Book of Common Prayer
கோராகின் குடும்பம் இராகத் தலைவனுக்கு அளித்த துதிப் பாடல். இது வேதனை தரும் ஒரு நோயைப் பற்றியது. இது எஸ்ராகியனாகிய ஏமானின் மஸ்கீல் என்னும் ஒரு பாடல்.
88 தேவனாகிய கர்த்தாவே, நீரே எனது மீட்பர்.
இரவும் பகலும் நான் உம்மை நோக்கி ஜெபம் பண்ணிக்கொண்டிருக்கிறேன்.
2 தயவாய் என் ஜெபங்களைக் கவனித்துக் கேளும்.
இரக்கத்திற்காய் வேண்டும் என் ஜெபங்களுக்குச் செவிகொடும்.
3 இந்த நோயினால் என் ஆத்துமா துயரமாயிருக்கிறது,
நான் விரைவில் மரிப்பேன்.
4 ஏற்கெனவே ஜனங்கள் என்னை மரித்தவனைப் போன்றும்
வாழ பெலனற்ற மனிதனைப் போன்றும் கருதி நடத்துகிறார்கள்.
5 மரித்தோரிடம் என்னைத் தேடிப்பாருங்கள்.
உங்களிடமிருந்தும் உங்கள் பாதுகாப்பிலிருந்தும் தொடர்பிழந்த நீங்கள் மறந்து போன மரித்த ஜனங்களில் ஒருவனைப் போலவும், கல்லறையில் கிடக்கும் பிணத்தைப்போலவும் நான் இருக்கிறேன்.
6 பூமியிலுள்ள அந்தத் துவாரத்தில் நீர் என்னை வைத்தீர்.
ஆம், நீர் என்னை இருண்ட இடத்தில் வைத்தீர்.
7 தேவனே, நீர் என்னிடம் கோபமாயிருந்தீர், என்னைத் தண்டித்தீர்.
8 என் நண்பர்கள் என்னை விட்டுப் பிரிந்தார்கள்.
யாரும் தொடவிரும்பாத ஒருவனைப் போன்றும் அவர்கள் என்னைவிட்டு விலகினார்கள்.
நான் வீட்டில் அடைக்கப்பட்டேன், நான் வெளியே செல்ல முடியவில்லை.
9 என் எல்லாத் துன்பங்களுக்காகவும் அழுவதால் என் கண்கள் புண்படுகின்றன.
தேவனே, உம்மிடம் தொடர்ந்து ஜெபம் செய்கிறேன்!
ஜெபத்தில் என் கரங்களை உமக்கு நேராக உயர்த்துகிறேன்.
10 கர்த்தாவே, மரித்தவர்களுக்காக அற்புதங்கள் நிகழ்த்துவீரா?
ஆவிகள் எழுந்து உம்மைத் துதிக்குமா? இல்லை!
11 கல்லறைகளில் இருக்கும் மரித்தோர் உமது அன்பைக் குறித்துப் பேசமுடியாது.
மரித்தோரின் உலகத்திலுள்ளவர்கள் உமது உண்மையைக் குறித்துப் பேசமுடியாது.
12 இருளில் கிடக்கும் மரித்தோர் நீர் செய்யும் அற்புதமான காரியங்களைப் பார்க்க முடியாது.
மறக்கப்பட்டோரின் உலகிலுள்ள மரித்தோர் உமது நன்மையைக் குறித்துச் சொல்ல முடியாது.
13 கர்த்தாவே, நீர் எனக்கு உதவவேண்டுமென உம்மைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்!
ஒவ்வொரு நாளும் அதிகாலையில் நான் உம்மிடம் ஜெபம் செய்கிறேன்.
14 கர்த்தாவே, ஏன் என்னைக் கைவிட்டீர்?
ஏன் எனக்குச் செவிகொடுக்க மறுக்கிறீர்?
15 என் இளமைப் பருவத்திலிருந்தே நான் சோர்ந்து நோயாளியாயிருக்கிறேன்.
உமது கோபத்தால் துன்புற்றேன், நான் திக்கற்றவன்.
16 கர்த்தாவே, நீர் என்னிடம் கோபம் கொண்டிருந்தீர்.
உமது தண்டனை என்னைக் கொன்று கொண்டிருக்கிறது.
17 வலியும் நோயும் எப்போதும் என்னை வருத்துகின்றன.
என் வலியிலும் நோயிலும் நான் அமிழ்ந்துகொண்டிருப்பதாக உணருகிறேன்.
18 கர்த்தாவே, என் நண்பர்களையும், அன்பர்களையும், என்னை விட்டு விலகுமாறு செய்தீர்.
இருள் மட்டுமே என்னிடம் நிலைகொண்டது.
91 மிக உன்னதமான தேவனிடம் மறைந்துகொள்ள நீ போகமுடியும்.
சர்வ வல்லமையுள்ள தேவனிடம் பாதுகாப்பிற்காக நீ போக முடியும்.
2 நான் கர்த்தரை நோக்கி, “நீரே என் பாதுகாப்பிடம், என் கோட்டை,
என் தேவனே, நான் உம்மை நம்புகிறேன்” என்று கூறுகிறேன்.
3 மறைவான ஆபத்துக்களிலிருந்தும்
ஆபத்தான நோய்களிலிருந்தும் தேவன் உன்னைக் காப்பாற்றுகிறார்.
4 நீ தேவனைப் பாதுகாப்பிற்காக அணுகமுடியும்.
அவர் உன்னை ஒரு பறவை சிறகை விரித்துத் தன் குஞ்சுகளைக் காப்பதைப்போன்று காப்பார்.
தேவன் ஒரு கேடகத்தைப் போன்றும் சுவரைப் போன்றும் உன்னைப் பாதுகாக்கிறார்.
5 இரவில் நீ அஞ்சத்தக்கது எதுவுமில்லை.
நீ பகலில் பகைவரின் அம்புக்கும் பயப்படமாட்டாய்.
6 இருளில் வரும் கொடிய நோய்களுக்கும்,
நடுப் பகலில் வரும் கொடிய நோய்களுக்கும் நீ அஞ்சமாட்டாய்.
7 நீ ஆயிரம் பகைவர்களைத் தோற்கடிப்பாய்.
உன் சொந்த வலதுகை பதினாயிரம் பகைவீரர்களைத் தோற்கடிக்கும்.
உன் பகைவர்கள் உன்னைத் தொடக்கூடமாட்டார்கள்.
8 சற்றுப்பார்,
அத்தீயோர் தண்டிக்கப்பட்டதை நீ காண்பாய்!
9 ஏனெனில் நீ கர்த்தரை நம்புகிறாய்.
மிக உன்னதமான தேவனை நீ உன் பாதுகாப்பிடமாகக்கொண்டாய்.
10 தீயவை உனக்கு நிகழாது,
உன் வீட்டில் எந்தவிதமான நோய்களும் இருப்பதில்லை.
11 தேவன் அவரது தூதர்களை உனக்காகக் கட்டளையிடுவார்.
நீ போகுமிடங்களிலெல்லாம் அவர்கள் உன்னைப் பாதுகாப்பார்கள்.
12 உன் கால் பாறையில் மோதாதபடிக்கு
அவர்கள் கைகள் உன்னைப் பிடித்துக்கொள்ளும்.
13 சிங்கங்களின் மேலும்
விஷம் நிரம்பிய பாம்புகளின் மேலும் நடக்கும் வல்லமை உனக்கு வாய்க்கும்.
14 கர்த்தர்: “ஒருவன் என்னை நம்பினால், நான் அவனை மீட்பேன்.
என் நாமத்தை தொழுது கொண்டு என்னைப் பின்பற்றுவோரை நான் கப்பாற்றுவேன்” என்கிறார்.
15 என்னைப் பின்பற்றுவோர் உதவிக்காக என்னை அழைப்பார்கள்.
நான் அவர்களுக்குப் பதில் கொடுப்பேன்.
அவர்களுக்குத் தொல்லை நேரும்போது நான் அவர்களோடு இருப்பேன்.
நான் அவர்களைக் காப்பாற்றிப் பெருமைப்படுத்துவேன்.
16 என்னைப் பின்பற்றுவோருக்கு நான் நீண்ட ஆயுளைக் கொடுப்பேன்.
நான் அவர்களைக் காப்பாற்றுவேன்.
ஓய்வு நாளின் துதிப்பாடல்
92 மிக உன்னதமான தேவனாகிய கர்த்தரைத் துதிப்பது நல்லது.
உமது நாமத்தைத் துதிப்பது நல்லது.
2 காலையில் உமது அன்பைப்பற்றியும்
இரவில் உமது நம்பிக்கையைப் பற்றியும் பாடுவது நல்லது.
3 தேவனே பத்து நரம்பு வாத்தியங்களாலும், வீணையினாலும், தம்புருவினாலும்,
இசை மீட்டி உம்மைப் பாடுவது நல்லது.
4 கர்த்தாவே, நீர் செய்த காரியங்களால் எங்களை உண்மையாகவே மகிழ்ச்சிப்படுத்துகிறீர்.
அக்காரியங்களைக் குறித்து நாங்கள் சந்தோஷமாகப் பாடுவோம்.
5 கர்த்தாவே, நீர் மேன்மையான காரியங்களைச் செய்தீர்.
உமது எண்ணங்களை எங்களால் புரிந்துகொள்ள முடியாது.
6 உம்மோடு ஒப்பிடுகையில் ஜனங்கள் மூடமிருகங்களைப்போல் இருக்கிறார்கள்.
நாங்கள் எதையும் புரிந்துகொள்ள முடியாத மூடர்களைப்போல் இருக்கிறோம்.
7 களைகளைப்போல் தீயோர் வாழ்ந்து மறைகிறார்கள்.
அவர்கள் செய்யும் பயனற்ற காரியங்களே என்றென்றும் அழிக்கப்படும்.
8 ஆனால் தேவனே, நீர் என்றென்றும் மகிமைப்படுத்தப்படுவீர்.
9 கர்த்தாவே, உமது பகைவர்கள் எல்லோரும் அழிக்கப்படுவார்கள்.
தீயவை செய்யும் எல்லா ஜனங்களும் அழிக்கப்படுவார்கள்.
10 ஆனால் நீர் என்னைப் பெலனுடையவனாகச் செய்கிறீர்.
பலத்த கொம்புகளையுடைய ஆட்டைப் போலாவேன்.
விசேஷ வேலைக்காக நீர் என்னைத் தேர்ந்தெடுத்தீர்.
உமது புது எண்ணெயை என்மீது ஊற்றினீர்.
11 என் பகைவர்களை என்னைச் சுற்றிலும் காண்கிறேன்.
என்னைத் தாக்க வருகிற பெருங்காளைகளைப் போல அவர்கள் காணப்படுகிறார்கள்.
அவர்கள் என்னைக் குறித்துச் சொல்பவற்றை நான் கேட்கிறேன்.
12-13 செழிப்பாக வளருகின்ற பனைமரத்தைப் போல் நீதிமான் இருப்பான்.
லீபனோனின் கேதுரு மரத்தைப்போல் நல்லவன் இருப்பான்.
கர்த்தருடைய ஆலயத்தில் நடப்பட்ட மரங்களைப்போல் நல்லோர் வலிமையுடன் இருப்பார்கள்.
தேவனுடைய ஆலய முற்றத்தில் அவர்கள் வலிமையோடு வளருவார்கள்.
14 வயது முதிர்ந்தபோதும் அவர்கள் தொடர்ந்து கனிகளைத் தருவார்கள்.
அவர்கள் செழுமையும், பசுமையுமான மரங்களைப்போல் இருப்பார்கள்.
15 கர்த்தர் நல்லவர் என்பதை எல்லோருக்கும் காண்பிப்பார்கள்.
அவர் என் பாறை, அவர் ஒருபோதும் தீமை செய்வதில்லை.
கானானுக்குப் போன ஒற்றர்கள்
13 கர்த்தர் மோசேயிடம், 2 “கானான் தேசத்தைக் கண்டு வருமாறு சிலரை அனுப்பு. இஸ்ரவேல் ஜனங்களுக்கு நான் கொடுக்கப்போகும் நாடு இதுதான். குடும்பத்திற்கு ஒரு தலைவன் என்கிற வீதம் 12 கோத்திரங்களில் இருந்தும் 12 தலைவர்களை அங்கு அனுப்பு” என்று கூறினார்.
3 கர்த்தருடைய கட்டளைக்கு மோசே கீழ்ப்படிந்தான். ஜனங்கள் அனைவரும் பாரான் பாலைவனத்தில் தங்கியிருந்தபோது இந்தத் தலைவர்களை மோசே கானானுக்கு அனுப்பி வைத்தான்.
21 எனவே அவர்கள் நாட்டைப் பற்றித் தெரிந்துக்கொள்ளச் சென்றனர். பின் அவர்கள் சீன் பாலைவனம் முதல் ஆமாத்துக்குப் போகிற வழியாகிய ரேகொப்வரை சுற்றிப் பார்த்தனர். 22 நெகேவ் வழியாக நாட்டிற்குள் நுழைந்தனர். தெற்கேயும் எபிரோன் வரை சென்றார்கள். (எபிரோன் எகிப்திலுள்ள சோவானுக்கு ஏழு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.) அங்கே ஆனாக்கின் சந்ததியாகிய அகீமானும், சேசாயும் தல்மாயும் இருந்தார்கள். 23 பிறகு அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்குவரை சென்றனர். அங்கே அவர்கள் திராட்சைக் கொடியில் ஒரு குலையை அறுத்துக்கொண்டனர். அதனை ஒரு கம்பிலே கட்டி, இரண்டு பேர் தூக்கிக்கொண்டு வந்தனர். அவர்கள் மாதுளம் பழங்களிலும், அத்திப்பழங்களிலும் சிலவற்றைக் கொண்டு வந்தனர். 24 அந்த இடம் எஸ்கோல் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்பட்டது. காரணம் அந்த இடத்தில்தான் இஸ்ரவேல் ஜனங்கள் ஒரு குலை திராட்சை பழத்தைக் கொடியோடு வெட்டிக் கொண்டு வந்தார்கள்.
25 அவர்கள் 40 நாட்கள் அந்த தேசத்தை நன்கு சுற்றி பார்த்தனர். பிறகு அவர்கள் தங்கள் முகாமுக்கு திரும்பி வந்தனர். 26 இஸ்ரவேல் ஜனங்கள் பாரான் பாலைவனத்தில் காதேஷ் என்ற இடத்துக்கு அருகில் தம் கூடாரங்களை அடித்திருந்தனர். அவர்கள் மோசே, ஆரோன் மற்றும் மற்ற இஸ்ரவேல் ஜனங்கள் இருந்த இடத்துக்குத் திரும்பி வந்தனர். அந்நாட்டிலிருந்து கொண்டு வந்த பழங்களைக் காட்டினார்கள். 27 மேலும் அவர்கள் மோசேயிடம், “நீங்கள் அனுப்பிய இடத்திற்கு நாங்கள் சென்றோம். பல நல்ல பொருட்களால் நிறைந்த நாடு அது. அங்கே பழுத்துள்ள சில பழங்களில் கொஞ்சம் இதோ; 28 ஆனால் அங்கு ஜனங்கள் மிகவும் பலமுள்ளவர்களாக வாழ்கிறார்கள். நகரங்கள் மிகவும் விரிவானவை, மிகவும் பலமான பாதுகாப்பு கொண்டவை. அங்கே சில ஏனாக்கின் ஜனங்களையும் கண்டோம். 29 அமலேக்கியர் தென்புறமான நாட்டில் குடியிருக்கிறார்கள். மலை நாடுகளில் ஏத்தியரும், எபூசியரும், எமோரியரும் குடியிருக்கிறார்கள். கானானியர்கள் கடற்கரைகளிலும், யோர்தான் நதி அருகேயும் வாழ்கிறார்கள்” என்றனர்.
30 மோசேயின் அருகே இருந்த ஜனங்களைக் காலேப் அமைதிப்படுத்தி, “நாம் போய் அந்நாட்டை நமக்குரியதாக எடுத்துக்கொள்வோம். நாம் எளிதில் இவர்களை வென்றுவிடலாம்” என்றான்.
25 நீங்கள் நியாயப்பிரமாணத்தைக் கடைபிடித்தால்தான் விருத்தசேதனம் செய்துகொண்டதில் பொருள் உண்டு. நீங்கள் சட்ட விதிகளை மீறுவீர்களேயானால் நீங்கள் விருத்தசேதனம் செய்தும் அது பயனற்றதாகிறது. 26 யூதர் அல்லாதவர்கள் விருத்தசேதனம் செய்துகொள்ளாதவர்களே. எனினும் அவர்கள் சட்டவிதிகளின்படி வாழ்வார்களேயானால் அவர்களும் விருத்தசேதனம் செய்துகொண்டவர்களாகவே கருதப்படுவர். 27 யூதர்களாகிய உங்களுக்கு எழுதப்பட்ட சட்டவிதிகளும், விருத்தசேதனமும் உள்ளன. ஆனால் அவற்றை நீங்கள் மீறுகிறீர்கள். எனவே தம் சரீரங்களில் விருத்தசேதனம் செய்துகொள்ளாதவர்களாக இருந்தும் கூட சட்ட விதிகளை மதித்து நடப்பவர்கள் உங்கள் குற்றத்தை நிரூபித்து விடுகிறார்கள்.
28 சரீரத்தால் யூதனாகப் பிறந்தவன் எவனும் உண்மையில் யூதன் அல்லன். உண்மையான விருத்தசேதனம் என்பது சரீரத்தளவில் செய்யப்படுவது அல்ல. 29 மனத்தளவில் யூதனாக இருப்பவனே உண்மையான யூதன். உண்மையான விருத்தசேதனம் இருதயத்தில் செய்யப்படுவது. அது ஆவியால் செய்யப்படுவது. அது எழுதப்பட்ட ஆணைகளால் செய்யப்படுவதல்ல. ஆவியின் மூலம் இதயத்தில் விருத்தசேதனம் செய்யப்படும் ஒருவன் மக்களால் புகழப்படாவிட்டாலும் தேவனால் புகழப்படுவான்.
3 எனவே மற்றவர்களிடம் இல்லாத உயர்வு யூதர்களிடம் மட்டும் என்ன உள்ளது? அவர்களின் விருத்தசேதனம் என்பதில் அடங்கி இருக்கும் சிறப்பு என்ன? 2 யூதர்களிடம் நிறைய சிறப்புத் தன்மைகள் உள்ளன. தேவன் அவர்களை நம்பியே தம் போதனைகளைக் கொடுத்தார். இதுதான் மிக சிறப்பான மேன்மையாகும். 3 சில யூதர்கள் தேவனுடைய நம்பிக்கைக்கு உரியவர்களாக இல்லை என்பது உண்மையாகும். எனினும் அது தேவனுடைய வாக்குறுதியை மதிப்பற்றதாகச் செய்யாது. 4 உலகில் உள்ள அத்தனை மக்களும் பொய்யராகிப் போனாலும் தேவன் தொடர்ந்து உண்மையுள்ளவராகவே இருப்பார்.
“நீர் உமது வார்த்தைகளில் நீதியுள்ளவராய் விளங்குவீர்.
உம்முடைய நியாயம் விசாரிக்கப்படும்போது வெற்றியடைவீர்” (A)
என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளது.
5 நாம் தவறு செய்யும்போது, தேவன் சரியானவர் என்று தெளிவாக அது காட்டிவிடும். எனவே தேவன் நம்மைத் தண்டிக்கும்போது அவர் நீதியில்லாதவர் என்று கூற முடியுமா? (சிலர் இவ்வாறு கூறுவதாக எண்ணுகிறேன்.) 6 கூடாது நம்மை தேவன் தண்டிக்க முடியாமல் போனால், பின்பு உலகத்தையும் தேவனால் நியாயந்தீர்க்க முடியாமல் போகும்.
7 “நான் பொய் சொல்லும்போது அது தேவனுக்குப் பெருமையே சேர்க்கிறது. ஏனெனில் என் பொய் தேவனுடைய உண்மையை விளங்க வைக்கிறது. அப்படி இருக்கும்போது நான் ஏன் பாவி என்று தீர்ப்பளிக்கப்பட வேண்டும்?” என்று ஒருவன் கேட்கிறான். 8 “நாம் தீமை செய்வோம். அதன் மூலம் நன்மை வரும்” என்று சொல்வதைப் போலாகும் அது. ஆனால் சிலர் அவ்வாறுதான் நாங்கள் போதிக்கிறோம் என்று விமர்சிக்கிறார்கள். அவர்கள் சொல்வது தவறு. அவர்கள் கண்டிக்கப்பட வேண்டும்.
மன்னிப்பைப்பற்றிய உவமை
21 அப்பொழுது, பேதுரு இயேசுவிடம் வந்து,, “ஆண்டவரே, என் சகோதரன் எனக்குத் தொடர்ந்து தீமை செய்தால் நான் அவனை எத்தனை முறை மன்னிக்க வேண்டும்? ஏழுமுறை மன்னித்தால் போதுமா?” என்று கேட்டான்.
22 அதற்கு இயேசு அவனுக்கு,, “நீ அவனை ஏழு முறைக்கும் அதிகமாக மன்னிக்க வேண்டும் என்று நான் கூறுகிறேன். அவன் எழுபத்தேழு முறை [a] தீமை செய்தாலும் நீ தொடர்ந்து மன்னிக்க வேண்டும்” என்று பதில் அளித்தார்.
23 ,“எனவே, பரலோகமானது தன் வேலைக்காரர்களுடன் கணக்கை சரி செய்ய முடிவெடுத்த மன்னனைப் போன்றது. 24 மன்னன் வேலைக்காரர்களின் கணக்கை சரி செய்யத் துவங்கினான். ஒரு வேலைக்காரன் அம்மன்னனுக்கு ஆயிரக்கணக்கில் பணம் கொடுக்க வேண்டியிருந்தது. 25 ஆனால், அவ்வேலைக்காரனால், தன் எஜமானனான மன்னனுக்குப் பணத்தைத் திருப்பிச் செலுத்த இயலவில்லை. எனவே, அவ்வேலைக்காரனுக்குச் சொந்தமான அனைத்தையும் மனைவி குழந்தைகள் உட்பட ஏலம் போட மன்னன் ஆணையிட்டான். அதிலிருந்து தனக்குத் தரவேண்டிய பணத்தைத் தரவேண்டும் என்றான்.
26 ,“ஆனால், அந்த வேலைக்காரன் மன்னனின் கால்களில் விழுந்து, ‘என்னைப் பொறுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்குத் தர வேண்டிய அனைத்தையும் நான் கொடுத்து விடுகிறேன்’ என்று கெஞ்சினான். 27 மன்னன் அவ்வேலைக்காரனுக்காக வருந்தினான். எனவே, மன்னன் அவ்வேலைக்காரன் பணம் ஏதும் தரத் தேவையில்லை என கூறி அவ்வேலைக்காரனை விடுவித்தான்.
28 ,“பின்னர், அதே வேலைக்காரன் தனக்குச் சிறிதளவே பணம் தரவேண்டிய வேறொரு வேலைக்காரனைக் கண்டான். அவன் உடனே, தனக்குப் பாக்கிப்பணம் தரவேண்டியவனின் கழுத்தைப் பிடித்து, ‘எனக்குத் தரவேண்டிய பணத்தைக் கொடு’ என்று கேட்டான்.
29 ,“மற்றவன் அவன் கால்களில் வீழ்ந்து, ‘என்னைப் பொறுத்துக் கொள். உனக்குத் தரவேண்டிய அனைத்தையும் கொடுத்து விடுகிறேன்’ என்று கெஞ்சிக் கேட்டான்.
30 ,“ஆனால், முதலாமவன் தான் பொறுத்துக்கொள்ள இயலாதென்றான். அவன் நீதிபதியிடம் மற்றவன் தனக்குப் பணம் தர வேண்டும் என்று கூற இரண்டாமவன் சிறையில் அடைக்கப்பட்டான். அவ்வேலைக்காரன் அவன் தரவேண்டிய பணம் முழுவதையும் கொடுக்கும் வரையிலும் சிறையிலிருக்க நீதிபதி பணித்தார். 31 மற்ற வேலைக்காரர்கள் அனைவரும் நடந்ததைக் கண்டு மிகவும் வருந்தினார்கள். எனவே, அவர்கள் தங்கள் எஜமானனாகிய மன்னனிடம் சென்று நடந்தவை அனைத்தையும் கூறினார்கள்.
32 ,“பின்பு அம்மன்னன் தன் வேலைக்காரனை அழைத்துவரச் செய்து, அவனிடம், ‘பொல்லாத வேலைக்காரனே, எனக்கு நிறையப்பணம் தர வேண்டிய நீ, என்னிடம் மன்னிப்புக் கேட்டுக் கெஞ்சினாய். எனவே, நீ எனக்குப் பணம் ஏதும் தரவேண்டியதில்லை என்று கூறினேன். 33 ஆகவே, நீயும் உன் சக வேலைக்காரனுக்கு அதேபோலக் கருணை காட்டியிருக்க வேண்டும்’ என்று சொன்னான். 34 மிகக் கோபமடைந்த மன்னன், அவ்வேலைக்காரனைச் சிறையிலிட்டான். தரவேண்டிய பணம் அனைத்தையும் திருப்பித் தரும்வரைக்கும் அவன் சிறையிலிருக்க வேண்டியிருந்தது.
35 ,“என் பரலோகப் பிதா உங்களுக்கு என்ன செய்வாரோ அதையே அம்மன்னனும் செய்தான். நீங்கள் மெய்யாகவே உங்கள் சகோதரனையோ சகோதரியையோ மன்னிக்க வேண்டும். இல்லையெனில் பரலோகப் பிதாவும் உங்களை மன்னிக்கமாட்டார்” என்று இயேசு சொன்னார்.
2008 by World Bible Translation Center