Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 34:9-14

கர்த்தருடைய பரிசுத்த ஜனங்கள் அவரைத் தொழுதுகொள்ளட்டும்.
    கர்த்தரைப் பின்பற்றுவோருக்கு வேறெந்த அடைக்கலமும் தேவையில்லை.
10 வல்லமையுள்ள ஜனங்கள் சோர்ந்து பசியடைவார்கள்.
    ஆனால் தேவனிடம் உதவி வேண்டிச் செல்வோர் நல்லவற்றையெல்லாம் அடைவார்கள்.
11 பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்.
    கர்த்தரை எப்படி மதிக்கவேண்டுமென்று உங்களுக்குப் போதிப்பேன்.
12 தன் வாழ்க்கையை நேசித்து, நீண்ட ஆயுளை விரும்பும்,
13 மனிதன் தீயவற்றைப் பேசக்கூடாது.
    அம்மனிதன் பொய் பேசக்கூடாது.
14 தீமை செய்வதை அவன் விட்டுவிட வேண்டும்.
    நல்லவற்றைச் செய். சமாதானத்திற்காகப் பாடுபடு.
    அதை அடையும்வரை அதற்கென முயற்சி செய்.

யோபு 12

யோபு சோப்பாருக்குப் பதிலளிக்கிறான்

12 பின்பு யோபு சோப்பாருக்குப் பதிலாக,

“நீங்கள் மட்டுமே ஞானவான் என நீங்கள் எண்ணுகின்றீர்கள் என நான் உறுதியாகக் கருதுகிறேன்.
    நீங்கள் மரிக்கும்போது ஞானமும் உங்களோடு அழிந்துப்போகும்.
நானும் உன்னைப் போன்றே புத்திசாலி.
    உங்களிலும் நான் தாழ்ந்தவன் அல்ல.
இப்படிப்பட்டவைகளை அறியாதவர்கள் யார்?

“என் நண்பர்கள் இப்போது என்னைக் கண்டு நகைக்கிறார்கள்.
    அவர்கள், ‘அவன் தேவனிடம் ஜெபித்தான், அவன் பதிலைப் பெற்றான்’ என்று சொல்கிறார்கள்.
    உத்தமனாகிய நீதிமான் பரியாசம் பண்ணப்படுகின்றான்.
தொல்லைகளற்றோர் தொல்லையுடையோரைக் கண்டு நகைக்கிறார்கள்.
    அவர்கள் வீழும் மனிதனைத் தாக்குகிறார்கள்.
ஆனால் திருடரின் கூடாரங்கள் பாதிக்கப்படவில்லை.
    தேவனை கோபங்கொள்ளச் செய்வோர் சமாதானமாக வாழ்கிறார்கள்.
    அவர்களின் சொந்த வலிமையே அவர்களது ஒரே தேவன்.

“ஆனால் மிருகங்களைக் கேளுங்கள், அவை உங்களுக்குப் போதிக்கும்.
    வானத்துப் பறவைகளைக் கேளுங்கள், அவை உங்களுக்குச் சொல்லும்.
அல்லது பூமியிடம் பேசுங்கள், அது உங்களுக்குக் கற்பிக்கும்.
    அல்லது கடலின் மீன்கள் தங்கள் ஞானத்தை உங்களுக்குச் சொல்லட்டும்.
கர்த்தருடைய கரம் அவற்றை உண்டாக்கினது என்பதை ஒவ்வொருவரும் அறிகிறோம்.
10 வாழும் ஒவ்வொரு மிருகமும் மூச்சுவிடும் ஒவ்வொரு மனிதனும்
    தேவனுடைய வல்லமைக்குக் கட்டுப்பட்டவர்கள்.
11 நாவு உணவைச் சுவைப்பதுப்போல
    காதுகள் கேட்கும் சொற்களை ஆராய்ந்து பார்க்கும்.
12 முதிர்ந்தோர் ஞானவான்கள்,
    புரிந்து கொள்ளும் ஆற்றலையுடையவருக்கு நீண்ட ஆயுள் உண்டு.
13 ஞானமும் ஆற்றலும் தேவனுக்குரியவை.
    ஆலோசனையும் புரிந்துகொள்ளுதலும் அவருக்குரியவை.
14 தேவன் எதையேனும் கிழித்து அழித்தால் ஜனங்கள் அதை மீண்டும் உருவாக்க முடியாது.
    தேவன் ஒருவனைச் சிறைக்குள் அகப்படுத்தினால் ஜனங்கள் அவனை விடுவிக்க முடியாது.
15 தேவன் மழையைப் பெய்யாதிருக்கச் செய்தால், பூமி உலர்ந்துபோகும்.
    தேவன் மழையைத் தாராளமாகப் பெய்யச் செய்தால், அது பூமியில் வெள்ளப் பெருக்கெடுக்கும்.
16 தேவன் வல்லமையுள்ளவரும் வெற்றி பெறுபவருமாவார்.
    ஏமாந்தவரும் மற்றும் ஏமாற்றுகின்றவரும் அவருக்கு கீழிருக்கிறீர்கள்.
17 தேவன் ஆலோசனைக் கூறுவோரின் ஞானத்தை அகற்றுகிறார்,
    அவர் தலைவர்களை மூடர்களைப்போல் நடக்கும்படி செய்கிறார்.
18 ராஜாக்கள் ஜனங்களைச் சிறைகளில் அடைக்கக்கூடும்,
    ஆனால் தேவன் அந்த ஜனங்களை விடுவித்து ஆற்றலுள்ளோராக்குகிறார்.
19 தேவன் ஆசாரியர் ஆற்றலை அகற்றுகிறார்.
    அவர் ஆலயப் பணியாட்களை முக்கிமற்றோராக்குகிறார்.
20 நம்பிக்கையுள்ள ஆலோசகர்களை அமைதியாயிருக்கும்படி தேவன் செய்கிறார்,
    முதிர்ந்தோரின் ஞானத்தை அவர் அகற்றிவிடுகிறார்.
21 தேவன் தலைவர்களை முக்கியமற்றோராக்குகிறார்,
    தலைவர்களின் ஆற்றலை அவர் நீக்கிவிடுகிறார்.
22 இருண்ட இரகசியங்களையும் கூட தேவன் அறிகிறார்,
    மரணம் போன்ற இருளுள்ள இடங்களிலும் அவர் ஒளியைப் பாய்ச்சுகிறார்.
23 தேவன் தேசங்களைப் பெரிதாகவும் வல்லமை மிக்கதாகவும் செய்கிறார்.
    பின்பு அவர் அவற்றை அழிக்கிறார்.
அவர் தேசங்களைப் பெரிதாக வளரும்படி செய்கிறார்,
    பின்பு அவர் அங்குள்ள ஜனங்களைச் சிதறடிக்கிறார்.
24 தேவன் தலைவர்களை மூடராக்குகிறார்,
    அவர்கள் குறிக்கோளின்றி பாலைவனத்தில் அலையும்படிச் செய்கிறார்.
25 அத்தலைவர்கள் இருளில் தடுமாறி வழி தேடுகின்றவனைப்போல் இருக்கிறார்கள்.
    குடித்து போகும்வழியை அறியாது செல்கிறவனைப்போல் இருக்கிறார்கள்” என்றான்.

ரோமர் 16:17-20

17 சகோதர சகோதரிகளே! பிரிவினைகளை உண்டாக்குகிற மக்களைப் பற்றி நீங்கள் மிகவும் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அடுத்தவர்களின் விசுவாசத்தை குலைப்பவர்களிடமும் எச்சரிக்கையாய் தூர இருங்கள். நீங்கள் கற்ற உண்மையான போதனைக்கு அவர்கள் எதிரானவர்கள். 18 அத்தகையவர்கள் இயேசு கிறிஸ்துவுக்கு சேவை செய்ய விரும்புவதில்லை. அவர்கள் தங்களைத் திருப்திப்படுத்திக்கொள்ளவே விரும்புகிறார்கள். அவர்கள் தங்கள் நாகரிகமான பேச்சுக்களாலும், இச்சகத்தாலும் நயவஞ்சகமாக சாதாரண அப்பாவி மக்களை தவறான வழியில் நடத்தி விடுகின்றனர். 19 உங்களது கீழ்ப்படிதல் அனைத்து விசுவாசிகளாலும் அறியப்பட்டுள்ளது. ஆகவே உங்களைப் பற்றி நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் நன்மையைப் பற்றி அறிந்துகொள்வதில் ஞானிகளாக இருக்க வேண்டும். தீமையைப் பற்றி அறிந்துகொள்வதில் அப்பாவிகளாய் இருக்கவேண்டும்.

20 சமாதானத்தைத் தருகிற தேவன் விரைவில் சாத்தானைத் தோற்கடித்து அவனை உங்கள் கால்களில் கீழே நசுக்கிப் போடுவார்.

நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களோடு இருப்பதாக. ஆமென்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center