Book of Common Prayer
இசைக்கருவிகளை இசைக்கும் இராகத் தலைவனுக்குத் தாவீது அளித்த மஸ்கீல் என்னும் பாடல்.
55 தேவனே, என் ஜெபத்தைக் கேளும்.
இரக்கத்திற்கான என் ஜெபத்தை ஒதுக்காதிரும்.
2 தேவனே, எனக்குச் செவிசாய்த்துப் பதிலளியும்.
என் குறைகளை உம்மிடம் நான் முறையிடுவேன்.
3 என் பகைவன் என்னிடம் தீய காரியங்களைக் கூறினான்.
கெட்ட மனிதர்கள் என்னை நோக்கிக் கூக்குரலிட்டார்கள்.
என் பகைவர்கள் கோபங்கொண்டு என்னைத் தாக்கினார்கள்.
என்னை வீழ்த்தும்படி தொல்லைகளை எனக்குச் செய்தார்கள்.
4 என் இருதயம் எனக்குள் நடுங்கித் துன்புறுகிறது.
நான் மரணபயம் அடைந்தேன்.
5 நான் அஞ்சி நடுங்கினேன்.
பயத்தால் தாக்குண்டேன்.
6 ஒரு புறாவைப்போல் சிறகுகள் எனக்கு வேண்டுமென விரும்பினேன்.
அப்போது நான் பறந்துபோய் ஓய்வுகொள்ளும் இடத்தைத் தேடியிருப்பேன்.
7 நான் தூரத்திற்குப் போய், பாலைவனத்திற்குச் செல்வேன்.
8 நான் ஓடி தப்பித்துக்கொள்வேன்.
துன்பங்களாகிய புயலிலிருந்து ஓடிவிடுவேன்.
9-10 என் ஆண்டவரே, அவர்கள் பொய்களை நிறுத்தும்.
இந்நகரில் அதிகமான கொடுமைகளையும், சண்டைகளையும் நான் காண்கிறேன்.
என்னைச் சுற்றிலும் இரவும் பகலும் ஊரின் ஒவ்வொரு பகுதியிலும் குற்றங்களும், கொடுமைகளும் நிரம்பியுள்ளன.
இந்த ஊரில் பயங்கரமான காரியங்கள் நிகழ்கின்றன.
11 தெருக்களில் பெருங்குற்றங்கள் நேரிடுகின்றன.
ஜனங்கள் பொய்களைக்கூறி, எங்கும் ஏமாற்றுகிறார்கள்.
12 ஒரு பகைவன் என்னைத் தாக்கினால் நான் பொறுத்துக்கொள்வேன்.
என் பகைவர்கள் என்னைத் தாக்கினால் நான் ஒளிந்துக்கொள்வேன்.
13 ஆனால் எனக்குச் சமமானவனும், என்னுடன் வாழ்பவனும்,
என் நண்பனுமாகிய நீயே எனக்குத் தொல்லைகளைத் தந்துகொண்டிருக்கிறாய்.
14 நாங்கள் எங்கள் இரகசியங்களைப் பகிர்ந்து கொண்டோம்.
தேவனுடைய ஆலயத்தில் நாங்கள் ஒருமித்து வழிப்பட்டோம்.
15 என் பகைவர்கள் அவர்கள் காலத்திற்கு முன்னே மரிப்பார்கள் என நம்புகிறேன்.
அவர்கள் உயிரோடே புதைக்கப்படுவார்கள் என நம்புகிறேன்!
ஏனெனில் அவர்கள் தங்கள் வீடுகளில் மிகப் பயங்கரமான காரியங்களைத் திட்டமிடுகிறார்கள்.
16 உதவிக்காக நான் தேவனைக் கூப்பிடுவேன்.
கர்த்தர் எனக்குப் பதில் தருவார்.
17 நான் தேவனோடு மாலை, காலை, நடுப்பகல் வேளைகளில் பேசுவேன்.
என் முறையீடுகளை தேவனுக்குச் சொல்வேன். அவர் நான் கூறுபவற்றைக் கேட்கிறார்!
18 நான் பல யுத்தங்களில் போரிட்டுள்ளேன்.
ஆனால் தேவன் எல்லாவற்றிலும் என்னைக் காப்பாற்றி, என்னைப் பத்திரமாகத் திரும்பவும் அழைத்து வந்தார்.
19 தேவன் நான் கூறுவதைக் கேட்கிறார்.
நித்திய அரசர் எனக்கு உதவுவார்.
20 என் பகைவர்கள் தங்கள் வாழ்க்கையை மாற்றமாட்டார்கள்.
அவர்கள் தேவனுக்குப் பயப்படவோ, அவரை மதிக்கவோமாட்டார்கள்.
21 என் பகைவர்கள் தங்கள் சொந்த நண்பர்களைத் தாக்குகிறார்கள்.
அவர்கள் செய்வதாக ஒப்புக்கொள்ளும் காரியங்களைச் செய்யமாட்டார்கள்.
என் பகைவர்கள் மென்மையாகப் பேசுகிறார்கள்.
அவர்கள் சமாதானத்தைக் குறித்துப் பேசுகிறார்கள்.
ஆனால் உண்மையில் யுத்தங்களுக்குத் திட்டமிடுகிறார்கள்.
அவர்கள் சொற்கள் எண்ணெயைப் போல் மிருதுவானவை.
ஆனால் அவை கத்தியைப்போல் ஊடுருவக் கூடியவை.
22 உங்கள் கவலைகளை கர்த்தரிடம் ஒப்படைத்துவிடுங்கள்.
அவர் உங்களை ஆதரிப்பார். நல்ல ஜனங்கள் தோல்வி காண்பதற்கு கர்த்தர் அனுமதியார்.
23 உடன்படிக்கையின் உமது பங்காக, தேவனே அந்தப் பொய்யர்களையும், கொலைக்காரர்களையும் அவர்களின் பாதி வாழ்க்கை கழியும் முன்பே அவர்களைக் கல்லறைக்கு அனுப்பிவிடும்!
உடன்படிக்கையின் எனது பங்காக நான் உம்மேல் நம்பிக்கை வைப்பேன்.
தாவீதின் ஒரு பாடல்
138 தேவனே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிக்கிறேன்.
எல்லா தெய்வங்களின் முன்பாகவும் நான் உமது பாடல்களைப் பாடுவேன்.
2 தேவனே, உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் குனிந்து வணங்குவேன்.
நான் உமது நாமத்தையும், உண்மை அன்பையும் நேர்மையையும் துதிப்பேன்.
உமது வார்த்தையின் வல்லமையால் நீர் புகழ்பெற்றவர். இப்போது நீர் அதை இன்னமும் மேன்மையாகச் செய்தீர்.
3 தேவனே, உதவிக்காக நான் உம்மைக் கூப்பிட்டேன்.
நீர் எனக்குப் பதில் தந்தீர்! நீர் எனக்குப் பெலன் அளித்தீர்.
4 கர்த்தாவே, நீர் சொல்கின்றவற்றைக் கேட்கும்போது
பூமியின் எல்லா அரசர்களும் உம்மைத் துதிப்பார்கள்.
5 அவர்கள் கர்த்தருடைய வழியைக் குறித்துப் பாடுவார்கள்.
ஏனெனில் கர்த்தருடைய மகிமை மிக மேன்மையானது.
6 தேவன் மிக முக்கியமானவர்.
ஆனால் அவர் தாழ்மையான ஜனங்களுக்காக கவலைப்படுகிறார்.
பெருமைக்காரர்கள் செய்வதை தேவன் அறிகிறார். ஆனால் அவர் அவர்களிடமிருந்து வெகுதூரம் விலகியிருக்கிறார்.
7 தேவனே, நான் தொல்லையில் சிக்குண்டால், என்னை உயிரோடு வாழவிடும்.
என் பகைவர்கள் என்னிடம் கோபமாயிருந்தால், அவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
8 கர்த்தாவே, நீர் வாக்களித்தவற்றை எனக்குத் தாரும்.
கர்த்தாவே, உமது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
கர்த்தாவே, நீர் எங்களை உண்டாக்கினீர், எனவே எங்களை விட்டுவிடாதேயும்!
இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த துதிப் பாடல்களுள் ஒன்று
139 கர்த்தாவே, நீர் என்னை சோதித்தீர்.
என்னைப் பற்றிய எல்லாவற்றையும் நீர் அறிகிறீர்.
2 நான் உட்காரும்பொழுதும் எழும்பொழுதும் நீர் அறிகிறீர்.
வெகுதூரத்திலிருந்தே எனது எண்ணங்களை நீர் அறிகிறீர்.
3 கர்த்தாவே, நான் போகுமிடத்தையும் நான் படுக்கும் இடத்தையும் நீர் அறிகிறீர்.
நான் செய்யும் ஒவ்வொன்றையும் நீர் அறிகிறீர்.
4 கர்த்தாவே, நான் சொல்ல விரும்பும் வார்த்தைகள்
என் வாயிலிருந்து வெளிவரும் முன்பே நீர் அறிகிறீர்.
5 கர்த்தாவே, என்னைச் சுற்றிலும், எனக்கு முன்புறமும் பின்புறமும் நீர் இருக்கிறீர்.
நீர் உமது கைகளை என் மீது மென்மையாக வைக்கிறீர்.
6 நீர் அறிகின்றவற்றைக் கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன்.
நான் புரிந்துக்கொள்வதற்கு மிகவும் அதிகமானதாக அது உள்ளது.
7 நான் போகுமிடமெல்லாம் உமது ஆவி உள்ளது.
கர்த்தாவே, நான் உம்மிடமிருந்து தப்பிச் செல்ல முடியாது.
8 கர்த்தாவே, நான் பரலோகத்திற்கு ஏறிச் சென்றாலும் நீர் அங்கு இருக்கிறீர்.
மரணத்தின் இடத்திற்கு நான் கீழிறங்கிச் சென்றாலும் நீர் அங்கும் இருக்கிறீர்.
9 கர்த்தாவே, சூரியன் உதிக்கும் கிழக்கிற்கு நான் சென்றாலும் நீர் அங்கே இருக்கிறீர்.
நான் மேற்கே கடலுக்குச் சென்றாலும் நீர் அங்கேயும் இருக்கிறீர்.
10 அங்கும் உமது வலது கை என்னைத் தாங்கும்,
என் கைகளைப் பிடித்து நீர் வழிநடத்துகிறீர்.
11 கர்த்தாவே, நான் உம்மிடமிருந்து ஒளிந்துக்கொள்ள முயன்றாலும்,
பகல் இரவாக மாறிப்போயிற்று.
“இருள் கண்டிப்பாக என்னை மறைத்துக்கொள்ளும்” என்பேன்.
12 ஆனால் கர்த்தாவே,
இருளும் கூட உமக்கு இருளாக இருப்பதில்லை.
இரவும் பகலைப்போல உமக்கு வெளிச்சமாயிருக்கும்.
13 கர்த்தாவே, நீரே என் முழு சரீரத்தையும் உண்டாக்கினீர்.
என் தாயின் கருவில் நான் இருக்கும்போதே நீர் என்னைப் பற்றிய எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர்.
14 கர்த்தாவே, நான் உம்மைத் துதிக்கிறேன்!
நீர் என்னை வியக்கத்தக்க, அற்புதமான வகையில் உண்டாக்கியிருக்கிறீர்.
நீர் செய்தவை அற்புதமானவை என்பதை நான் நன்கு அறிவேன்!
15 நீர் என்னைப்பற்றிய எல்லாவற்றையும் அறிகிறீர்.
என் தாயின் கருவில் மறைந்திருந்து என் சரீரம் உருவெடுக்கும்போது என் எலும்புகள் வளர்வதை நீர் கவனித்திருக்கிறீர்.
16 என் சரீரத்தின் அங்கங்கள் வளர்வதை நீர் கவனித்தீர்.
உமது புத்தகத்தில் நீர் அவைகள் எல்லாவற்றையும் பட்டியல் இட்டீர்.
நீர் என்னை ஒவ்வொரு நாளும் கவனித்தீர். அவற்றில் ஒன்றும் காணாமற்போகவில்லை.
17 உமது எண்ணங்கள் எனக்கு
முக்கியமானவை.
தேவனே, உமக்கு மிகுதியாகத் தெரியும்.
18 நான் அவற்றை எண்ண ஆரம்பித்தால் அவை மணலைக்காட்டிலும் அதிகமாயிருக்கும்.
நான் விழிக்கும்போது இன்னும் உம்மோடுகூட இருக்கிறேன்.
19 தேவனே, கெட்ட ஜனங்களைக் கொல்லும்.
அக்கொலைக்காரரை என்னிடமிருந்து அகற்றிவிடும்.
20 அத்தீயோர் உம்மைக் குறித்துத் தீயவற்றைக் கூறுகிறார்கள்.
அவர்கள் உம் நாமத்தை குறித்துத் தீயவற்றைக் கூறுகிறார்கள்.
21 கர்த்தாவே, உம்மை வெறுப்போரை நான் வெறுக்கிறேன்.
உமக்கெதிராகத் திரும்புவோரை நான் வெறுக்கிறேன்.
22 அவர்களை முற்றிலும் நான் வெறுக்கிறேன்.
உம்மைப் பகைப்பவர்கள் எனக்கும் பகைவர்களே.
23 கர்த்தாவே, என்னைப் பார்த்து என் இருதயத்தை அறிந்துகொள்ளும்.
என்னைச் சோதித்து என் நினைவுகளை அறிந்துகொள்ளும்.
ஒவ்வொரு அரசனுக்கும் ஒரு அரசன் உண்டு
8 சில நாடுகளில் ஏழைகள் கடினமாக உழைக்கும்படிக் கட்டாயப்படுத்தப்படுவதை நீ காணலாம். இது ஏழைகளுக்குச் செய்யும் நேர்மையல்ல. இது ஏழை ஜனங்களின் உரிமைகளுக்கு எதிரானது, ஆனால் ஆச்சரியப்படாதே. ஜனங்களைக் கட்டாயப்படுத்தி வேலைவாங்குகிற அரசனைக் கட்டாயப்படுத்த ஒரு அரசன் இருப்பான். இவர்கள் இருவரையும் கட்டாயப்படுத்த இன்னொரு அரசன் இருப்பான். 9 ஒருவன் அரசனாக இருந்தாலும் தன் சொந்த நாட்டில் அடிமையாகிவிடுகிறான்.
செல்வத்தால் மகிழ்ச்சியை வாங்க முடியாது
10 செல்வத்தையே விரும்புகிற ஒருவன் தன்னிடமுள்ள செல்வத்தால் மட்டும் திருப்தி அடையமாட்டான். அவன் மேலும் மேலும் செல்வத்தைப் பெற்றாலும் திருப்தி அடையமாட்டான். இதுவும் அர்த்தமற்றது.
11 ஒருவன், மிகுதியான செல்வத்தைப் பெறும்போது அதைச் செலவுசெய்ய உதவும் மிகுதியான “நண்பர்”களைப் பெறுகிறான். எனவே அந்த செல்வந்தன் உண்மையில் ஆதாயமடைவது ஒன்றுமில்லை. அவன் தன் செல்வத்தைப் பார்க்க மட்டுமே முடியும்.
12 ஒருவன், பகல் முழுவதும் கடுமையாக உழைத்தால் இரவில் சமாதானமாகத் தூங்குகிறான். அவனுக்கு உண்பதற்கு மிகுதியாக உள்ளதா குறைவாக உள்ளதா என்பதைப்பற்றிக் கவலையில்லை. ஆனால் செல்வந்தன் தன் செல்வத்தைப்பற்றிக் கவலைபட்டுக்கொண்டு தூங்காமல் இருக்கிறான்.
13 இந்த வாழ்க்கையில் நிகழும் மிகவும் சோகமான ஒரு காரியத்தை நான் கண்டிருக்கிறேன். ஒருவன் தன் செல்வத்தை எதிர்காலத்திற்காகவே சேமித்து வைக்கிறான். 14 அதன் பிறகு ஏதாவது கெட்ட காரியம் நிகழும்போது எல்லாவற்றையும் இழக்கின்றான். தன் மகனுக்குக்கொடுக்க எதுவும் இல்லாமல் போகிறது.
15 ஒருவன் தன் தாயின் உடலிலிருந்து வெளியே வரும்போது எதுவும் இல்லாமலேயே வருகிறான். அவன் மரிக்கும்போதும் எதுவும் இல்லாமலேயே போகிறான். பொருட்களைப் பெறுவதற்காகக் கடுமையாக உழைக்கிறான். ஆனால் மரிக்கும்போது எதையும் எடுத்துச் செல்வதில்லை. 16 இது மிகவும் சோகமானது. அவன் வந்ததுபோலவே இந்த உலகைவிட்டு விலகியும் போகிறான். “காற்றைப் பிடிக்கும் முயற்சியால்” ஒருவன் பெறப்போவது என்ன? 17 அவனது வாழ்நாட்கள் சோகத்தாலும் துன்பத்தாலும் நிறைந்துபோகும். முடிவில் அவன் சலிப்பும், நோயும், வெறுப்பும், கோபமும் அடைவான்.
வாழ்வின் பணியை அனுபவி
18 உண்டு, குடித்து, இவ்வுலகில் வாழும் குறுகிய வாழ்வில் தான் செய்யும் வேலையில் இன்பம் காண்பதுதான் ஒருவன் செய்யும் சிறப்பான செயல்கள் என்று நான் எண்ணுகிறேன். அவனுக்கு இருப்பதெல்லாம் தேவன் கொடுத்த குறுகிய வாழ்க்கை மட்டுமே. அவனுக்கு வேறெதுவும் இல்லை.
19 தேவன், ஒருவனுக்குச் செல்வத்தையும் சொத்துக்களையும் அவற்றை அனுபவிப்பதற்கான உரிமையையும் கொடுத்திருக்கும்போது அவன் அவற்றை அனுபவித்து மகிழவேண்டும். இதனை ஏற்றுக்கொண்டு அவன் தனது வேலையில் இன்பம் காண வேண்டும். இது தேவனால் கொடுக்கப்பட்ட பரிசு. 20 ஒருவனால் நீண்டகாலம் வாழமுடியாது. எனவே அவன் இதனை வாழ்வு முழுவதும் நினைவில் வைத்திருக்கவேண்டும். ஒருவன் செய்ய விரும்புகிற வேலைகளில் தேவன் அவனைச் சுறுசுறுப்பாக வைத்துள்ளார்.
23 இந்த விசுவாசம் வருவதற்கு முன்னால் நாம் எல்லாரும் சட்டத்தால் சிறைப்படுத்தப்பட்டிருந்தோம். தேவன் நமக்கு விசுவாசத்திற்குரிய வழியை வெளிப்படுத்தும்வரை நமக்கு விடுதலை இல்லாதிருந்தது. 24 எனவே, கிறிஸ்து வரும் வரை சட்டம் நமது எஜமானனாக இருந்தது. இயேசு வந்த பிறகு நாம் விசுவாசத்தின் மூலமாக தேவனுக்கு வேண்டியவர்களாக ஆனோம். 25 இப்போது விசுவாசத்துக்கு உரிய வழி வந்துவிட்டது. எனவே, நாம் இனிமேல் சட்டத்தின் கீழ் வாழ வேண்டியதில்லை.
26-27 நீங்கள் அனைவரும் கிறிஸ்துவுக்குள் ஞானஸ்நானம் பெற்றிருக்கிறீர்கள். எனவே நீங்கள் அனைவரும் கிறிஸ்துவை அணிந்துகொண்டிருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் விசுவாசத்தின் வழியில் இயேசு கிறிஸ்துவுக்குள் தேவனுடைய பிள்ளைகள் ஆகிவிட்டீர்கள் என்பதை இது காட்டும். 28 இப்போது கிறிஸ்துவுக்குள் யூதர்கள், கிரேக்கர்கள் என்று எந்த வேறுபாடுகளும் இல்லை. அடிமைகள், சுதந்தரமானவர்கள் என்றும் வேறுபாடுகள் இல்லை. ஆண், பெண் என்றும் வேறுபாடு இல்லை. கிறிஸ் துவாகிய இயேசுவின் முன் நீங்கள் அனைவரும் சமம்தான். 29 நீங்கள் கிறிஸ்துவைச் சேர்ந்தவர்கள். எனவே நீங்கள் ஆபிரகாமின் பரம்பரையினர். ஆகவே தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நீங்கள் அனைவரும் பெற்றுக்கொள்கிறீர்கள்.
4 இதை உங்களுக்குச் சொல்ல நான் விரும்புகிறேன். ஒருவன் தன் சொத்துக்களுக்கெல்லாம் உரிமையுடையவனாய் இருந்தும் அவன் சிறுபிள்ளையாய் இருந்தால் அவனுக்கும் அடிமைக்கும் எந்த வேறுபாடும் இல்லை. 2 ஏனென்றால் அவன் குழந்தை. அவன் தன் பாதுகாப்பாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறான். ஆனால் தன் தந்தையின்படி குறித்த வயதை அடையும்போது அவன் சுதந்தரம் உள்ளவனாக விளங்குகிறான். 3 நாமும் இதைப் போலத்தான். நாம் எல்லாரும் குழந்தைகளைப் போன்றவர்கள். நாம் பயனற்ற சட்டங்களுக்கு அடிமையாய் இருந்தோம். 4 ஆனால் சரியான நேரம் வந்தபோது, தேவன் தன் மகனை அனுப்பினார். தேவனுடைய குமாரன் ஒரு பெண்ணினிடத்தில் பிறந்தார். அவரும் விதிமுறைகளின்படியே வாழ்ந்தார். 5 இதனைச் செய்ததன் மூலம், சட்டங்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்த மக்களுக்கு தேவன் விடுதலையை வழங்கினார். நம்மை அவரது பிள்ளைகளாக ஆக்கவேண்டும் என்பது தான் இவரது நோக்கம்.
6 நீங்கள் தேவனுடைய பிள்ளைகள். அதனால் தான் தேவன் தம் மகனின் ஆவியை நமது இதயங்களுக்குள் அனுப்பினார். ஆவியானவரும் “பிதாவே, அன்பான பிதாவே” என்று கதறுகிறார். 7 ஆகையால் இப்பொழுது நீங்கள் முன்பு போல அடிமைகள் அல்ல. நீங்கள் தேவனுடைய பிள்ளைகள். அவர் வாக்குறுதிப்படி உங்களுக்குத் தருவார். ஏனென்றால் நீங்கள் அவரது பிள்ளைகளாயிருக்கிறீர்கள்.
கலாத்திய கிறிஸ்தவர்கள் மீது பவுலின் அன்பு
8 முன்பு நீங்கள் தேவனை அறிந்திருக்கவில்லை. மெய்யாகவே தேவன் அல்லாத கடவுள்களுக்கு நீங்கள் அடிமைகளாகி இருந்தீர்கள். 9 ஆனால் இப்போது நீங்கள் உண்மையான தேவனை அறிந்துகொண்டீர்கள். உண்மையில் அவர் உங்களை அறிந்துகொண்ட தேவன். எனவே எதற்காக நீங்கள் மறுபடியும் அந்தப் பலவீனமான, மோசமான ஆவிகளுக்கு அடிமைகளாக விரும்புகிறீர்கள். 10 நீங்கள் இப்போதும் சிறப்பான நாட்கள், மாதங்கள், பருவங்கள், ஆண்டுகள் பற்றிச் சட்டங்கள் கூறுவதைப் பின்பற்ற விரும்புகிறீர்கள். 11 நான் உங்களை எண்ணி அஞ்சுகிறேன். நான் உங்களுக்காக உழைத்ததெல்லாம் வீணாய்ப் போயிற்றோ என்று அஞ்சுகிறேன்.
தேவனின் பிரமாணங்களும் மனிதர் விதிமுறைகளும்(A)
15 அப்பொழுது பரிசேயர்கள் சிலரும் நியாயப்பிரமாண போதகர்களில் சிலரும் இயேசுவிடம் வந்தார்கள். எருசலேமிலிருந்து வந்த அவர்கள் இயேசுவிடம், 2 ,“நமக்கு முன்னர் வாழ்ந்த பெரியோர்கள் நமக்கு இட்ட கட்டளைகளை உமது சீஷர்கள் ஏன் பின்பற்றுவதில்லை? உணவு உண்பதற்கு முன் உமது சீஷர்கள் ஏன் கைகளைக் கழுவுவதில்லை?” என்று கேட்டனர்.
3 இயேசு அவர்களுக்கு,, “உங்கள் சட்டங்களைப் பின்பற்றும்படிக்கு நீங்கள் ஏன் தேவனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுக்கிறீர்கள்? 4 ‘உன் தாய் தந்தையரை நீ மதிக்க வேண்டும்’ [a] என்று தேவன் சொன்னார். மேலும் ‘தந்தையிடமோ தாயிடமோ தீய சொற்களைக் கூறுகிறவன் கொல்லப்படுவான்’ [b] என்றும் தேவன் சொல்லியுள்ளார். 5 ஆனால் நீங்கள் ஒருவனுக்கு தன் தாய் தந்தையரிடம், ‘நான் உங்களுக்கு ஒரு உதவி செய்யமுடியும். ஆனால், அதை உங்களுக்குச் செய்யமாட்டேன். அதைத் தேவனுக்குக் காணிக்கையாக்குவேன்’ என்று கூறுவதற்குப் போதிக்கிறீர்கள். 6 தந்தையை மதிக்காதிருக்க நீங்கள் போதிக்கிறீர்கள். தேவன் சொன்னதைச் செய்வது முக்கியமல்ல என்று நீங்கள் போதிக்கிறீர்கள். நீங்கள் ஏற்படுத்தியுள்ள சட்டதிட்டங்களைப் பின்பற்றுவதே முக்கியமானதென்று நீங்கள் எண்ணுகிறீர்கள். 7 நீங்கள் மாயமானவர்கள்! உங்களைப்பற்றி ஏசாயா சரியாகவே இவ்வாறு சொல்லியிருக்கிறார்:
8 ,“இவர்கள் என்னை மதிப்பதாகக் கூறுகிறார்கள்.
ஆனாலும் மெய்யாகவே அவர்கள் வாழ்வில் நான் முக்கியமில்லை.
9 என்னை வணங்குவதில் பொருளில்லை.
அவர்கள் போதிப்பதெல்லாம் மனிதர் உண்டாக்கிய சட்டங்களே!” (B)
10 இயேசு மக்களைத் தன்னருகில் அழைத்து,, “நான் சொல்வதைக் கவனமாகக் கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள். 11 ஒருவன் வாய்க்குள்ளே போகிறது அவனை அசுத்தமாக்காது. மாறாக, ஒருவன் பேசும் சொற்களாலேயே அசுத்தமடைகிறான்” என்று சொன்னார்.
12 பின்னர். அவரது சீஷர்கள் இயேசுவிடம் வந்து,, “நீங்கள் சொல்லியவற்றால் பரிசேயர்கள் கோபமாயுள்ளார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள்.
13 அதற்கு இயேசு,, “பரலோகத்தில் இருக்கும் என் பிதாவால் நடப்படாத செடிகள் ஒவ்வொன்றும் வேருடன் பிடுங்கப்படும். 14 பரிசேயர்களிடமிருந்து விலகியிருங்கள். குருடர்கள் குருடர்களை வழிநடத்துவதுபோல் அவர்கள் மக்களை வழிநடத்துகிறார்கள். ஒரு குருடன் மற்றொரு குருடனை வழிநடத்தினால், இருவருமே பள்ளத்தில் வீழ்வார்கள்” என்றார்.
15 அப்பொழுது பேதுரு,, “நீர் மக்களுக்கு முதலில் சொல்லியதன் பொருளை எங்களுக்கு விளக்கும்” என்று கேட்டான்.
16 அதற்கு இயேசு,, “புரிந்து கொள்வதில் இன்னமுமா சிரமம்? 17 ஒரு மனிதனின் வாய்க்குள் செல்லும் உணவு அனைத்தும் அவனது வயிற்றை அடைவது உனக்குத் தெரியும். பின் அந்த உணவு அவன் உடலை விட்டு வெளியேறுகிறது. 18 ஆனால், ஒருவன் பேசும் தீய சொற்கள் அவன் மனதிலிருந்து தோன்றுகின்றன. இவையே ஒருவனை அசுத்தமாக்குகின்றன. 19 தீய எண்ணங்கள், கொலை, விபச்சாரம், பாலியல் பாவங்கள், திருட்டு, பொய், மற்றவர்களைத் தூற்றுதல் ஆகிய எல்லாத் தீமைகளும் ஒருவனது உள்ளத்திலேயே தோன்றுகின்றன. 20 இவை ஒருவனை அசுத்தமாக்குகின்றன. ஆனால் உணவு உண்பதற்கு முன்பு கைகளைக் கழுவாதிருப்பது ஒருவனை அசுத்தமாக்குவது இல்லை” என்றார்.
2008 by World Bible Translation Center