Book of Common Prayer
ஆசாபின் பாடல்களில் ஒன்று
50 தெய்வங்களுக்கெல்லாம் தேவனாகிய கர்த்தர் பேசுகிறார்.
சூரியன் உதிக்குமிடத்திலிருந்து அது மறைகிற இடம் வரைக்குமுள்ள பூமியின் எல்லா ஜனங்களையும் அழைக்கிறார்.
2 சீயோனிலிருந்து பிரகாசிக்கும் தேவன் அழகானவர்.
3 நம் தேவன் வருகிறார், அவர் அமைதியாக இரார்.
அவருக்கு முன்னே நெருப்பு எரியும். அவரைச் சூழ்ந்து புயல் வீசும்.
4 தமது ஜனங்களை நியாயந்தீர்ப்பதற்கு
நமது தேவன் பூமியையும் வானத்தையும் அழைக்கிறார்.
5 தேவன் கூறுகிறதாவது, “என்னைப் பின்பற்றுகிறவர்களே,
என்னைச் சூழ்ந்து நில்லுங்கள், என்னைச் சூழ்ந்து நில்லுங்கள்.
என்னை வணங்குகிறவர்களே, வாருங்கள்.
நாம் ஒருவருக்கொருவர் ஒரு உடன்படிக்கை செய்துள்ளோம்.”
6 தேவனே நியாயாதிபதி,
வானங்கள் அவரது நன்மைகளைக் கூறும்.
7 “எனது ஜனங்களே, நான் கூறுவதைக் கேளுங்கள்!
இஸ்ரவேலின் ஜனங்களே, உங்களுக்கு எதிரான எனது சாட்சியைக் காட்டுவேன்.
நானே உங்கள் தேவன்.
8 உங்கள் பலிகளைக் குறித்து நான் குறை கூறமாட்டேன்.
எப்போதும் இஸ்ரவேலராகிய நீங்கள் உங்கள் தகனபலிகளை என்னிடம் கொண்டுவந்தீர்கள்.
ஒவ்வொரு நாளும் அவற்றை எனக்கு கொடுக்கிறீர்கள்.
9 உங்கள் வீட்டின் எருதுகளையோ
உங்கள் மந்தையின் ஆடுகளையோ நான் எடுத்துக்கொள்வதில்லை.
10 எனக்கு அம்மிருகங்கள் தேவையில்லை.
காட்டின் மிருகங்கள் எனக்குச் சொந்தமானவை.
மலைகளிலுள்ள பல்லாயிரம் மிருகங்கள் எல்லாம் எனக்குச் சொந்தமானவை.
11 உயர்ந்த மலையின் ஒவ்வொரு பறவையையும் நான் அறிவேன்.
மலையின்மேல் அசையும் பொருட்களெல்லாம் என்னுடையவை.
12 எனக்குப் பசியில்லை! எனக்குப் பசித்தாலும் உணவுக்காக உன்னைக் கேட்கமாட்டேன்.
உலகமும் அதன் அனைத்துப் பொருள்களும் எனக்குச் சொந்தமானவை.
13 எருதுகளின் மாமிசத்தை நான் புசிப்பதில்லை.
ஆடுகளின் இரத்தத்தை நான் குடிக்கமாட்டேன்” என்று தேவன் கூறுகிறார்.
14 எனவே ஸ்தோத்திர பலிகளை தேவனுக்குக் கொண்டுவந்து அவரோடு இருக்கும்படி வாருங்கள்.
நீங்கள் மிக உன்னதமான தேவனுக்கு வாக்குறுதி பண்ணினீர்கள்.
எனவே வாக்களித்த பொருள்களை அவருக்குக் கொடுங்கள்.
15 தேவன், “இஸ்ரவேலரே, துன்பம் நேர்கையில் என்னிடம் விண்ணப்பம் செய்யுங்கள்!
நான் உங்களுக்கு உதவுவேன்.
நீங்கள் அப்போது என்னை மகிமைப்படுத்த முடியும்” என்று கூறுகிறார்.
16 தேவன் தீயோரைப் பார்த்து, “நீங்கள் எனது சட்டங்களைக் குறித்துப் பேசுகிறீர்கள்.
எனது உடன்படிக்கையைக் குறித்துப் பேசுகிறீர்கள்.
17 ஆனால் நான் உங்களைத் திருத்தும்போது அதை ஏன் வெறுக்கிறீர்கள்?
நான் கூறும் காரியங்களை ஏன் புறக்கணிக்கிறீர்கள்?
18 நீங்கள் ஒரு திருடனைப் பார்க்கிறீர்கள், அவனோடு சேர்வதற்காக ஓடுகிறீர்கள்.
விபச்சாரமாகிய பாவத்தைச் செய்கிறவர்களோடு நீங்களும் படுக்கையில் குதிக்கிறீர்கள்.
19 நீங்கள் தீயவற்றைப் பேசிப் பொய்களைச் சொல்கிறீர்கள்.
20 உங்கள் சொந்த சகோதரரையும் பிறரையும் குறித்து எப்போதும் தீயவற்றையே சொல்கிறீர்கள்.
21 நீங்கள் இத்தீய செயல்களைச் செய்கிறீர்கள், நான் அமைதியாக இருப்பேன் என்று நினைக்கிறீர்கள்.
நீங்கள் எதையும் சொல்லாதிருக்கிறீர்கள், நானும் அமைதியாக இருப்பேன் என்று நினைக்கிறீர்கள்.
ஆனால் நான் அமைதியாக இரேன்!
நீங்கள் அதைத் தெளிவாக உணரும்படி நான் செய்வேன்.
உங்கள் முகத்திற்கெதிராக உங்களை விமர்சிப்பேன்!
22 நீங்கள் தேவனை மறந்திருக்கிறீர்கள்.
உங்களைக் கிழித்தெறியும் முன்னர்
நீங்கள் அதை நன்கு புரிந்து கொள்ளுங்கள்!
அது நிகழ்ந்தால் உங்களை மீட்பவர் எவருமில்லை!
23 எனவே ஒருவன் ஸ்தோத்திர காணிக்கை செலுத்தினால் அவன் என்னை உண்மையிலேயே மகிமைப்படுத்துகிறான்.
ஒருவன் அவனது வாழ்க்கையை மாற்றியமைத்தால் அப்போது நான் அவனுக்கு தேவனுடைய காக்கும் வல்லமையைக் காட்டுவேன்” என்கிறார்.
“அழிக்காதே” என்னும் பாடலின் இசைத்தலைவனுக்கு தாவீது அளித்த மிக்தாம் என்னும் ஒரு பாடல். தாவீதைக் கொல்வதற்காக சவுல் தாவீதின் வீட்டைக் கண்காணிப்பதற்காக ஆட்களை அனுப்பியபோது பாடியது.
59 தேவனே, என் பகைவரிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
என்னோடு போரிட வந்துள்ள ஜனங்களை வெல்வதற்கு எனக்கு உதவும்.
2 தீமை செய்யும் ஜனங்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
அக்கொலைக்காரரிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
3 பாரும், பலவான்கள் எனக்காகக் காத்திருக்கிறார்கள்.
அவர்கள் என்னைக் கொல்லக் காத்திருக்கிறார்கள்.
ஆனால் நான் பாவமோ குற்றமோ செய்யவில்லை.
4 அவர்கள் என்னைத் துரத்துகிறார்கள்.
ஆனால் நானோ தவறேதும் செய்யவில்லை.
கர்த்தாவே, நீரே வந்து அதைப் பாரும்.
5 நீர் இஸ்ரவேலரின் தேவனாகிய, சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர்.
எழுந்து அந்த ஜனங்களைத் தண்டியும்.
அத்தீய ஏமாற்றுக்காரருக்கு இரக்கம் காட்டாதேயும்.
6 அத்தீயோர், ஊரினுள் மாலையில் நுழைந்து
ஊளையிட்டு அலையும் நாய்களைப் போன்றவர்கள்.
7 அவர்களின் பயமுறுத்தல்களையும் நிந்தனையையும் கேளும்.
அவர்கள் கொடியவற்றைச் சொல்கிறார்கள்.
அவற்றை யார் கேட்டாலும் அவர்கள் கவலைப்படமாட்டார்கள்.
8 கர்த்தாவே, அவர்களைப் பார்த்து நகைத்தருளும்.
அந்த ஜனங்களையெல்லாம் கேலிக்குள்ளாக்கும்.
9 தேவனே, நீரே என் பெலன், நான் உமக்காகக் காத்திருக்கிறேன்.
தேவனே, உயர்ந்த மலைகளில் நீரே என் பாதுகாப்பான இடமாவீர்.
10 தேவன் என்னை நேசிக்கிறார். நான் வெற்றியை காண அவர் எனக்கு உதவுவார்.
என் பகைவர்களைத் தோற்கடிக்க அவர் எனக்கு உதவுவார்.
11 தேவனே, அவர்களை வெறுமனே கொன்று விடுவீரானால், என் ஜனங்கள் அதனை மறந்துவிடுவார்கள்.
என் ஆண்டவரும் பாதுகாவலருமானவரே, உமது வல்லமையால் அவர்களைச் சிதறடித்துத் தோல்வியை காணச் செய்யும்.
12 அத்தீயோர் சபித்துப் பொய்க் கூறுவர்.
அவர்கள் கூறியவற்றிற்காக அவர்களைத் தண்டியும்.
அவர்கள் அகந்தையே அவர்களுக்குக் கண்ணியாகட்டும்.
13 உமது கோபத்தில் அவர்களை அழியும்.
அவர்களை முற்றிலுமாக அழியும்!
யாக்கோபின் ஜனங்களையும், உலகம் முழுமையையும்,
தேவன் ஆளுகிறார் என்பதை அப்போது ஜனங்கள் அறிவார்கள்!
14 ஊர் முழுவதும் உறுமியவாறே சுற்றியலையும் நாய்களைப்போன்று அத்தீயோர் இரவில் ஊருக்குள் வந்தனர்.
15 அவர்கள் உணவுக்காகத் தேடியலைவார்கள், ஆனால் உணவேதும் அவர்களுக்கு அகப்படுவதில்லை.
அவர்களுக்கு உறங்க இடமும் இராது.
16 ஆனால் நான் உம்மைப் பாடல்களால் வாழ்த்தித் துதிப்பேன்.
ஒவ்வொரு காலையும் உமது அன்பில் நான் களிகூருவேன்.
ஏனெனில் நீரே உயர்ந்த மலைகளில் எனது பாதுகாப்பாயிருக்கிறீர்.
தொல்லைகள் வரும்பொழுது நான் உம்மிடம் ஓடி வரலாம்.
17 உம்மை வாழ்த்தும் என் பாடல்களை நான் பாடுவேன்.
ஏனெனில் நீரே உயர்ந்த மலைகளில் எனது பாதுகாப்பாயிருக்கிறீர்.
நீரே என்னை நேசிக்கும் தேவன்.
“உடன்படிக்கையின் லில்லி” என்ற பாடலின் இசைத்தலைவனுக்கு தாவீது அளித்த பாடல். இது போதிப்பதற்குரியது. தாவீது ஆராம் நகராயீம், ஆராம் சோபா ஆகிய நாட்டினரோடு யுத்தம் பண்ணிய காலத்தில், யோவாப் திரும்பிவந்து 12,000 ஏதோமிய வீரர்களை உப்புப் பள்ளத்தாக்கில் வெட்டிக் கொன்றபோது பாடியது.
60 தேவனே, எங்களோடு சினங்கொண்டீர், எனவே எங்களை நிராகரித்து அழித்தீர்.
தயவாய் எங்களிடம் திரும்பி வாரும்.
2 நீர் பூமியை அசைத்து அதைப் பிளக்கப் பண்ணினீர்.
நம் உலகம் பிரிந்து விழுந்தது.
அருள் கூர்ந்து அவற்றை ஒன்றாக இணைத்து விடும்.
3 நீர் உமது ஜனங்களுக்குப் பல தொல்லைகளை அனுமதித்தீர்.
நாங்களோ தள்ளாடி விழுகின்ற குடிவெறியர்களைப் போலானோம்.
4 உம்மைத் தொழுதுகொள்ளும் ஜனங்களை நீர் எச்சரித்தீர்.
அவர்கள் இப்போது பகைவனிடமிருந்து தப்பிச்செல்ல முடியும்.
5 உமது மிகுந்த வல்லமையைப் பயன்படுத்தி எங்களைக் காப்பாற்றும்!
என் ஜெபத்திற்குப் பதில் தாரும், நீர் நேசிக்கிற ஜனங்களைக் காப்பாற்றும்.
6 தேவன் அவரது ஆலயத்தில் பேசினார்:
“நான் யுத்தத்தில் வென்று, அவ்வெற்றியால் மகிழ்வேன்!
இந்நாட்டை எனது ஜனங்களோடு பகிர்ந்துகொள்வேன்.
அவர்களுக்கு சீகேமைக் கொடுப்பேன்.
அவர்களுக்கு சுக்கோத் பள்ளத்தாக்கையும் கொடுப்பேன்.
7 கீலேயாத்தும், மனாசேயும் என்னுடையவை.
எப்பிராயீம் எனது தலைக்குப் பெலன்.
யூதா என் நியாயத்தின் கோல்.
8 மோவாப் என் பாதங்களைக் கழுவும் பாத்திரம்.
ஏதோம் என் மிதியடிகளைச் சுமக்கும் அடிமை.
நான் பெலிஸ்தரை வென்று என் வெற்றியை முழக்கமிடுவேன்!”
9-10 தேவனே நீர் எங்களை விட்டு விலகினீர்!
வலிய, பாதுகாவலான நகரத்திற்குள் யார் என்னை அழைத்துச் செல்வார்?
ஏதோமிற்கு எதிராகப் போர் செய்ய யார் என்னை வழி நடத்துவார்?
தேவனே, நீர் மட்டுமே எனக்கு உதவக்கூடும்.
ஆனால் நீரோ எங்களை விட்டு விலகினீர்!
நீர் எங்கள் சேனையோடு செல்லவில்லை.
11 தேவனே, எங்கள் பகைவரை வெல்ல எங்களுக்கு உதவும்!
மனிதர்கள் எங்களுக்கு உதவ முடியாது!
12 தேவன் மட்டுமே எங்களைப் பலப்படுத்த முடியும்.
தேவன் எங்கள் பகைவர்களை வெல்ல முடியும்.
கித்தீத் என்ற இசைக் கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்குத் தந்த தாவீதின் சங்கீதம்
8 எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உமது நாமம் பூமியின் எல்லா இடத்திலும் மிகுந்த அற்புதமானது!
விண்ணுலகிலும் உமது நாமம் உமக்குத் துதிகளைக் கொண்டு வருகிறது.
2 பிள்ளைகள், குழந்தைகள் வாயிலுமிருந்து உம்மைத் துதிக்கும் பாடல்கள் வெளிப்படும்.
உம் பகைவரை அமைதிப்படுத்த இவ்வல்லமையான பாடல்களைக் கொடுத்தீர்.
3 கர்த்தாவே, உமது கைகளால் நீர் செய்த வானங்களை நான் கண்டேன்.
நீர் படைத்த நிலாவையும், நட்சத்திரங்களையும் நான் கண்டு ஆச்சரியமடைந்தேன்.
4 ஏன் மனிதர்கள் உமக்கு முக்கியமாயினர்?
ஏன் அவர்களை நீர் நினைவுகூருகிறீர்?
ஏன் அவர்களைக் கவனிக்கிறீர்?
5 ஆனால் மனிதர்கள் உமக்கு முக்கியமாயினர்!
அவர்களை ஏறக்குறைய தேவர்களைப் போலவே உண்டாக்கினீர்.
மனிதரை மகிமையாலும், மேன்மையாலும் முடிசூட்டினீர்.
6 நீர் உண்டாக்கின எல்லாவற்றிற்கும் அவர்களை அதிகாரிகளாக வைத்தீர்.
7 ஆடுகள்,பசுக்கள், காட்டு மிருகங்கள் அனைத்தையும் மனிதர்கள் ஆண்டனர்.
8 வானத்துப் பறவைகளையும்
சமுத்திரத்தில் நீந்தும் மீன்களையும் அவர்கள் ஆண்டனர்.
9 எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உமது நாமம் உலகத்தில் எங்கும் மிகவும் மிகவும் அற்புதமானது!
கீத்தித் என்னும் வாத்தியத்தில் இசைக்கும் இராகத் தலைவனுக்குக் கோராகின் குடும்பம் அளித்த ஒரு துதிப் பாடல்.
84 சர்வ வல்லமையுள்ள தேவனே, உமது ஆலயம் உண்மையிலேயே இனிமையானது.
2 கர்த்தாவே, உமது ஆலயத்திற்குள் நுழைவதற்கு என்னால் காத்திருக்க முடியாது.
ஏனெனில் நான் மிகுந்த ஆவலாய் இருக்கிறேன்.
என் அவயவங்கள் ஒவ்வொன்றும் ஜீவனுள்ள தேவனோடு இருப்பதையே விரும்புகிறது.
3 என் அரசரே, என் தேவனே, சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே, குருவிகளுக்கும், அடைக்கலான் குருவிகளுக்கும் உம்முடைய ஆலயத்தில் வீடுகள் உண்டு.
உமது பலிபீடத்தருகே அப்பறவைகள் தங்கள் கூடுகளை அமைக்கும், அங்கு அவற்றின் குஞ்சுகளைப் பெறும்.
4 உமது ஆலயத்தில் வாழும் ஜனங்கள் மிகுந்த பாக்கியமுள்ளவர்களாக இருக்கிறார்கள்.
அவர்கள் எப்போதும் உம்மைத் துதித்துக்கொண்டிருக்கிறார்கள்.
5 தங்கள் இருதயத்தில் கீதங்களைப் பாடிக் கொண்டு
ஆலயத்திற்கு வருகிற ஜனங்கள் மிகுந்த சந்தோஷமாயிருக்கிறார்கள்.
6 அவர்கள் அழுகையின் பள்ளத்தாக்கின் வழியாகப் பயணம் செய்கிறார்கள்.
தேவன் அதை ஒரு நீரூற்றாகச் செய்கிறார்.
இலையுதிர்கால மழையின் தண்ணீரால் குளங்கள் தோன்றும்.
7 தேவனைச் சந்திப்பதற்காக சீயோனுக்குச் செல்லும் வழியில்
ஜனங்கள் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு பயணமாகிறார்கள்.
8 சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, என் ஜெபத்தைக்கேளும்.
யாக்கோபின் தேவனே, எனக்குச் செவிகொடும்.
9 தேவனே, எங்கள் பாதுகாவலரைப் (கேடகத்தைப்) பாதுகாத்துக்கொள்ளும்.
நீர் தேர்ந்தெடுத்த அரசன் மீது இரக்கமாயிரும்.
10 வேறிடங்களில் செலவிடும் ஆயிரம் நாட்களைக் காட்டிலும் உமது ஆலயத்தில் இருக்கும் ஒரே நாள் நல்லது.
எனது தேவனுடைய வீட்டின் வாசலில் நிற்பதோ தீயவனின் வீட்டில் வாழ்வதைக் காட்டிலும் நல்லது.
11 கர்த்தர் நமது கேடகமும் மகிமை வாய்ந்த அரசருமானவர். [a]
தயவினாலும் மகிமையாலும் தேவன் நம்மை ஆசீர்வதிக்கிறார்.
அவரைப் பின்பற்றிக் கீழ்ப்படிகிற ஜனங்களுக்கு
தேவன் எல்லா நல்ல பொருள்களையும் தருகிறார்.
12 சர்வ வல்லமையுள்ள தேவனே,
உம்மை நம்புகிற ஜனங்கள் உண்மையாகவே சந்தோஷமானவர்கள்.
16 நான் இவை அனைத்தையும் இந்த வாழ்க்கையில் பார்த்தேன். வழக்குமன்றமானது நன்மையாலும் நேர்மையாலும் நிறைந்திருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அதில் தீமையே நிறைந்திருந்தது. 17 எனவே நான் எனக்குள்ளே: “தேவன் எல்லாவற்றிற்கும் ஒரு காலத்தைத் திட்டமிட்டுள்ளார். ஜனங்களின் செயலை நியாயந்தீர்க்கவும் ஒரு காலத்தை தேவன் திட்டமிட்டுள்ளார். தேவன் நல்லவர்களையும் கெட்டவர்களையும் நியாயந்தீர்ப்பார்” என்கிறேன்.
ஜனங்கள் விலங்குகளைப் போன்றவர்கள்தானா?
18 ஜனங்கள் ஒருவருக்கொருவர் செய்யும் செயலைப்பற்றி நான் நினைத்துப் பார்க்கிறேன். நான் எனக்குள்ளே, “ஜனங்கள் தாங்கள் மிருகங்களைப்போன்று இருப்பதை உணர தேவன் விரும்புகிறார்” என்று சொல்லிக்கொண்டேன். 19 மனிதன் மிருகத்தைவிட சிறந்தவனாக இருக்கிறானா? ஏனென்றால், எல்லாம் பயனற்றவை. மரணம் என்பது மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் ஒரே மாதிரியாக நிகழ்கின்றது. “உயிர் மூச்சும்” மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் ஒன்றுபோல் இருக்கிறது. மரித்துப்போன மனிதர்களிடமிருந்து மரித்துப்போன மிருகம் வேறுபடுகிறதா? 20 மனித உடல்களும் மிருக உடல்களும் ஒன்றுபோலவே முடிகின்றன. அவை மண்ணிலிருந்து வந்தன. முடிவில் அவை மண்ணுக்கே போகின்றன. 21 ஒரு மனிதனின் ஆவிக்கு என்ன நிகழும் என்பதை யார் அறிவார்? மனிதனின் ஆவி மேலே தேவனிடம் போகும்போது, மிருகத்தின் ஆவி கீழே பூமிக்குள் போகிறது என்பதை யார் அறிவார்?
22 எனவே, ஒருவன் செய்யவேண்டிய நற்செயல் என்னவென்றால் தனது செய்கையில் மகிழ்வதுதான் என்று நான் கண்டுகொண்டேன். அதையே அவன் அடைந்திருக்கிறான். ஒருவன் எதிர்காலத்தைப்பற்றி கவலைப்படக் கூடாது. ஏனென்றால் அவனுக்கு எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைக் கண்டு சொல்ல யாராலும் முடியாது.
மரித்துப்போவது நல்லதா?
4 ஏராளமான ஜனங்கள் மோசமாக நடத்தப்படுவதை மீண்டும் நான் பார்த்தேன். அவர்களது கண்ணீரைப் பார்த்தேன். துக்கப்படும் அவர்களை எவரும் சமாதானப்படுத்தாமல் இருப்பதையும் அங்கே நான் பார்த்தேன். கொடுமையானவர்களிடம் எல்லா அதிகாரங்களும் இருப்பதைப் பார்த்தேன். புண்பட்ட அவர்களை எவரும் சமாதானப்படுத்தாமல் இருப்பதையும் நான் பார்த்தேன். 2 இன்னும் உயிரோடிருப்பவர்களைவிட மரித்துப்போனவர்கள் பாக்கியசாலிகள் என்று முடிவுசெய்தேன். 3 பிறப்பிலேயே மரிப்பவர்கள் இன்னும் பாக்கியசாலிகள். ஏனென்றால் அவர்கள் இவ்வுலகில் நடைபெறும் தீமைகளைப் பார்க்காமலேயே போவார்கள்.
விசுவாசத்தின் மூலமே தேவனுடைய ஆசீர்வாதம் கிடைக்கிறது
3 இயேசு கிறிஸ்து சிலுவையில் மரணம் அடைந்தார் என்பது பற்றி மிகத் தெளிவாகக் கலாத்திய மக்களாகிய உங்களுக்குச் சொல்லப்பட்டது. ஆனால் நீங்களோ புத்தியற்றவர்களாய் இருந்தீர்கள். எவரையோ உங்களிடம் தந்திரம் செய்ய அனுமதித்துவிட்டீர்கள். 2 இதைப்பற்றி எனக்குக் கூறுங்கள், பரிசுத்த ஆவியானவரை நீங்கள் எப்படிப் பெற்றுக்கொண்டீர்கள்? சட்டங்களைப் பின்பற்றுவதன் மூலம் ஆவியானவரை ஏற்றுக்கொண்டீர்களா? இல்லை. நீங்கள் ஆவியைப் பெற்றீர்கள். ஏனென்றால் நீங்கள் நற்செய்தியைக் கேள்விப்பட்டு நம்பினீர்கள். 3 ஆவியானவரால் நீங்கள் கிறிஸ்துவில் உங்கள் வாழ்க்கையைத் தொடங்கினீர்கள். இப்பொழுது உங்கள் சொந்த மாம்சீக பலத்தால் தொடர முயற்சி செய்கிறீர்களா? எவ்வளவு புத்தியற்றவர்கள் நீங்கள்? 4 பல வகையிலும் அனுபவங்களை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். அவை எல்லாம் வீணாக வேண்டுமா? அவை வீணாகாது என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. 5 நீங்கள் சட்டங்களைப் பின்பற்றுவதால் தேவன் உங்களுக்கு ஆவியைக் கொடுக்கிறாரா? இல்லை. நீங்கள் சட்டங்களைப் பின்பற்றுவதால் தேவன் உங்களிடம் அற்புதங்களைச் செய்கிறாரா? இல்லை. உங்களுக்கு அவர் ஆவியைக் கொடுத்ததும், அற்புதங்களை நடப்பித்ததும் நீங்கள் நற்செய்தியைக் கேட்டு நம்பினீர்கள் என்பதால்தான்.
6 ஆபிரகாமைப் பற்றியும், வேதவாக்கியங்கள் அதையே கூறுகிறது. “ஆபிரகாம் தேவனை விசுவாசித்தார். அவரது விசுவாசத்தை தேவன் ஏற்றுக்கொண்டார். இது அவரை தேவனுக்கு முன்பு நீதிமானாக்கியது.” [a] 7 ஆகவே ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள். தேவன் மீது விசுவாசம் வைக்கிறவர்களே ஆபிரகாமின் உண்மையான பிள்ளைகள். 8 எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது பற்றியும் வேதவாக்கியங்கள் கூறியது. யூதர் அல்லாத மக்களைச் சரியான வழியில் அவர்களின் விசுவாசத்தின் மூலமே தேவன் வழிநடத்துவார். “பூமியில் உள்ள மக்களையெல்லாம் ஆசீர்வதிக்க, ஆபிரகாமே, தேவன் உன்னைப் பயன்படுத்துவார்” [b] என்று சுவிசேஷமாய் முன் அறிவித்தது. 9 ஆபிரகாம் இதை நம்பினார். நம்பியதால், அவர் ஆசீர்வதிக்கப்பட்டது போலவே, நம்பிக்கையுள்ள அனைவரும் ஆசீர்வதிக்கப்படுவர்.
10 ஆனால் சட்டத்தின்படி வாழ்பவர்கள் எவரும் சாபத்துக்குள்ளாவார்கள். ஏனென்றால் “ஒருவன் சட்டங்களைத் தன் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவன் சபிக்கப்படுவான்” [c] என்று சட்டங்களின் நூலில் எழுதப்பட்டுள்ளது. 11 ஆகவே எவனும், சட்டத்தின் மூலம் தேவனுக்கு வேண்டியவனாவதில்லை என்பது தெளிவாக உள்ளது. ஏனெனில் வேதவாக்கிவங்களில், “விசுவாசத்தினாலே தேவனுக்கு வேண்டியவனாக இருக்கிறவன் எப்போதும் வாழ்வான்” [d] என்று சொல்லி இருப்பதே இதன் காரணம்.
12 விசுவாசம் சட்டம் அடிப்படையில் இயங்குவது அல்ல. அது வேறுபட்ட வழியைப் பயன்படுத்துகிறது. “எவனொருவன் சட்டங்களைக் கடைப்பிடிக்கிறானோ அவனே வாழ்வான்” என்று சட்டங்கள் கூறும். 13 நம் மீது சட்டங்களானது சாபம் போட்டுள்ளது. ஆனால் கிறிஸ்து அச்சாபத்தை விலக்கிவிட்டார். தன்னையே அவர் சாபத்துக்கு உள்ளாக்கிக்கொண்டார். “எப்பொழுது ஒருவனது சரீரம் மரத்திலே தொங்க [e] விடப்படுகிறதோ அவனே சாபத்துக்கு உள்ளாகிறான்” [f] என்று எழுதப்பட்டிருக்கிறது. 14 கிறிஸ்து இதனைச் செய்தார். அதனால் தேவனுடைய ஆசீர்வாதம் அனைத்து மக்களுக்கும் கிடைக்கிறது. தேவன் ஆபிரகாமையும் ஆசீர்வதிப்பதாக வாக்குக் கொடுத்திருக்கிறார். இந்த ஆசீர்வாதம் இயேசு கிறிஸ்துவின் மூலமாய்த்தான் வருகிறது. இயேசு மரித்தார். அதனால் தேவனுடைய வாக்குறுதிப்படி பரிசுத்த ஆவியைப் பெற்றோம். விசுவாசத்தின் மூலம், நாம் அவ்வாக்குறுதிகளைப் பெறுகிறோம்.
5,000 பேருக்கு உணவளித்தல்(A)
13 யோவானுக்கு நேர்ந்ததைக் கேள்வியுற்ற இயேசு, ஒரு படகில் புறப்பட்டுச் சென்றார். யாருமற்ற ஒரு தனியிடத்திற்குத் தன்னந்தனியே சென்றார். இயேசு புறப்பட்டுச் சென்றதை மக்கள் கேள்விப்பட்டனர். எனவே, அவர்களும் தங்கள் நகரங்களை விட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தனர். இயேசு சென்ற இடத்திற்கு அவர்கள் தரை வழியே சென்றனர். 14 இயேசு அங்கு வந்த பொழுது, அங்கே ஏராளமான மக்களைக் கண்டார். அவர்களுக்காக வருத்தமுற்ற இயேசு, அங்கிருந்த நோயாளிகளைக் குணப்படுத்தினார்.
15 அன்று பிற்பகல், இயேசுவின் சீஷர்கள் அவரிடம் வந்து,, “மனிதர் யாரும் இங்கு வசிப்பதில்லை. மேலும் நேரமுமாகிவிட்டது. மக்களைத் திருப்பி அனுப்புங்கள். அப்பொழுதுதான் அவர்கள் தங்கள் ஊர்களுக்குச் சென்று உணவை வாங்க முடியும்” என்று சொன்னார்கள்.
16 இயேசு,, “மக்கள் திரும்பிச் செல்லவேண்டியத் தேவையில்லை. நீங்களே அவர்களுக்கு உணவு அளியுங்கள்” என்று பதிலளித்தார்.
17 அதற்குச் சீஷர்கள்,, “ஆனால், நம்மிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் தானே உள்ளன” என்று பதில் சொன்னார்கள்.
18 ,“அப்பத்தையும் மீனையும் என்னிடம் கொண்டு வாருங்கள்” என்று இயேசு கூறினார். 19 பிறகு, அங்கிருந்த மக்களை இயேசு புல்வெளியில் அமரச் சொன்னார். இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கையிலெடுத்துக் கொண்டார். இயேசு வானத்தைப் பார்த்து அந்த உணவுக்காக தேவனுக்கு நன்றி சொன்னார். பின்னர் இயேசு அப்பங்களைச் சீஷர்களிடம் கொடுத்தார். சீஷர்கள் மக்களுக்குக் கொடுத்தார்கள். 20 மக்கள் அனைவரும் திருப்தியாக உண்டார்கள். மக்கள் உண்டது போக எஞ்சிய உணவைப் பன்னிரெண்டு கூடைகளில் நிரப்பினார்கள். 21 அங்கு சுமார் ஐயாயிரம் ஆண்கள் உணவு உண்டனர். மேலும், பல பெண்களும் குழந்தைகளும் கூட உணவு உண்டனர்.
2008 by World Bible Translation Center