Book of Common Prayer
தாவீதின் பாடல்
24 பூமியும் அதிலுள்ள எல்லாப் பொருள்களும் கர்த்தருடையவை.
உலகமும் அதன் ஜனங்களும் அவருக்கே உரிமையாம்.
2 கர்த்தர் பூமியை தண்ணீரின் மேல் உண்டாக்கினார்.
ஆறுகளின் மீது அதை உண்டாக்கினார்.
3 கர்த்தருடைய மலைகளின் மேல் யார் ஏறக்கூடும்?
கர்த்தருடைய பரிசுத்த ஆலயத்தில் யார் நிற்கக்கூடும்?
யார் அங்கு வழிபட முடியும்?
4 தீயவை செய்யாத ஜனங்களும்,
பரிசுத்த இருதயம் உடையோரும்,
பொய்யை உண்மையெனக் கூறுவதற்கு என் பெயரைப் [a] பயன்படுத்தாதோரும், பொய்யும்,
பொய்யான வாக்குறுதிகளும் அளிக்காதோரும், மட்டுமே அங்கு தொழுதுகொள்ள முடியும்.
5 நல்ல ஜனங்கள் கர்த்தரிடம் மற்ற ஜனங்களை ஆசீர்வதிக்கச் சொல்வார்கள்.
அந்த நல்ல ஜனங்கள் தங்கள் இரட்சகராகிய தேவனை நல்லக் காரியங்களைச் செய்யச் சொல்வார்கள்.
6 அந்த நல்லோர் தேவனைப் பின்பற்ற முயல்வார்கள்.
யாக்கோபின் தேவனிடம் உதவி வேண்டி அவர்கள் செல்வார்கள்.
7 வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்!
பழைமையான கதவுகளே! திறவுங்கள்!
மகிமை வாய்ந்த அரசர் உள்ளே வருவார்.
8 யார் இந்த மகிமைமிக்க அரசர்?
கர்த்தரே அந்த அரசர். அவரே வல்லமையுள்ள வீரர்.
கர்த்தரே அந்த அரசர். அவரே போரின் நாயகன்.
9 வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்!
பழைமையான கதவுகளே, திறவுங்கள்!
மகிமை மிக்க அரசர் உள்ளே வருவார்.
10 யார் அந்த மகிமை மிக்க அரசர்?
சர்வ வல்லமையுள்ள கர்த்தரே அந்த அரசர்.
அவரே மகிமை மிக்க அரசர்.
தாவீதின் பாடல்
29 தேவனுடைய புத்திரரே, கர்த்தரைத் துதியுங்கள்!
அவரது மகிமையையும் வல்லமையையும் துதியுங்கள்.
2 கர்த்தரைத் துதித்து அவர் நாமத்தை கனப்படுத்துங்கள்!
உங்கள் விசேஷ ஆடைகளை அணிந்து அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.
3 கடலின்மேல் கர்த்தர் தமது குரலை எழுப்புகிறார்.
மகிமைபொருந்திய தேவனுடைய குரல் பெரும் சமுத்திரத்தின்மேல் இடியாய் முழங்கும்.
4 கர்த்தருடைய குரல் அவர் வல்லமையைக் காட்டும்.
அவரது குரல் அவர் மகிமையைக் காட்டும்.
5 கர்த்தருடைய குரல் பெரிய கேதுரு மரங்களையும் சின்னஞ்சிறு துண்டுகளாக்கும்.
லீபனோனின் பெரிய கேதுரு மரங்களை கர்த்தர் உடைத்தெறிகிறார்.
6 கர்த்தர் லீபனோனைக் குலுக்குகிறார்.
இளங்கன்று நடனமாடினாற்போன்று அது தோன்றுகிறது.
எர்மோன் மலை நடுங்குகிறது.
இளமையான வெள்ளாடு குதிப்பதைப்போன்று அது தோன்றுகிறது.
7 கர்த்தருடைய குரல் மின்னலைப்போல் ஒளிவிட்டுத் தாக்குகிறது.
8 கர்த்தருடைய குரல் பாலைவனத்தைக் குலுக்குகிறது.
கர்த்தருடைய குரலால் காதேஸ் பாலைவனம் நடுங்குகிறது.
9 கர்த்தருடைய குரல் மானை அஞ்சச்செய்யும்.
கர்த்தர் காடுகளை அழிக்கிறார்.
அவரது அரண்மனையில், ஜனங்கள் அவரது மகிமையைப் பாடுகிறார்கள்.
10 வெள்ளப்பெருக்கின்போது கர்த்தர் அரசராயிருந்தார்.
என்றென்றும் கர்த்தரே அரசர்.
11 கர்த்தர்தாமே அவரது ஜனங்களைப் பாதுகாப்பாராக.
கர்த்தர் அவரது ஜனங்களை சமாதானத்தோடு வாழும்படி ஆசீர்வதிப்பாராக.
கித்தீத் என்ற இசைக் கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்குத் தந்த தாவீதின் சங்கீதம்
8 எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உமது நாமம் பூமியின் எல்லா இடத்திலும் மிகுந்த அற்புதமானது!
விண்ணுலகிலும் உமது நாமம் உமக்குத் துதிகளைக் கொண்டு வருகிறது.
2 பிள்ளைகள், குழந்தைகள் வாயிலுமிருந்து உம்மைத் துதிக்கும் பாடல்கள் வெளிப்படும்.
உம் பகைவரை அமைதிப்படுத்த இவ்வல்லமையான பாடல்களைக் கொடுத்தீர்.
3 கர்த்தாவே, உமது கைகளால் நீர் செய்த வானங்களை நான் கண்டேன்.
நீர் படைத்த நிலாவையும், நட்சத்திரங்களையும் நான் கண்டு ஆச்சரியமடைந்தேன்.
4 ஏன் மனிதர்கள் உமக்கு முக்கியமாயினர்?
ஏன் அவர்களை நீர் நினைவுகூருகிறீர்?
ஏன் அவர்களைக் கவனிக்கிறீர்?
5 ஆனால் மனிதர்கள் உமக்கு முக்கியமாயினர்!
அவர்களை ஏறக்குறைய தேவர்களைப் போலவே உண்டாக்கினீர்.
மனிதரை மகிமையாலும், மேன்மையாலும் முடிசூட்டினீர்.
6 நீர் உண்டாக்கின எல்லாவற்றிற்கும் அவர்களை அதிகாரிகளாக வைத்தீர்.
7 ஆடுகள்,பசுக்கள், காட்டு மிருகங்கள் அனைத்தையும் மனிதர்கள் ஆண்டனர்.
8 வானத்துப் பறவைகளையும்
சமுத்திரத்தில் நீந்தும் மீன்களையும் அவர்கள் ஆண்டனர்.
9 எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உமது நாமம் உலகத்தில் எங்கும் மிகவும் மிகவும் அற்புதமானது!
கீத்தித் என்னும் வாத்தியத்தில் இசைக்கும் இராகத் தலைவனுக்குக் கோராகின் குடும்பம் அளித்த ஒரு துதிப் பாடல்.
84 சர்வ வல்லமையுள்ள தேவனே, உமது ஆலயம் உண்மையிலேயே இனிமையானது.
2 கர்த்தாவே, உமது ஆலயத்திற்குள் நுழைவதற்கு என்னால் காத்திருக்க முடியாது.
ஏனெனில் நான் மிகுந்த ஆவலாய் இருக்கிறேன்.
என் அவயவங்கள் ஒவ்வொன்றும் ஜீவனுள்ள தேவனோடு இருப்பதையே விரும்புகிறது.
3 என் அரசரே, என் தேவனே, சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே, குருவிகளுக்கும், அடைக்கலான் குருவிகளுக்கும் உம்முடைய ஆலயத்தில் வீடுகள் உண்டு.
உமது பலிபீடத்தருகே அப்பறவைகள் தங்கள் கூடுகளை அமைக்கும், அங்கு அவற்றின் குஞ்சுகளைப் பெறும்.
4 உமது ஆலயத்தில் வாழும் ஜனங்கள் மிகுந்த பாக்கியமுள்ளவர்களாக இருக்கிறார்கள்.
அவர்கள் எப்போதும் உம்மைத் துதித்துக்கொண்டிருக்கிறார்கள்.
5 தங்கள் இருதயத்தில் கீதங்களைப் பாடிக் கொண்டு
ஆலயத்திற்கு வருகிற ஜனங்கள் மிகுந்த சந்தோஷமாயிருக்கிறார்கள்.
6 அவர்கள் அழுகையின் பள்ளத்தாக்கின் வழியாகப் பயணம் செய்கிறார்கள்.
தேவன் அதை ஒரு நீரூற்றாகச் செய்கிறார்.
இலையுதிர்கால மழையின் தண்ணீரால் குளங்கள் தோன்றும்.
7 தேவனைச் சந்திப்பதற்காக சீயோனுக்குச் செல்லும் வழியில்
ஜனங்கள் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு பயணமாகிறார்கள்.
8 சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, என் ஜெபத்தைக்கேளும்.
யாக்கோபின் தேவனே, எனக்குச் செவிகொடும்.
9 தேவனே, எங்கள் பாதுகாவலரைப் (கேடகத்தைப்) பாதுகாத்துக்கொள்ளும்.
நீர் தேர்ந்தெடுத்த அரசன் மீது இரக்கமாயிரும்.
10 வேறிடங்களில் செலவிடும் ஆயிரம் நாட்களைக் காட்டிலும் உமது ஆலயத்தில் இருக்கும் ஒரே நாள் நல்லது.
எனது தேவனுடைய வீட்டின் வாசலில் நிற்பதோ தீயவனின் வீட்டில் வாழ்வதைக் காட்டிலும் நல்லது.
11 கர்த்தர் நமது கேடகமும் மகிமை வாய்ந்த அரசருமானவர். [a]
தயவினாலும் மகிமையாலும் தேவன் நம்மை ஆசீர்வதிக்கிறார்.
அவரைப் பின்பற்றிக் கீழ்ப்படிகிற ஜனங்களுக்கு
தேவன் எல்லா நல்ல பொருள்களையும் தருகிறார்.
12 சர்வ வல்லமையுள்ள தேவனே,
உம்மை நம்புகிற ஜனங்கள் உண்மையாகவே சந்தோஷமானவர்கள்.
செல்வம் மகிழ்ச்சியைக்கொண்டு வராது
6 வாழ்க்கையில் நான் நேர்மையாக இல்லாத இன்னொன்றையும் பார்த்திருக்கிறேன். இதனைப் புரிந்துக்கொள்ளவும் கடினமாக இருக்கிறது. 2 ஒருவனுக்கு தேவன் பெருஞ்செல்வத்தையும், சிறப்பையும், சொத்துக்களையும் கொடுக்கிறார். ஒருவன் தனக்குத் தேவையானவற்றையும் தான் விரும்புகின்றவற்றையும் பெற்றுக்கொள்கிறான். ஆனால் தேவன் அவனை அவற்றை அனுபவிக்கும்படி விடுவதில்லை. எவனோ ஒரு அந்நியன் வந்து அவற்றை எடுத்துக்கொண்டு போகிறான். இது மிகவும் மோசமான அர்த்தமற்ற ஒன்றாகும்.
3 ஒருவன் நீண்டகாலம் வாழலாம். அவனுக்கு 100 பிள்ளைகள் இருக்கலாம். ஆனால், அவன் நல்லவற்றில் திருப்தி அடையாவிட்டால், அவன் மரித்தப் பிறகு அவனை எவரும் நினைவில் வைத்துக்கொள்ளாவிட்டால், அவனைவிட பிறக்கும் முன்பே மரித்துப்போகும் குழந்தை சிறந்தது என்று என்னால் சொல்ல முடியும். 4 ஒரு குழந்தை மரித்தே பிறக்குமானால் அது உண்மையில் பொருளற்றது. அது விரைவில் இருண்ட கல்லறைக்குள்ளே பெயர்கூட இல்லாமல் புதைக்கப்படும். 5 அது சூரியனைப் பார்த்ததில்லை. அது எதையும் அறிந்துக்கொள்வதில்லை. தேவன் கொடுத்தவற்றை அனுபவிக்காத ஒருவனைவிட அது அதிக ஓய்வைப் பெறும். 6 அவன் 2,000 ஆண்டுகள் வாழ்ந்தவனாக இருக்கலாம். எனினும் அவன் வாழ்க்கையில் மகிழ்ச்சியை அனுபவிக்காவிட்டால், மரித்துப் பிறக்கும் குழந்தை அதே முடிவுக்குச் செல்ல எளிய பாதையைக் கண்டடைகிறது.
7 ஒருவன் மேலும் மேலும் வேலை செய்கிறான். ஏனென்றால், அவன் தனக்கு உணவு தேடிக்கொள்ளவே அவ்வாறு உழைக்கிறான். அதனால் அவன் திருப்தி அடைவதில்லை. 8 இந்த வழியில், ஞானமுள்ள ஒருவன் அறிவற்றைவனைவிடச் சிறந்தவன் இல்லை. வாழ்க்கையை அதன் இயல்பிலேயே ஏற்றுக்கொள்வதை அறிந்த ஏழையாக இருப்பது நல்லது. 9 நாம் மேலும் மேலும் பெறவேண்டும் என்று விரும்புவதைவிட இருப்பதை வைத்துக்கொண்டு மகிழ்ச்சி அடைவதே நல்லது. எப்பொழுதும் மேலும் மேலும் விரும்புவது பயனற்றது. அது காற்றைப் பிடிக்கும் முயற்சியைப் போன்றது.
10-11 ஒரு மனிதன் தான் உருவாக்கப்பட்ட வண்ணமே, அதாவது மனிதனாக மாத்திரம் இருக்கிறான். இதைப்பற்றி விவாதம் செய்வது வீணானது. ஒருவன் இதைப்பற்றி தேவனிடம் வாக்குவாதம் செய்ய முடியாது. ஏனென்றால் தேவன் மனிதனைவிட வல்லமை வாய்ந்தவர். நீண்ட விவாதங்கள் உண்மையை மாற்றிவிட முடியாது.
12 பூமியில் ஒருவனது குறுகிய வாழ்நாளில், எது சிறந்தது என்று எவருக்குத் தெரியும்? அவனது வாழ்க்கை நிழலைப்போன்று கடந்துபோனது. பின்னால் என்ன நடக்கும் என்பதை எவராலும் சொல்ல முடியாது.
9 மறுநாள் இம்மனிதர்கள் யோப்பா அருகே வந்தனர். அப்போது பேதுரு மாடிக்குப் பிரார்த்தனை செய்வதற்காகப் போய்க்கொண்டிருந்தான். அப்போது மதியமாகிக்கொண்டிருந்தது. 10 பேதுரு பசியடைந்தான். அவன் உண்ண வேண்டுமென நினைத்தான். ஆனால் பேதுரு உண்ணும்படியாக அவர்கள் உணவைத் தயாரித்துக்கொண்டிருக்கும்போது அவனுக்கு ஒரு காட்சி தெரிந்தது. 11 திறந்த வானத்தின் வழியாக ஏதோ ஒன்று இறங்கி வருவதை அவன் கண்டான். அது பூமிக்கு வரும் பெரிய விரிப்பைப் போன்றிருந்தது. அதனுடைய நான்கு மூலைகளிலிருந்து பூமிக்கு அது இறக்கப்பட்டது. 12 ஒவ்வொரு வகை பிராணியும் அதில் இருந்தது. நடப்பன, பூமியில் ஊர்வன, வானில் பறக்கும் பறவைகள் போன்ற யாவும் அதில் இருந்தன. 13 பின் ஒரு குரல் பேதுருவை நோக்கி, “எழுந்திரு பேதுரு, இந்தப் பிராணிகளில் நீ விரும்புகிற யாவையும் சாப்பிடு” என்றது.
14 ஆனால் பேதுரு, “நான் அதை ஒருக்காலும் செய்யமாட்டேன். கர்த்தாவே! தூய்மையற்றதும், பரிசுத்தமற்றதுமான உணவை நான் ஒரு முறைகூடப் புசித்ததில்லை” என்றான்.
15 ஆனால் குரல் மீண்டும் அவனுக்கு, “தேவன் இவற்றைச் சுத்தமாக உண்டாக்கியுள்ளார். அவற்றை தூய்மையற்றவை என்று கூறாதே!” என்றது. 16 இவ்வாறு மூன்று தடவை நிகழ்ந்தது. பிறகு அப்பொருள் முழுவதும் வானத்திற்குள் எடுத்துக்கொள்ளப்பட்டது.
17 இந்தக் காட்சியின் பொருள் என்ன என்று பேதுரு ஆச்சரியப்பட்டான். இதற்கிடையில் கொர்நேலியு அனுப்பிய மனிதர்கள் சீமோனின் வீட்டைக் கண்டுபிடித்தனர். அவர்கள் வாசலருகே நின்றுகொண்டிருந்தனர். 18 அவர்கள், “சீமோன் என்று அழைக்கப்படும் பேதுரு இங்கு வசிக்கிறாரா?” என்று கூப்பிட்டுக் கேட்டார்கள்.
19 பேதுரு இப்போதும் அந்தக் காட்சியைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தான். ஆனால் ஆவியானவர் அவனுக்கு, “கவனி! மூன்று மனிதர்கள் உன்னைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். 20 எழுந்து கீழே போ. அம்மனிதர்களோடு கேள்விகள் எதுவும் கேட்காமல் போ. நான் அவர்களை உன்னிடம் அனுப்பியிருக்கிறேன்” என்றார். 21 எனவே பேதுரு இறங்கி அம்மனிதரிடம் சென்றான். அவன், “நீங்கள் தேடி வந்த மனிதன் நானே. நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள்?” என்றான்.
22 அம்மனிதர்கள், “ஒரு தேவதூதன் உம்மைத் தனது வீட்டிற்கு அழைத்து வருமாறு கொர்நேலியுவுக்குக் கூறியுள்ளான். கொர்நேலியு ஒரு படை அதிகாரி. அவன் ஒரு நல்ல நேர்மையான மனிதன். அவன் தேவனை வணங்குகிறான். எல்லா யூத மக்களும் அவனை மதிக்கின்றனர். நீர் கூறும் காரியங்களைக் கொர்நேலியு கேட்கும்படியாக அவனது வீட்டிற்கு உம்மை அழைக்கும்படியாகக் கொர்நேலியுவுக்கு தேவதூதன் கூறியுள்ளான்” என்றனர். 23 பேதுரு அம்மனிதரை உள்ளே கூப்பிட்டு இரவில் அங்கே தங்கும்படியாகக் கேட்டுக்கொண்டான்.
மறுநாள் பேதுரு தயாராகி அம்மூன்று மனிதரோடும் சென்றான். யோப்பாவிலிருந்து சில சகோதரர்கள் பேதுருவோடு சென்றனர்.
பணத்தை நம்பாதீர்கள்
32 “சிறு குழுவினரே, பயம் கொள்ளாதீர்கள். உங்கள் தந்தை (தேவன்) உங்களுக்கு இராஜ்யத்தைக் கொடுக்க விரும்புகிறார். 33 உங்களிடமிருக்கும் பொருட்களை விற்று, அப்பணத்தைத் தேவைப்படுகிறவர்களுக்குக் கொடுங்கள். இந்த உலகத்தின் செல்வங்கள் நிலைத்திருப்பதில்லை. பரலோகத்தின் பொக்கிஷத்தைப் பெறுங்கள். அந்தப் பொக்கிஷம் என்றும் நிலைத்து நிற்கும். திருடர்கள் பரலோகத்தில் உள்ள பொக்கிஷத்தைத் திருட முடியாது. பூச்சிகள் அதை அழிக்கமுடியாது. 34 உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ, அங்கே உங்கள் இதயமும் இருக்கும்.”
எப்போதும் ஆயத்தமாக இருங்கள்(A)
35 “ஆயத்தமாக இருங்கள். எல்லா ஆடைகளையும் அணிந்து தீபங்களை ஏற்றி வையுங்கள். 36 திருமண விருந்திலிருந்து எஜமானர் வீட்டுக்குத் திரும்பி வருவதை எதிர்ப்பார்த்திருக்கும் ஊழியர்களைப் போல் இருங்கள். எஜமானர் வந்து தட்டுகிறார். அதே தருணத்தில் வேலைக்காரர்கள் எஜமானருக்காகக் கதவைத் திறக்கிறார்கள். 37 எஜமானர் வீட்டுக்கு வந்தவுடன் ஊழியர்கள் தயாராக அவருக்குக் காத்திருந்தபடியால் ஆசீர்வதிக்கப்படுவார்கள். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். எஜமானர் வேலைக்குரிய ஆடைகளைத் தானே அணிந்துகொண்டு ஊழியர்களை மேசையின் அருகே அமரும்படியாகச் சொல்வார். பின்னர், எஜமானரே அவர்களுக்கு உணவைப் பரிமாறுவார். 38 அந்த ஊழியர்கள் நள்ளிரவு வரையிலோ இன்னும் அதிகமாகவோ எஜமானருக்காகக் காத்திருக்க வேண்டியதிருக்கும். ஆனால் எஜமானர் வந்து அந்த ஊழியர்கள் அவருக்காகக் காத்திருப்பதைப் பார்க்கும்போது அவர் அதிக மகிழ்ச்சியடைவார்.
39 “இதனை நினைவில் வைத்திருங்கள்: திருடன் வரும் நேரத்தை வீட்டுச் சொந்தக்காரன் அறிந்திருந்தால், வீட்டினுள் திருடன் நுழைய அவன் அனுமதிக்கமாட்டான். 40 எனவே நீங்களும் ஆயத்தமாக இருத்தல் வேண்டும். மனித குமாரன் நீங்கள் எதிர்பாராத நேரத்தில் வருவார்” என்றார்.
2008 by World Bible Translation Center