Book of Common Prayer
“உடன்படிக்கையின் அல்லிகள்” என்னும் பாடலை இசைக்கும் இராகத் தலைவனுக்கு ஆசாப் அளித்த துதிப் பாடல்களுள் ஒன்று
80 இஸ்ரவேலின் மேய்ப்பரே, என்னைக் கேளும்.
நீர் யோசேப்பின் ஆடுகளை (ஜனங்களை) வழி நடத்துகிறீர்.
கேருபீன்கள் மேல் அரசராக நீர் வீற்றிருக்கிறீர்.
நாங்கள் உம்மைப் பார்க்கட்டும்.
2 இஸ்ரவேலின் மேய்ப்பரே, உமது பெருமையை எப்பிராயீமுக்கும் பென்யமீனுக்கும், மனாசேக்கும் காட்டும்.
வந்து எங்களைக் காப்பாற்றும்.
3 தேவனே, எங்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளும்.
எங்களை ஏற்றருளும், எங்களைக் காப்பாற்றும்.
4 சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, எப்போது நீர் எங்கள் ஜெபங்களைக் கேட்பீர்?
என்றென்றைக்கும் எங்களோடு கோபமாயிருப்பீரோ?
5 உமது ஜனங்களுக்கு நீர் கண்ணீரையே உணவாகக் கொடுத்தீர்.
உமது ஜனங்களின் கண்ணீர் நிரம்பிய பாத்திரத்தையே உமது ஜனங்களுக்கு நீர் கொடுத்தீர்.
அதுவே அவர்கள் பருகும் தண்ணீராயிற்று.
6 எங்கள் சுற்றத்தினர் சண்டையிடுவதற்கான பொருளாக எங்களை மாற்றினீர்.
எங்கள் பகைவர்கள் எங்களைப் பார்த்து நகைக்கிறார்கள்.
7 சர்வ வல்லமையுள்ள தேவனே, எங்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளும்.
எங்களை ஏற்றருளும், எங்களைக் காப்பாற்றும்.
8 கடந்த காலத்தில் எங்களை முக்கியமான ஒரு தாவரத்தைப்போன்று நடத்தி வந்தீர்.
நீர் உமது “திராட்சைக்கொடியை” எகிப்திலிருந்து கொண்டுவந்தீர்.
இத்தேசத்திலிருந்து பிறர் விலகிப்போகுமாறு கட்டாயப்படுத்தினீர்.
உமது “திராட்சைக் கொடியை” நீர் இங்கு நட்டு வைத்தீர்.
9 “திராட்சைக்கொடிக்காக” நீர் நிலத்தைப் பண்படுத்தினீர்.
அதன் வேர்கள் வேரூன்றிச் செல்வதற்கு நீர் உதவினீர்.
உடனே அத் “திராட்சைக்கொடி” தேசமெங்கும் படர்ந்தது.
10 அது பர்வதங்களை மூடிற்று.
அதன் இலைகள் பெரும் கேதுரு மரங்களுக்கு நிழல் தந்தன.
11 அதன் கொடிகள் மத்தியதரைக் கடல் வரைக்கும் படர்ந்தது.
அதன் கிளைகள் ஐபிராத்து நதிவரைக்கும் சென்றது.
12 தேவனே, உமது “திராட்சைக்கொடி”யைப் பாதுகாக்கும் சுவர்களை ஏன் இடித்துத் தள்ளினீர்?
இப்போது வழிநடந்து செல்பவன் ஒவ்வொருவனும் திராட்சைக் கனிகளைப் பறித்துச் செல்கிறான்.
13 காட்டுப்பன்றிகள் வந்து உமது “திராட்சைக் கொடியின்” மீது நடந்து செல்கின்றன.
காட்டு மிருகங்கள் வந்து அதன் இலைகளைத் தின்கின்றன.
14 சர்வ வல்லமையுள்ள தேவனே, மீண்டும் வாரும்.
பரலோகத்திலிருந்து கீழே உமது “திராட்சைக்கொடி”யைப் பார்த்து அதனைப் பாதுகாத்துக்கொள்ளும்.
15 தேவனே, உமது கைகளால் நட்ட “திராட்சைக் கொடியைப்” பாரும்.
நீர் வளர்த்தெடுத்த இளமையான செடியை நீர் பாரும்.
16 உலர்ந்த சருகைப்போல் உமது “திராட்சைக் கொடி” நெருப்பில் எரிக்கப்பட்டது.
நீர் அதனிடம் கோபங்கொண்டு, அதனை அழித்தீர்.
17 தேவனே, உமது வலது பக்கத்தில் நின்ற உமது மகனை நெருங்கும்.
நீர் வளர்த்தெடுத்த உமது மகனிடம் நெருங்கி வாரும்.
18 அவர் மீண்டும் உம்மை விட்டுச் செல்லமாட்டார்.
அவர் வாழட்டும், அவர் உமது நாமத்தைத் தொழுதுகொள்வார்.
19 சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரே, எங்களிடம் மீண்டும் வாரும்.
எங்களை ஏற்றுக்கொள்ளும், எங்களைக் காப்பாற்றும்.
எதுதூன் என்னும் இராகத் தலைவனுக்கு ஆசாபின் பாடல்களுள் ஒன்று
77 தேவனே நோக்கி உதவிக்காக நான் உரக்கக் கூப்பிடுகிறேன்.
தேவனே, நான் உம்மிடம் ஜெபிக்கிறேன்.
நான் சொல்வதைக் கேளும்.
2 என் ஆண்டவரே, தொல்லைகள் வரும்போது நான் உம்மிடம் வருகிறேன்.
இரவு முழுவதும் நான் உம்மை நெருங்க முயன்றேன்.
என் ஆத்துமா ஆறுதல் அடைய மறுத்தது.
3 நான் தேவனைப்பற்றி நினைக்கிறேன்,
நான் உணரும் விதத்தை அவருக்குச் சொல்ல முயல்கிறேன், ஆனால் என்னால் முடியவில்லை.
4 நீர் என்னை உறங்கவொட்டீர்.
நான் ஏதோ சொல்ல முயன்றேன், ஆனால் மிகவும் வருத்தமடைந்தேன்.
5 நான் நீண்ட காலத்தில் நடந்ததைப்பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன்.
முற்காலத்தில் நிகழ்ந்தவற்றைப்பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன்.
6 இரவில், எனது பாடல்களைப்பற்றி நினைக்க முயல்கிறேன்.
நான் என்னோடு பேசி, புரிந்துகொள்ள முயல்கிறேன்.
7 நான், “எங்கள் ஆண்டவர் என்றைக்கும் எங்களை விட்டு விலகிவிட்டாரா?
மீண்டும் அவர் எப்போதும் நம்முடன் மகிழ்ச்சியோடு இருப்பாரா?
8 தேவனுடைய அன்பு என்றென்றும் விலகிவிட்டதா?
அவர் நம்மோடு மீண்டும் பேசுவாரா?
9 இரக்கம் என்னெவென்பதை தேவன் மறந்துவிட்டாரா?
அவரது நீடிய பொறுமை கோபமாயிற்றா?” என்று வியக்கிறேன்.
10 பின்பு நான், “என்னை உண்மையிலேயே பாதிப்பது இது.
‘மிக உன்னதமான தேவன்’ அவரது வல்லமையை இழந்துவிட்டாரா?” என எண்ணினேன்.
11 கர்த்தர் செய்தவற்றை நான் நினைவுகூருகிறேன்.
தேவனே, நீர் முற்காலத்தில் செய்த அற்புதமான காரியங்களை நான் நினைவுகூருகிறேன்.
12 நீர் செய்தவற்றைக்குறித்து யோசித்தேன்.
அக்காரியங்களை நான் நினைத்தேன்.
13 தேவனே, உமது வழிகள் பரிசுத்தமானவை.
தேவனே, உம்மைப்போன்று உயர்ந்தவர் (மேன்மையானவர்) எவருமில்லை.
14 அற்புதமானக் காரியங்களைச் செய்த தேவன் நீரே.
நீர் ஜனங்களுக்கு உமது மிகுந்த வல்லமையைக் காண்பித்தீர்.
15 உமது வல்லமையால் உமது ஜனங்களைக் காத்தீர்.
நீர் யாக்கோபையும் யோசேப்பின் சந்ததியினரையும் காத்தீர்.
16 தேவனே, தண்ணீர் உம்மைக் கண்டு பயந்தது.
ஆழமான தண்ணீர் பயத்தால் நடுங்கிற்று.
17 கருமேகங்கள் தண்ணீரைப் பொழிந்தன.
உயர்ந்த மேகங்களில் உரத்த இடிமுழக்கத்தை ஜனங்கள் கேட்டார்கள்.
அப்போது மின்னல்களாகிய உமது அம்புகள் மேகங்களினூடே பிரகாசித்தன.
18 உரத்த இடிமுழக்கங்கள் உண்டாயின.
உலகத்தை மின்னல் ஒளியால் நிரப்பிற்று.
பூமி அதிர்ந்து நடுங்கிற்று.
19 தேவனே, நீர் ஆழமான தண்ணீரில் (வெள்ளத்தில்) நடந்து சென்றீர்.
நீர் ஆழமான கடலைக் கடந்தீர்.
ஆனால் உமது பாதச்சுவடுகள் அங்குப் பதியவில்லை.
20 உமது ஜனங்களை மந்தைகளைப்போல் வழி நடத்துவதற்கு
நீர் மோசேயையும் ஆரோனையும் பயன்படுத்தினீர்.
ஆசாபின் துதிப் பாடல்களுள் ஒன்று
79 தேவனே, சில ஜனங்கள் மற்ற நாடுகளிலிருந்து உமது ஜனங்களோடு போரிட வந்தார்கள்.
அந்த ஜனங்கள் உமது பரிசுத்த ஆலயத்தை அழித்தார்கள்.
அவர்கள் எருசலேமைப் பாழக்கிச் சென்றார்கள்.
2 காட்டுப் பறவைகள் உண்ணும்படி பகைவர்கள் உமது ஊழியக்காரனின் சரீரங்களைக் கொடுத்தார்கள்.
உம்மைப் பின்பற்றுவோரின் சரீரங்களைக் காட்டு விலங்குகள் உண்ணும்படி விட்டுச்சென்றார்கள்.
3 தேவனே, இரத்தம் தண்ணீராகப் பெருக்கெடுத்தோடும் வரைக்கும் பகைவன் உமது ஜனங்களைக் கொன்றான்.
மரித்த உடல்களைப் புதைப்பதற்கென ஒருவனும் விட்டு வைக்கப்படவில்லை.
4 எங்களைச் சுற்றிலுமுள்ள நாடுகள் எங்களை இழிவுப்படுத்தின.
எங்களைச் சூழ வாழ்ந்த ஜனங்கள் எங்களை மனம் நோகச்செய்தனர்.
5 தேவனே, என்றென்றும் எங்களோடு கோபம்கொள்வீரா?
உமது ஆழ்ந்த உணர்ச்சிகள் தொடர்ந்து நெருப்பைப் போல் எரியுமா?
6 தேவனே, உம்மை அறியாத தேசங்களின் மீது உமது கோபத்தைத் திருப்பும்.
உமது நாமத்தை தொழுதுகொள்ளாத தேசங்களின்மீது உமது கோபத்தைத் திருப்பும்.
7 அத்தேசங்கள் யாக்கோபை அழித்தன.
அவர்கள் யாக்கோபின் நாட்டை அழித்தார்கள்.
8 தேவனே, எங்கள் முற்பிதாக்களின் பாவத்திற்காக எங்களைத் தண்டியாதேயும்.
விரையும், எங்களுக்கு உமது இரக்கத்தைக் காட்டும்!
நீர் எங்களுக்கு மிகவும் தேவையானவர்!
9 எங்கள் மீட்பராகிய தேவனே, எங்களுக்கு உதவும்!
எங்களுக்கு உதவும்! எங்களைக் காப்பாற்றும்!
உமது நாமத்துக்கு அது மகிமையை தரும்.
உமது நாமத்தின் நன்மைக்காக எங்கள் பாவங்களை அழித்துவிடும்.
10 பிறதேசங்கள் எங்களிடம், “உங்கள் தேவன் எங்கே?
அவர் உங்களுக்கு உதவக் கூடாதா?” என்று கேட்கவிடாதேயும்.
தேவனே, நாங்கள் பார்க்கும்படி அவர்களைத் தண்டியும்.
உமது பணியாட்களைக் கொன்றதற்காக அவர்களைத் தண்டியும்.
11 சிறைப்பட்டவர்களின் துன்பக் குரலை நீர் கேளும்!
தேவனே, உமது மிகுந்த வல்லமையைப் பயன்படுத்தி மரணத்திற்கென்று தேர்ந்து கொண்ட அந்த ஜனங்களைக் காப்பாற்றும்.
12 தேவனே, எங்களைச் சுற்றிலும் வாழும் ஜனங்கள் எங்களுக்குச் செய்ததைப் பார்க்கிலும்
ஏழு மடங்கு அவர்களைத் தண்டியும்.
உம்மை அவமானப்படுத்தியதற்காய் அவர்களைத் தண்டியும்.
13 நாங்கள் உமது ஜனங்கள். நாங்கள் உமது மந்தையின் ஆடுகள்.
நாங்கள் உம்மை என்றென்றும் துதிப்போம்.
தேவனே, என்றென்றும் எப்போதும் நாங்கள் உம்மைத் துதிப்போம்.
மேகமும் நெருப்பும்
15 பரிசுத்தக் கூடாரத்தையும், உடன்படிக்கையின் கூடாரத்தையும் அமைத்த அன்று, கர்த்தரின் மேகமானது அதை மூடிற்று. மாலை முதல் காலைவரை பரிசுத்தக் கூடாரத்திற்கு மேலுள்ள மேகமானது நெருப்பு போல் காணப்பட்டது. 16 அம்மேகம் பரிசுத்தக் கூடாரத்தின் மேல் எப்போதும் இருந்தது. இரவு நேரத்தில் அது நெருப்புபோல தோன்றியது. 17 மேகமானது பரிசுத்தக் கூடாரத்தை விட்டு நகர்ந்தபோது, இஸ்ரவேலரும் கூடவே சென்றனர். அம்மேகம் நின்ற இடத்தில் அவர்கள் தங்கள் முகாமை அமைத்தனர். 18 இவ்வாறு எப்போது புறப்பட வேண்டும், எப்போது நிற்க வேண்டும், முகாமை எங்கே அமைக்க வேண்டும் என்பதையெல்லாம் இஸ்ரவேலர்களுக்கு கர்த்தர் சுட்டிக் காட்டினார். அங்கே மேகம் நிலைத்திருக்கும்வரை அவர்கள் அங்கேயே தங்கள் முகாமை அமைத்திருந்தனர். 19 சில வேளைகளில் அம்மேகமானது நீண்ட காலம் பரிசுத்தக் கூடாரத்தின் மேல் தங்கியிருக்கும். கர்த்தரின் கட்டளைக்குப் பணிந்து இஸ்ரவேலர்கள் அதை விட்டு நகராமல் இருந்தனர். 20 சில வேளைகளில், மேகமானது பரிசுத்தக் கூடாரத்தின்மேல் சில நாட்களே தங்கியிருக்கும். எனவே, அவர்கள் கர்த்தரின் கட்டளைக்கு அடிபணிந்து, அது நகரும்போது அவர்களும் நகர்ந்தனர். 21 சில வேளைகளில் மேகமானது இரவு மட்டுமே தங்கியிருக்கும். மறுநாள் காலையில் அது நகர்ந்துவிடும். அப்போது அவர்களும் தங்கள் பொருட்களை கட்டிக்கொண்டு பின்பற்றிச் செல்வார்கள். மேகமானது பகலில் நகர்ந்தாலும், அல்லது இரவில் நகர்ந்தாலும் இஸ்ரவேல் ஜனங்கள் அதைப் பின்பற்றிச் சென்றனர். 22 அந்த மேகம் பரிசுத்தக் கூடாரத்தின் மேல் இரண்டு நாட்களோ, ஒரு மாதமோ, ஒரு ஆண்டோ இருந்தால் அவர்களும் அங்கே தங்கியிருப்பார்கள். கர்த்தரின் ஆணைப்படி மேகம் நகரும்வரை அவர்களும் நகரமாட்டார்கள். எப்போது மேகம் எழும்பி நகருகிறதோ அப்போது அவர்களும் நகருவார்கள். 23 எனவே, ஜனங்கள் இவ்வாறு கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்தனர். கர்த்தரின் ஆணைப்படி முகாமை அமைத்தனர். கர்த்தர் சொல்லும்போது முகாமை கலைத்து விட்டுப் புறப்பட்டனர். ஜனங்கள் மிக எச்சரிக்கையாகக் கவனித்து மோசேக்கு கர்த்தர் கட்டளையிட்டபடி கீழ்ப்படிந்தனர்.
29 ஓபாப், மீதியானியனான ரெகுவேலின் மகன். (ரெகுவேல் மோசேயின் மாமனார்.) மோசே ஓபாபிடம், “தேவன் எங்களுக்கு தருவதாக வாக்களித்துள்ள நாட்டிற்கு நாங்கள் போய்க்கொண்டிருக்கிறோம். எங்களோடு வாரும், உமக்கு நாங்கள் நல்லவர்களாக இருப்போம். இஸ்ரவேல் ஜனங்களுக்கு கர்த்தர் நன்மை செய்வதாக வாக்களித்துள்ளார்” என்று கூறினார்.
30 ஆனால் ஓபாப், “இல்லை நான் உங்களோடு வரமாட்டேன். நான் எனது தாய் நாட்டிற்குத் திரும்பிப் போகிறேன். அங்கே என் சொந்த ஜனங்கள் இருக்கின்றனர்” என்றான்.
31 பிறகு மோசே, “தயவுசெய்து எங்களைவிட்டுப் போகாதிரும், எங்களைவிட இந்தப் பாலைவனத்தைப்பற்றி உமக்கு நன்றாகத் தெரியும். நீர் எங்களுக்கு வழிகாட்டியாக இரும். 32 நீர் எங்களோடு வந்தால், கர்த்தர் எங்களுக்கு அளிக்கும் நன்மையை உம்மோடு பகிர்ந்துகொள்வோம்” என்றான்.
33 எனவே, ஓபாப் ஒப்புக்கொண்டான். பிறகு அவர்கள் கர்த்தரின் மலையிலிருந்து பயணம் செய்தனர். ஆசாரியர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு முன்னே சென்றார்கள். மூன்று நாட்கள் அவர்கள் பரிசுத்தப் பெட்டியைச் சுமந்து பயணம் செய்து முகாம் அமைப்பதற்காக இடம் பார்த்தனர். 34 கர்த்தரின் மேகமானது தினமும் அவர்களுக்கு மேல் சென்றது. ஒவ்வொரு நாள் காலையிலும் அது வழிகாட்டிய வண்ணம் சென்றது.
35 ஜனங்கள் பரிசுத்தப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு நகரும்போதெல்லாம் மோசே:
“கர்த்தாவே எழுந்திரும்!
உமது பகைவர்கள் சிதறடிக்கப்படட்டும்.
உமது பகைவர்கள் உம்மைவிட்டு ஓடட்டும்” என்று சொன்னான்.
36 பரிசுத்தப் பெட்டியை அவர்கள் கீழே வைக்கும்போதெல்லாம் மோசே எப்பொழுதும்,
“கர்த்தாவே, அநேக ஆயிரங்களான இஸ்ரவேல் ஜனங்களிடம் திரும்பி வாரும்” என்று சொன்னான்.
1 இயேசு கிறிஸ்துவின் ஒரு ஊழியனும், அப்போஸ்தலனாகும்படி தேவனால் அழைக்கபட்டவனுமாகிய பவுல் எழுதுவது:
தேவனுடைய நற்செய்தியை எல்லாருக்கும் சொல்வதற்காக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். 2 தனது மக்களுக்கு நற்செய்தியை தரப்போவதாக தேவன் ஏற்கெனவே வாக்குறுதி தந்துள்ளார். தேவன் தனது தீர்க்கதரிசிகள் மூலம் இவ்வாக்குறுதியை வழங்கினார். இந்த வாக்குறுதி பரிசுத்த வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளது. 3-4 அந்த நற்செய்தி தேவனுடைய குமாரனும் நமது கர்த்தருமாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றியது. ஒரு மனிதனைப் போன்று அவர் தாவீதின் குடும்பத்தில் பிறந்தார். ஆனால் பரிசுத்த ஆவியானவரின் மூலம் இயேசு தேவனுடைய குமாரன் என்பதை மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்ததன் மூலம் பலமாய் நிரூபித்துக் காட்டினார்.
5 கிறிஸ்துவின் மூலம் தேவனுக்குச் சேவை செய்யும் சிறப்பை எனக்குக் கொடுத்தார். தேவன் மேல் நம்பிக்கையும், கீழ்ப்படிதலுமுள்ளவர்களாக உலகில் உள்ள அனைத்து நாட்டு மக்களையும் வழிநடத்தும்படிக்கு இப்பணியை தேவன் எனக்குக் கொடுத்தார். நான் கிறிஸ்துவுக்காக இப்பணியைச் செய்கிறேன். 6 ரோமிலுள்ள நீங்களும் இயேசு கிறிஸ்துவுக்கு உரியவர்களாக அழைக்கப்பட்டீர்கள்.
7 தன் பரிசுத்த மக்களாக தேவனால் அழைக்கப்பட்ட, ரோமிலுள்ள உங்கள் அனைவருக்கும் இக்கடிதம் எழுதப்படுகிறது.
தேவனுடைய நேசத்துக்குரியவர்கள் நீங்கள். பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவாலும் உங்களுக்குக் கிருபையும், சமாதானமும் உண்டாவதாக.
நன்றியின் பிரார்த்தனை
8 முதலில் நான் உங்களுக்காக இயேசு கிறிஸ்துவின் மூலம் தேவனுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால் உலகின் பல பகுதிகளிலுள்ள மக்களும் உங்களது பெரிய விசுவாசத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள். 9-10 ஒவ்வொரு முறையும் பிரார்த்தனை செய்யும்போதெல்லாம் உங்களை நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். இது உண்மை என தேவனுக்குத் தெரியும். மக்களிடம் தேவனுடைய குமாரனைப் பற்றிய நற்செய்தியைக் கூறுவதன் மூலம் தேவன் ஒருவருக்கே நான் எனது ஆவியின் வழியே சேவை செய்கிறேன். உங்களிடம் வர அனுமதிக்குமாறு தேவனிடம் பிரார்த்திக்கிறேன். தேவன் விரும்பினால் இது நிகழும். 11 நான் உங்களைப் பார்க்க மிகவும் விரும்புகிறேன். உங்களைப் பலப்படுத்தும் ஆவிக்குரிய வரங்களை உங்களுக்குத் தர நான் விரும்புகிறேன். 12 நம்மிடம் உள்ள விசுவாசத்தின் மூலம் நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். எனது விசுவாசம் உங்களுக்கும், உங்கள் விசுவாசம் எனக்கும் உதவியாக இருக்கும்.
13 சகோதர, சகோதரிகளே, உங்களிடம் வருவதற்காக நான் பலமுறை திட்டமிட்டேன். ஆனால் இப்போதுவரை நான் வரத் தடைசெய்யப்பட்டேன். நீங்கள் ஆத்தும வளர்ச்சியைப் பெறுவதற்காக நான் அங்கே வர விரும்புகிறேன். யூதர் அல்லாத மக்களுக்கு நான் உதவியது போலவே நான் உங்களுக்கும் உதவ விரும்புகிறேன்.
14 கிரேக்கர்களுக்கும், கிரேக்கர் அல்லாதவர்களுக்கும், அறிவுள்ளவர்களுக்கும், அறிவற்றோருக்கும் நான் சேவை செய்யக் கடனாளியாயிருக்கிறேன். 15 அதனால் தான் நான் ரோமிலுள்ள உங்களுக்கும் நற்செய்தியைப் போதிக்க விரும்புகிறேன்.
இயேசு ஒரு நோயாளிச் சிறுவனைக் குணமாக்குதல்(A)
14 இயேசுவும் சீஷர்களும் கூடியிருந்த மக்களிடம் திரும்பிச் சென்றார்கள். அப்போது ஒரு மனிதன் இயேசுவின் முன் வந்து குனிந்து வணங்கினான். 15 அவன்,, “ஆண்டவரே! என் மகனுக்குக் கருணை காட்டும். வலிப்பு நோயினால் மிகவும் துன்புறுகிறான். அடிக்கடி என் மகன் தண்ணீரிலோ அல்லது நெருப்பிலோ வீழ்ந்து விடுகிறான். 16 உமது சீஷர்களிடம் என் மகனை அழைத்து வந்தேன். ஆனால், அவர்களால் அவனைக் குணப்படுத்த இயலவில்லை” என்றான்.
17 இயேசு,, “உங்களுக்கெல்லாம் விசுவாசமில்லை. உங்கள் வாழ்க்கை முறையே தவறானது. இன்னும் எவ்வளவு காலம் நான் உங்களுடன் இருக்க முடியும்? உங்களுடன் எத்தனை நாட்கள் பொறுமையுடன் காலந்தள்ள முடியும்? உன் மகனை இங்கு அழைத்து வா” என்று பதில் சொன்னார். 18 இயேசு அப்பையனின் உடலுக்குள் இருந்த பிசாசுக்கு கண்டிப்பான கட்டளையிட்டார். பின் அப்பையனுக்குள்ளிருந்த பிசாசு வெளியேறியது. உடனே பையன் குணமடைந்தான்.
19 பிறகு இயேசுவிடம் அவரது சீஷர்கள் தனித்து வந்தார்கள்., “பையனிடமிருந்து பிசாசை நாங்கள் விரட்ட முயன்றோம். ஆனால் எங்களால் இயலவில்லை. ஏன் எங்களால் பிசாசை விரட்ட இயலவில்லை?” என்று இயேசுவிடம் கேட்டார்கள்.
20 அதற்கு இயேசு,, “உங்களால் பிசாசை விரட்ட முடியவில்லை, ஏனென்றால் உங்கள் நம்பிக்கை மிகவும் சிறிய அளவிலானது. உங்களுக்கு ஒரு கடுகளவேனும் நம்பிக்கை இருந்து இம்மலையை நோக்கி, ‘இங்கிருந்து அங்கே நகர்ந்து செல்’ எனக் கூறினால், இம்மலையும் நகரும். 21 உங்களுக்கு அனைத்தும் சாத்தியமாகும் என்று உங்களுக்கு சொல்லுகிறேன்” [a] என்று கூறினார்.
2008 by World Bible Translation Center