Revised Common Lectionary (Complementary)
[a] தாவீதின் வேஷத்தைக் கண்டு அபிமெலேக்கு அவனைத் துரத்தியபோது தாவீது பாடியது. இவ்வாறு தாவீது அவனை விட்டுப் பிரிந்தான்.
34 நான் எந்த காலத்திலும் கர்த்தரை ஸ்தோத்தரிப்பேன்.
என் உதடுகள் எப்போதும் அவரைத் துதிக்கும்.
2 தாழ்மையான ஜனங்களே, செவிக்கொடுத்து மகிழுங்கள்.
என் ஆத்துமா கர்த்தரைக் குறித்துப் பெருமைகொள்ளும்.
3 தேவனுடைய மேன்மையை எனக்குக் கூறுங்கள்.
அவரது நாமத்தை என்னோடு சேர்ந்து துதியுங்கள்.
4 உதவிவேண்டி தேவனிடம் போனேன்.
அவர் கேட்டார், நான் அஞ்சிய எல்லாக் காரியங்களிலிருந்தும் அவர் என்னை மீட்டார்.
5 உதவிக்காக தேவனை நாடுங்கள்.
அவர் உங்களை ஏற்றுக்கொள்ளுவார். வெட்க மடையாதீர்கள்.
6 இந்த ஏழை உதவிக்காக கர்த்தரைக் கூப்பிட்டான்.
கர்த்தர் எனக்குச் செவிகொடுத்தார்.
என் தொல்லைகளிலிருந்து என்னை மீட்டார்.
7 கர்த்தரை நம்புவோரைச் சுற்றிலும் கர்த்தருடைய தூதன் ஒரு பாளையமிடுகிறான்.
கர்த்தருடைய தூதன் அவர்களைக் காத்து அவர்களுடைய துன்பங்களிலிருந்து விடுதலை அளிக்கிறான்.
8 கர்த்தரை நல்லவர் என்று ருசித்து அறியுங்கள்.
கர்த்தரைச் சார்ந்து வாழும் மனிதன் உண்மையாகவே சந்தோஷமடைவான்.
தாவீதுக்கு ஊசாய் ஒரு எச்சரிக்கை அனுப்புகிறான்
15 இவ்விஷயங்களையெல்லாம் ஆசாரியர்களாகிய சாதோக்குக்கும் அபியத்தாருக்கும் ஊசாய் கூறினான். அகித்தோப்பேல் அப்சலோமுக்கும் இஸ்ரவேல் தலைவர்களுக்கும் கூறிய காரியங்களை அவன் அவர்களுக்குத் தெரிவித்தான். சாதோக்குக்கும், அபியத்தாருக்கும் ஊசாய் தான் கூறிய ஆலோசனை பற்றிய செய்தியையும் தெரிவித்தான். ஊசாய், 16 “விரையுங்கள்! தாவீதுக்குச் செய்தி அனுப்புங்கள். இன்றிரவில் ஜனங்கள் பாலைவனத்திற்குக் கடந்து செல்லுமிடங்களில் தங்கவேண்டாமெனக் கூறுங்கள். ஆனால் உடனே யோர்தான் நதியைக் கடக்க வேண்டும். நதியைக் கடந்துவிட்டால் ராஜாவும் அவனுடைய ஜனங்களும் பிடிபடமாட்டார்கள்” என்று கூறினான்.
17 ஆசாரியர்களின் குமாரர்களாகிய யோனத்தானும் அகிமாசும், இன்றோகேல் என்னுமிடத்தில் காத்திருந்தார்கள். ஊருக்குள் போவதைப் பிறர் காணவேண்டாமென விரும்பினார்கள், எனவே ஒரு வேலைக்காரப் பெண்மணி அவர்களிடம் வந்தாள். அவள் அவர்களுக்குச் செய்தியைத் தெரிவித்தாள். பின்பு யோனத்தானும் அகிமாசும் ராஜா தாவீதிடம் சென்று இவ்விஷயங்களைப்பற்றித் தெரிவித்தனர்.
18 ஆனால் ஒரு சிறுவன் யோனத்தானையும் அகிமாசையும் பார்த்துவிட்டான். அவன் அதைச் சொல்வதற்கு அப்சலோமிடம் ஓடினான். யோனத்தானும் அகிமாசும் விரைவாக ஓடிவிட்டார்கள். அவர்கள் பகூரிமில் உள்ள ஒரு மனிதனின் வீட்டை அடைந்தனர். அவன் முற்றத்தில் ஒரு கிணறு இருந்தது. யோனத்தானும் அகிமாசும் கிணற்றினுள் இறங்கினார்கள். 19 அம்மனிதனின் மனைவி ஒரு விரிப்பை எடுத்துக் கிணற்றின் மீது விரித்தாள். பின்பு அவள் அதன் மீது தானியங்களைப் பரப்பினாள். தானியத்தைக் குவித்து வைத்திருந்தாற்போல் அக்கிணறு காணப்பட்டது. யாரும் யோனத்தனும் அகிமாசும் அங்கு ஒளிந்திருப்பதைக் கண்டுபிடிக்க முடியாது. 20 அப்சலோமின் பணியாட்கள் வீட்டிலிருந்த பெண்ணிடம் வந்தார்கள். அவர்கள், “யோனத்தானும் அகிமாசும் எங்கே?” என்று கேட்டார்கள்.
அப்பெண் அப்சலோமின் வேலையாட்களிடம், அவர்கள் ஏற்கெனவே நதியைக் கடந்துவிட்டார்கள் என்று கூறினாள்.
அப்சலோமின் வேலைக்காரர்கள் பின்பு யோனத்தானையும் அகிமாசையும் தேடினர், ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே அப்சலோமின் வேலைக்காரர்கள் எருசலேமுக்குத் திரும்பினார்கள்.
21 அப்சலோமின் வேலைக்காரர்கள் போன பிறகு, யோனத்தானும் அகிமாசும் கிணற்றிற்கு வெளியே வந்தார்கள். அவர்கள் போய் தாவீது ராஜாவிடம் சொன்னார்கள். அவர்கள் தாவீதை நோக்கி, “விரைந்து நதியைக் கடந்து போய்விடுங்கள். அகித்தோப்பேல் உங்களுக்கு எதிராக இந்த காரியங்களைத் திட்டமிட்டுள்ளான்” என்றார்கள்.
22 அப்போது தாவீதும் அவனோடிருந்த எல்லா ஜனங்களும் யோர்தான் நதியைக் கடந்தார்கள். சூரியன் தோன்றும் முன்னர் தாவீதின் ஜனங்கள் யோர்தான் நதியைக் கடந்துவிட்டிருந்தனர்.
அகித்தோப்பேல் தற்கொலை செய்துக்கொள்கிறான்
23 இஸ்ரவேலர் தனது அறிவுரையை ஏற்றுக் கொள்ளவில்லை என்று அகித்தோப்பேல் கண்டான். அகித்தோப்பேல் கழுதையின் மேல் சுமைகளை ஏற்றிக்கொண்டான். அவன் நகரத்திலிருந்த தன் வீட்டிற்குச் சென்றான். அவன் தன் குடும்பக் காரியங்களை ஒழுங்குப்படுத்தி, தூக்கு போட்டுக்கொண்டான். அகித்தோப்பேல் மரித்தபிறகு, ஜனங்கள் அவனை அவனது தந்தையின் கல்லறைக்குள் புதைத்தார்கள்.
அப்சலோம் யோர்தான் நதியைக் கடக்கிறான்
24 தாவீது மக்னாயீமை வந்தடைந்தார்.
அப்சலோமும் இஸ்ரவேலரும் யோர்தான் நதியைக் கடந்தனர். 25 அப்சலோம் அமாசாவைப் படைக்குத் தலைவனாக்கினான். அமாசா யோவாபின் பதவியை வகித்தான். அமாசா இஸ்மவேலனாகிய எத்திராவின் குமாரன். செருயாவின் சகோதரியாகிய நாகாசின் குமாரத்தியாகிய அபிகாயில் அமாசாவின் தாய். (செருயா யோவாபின் தாய்)
26 கீலேயாத் தேசத்தில் அப்சலோமும் இஸ்ரவேலரும் பாளயமிறங்கினார்கள்.
சோபி, மாகீர், பர்சிலா ஆகியோர்
27 தாவீது மக்னாயீமை வந்தடைந்தார். அந்த இடத்தில் சோபி, மாகீர், பர்சிலா ஆகியோர் இருந்தனர். (அம்மோனியரின் ஊராகிய ரப்பாவைச் சார்ந்தவன் சோபி நாகாசின் குமாரன் லோதேபாரிலிருந்து அம்மியேலின் குமாரனாகிய மாகீர் வந்தான். கீலேயாத்திலுள்ள ரோகிலிமிலிருந்து வந்தவன் பர்சிலா) 28-29 அவர்கள், “பாலைவனத்தில் ஜனங்கள் சோர்வோடும், பசியோடும், தாகத்தோடும் இருக்கிறார்கள்” என்றார்கள். தாவீதும் அவரின் ஜனங்களும் உண்பதற்காகவும் குடிப்பதற்காகவும் அவர்கள் பல பொருட்களைக் கொண்டு வந்தார்கள். படுக்கைகள், குவளைகள், மண்பாண்டங்கள் ஆகியவற்றையும் அவர்கள் கொண்டு வந்தனர். அவர்கள் கோதுமை, பார்லி, மாவு, வறுத்த தானியங்கள், பெரும்பயிறு, சிறும் பயிறு, உலர்ந்த கொட்டைகள், தேன், வெண்ணெய், ஆடுகள், பால்கட்டிகள் ஆகியவற்றைக் கொண்டு வந்தார்கள்.
ஒருவருக்கொருவர் உதவுக
6 சகோதர சகோதரிகளே, உங்கள் குழுவில் உள்ள ஒருவன் தவறு செய்யலாம். ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் அவனிடம் போக வேண்டும். அவன் நல்ல வழிக்கு வர சாந்தத்தோடு உதவ வேண்டும். ஆனால் கவனமாக இருங்கள். நீங்கள் பாவம் செய்யத் தூண்டப்படலாம். 2 உங்களுக்குச் சுமையாக இருக்கும்போது ஒருவருக்கு ஒருவர் உதவி செய்துகொள்ளுங்கள். நீங்கள் இதனைச் செய்யும்போது கிறிஸ்துவின் ஆணைகளுக்கு உண்மையாகவே கீழ்ப்படிகிறீர்கள். 3 முக்கியத்துவம் இல்லாத ஒருவன் தன்னைப் பெரிதும் முக்கியத்துவம் கொண்டவனாக நினைத்துக்கொள்வானேயானால், அது தன்னைத் தானே முட்டாளாக்கிக்கொள்ளும் காரியமாகும். 4 ஒருவன் தன்னை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. அவனவன் தனது செயல்களைச் சீர்தூக்கிப் பார்ப்பானாக. பிறகு அவன் தன்னால் செய்ய முடிந்த காரியங்களைப் பற்றிப் பெருமைப்பட்டுக்கொள்ள இடமிருக்கும். 5 ஒவ்வொருவனும் தன் பொறுப்புகளை ஒப்புக்கொள்ள வேண்டும்.
வாழ்க்கை என்பது வயலில் நடுவது போன்றது
6 வேதவசனத்தில் போதிக்கப்படுகிறவன், போதிக்கிறவனுக்கு எல்லா நன்மைகளையும் பங்கு வைத்துக் கொடுப்பானாக.
7 புத்தியற்றவர்களாகாதீர்கள். உங்களால் தேவனை ஏமாற்ற முடியாது. ஒருவன் விதைக்கிறதையே அறுப்பான். 8 பாவம் நிறைந்த தன் சுயத்தை திருப்தி செய்யும் பொருட்டு வாழத் தொடங்குவானேயானால், பாவம் நிறைந்த அவன் சுயமானது நிலையான மரணத்தையே தரும். ஆனால் பரிசுத்த ஆவியைத் திருப்திப்படுத்தும் பொருட்டு ஒருவன் வாழத் தொடங்குவானேயானால், அழிவற்ற வாழ்வை ஆவியானவரிடமிருந்து பெறுவான். 9 நாம் நன்மையைச் செய்வதில் சோர்வடையாமல் இருந்தால் சரியான நேரத்தில் அழிவில்லாத வாழ்வு என்னும் விளைச்சலைப் பெறுவோம். நம் செயல்களில் என்றும் பின்வாங்கக் கூடாது. 10 எவர் ஒருவருக்கும் நன்மை செய்யும் வாய்ப்பு கிட்டும் போதெல்லாம், நாம் செய்ய வேண்டும். குறிப்பாக தேவனிடம் விசுவாசம் கொண்டுள்ள குடும்பங்களுக்கு நன்மை செய்யவேண்டும்.
2008 by World Bible Translation Center