Book of Common Prayer
சாலொமோனுக்கு
72 தேவனே, அரசனும் உம்மைப்போன்று ஞானமுள்ள முடிவுகளை எடுக்க அவருக்கு உதவும்.
உமது நல்லியல்பை அரசனின் மகனும் அறிந்துகொள்ள உதவும்.
2 அரசன் உமது ஜனங்களுக்குத் தகுதியான நீதி வழங்க உதவும்.
உமது ஏழை ஜனங்களுக்காக ஞானமுள்ள முடிவுகளை எடுக்க அவனுக்கு உதவும்.
3 தேசம் முழுவதும் சமாதானமும் நீதியும் நிலவட்டும்.
4 ஏழைகளுக்கு அரசன் நல்லவனாக இருக்கட்டும்.
திக்கற்றோருக்கு அவன் உதவட்டும்.
அவர்களைத் தாக்குவோரை அவன் தண்டிக்கட்டும்.
5 சூரியன் ஒளிவிடும் மட்டும், சந்திரன் வானிலுள்ள மட்டும் ஜனங்கள் அரசனுக்குப் பயந்து அவனை மதிப்பார்கள் என நான் நம்புகிறேன்.
என்றென்றும் ஜனங்கள் அவனுக்குப் பயந்து அவனை மதிப்பார்கள் என நான் நம்புகிறேன்.
6 வயலில் விழும் மழையைப்போன்றிருக்க அரசனுக்கு உதவும்.
பூமியில் விழும் தூறலைப் போன்றிருக்க அவனுக்கு உதவும்.
7 அவன் அரசனாக இருக்கும்போது நன்மை மலரட்டும்.
சந்திரன் இருக்கும்மட்டும் சமாதானம் நிலவட்டும்.
8 ஐபிராத்து நதியிலிருந்து பூமியின் தூரத்து எல்லை வரைக்கும்,
கடலிலிருந்து கடல் வரைக்கும் அவன் அரசு பெருகட்டும்.
9 பாலைவனத்தில் வாழும் எல்லா ஜனங்களும் அவனுக்குத் தலை வணங்குவார்கள்.
புழுதியில் முகத்தைப் புதைத்து அவன் பகைவர்கள் அவனுக்கு முன்பாக விழுந்து வணங்கட்டும்.
10 தர்ஷீசின் அரசர்களும் தூரத்துத் தேசங்களின் அரசர்களும் அவனுக்குப் பரிசுகளைக் கொண்டுவரட்டும்.
ஷேபாவிலும், சேபாவிலுமுள்ள அரசர்கள் தங்கள் கப்பத்தை அவனுக்குக் கொண்டுவரட்டும்.
11 எல்லா அரசர்களும் நமது அரசனை விழுந்து வணங்கட்டும்.
எல்லா தேசங்களும் அவனுக்குச் சேவை செய்யட்டும்.
12 நமது அரசன் திக்கற்றோருக்கு உதவுகிறார்.
ஏழையான திக்கற்ற ஜனங்களுக்கு நம் அரசன் உதவுகிறார்.
13 ஏழையான திக்கற்ற ஜனங்கள் நம் அரசனைச் சார்ந்திருப்பார்கள்.
அரசன் அவர்களை உயிரோடு வாழச் செய்கிறார்.
14 அவர்களைத் துன்புறுத்த முயலும் கொடியோரிடமிருந்து அரசன் அவர்களைக் காப்பாற்றுகிறார்.
அந்த ஏழை ஜனங்களின் உயிர்கள் அரசனுக்கு மிக முக்கியமானவை.
15 அரசன் நீடூழி வாழ்க!
அவர் சேபாவின் பொன்னைப் பெறட்டும்.
எப்போதும் அரசனுக்காக ஜெபம் செய்யுங்கள்.
ஒவ்வொரு நாளும் அவரை ஆசீர்வதியுங்கள்.
16 வயல் நிலங்கள் மிகுதியான தானியத்தை விளைவிக்கட்டும்.
மலைகளும் பயிர்களால் நிரம்பட்டும்.
நிலங்களில் புல் வளர்வது போன்று
நகரங்கள் ஜனங்களால் நிரம்பட்டும்.
17 அரசன் என்றென்றும் புகழ்பெறட்டும்.
சூரியன் ஒளிவிடும்மட்டும் ஜனங்கள் அவர் நாமத்தை நினைவுகூரட்டும்.
ஜனங்கள் அவரால் ஆசீர்வதிக்கப்படட்டும்.
அவர்கள் எல்லோரும் அவரை வாழ்த்தட்டும்.
18 இஸ்ரவேலரின் தேவனாகிய, கர்த்தராகிய தேவனைத் துதியுங்கள்.
தேவன் ஒருவரே அத்தகைய அற்புதமான காரியங்களைச் செய்யமுடியும்.
19 அவரது மகிமைபொருந்திய நாமத்தை என்றென்றும் துதியுங்கள்!
அவரது மகிமை முழு உலகத்தையும் நிரப்பட்டும்! ஆமென், ஆமென்!
20 ஈசாயின் மகனாகிய தாவீதின் ஜெபங்கள் இங்கு முடிகின்றன.
யோட்
73 கர்த்தாவே, நீர் என்னை உருவாக்கினீர்.
உமது கைகளால் நீர் என்னைத் தாங்குகிறீர்.
உமது கட்டளைகளைக் கற்கவும் புரிந்துகொள்ளவும் நீர் எனக்கு உதவும்.
74 கர்த்தாவே, உம்மைப் பின்பற்றுவோர் என்னைப் பார்க்கிறார்கள்,
என்னை மதிக்கிறார்கள்.
நீர் சொல்வதை நான் நம்புவதால் அவர்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
75 கர்த்தாவே, உமது முடிவுகள் நியாயமானவை என்பதை நான் அறிகிறேன்.
நீர் என்னைத் தண்டிப்பதும் நியாயமேயாகும்.
76 இப்போதும், உமது உண்மை அன்பினால் எனக்கு ஆறுதலளியும்.
நீர் உறுதியளித்தபடியே எனக்கு ஆறுதல் தாரும்.
77 கர்த்தாவே, எனக்கு ஆறுதல் தந்து என்னை வாழவிடும்.
நான் உண்மையாகவே உமது போதனைகளில் களிப்படைகிறேன்.
78 என்னிலும் உயர்ந்தோராகத் தங்களைக் கருதும் ஜனங்கள் என்னைப் பற்றிப் பொய் கூறினார்கள்.
அந்த ஜனங்கள் வெட்கமடைந்தார்கள் என நான் நம்புகிறேன்.
கர்த்தாவே, நான் உமது சட்டங்களைக் கற்கிறேன்.
79 உமது உடன்படிக்கையை அறியும்படி உம்மைப் பின்பற்றுவோர்
என்னிடம் திரும்பி வருவார்கள் என நான் நம்புகிறேன்.
80 கர்த்தாவே, நான் உமது கட்டளைகளுக்குச் சிறிதும் பிசகாது கீழ்ப்படியச்
செய்யும், எனவே நான் வெட்கப்படமாட்டேன்.
கப்
81 நீர் என்னை மீட்கும்படி காத்திருந்து சாகும் தறுவாயில் உள்ளேன்.
ஆனால் கர்த்தாவே, நீர் கூறியவற்றை நான் நம்புகிறேன்.
82 நீர் உறுதியளித்தவற்றிற்காக நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
என் கண்களோ தளர்ந்து போகின்றன.
கர்த்தாவே, நீர் எப்போது எனக்கு ஆறுதலளிப்பீர்?
83 குப்பை மேட்டில் கிடக்கும் காய்ந்த தோல்பைப்போல ஆனாலும்,
நான் உமது சட்டங்களை மறக்கமாட்டேன்.
84 எத்தனை காலம் நான் உயிரோடிருப்பேன்?
கர்த்தாவே, என்னைத் துன்பப்படுத்துகிற ஜனங்களை நீர் எப்போது தண்டிப்பீர்?
85 சில பெருமைக்காரர்கள் தங்கள் பொய்களால் என்னைக் குத்தினார்கள்.
அது உமது போதனைகளுக்கு எதிரானது.
86 கர்த்தாவே, ஜனங்கள் உமது கட்டளைகளையெல்லாம் நம்பமுடியும்.
அவர்கள் என்னைத் தவறாகத் துன்புறுத்துகிறார்கள், எனக்கு உதவும்!
87 அந்த ஜனங்கள் ஏறக்குறைய என்னை அழித்துவிட்டார்கள்.
ஆனால் நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதை நிறுத்தவில்லை.
88 கர்த்தாவே, உமது உண்மை அன்பைக் காட்டி என்னை வாழவிடும்.
நீர் கூறிய காரியங்களை நான் செய்வேன்.
லாமேட்
89 கர்த்தாவே, உமது வார்த்தை என்றென்றும் தொடரும்.
உமது வார்த்தை என்றென்றும் பரலோகத்தில் தொடரும்.
90 நீர் என்றென்றும் எப்போதும் நேர்மையானவர்.
கர்த்தாவே, நீர் பூமியை உண்டாக்கினீர், அது இன்னும் நிலைத்திருக்கிறது.
91 உமது சட்டங்களாலும், அவற்றிற்கு ஒரு அடிமையைப்போன்று பூமி
கீழ்ப்படிவதாலும் அது இன்றுவரை நிலைத்திருக்கிறது.
92 உமது போதனைகள் நண்பர்களைப் போல் எனக்கு இல்லாவிட்டால்
எனது துன்பங்களே என்னை அழித்திருக்கும்.
93 கர்த்தாவே, நான் உமது கட்டளைகளை என்றைக்கும் மறக்கமாட்டேன்.
ஏனெனில் அவை என்னை வாழவைக்கின்றன.
94 கர்த்தாவே, நான் உம்முடையவன், எனவே என்னைக் காப்பாற்றும்.
ஏனெனில் நான் உம்முடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதற்கு மிகவும் முயல்கிறேன்.
95 தீயோர் என்னை அழிக்க முயன்றார்கள்.
ஆனால் உமது உடன்படிக்கை என்னை ஞானமுள்ளவனாக்கிற்று.
96 உமது சட்டங்களைத் தவிர,
எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு.
அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா? நாம் என்ன செய்யலாம்?
11 நான் வாழ்க்கையில் நியாயமற்ற சிலவற்றைப் பார்த்தேன். வேகமாக ஓடுகிறவன் பந்தயத்தில் எப்பொழுதும் வெற்றி பெறுவதில்லை. வலுமிக்க படை போரில் எப்பொழுதும் வெற்றிபெறுவதில்லை. ஞானத்தில் சிறந்தவன் எப்பொழுதும் அதிகமாகச் சம்பாதிப்பதில்லை. அறிவுக் கூர்மைமிக்கவன் எப்பொழுதும் செல்வத்தைப் பெறுவதில்லை. கல்வி அறிவுமிக்கவன் எப்பொழுதும் தனக்குரிய பாராட்டுகளைப் பெறுவதில்லை; நேரம் வரும்போது ஒவ்வொருவருக்கும் தீமையே ஏற்படுகின்றன.
12 அடுத்து என்ன நடக்கும் என்று ஒருவனால் என்றைக்கும் அறிய முடியாது. அவன் வலைக்குள் அகப்பட்ட மீனைப்போன்று இருக்கிறான். அம்மீனுக்கு என்ன நடக்கும் என்பது தெரியாது. அவன் கண்ணியில் அகப்பட்ட பறவையைப் போன்றவன். அப்பறவை அடுத்து நடக்கப்போவதை அறியாது. இதுபோலவே, ஒருவன் தீயவற்றால் கண்ணியில் அகப்படுகிறான். அது திடீரென்று அவனுக்கு ஏற்படுகின்றது.
ஞானத்தின் வல்லமை
13 இந்த வாழ்வில் ஒருவன் ஞானமுள்ளவற்றைச் செய்வதை நான் பார்த்தேன். எனக்கு அது மிக முக்கியமாகப்பட்டது. 14 மிகக் குறைந்த எண்ணிக்கைக்கொண்ட ஜனங்களையுடைய நகரம் இருந்தது. ஒரு அரசன் அதனைச் சுற்றி தன் படை வீரர்களை நிறுத்தி அதற்கு எதிராகப் போரிட்டான். 15 ஆனால் அந்நகரில் ஒரு ஞானி இருந்தான். அவன் ஏழை. ஆனால் அந்நகரைக் காப்பாற்ற தனது ஞானத்தைப் பயன்படுத்தினான். எல்லாம் நடந்து முடிந்தபிறகு, அந்த ஏழையை ஜனங்கள் மறந்துவிட்டார்கள். 16 எனினும் நான் இப்பொழுதும் ஞானம் பலத்தைவிட சிறந்தது என்பேன். அந்த ஜனங்கள் ஏழையின் ஞானத்தை மறந்துவிட்டார்கள். அவன் சொன்னதைக் கவனிப்பதை நிறுத்திவிட்டார்கள். ஞானமே சிறந்தது என்று நான் இன்னமும் நம்புகிறேன்.
17 ஒரு முட்டாள் அரசனால் மிகச் சத்தமாகச் சொல்லப்படுகிற வார்த்தைகளைவிட
ஒரு ஞானியின் மென்மையான வார்த்தைகள் சிறந்தவை.
18 போரில் ஞானமானது வாள்களையும் ஈட்டிகளையும்விடச் சிறந்தவை.
ஆனால் ஒரு முட்டாளால் பல நல்லவற்றை அழிக்க முடியும்.
சுதந்தரத்தைப் பாதுகாத்துக்கொள்
5 நமக்கு இப்போது சுதந்தரம் இருக்கிறது. கிறிஸ்து நம்மைச் சுதந்தரம் உள்ளவர்கள் ஆக்கினார். எனவே உறுதியாய் நில்லுங்கள். மாறாதீர்கள். மீண்டும் அடிமைகளாக மறுத்துவிடுங்கள். 2 கவனியுங்கள்! நான் தான் பவுல். நீங்கள் விருத்தசேதனம் செய்துகொண்டு சட்டத்தின் அடிமைகளானால் கிறிஸ்து உங்களுக்கு எவ்வகையிலும் பயன்படமாட்டார். 3 மீண்டும் எல்லோரையும் நான் எச்சரிக்கை செய்கிறேன். நீங்கள் விருத்தசேதனம் செய்துகொண்டால் சட்டத்திற்குக் கீழ்ப்பட்டே இருக்க வேண்டும். 4 சட்டத்தைப் பின்பற்றி நீங்கள் தேவனுக்கு வேண்டியவராக முயன்றால், கிறிஸ்துவோடு உங்களுக்கு உள்ள தொடர்பு அற்றுப்போகும். தேவனுடைய இரக்கத்தை விட்டு விட்டீர்கள். 5 ஆனால் தேவனுடைய கிருபை மூலமாக தேவனுக்கு வேண்டியவர்களாக ஆவோம் என்று விசுவாசிக்கிறோம். ஆவியானவரின் உதவியோடு அதற்காகக் காத்திருக்கிறோம். 6 ஒருவன் இயேசு கிறிஸ்துவுக்குள் வாழ்வானேயானால் பின்னர், அவன் விருத்தசேதனம் செய்துகொண்டானா, இல்லையா என்பது பிரச்சனை இல்லை. அன்பும் விசுவாசமுமே மிகவும் முக்கியமானது.
7 பந்தயத்தில் நீங்கள் நன்றாக ஓடினீர்கள். நீங்கள் உண்மைக்குக் கீழ்ப்படிந்தீர்கள். ஆனால் இப்போது உண்மையின் வழியில் இருந்து உங்களைத் தடுத்தது யார்? 8 உங்களைத் தடம் புரளச் செய்தக் காரியம் உங்களைத் தேர்ந்தெடுத்த தேவனிடமிருந்து வரவில்லை. 9 கவனமாய் இருங்கள். “புளிப்புள்ள மிகச் சிறிதளவு மாவுகூட பிசைந்த மாவு எல்லாவற்றையும் புளிக்கும்படிச் செய்துவிடும்.” (மிகச் சிறிதான ஒன்றுகூட பெரிய சிக்கலை உருவாக்கிவிடும்.) 10 வேறுவிதமாக நீங்கள் சிந்திக்கமாட்டீர்கள் என்று தேவனுக்குள் நான் நம்பிக்கையாய் இருக்கிறேன். சிலர் வேறு விதமாக உங்களைக் குழப்புகிறார்கள். அவ்வாறு குழப்புகிறவன் எவனாக இருந்தாலும் அவன் நிச்சயம் தண்டிக்கப்படுவான்.
11 சகோதர சகோதரிகளே! மக்கள் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும் என்று நான் என்றும் போதித்ததில்லை. அவ்வாறு நான் செய்திருந்தால் ஏன் இவ்வாறு துன்பப்பட வேண்டும்? மக்கள் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும் என்று வற்புறுத்தி இருந்தால் சிலுவையை ஏற்பதுபற்றி வரும் தடை நிறுத்தப்பட்டிருக்கும். 12 உங்களைக் குழப்பிக்கொண்டிருக்கும் அவர்கள் விருத்தசேதனத்துடன் துண்டித்துக்கொள்ளவும் வேண்டும் என்று விரும்புகிறேன்.
13 சகோதர சகோதரிகளே, நீங்கள் சுதந்தரமாக இருக்க அழைக்கப்பட்டீர்கள். பாவக் காரியங்களுக்காக அச்சுதந்தரத்தைப் பயன்படுத்தாதீர்கள். ஆனால் ஒருவருக்கொருவர் அன்புடன் சேவை செய்யுங்கள். 14 “உன்னை நீ நேசிப்பது போன்று மற்றவர்களையும் நேசிப்பாயாக” என்ற ஒரு வாக்கியத்திலேயே மொத்த சட்டமும் அடங்கி இருக்கிறது. 15 நீங்கள் ஒருவரையொருவர் தொடர்ந்து கடித்தும், கிழித்தும் வந்தீர்களேயானால் முழுவதுமாய் அழிந்து போவீர்கள். இது பற்றி எச்சரிக்கையாய் இருங்கள்.
யூதத் தலைவர்களால் சோதனை(A)
16 இயேசுவைச் சோதிப்பதற்காகப் பரிசேயர்களும் சதுசேயர்களும் அவரிடம் வந்தார்கள். அவர்கள் இயேசு தேவனிடமிருந்து வந்தவர் என்பதை நிரூபிக்க ஒரு அற்புதம் நிகழ்த்துமாறு கேட்டனர்.
2 இயேசு அவர்களிடம்,, “சூரியன் மறைவதை நீங்கள் காணும்பொழுது, காலநிலை எப்படியிருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள். செவ்வானமாயிருந்தால், நல்ல கால நிலை என்கிறீர்கள். 3 சூரிய உதயத்தைக் காலையில் காண்கிறீர்கள். அப்பொழுது வானம் இருண்டும் சிவந்துமிருந்தால், மழை பெய்யும் என்கிறீர்கள். இவை காலநிலையின் அறிகுறிகள். இவைகளை வானத்தில் கண்டு, அவற்றின் பொருளை அறிகிறீர்கள். அது போலவே, தற்பொழுது நடப்பவைகளை நீங்கள் காண்கிறீர்கள். இவைகளும் அறிகுறிகளே. ஆனால், இவற்றின் பொருளை நீங்கள் அறியவில்லை. 4 தீயவர்களும் பாவிகளும் அற்புதங்களை அறிகுறிகளாகத் தேடுகிறார்கள். ஆனால், அவர்களுக்கு, யோனாவின் அடையாளத்தையன்றி [a] வேறெந்த அடையாளமும் கிடைக்காது” என்று கூறினார். பின் இயேசு அவர்களை விட்டு அகன்றார்.
யூதத்தலைவர்களைக் குறித்து எச்சரிக்கை(B)
5 இயேசுவும் அவரது சீஷர்களும் கலிலேயா ஏரியைக் கடந்து சென்றார்கள். ஆனால், சீஷர்கள் அப்பங்களைக் கொண்டுவர மறந்தனர். 6 இயேசு தம் சீஷர்களிடம், “எச்சரிக்கையாயிருங்கள்! பரிசேயர் சதுசேயரின் புளித்தமாவைக் குறித்து ஜாக்கிரதையாயிருங்கள்,” என்று கூறினார்.
7 அவரது சீஷர்கள் அதன் பொருளைக் குறித்து விவாதித்தனர்., “நாம் அப்பங்களைக் கொண்டு வர மறந்ததினாலா இயேசு இவ்வாறு கூறினார்?” என்று அவர்கள் விவாதித்தனர்.
8 தமது சீஷர்கள் இதைக் குறித்து விவாதித்ததை இயேசு அறிந்தார். எனவே, இயேசு அவர்களிடம்,, “அப்பங்கள் இல்லாததைக் குறித்து ஏன் பேசுகிறீர்கள்? உங்கள் விசுவாசம் குறைவுள்ளது. 9 இன்னமும் நீங்கள் புரிந்துகொள்ளவில்லையா? ஐந்து அப்பங்களால் ஐயாயிரம் பேருக்கு உணவளித்தது ஞாபகமில்லையா? மக்கள் உண்டதில் மீதியைப் பல கூடைகளில் இட்டு நிரப்பியதும் ஞாபகமில்லையா? 10 ஏழு அப்பங்களைக் கொண்டு நான்காயிரம் பேருக்கு உணவளித்தது ஞாபகமில்லையா? பின் மக்கள் உண்டு மீந்ததைப் பல கூடைகளில் நிரப்பியதும் ஞாபகமில்லையா? 11 எனவே, நான் அப்பத்தை குறித்து உங்களுடன் பேசவில்லை. அது ஏன் உங்களுக்குப் புரியவில்லை? பரிசேயர்களுடையதும் சதுசேயர்களுடையதுமான தீய போதனைகளை விட்டு விலகிப் பாதுகாப்பாயிருக்க நான் உங்களுக்குக் கூறுகிறேன்,” என்றார்.
12 பின்னரே, இயேசு கூறியதன் பொருளைச் சீஷர்கள் புரிந்துகொண்டார்கள். அப்பம் செய்யப் பயன்படுத்தப்படும் புளித்த மாவைக் குறித்து இயேசு பேசவில்லை. மாறாக, இயேசு அவர்களைப் பரிசேயர்களுடையதும் சதுசேயர்களுடையதுமான போதனைகளைக் குறித்தே எச்சரித்தார்.
2008 by World Bible Translation Center