Book of Common Prayer
தாவீதின் பாடல்
15 கர்த்தாவே, உமது பரிசுத்த கூடாரத்தில் யார் வாழக்கூடும்?
உமது பரிசுத்த மலைகளில் யார் வாழக்கூடும்?
2 தூய வாழ்க்கை வாழ்ந்து, நற்செயல்களை செய்பவனும்,
உள்ளத்திலிருந்து உண்மையைப் பேசுபவனும் உமது மலையில் வாழமுடியும்.
3 அம்மனிதன் பிறரைக் குறித்துத் தீமை கூறான்.
அம்மனிதன் அயலானுக்குத் தீங்கு செய்யான்.
அம்மனிதன் அவன் குடும்பத்தைக் குறித்து வெட்கம் தரும் மொழிகளைச் சொல்லான்.
4 தேவனை வெறுப்போரை அவன் மதியான்.
ஆனால் கர்த்தரைச் சேவிப்போரையெல்லாம் அம்மனிதன் மதிப்பான்.
அவன் அயலானுக்கு வாக்களித்தால்
அவற்றைச் சரியாகக் கடைப்பிடிப்பான்.
5 அவன் கடன் கொடுத்தால், வட்டி கேளான்.
குற்றமற்ற மனிதருக்குத் தீங்கிழைப்பதற்கு அவன் பணம் பெறான்.
அந்த நல்ல மனிதனைப்போல வாழும் ஒருவன் எப்போதும் நீங்காது தேவனுடைய அருகே இருப்பான்.
இசைக்கருவிகளை இசைக்கும் இராகத் தலைவனுக்கு ஒரு துதிப் பாடல்.
67 தேவனே, என்னிடம் இரக்கம் காட்டி என்னை ஆசீர்வதியும்.
தயவாய் எங்களை ஏற்றுக்கொள்ளும்!
2 தேவனே, பூமியிலுள்ள ஒவ்வொருவனும் உம்மைக் குறித்துத் தெரிந்துக்கொள்கிறான் என நம்புகிறேன்.
நீர் எவ்வாறு ஜனங்களை மீட்கிறீரென்று ஒவ்வொரு தேசமும் பார்க்கட்டும்.
3 தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிக்கட்டும்!
எல்லா ஜனங்களும் உம்மைத் துதிக்கட்டும்.
4 எல்லா தேசங்களும் களிக்கூர்ந்து மகிழட்டும்!
ஏனெனில் நீர் ஜனங்களைத் தகுதியாக நியாயந்தீர்க்கிறீர்.
நீர் ஒவ்வொரு தேசத்தையும் அரசாளுகிறீர்.
5 தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிக்கட்டும்.
எல்லா ஜனங்களும் உம்மைத் துதிக்கட்டும்.
6 தேவனே, எங்கள் தேவனே, எங்களை ஆசீர்வதியும்.
எங்கள் தேசம் நல்ல அறுவடையை எங்களுக்குக் கொடுக்கட்டும்.
7 தேவன் நம்மை ஆசீர்வதிக்கட்டும்.
பூமியிலுள்ள எல்லா மனிதரும் தேவனுக்குப் பயந்து அவரை மதிக்கட்டும்.
விசுவாசிகளின் ஒருமித்த வாழ்வு
32 விசுவாசிகள் அனைவரும் இருதயத்தில் ஒருமனமுள்ளவர்களாக ஒரே ஊக்கமுடையோராக இருந்தனர். அவர்களில் ஒருவரும் தன்னிடமிருந்த பொருட்கள் தனக்கு மட்டுமே சொந்தமானவை எனக் கூறவில்லை. மாறாக அவர்கள் எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டனர். 33 மிகுந்த வல்லமையோடு, அப்போஸ்தலர்கள் கர்த்தராகிய இயேசு மரணத்தினின்று உண்மையாகவே எழுப்பப்பட்டார் என்பதை மக்களுக்குக் கூறினர். 34 விசுவாசிகளை தேவன் அதிகமாக ஆசீர்வதித்தார். அவர்கள் அனைவரும் தேவையான பொருட்களைப் பெற்றனர். வயல்களையோ, வீடுகளையோ உடைய ஒவ்வொருவரும் அவற்றை விற்றனர். அப்பணத்தைக் கொண்டு வந்து 35 அதனை அப்போஸ்தலர்களுக்குக் கொடுத்தனர். பின்பு ஒவ்வொருவருக்கும் தேவைக்கேற்ப பொருட்கள் கொடுக்கப்பட்டன.
36 விசுவாசிகளில் ஒருவன் யோசேப்பு என அழைக்கப்பட்டான். அப்போஸ்தலர்கள் அவனை பர்னபாஸ் என்று அழைத்தனர். (இந்தப் பெயர், “பிறருக்கு உதவுகின்ற மனிதன்” எனப் பொருள்படும்) அவன் சீப்புருவில் பிறந்த லேவியன். 37 அவனுக்குச் சிறிது நிலம் இருந்தது. அவன் அந்த நிலத்தை விற்று பணத்தைக் கொண்டுவந்து, அதை அப்போஸ்தலர்களிடம் கொடுத்தான்.
இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்
19 வானங்கள் தேவனுடைய மகிமையைக் கூறுகின்றன.
தேவனுடைய கரங்கள் செய்த நல்ல செயல்களை ஆகாயங்கள் அறிவிக்கின்றன.
2 ஒவ்வொரு புதுநாளும் அந்தக் கதையை மேலும் கூறும்.
ஒவ்வொரு இரவும் தேவனுடைய வல்லமையை மேலும் மேலும் உணர்த்தும்.
3 உண்மையில் பேச்சையோ, வார்த்தையையோ கேட்கமுடியாது.
நாம் கேட்கவல்ல சத்தத்தை அவை எழுப்புவதில்லை.
4 ஆனால் அவற்றின் “குரல்” உலகமெங்கும் செல்கிறது.
அவற்றின் “வார்த்தைகள்” பூமியின் இறுதியை எட்டுகின்றன.
ஆகாயம் சூரியனின் வீட்டைப் போன்றிருக்கும்.
5 படுக்கையறையிலிருந்து வெளிவரும் மகிழ்ச்சியான மணமகனைப்போல் சூரியன் வெளிப்படும்.
பந்தயத்திற்கு ஆசையாய் காத்திருக்கும் ஓட்ட வீரனைப் போல் சூரியன் வானத்தின் குறுக்கே தன் வழியில் செல்லும்.
6 ஆகாயத்தின் ஒருமுனையில் தொடங்கி அதன் மறுமுனை வரைக்கும் சூரியன் எங்கும் ஓடும்.
அதன் வெப்பத்திற்கு எதுவும் தப்ப இயலாது. கர்த்தருடைய போதனைகளும் அப்படிப்பட்டவையே.
7 கர்த்தருடைய போதனைகள் குறையற்றவை.
அவை தேவனுடைய ஜனங்களுக்குப் பெலனைக் (ஆற்றலை) கொடுக்கும்.
கர்த்தருடைய உடன்படிக்கை நம்பத்தக்கது.
அறிவற்றோர் ஞானமடைவதற்கு அது உதவும்.
8 கர்த்தருடைய சட்டங்கள் நியாயமானவை.
அவை ஜனங்களை சந்தோஷப்படுத்தும்.
கர்த்தருடைய கட்டளைகள் நல்லவை.
வாழத்தக்க வழியை அவை ஜனங்களுக்குக் காட்டும்.
9 கர்த்தரைத் தொழுதுகொள்வது எப்போதும் வெளிச்சமாய் பிரகாசிக்கிற ஒளி போன்றது.
கர்த்தருடைய நியாயத்தீர்ப்புகள் நல்லவை, செம்மையானவை. அவை முற்றிலும் சரியானவை.
10 கர்த்தருடைய போதனைகள் சுத்தமான பொன்னைக்காட்டிலும் பெருமதிப்புடையவை.
தேனடையிலிருந்து வரும் உயர்ந்த தேனைக் காட்டிலும் அவை இனிமையானவை.
11 கர்த்தருடைய போதனைகள் அவர் வேலையாளை எச்சரிக்கின்றன.
அவருக்குக் கீழ்ப்படிவதால் நல்லவை நிகழும்.
12 கர்த்தாவே, ஒருவனும் தன் எல்லா பிழைகளையும் காணமுடியாது.
எனவே மறைவான பாவங்கள் நான் செய்யாதிருக்க உதவும்.
13 கர்த்தாவே, நான் செய்ய விரும்பும் பாவங்களிலிருந்து என்னை விலக்கும்.
அப்பாவங்கள் என்னை ஆள அனுமதியாதிரும்.
நீர் உதவினால்
நான் பாவங்களிலிருந்து விலகி தூயவனாய் இருக்க முடியும்.
14 என் வார்த்தைகளும் எண்ணங்களும் உமக்கு ஏற்றதாய் இருக்கட்டும்.
கர்த்தாவே, நீர் என் பாறை. நீரே என்னை விடுவிப்பவர்.
146 கர்த்தரை துதி!
என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி!
2 என் வாழ்க்கை முழுவதும் நான் கர்த்தரைத் துதிப்பேன்.
என் வாழ்க்கை முழுவதும் நான் அவருக்குத் துதிகளைப் பாடுவேன்.
3 உதவிக்காக உங்கள் தலைவர்களை சார்ந்திராதீர்கள்.
ஜனங்களை நம்பாதீர்கள். ஏனெனில் ஜனங்கள் உங்களைக் காப்பாற்றமுடியாது.
4 ஜனங்கள் மரித்தபின் புதைக்கப்படுவார்கள்.
அப்போது உதவி செய்வதற்கான அவர்கள் திட்டங்கள் எல்லாம் மறைந்துபோகும்.
5 ஆனால் தேவனிடம் உதவி வேண்டுகிற ஜனங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
அந்த ஜனங்கள் அவர்களின் தேவனாகிய கர்த்தரை சார்ந்திருக்கிறார்கள்.
6 கர்த்தர் பரலோகத்தையும், பூமியையும் உண்டாக்கினார்.
கர்த்தர் கடலையும் அதிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினார்.
கர்த்தர் அவற்றை என்றென்றும் பாதுகாப்பார்.
7 ஒடுக்கப்பட்ட ஜனங்களுக்கு ஆண்டவர் நீதி வழங்குகிறார்.
தேவன் ஏழைகளுக்கு உணவளிக்கிறார்.
சிறைகளில் பூட்டி வைக்கப்பட்ட ஜனங்களை கர்த்தர் விடுவிக்கிறார்.
8 குருடர் மீண்டும் காண்பதற்கு கர்த்தர் உதவுகிறார்.
தொல்லையில் சிக்குண்ட ஜனங்களுக்கு கர்த்தர் உதவுகிறார்.
கர்த்தர் நல்லோரை நேசிக்கிறார்.
9 நம் நாட்டிலுள்ள அந்நியர்களை கர்த்தர் காப்பாற்றுகிறார்.
விதவைகளையும் அநாதைகளையும் கர்த்தர் கவனித்துக் காக்கிறார்.
ஆனால் கர்த்தர் தீயோரை அழிக்கிறார்.
10 கர்த்தர் என்றென்றும் அரசாளுவார்!
சீயோனே, உன் தேவன் என்றென்றும் எப்போதும் அரசாளுவார்!
கர்த்தரைத் துதியுங்கள்!
எருசலேமில் சவுல்
26 பிறகு சவுல் எருசலேமுக்குச் சென்றான். சீஷர் குழுவில் சேர்ந்துகொள்ள அவன் முயற்சித்தான். ஆனால் அவர்கள் எல்லோரும் அவனைக் கண்டு பயந்தனர். சவுல் உண்மையாகவே இயேசுவைப் பின்பற்றுகிறவன் என்பதை அவர்கள் நம்பவில்லை. 27 ஆனால் பர்னபா சவுலை ஏற்றுக் கொண்டு அவனை அப்போஸ்தலரிடம் அழைத்து வந்தான். பர்னபா அப்போஸ்தலருக்கு, தமஸ்குவுக்குச் செல்லும் பாதையில் சவுல் கர்த்தரை தரிசித்ததைச் சொன்னான். கர்த்தர் சவுலிடம் பேசிய வகையை பர்னபா அப்போஸ்தலருக்கு விளக்கினான். பின் அவன் அப்போஸ்தலர்களுக்கு இயேசுவுக்காக பயமின்றி தமஸ்குவில் மக்களுக்கு சவுல் போதித்ததையும் சொன்னான்.
28 சவுலும் சீஷரோடு தங்கினான். பயமின்றி கர்த்தரைப் பற்றி எருசலேமின் எல்லா பகுதிகளுக்கும் சென்று போதித்தான். 29 கிரேக்கமொழி பேசிய யூதரிடம் சவுல் அவ்வப்போது பேசினான். அவர்களோடு விவாதங்கள் நடத்தினான். ஆனால் அவனைக் கொல்வதற்கு அவர்கள் முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். 30 சகோதரர்கள் இதைப்பற்றி அறிந்தபோது அவர்கள் சவுலை செசரியா நகரத்திற்கு அழைத்துச் சென்றனர். செசரியாவிலிருந்து தர்சு நகரத்திற்கு அவர்கள் சவுலை அனுப்பினர்.
31 யூதேயா, கலிலேயா, சமாரியா, ஆகிய இடங்களிலுள்ள சபையினர் அமைதியுடன் வாழ்ந்தார்கள். பரிசுத்த ஆவியானவரின் உதவியால் வலிமையூட்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள். தாங்கள் வாழ்ந்த வகையால் கர்த்தரை அவர்கள் மதித்தனர் என்பதை விசுவாசிகள் காட்டினர். ஏனெனில் பரிசுத்த ஆவியானவரின் உதவியினால் விசுவாசிகள் குழு பெருகி வளர்ந்தது.
2008 by World Bible Translation Center