Print Page Options
Previous Prev Day Next DayNext

Book of Common Prayer

Daily Old and New Testament readings based on the Book of Common Prayer.
Duration: 861 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 87

கோராகின் குடும்பம் அளித்த ஒரு துதிப் பாடல்

87 எருசலேமின் பரிசுத்த மலைகளில் தேவன் தமது ஆலயத்தைக் கட்டினார்.
    இஸ்ரவேலின் வேறெந்த இடத்தைக் காட்டிலும் சீயோனின் வாசற்கதவுகளை கர்த்தர் நேசிக்கிறார்.
தேவனுடைய நகரமே, ஜனங்கள் உன்னைக் குறித்து ஆச்சரியமான காரியங்களைக் கூறுகிறார்கள்.
தேவன் தமது எல்லா ஜனங்களின் பட்டியலையும் வைத்திருக்கிறார்.
    அவர்களுள் சிலர் எகிப்திலும் பாபிலோனிலும் வசிக்கிறார்கள்.
    அவர்களுள் சிலர் பெலிஸ்தியாவிலும், தீருவிலும், எத்தியோப்பியாவிலும் பிறந்தார்கள்.
சீயோனில் பிறந்த ஒவ்வொருவரையும் தேவன் அறிகிறார்.
    மிக உன்னதமான தேவன் அந்நகரத்தைக் கட்டினார்.
தேவன் தமது எல்லா ஜனங்களின் பட்டியலையும் வைத்திருக்கிறார்.
    ஒவ்வொருவனும் எங்கே பிறந்தான் என்பதையும் தேவன் அறிகிறார்.

விசேஷ ஓய்வு நாட்களைக் கொண்டாடுவதற்கு தேவனுடைய ஜனங்கள் எருசலேமுக்குப் போகிறார்கள்.
    அவர்கள் மிக மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
அவர்கள் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டுமிருக்கிறார்கள்.
    அவர்கள், “எல்லா நல்லவையும் எருசலேமிலிருந்து வருகின்றன” என்றார்கள்.

சங்கீதம் 90

புத்தகம் 4

(சங்கீதம் 90-106)

தேவனுடைய மனிதனாகிய மோசேயின் ஜெபம்

90 ஆண்டவரே, என்றென்றும் எப்போதும் நீரே எங்கள் புகலிடம்.
தேவனே, பர்வதங்கள் பிறக்கும்முன்பும், பூமியும் உலகமும் உருவாக்கப்படும் முன்பும் நீரே தேவன்.
    தேவனே, நீர் எப்போதும் இருந்தவர், நீர் எப்போதும் இருக்கும் தேவன்!

நீர் உலகில் ஜனங்களைக் கொண்டுவந்தீர்,
    நீர் அவர்களை மீண்டும் தூளாக மாற்றுகிறீர்.
ஓராயிரம் ஆண்டுகள் உமக்கு முந்திய நாளைப் போலவும்
    கடந்த இரவைப் போலவும் இருக்கும்.
நீர் எங்களைப் பெருக்கித் தள்ளுகிறீர்.
    எங்கள் வாழ்க்கை ஒரு கனவைப் போன்றது, காலையில் நாங்கள் மறைந்து போகிறோம்.
நாங்கள் புல்லைப் போன்றவர்கள்.
    காலையில் புல் வளரும், மாலையில் அது காய்ந்து, வாடிப்போகும்.
தேவனே, நீர் கோபமாயிருக்கும்போது நாங்கள் அழிக்கப்படுவோம்.
    உமது கோபம் எங்களை அச்சுறுத்துகிறது!
எங்கள் பாவங்கள் அனைத்தையும் நீர் அறிகிறீர்.
    தேவனே, எங்கள் இரகசிய பாவங்கள் ஒவ்வொன்றையும் நீர் காண்கிறீர்.
உமது கோபம் எங்கள் வாழ்க்கையை முடிவுறச் செய்யும்.
    காதில் இரகசியமாகச் சொல்லும் சொல்லைப்போன்று எங்கள் உயிர்கள் மறைந்துபோகும்.
10 நாங்கள் எழுபது ஆண்டுகள் வாழக்கூடும்.
    பலமுடையவர்களாயின் எண்பது ஆண்டுகள் வாழலாம்.
எங்கள் வாழ்க்கை கடும் உழைப்பினாலும், நோயினாலும் நிரம்பியவை.
    திடீரென, எங்கள் வாழ்க்கை முடிவுறும்!
    நாங்கள் பறந்து மறைவோம்.
11 தேவனே, உமது கோபத்தின் முழு வல்லமையையும் ஒருவரும் அறியார்.
    ஆனால் தேவனே, எங்கள் பயமும், உம்மிடம் நாங்கள் கொண்டுள்ள மதிப்பும் உமது கோபத்தைப்போன்று பெரியவை.
12 நாங்கள் உண்மையிலேயே ஞானமுடையவர்களாகும்படி
    எங்கள் வாழ்க்கை எத்தனை குறுகியது என்பதை எங்களுக்குக் கற்பியும்.
13 கர்த்தாவே, எங்களிடம் எப்போதும் திரும்பி வாரும்.
    உமது பணியாட்களிடம் இரக்கமாயிரும்.
14 ஒவ்வொரு காலையிலும் உமது அன்பால் எங்களை நிரப்பும்.
    நாங்கள் மகிழ்ந்து எங்கள் வாழ்க்கையில் களிகூரச் செய்யும்.
15 எங்கள் வாழ்க்கையில் மிகுந்த துன்பத்தையும் குழப்பங்களையும் தந்தீர்.
    இப்போது எங்களை சந்தோஷப்படுத்தும்.
16 நீர் செய்யும் அற்புதச் செய்லகளை உமது ஊழியர்கள் காணச்செய்யும்
    உம்முடைய மகிமையை அவர்களின் பிள்ளைகள் காணச்செய்யும்.
17 எங்கள் தேவனாகிய ஆண்டவரே, எங்களிடம் தயவாயிரும்.
    நாங்கள் செய்யும் ஒவ்வொன்றையும் செம்மைப்படுத்தும்.
    தேவனே நாங்கள் செய்யும் எல்லாவற்றிலும் நன்மையை வழங்குவீராக.

சங்கீதம் 136

136 கர்த்தர் நல்லவர், எனவே அவரைத் துதியுங்கள்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
தேவாதி தேவனைத் துதியங்கள்!
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
கர்த்தாதி கர்த்தரைத் துதியுங்கள்!
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
ஒருவராய் அற்புதமான அதிசயங்களைச் செய்கிறவராகிய தேவனைத் துதியங்கள்!
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
வானங்களை உண்டாக்குவதற்கு ஞானத்தைப் பயன்படுத்திய தேவனைத் துதியங்கள்!
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
தேவன் கடலின்மேல் உலர்ந்த தரையை உண்டாக்கினார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
தேவன் பெரிய ஒளிகளை (சூரிய, சந்திர, நட்சத்திரங்களை) உண்டாக்கினார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
தேவன் பகலை ஆளச் சூரியனை உண்டாக்கினார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
தேவன் இரவை ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
10 எகிப்தில் முதற்பேறான ஆண்களையும் விலங்குகளையும் தேவன் கொன்றார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
11 தேவன் இஸ்ரவேலரை எகிப்திலிருந்து அழைத்துச் சென்றார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
12 தேவன் அவரது மிகுந்த வல்லமையையும், பெலத்தையும் காட்டினார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
13 தேவன் செங்கடலை இரண்டாகப் பிளந்தார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
14 தேவன் இஸ்ரவேலரைக் கடலின் வழியாக அழைத்துச் சென்றார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
15 தேவன் செங்கடலில் பார்வோனையும் அவனது படையையும் அமிழ்த்தினார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
16 தேவன் ஜனங்களை வனாந்தரத்தின் வழியாக நடத்திச் சென்றார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
17 தேவன் வல்லமையுள்ள அரசர்களைத் தோற்கடித்தார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
18 தேவன் பலமுள்ள அரசர்களைத் தோற்கடித்தார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
19 தேவன் எமோரியரின் அரசனாகிய சீகோனைத் தோற்கடித்தார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
20 தேவன் பாஷானின் அரசனாகிய ஓகைத் தோற்கடித்தார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
21 தேவன் அவர்களது தேசத்தை இஸ்ரவேலருக்குக் கொடுத்தார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
22 இஸ்ரவேலருக்குப் பரிசாக தேவன் அத்தேசத்தைக் கொடுத்தார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
23 நாம் தோற்டிக்கப்பட்டபோது தேவன் நம்மை நினைவுக்கூர்ந்தார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
24 தேவன் நமது பகைவர்களிடமிருந்து நம்மை விடுவித்தார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
25 தேவன் ஒவ்வொருவருக்கும் உணவளிக்கிறார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
26 பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள்!
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.

எண்ணாகமம் 13:31-14:25

31 ஆனால் அவனோடு சென்று வந்த மற்றவர்களோ, “நாம் அவர்களோடு சண்டையிட முடியாது. அவர்கள் நம்மைவிட பலமுள்ளவர்கள்” என்றனர். 32 மேலும் அவர்கள் இஸ்ரவேல் ஜனங்களிடம் தம்மால் அந்நாட்டில் உள்ளவர்களை வெல்ல முடியாது என்று கருத்து தெரிவித்தனர். அவர்கள், “நாங்கள் பார்வையிட்ட அந்நாட்டில் பலமுள்ளவர்கள் பலர் இருக்கின்றனர். எனவே அங்கே செல்லும் எவரையும் அவர்கள் எளிதாக வென்று விடுவார்கள். 33 அங்கே நாங்கள் இராட்சதர்களையும் பார்த்தோம்! (ஏனாக்கின் சந்ததியிலுள்ள சிலர் இராட்சதப் பிறவிகளாயிருந்தனர்.) எங்கள் பார்வையில் அவர்களுக்கு முன் நாங்கள் சிறிய வெட்டுக்கிளிகளைப் போன்று இருந்தோம். அவர்களது பார்வையில் நாங்களும் அப்படியே தோன்றினோம்!” என்றார்கள்.

ஜனங்கள் மீண்டும் முறையிடுதல்

14 அன்று இரவு, முகாம்களில் உள்ள அனைவரும் கூக்கூரலிட்டுப் புலம்பினார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் மோசேக்கும், ஆரோனுக்கும் எதிராக முறையிட்டனர். அவர்கள் அனைவரும் கூடி மோசேயிடமும், ஆரோனிடமும், “நாம் எகிப்து நாட்டிலோ பலைவனங்களிலோ மரித்துப்போயிருக்கலாம், இவ்வாறு புதிய நாட்டில் கொல்லப்படுவதைவிட அது மேலானது. நாம் இப்புதிய நாட்டில் போரில் கொல்லப்படுவதற்காகத்தான், கர்த்தர் இங்கே அழைத்து வந்தாரா? எதிரிகள் நம்மைக் கொன்றுவிட்டு, நமது மனைவியரையும், பிள்ளைகளையும் அபகரித்துக்கொள்வார்கள். இதைவிட நாம் எகிப்துக்குத் திரும்பிப் போவது நல்லது” என்றனர்.

பிறகு ஜனங்கள் ஒருவரோடு ஒருவர், “நாம் வேறு தலைவரைத் தேர்ந்தெடுத்து, எகிப்துக்குத் திரும்பிப் போவோம்” எனப் பேசிக்கொண்டனர்.

அங்கே கூடியிருந்த அனைத்து இஸ்ரவேல் ஜனங்களின் முன்பும், மோசேயும், ஆரோனும் தரையில் பணிந்து வணங்கினார்கள். யோசுவாவும் காலேப்பும் மிகவும் மனமுறிவடைந்தனர். (யோசுவா நூனின் மகன். காலேப் எப்புன்னேயின் மகன். இருவரும் கானான் நாட்டைச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்தவர்கள்.) அங்கே கூடியிருந்த இஸ்ரவேல் ஜனங்களிடம் அந்த இருவரும், “நாங்கள் பார்த்த அந்த நாடு நன்றாக இருக்கிறது. அது நல்ல பொருட்கள் பலவற்றால் நிறைந்த நாடு. கர்த்தர் நம்மீது விருப்பம் உடையவராக இருந்தால், அவர் அந்த நாட்டுக்குள் நம்மை வழி நடத்திச் செல்லுவார். அந்த நாட்டை கர்த்தர் நமக்குத் தருவார். எனவே கர்த்தருக்கு எதிராக திரும்பாதீர்கள். அந்த நாட்டின் ஜனங்களுக்குப் பயப்படாதீர்கள்! நாம் அவர்களைத் தோற்கடிக்க முடியும். அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை, எதுவும் அவர்களைக் காப்பாற்றாது. ஆனால், நம்மோடு கர்த்தர் இருக்கிறார். எனவே, பயப்படவேண்டாம்” என்றனர்.

10 அனைத்து ஜனங்களும் யோசுவாவையும் கலேபையும் கல்லெறிந்து கொன்றுவிட வேண்டும் என்று பேச ஆரம்பித்தார்கள். ஆனால் கர்த்தரின் மகிமை, ஆசரிப்புக் கூடாரத்தின் மேலே அவர்கள் அனைவரும் காணும்படி தோன்றியது. 11 கர்த்தர் மோசேயுடன் பேசினார். அவர், “எவ்வளவு காலத்திற்கு இந்த ஜனங்கள் எனக்கெதிராக இருப்பார்கள்? என் மீது நம்பிக்கையில்லை என்பதைக் காட்டுகிறார்கள், என் வல்லமையின் மீது நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுகிறார்கள். நான் எத்தனையோ அடையாளங்களை அவர்களுக்கு காட்டியிருக்கிறேன். எனினும் என்னை அவர்கள் நம்ப மறுக்கிறார்கள். நான் அவர்களுக்கிடையில் பலப் பெருங்காரியங்களைச் செய்திருக்கிறேன். 12 அவர்கள் அனைவரையும் பெருநோயால் கொன்றுவிடுவேன். அவர்களை அழிப்பேன். நான் இவர்களை விட உங்கள் ஜனத்தை பெரியதாகவும் பலமிக்கதாகவும் பண்ணுவேன்” என்றார்.

13 பிறகு மோசே கர்த்தரிடம், “நீர் இதனைச் செய்துவிட்டால், எகிப்தியர்கள் இதனைப் பற்றி கேள்விப்படுவார்கள். நீர் உமது வல்லமையைப் பயன்படுத்தி உமது ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே மீட்டுவந்தீர், என்பதை அவர்கள் அறிவார்கள். 14 எகிப்திய ஜனங்கள் கானான் ஜனங்களிடம் இதைப்பற்றி கூறினார்கள். நீரே கர்த்தர் என்பதை ஏற்கெனவே அவர்கள் அறிந்திருக்கின்றனர். நீர் உமது ஜனங்களோடு இருப்பதையும், ஜனங்கள் உம்மைப் பார்த்தனர் என்பதையும் அறிந்திருக்கின்றனர். அவர்களுக்குத் தனிச்சிறப்புடைய மேகத்தைப் பற்றி தெரியும். பகல் பொழுதில் நீர் மேகத்தின் மூலம் வழிநடத்திச் சென்றதையும், இரவில் அம்மேகம் நெருப்பாகி ஜனங்களுக்கு வெளிச்சம் தந்ததையும் அவர்கள் அறிவார்கள். 15 எனவே இப்போது நீர் இந்த ஜனங்களை அழிக்கக்கூடாது. நீர் இவர்களை அழித்தால், உமது வல்லமையைப்பற்றி அறிந்த அனைத்து ஜனங்களும், 16 ‘கர்த்தர் தான் வாக்களித்தபடி தன் ஜனங்களுக்கு நாட்டை அளிக்க முடியவில்லை. எனவே, அவர் அவர்களை பாலைவனத்தில் கொன்றுவிட்டார் என்று பேசுவார்கள்’

17 “இப்போதும், ஆண்டவரே, உமது பலத்தைக் காட்டும்! உம்மைப்பற்றி நீரே சொல்லியிருக்கிறபடி செய்யும்! 18 ‘நீர் கர்த்தர் கோபப்படுகிறதற்கு தாமதம் பண்ணுகிறார். கர்த்தர் பேரன்பு கொண்டவர். சட்டங்களை மீறி குற்றம் செய்கின்றவர்களை கர்த்தர் மன்னிப்பார். ஆனால் அக்கிரமக்காரர்களையும், அவர்கள் பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும், அவர்களின் பிள்ளைகளையும் தண்டிப்பார்’ என்று உம்மைப்பற்றி சொல்லியிருக்கிறபடியால், 19 இப்போது உமது பேரன்பை இந்த ஜனங்களிடம் காண்பித்து, இவர்களின் பாவத்தை மன்னித்தருளும், எகிப்தை விட்டுப் புறப்பட்ட நாள்முதல் நீர் மன்னித்து வருவது போலவே, இப்போதும் மன்னித்துவிடும்” என்றான்.

20 இதற்கு கர்த்தர், “ஆம்! நீ கேட்டுக்கொண்டபடியே இந்த ஜனங்களை மன்னித்துவிடுகிறேன். 21 ஆனால் உனக்கு ஒரு உண்மையைக் கூறுகிறேன். நான் இந்த பூமியில் இருப்பது எவ்வளவு உண்மையோ, அதுபோலவே எனது மகிமையும் பூமியில் நிறைந்திருக்கும் என்பதும் உண்மையாகும். 22 எகிப்திலிருந்து என்னால் அழைத்து வரப்பட்டவர்கள் எவரும் கானான் நாட்டைக் காணமாட்டார்கள். நான் எகிப்தில் செய்த அற்புதங்களையும் நான் பாலைவனத்தில் செய்த பெருஞ்செயல்களையும், அவர்கள் கண்டிருக்கிறார்கள். ஆனாலும், அவர்கள் எனக்குக் கீழ்ப்படியவில்லை. என்னைப் பத்துமுறை சோதித்திருக்கிறார்கள். 23 நான் அவர்களின் முற்பிதாக்களிடம் அவர்களுக்கு ஒரு நாட்டைத் தருவதாக வாக்களித்தேன். ஆனால் எனக்கு எதிராக உள்ள எவரும் அந்த நாட்டிற்குள் நுழைய முடியாது. 24 ஆனால் எனது ஊழியனான காலேப் வேறுபட்டவன். என்னை அவன் முழுமையாகப் பின்பற்றினான். எனவே அவனை ஏற்கெனவே அவன் பார்வையிட்ட நாட்டிற்குள் அழைத்துச் செல்வேன். அவனது ஜனங்கள் அந்நாட்டைப் பெற்றுக்கொள்வார்கள். 25 அமலேக்கியரும், கானானியரும் இந்தப் பள்ளத்தாக்கில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். எனவே, நாளை இந்த இடத்தை விட்டுப் புறப்பட்டு செங்கடலுக்குச் செல்லும் சாலையின் மேலுள்ள பாலைவனத்துக்குச் செல்லுங்கள்” என்றார்.

ரோமர் 3:9-20

அனைவரும் குற்றவாளிகளே

யூதர்களாகிய நாம் மற்றவர்களைக் காட்டிலும் சிறப்பு மிக்கவர்களா? இல்லை. யூதர்களும், யூதரல்லாதவர்களும் சமமானவர்கள் என்று ஏற்கெனவே கூறியிருக்கிறோம். அவர்கள் எல்லாம் குற்றம் உடையவர்களே. 10 எழுதப்பட்டபடி,

“சரியானவன் ஒருவன் கூட இல்லை.
11 புரிந்துகொள்கிறவனும் எவனுமில்லை.
    உண்மையில் தேவனோடிருக்க விரும்புகிறவனும் யாரும் இல்லை.
12 எல்லோரும் வழிதப்பியவர்கள்.
    எல்லோருமே பயனற்றுப்போனவர்கள்.
நல்லவை செய்பவன் ஒருவனாகிலும் இல்லை.” (A)

13 “அவர்களின் வாய்கள் திறந்த சவக் குழிகள் போன்றவை;
    தங்கள் நாக்குகளை பொய் சொல்லவே பயன்படுத்துகிறார்கள்.” (B)

“அவர்கள் சொல்லும் காரியங்கள் பாம்புகளின் விஷத்தைப் போன்றது.” (C)

14 “அவர்களது வாய் சபிப்பினாலும் கசப்பினாலும் நிறைந்துள்ளது.” (D)

15 “அவர்கள் எப்போதும் தாக்கவும் கொலை செய்யவும் தயாராக உள்ளனர்.
16     அவர்கள் செல்லும் வழிகளில் நாசமும் துன்பமும் உள்ளன.
17 அவர்களுக்குச் சமாதானத்தின் வழி தெரியாது.” (E)

18 “அவர்களிடம் தெய்வ பயமில்லை; தேவனிடம் மரியாதையும் இல்லை.” (F)

19 நியாயப்பிரமாணம் சொல்லுவதெல்லாம் அதற்கு உட்பட்டவர்களுக்கே. இது யூதர்களின் வாய்களை அடைத்துவிட்டது. இது உலகத்தார் அனைவரையும் தேவனுடைய நியாயத்தீர்ப்புக்குக் கீழ்ப்படியும்படி செய்தது. 20 ஏனென்றால் எந்த மனிதனும் நியாயப்பிரமாணத்தின் செயல்களினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை. நியாயப்பிரமாணத்தின் நோக்கம் பாவம் பற்றிய உணர்வைக் கொண்டு வருவதுதான்.

மத்தேயு 19:1-12

விவாகரத்தைப்பற்றி போதனை(A)

19 இவை அனைத்தையும் கூறிய பின்னர், இயேசு கலிலேயாவிலிருந்து புறப்பட்டுச் சென்றார். யோர்தான் நதிக்கு மறுகரையில் உள்ள யூதேயாவிற்கு இயேசு சென்றார். மக்கள் பலர் அவரைத் தொடர்ந்தனர். அங்கு நோயாளிகளை இயேசு குணமாக்கினார்.

இயேசுவிடம் வந்த பரிசேயர்கள் சிலர் இயேசுவைத் தவறாக ஏதேனும் சொல்ல வைக்க முயன்றனர். அவர்கள் இயேசுவை நோக்கி,, “ஏதேனும் ஒரு காரணத்திற்காகத் தன் மனைவியை விவாகரத்து செய்வது சரியானதா?” என்று கேட்டனர்.

அவர்களுக்கு இயேசு,, “தேவன் உலகைப் படைத்தபொழுது மனிதர்களை ஆணாகவும் பெண்ணாகவும் படைத்தார் [a] என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டிருப்பதை நீங்கள் நிச்சயமாய் படித்திருப்பீர்கள். தேவன் சொன்னார், ‘ஒருவன் தன் தாய் தந்தையரை விட்டு விலகி தன் மனைவியுடன் இணைவான், கணவனும் மனைவியும் ஒன்றாவார்கள்.’ [b] எனவே, கணவனும் மனைவியும் இருவரல்ல ஒருவரே. அவர்களை இணைத்தவர் தேவன். எனவே, எவரும் அவர்கள் இருவரையும் பிரிக்கக் கூடாது” என்று பதில் கூறினார்.

அதற்குப் பரிசேயர்கள்,, “அப்படியெனில் எதற்காக ஒருவன் விவாகரத்து பத்திரம் எழுதிக் கொடுத்துத் தன் மனைவியை விவாகரத்து செய்யலாம் என மோசே ஒரு கட்டளையைக் கொடுத்துள்ளான்?” என கேட்டார்கள்.

அதற்கு இயேசு,, “மோசே உங்கள் மனைவியை நீங்கள் விவாகரத்து செய்ய அனுமதியளித்தார். எனென்றால் நீங்கள் தேவனின் வார்த்தைகளை ஏற்க மறுத்தீர்கள். ஆனால், ஆதியில் விவாகரத்து அனுமதிக்கப்படவில்லை. நான் கூறுகிறேன், தன் மனைவியை விவாகரத்து செய்து பின் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்கிறவன் விபச்சாரம் என்னும் குற்றத்திற்கு ஆளாகிறான். ஒருவன் தன் மனைவியை விவாகரத்து செய்ய ஒரே தகுதியான காரணம் அவள் வேறொரு ஆணுடன் கள்ளத் தொடர்பு கொண்டிருப்பதே ஆகும்” என்றார்.

10 இயேசுவின் சீஷர்கள் அவரிடம்,, “ஒருவன் தன் மனைவியை விவாகரத்து செய்ய அது ஒன்று மட்டுமே தக்க காரணமெனில், திருமணம் செய்யாமலிருப்பதே நன்று” என்றார்கள்.

11 அதற்கு இயேசு,, “திருமணம் குறித்த இவ்வுண்மையை எல்லோரும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், தேவன் சிலரை அப்படிப்பட்ட கருத்தை ஒப்புக்கொள்ள ஏதுவாக்கியுள்ளார். 12 சிலர் ஏன் திருமணம் செய்துகொள்ள முடியாது என்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. சிலர் குழந்தைகளை பெறச் செய்ய இயலாதவாறு பிறந்தார்கள். சிலர் அவ்வாறு மற்றவர்களால் ஆக்கப்பட்டார்கள். மேலும் சிலர் பரலோக இராஜ்யத்திற்காக திருமணத்தைக் கைவிட்டார்கள். ஆனால் திருமணம் செய்துகொள்ளக் கூடியவர்கள் திருமண வாழ்வைக் குறித்த இந்தப் போதனையை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று பதிலளித்தார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center