Book of Common Prayer
இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த துதிப் பாடல்
140 கர்த்தாவே, என்னைப் பொல்லாதவர்களிடமிருந்து காப்பாற்றும்.
கொடியோரிடமிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்.
2 அந்த ஜனங்கள் பொல்லாதவற்றைச் செய்யத் திட்டமிடுகிறார்கள்.
அவர்கள் எப்போதும் சண்டையிட ஆரம்பிக்கிறார்கள்.
3 அவர்களது நாவுகள் விஷமுள்ள பாம்புகளைப் போன்றவை.
அவர்களது நாவுகளின் கீழ் பாம்பின் விஷம் இருக்கும்.
4 கர்த்தாவே, கெட்ட ஜனங்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
கொடியோரிடமிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்.
அவர்கள் என்னைத் துரத்தி என்னைக் காயப்படுத்த முயல்கிறார்கள்.
5 அப்பெருமைக்காரர்கள் எனக்காக ஒரு கண்ணியை வைத்தார்கள்.
என்னைப் பிடிக்க அவர்கள் ஒரு வலையை விரித்தார்கள்.
அவர்கள் என் பாதையில் ஒரு கண்ணியை வைத்தார்கள்.
6 கர்த்தாவே, நீரே என் தேவன்.
கர்த்தாவே, நீர் என் ஜெபத்திற்குச் செவிகொடும்.
7 கர்த்தாவே, நீர் என் பெலனான ஆண்டவர்.
நீரே என் மீட்பர்.
போரில் என் தலையைக் காக்கும் கவசத்தைப்போன்று இருக்கிறீர்.
8 கர்த்தாவே, அந்தத் தீய ஜனங்கள் பெற விரும்புகின்றவற்றை பெற அனுமதிக்காதிரும்.
அவர்கள் திட்டங்கள் வெற்றியடையாமல் போகச் செய்யும்.
9 கர்த்தாவே, என் பகைவர்கள் வெற்றிப் பெறவிடாதேயும்.
அந்த ஜனங்கள் தீய காரியங்களைத் திட்டமிடுகிறார்கள்.
ஆனால் அத்தீமைகள் அவர்களுக்கே நேரிடுமாறு செய்யும்.
10 நெருப்புத் தழலை அவர்கள் தலையின் மீது ஊற்றும்.
என் பகைவர்களை நெருப்பில் வீசும்.
அவர்களைக் குழியில் தள்ளும்,
அவர்கள் மீண்டும் வெளியேறி வராதபடி செய்யும்.
11 கர்த்தாவே, அப்பொய்யர்களை வாழவிடாதேயும்.
அத்தீயோருக்குத் தீமைகள் நிகழச் செய்யும்.
12 கர்த்தர் ஏழைகளைத் தக்கபடி நியாயந்தீர்ப்பார் என நான் அறிவேன்.
தேவன் திக்கற்றோருக்கு உதவுவார்.
13 கர்த்தாவே, நல்லோர் உமது நாமத்தைத் துதிப்பார்கள்.
நல்லோர் உம்மைத் தொழுதுகொள்வார்கள்.
தாவீதின் பாடல்களில் ஒன்று. அவன் குகையிலிருந்தபோது செய்த ஜெபம்
142 நான் கர்த்தரை உதவிக்காகக் கூப்பிடுவேன்.
நான் கர்த்தரிடம் ஜெபம் செய்வேன்.
2 நான் கர்த்தரிடம் என் சிக்கல்களைச் சொல்வேன்.
நான் கர்த்தரிடம் என் தொல்லைகளைச் சொல்வேன்.
3 என் பகைவர்கள் எனக்குக் கண்ணி வைத்திருக்கிறார்கள்.
நான் எல்லாவற்றையும் விட்டுவிடத் தயாராயிருக்கிறேன்.
ஆனால் கர்த்தர் எனக்கு நடக்கின்றவற்றை அறிந்திருக்கிறார்.
4 நான் சுற்றிலும் பார்த்தேன், என் நண்பர்களைக் காணவில்லை.
எனக்கு ஓடிச் செல்ல இடமில்லை. என்னைக் காப்பாற்ற முயல்பவர் எவருமில்லை.
5 எனவே நான் கர்த்தரிடம் உதவிக்காக அழுதேன்.
கர்த்தாவே, நீரே என் பாதுகாப்பிடம்.
கர்த்தாவே, என்னைத் தொடர்ந்து வாழவிட உம்மால் ஆகும்.
6 கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும். நீர் எனக்கு மிகுதியாகத் தேவைப்படுகிறீர்.
என்னைத் துரத்தி வருகிற ஜனங்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
அவர்கள் என்னைக் காட்டிலும் மிகுந்த பலவான்கள்.
7 இந்தக் கண்ணியிலிருந்து தப்பிச்செல்ல எனக்கு உதவும்.
அப்போது நான் உமது நாமத்தைத் துதிப்பேன்.
நீர் என்னைக் கவனித்து வந்ததால் நல்லோர் என்னோடு சேர்ந்து கொண்டாடுவார்கள்.
தாவீதின் துதிப் பாடல்களுள் ஒன்று
141 கர்த்தாவே, நான் உதவிக்காக உம்மைக் கூப்பிடுகிறேன்.
நான் உம்மிடம் ஜெபம் செய்யும்போது, எனக்குச் செவிகொடும்.
விரைவாக எனக்கு உதவும்!
2 கர்த்தாவே, என் ஜெபத்தை ஏற்றுக் கொள்ளும்.
எரியும் நறுமணப் பொருள்களின் பரிசைப் போலவும், மாலையின் பலியாகவும் அது இருக்கட்டும்.
3 கர்த்தாவே, நான் கூறுபவற்றில் கட்டுப்பாட்டோடிருக்க எனக்கு உதவும்.
நான் கூறுபவற்றில் கவனமாக இருக்க எனக்கு உதவும்.
4 தீயவற்றை செய்ய நான் விரும்பாதிருக்கும்படி பாரும்.
தீயோர் தவறுகளைச் செய்யும்போது அவர்களோடு சேராதிருக்குமாறு என்னைத் தடுத்துவிடும்.
தீயோர் களிப்போடு செய்யும் காரியங்களில் நான் பங்குகொள்ளாதிருக்கும்படி செய்யும்.
5 நல்லவன் ஒருவன் என்னைத் திருத்த முடியும்.
அது அவன் நற்செயலாகும்.
உம்மைப் பின்பற்றுவோர் என்னை விமர்சிக்கட்டும்.
அது அவர்கள் செய்யத்தக்க நல்ல காரியமாகும்.
நான் அதை ஏற்றுக்கொள்வேன்.
ஆனால் தீயோர் செய்யும் தீயவற்றிற்கெதிராக நான் எப்போதும் ஜெபம் செய்கிறேன்.
6 அவர்களின் அரசர்கள் தண்டிக்கப்படட்டும்.
அப்போது நான் உண்மை பேசினேன் என்பதை ஜனங்கள் அறிவார்கள்.
7 ஜனங்கள் நிலத்தைத் தோண்டி உழுவார்கள், சேற்றை எங்கும் பரப்புவார்கள்.
அவ்வாறே கல்லறையில் எங்கள் எலும்புகளும் எங்கும் பரந்து கிடக்கும்.
8 என் ஆண்டவராகிய கர்த்தாவே, நான் உதவிக்காக உம்மை நோக்கிப் பார்ப்பேன்.
நான் உம்மை நம்புகிறேன்.
தயவுசெய்து என்னை மரிக்கவிடாதேயும்.
9 தீயோர் எனக்குக் கண்ணிகளை வைத்தார்கள்.
அவர்கள் கண்ணிகளில் நான் விழாதபடி செய்யும்.
அவர்கள் என்னைக் கண்ணிக்குள் அகப்படுத்தாதபடி பாரும்.
10 நான் பாதிக்கப்படாது நடந்து செல்கையில் கெட்ட
ஜனங்கள் தங்கள் கண்ணிக்குள் தாங்களே விழட்டும்.
தாவீதின் துதிப் பாடல்களுள் ஒன்று
143 கர்த்தாவே, என் ஜெபத்தைக்கேளும்.
என் ஜெபத்திற்குச் செவிகொடும்.
நீர் என் ஜெபத்திற்குப் பதில் தாரும்.
நீர் உண்மையாகவே நல்லவரும் நேர்மையானவருமானவர் என்பதை எனக்குக் காட்டும்.
2 உமது ஊழியனாகிய என்னை நியாயந்தீர்க்காதேயும்.
என் ஆயுள் முழுவதும் ஒருபோதும் களங்கமற்றவன் என நான் நியாயந்தீர்க்கப்படமாட்டேன்.
3 ஆனாலும் என் பகைவர்கள் என்னைத் துரத்துகிறார்கள்.
அவர்கள் என் உயிரை புழுதிக்குள் தள்ளிவிட்டார்கள்.
அவர்கள் நீண்ட காலத்திற்கு முன் மரித்தோரைப்போன்று என்னை இருண்ட கல்லறைக்குள் தள்ளுகிறார்கள்.
4 நான் எல்லாவற்றையும் விட்டுவிடத் துணிகிறேன்.
என் தைரியத்தை நான் இழந்துகொண்டிருக்கிறேன்.
5 ஆனால் பல்லாண்டுகளுக்கு முன் நிகழ்ந்த காரியங்களை நான் நினைவுக்கூருகிறேன்.
நீர் செய்த பலக் காரியங்களையும் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
உமது மிகுந்த வல்லமையால் நீர் செய்தக் காரியங்களைக் குறித்து நான் பேசிக்கொண்டிருக்கிறேன்!
6 கர்த்தாவே, நான் என் கரங்களைத் தூக்கி, உம்மிடம் ஜெபம் செய்கிறேன்.
வறண்ட நிலம் மழைக்காக எதிர் நோக்கியிருப்பதைப்போல நான் உமது உதவிக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன்.
7 விரையும், கர்த்தாவே, எனக்கு பதில் தாரும்.
நான் என் தைரியத்தை இழந்தேன்.
என்னிடமிருந்து அகன்று திரும்பிவிடாதேயும்.
கல்லறையில் மாண்டுகிடக்கும் மரித்தோரைப்போன்று நான் மரிக்கவிடாதேயும்.
8 கர்த்தாவே, இக்காலையில் உமது உண்மை அன்பை எனக்குக் காட்டும்.
நான் உம்மை நம்புகிறேன்.
நான் செய்யவேண்டியவற்றை எனக்குக் காட்டும்.
நான் என் உயிரை உமது கைகளில் தருகிறேன்.
9 கர்த்தாவே, நான் பாதுகாப்பு நாடி உம்மிடம் வருகிறேன்.
என் பகைவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
10 நான் செய்யவேண்டுமென நீர் விரும்புகின்றவற்றை எனக்குக் காட்டும்.
நீரே என் தேவன்.
11 கர்த்தாவே, என்னை வாழவிடும்.
அப்போது ஜனங்கள் உமது நாமத்தைத் துதிப்பார்கள்.
நீர் உண்மையாகவே நல்லவரென்பதை எனக்குக் காட்டும்.
என் பகைவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
12 கர்த்தாவே, உமது அன்பை எனக்குக் காட்டும்.
என்னைக் கொல்ல முயல்கிற என் பகைவர்களைத் தோற்கடியும்.
ஏனெனில் நான் உமது ஊழியன்.
பிலேயாமின் மூன்றாவது செய்தி
24 இஸ்ரவேல் ஜனங்களை கர்த்தர் ஆசீர்வதிக்க வேண்டும் என்று விரும்புவதை பிலேயாம் கவனித்தான். எனவே, பிலேயாம் அதனை மாற்ற எவ்வகையான மந்திரத்தையும் பயன்படுத்த முயற்சி செய்யவில்லை. ஆனால் பிலேயாம் திரும்பி பாலைவனத்தை நோக்கிப் பார்த்தான். 2 பிலேயாம் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரையும் பார்த்தான். அவர்கள் வெவ்வேறு பகுதிகளில் தங்கள் கோத்திரங்களோடு கூடாரமிட்டுத் தங்கி இருந்தார்கள். தேவனுடைய ஆவி பிலேயாமின் மீது வந்தது. 3 அதனால் அவன் கீழ்க்கண்டவற்றைக் கூறினான்:
“பேயோரின் குமாரனான பிலேயாமிடமிருந்து வரும் செய்தி.
நான் தெளிவாக பார்த்தவற்றைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன்.
4 நான் தேவனிடமிருந்து இந்த செய்தியைக் கேட்டேன்.
சர்வ வல்லமையுள்ள தேவன் எனக்குக் காட்டியதை நான் பார்த்தேன்.
நான் தெளிவாகப் பார்த்தவற்றைப் பணிவாகக் கூறுகிறேன்.
5 “யாக்கோபின் ஜனங்களே, உங்கள் கூடாரங்கள் அழகாக இருக்கின்றன!
இஸ்ரவேல் ஜனங்களே உங்கள் வீடுகள் அழகாக இருக்கின்றன!
6 நீங்கள் நதிக்கரையில் அமைக்கப்பட்ட தோட்டம் போன்றும்,
ஆற்றங்கரையில் வளர்ந்த தோட்டம் போன்றும் இருக்கின்றீர்கள்.
கர்த்தரால் நடப்பட்ட வாசனை நிறைந்த
அடர்ந்த செடிகளைப் போன்று இருக்கின்றீர்கள்.
தண்ணீர்க் கரையில் வளர்ந்திருக்கும்
அழகான மரங்களைப் போன்று இருக்கின்றீர்கள்.
7 உங்கள் விதைகள் வளர்வதற்கேற்ற
போதுமான தண்ணீரை நீங்கள் பெறுவீர்கள்.
ஆகாக் அரசனைவிட உங்கள் அரசன் பெரியவன்.
உங்கள் ராஜ்யம் மிகப் பெரியதாகும்.
8 “தேவன் அந்த ஜனங்களை எகிப்தை விட்டு வெளியே கொண்டு வந்தார்.
அவர்கள் காட்டுக் காளையைப் போன்று பலமுள்ளவர்கள்.
அவர்கள் பகைவர்கள் அனைவரையும் தோற்கடிப்பார்கள்.
அவர்களின் எலும்பை நொறுக்கி, தங்கள் அம்புகளை எய்வார்கள்.
9 இஸ்ரவேல் ஜனங்கள் சிங்கம் போன்றவர்கள்.
அவர்கள் சுருண்டு படுத்திருக்கிறார்கள்.
ஆமாம்! அவர்கள் இளம் சிங்கத்தைப் போன்றவர்கள்.
எவரும் அவர்களை எழுப்ப விரும்பவில்லை!
உங்களை ஆசீர்வதிப்பவர்கள்
ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
உங்களை சபிப்பவர்கள்
சபிக்கப்படுவார்கள்.”
10 பிலேயாம் மீது பாலாக்குக்கு பெருங்கோபம் ஏற்பட்டது. பாலாக் பிலேயாமிடம், “நீ வந்து என் பகைவருக்கு எதிராகப் பேசும்படி அழைத்தேன். ஆனால் நீ அவர்களை மூன்று முறை ஆசீர்வதித்திருக்கிறாய். 11 இப்போது இந்த இடத்தைவிட்டு வீட்டிற்கு ஓடிப்போ. நான் உனக்கு ஒரு நல்ல தொகையைக் கொடுப்பதாகச் சொல்லியிருந்தேன். ஆனால் உனது பரிசை நீ இழப்பதற்கு கர்த்தர் காரணமாக இருந்துவிட்டார்” என்றான்.
12 ஆனால் பிலேயாம், “நீ என்னிடம் சிலரை அனுப்பினாய், அவர்கள் என்னை அழைத்தனர். ஆனால் நான் அவர்களிடம், 13 ‘பாலாக் தனது அழகான வீடு நிறைய வெள்ளியும் தங்கமும் எனக்குத் தரலாம். ஆனால் கர்த்தர் எதைச் சொல்லவேண்டும் என்று ஆனையிடுகிறாரோ அதை மட்டுமே சொல்வேன். நானாக எதையும் என்னால் செய்ய முடியாது. அது நன்மையோ அல்லது தீமையாகவோ இருக்கலாம். கர்த்தர் ஆணையிட்டபடியே நான் சொல்ல வேண்டும்’ என்றேன். நான் உன் ஆட்களிடம் கூறியதை நினைத்துப்பார்.
12 சகோதர சகோதரிகளே, நாம் நமது மாம்சங்களால் ஆளப்படக் கூடாது. நமது மாம்சங்களின் விருப்பப்படியும் இருக்கக் கூடாது. 13 பாவம் தூண்டும் தவறான செயல்களைச் செய்ய உங்கள் வாழ்வு பயன்படுமானால் நீங்கள் ஆவிக்குரிய நிலையில் இறந்தவர்களாவீர்கள். ஆனால் நீங்கள் ஆவியின் உதவியோடு தீமை செய்வதை நிறுத்தினால் உண்மையான வாழ்வைப் பெறுவீர்கள்.
14 எவரெல்லாம் தேவனுடைய ஆவியினால் நடத்தப்படுகிறார்களோ அவர்கள் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறார்கள். 15 நம்மை மீண்டும் அடிமைப்படுத்தி அச்சமூட்டுகிற ஆவியைப் நாம் பெறவில்லை. தேவனுடைய பிள்ளைகளாக நம்மை உருவாக்கும் ஆவியைப் பெறுகிறோம். அப்படிப் பெற்றால் “என் அன்பான பிதாவே” என்று அழைக்கும் உரிமையைப் பெறுவோம். 16 ஆவியானவர் நம்முடைய ஆவியோடு சேர்ந்துகொண்டு நாம் தேவனுடைய பிள்ளைகளாய் இருக்கிறோம் என்று சாட்சி கொடுக்கிறார். 17 நாம் தேவனுடைய பிள்ளைகளானால், தேவன் தன் பிள்ளைகளுக்காக வைத்திருக்கிற மகிமையை நாம் பெறுவோம். நாம் அவற்றை தேவனிடமிருந்து பெறுவோம். கிறிஸ்துவிடம் உள்ள அதே மகிமையும் நமக்குக் கிடைக்கும். ஆனால் கிறிஸ்து துன்பப்பட்டது போன்று நாமும் படவேண்டியதிருக்கும்.
பரிசேயரின் தந்திரம்(A)
15 பின்னர் பரிசேயர்கள், இயேசு போதனை செய்து கொண்டிருந்த இடத்தை விட்டு விலகிச் சென்றார்கள். இயேசு ஏதேனும் தவறாகப் பேசினால் அவரைப் பிடித்துவிட வேண்டும் என அவர்கள் திட்டமிட்டார்கள். 16 பரிசேயர்கள் இயேசுவை ஏமாற்ற சிலரை அவரிடம் அனுப்பினார்கள். தங்களுள் சிலரையும் ஏரோதியர்களில் சிலரையும் அவர்கள் இயேசுவிடம் அனுப்பினார்கள். அவர்கள் இயேசுவிடம்,, “போதகரே, நீர் நேர்மையானவர் என்பதை நாங்கள் அறிவோம். தேவனுடைய வழிகளைக்குறித்த உண்மைகளை நீர் போதிப்பதையும் அறிவோம். உம்மைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைக் குறித்து நீர் கவலைப்படுவதில்லை. உமக்கு எல்லோரும் சமம். 17 ரோமானியப் பேரரசர் சீசருக்கு வரி செலுத்துவது சரியா தவறா? உமது கருத்தைச் சொல்லும்” என்றார்கள்.
18 ஆனால் அவர்கள் தன்னை ஏமாற்ற முயற்சிப்பதை இயேசு அறிந்தார். ஆகவே இயேசு,, “மாயமானவர்களே! எதற்காக என்னை ஏதும் தவறாகச் சொல்லவைக்க முயற்சிக்கிறீர்கள்? 19 வரி செலுத்துவதற்கான நாணயம் ஒன்றைக் காட்டுங்கள்” என்று கூறினார். அவர்கள் ஒரு வெள்ளி நாணயத்தை இயேசுவிடம் காட்டினார்கள். 20 பின் இயேசு,, “நாணயத்தில் யாருடைய உருவம் உள்ளது? யாருடைய பெயர் பொறிக்கப்பட்டுள்ளது?” என்று கேட்டார்.
21 அதற்கு அவர்கள், “சீசரின் உருவமும் சீசரின் பெயரும்.” என்று பதிலளித்தனர்.
எனவே இயேசு அவர்களுக்குச் சொன்னார்,, “சீசருடையதை சீசருக்கும், தேவனுக்குரியதை தேவனுக்கும் கொடுங்கள்.”
22 இயேசு கூறியதைக் கேட்ட அவர்கள் வியப்படைந்தார்கள். இயேசுவை விட்டு விலகிச் சென்றார்கள்.
2008 by World Bible Translation Center