Revised Common Lectionary (Complementary)
தாவீதின் பாடல்.
15 கர்த்தாவே, உமது பரிசுத்த கூடாரத்தில் யார் வாழக்கூடும்?
உமது பரிசுத்த மலைகளில் யார் வாழக்கூடும்?
2 தூய வாழ்க்கை வாழ்ந்து, நற்செயல்களை செய்பவனும்,
உள்ளத்திலிருந்து உண்மையைப் பேசுபவனும் உமது மலையில் வாழமுடியும்.
3 அம்மனிதன் பிறரைக் குறித்துத் தீமை கூறான்.
அம்மனிதன் அயலானுக்குத் தீங்கு செய்யான்.
அம்மனிதன் அவன் குடும்பத்தைக் குறித்து வெட்கம் தரும் மொழிகளைச் சொல்லான்.
4 தேவனை வெறுப்போரை அவன் மதியான்.
ஆனால் கர்த்தரைச் சேவிப்போரையெல்லாம் அம்மனிதன் மதிப்பான்.
அவன் அயலானுக்கு வாக்களித்தால்
அவற்றைச் சரியாகக் கடைப்பிடிப்பான்.
5 அவன் கடன் கொடுத்தால், வட்டி கேளான்.
குற்றமற்ற மனிதருக்குத் தீங்கிழைப்பதற்கு அவன் பணம் பெறான்.
அந்த நல்ல மனிதனைப்போல வாழும் ஒருவன் எப்போதும் நீங்காது தேவனுடைய அருகே இருப்பான்.
15 பின்பு மோசே மலையிலிருந்து இறங்கினான். உடன்படிக்கை எழுதப்பட்ட இரண்டு கற்பலகைகளை அவன் கையில் ஏந்திவந்தான். கற்பலகைகளின் முன்புறமும், பின்புறமும் அந்தக் கட்டளைகள் எழுதப்பட்டிருந்தன. 16 தேவனே அக்கற்களை உண்டாக்கி, அக்கற்களின் மீது கட்டளைகளை எழுதியிருந்தார்.
17 மலையிலிருந்து இறங்கியபோது பாளையத்திலிருந்து பெரும் சத்தத்தை யோசுவா கேட்டான். யோசுவா மோசேயை நோக்கி: “நம் பாளையத்தில் யுத்த சத்தம் எழும்புகிறது” என்றான்.
18 மோசே பதிலாக, “இது வெற்றியால் ஒரு படை எழுப்பும் சத்தமல்ல. தோல்வியால் ஒரு படை எழுப்பும் கூக்குரலும் அல்ல. நான் கேட்டது இசையின் சத்தமே” என்றான்.
19 மோசே பாளையத்திற்கு அருகே வந்தான். அவன் பொன் கன்றுக்குட்டியையும் ஜனங்கள் நடனமாடுவதையும் கண்டு, மிகுந்த கோபங்கொண்டான். அவன் கற்பல கைகளை தரையில் வீசி எறிந்தான். மலை அடிவாரத்தில் அவை சுக்கு நூறாக உடைந்து சிதறின. 20 பின்பு மோசே ஜனங்கள் செய்த கன்றுக்குட்டியை உடைத்து, அதை நெருப்பில் போட்டு உருக்கினான். பொன்னைத் தூளாகுமட்டும் அரைத்து அதைத் தண்ணீரில் கரைத்தான். அந்த தண்ணீரை பருகும்படி இஸ்ரவேல் ஜனங்களை வற்புறுத்தினான்.
21 மோசே ஆரோனை நோக்கி, “இந்த ஜனங்கள் உனக்குச் செய்ததென்ன? ஏன் இந்த மாபெரும் கேடான பாவத்தைச் செய்யும்படியாக அவர்களை வழி நடத்தினாய்?” என்று கேட்டான்.
22 ஆரோன், “கோபம் கொள்ளாதிரும், இந்த ஜனங்கள் எப்போதுமே பாவம் செய்யத் தயாராக இருக்கிறார்கள் என்பது உமக்குத் தெரியும் அல்லவா. 23 ஜனங்கள் என்னிடம், ‘மோசே எங்களை எகிப்திலிருந்து வழிநடத்தினான். ஆனால் அவருக்கு என்ன நேர்ந்தது என்று எங்களுக்குத் தெரியவில்லை. எனவே, எங்களை வழிநடத்துவதற்கு தெய்வங்களைச் செய்’ என்றார்கள். 24 நான் அவர்களிடம், ‘உங்களிடம் பொன் காதணிகள் இருந்தால், அவற்றை என்னிடம் கொடுங்கள்’ என்றேன். ஜனங்கள் பொன்னை என்னிடம் கொடுத்தார்கள். நான் பொன்னை நெருப்பில் போட்டேன். நெருப்பிலிருந்து கன்றுகுட்டி வந்தது!” என்று பதிலுரைத்தான்.
25 ஜனங்கள் கட்டுப்பாட்டை மீறி அநாகரீகமாக நடக்கும்படியாக ஆரோன் அவர்களை அனுமதித்ததை மோசே கண்டான். ஜனங்கள் காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்டதை அவர்களின் பகைவர்கள் கண்டனர். 26 எனவே, பாளையத்தின் நுழைவாயிலில் மோசே நின்றான். மோசே, “கர்த்தரைப் பின்பற்ற விரும்புகிறவர்கள் என்னிடம் வாருங்கள்” என்று சொன்னான். லேவியின் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் மோசேயிடம் ஓடினார்கள்.
27 பின்பு மோசே அவர்களை நோக்கி, “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்வதை நான் உங்களுக்குக் கூறுவேன்: ‘ஒவ்வொருவனும் வாளை எடுத்துக்கொண்டு பாளையத்தின் ஒரு புறத்திலிருந்து மறுபுறம் வரைக்கும் போய் வாருங்கள். ஒவ்வொருவனும் தனது சகோதரனையும் நண்பனையும், அயலானையும் கொல்ல வேண்டி வந்தாலும் அவர்களைக் கொல்ல வேண்டும்’” என்றான்.
28 லேவி குடும்பத்தின் ஜனங்கள் மோசேக்குக் கீழ்ப்படிந்தனர். அன்றையதினம் சுமார் 3,000 இஸ்ரவேல் ஜனங்கள் செத்தனர். 29 மோசே, “தமக்குப் பணிவிடை செய்ய கர்த்தர் இன்று உங்களைத் தெரிந்தெடுத்தார். ஏனென்றால், இன்றைக்கு உங்களில் ஒவ்வொருவரும் அவனது குமாரனுக்கு எதிராகவும், சகோதரனுக்கு எதிராகவும் இருந்தீர்கள். எனவே இன்று அவர் உங்கள் மேல் ஆசீர்வாதம் பொழிவார்” என்றான்.
30 மறுநாள் காலையில் மோசே ஜனங்களை நோக்கி, “நீங்கள் கொடிய பாவம் செய்துள்ளீர்கள்! நான் கர்த்தரிடம் மேலே போவேன். உங்கள் பாவத்தை அவர் மன்னிப்பதற்காக நான் ஏதாவது செய்யக்கூடுமா எனப் பார்ப்பேன்” என்றான். 31 எனவே மோசே கர்த்தரிடம் மீண்டும் சென்று, “தயவு செய்து நான் கூறுவதைக் கேளும்! இந்த ஜனங்கள் பெரும்பாவம் செய்தனர். அவர்கள் பொன்னால் ஒரு தேவனைச் செய்தனர். 32 இப்போது அவர்களின் இப்பாவத்தை மன்னித்துவிடும்! நீர் அவர்களை மன்னிக்காவிட்டால், உமது புத்தகத்திலிருந்து எனது பெயரை கிறுக்கி விடும்” என்றான்.
33 ஆனால் கர்த்தர் மோசேயை நோக்கி, “எனக்கெதிராக பாவம் செய்தோரின் பெயர்களை மட்டுமே நான் அழிப்பேன். 34 எனவே நீ கீழே போய் நான் சொல்கிற இடத்திற்கு ஜனங்களை வழிநடத்து. எனது தூதன் உங்களுக்கு முன்பாகச் சென்று வழிநடத்துவார். பாவம் செய்கிற மனிதர்கள் தண்டிக்கப்படும் காலம் வரும்போது அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்” என்றார். 35 எனவே கர்த்தர் ஒரு கொடிய நோய் ஜனங்களை வாதிக்கும்படியாகச் செய்தார். ஆரோனிடம் பொன் கன்றுக்குட்டியைச் செய்யுமாறு கேட்டதால் அவர் இவ்வாறு செய்தார்.
உண்மையான செல்வம்
9 தேவன் தன்னை செல்வந்தனாக ஆக்கியிருக்கிறார் என ஒரு ஏழைச் சகோதரன் அல்லது சகோதரி பெருமைப்பட வேண்டும். 10 மேலும் தேவன் தன்னைப் பணிவுள்ளவனாக ஆக்கியிருக்கிறார் என ஒரு பணக்காரச் சகோதரன் அல்லது சகோதரி பெருமைப்பட வேண்டும். எப்படி? “அவன் ஒரு காட்டுப் பூவைப்போல உதிர்ந்து போவான்” என்று தேவன் சொன்னார். 11 சூரியன் உதயமானதும் கொஞ்சம் கொஞ்சமாகச் சூடாகிறது. சூரிய வெப்பமானது செடிகளைக் காய வைக்கிறது. பூ உதிர்ந்துவிடுகின்றது. அந்த பூ அழகாக இருந்தது. ஆனால் அது வாடிப்போய் விடுகிறது. பணக்காரனும் அப்படித்தான். அவன் தன் வியாபாரத்துக்காகத் திட்டமிடும்போது இறந்துபோவான்.
தேவனிடமிருந்து சோதனைகள் வருவதில்லை
12 சோதிக்கப்படும்போது உறுதியாய் இருக்கிற மனிதன் மிகுந்த பாக்கியவான் ஆகிறான். ஏனெனில் தான் நேசிக்கிறவர்களுக்குத் தருவதாக தேவன் வாக்களித்த வாழ்வு என்னும் பரிசை, சோதனையில் தேறிவிடும்போது அவன் பெறுவான். 13 ஒரு மனிதன் சோதிக்கப்படும்போது, “அந்த சோதனை தேவனிடமிருந்து உண்டாகிறது” என்று அவன் சொல்லக் கூடாது. பொல்லாங்கினால் தேவன் சோதிக்கப்படுவதில்லை. மேலும் தேவன் ஒருவரையும் சோதிப்பதும் இல்லை. 14 அவனவன் தனது சுய ஆசைகளாலேயே இழுக்கப்பட்டு சிக்குண்டு சோதிக்கப்படுகிறான். 15 இந்த ஆசையானது கருத்தரித்து பாவத்தைப் பிறப்பிக்கிறது. மேலும் பாவம் முழுமையடையும்போது மரணத்தைத் தருகிறது.
16 எனது அன்புக்குரிய சகோதர சகோதரிகளே, ஏமாற்றப்படாமல் இருங்கள்.
2008 by World Bible Translation Center