Print Page Options
Previous Prev Day Next DayNext

Book of Common Prayer

Daily Old and New Testament readings based on the Book of Common Prayer.
Duration: 861 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 119:137-160

த்சாதே

137 கர்த்தாவே, நீர் நல்லவர்,
    உமது சட்டங்கள் நியாயமானவை.
138 நீர் உமது உடன்படிக்கையில் எங்களுக்கு நல்ல சட்டங்களைத் தந்தீர்.
    நாங்கள் அவற்றை உண்மையாகவே நம்பமுடியும்.
139 என் ஆழமான உணர்வுகள் என்னை சோர்வடையச் செய்கின்றன.
    என் பகைவர்கள் உமது கட்டளைகளை மறந்தபடியால் நான் மிகவும் கலங்கியிருக்கிறேன்.
140 கர்த்தாவே, உமது வார்த்தைகளை நாங்கள் நம்பமுடியும் என்பதற்கு சான்றுகள் இருக்கிறது.
    நான் அதை நேசிக்கிறேன்.
141 நான் ஒரு இளைஞன், ஜனங்கள் என்னை மதிப்பதில்லை.
    ஆனால் நான் உமது கட்டளைகளை மறக்கமாட்டேன்.
142 கர்த்தாவே, உமது நன்மை என்றென்றைக்கும் இருக்கும்.
    உமது போதனைகள் நம்பக் கூடியவை.
143 எனக்குத் தொல்லைகளும் கொடிய காலங்களும் இருந்தன.
    ஆனால் நான் உமது கட்டளைகளில் களிப்படைகிறேன்.
144 உமது உடன்படிக்கை என்றென்றைக்கும் நல்லது.
    நான் வாழும்படி, அதைப் புரிந்துக்கொள்ள எனக்கு உதவும்.

கோப்

145 கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைக் கூப்பிடுகிறேன்.
    எனக்குப் பதில் தாரும்! நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறேன்.
146 கர்த்தாவே, நான் உம்மைக் கூப்பிடுகிறேன். என்னைக் காப்பாற்றும்!
    நான் உமது உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிவேன்.
147 நான் உம்மிடம் ஜெபம் செய்வதற்கு அதிகாலையில் எழுந்தேன்.
    நீர் சொல்பவற்றை நான் நம்புகிறேன்.
148 உமது வார்த்தைகளைக் கற்பதற்கு
    இரவில் வெகுநேரம் நான் விழித்திருந்தேன்.
149 உமது முழு அன்பினாலும் எனக்குச் செவி கொடும்.
    கர்த்தாவே, நீர் சரியெனக் கூறும் காரியங்களைச் செய்து, என்னை வாழவிடும்.
150 ஜனங்கள் எனக்கெதிராக கொடிய திட்டங்களை வகுக்கிறார்கள்.
    அந்த ஜனங்கள் உமது போதனைகளைப் பின்பற்றவில்லை.
151 கர்த்தாவே, நீர் எனக்கு நெருக்கமானவர்.
    உமது கட்டளைகள் நம்பக்கூடியவை.
152 பல காலத்திற்கு முன்பு நான் உமது உடன்படிக்கையின் மூலம்,
    உமது போதனைகள் என்றென்றும் தொடரும் என்பதை கற்றேன்.

ரேஷ்

153 கர்த்தாவே, என் துன்பங்களைக் கண்டு, என்னை விடுவியும்.
    நான் உமது போதனைகளை மறக்கவில்லை.
154 கர்த்தாவே, எனக்காக நீர் போரிட்டு, என்னைக் காப்பாற்றும்.
    நீர் வாக்குறுதி அளித்தபடி என்னை வாழவிடும்.
155 தீயோர் உமது சட்டங்களைப் பின்பற்றாததால்
    அவர்கள் வெற்றிபெறமாட்டார்கள்.
156 கர்த்தாவே, நீர் மிகுந்த தயவுள்ளவர்.
    நீர் சரியென நினைப்பவற்றைச் செய்யும, என்னை வாழவிடும்.
157 என்னைத் துன்புறுத்த முயலும் பல பகைவர்கள் எனக்குண்டு.
    ஆனால் நான் உமது உடன்படிக்கையைப் பின்பற்றுவதை நிறுத்தவில்லை.
158 நான் அந்தத் துரோகிகளைப் பார்க்கிறேன்.
    கர்த்தாவே, அவர்கள் உமது வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவதில்லை.
    நான் அதை வெறுக்கிறேன்.
159 பாரும், நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மிகவும் முயல்கிறேன்.
    கர்த்தாவே, உமது முழுமையான அன்பினால், என்னை வாழவிடும்.
160 கர்த்தாவே, துவக்கம் முதலாகவே உமது வார்த்தைகள் எல்லாம் நம்பக்கூடியவை.
    உமது நல்ல சட்டம் என்றென்றும் நிலைத்திருக்கும்.

யோபு 23:1-12

யோபு பதில் கூறுகிறான்

23 அப்போது யோபு பதிலாக:

“நான் இன்றைக்கு இன்னும் மனங்கசந்து முறையிடுகிறேன்.
    ஏனெனில் நான் இன்னும் துன்புற்றுக்கொண்டிருக்கிறேன்.
எங்கே தேவனைப் பார்க்கக் கூடுமென நான் அறிந்திருக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.
    தேவனிடம் போகும் வழியை அறிய விரும்புகிறேன்.
நான் தேவனிடம் என் நியாயத்தை விளக்குவேன்.
    நான் களங்கமற்றவனெனக் காட்டும் விவாதங்களால் என் வாய் நிரம்பியிருக்கும்.
என் விவாதங்களுக்கு தேவன் எவ்வாறு பதிலளிப்பார் என்று அறிவேன்.
    தேவனுடைய பதில்களைப் புரிந்துகொள்வேன்.
தேவன் எனக்கெதிராக அவரது வல்லமையைப் பயன்படுத்துவாரா?
    இல்லை அவர் எனக்குச் செவிகொடுப்பார்!
நான் ஒரு நேர்மையான மனிதன்.
    என் கதையை நான் கூற, தேவன் அனுமதிப்பார்.
    அப்போது என் நீதிபதி என்னை விடுதலையாக்குவார்!

“ஆனால் நான் கிழக்கே போனால், அங்கே தேவன் இல்லை.
    நான் மேற்கே போனால், அங்கும் நான் தேவனைக் காணேன்.
தேவன் வடக்கே பணி செய்யும்போது, நான் அவரைப் பார்க்க முடியவில்லை.
    தேவன் தெற்கே திரும்பும்போதும், நான் அவரைக் காணவில்லை.
10 ஆனால் தேவன் என்னை அறிவார்.
    அவர் என்னைப் பரிசோதித்துக்கொண்டிருக்கிறார், நான் பொன்னைப்போன்று தூயவனெனக் காண்பார்.
11 தேவன் விரும்புகிறபடியே நான் எப்போதும் வாழ்ந்திருக்கிறேன்.
    நான் தேவனைப் பின்பற்றுவதை நிறுத்தியதேயில்லை.
12 நான் தேவனுடைய கட்டளைகளுக்கு எப்போதும் கீழ்ப்படிகிறேன்.
    என் உணவைக் காட்டிலும் அதிகமாக தேவனுடைய வாயிலிருந்து வரும் வார்த்தைகளை நான் நேசிக்கிறேன்.

யோவான் 1:43-51

43 மறுநாள் இயேசு கலிலேயாவுக்குச் செல்லத் தீர்மானித்தார். இயேசு பிலிப்புவைக் கண்டு, “என்னைத் தொடர்ந்து வா” என்றார். 44 பிலிப்பு, அந்திரேயா, பேதுரு ஆகியோரின் ஊரான பெத்சாயிதாவைச் சேர்ந்தவன். 45 பிலிப்பு நாத்தான்வேலைப் பார்த்து, “மோசே எழுதியிருக்கிற சட்டங்களை எண்ணிப்பார். மோசே வரப்போகிற ஒரு மனிதரைப்பற்றி எழுதினார். தீர்க்கதரிசிகளும் அவரைப்பற்றி எழுதி இருக்கிறார்கள். நாங்கள் அவரைத் தெரிந்துகொண்டோம். அவர் பெயர் இயேசு. யோசேப்பின் மகன். நாசரேத்திலிருந்து வருகிறார்.”

46 ஆனால் நாத்தான்வேல் பிலிப்புவிடம், “நாசரேத்தா? நாசரேத்திலிருந்து ஏதாவது நன்மை வர இயலுமா?” எனக் கேட்டான்.

“வந்து பார்” என்று பதிலுரைத்தான் பிலிப்பு.

47 நாத்தான்வேல் தன்னிடம் வந்துகொண்டிருப்பதை இயேசு பார்த்தார். “இதோ வந்துகொண்டிருக்கிற இவன் உண்மையாகவே தேவனின் மக்களில் ஒருவன். இவனிடம் எந்த தவறும் இல்லை” என்று இயேசு கூறினார்.

48 “என்னை உங்களுக்கு எப்படித் தெரியும்?” என நாத்தான்வேல் கேட்டான்.

பிலிப்பு என்னைப்பற்றி உனக்குக் கூறும் முன்பே, “நீ அத்தி மரத்தின் கீழே நிற்கும்போதே உன்னைப் பார்த்தேன்” என்று இயேசு சொன்னார்.

49 பிறகு இயேசுவிடம், “ஆண்டவரே! நீங்கள் தான் தேவகுமாரன். இஸ்ரவேலின் அரசன்” என்று நாத்தான்வேல் கூறினான்.

50 “நான் உன்னை அத்தி மரத்தின் அடியில் பார்த்ததாக ஏற்கெனவே கூறியிருக்கிறேன். அதனால் என்மீது நீ நம்பிக்கை வைத்தாய். ஆனால் அதைவிட மேலும் சிறந்தவைகளைக் காண்பாய்” என்று இயேசு கூறினார். 51 அவர் மேலும், “நான் மெய்யாகவே உங்களுக்குக் கூறுகிறேன். பரலோக வாசல் திறந்திருப்பதையும், மனிதகுமாரனிடத்திலிருந்து தேவதூதர்கள் மேலே செல்வதையும் கீழே இறங்குவதையும் நீங்கள் காண்பீர்கள்” [a] என்றார்.

சங்கீதம் 139

இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த துதிப் பாடல்களுள் ஒன்று

139 கர்த்தாவே, நீர் என்னை சோதித்தீர்.
    என்னைப் பற்றிய எல்லாவற்றையும் நீர் அறிகிறீர்.
நான் உட்காரும்பொழுதும் எழும்பொழுதும் நீர் அறிகிறீர்.
    வெகுதூரத்திலிருந்தே எனது எண்ணங்களை நீர் அறிகிறீர்.
கர்த்தாவே, நான் போகுமிடத்தையும் நான் படுக்கும் இடத்தையும் நீர் அறிகிறீர்.
    நான் செய்யும் ஒவ்வொன்றையும் நீர் அறிகிறீர்.
கர்த்தாவே, நான் சொல்ல விரும்பும் வார்த்தைகள்
    என் வாயிலிருந்து வெளிவரும் முன்பே நீர் அறிகிறீர்.
கர்த்தாவே, என்னைச் சுற்றிலும், எனக்கு முன்புறமும் பின்புறமும் நீர் இருக்கிறீர்.
    நீர் உமது கைகளை என் மீது மென்மையாக வைக்கிறீர்.
நீர் அறிகின்றவற்றைக் கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன்.
    நான் புரிந்துக்கொள்வதற்கு மிகவும் அதிகமானதாக அது உள்ளது.
நான் போகுமிடமெல்லாம் உமது ஆவி உள்ளது.
    கர்த்தாவே, நான் உம்மிடமிருந்து தப்பிச் செல்ல முடியாது.
கர்த்தாவே, நான் பரலோகத்திற்கு ஏறிச் சென்றாலும் நீர் அங்கு இருக்கிறீர்.
    மரணத்தின் இடத்திற்கு நான் கீழிறங்கிச் சென்றாலும் நீர் அங்கும் இருக்கிறீர்.
கர்த்தாவே, சூரியன் உதிக்கும் கிழக்கிற்கு நான் சென்றாலும் நீர் அங்கே இருக்கிறீர்.
    நான் மேற்கே கடலுக்குச் சென்றாலும் நீர் அங்கேயும் இருக்கிறீர்.
10 அங்கும் உமது வலது கை என்னைத் தாங்கும்,
    என் கைகளைப் பிடித்து நீர் வழிநடத்துகிறீர்.

11 கர்த்தாவே, நான் உம்மிடமிருந்து ஒளிந்துக்கொள்ள முயன்றாலும்,
    பகல் இரவாக மாறிப்போயிற்று.
    “இருள் கண்டிப்பாக என்னை மறைத்துக்கொள்ளும்” என்பேன்.
12 ஆனால் கர்த்தாவே,
    இருளும் கூட உமக்கு இருளாக இருப்பதில்லை.
    இரவும் பகலைப்போல உமக்கு வெளிச்சமாயிருக்கும்.
13 கர்த்தாவே, நீரே என் முழு சரீரத்தையும் உண்டாக்கினீர்.
    என் தாயின் கருவில் நான் இருக்கும்போதே நீர் என்னைப் பற்றிய எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர்.
14 கர்த்தாவே, நான் உம்மைத் துதிக்கிறேன்!
    நீர் என்னை வியக்கத்தக்க, அற்புதமான வகையில் உண்டாக்கியிருக்கிறீர்.
    நீர் செய்தவை அற்புதமானவை என்பதை நான் நன்கு அறிவேன்!

15 நீர் என்னைப்பற்றிய எல்லாவற்றையும் அறிகிறீர்.
    என் தாயின் கருவில் மறைந்திருந்து என் சரீரம் உருவெடுக்கும்போது என் எலும்புகள் வளர்வதை நீர் கவனித்திருக்கிறீர்.
16 என் சரீரத்தின் அங்கங்கள் வளர்வதை நீர் கவனித்தீர்.
    உமது புத்தகத்தில் நீர் அவைகள் எல்லாவற்றையும் பட்டியல் இட்டீர்.
    நீர் என்னை ஒவ்வொரு நாளும் கவனித்தீர். அவற்றில் ஒன்றும் காணாமற்போகவில்லை.
17 உமது எண்ணங்கள் எனக்கு
    முக்கியமானவை.
    தேவனே, உமக்கு மிகுதியாகத் தெரியும்.
18 நான் அவற்றை எண்ண ஆரம்பித்தால் அவை மணலைக்காட்டிலும் அதிகமாயிருக்கும்.
    நான் விழிக்கும்போது இன்னும் உம்மோடுகூட இருக்கிறேன்.

19 தேவனே, கெட்ட ஜனங்களைக் கொல்லும்.
    அக்கொலைக்காரரை என்னிடமிருந்து அகற்றிவிடும்.
20 அத்தீயோர் உம்மைக் குறித்துத் தீயவற்றைக் கூறுகிறார்கள்.
    அவர்கள் உம் நாமத்தை குறித்துத் தீயவற்றைக் கூறுகிறார்கள்.
21 கர்த்தாவே, உம்மை வெறுப்போரை நான் வெறுக்கிறேன்.
    உமக்கெதிராகத் திரும்புவோரை நான் வெறுக்கிறேன்.
22 அவர்களை முற்றிலும் நான் வெறுக்கிறேன்.
    உம்மைப் பகைப்பவர்கள் எனக்கும் பகைவர்களே.
23 கர்த்தாவே, என்னைப் பார்த்து என் இருதயத்தை அறிந்துகொள்ளும்.
    என்னைச் சோதித்து என் நினைவுகளை அறிந்துகொள்ளும்.
24 என்னிடம் கொடிய எண்ணங்கள் உள்ளனவா எனப்பாரும்.
    நித்தியத்திற்குரிய பாதையில் என்னை வழிநடத்தும்.

யோவான் 12:20-26

ஜீவன்-மரணம்

20 அங்கே கிரேக்க நாட்டு மக்களில் சிலரும் இருந்தனர். இவர்கள் பஸ்கா பண்டிகையில் வழிபாடு செய்ய எருசலேமுக்கு வந்திருந்தனர். 21 இவர்கள் பிலிப்புவிடம் சென்று (கலிலேயாவிலுள்ள பெத்சாய்தாவில் இருந்து வந்தவன் பிலிப்பு) “ஐயா, நாங்கள் இயேசுவைச் சந்திக்க விரும்புகிறோம்” என்றனர். 22 பிலிப்பு அந்திரேயாவிடம் சொன்னான். பிறகு இருவரும் இயேசுவிடம் சொன்னார்கள்.

23 இயேசு அவர்களிடம், “மனிதகுமாரன் மகிமை பெறுகிற நேரம் வந்துவிட்டது. 24 நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். ஒரு கோதுமை விதை தரையில் விழுந்து (இறக்க) அழிய வேண்டும். பிறகுதான் அது வளர்ந்து ஏராளமாகக் கோதுமையைத் தரும். ஆனால் அது அழியாவிட்டால், அது தனி விதையாகவே இருக்கும். 25 தனக்குச் சொந்தமான வாழ்வை நேசிக்கிறவன் அதனை இழப்பான். இவ்வுலகில் தன் வாழ்வின்மீது வெறுப்புகொண்டவன் என்றென்றைக்கும் அதைக் காத்துக்கொள்வான். அவன் நிரந்தர வாழ்வைப் பெறுவான். 26 எனக்குப் பணிவிடை செய்கிறவன் என்னைப் பின்பற்றவேண்டும். நான் எங்கெங்கே இருக்கிறேனோ அங்கெல்லாம் என் பணியாளனும் இருப்பான். எனக்குப் பணி செய்கிறவர்களை என் பிதாவும் பெருமைப்படுத்துவார்.”

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center