் என்னில் விசுவாசம் வைத்துக் கூடினால் அவ்விடத்தில் நான் இருப்பேன்.”

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center