Print Page Options
Previous Prev Day Next DayNext

Book of Common Prayer

Daily Old and New Testament readings based on the Book of Common Prayer.
Duration: 861 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 69

“லீலிப் பூக்கள்” என்ற இசையில் பாடும்படி இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்.

69 தேவனே, எல்லாத் தொல்லைகளிலுமிருந்து என்னைக் காப்பாற்றும்.
    என் வாய்வரை வெள்ளம் நிரம்பியுள்ளது.
நான் நிற்பதற்கு இடமில்லை.
    சேற்றுக்குள் அமிழ்ந்துகொண்டிருக்கிறேன்.
ஆழமான தண்ணீரினுள் இருக்கிறேன்.
    அலைகள் என்னைச் சுற்றிலும் மோதிக்கொண்டிருக்கின்றன.
    நான் அமிழும் நிலையில் உள்ளேன்.
உதவி வேண்டிக் கூப்பிடுவதால் நான் சோர்ந்து போகிறேன்.
    என் தொண்டை புண்ணாகிவிட்டது.
நான் காத்திருக்கிறேன், என் கண்கள் நோகும்வரை
    உமது உதவிக்காக நோக்கியிருக்கிறேன்.
என் தலையின் முடிகளைக் காட்டிலும் எனக்கு அதிகமான பகைவர்கள் இருக்கிறார்கள்.
    எக்காரணமுமின்றி அவர்கள் என்னை வெறுக்கிறார்கள்.
என்னை அழிப்பதற்கு அவர்கள் மிகவும் முயன்றார்கள்.
    என் பகைவர்கள் என்னைக் குறித்துப் பொய்களைப் பேசுகிறார்கள்.
நான் திருடியதாக அவர்கள் பொய்களைக் கூறினார்கள்.
    நான் திருடாத பொருள்களுக்கு அபராதம் செலுத்தும்படி அவர்கள் என்னை வற்புறுத்தினார்கள்.
தேவனே, என் பாவங்களை நீர் அறிவீர்.
    நான் உம்மிடமிருந்து எனது பாவங்களை மறைக்க முடியாது.
என் ஆண்டவரே, சர்வ வல்லமையுள்ள கர்த்தரே, உம்மைப் பின்பற்றுவோர் என்னைக் கண்டு வெட்கப்படாதபடி செய்யும்.
    இஸ்ரவேலின் தேவனே, உம்மைத் தொழுதுகொள்வோர் என்னால் அவமானப்படாதபடிச் செய்யும்.
என் முகம் வெட்கத்தால் மூடப்பட்டிருக்கிறது.
    உமக்காக இவ்வெட்கத்தை நான் சுமக்கிறேன்.
என் சகோதரர்கள் என்னை ஒரு அந்நியனைப் போல நடத்துகிறார்கள்.
    என் தாயின் பிள்ளைகள் என்னை ஒரு அயல் நாட்டவனைப்போல நடத்துகிறார்கள்.
உமது ஆலயத்தின் மீது கொண்ட என் ஆழ்ந்த உணர்ச்சிகள் என்னை அழித்துக் கொண்டிருக்கின்றன.
    உம்மைக் கேலி செய்யும் ஜனங்களின் அவதூறுகளை நான் ஏற்கிறேன்.
10 நான் அழுது, உபவாசம் மேற்கொண்டேன்.
    அவர்கள் என்னைக் கேலி செய்தார்கள்.
11 துக்கத்தை வெளிப்படுத்துவதற்கு முரட்டு ஆடைகளை உடுத்துகிறேன்.
    ஜனங்கள் என்னைக் குறித்து வேடிக்கை பேசுகிறார்கள்.
12 பொது இடங்களில் அவர்கள் என்னைப் பற்றிப் பேசுகிறார்கள்.
    குடிக்காரர்கள் என்னைப்பற்றிப் பாடல்களைப் பாடுகிறார்கள்.
13 ஆனால் இது கர்த்தராகிய உம்மை நோக்கி நான் உமக்காக ஜெபிக்கும் ஜெபம்.
    நீர் என்னை ஏற்றுக்கொள்ள வேண்டுமென விரும்புகிறேன்.
தேவனே, அன்போடு நீர் எனக்குப் பதில் அளிப்பீரென எதிர்ப்பார்க்கிறேன்.
    நான் மீட்படைவதற்கு உம்மீது நம்பிக்கை வைக்க முடியுமென நான் அறிவேன்.
14 என்னைச் சேற்றிலிருந்து இழுத்து வெளியேற்றும்.
    நான் சேற்றில் அமிழ்ந்து போகாதபடி செய்யும்.
என்னைப் பகைக்கும் ஜனங்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
    ஆழமான தண்ணீரிலிருந்து என்னைக் காப்பாற்றும்.
15 அலைகள் என்னை அமிழ்த்தாதபடிச் செய்யும்.
    ஆழத்தின் குழி என்னை விழுங்காதபடிச் செய்யும்.
    கல்லறை என் மீது தன் வாயை அடைத்துக்கொள்ளாதபடிச் செய்யும்.
16 கர்த்தாவே, உமது அன்பு நல்லது. உமது முழுமையான அன்பினால் எனக்குப் பதிலளியும்.
    உமது மிகுந்த தயவினால் என்னிடம் திரும்பி எனக்கு உதவும்!
17 உமது பணியாளிடமிருந்து விலகிப் போய்விடாதேயும்.
    நான் தொல்லையில் சிக்கியிருக்கிறேன்!
    விரைந்து எனக்கு உதவும்.
18 வந்து, என் ஆத்துமாவைக் காப்பாற்றும்.
    என் பகைவரிடமிருந்து என்னை மீட்டுக்கொள்ளும்.
19 நான் அடைந்த வெட்கத்தை நீர் அறிந்திருக்கிறீர்.
    என் பகைவர்கள் என்னை அவமானப்படுத்தியதை நீர் அறிகிறீர்.
    அவர்கள் எனக்கு அக்காரியங்களைச் செய்ததை நீர் கண்டீர்.
20 வெட்கம் என்னை நசுக்கிற்று!
    வெட்கத்தால் நான் இறக்கும் நிலைக்கு ஆளானேன்.
எனக்காகப் பரிதபிப்பவர்களுக்காகக் காத்திருந்தேன்.
    ஆனால் ஒருவரையும் நான் பார்க்க முடியவில்லை.
எனக்கு ஆறுதல் கூறுவோருக்காக நான் காத்திருந்தேன்.
    ஆனால் ஒருவரும் வரவில்லை.
21 அவர்கள் எனக்கு உணவையல்ல, விஷத்தைக் கொடுத்தார்கள்.
    அவர்கள் எனக்குத் திராட்சை ரசத்தையல்ல, காடியைக் கொடுத்தார்கள்.
22 அவர்கள் மேசைகள் உணவால் நிரம்பியிருந்தன.
    ஐக்கிய பந்திக்கான உணவு வகைகள் நிரம்பியிருந்தன.
    அந்த உணவுகளே அவர்களை அழிக்குமென நம்புகிறேன்.
23 அவர்கள் குருடாகி, அவர்கள் முதுகுகள் தளர்ந்துபோகும் என நான் நம்புகிறேன்.
24 உமது கோபத்தை அவர்கள் உணரட்டும்.
25 அவர்கள் வீடுகள் வெறுமையடையச் செய்யும்.
    யாரும் அங்கு வாழவிடாதேயும்.
26 அவர்களைத் தண்டியும், அவர்கள் ஓடிப் போவார்கள்.
    அப்போது அவர்கள் பேசிக்கொள்ளும்படியாக அவர்களுக்கு வலியும் காயங்களும் உண்டாகும்.
27 அவர்கள் செய்த தீய காரியங்களுக்காக அவர்களைத் தண்டியும்.
    நீர் எவ்வளவு நல்லவர் என்பதை அவர்களுக்குக் காட்டாதேயும்.
28 ஜீவ புத்தகத்திலிருந்து அவர்கள் பெயர்களை எடுத்துப்போடும்.
    நல்லோரின் பெயர்களோடு அவர்கள் பெயர்களை அப்புத்தகத்தில் எழுதாதேயும்.
29 நான் கவலையும் புண்பட்டவனுமானேன்.
    தேவனே, என்னைத் தூக்கிவிடும், என்னைக் காப்பாற்றும்.
30 நான் தேவனுடைய நாமத்தைப் பாடல்களால் துதிப்பேன்.
    நான் அவரை நன்றி நிறைந்த பாடல்களால் துதிப்பேன்.
31 இது தேவனை சந்தோஷப்படுத்தும்!
    ஒரு காளையைக் கொன்று, அதனை முழுமையாகப் பலி செலுத்துவதைக் காட்டிலும் இது சிறந்தது.
32 ஏழை ஜனங்களே, நீங்கள் தேவனைத் தொழுதுகொள்ள வந்தீர்கள்.
    நீங்கள் இக்காரியங்களை அறிந்துக்கொண்டு மகிழ்வீர்கள்.
33 கர்த்தர் ஏழைகளுக்கும் திக்கற்றோருக்கும் செவிசாய்க்கிறார்.
    சிறைப்பட்ட ஜனங்களையும் கர்த்தர் விரும்புகிறார்.
34 பரலோகமும், பூமியும் தேவனைத் துதிக்கட்டும்.
    கடலும் அதிலுள்ள அனைத்தும் கர்த்தரைத் துதிக்கட்டும்.
35 கர்த்தர் சீயோனை மீட்பார்.
    கர்த்தர் யூதாவின் நகரங்களை கட்டியெழுப்புவார்.
நிலத்தின் சொந்தக்காரர்கள் அங்கு மீண்டும் வாழ்வார்கள்.
36     அவரது பணியாட்களின் தலைமுறையினர் அத்தேசத்தைப் பெறுவார்கள்.
    அவரது நாமத்தை நேசிக்கும் ஜனங்கள் அங்கு வாழ்வார்கள்.

சங்கீதம் 73

புத்தகம் 3

(சங்கீதம் 73-89)

ஆசாபின் துதிப்பாடல்

73 தேவன் உண்மையாகவே இஸ்ரவேலுக்கு நல்லவர்.
    பரிசுத்த இருதயமுள்ள ஜனங்களுக்கு தேவன் நல்லவர்.
நான் தவறி வீழ்ந்து,
    பாவம் செய்யத் தொடங்கும் நிலையில் இருந்தேன்.
கெட்ட ஜனங்கள் வெற்றியடைந்ததைக் கண்டேன்.
    பெருமைபாராட்டும் அந்த ஜனங்களைக் கண்டு பொறாமைகொள்ள ஆரம்பித்தேன்.
அந்த ஜனங்கள் ஆரோக்கியமுள்ளவர்கள்.
    வாழ்வதற்கு அவர்கள் போராட வேண்டாம்.
எங்களைப்போல அந்தப் பெருமைக்காரர்கள் தொல்லைப்படுவதில்லை.
    பிறரைப்போன்று அவர்களுக்குத் தொல்லைகள் இல்லை.
எனவே அவர்கள் பெருமைமிக்கவர்களாய், வெறுக்கத்தக்கவர்களாய் உள்ளனர்.
    அவர்கள் அணியும் அணிகலன்களையும் அழகிய ஆடைகளையும் போன்று அது விரைவில் கண்டுகொள்ளத்தக்கது.
தாங்கள் பார்க்கும் எதையும் அந்த ஜனங்கள் விருப்பினால் போய் தங்களுக்கென அதை எடுத்துக்கொள்கின்றனர்.
    தாங்கள் செய்ய நினைப்பவற்றை அவர்கள் செய்து முடிக்கிறார்கள்.
பிறரைப்பற்றிக் கொடிய, தீய காரியங்களை அவர்கள் கூறுகிறார்கள்.
    அவர்கள் பெருமையும் பிடிவாதமும் உடையவர்கள்.
    அவர்கள் எப்போதும் மற்றவர்களிடமிருந்து அனுகூலம் பெறும் வழிகளைத் திட்டமிடுகிறார்கள்.
தங்களைத் தெய்வங்களென்று அப்பெருமைக்காரர்கள் நினைத்துக்கொள்கிறார்கள்.
    பூமியின் அரசர்களென்று அவர்கள் தங்களைக் கருதிக்கொள்கிறார்கள்.
10 எனவே தேவஜனங்கள் கூட அவர்களிடம் சென்று
    அவர்கள் கூறுபவற்றைச் செய்கிறார்கள்.
11 அத்தீயோர், “நாங்கள் செய்து கொண்டிருப்பவற்றை தேவன் அறியார்!
    உன்னதமான தேவன் அறியார்! என்கிறார்கள்.

12 அப்பெருமைக்காரர்கள் துர்க்குணம் மிக்கவர்கள்.
    ஆனால் அவர்கள் செல்வந்தராகவும், நாளுக்கு நாள் செல்வத்தை பெறுவோராகவும் காணப்படுகிறார்கள்.
13 எனவே நான் ஏன் என் இருதயத்தைத் தூயதாக்க வேண்டும்?
    ஏன் நான் எனது கைகளைச் சுத்தமாக வைத்திருக்கவேண்டும்?
14 தேவனே, நான் நாள் முழுவதும் துன்புறுகிறேன்,
    ஒவ்வொரு நாள் காலையிலும் நீர் என்னைத் தண்டிக்கிறீர்.

15 தேவனே, நான் இவற்றைக் குறித்துப் பிறரிடம் பேச விரும்பினேன்.
    அப்படிச் செய்தால் உமது ஜனங்களுக்கு நான் துரோகம் செய்தவனாவேன்.
16-17 இக்காரியங்களைப் புரிந்துகொள்ள நான் மிகவும் முயன்றேன்.
    ஆனால் நான் உமது ஆலயத்திற்குச் செல்லும்வரை இவையனைத்தும் எனக்கு மிகவும்கடினமாயிருந்தன.
நான் தேவனுடைய ஆலயத்திற்குப் போனேன்,
    அப்போது அதை நான் உணர்ந்துக்கொண்டேன்.
18 தேவனே, நீர் அந்த ஜனங்களை ஆபத்தான நிலையில் வைத்திருக்கிறீர்.
    விழுந்து அழிவதென்பது அவர்களுக்கு மிகவும் சுலபமானது.
19 தொல்லைகள் திடீரென நேரும், அப்போது அப்பெருமைக்காரர்கள் அழிந்துவிடுவார்கள்.
    கொடியக் காரியங்கள் அவர்களுக்கு நேரிடும், அப்போது அவர்கள் அழிந்துப்போவார்கள்.
20 கர்த்தாவே, நாங்கள் விழித்தெழும்போது மறந்துவிடும் கனவைப்போல அந்த ஜனங்கள் இருப்பார்கள்.
    எங்கள் கனவில் வரும் பெரும் விலங்குகளைப்போல் அந்த ஜனங்கள் மறைந்துபோகும்படி நீர் செய்வீர்.

21-22 நான் மூடனாக இருந்தேன்.
    நான் செல்வத்தைக் குறித்தும் கெட்ட ஜனங்களைக் குறித்தும் எண்ணிக் கலங்கினேன்.
தேவனே, நான் மனங்கலங்கி, உம்மிடம் கோபங்கொண்டேன்.
    மூடத்தனமும் அறியாமையுமுள்ள மிருகத்தைப் போல் நடந்து கொண்டேன்.
23 எனக்குத் தேவையானவை எல்லாம் என்னிடம் உள்ளன.
    நான் எப்போதும் உம்மோடிருக்கிறேன்.
    தேவனே, நீர் என் கையைப் பிடித்துக்கொண்டிருக்கிறீர்.
24 தேவனே, நீர் என்னை வழிநடத்தி, எனக்கு நல்ல போதனையைத் தருவீர்.
    பின்பு என்னை மகிமைக்கு நேராக வழி நடத்துவீர்.
25 தேவனே, பரலோகத்தில் நீர் எனக்காக இருக்கிறீர்.
    நான் உம்மோடிருக்கையில் இப்பூமியில் எனக்கு என்ன வேண்டும்?
26 என் மனமும் சரீரமும் அழிந்துப்போகலாம்,
    ஆனால் நான் நேசிக்கும் கன்மலையாகிய தேவன் எனக்காக இருக்கிறீர்.
    என்றென்றும் எனக்காக தேவன் இருக்கிறீர்.
27 தேவனே, உம்மை விட்டு விலகும் ஜனங்கள் அழிந்துபோவார்கள்.
    உமக்கு உண்மையாயில்லாத ஜனங்களை நீர் அழித்துவிடுவீர்.
28 என்னைப் பொருத்தமட்டும், நான் தேவனிடம் வந்திருக்கிறேன், அதுவே எனக்கு நலமானது.
    என் ஆண்டவராகிய கர்த்தரை என் பாதுகாப்பிடமாக வைத்திருக்கிறேன்.
    தேவனே, நீர் செய்துள்ள எல்லாவற்றையும் குறித்துக் கூற நான் வந்துள்ளேன்.

பிரசங்கி 11:9-12:14

இளமையாக இருக்கும்போது தேவனுக்குச் சேவை செய்

இளைஞர்களே! இளமையாய் இருக்கும்போதே மகிழ்ச்சியாக இருங்கள். அனுபவியுங்கள். உங்கள் மனம் போனபடி இருங்கள். நீங்கள் விரும்புகிறவற்றைச் செய்யுங்கள். ஆனால் உங்கள் செயல்களையெல்லாம் தேவன் நியாயந்தீர்ப்பார் என்பதை மறந்துவிடாதீர்கள். 10 உங்கள் கோபம் உங்களைக் கட்டுப்படுத்தும்படி விடாதீர்கள். உங்கள் உடல் உங்களைப் பாவம் செய்யத் தூண்டும்படி விடாதீர்கள். ஜனங்கள், இளமையாய் இருக்கும்போது முட்டாள்தனமானவற்றையே செய்வார்கள்.

முதுமையின் பிரச்சனைகள்

12 நீ இளமையாக இருக்கும்போது உன்னைப் படைத்தவரை நினைவுகூரு. முதுமையின் தீய நாட்கள் வருவதற்குமுன் நினைத்துக்கொள். “நான் என் வாழ்வைப் பயனற்றதாகக் கழித்துவிட்டேன்” என்று நீ சொல்லப்போகும் ஆண்டுகளுக்கு முன் நினைவுவை.

நீ இளமையாக இருக்கும்போதே, சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும் உன் கண்களுக்கு இருண்டுபோகும் காலம் வருவதற்கு முன்னரே உன்னைப் படைத்தவரை நினைத்துக்கொள் ஒரு புயலுக்குப் பின் மீண்டும் மீண்டும் புயல் வருவதுபோன்று உனக்குத் துன்பங்கள் வந்துகொண்டிருக்கும்.

அப்போது உனது கைகள் தம் பலத்தை இழக்கும். உனது கால்கள் பலவீனமாகி வளைந்துபோகும். உனது பற்கள் எல்லாம் விழுந்துபோய் உணவை நீ தின்னமுடியாத நிலைமை ஏற்படும். உன் கண்கள் தெளிவாகப் பார்க்காது. உன் காதுகள் கேட்க கஷ்டப்படும். வீதியில் உள்ள சப்தங்களை உன் காதுகள் கேட்காது. தானியங்களை அரைக்கிற கல் எந்திரம் கூட உனக்கு அமைதியுடன் இருப்பதாகத் தோன்றும். பெண்களின் பாடலை உன்னால் கேட்கமுடியாது. பறவைகளின் பாடல் ஒலிகூட உன்னை அதிகாலையில் எழுப்பிவிடும். ஏனென்றால் உன்னால் தூங்கமுடியாது.

நீ மேடான இடங்களைக் கண்டு பயப்படுவாய். உன் வழியில் எதிர்ப்படும் சிறியவற்றுக்குக்கூடப் பயப்படுவாய். வாதுமை மரத்தின் பூக்களைப்போன்று உனது தலைமயிர் வெளுத்துப்போகும். வெட்டுக் கிளியைப் போன்று நீ உன்னையே இழுத்துக்கொண்டு திரிவாய். வாழ்வதற்கான ஆசையை நீ இழந்துவிடுவாய். பிறகு நீ நிரந்தரமான கல்லறை வீட்டிற்குச் செல்வாய். துக்கம் கொண்டாடுகிறவர்கள் தெருவில் கூடி உனது உடலை கல்லறைக்கு எடுத்துச் செல்வார்கள்.

மரணம்

நீ இளமையாக இருக்கும்போதே வெள்ளிக் கயிறுகள் கட்டுவிட்டு, பொன் கிண்ணங்கள் நொறுங்கும் முன்னால் கிணற்றிலே சால் உடைவது போல் உன் வாழ்வு பயனற்றதாக போகும் முன்னால்,
    கிணற்றிலே மூடப்பட்டிருக்கும் கல் உடைந்து நொறுங்கி விழுவது போல், உன் வாழ்வு பயனற்றுப் போகும் முன்னால், உன்னைப் படைத்தவரை நினைத்துக்கொள்.
உன் உடல் பூமியிலிருந்து வந்தது.
    நீ மரித்துப்போகும்போது, உன் உடல் திரும்பவும் மண்ணுக்குப் போகும்.
ஆனால் உனது ஆவி தேவனிடமிருந்து வந்தது.
    நீ மரித்துப்போகும்போது உனது ஆவி திரும்பவும் தேவனிடமே போகும்.

இவ்வாறு அனைத்தும் பொருளற்றுப் போகும். இவை அனைத்தும் காலம் வீணானதிற்குச் சமம் என்று பிரசங்கி கூறுகிறார்.

முடிவுரை

பிரசங்கி ஞானமுடையவர். அவர் தனது ஞானத்தைப் பயன்படுத்தி ஜனங்களுக்குக் கற்றுக்கொடுத்தார். பிரசங்கி மிக கவனமாகப் படித்து தன் பாடங்களைக் கற்றுத்தர ஒழுங்குபடுத்தினார். 10 சரியான வார்த்தைகளைத் தேர்ந்தெடுக்க பிரசங்கி மிகக் கடுமையாக முயற்சி செய்தார். அவர் உண்மையானதும் செம்மையானதுமான போதனைகளை எழுதி வைத்தார்.

11 ஞானிகளின் வார்த்தைகள் மிருகங்களை வழி நடத்தப் பயன்படும் கூர்மையான கோல்களைப்போல இருக்கும். அவர்களின் போதனைகள் என்றும் உடைந்துபோகாத உறுதியான ஆப்புகளைப் போன்றிருக்கும். வாழ்க்கைக்கு வழிகாட்டும் இப்போதனைகள் நம்பிக்கைக்கு உரியவை. இந்த ஞானப் போதனைகள் எல்லாம், அதே மேய்ப்பனிடமிருந்து (தேவன்) வந்தவை. 12 என் மகனே! அப்போதனைகளைக் கற்றுக்கொள். ஆனால் மற்ற புத்தகங்களைப்பற்றி ஜாக்கிரதையாக இரு. ஜனங்கள் எப்பொழுதும் புத்தகங்களை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அதிகமாக வாசிப்பதும் உன்னைச் சோர்வுக்குள்ளாக்கிவிடும்.

13-14 இப்போது, இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளவற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய முக்கிய காரியம் என்ன? ஒரு மனிதனால் செய்யக் கூடிய மிக முக்கியமான செயல் என்னவென்றால், தேவனுக்கு மரியாதை செய்து, அவரது கட்டளைகளுக்கு அடிபணியவேண்டும். ஏனென்றால், தேவன் நாம் செய்யும் அனைத்தையும், இரகசியமான செயல்கள் உட்பட அறிந்திருக்கிறார். அவருக்கு அனைத்து நற்செயல்களைப் பற்றியும், அனைத்து தீய செயல்களைப்பற்றியும் தெரியும். ஜனங்கள் செய்யும் அனைத்தையும் அவர் நியாயம்தீர்ப்பார்.

கலாத்தியர் 5:25-6:10

25 ஆவியானவரிடம் இருந்து நாம் புதிய வாழ்க்கையைப் பெற்றிருக்கிறோம். எனவே நாம் அவரைப் பின்பற்ற வேண்டும். 26 வீண் புகழ்ச்சியை விரும்பக் கூடாது. நாம் ஒருவருக்கொருவர் தொந்தரவு கொடுக்காமல் இருக்க வேண்டும். நாம் ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாமலும் இருக்க வேண்டும்.

ஒருவருக்கொருவர் உதவுக

சகோதர சகோதரிகளே, உங்கள் குழுவில் உள்ள ஒருவன் தவறு செய்யலாம். ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் அவனிடம் போக வேண்டும். அவன் நல்ல வழிக்கு வர சாந்தத்தோடு உதவ வேண்டும். ஆனால் கவனமாக இருங்கள். நீங்கள் பாவம் செய்யத் தூண்டப்படலாம். உங்களுக்குச் சுமையாக இருக்கும்போது ஒருவருக்கு ஒருவர் உதவி செய்துகொள்ளுங்கள். நீங்கள் இதனைச் செய்யும்போது கிறிஸ்துவின் ஆணைகளுக்கு உண்மையாகவே கீழ்ப்படிகிறீர்கள். முக்கியத்துவம் இல்லாத ஒருவன் தன்னைப் பெரிதும் முக்கியத்துவம் கொண்டவனாக நினைத்துக்கொள்வானேயானால், அது தன்னைத் தானே முட்டாளாக்கிக்கொள்ளும் காரியமாகும். ஒருவன் தன்னை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. அவனவன் தனது செயல்களைச் சீர்தூக்கிப் பார்ப்பானாக. பிறகு அவன் தன்னால் செய்ய முடிந்த காரியங்களைப் பற்றிப் பெருமைப்பட்டுக்கொள்ள இடமிருக்கும். ஒவ்வொருவனும் தன் பொறுப்புகளை ஒப்புக்கொள்ள வேண்டும்.

வாழ்க்கை என்பது வயலில் நடுவது போன்றது

வேதவசனத்தில் போதிக்கப்படுகிறவன், போதிக்கிறவனுக்கு எல்லா நன்மைகளையும் பங்கு வைத்துக் கொடுப்பானாக.

புத்தியற்றவர்களாகாதீர்கள். உங்களால் தேவனை ஏமாற்ற முடியாது. ஒருவன் விதைக்கிறதையே அறுப்பான். பாவம் நிறைந்த தன் சுயத்தை திருப்தி செய்யும் பொருட்டு வாழத் தொடங்குவானேயானால், பாவம் நிறைந்த அவன் சுயமானது நிலையான மரணத்தையே தரும். ஆனால் பரிசுத்த ஆவியைத் திருப்திப்படுத்தும் பொருட்டு ஒருவன் வாழத் தொடங்குவானேயானால், அழிவற்ற வாழ்வை ஆவியானவரிடமிருந்து பெறுவான். நாம் நன்மையைச் செய்வதில் சோர்வடையாமல் இருந்தால் சரியான நேரத்தில் அழிவில்லாத வாழ்வு என்னும் விளைச்சலைப் பெறுவோம். நம் செயல்களில் என்றும் பின்வாங்கக் கூடாது. 10 எவர் ஒருவருக்கும் நன்மை செய்யும் வாய்ப்பு கிட்டும் போதெல்லாம், நாம் செய்ய வேண்டும். குறிப்பாக தேவனிடம் விசுவாசம் கொண்டுள்ள குடும்பங்களுக்கு நன்மை செய்யவேண்டும்.

மத்தேயு 16:21-28

இயேசு தம் மரணத்தைக் குறித்துக் கூறுதல்(A)

21 அப்பொழுதிலிருந்து இயேசு தம் சீஷர்களிடம் தாம் எருசலேம் செல்லவேண்டுமென சொல்லத் தொடங்கினார். மூத்த யூதத் தலைவர்களாலும், தலைமை ஆசாரியர்களாலும் நியாயப் பிரமாண போதகர்களாலும் தமக்குப் பல இன்னல்கள் வரப்போவதை இயேசு விளக்கினார். மேலும், தம் சீஷர்களிடம் தாம் கொல்லப்படவிருப்பதையும் இயேசு கூறினார். பின்னர், மூன்றாம் நாள் தாம் உயிர்த்தெழவிருப்பதையும் கூறினார்.

22 இயேசுவுடன் தனிமையில் பேசிய பேதுரு அவரை விமர்சிக்கத் தொடங்கினான். பேதுரு,, “தேவன் உம்மை அவற்றிலிருந்து காப்பாற்றட்டும். ஆண்டவரே! அவை உமக்கு ஒருபோதும் நிகழக்கூடாது!” என்று கூறினான்.

23 இயேசு அதற்குப் பேதுருவிடம்,, “என்னை விட்டு விலகிச் செல், சாத்தானே! நீ எனக்கு உதவி செய்யவில்லை! தேவனின் செயல்களைக் குறித்து உனக்குக் கவலையில்லை. மக்கள் முக்கியமெனக் கருதுகின்றவைகளையே நீ பொருட்படுத்துகிறாய்” என்று கூறினார்.

24 பின்பு இயேசு தமது சீஷர்களிடம்,, “என்னைப் பின்தொடர விரும்பும் யாரும் தன் சுயவிருப்பங்களைத் துறக்க வேண்டும். தனக்கு ஏற்படும் துன்பங்களை ஏற்றுக்கொண்டு என்னைப் பின்தொடர வேண்டும். 25 தன் உயிரைக் காத்துக்கொள்ள விரும்புகிறவன் எவனும் அதை இழப்பான். எனக்காகத் தன் உயிரைக் கொடுக்கிறவன், தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்வான். 26 தன் ஆத்துமாவை இழந்தவனுக்கு, இவ்வுலகம் முழுவதும் கிடைத்தாலும் ஒரு பயனும் இல்லை. என்ன விலை கொடுத்தாலும் இழந்த ஆத்துமாவை மீட்க இயலாது. 27 தமது தந்தையின் மகிமையுடனும் தேவதூதர்களுடனும் மீண்டும் தேவகுமாரன் வருவார். அப்பொழுது, ஒவ்வொருவருக்கும் அவர்கள் செய்த செயல்களுக்குத் தக்கபடி தேவ குமாரன் வெகுமதியளிப்பார். 28 நான் உண்மையைச் சொல்கிறேன். இங்குள்ள சிலர் தாங்கள் இறப்பதற்கு முன்பு மனித குமாரன் தன் இராஜ்யத்தின் ஆட்சியுடன் வருவதைக் காண்பார்கள்.” என்றார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center