Print Page Options
Previous Prev Day Next DayNext

Book of Common Prayer

Daily Old and New Testament readings based on the Book of Common Prayer.
Duration: 861 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 70-71

ஜனங்கள் நினைவுக்கு உதவும்படியாக இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.

70 தேவனே, என்னை மீட்டருளும்!
    தேவனே விரைந்து எனக்கு உதவும்!
ஜனங்கள் என்னைக் கொல்ல முயல்கிறார்கள்.
    அவர்கள் ஏமாற்றமடையச் செய்யும்!
ஜனங்கள் என்னை ஏளனம் செய்தார்கள்.
    அவர்கள் விழுந்து வெட்கமடைவார்கள் என நம்புகிறேன்.
உம்மைத் தொழுதுகொள்ளும் ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சிக்கொள்வார்கள் என நம்புகிறேன்.
    உமது உதவியை வேண்டும் (நாடும்) ஜனங்கள் எப்போதும் உம்மைத் துதிக்க முடியும் என நம்புகிறேன்.

நான் ஏழையான, உதவியற்ற மனிதன்.
    தேவனே, விரைந்து வந்து என்னை மீட்டருளும்!
தேவனே, நீர் மட்டுமே என்னைக் காப்பாற்ற முடியும்.
    மிகவும் தாமதியாதேயும்!

71 கர்த்தாவே, நான் உம்மை நம்புகிறேன்,
    எனவே நான் என்றும் ஏமாற்றமடையமாட்டேன்.
உமது நல்ல செயலினால், நீர் என்னை மீட்பீர். நீர் என்னைக் காப்பாற்றுவீர்.
    நான் சொல்வதைக் கேளும், என்னை மீட்டருளும்.
பாதுகாப்பிற்காக ஓடிவரக்கூடிய புகலிடமான அரணாக நீர் எனக்கு இரும்.
    நீர் என் கன்மலை என் பாதுகாப்பிடம்.
எனவே என்னைக் காப்பதற்குரிய ஆணையைக் கொடும்.
என் தேவனே, கெட்ட ஜனங்களிடமிருந்து என்னை மீட்டருளும்.
    கொடியோரும் தீயோருமான ஜனங்களிடமிருந்து என்னை மீட்டருளும்.
என் ஆண்டவரே, நீரே என் நம்பிக்கை.
    நான் சிறுவனாக இருந்தபோதே உம்மை நம்பினேன்.
நான் பிறப்பதற்கு முன்பிருந்தே உம்மையே சார்ந்திருக்கிறேன்.
    என் தாயின் கருவில் இருந்தபோதே நான் உம்மைச் சார்ந்திருந்தேன்.
    நான் உம்மிடம் எப்போதும் ஜெபம் பண்ணினேன்.
நீரே என் பெலத்தின் இருப்பிடம்.
    எனவே நான் பிற ஜனங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டானேன்.
நீர் செய்யும் அற்புதமான காரியங்களைக் குறித்து நான் எப்போதும் பாடிக்கொண்டிருக்கிறேன்.
நான் வயது முதிர்ந்தவனாகிவிட்டதால் என்னைத் தள்ளிவிடாதேயும்.
    என் பெலனை நான் இழக்கையில் என்னை விட்டுவிடாதேயும்.
10 என் பகைவர்கள் எனக்கெதிராகத் திட்டங்கள் வகுத்தார்கள்.
    அந்த ஜனங்கள் உண்மையிலேயே ஒருமித்துச் சந்தித்தார்கள், அவர்கள் என்னைக் கொல்லத் திட்டமிட்டார்கள்.
11 என் பகைவர்கள், “போய் அவனைப் பிடியுங்கள்!
    தேவன் அவனைக் கைவிட்டார்.
    அவனுக்கு ஒருவரும் உதவமாட்டார்கள்” என்றனர்.
12 தேவனே, நீர் என்னை விட்டு விலகாதேயும்!
    தேவனே, விரையும்! வந்து என்னைக் காப்பாற்றும்!
13 என் பகைவர்களைத் தோற்கடியும்!
    அவர்களை முழுமையாக அழித்துவிடும்.
அவர்கள் என்னைத் தாக்க முயல்கிறார்கள்.
    அவர்கள் வெட்கமும் இகழ்ச்சியும் அடைவார்கள் என நான் நம்புகிறேன்.
14 பின் நான் உம்மை எப்போதும் நம்புவேன்.
    நான் உம்மை மென்மேலும் துதிப்பேன்.
15 நீர் எவ்வளவு நல்லவர் என்பதை நான் ஜனங்களுக்குக் கூறுவேன்.
    நீர் என்னை மீட்ட காலங்களைக் குறித்து நான் ஜனங்களுக்குக் கூறுவேன்.
    எண்ண முடியாத பல காலங்கள் உள்ளன.
16 என் ஆண்டவராகிய கர்த்தாவே, உமது பெருமையைப்பற்றி நான் கூறுவேன்.
    உம்மையும் உமது நற்குணங்களையும் நான் பேசுவேன்.
17 தேவனே, நான் சிறுவனாக இருக்கையிலேயே நீர் எனக்குப் போதித்துள்ளீர்.
    இன்றுவரை நீர் செய்துள்ள அற்புதமான காரியங்களைக் குறித்து நான் ஜனங்களுக்குக் கூறியுள்ளேன்.
18 இப்போது நான் வயது முதிர்ந்தவன், என் தலைமுடி நரைத்துவிட்டது.
    ஆனாலும் தேவனே, நீர் என்னை விட்டுவிடமாட்டீர் என்பதை நான் அறிவேன்.
    உமது வல்லமையையும், பெருமையையும் ஒவ்வொரு புதிய தலைமுறையினருக்கும் நான் சொல்லுவேன்.
19 தேவனே, உமது நன்மை வானங்களுக்கும் மேலாக எட்டுகிறது.
    தேவனே, உம்மைப் போன்ற தேவன் வேறொருவருமில்லை.
    நீர் அற்புதமான காரியங்களைச் செய்திருக்கிறீர்.
20 தொல்லைகளையும் தீயகாலங்களையும் நான் காணச் செய்தீர்.
    ஆனாலும் அவை எல்லாவற்றினின்றும் நீர் என்னை மீட்டு, உயிரோடு வைத்தீர்.
    எத்தனை ஆழத்தில் மூழ்கியும் தொல்லைகளிலிருந்து நீர் என்னைத் தூக்கி நிறுத்தினீர்.
21 முன்னிலும் பெரியக் காரியங்களைச் செய்ய, நீர் எனக்கு உதவும்.
    தொடர்ந்து எனக்கு ஆறுதல் அளியும்.
22 வீணையை மீட்டி, நான் உம்மைத் துதிப்பேன்.
    என் தேவனே, நீர் நம்பிக்கைக் குரியவர் என்பதைப் பாடுவேன்.
இஸ்ரவேலின் பரிசுத்தருக்காக,
    என் சுரமண்டலத்தில் பாடல்களை இசைப்பேன்.
23 நீர் என் ஆத்துமாவைக் காத்தீர். என் ஆத்துமா மகிழ்ந்திருக்கும்.
    என் உதடுகளால் துதிப்பாடல்களை நான் பாடுவேன்.
24 எப்போதும் உமது நன்மையை என் நாவு பாடும்.
    என்னைக் கொல்ல விரும்பிய ஜனங்கள், தோற்கடிக்கப்பட்டு இகழ்ச்சி அடைவார்கள்.

சங்கீதம் 74

ஆசாபின் ஒரு மஸ்கீல்

74 தேவனே, என்றென்றும் நீர் எங்களைவிட்டு விலகினீரா?
    உமது ஜனங்களிடம் நீர் இன்னும் கோபமாயிருக்கிறீரா?
பல்லாண்டுகளுக்கு முன் நீர் மீட்டுக்கொண்ட உமது ஜனங்களை நினைவுகூரும்.
    நீர் எங்களை மீட்டீர். நாங்கள் உமக்குச் சொந்தமானவர்கள்.
நீர் வாழ்ந்த இடமாகிய சீயோன் மலையை நினைவுகூரும்.
தேவனே, பழைமையான இந்த இடிபாடுகளுக்கு மத்தியில் நீர் நடந்துவாரும்.
    பகைவன் அழித்த பரிசுத்த இடத்திற்குத் திரும்ப வாரும்.

ஆலயத்தில் பகைவர்கள் தங்கள் யுத்த ஆரவாரத்தைச் செய்தார்கள்.
    போரில் தங்கள் வெற்றியைக் குறிப்பதற்கு ஆலயத்தில் அவர்கள் தங்கள் கொடிகளை ஏற்றினார்கள்.
பகைப்படை வீரர்கள்
    கோடரியால் களைகளை அழிக்கும் ஜனங்களைப் போன்றிருந்தார்கள்.
தேவனே, அவர்கள் தங்கள் கோடாரிகளையும், சம்மட்டிகளையும் பயன்படுத்தி,
    உமது ஆலயத்தில் மரத்தினாலான சித்திர வேலைப்பாடுகளை நாசம் செய்தார்கள்.
அந்த வீரர்கள் உமது பரிசுத்த இடத்தை எரித்துவிடடார்கள்.
    அந்த ஆலயம் உமது நாமத்தின் மகிமைக்காகக் கட்டப்பட்டது.
    அவர்கள் அதைத் தரையில் விழும்படி இடித்துத் தள்ளினார்கள்.
பகைவன் எங்களை முழுமையாக அழிக்க முடிவு செய்தான்.
    தேசத்தின் ஒவ்வொரு பரிசுத்த இடத்தையும் அவர்கள் எரித்தார்கள்.
எங்களுக்கான அடையாளங்கள் எதையும் நாங்கள் காண முடியவில்லை.
    எந்தத் தீர்க்கதரிசிகளும் இங்கு இல்லை.
    யாருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை.
10 தேவனே, எத்தனைக் காலம்வரைக்கும் பகைவன் எங்களைப் பரிகாசம் பண்ணுவான்?
    உமது நாமத்தை அவர்கள் என்றென்றும் இழிவுபடுத்த நீர் அனுமதிப்பீரா?
11 தேவனே, நீர் ஏன் எங்களைக் கடுமையாகத் தண்டிக்கிறீர்?
    நீர் உமது மிகுந்த வல்லமையைப் பயன்படுத்தி, எங்களை முற்றிலும் அழித்துவிட்டீர்.
12 தேவனே, நீண்டகாலம் நீரே எங்கள் அரசராக இருந்தீர்.
    இத்தேசத்தில் பல போர்களில் வெல்ல நீர் எங்களுக்கு உதவினீர்.
13 தேவனே, நீர் மிகுந்த வல்லமையைப் பயன்படுத்தி
    செங்கடலைப் பிளக்கச் செய்தீர்.
14 கடலின் பெரிய விலங்குகளை நீர் தோற்கடித்தீர்!
    லிவியாதானின் தலைகளை நீர் சிதைத்துப்போட்டீர்.
    பிற விலங்குகள் உண்ணும்படி அதன் உடலை விட்டுவிட்டீர்.
15 நீர் நீரூற்றுக்களும் நதிகளும் பாயும்படி செய்கிறீர்.
    நதிகள் உலர்ந்து போகும்படியும் செய்கிறீர்.
16 தேவனே, நீர் பகலை ஆளுகிறீர்.
    நீர் இரவையும் ஆளுகிறீர். நீர் சந்திரனையும் சூரியனையும் உண்டாக்கினீர்.
17 பூமியிலுள்ள ஒவ்வொன்றிற்கும் நீர் எல்லையை வகுத்தீர்.
    நீர் கோடையையும் குளிர் காலத்தையும் உண்டாக்கினீர்.
18 தேவனே, இவற்றை நினைவுகூரும். பகைவன் உம்மை இழிவுபடுத்தினான் என்பதை நினைவு கூரும்.
    அம்மூடர்கள் உமது நாமத்தை வெறுக்கிறார்கள்.
19 அக்கொடிய விலங்குகள் உமது புறாவை எடுத்துக்கொள்ளவிடாதேயும்!
    என்றென்றும் உமது ஏழை ஜனங்களை மறந்துவிடாதேயும்.
20 நமது உடன்படிக்கையை நினைவுகூரும்!
    இத்தேசத்தின் ஒவ்வொரு இருண்ட இடத்திலும் கொடுமை நிகழ்கிறது.
21 தேவனே, உமது ஜனங்கள் மோசமாக நடத்தப்பட்டார்கள்.
    இனிமேலும் அவர்கள் துன்புறாதபடி பாரும். உமது திக்கற்ற, ஏழை ஜனங்கள் உம்மைத் துதிப்பார்கள்.
22 தேவனே, எழுந்து போரிடும்!
    அம்மூடர்கள் உம்மோடு போட்டியிடுகிறார்கள் என்பதை நினைவுகூரும்.
23 உமது பகைவர்களின் கூக்குரலை மறவாதேயும்.
    மீண்டும் மீண்டும் அவர்கள் உம்மை இழிவுப்படுத்தினார்கள்.

பிரசங்கி 11:1-8

எதிர்காலத்தைத் தைரியமாக எதிர்கொள்

11 நீ எங்கு சென்றாலும் நல்லவற்றையே செய். அப்போது நீ செய்த நன்மைகள் உனக்கே திரும்பவரும்.

உனக்குரிய பொருட்களைப் பல்வேறு நற்காரியங்களுக்காகப் பங்கிட்டுக்கொடு. பூமியில் என்னென்ன கேடுகள் நடைபெறும் என்று உனக்குத் தெரியாது.

நீ சிலவற்றை உறுதிப்படுத்திக்கொள்ளலாம். மேகம் மழையால் நிறைந்திருந்தால், அது பூமியில் தண்ணீரை ஊற்றும். மரமானது வடக்கே விழுந்தாலும் தெற்கே விழுந்தாலும் விழுந்த இடத்திலேயே கிடக்கும்.

ஆனால் சிலவற்றைப்பற்றி உன்னால் உறுதியாகக் கூறமுடியாது. நீ ஒரு வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். ஒருவன் சரியான பருவம் வரட்டுமென்று காத்திருந்தால் அவனால் விதைக்க முடியாது. ஒவ்வொரு மேகத்தையும் பார்த்து மழை வருமோ என்று அஞ்சுகிறவன் ஒருபோதும் அறுவடை செய்யமாட்டான்.

காற்றின்வழி யாதென்று உனக்குத் தெரியாது. தாயின் கருவிலே ஒரு குழந்தை எவ்வாறு வளர்கின்றது என்பதும் உனக்குத் தெரியாது. இதைப்போலவே, தேவன் என்ன செய்வார் என்பதும் உனக்குத் தெரியாது. அவர் எல்லாவற்றையும் நிறைவேற்றுவார்.

எனவே அதிகாலையிலே நடுவை செய். மாலைவரை உன் வேலையை நிறுத்தாமல் செய். ஏனென்றால், எது உன்னை செல்வந்தனாக்கும் என்பதும் உனக்குத் தெரியாது. நீ செய்கிற அனைத்துமே உனக்கு வெற்றியைத் தரலாம்.

உயிரோடு இருப்பது நல்லது. சூரிய வெளிச்சத்தைப் பார்த்துக்கொண்டிருப்பது நல்லது. உன் வாழ்நாளில் உள்ள ஒவ்வொரு நாளையும் நீ அனுபவிக்கவேண்டும். எவ்வளவுகாலம் வாழ்வாய் என்பதுபற்றிக் கவலையில்லை. ஆனால் நீ மரித்துப் போவாய் என்பதை நினைத்துக்கொள். நீ உயிரோடிருக்கும் நாட்களைவிட மரித்த பின் உள்ள நாட்களே மிக அதிகம். நீ மரித்த பிறகு எதையும் செய்யமுடியாது.

கலாத்தியர் 5:16-24

ஆவியும் மனித இயல்பும்

16 ஆகையால் உங்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன், ஆவிக்கு ஏற்றபடி நடந்துகொள்ளுங்கள். பிறகு நீங்கள் மாம்ச இச்சையை நிறைவேற்றமாட்டீர்கள். 17 ஆவிக்கு எதிராக மாம்ச இச்சையும், மாம்ச இச்சைக்கு எதிராக ஆவியும் செயல்பட விரும்புகிறது. இவை ஒன்றுக்கொன்று எதிரானவை. ஆகையால் நீங்கள் உண்மையில் விரும்புவதை உங்களால் செய்ய முடியாது. 18 உங்களை ஆவியானவர் வழி நடத்தும்படி அனுமதித்தால், நீங்கள் சட்டங்களுக்குக் கீழ்ப்பட்டவர்கள் அல்ல.

19 மாம்சத்தின் செயற்பாடுகள் தெளிவாய் உள்ளன. அவை விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், 20 விக்கிரக வழிபாடு, பில்லிசூனியம், பகைமை, விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சுயநல ஆசைகள், பிரிவினைகள், கோஷ்டிப் பூசல்கள், 21 பொறாமை, குடிவெறி, களியாட்டங்கள் என்பன. நான் ஏற்கெனவே உங்களை எச்சரித்தது போன்று இப்போதும் எச்சரிக்கிறேன். இத்தகையப் பாவங்களைச் செய்பவர்கள் தேவனுடைய இராஜ்யத்துக்குள் இடம்பெற முடியாது. 22 ஆனால், ஆவியானவர் நமக்கு அன்பு, மகிழ்ச்சி, சமாதானம், பொறுமை, கருணை, நன்மை, விசுவாசம், 23 நற்பண்பு, தன்னடக்கம் ஆகிய நற்கனிகளை உருவாக்குகின்றார். இவற்றைத் தவறு என்று எந்தச் சட்டமும் கூறுவதில்லை. 24 இயேசு கிறிஸ்துவைச் சேர்ந்தவர்கள் மாம்சத்தைச் சிலுவையில் கொன்றுவிட்டார்கள். அவர்கள் ஆசைகளையும் கெட்ட விருப்பங்களையும் கூட விட்டிருக்கிறார்கள்.

மத்தேயு 16:13-20

இயேசுவே கிறிஸ்து என பேதுருவின் அறிக்கை(A)

13 செசரியா பிலிப்பு என்ற இடத்திற்கு இயேசு சென்றார். இயேசு தம் சீஷர்களிடம்,, “மனித குமாரனாகிய என்னை யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?” என்று கேட்டார்.

14 அதற்கு சீஷர்கள்,, “சிலர் உம்மை யோவான்ஸ்நானகன் என்கிறார்கள். சிலர் உம்மை எலியா என்கிறார்கள். மேலும் சிலர் உம்மை எரேமியா அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்கிறார்கள்” எனப் பதில் அளித்தார்கள்.

15 பின் இயேசு தம் சீஷர்களிடம்,, “நான் யாரென்று நீங்கள் கூறுகிறீர்கள்?” என்று கேட்டார்.

16 அதற்கு சீமோன் பேதுரு,, “நீரே கிறிஸ்து, (ஜீவனுள்ள தேவனுடைய குமாரன்)” என்று பதிலளித்தான்.

17 இயேசு அவனிடம்,, “யோனாவின் குமாரனாகிய சீமோனே! நீ ஆசீர்வதிக்கப்பட்டவன். உனக்கு யாரும் அதைக் கற்பிக்கவில்லை. நான் யார் என்பதைப் பரலோகத்தில் இருக்கும் என் பிதா உனக்குக் காட்டினார். 18 எனவே, நான் சொல்கிறேன். நீயே பேதுரு [a] (பாறை போன்றவன்.) என் சபையை இப்பாறையின் மீது கட்டுவேன். மரணத்தின் வலிமை என் சபையை வீழ்த்த முடியாது. 19 பரலோக இராஜ்யத்தின் திறவு கோல்களை உனக்குத் தருவேன். நீ இப்பூலோகத்தில் வழங்கும் நியாயத்தீர்ப்பு, (மெய்யாகவே) தேவனின் நியாயத்தீர்ப்பாகும். இப்பூலோகத்தில் நீ வாக்களிக்கும் மன்னிப்பு, தேவனின் மன்னிப்பாகும்” என்று சொன்னார்.

20 தான் கிறிஸ்து என்பதை ஒருவருக்கும் சொல்லக் கூடாது எனத் தமது சீஷர்களை இயேசு எச்சரித்தார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center