Book of Common Prayer
நரம்புக் கருவிகளை இசைக்கும் இசைத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.
61 தேவனே, என் ஜெபப் பாடலைக் கேட்டருளும்.
என் ஜெபத்தைக் கேளும்.
2 நான் எங்கிருந்தாலும், எப்படிச் சோர்ந்து போனாலும் நான் உம்மை உதவிக்குக் கூப்பிடுவேன்.
எட்டாத உயரத்தின் பாதுகாவலான இடத்திற்கு என்னைச் சுமந்து செல்லும்.
3 நீரே எனக்குப் பாதுகாப்பான இடம்!
நீரே என் பகைவரிடமிருந்து என்னைக் காக்கும் பலமான கோபுரம்.
4 நான் என்றென்றும் உம்முடைய கூடாரத்தில் வாழ்ந்திருப்பேன்.
நீர் என்னைப் பாதுகாக்கத்தக்க இடத்தில் நான் ஒளிந்திருப்பேன்.
5 தேவனே, நான் உமக்குப் பண்ணின பொருத்தனையைக் கேட்டீர்.
உம்மைத் தொழுதுகொள்வோரின் ஒவ்வொரு பொருளும் உம்மிடமிருந்து வருவதேயாகும்.
6 அரசனுக்கு நீண்ட ஆயுளைக் கொடும்.
அவர் என்றென்றும் வாழட்டும்!
7 அவர் என்றென்றும் தேவனோடு வாழட்டும்!
உமது உண்மையான அன்பால் அவரைப் பாதுகாத்துக்கொள்ளும்.
8 நான் என்றைக்கும் உமது நாமத்தைத் துதிப்பேன்.
நான் உமக்குக் கூறிய உறுதி மொழியின்படியே, ஒவ்வொரு நாளும் செய்வேன்.
எதுதூன் என்னும் இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.
62 என்ன நடந்தாலும் பரவாயில்லை, என் ஆத்துமா பொறுமையோடு தேவன் என்னை மீட்கும்படி காத்திருக்கிறது.
என் இரட்சிப்பு அவரிடத்திலிருந்து மட்டுமே வருகிறது.
2 எனக்கு அநேக விரோதிகள் இருக்கிறார்கள்.
ஆனால் தேவனே எனக்கு அரணாக இருக்கிறார்.
தேவன் என்னைக் காப்பாற்றுகிறார்.
உயரமான மலைகளில் தேவனே என் பாதுகாவலான இடம்.
பெரும் படைகளும் என்னைத் தோற்கடிக்க இயலாது.
3 எத்தனை காலம் என்னைத் தாக்குவீர்.
நானோ சாய்ந்த சுவரைப் போலவும், வீழும் நிலையிலுள்ள வேலியைப் போலவும் இருக்கிறேன்.
4 மேன்மையான என் நிலையை எண்ணி
அந்த ஜனங்கள் என்னைக் கொல்லத் திட்டமிடுகிறார்கள்.
அவர்கள் என்னைக் குறித்துப் பொய்களைக் கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
வெளிப்படையாக அவர்கள் என்னைப்பற்றி நல்லவற்றைப் பேசினாலும் இரகசியமாக என்னை சபிக்கிறார்கள்.
5 தேவன் என்னை மீட்க வேண்டுமென்று பொறுமையோடு என் ஆத்துமா காத்திருக்கிறது.
தேவன் ஒருவரே என் நம்பிக்கை.
6 தேவனே என் அரண்.
தேவன் என்னைக் காப்பாற்றுகிறார்.
உயரமான மலைகளில் தேவனே என் பாதுகாவலான இடம்.
7 என் பெருமையும் வெற்றியும் தேவனிடமிருந்து வருகிறது.
அவர் எனக்குப் பலமான அரண்.
தேவன் எனக்குப் பாதுகாவலான இடம்.
8 ஜனங்களே, எப்போதும் தேவனை நம்புங்கள்!
தேவனிடம் உங்கள் தொல்லைகளைக் கூறுங்கள்!
தேவனே நமக்குப் பாதுகாவலான இடம்.
9 மனிதர்கள் உண்மையாகவே உதவ முடியாது.
உண்மையான உதவிக்கு நீங்கள் அவர்களை நம்பமுடியாது.
தேவனோடு ஒப்பிடுகையில் அவர்கள் லேசான காற்றைப்போல்
ஒன்றுமில்லாதவர்களாயிருக்கிறார்கள்.
10 கட்டாயமாகப் பொருளைப் பறிக்கும் வல்லமையை நம்பாதீர்கள்.
திருடுவதால் பொருளைப்பெற முடியுமென நினைக்காதீர்கள்.
நீங்கள் செல்வந்தரானால்
அச்செல்வங்கள் உங்களுக்கு உதவுமென நம்பாதீர்கள்.
11 நீங்கள் உண்மையிலேயே சார்ந்து நிற்கவல்ல பொருள் ஒன்று உண்டு என்று தேவன் சொல்கிறார்.
வல்லமை தேவனிடமிருந்து வருகிறது.
12 என் ஆண்டவரே, உமது அன்பு உண்மையானது.
ஒருவன் செய்யும் காரியங்களுக்கேற்ப நீர் மனிதனைத் தண்டிக்கவோ, அவனுக்கு உதவவோ செய்கிறீர்.
இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த துதிப்பாடல்களுள் ஒன்று.
68 தேவனே, எழுந்து உமது பகைவர்களைச் சிதறடிக்கச் செய்யும்.
அவனது பகைவர்கள் எல்லோரும் அவனை விட்டு ஓடிப் போகட்டும்.
2 காற்றால் சிதறடிக்கப்படும் புகையைப் போன்று உமது பகைவர்கள் சிதறுண்டு போகட்டும்.
நெருப்பில் உருகும் மெழுகைப்போன்று உமது பகைவர்கள் அழிந்துபோகட்டும்.
3 ஆனால் நல்லோர் மகிழ்ச்சியாயிருப்பார்கள்.
நல்லோர் தேவனோடுகூட மகிழ்ச்சியாய் காலம் கழிப்பார்கள்.
நல்லோர் களிப்படைந்து மிகவும் மகிழ்ச்சிக்கொள்வார்கள்.
4 தேவனை நோக்கிப் பாடுங்கள்.
அவர் நாமத்தை துதித்துப் பாடுங்கள்.
தேவனுக்கு வழியை உண்டுபண்ணுங்கள்.
அவர் பாலைவனத்தில் அவரது இரதத்தைச் செலுத்துகிறார்.
அவர் நாமம் யேகோவா,
அவரது நாமத்தைத் துதியுங்கள்.
5 அவரது பரிசுத்த ஆலயத்தில், தேவன் அநாதைகளுக்குத் தந்தையைப் போன்றவர்.
தேவன் விதவைகளைக் கவனித்துக்கொள்கிறார்.
6 தேவன் தனிமையில் வாழும் ஜனங்களுக்கு வீட்டைக் கொடுக்கிறார்.
தேவன் அவரது ஜனங்களைச் சிறையிலிருந்து தப்புவிக்கிறார்.
அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
ஆனால் தேவனுக்கு எதிராகத் திரும்பும் ஜனங்களோ கொடிய சிறையிலே உழல்வார்கள்.
7 தேவனே, உமது ஜனங்களை எகிப்திலிருந்து வழிநடத்தினீர்.
நீர் பாலைவனத்தின் குறுக்காகக் கடந்து சென்றீர்.
8 பூமி அதிர்ந்தது,
இஸ்ரவேலின் தேவன் சீனாய் மலைக்கு வந்தார், வானம் உருகிற்று.
9 தேவனே, பயனற்ற பாழ்நிலத்தை மீண்டும் பலன்பெறும்படி செய்வதற்காக
மழையைப் பெய்யப்பண்ணினீர்.
10 உமது ஜனங்கள் அத்தேசத்திற்குத் திரும்பின.
தேவனே, அங்கு ஏழைகளுக்குப் பல நல்ல பொருள்கள் கிடைக்கும்படி செய்தீர்.
11 தேவன் கட்டளையிட்டார்,
பலர் நற்செய்தியைக் கூறச் சென்றனர்.
12 “வல்லமையுள்ள அரசர்களின் படைகள் ஓடிப்போயின!
வீரர் போருக்குப்பின் தந்த பொருள்களை வீட்டில் பெண்கள் பங்கிட்டனர்.
வீட்டில் தங்கியிருந்தோர் செல்வத்தைப் பகிர்ந்துகொண்டனர்.
13 அவர்கள் வெள்ளியால் மூடப்பட்ட (விலை உயர்ந்த நகைகள்.)
புறாக்களின் சிறகுகளை பெறுவார்கள்.
அச்சிறகுகள் பொன்னால் பளபளத்து ஒளிரும்.”
14 சல்மோன் மலையில், பகையரசர்களை தேவன் சிதறடித்தார்.
அவர்கள் விழும் பனியைப் போலானார்கள்.
15 பாசான் மலை பல சிகரங்களையுடைய பெரிய மலை.
16 பாசான் மலையே, ஏன் சீயோன் மலையை இழிவாகப் பார்க்கிறாய்?
தேவன் அம்மலையை (சீயோன்) நேசிக்கிறார்.
என்றென்றும் வாழும்படி கர்த்தர் அம்மலையைத் தேர்ந்தெடுத்தார்.
17 பரிசுத்த சீயோன் மலைக்கு கர்த்தர் வருகிறார்.
அவரை இலட்சக்கணக்கான இரதங்கள் பின் தொடருகின்றன.
18 உயர்ந்த மலையில் அவர் ஏறினார்.
சிறைப்பட்டோரின் கூட்டத்தை அவர் வழிநடத்தினார்.
எதிராகத் திரும்பியவர்கள் உட்பட, மனிதரிடமிருந்து அவர் பரிசுகளை ஏற்றார்.
தேவனாகிய கர்த்தர் அங்கு வசிப்பதற்கு ஏறிச்சென்றார்.
19 கர்த்தரைத் துதியுங்கள்!
ஒவ்வொரு நாளும் நாம் சுமக்கவேண்டிய பாரங்களைச் சுமப்பதற்கு அவர் உதவுகிறார்.
தேவன் நம்மை மீட்கிறார்.
20 அவரே நமது தேவன் அவரே நம்மை மீட்கும் தேவன்.
நமது தேவனாகிய கர்த்தர் நம்மை மரணத்திலிருந்து காப்பாற்றுகிறார்.
21 தேவன் அவரது பகைவர்களைத் தோற்கடிக்கிறார் என்பதைக் காட்டுகிறார்.
அவரை எதிர்த்த ஜனங்களை தேவன் தண்டிக்கிறார்.
22 என் ஆண்டவர், “பாசானிலிருந்து பகைவனை வரவழைப்பேன்.
மேற்கிலிருந்து பகைவனை வரவழைப்பேன்.
23 நீ அவர்களின் இரத்தத்தில் நடப்பாய்,
உன் நாய்கள் அவர்களின் இரத்தத்தை நக்கும்” என்றார்.
24 வெற்றி ஊர்வலத்தை தேவன் நடத்திச் செல்வதை பாருங்கள்.
என் அரசராகிய பரிசுத்த தேவன் வெற்றி ஊர்வலத்தை நடத்திச் செல்வதை ஜனங்கள் காண்பார்கள்.
25 பாடகர் முன்னால் வீர நடையிட்டுச் செல்வார்கள்.
பின்னர் தம்புரு மீட்டும் இளம் பெண்கள் வருவார்கள்.
இசைக் கலைஞர்கள் பின்னே வீர நடையிடுவார்கள்.
26 சபைக்கூடும் கூட்டத்தில் தேவனைத் துதியுங்கள்!
இஸ்ரவேலின் ஜனங்களே, கர்த்தரைத் துதியுங்கள்!
27 சின்ன பென்யமீன் அவர்களை வழிநடத்திச் செல்கிறான்.
அங்கு யூதாவின் பெரிய குடும்பமும் இருக்கிறது.
அங்கு செபுலோன், நப்தலியின் தலைவர்களும் உள்ளனர்.
28 தேவனே, எங்களுக்கு உமது வல்லமையைக் காட்டும்!
கடந்த காலத்தில் எங்களுக்காய் பயன்படுத்தின உமது வல்லமையைக் காட்டும்.
29 எருசலேமிலுள்ள உமது அரண்மனைக்கு,
அரசர்கள் தங்கள் செல்வத்தை உமக்காகக் கொண்டு வருவார்கள்.
30 நீர் விரும்புவதை அந்த “மிருகங்கள்” செய்யும்படி உமது கோலைப் பயன்படுத்தும்.
அத்தேசங்களின் “காளைகளும்” “பசுக்களும்” உமக்குக் கீழ்ப்படியச் செய்யும்.
போரில் அத்தேசங்களை நீர் வென்றீர்.
இப்போது அவர்கள் வெள்ளியை உம்மிடம் கொண்டுவரச்செய்யும்.
31 எகிப்திலிருந்து அவர்கள் செல்வத்தைக் கொண்டுவரச் செய்யும்.
தேவனே, எத்தியோப்பியர்கள் அவர்களது செல்வத்தை உம்மிடம் கொண்டு வரச்செய்யும்.
32 பூமியிலுள்ள அரசர்களே, தேவனைப் பாடுங்கள்!
நமது ஆண்டவருக்கு துதிப் பாடல்களைப் பாடுங்கள்!
33 தேவனைப் பாடுங்கள்! பழைய வானங்களினூடே அவர் தமது இரதத்தைச் செலுத்துகிறார்.
அவரது வல்லமையான குரலுக்குச் செவிக்கொடுங்கள்!
34 உங்கள் தெய்வங்களைப் பார்க்கிலும் தேவன் மிகவும் வல்லமையுள்ளவர்.
இஸ்ரவேலரின் தேவன் தமது ஜனங்களை பெலமும், வல்லமையும் உள்ளோராக்குகிறார்.
35 தேவன் அவரது ஆலயத்தில் அதிசயமானவர்.
இஸ்ரவேலரின் தேவன் அவரது ஜனங்களுக்கு பெலத்தையும், வல்லமையையும் கொடுக்கிறார்.
தேவனைத் துதியுங்கள்!
14 நியாயமாகத் தோன்றாத சில காரியமும் உலகில் நடக்கிறது. கெட்டவைகள் கெட்டவர்களுக்கும், நல்லவைகள் நல்லவர்களுக்கும் நிகழவேண்டும். ஆனால் சில நேரங்களில் நல்லவர்களுக்கு தீயவைகளும் தீயவர்களுக்கு நல்லவைகளும் ஏற்படலாம். எனினும் அவை நல்லதன்று. 15 எனவே நான் வாழ்க்கையை அனுபவிப்பதுதான் நல்லது என்று முடிவு செய்தேன். ஏனென்றால், ஜனங்கள் தம் வாழ்வில் செய்யவேண்டிய நல்ல காரியங்களாவன: உண்பது, குடிப்பது, வாழ்க்கையை அனுபவிப்பதுமேயாகும். தேவன் இவ்வுலகில் தங்களுக்குக்கொடுத்த கடினமான வேலையில் இன்பம் காண்பதற்காகவாவது இவை உதவும்.
தேவன் செய்வதையெல்லாம் நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை
16 இந்த வாழ்வில் ஜனங்கள் செய்வதை எல்லாம் நான் கவனமாகப் படித்திருக்கிறேன். ஜனங்கள் எவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறார்கள் என்பதைப் பார்த்தேன். அவர்கள் இரவும் பகலும் உழைக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் தூங்குவதே இல்லை. 17 நானும் தேவன் செய்கிறவற்றைப் பார்த்தேன். உலகில் தேவன் செய்கிறவற்றை ஜனங்களால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. ஒருவன் அதனைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யலாம், ஆனால் அவனால் முடியாது. ஞானமுள்ள ஒருவன் தேவனுடைய செயல்களைப் புரிந்துகொண்டதாகக் கூறலாம். ஆனால் அதுவும் உண்மையில்லை. இவற்றையெல்லாம் ஒருவராலும் புரிந்துகொள்ள முடியாது.
மரணம் நியாயமானதா?
9 நான் இவை அனைத்தையும்பற்றி வெகு கவனமாகச் சிந்தித்தேன். தேவன், நல்லவர்களும் ஞானவான்களும் செய்வதையும் அவர்களுக்கு ஏற்படுவதையும் கட்டுப்படுத்துவதை நான் பார்த்தேன். அவர்கள் அன்பு செலுத்தப்படுவார்களா அல்லது வெறுக்கப்படுவார்களா என்று அவர்களுக்குத் தெரியாது. எதிர்காலத்தில் என்ன நடைபெறும் என்பதும் அவர்களுக்குத் தெரியாது.
2 ஆனால், நாம் அனைவரும் மரிக்கிறோம். இது அனைவருக்கும் நிகழ்கிற ஒன்று. மரணம் நல்லவர்கள் தீயவர்கள் என அனைவருக்கும் ஏற்படுகின்றது. சுத்தமானவர்கள் சுத்தமில்லாதவர்கள் என அனைத்து ஜனங்களுக்கும் மரணம் ஏற்படுகின்றது. பலி கொடுப்பவர்கள் பலிகொடுக்காதவர்கள் என அனைவருக்கும் மரணம் ஏற்படுகின்றது. பாவியைப் போன்றே நல்லவனும் மரித்துப்போகிறான். தேவனுக்குச் சிறப்பான பொருத்தனைகள் செய்கிறவனைப் போன்றே தேவனுக்குப் பொருத்தனை செய்யப் பயப்படுகிறவனும் மரித்துப்போகிறான்.
3 நமது வாழ்வில் நடைபெறும் அனைத்து காரியங்களிலும் மிக மோசமான காரியம் அனைத்து ஜனங்களும் ஒரே வழியில் முடிந்து போவதுதான். ஜனங்கள் எப்பொழுதும் பாவங்களையும் முட்டாள்தனங்களையும் சிந்தித்துக்கொண்டிருப்பதும் கெட்டதுதான். அவ்வகை எண்ணங்கள் மரணத்திற்கே அழைத்துச் செல்லுகின்றன. 4 வாழ்ந்துகொண்டிருக்கிற எவருக்கும் நம்பிக்கையுண்டு. அவன் யார் என்பது அக்கறையில்லை.
ஆனால் “மரித்துப்போன சிங்கத்தைவிட உயிரோடு உள்ள நாய் சிறந்தது”
என்னும் கூற்று உண்மையானது.
5 உயிரோடுள்ளவர்கள் தாம் மரித்துப்போவோம் என்பதை அறிந்தவர்கள். ஆனால் மரித்துப்போனவர்கள் எதையும் அறியமாட்டார்கள். மரித்துப் போனவர்களுக்கு எந்த விருதும் இல்லை. ஜனங்கள் அவர்களை விரைவில் மறந்துவிடுவார்கள். 6 ஒருவன் மரித்த பிறகு, அவனது அன்பு, வெறுப்பு, பொறாமை அனைத்தும் போய்விடுகின்றது. மரித்துப்போனவர்களுக்குப் பூமியில் நிகழ்ந்த இத்தனையிலும் பங்கில்லை.
முடியும்போது வாழ்க்கையை அனுபவி
7 இப்போது போய் உனது உணவை உண்டு மகிழ்ச்சியைப் பெறு. உனது திராட்சைரசத்தைக் குடித்து மகிழ்ச்சி அடைவாய். நீ இவற்றைச் செய்வது தேவனுக்கு உடன்பாடானதுதான். 8 சிறந்த ஆடைகளை அணிந்து அழகாகக் காட்சியளி. 9 நீ விரும்புகிற மனைவியோடு வாழ்க்கையை அனுபவி. குறுகிய உனது வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் அனுபவி. பூமியில் குறுகிய இந்த வாழ்வை தேவன் உனக்குக்கொடுத்திருக்கிறார். உனக்குரியது எல்லாம் இதுதான். எனவே இவ்வாழ்வில் நீ செய்யவேண்டிய வேலைகளுக்கு மகிழ்ச்சி அடைவாய். 10 எப்பொழுதெல்லாம் வேலை செய்ய வாய்ப்பு கிடைக்கிறதோ, அதை எவ்வளவு சிறப்பாகச் செய்யமுடியுமோ, அதனைச் செய். கல்லறையில் உனக்கு வேலையில்லை. அங்கு சிந்தனையும் அறிவும் ஞானமும் இல்லை. நாம் அனைவரும் மரணம் என்ற இடத்துக்கே போய்க்கொண்டிருக்கிறோம்.
ஆகார், சாராளின் சான்று
21 உங்களில் சிலர் இப்பொழுதும் மோசேயின் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டிருக்க விரும்புகிறீர்கள். எனக்குச் சொல்லுங்கள்.சட்டம் என்னச் சொல்லுகின்றது என கவனிக்கவில்லையா? 22 ஆபிரகாமுக்கு இரண்டு பிள்ளைகள் உண்டு. ஒருவனின் தாய் ஒரு அடிமைப் பெண். இன்னொருவனின் தாய் சுதந்தரமானவள். 23 அடிமைப் பெண்ணின் மகன் சாதாரண முறையில் பிறந்தான். அடுத்த பெண்ணின் மகனோ தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதியின்படி பிறந்தவன்.
24 இந்த உண்மையான சம்பவம் நமக்கு ஒரு சித்திரத்தை உருவாக்கி காட்டுகிறது. இந்த இரண்டு பெண்களும் தேவன் மனிதனோடு செய்துகொண்ட இரண்டு உடன்படிக்கைகளைப் போன்றவர்கள். ஒன்று சீனாய் மலையில் தேவன் மனிதனோடு செய்த உடன்படிக்கை. இந்த உடன்படிக்கைக்குக் கீழ்ப்பட்ட மக்கள் எல்லோரும் அடிமைகளைப் போன்றவர்கள். ஆகார் இந்த உடன்படிக்கைக்கு உரியவள். 25 ஆகையால் ஆகார் என்பவள் அரேபியாவின் சீனாய் மலையைப் போன்று விளங்கினாள். இவள் தற்போதுள்ள எருசலேம் நகரத்தின் படமாயிருக்கிறாள். இந்த நகரமும் அடிமைப்பட்டிருக்கிறது. அதிலுள்ள யூத மக்களும் அடிமைப்பட்டு இருக்கின்றனர். 26 ஆனால் மேலிருக்கிற பரலோக எருசலேம் சுதந்தரமான பெண்ணைப் போன்றது. இதுவே நமது தாய். 27 கீழ்க்கண்டவாறு எழுதப்பட்டிருக்கிறது.
“பிள்ளை பெறாத மலடியே! மகிழ்ச்சியாய் இரு.
எப்போதும் நீ குழந்தை பெறாதவள்.
உனக்குப் பிரசவ வேதனை என்னவெனத் தெரியாது.
அதனால் நீ மகிழ்ச்சியுடன் சத்தமிடு.
கணவனுள்ள பெண்ணைவிட தனியாக இருக்கிற
பெண்ணுக்கே அதிகப் பிள்ளைகள் உண்டு.” (A)
வெளிப்படுத்துதல்
28-29 ஆபிரகாமின் ஒரு பிள்ளை சாதாரண முறையில் பிறந்தவன். அவரது இன்னொரு பிள்ளை தேவனுடைய வாக்குறுதிப்படி ஆவியானவரின் வல்லமையால் பிறந்தான். சகோதர சகோதரிகளே, ஈசாக்கைப் போல நீங்களும் வாக்குறுதியால் வந்த பிள்ளைகளே! சாதாரண முறையில் பிறந்தவன், ஈசாக்கை மிக மோசமாக நடத்தினான். அது போலவே இன்றும் நடைபெறுகிறது. 30 ஆனால் வேதவாக்கியங்கள் என்ன கூறுகிறது? “அடிமைப் பெண்ணையும் அவளது மகனையும் தூக்கி எறியுங்கள். அடிமையாய் இல்லாதவளின் மகன் அவனது தந்தைக்குரியவற்றை எல்லாம் பெற்றுக்கொள்வான். ஆனால் அடிமைப் பெண்ணின் மகனோ எதையும் பெற்றுக்கெள்ளமாட்டான்.” [a] 31 ஆகையால் சகோதர சகோதரிகளே, நாம் அடிமைப் பெண்ணின் பிள்ளைகள் அல்ல. நாம் சுதந்தரமான பெண்ணின் பிள்ளைகள்.
இயேசு பலரையும் குணமாக்குதல்
29 பின் இயேசு அவ்விடத்தைவிட்டு விலகி, கலிலேயா ஏரிக்கரைக்குச் சென்றார். இயேசு ஒரு குன்றின்மீதேறி அங்கே அமர்ந்தார்.
30 ஏராளமான மக்கள் இயேசுவிடம் வந்தார்கள். அவர்கள் நோயாளிகள் பலரையும் அழைத்து வந்து, அவர்களை இயேசுவின் முன் கொண்டு வந்தனர். அங்கு முடவர்களும் குருடர்களும் செவிடர்களும் இன்னும் பலவகை நோயாளிகளும் இருந்தனர். இயேசு அவர்கள் அனைவரையும் குணமாக்கினார். 31 ஊமையர் பேசியதைக் கண்ட மக்கள் வியப்புற்றனர். முடவர்கள் மீண்டும் நடந்தனர். குருடர்கள் பார்வை பெற்றனர். மக்கள் அனைவரும் இஸ்ரவேலின் (யூதர்களின்) தேவனுக்கு அதற்காக நன்றி கூறினார்கள்.
நாலாயிரத்துக்கும் அதிகமான மக்களுக்கு உணவு அளித்தல்(A)
32 இயேசு தம் சீஷர்களை அருகில் அழைத்து,, “இம்மக்களுக்காக நான் வருந்துகிறேன். இவர்கள் மூன்று நாட்களாக என்னுடன் இருக்கிறார்கள். ஆனால், இப்பொழுது அவர்களுக்கு உணவு ஏதுமில்லை. அவர்களைப் பசியுடன் அனுப்ப எனக்கு விருப்பமில்லை. வீட்டிற்குத் திரும்பும்பொழுது அவர்கள் சோர்வடையலாம்” என்றார்.
33 இயேசுவின் சீஷர்கள் அவரிடம்,, “இவர்கள் அனைவருக்கும் போதுமான அப்பத்துக்கு நாம் எங்கே போக முடியும்? எந்த நகரமும் இங்கிருந்து வெகு தொலைவில் உள்ளது” என்றார்கள்.
34 இயேசு,, “எத்தனை அப்பங்கள் உங்களிடம் உள்ளன?” என்று கேட்டார்.
அதற்கு அவரது சீஷர்கள்,, “எங்களிடம் ஏழு அப்பங்களும் சில மீன்களும் உள்ளன” என்றனர்.
35 இயேசு மக்களைத் தரையில் உட்காரச் சொன்னார். 36 இயேசு ஏழு அப்பங்களையும் மீன்களையும் எடுத்துக் கொண்டார். பின் அவர் அவ்வுணவுக்காகத் தேவனுக்கு நன்றி கூறி, அவ்வுணவைத் தம் சீஷர்களுக்குக் கொடுத்தார். சீஷர்கள் மக்களுக்கு உணவை அளித்தனர். 37 மக்கள் அனைவரும் திருப்தியாய் உண்டனர். அதன் பின்னர், எஞ்சிய உணவைச் சீஷர்கள் ஏழு கூடை நிறைய நிறைத்தார்கள். 38 அங்கு சுமார் 4,000 ஆண்கள் உணவருந்தினர். மேலும் பல பெண்களும் குழந்தைகளும் உணவு உண்டார்கள். 39 அவர்கள் உண்டபின், இயேசு அவர்களைத் திரும்பிச் செல்லப் பணித்தார். இயேசு ஒரு படகில் ஏறி, மக்தலாவின் பிரதேசத்திற்குச் சென்றார்.
2008 by World Bible Translation Center