Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 36

இராகத் தலைவனுக்கு, கர்த்தருடைய ஊழியனாகிய தாவீது கொடுத்த பாடல்.

36 தீயவன் ஒருவன் தனக்குள், “நான் தேவனுக்கு பயப்படவோ, அவரை மதிக்கவோமாட்டேன்” எனக் கூறும்போது
    அவன் மிகத்தீமையான காரியத்தைச் செய்கிறான்.
அம்மனிதன் தனக்குத்தானே பொய் பேசுகிறான்.
    அம்மனிதன் தனது சொந்த தவறுகளைப் பார்ப்பதில்லை.
    எனவே அவன் மன்னிப்பும் கேட்பதில்லை.
அவன் வார்த்தைகள் பயனற்ற பொய்களாகும்.
    அவன் ஞானம் பெறவுமில்லை, நல்லதைச் செய்யக் கற்றுக்கொள்ளவுமில்லை.
இரவில், அவன் தீய செயல்களைத் திட்டமிடுகிறான்.
    எழுந்து, நல்லவற்றைச் செய்வதில்லை.
    ஆனால் தீயவற்றைச் செய்வதற்கு அவன் மறுப்பதில்லை.

கர்த்தாவே, உமது உண்மை அன்பு வானத்திலும் உயர்ந்தது.
    உம் நேர்மை மேகங்களிலும் உயர்ந்தது.
கர்த்தாவே, உமது நன்மை உயரமான மலைகளைக் காட்டிலும் உயர்ந்தது.
    உமது நியாயம் ஆழமான சமுத்திரத்திலும் ஆழமானது.
    கர்த்தாவே, நீர் மனிதனையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர்.
உமது அன்பான இரக்கத்தைக் காட்டிலும் விலையுயர்ந்தது எதுவுமில்லை.
    ஜனங்கள் உம்மிடத்தில் அடைக்கலம் புகுகின்றனர்.
    உமது கருணையான பாதுகாப்பில் மகிழ்கிறார்கள்.
கர்த்தாவே, உம் வீட்டின் நற்காரியங்களால் அவர்கள் புதுவலிமை பெறுகிறார்கள்.
    அற்புதமான நதியிலிருந்து அவர்களைப் பருகப்பண்ணுவீர்.
கர்த்தாவே, ஜீவஊற்று உம்மிடமிருந்து புறப்படுகிறது.
    உமது வெளிச்சம் நாங்கள் ஒளியைக் காண உதவுகிறது.

10 கர்த்தாவே, உம்மை உண்மையில் அறியும் ஜனங்களைத் தொடர்ந்து நேசியும்.
    உமக்கு உண்மையாயிருக்கிற அந்த ஜனங்களுக்கு உமது நன்மை எப்போதும் இருக்கட்டும்.
11 கர்த்தாவே, பெருமை நிரம்பியோர் என்னை அகப்படுத்தாதிருக்கட்டும்.
    தீயவர்கள் என்னைப் பிடிக்கவிடாதிரும்.

12 “துன்மார்க்கர் இங்கே விழுந்து நசுக்கப்பட்டனர்.
    அவர்கள் மீண்டும் எழுந்திருப்பதில்லை” என்பதை அவர்கள் கல்லறைகளில் பொறித்து வையுங்கள்.

ஆதியாகமம் 43:1-15

யாக்கோபு பென்யமீனை எகிப்துக்கு அனுப்ப சம்மதித்தல்

43 நாட்டில் பஞ்சம் மிகக் கொடியதாய் இருந்தது.

அவர்கள் எகிப்திலிருந்து வாங்கி வந்த தானியங்கள் எல்லாம் தீர்ந்துவிட்டது. யாக்கோபு தன் குமாரர்களிடம், “எகிப்துக்குப் போய் இன்னும் கொஞ்சம் தானியங்களை வாங்கி வாருங்கள்” என்றான்.

ஆனால் யூதாவோ யாக்கோபிடம், “அந்நாட்டின் ஆளுநர் எங்களை எச்சரித்திருக்கிறார். ‘உங்கள் இளைய சகோதரனை அழைத்துக்கொண்டு வராவிட்டால் உங்களோடு பேசமாட்டேன்’ என்றார். நீங்கள் பென்யமீனை எங்களோடு அனுப்பினால் நாங்கள் போய் தானியங்களை வாங்கி வருவோம். ஆனால் நீங்கள் பென்யமீனை அனுப்ப மறுத்தால் நாங்கள் போகமாட்டோம். அந்த மனிதன் இவன் இல்லாமல் வரவேண்டாம் என்று எச்சரித்துள்ளான்” என்றான்.

இஸ்ரவேல் (யாக்கோபு) “அவனிடம் ஏன் உங்கள் இளைய சகோதரனைப்பற்றி சொன்னீர்கள்? ஏன் இதுபோல் ஒரு கெட்டச் செயலை எனக்குச் செய்தீர்கள்?” என்று கேட்டான்.

அதற்கு சகோதரர்கள், “அந்த மனிதன் ஏராளமான கேள்விகளைக் கேட்டான். அவன் எங்களைப்பற்றியும் நமது குடும்பத்தைப்பற்றியும் கேட்டான். அவன் எங்களிடம், ‘உங்கள் தந்தை உயிரோடு இருக்கிறாரா? இன்னொரு தம்பி வீட்டில் இருக்கிறானா?’ என்று கேட்டான். நாங்கள் பதிலை மட்டும் சொன்னோம். அவன் இளைய சகோதரனையும் அழைத்துக்கொண்டு வரச்சொல்லுவான் என்பதை நாங்கள் அறியோம்” என்றார்கள்.

பிறகு யூதா தன் தந்தையாகிய இஸ்ரவேலிடம், “பென்யமீனை என்னோடு அனுப்பி வையுங்கள் அவனுக்கு நான் பொறுப்பு. உணவுப் பொருட்களுக்காக எகிப்துக்குப் போகவே வேண்டும். நாம் போகாவிட்டால் நீரும், நமது குழந்தைகளும் மரித்து போவோம். அவனைப் பாதுகாப்பாக அழைத்து வருவோம் என்று உறுதி கூறுகிறேன். அவனை நாங்கள் திருப்பி அழைத்து வாராவிட்டால் நீங்கள் என்னை எப்பொழுதும் பழிகூறுங்கள். 10 நீங்கள் முன்னமே போகவிட்டிருந்தால் இதற்குள் இரண்டுமுறை போய் வந்திருக்கலாம்” என்று சொன்னான்.

11 பிறகு அவர்கள் தந்தை இஸ்ரவேல், “இது உண்மை என்றால் பென்யமீனை உங்களோடு அழைத்துப்போங்கள். ஆனால் ஆளுநருக்குச் சில அன்பளிப்புகளையும் எடுத்துக்கொள்ளுங்கள். நம் நாட்டில் சேகரிக்கத்தக்கவற்றைச் சேகரியுங்கள். தேன், பிசின்தைலம், கந்தவர்க்கம், வெள்ளைப்போளம், தொபிந்துகொட்டைகள், வாதுமைக் கொட்டைகள் போன்றவற்றை எடுத்துச் செல்லுங்கள். 12 பணத்தை இரட்டிப்பாய் எடுத்துப்போங்கள். கடந்த முறை நீங்கள் கொடுத்த பணம் தவறி உங்களிடமே வந்துவிட்டது ஆளுநர் தவறு செய்திருக்கலாம். 13 பென்யமீனையும் அழைத்துக்கொண்டு அவரிடம் போங்கள். 14 நீங்கள் ஆளுநர் முன்னால் நிற்கும்போது சர்வ வல்லமையுள்ள தேவன் உங்களுக்கு உதவுவார். அவர் சிமியோனையும், பென்யமீனையும் திருப்பி அனுப்பும்படி பிரார்த்தனை செய்கிறேன். இல்லாவிட்டால் நான் மீண்டும் குமாரனை இழந்த துக்கத்துக்கு ஆளாவேன்” என்றான்.

15 எனவே, சகோதரர்கள் காணிக்கைப் பொருட்களோடும் இரண்டு மடங்கு பணத் தோடும் எகிப்துக்குப் புறப்பட்டுப் போனார்கள். இப்போது பென்யமீனும் அவர்களோடு போனான்.

அப்போஸ்தலர் 6:1-7

உதவியாளர்கள் நியமனம்

இயேசுவைப் பின்பற்றுவோராகப் பற்பல மக்கள் மாறிகொண்டிருந்தனர். ஆனால் அதே வேளையில் கிரேக்க மொழி பேசுகின்ற சீஷர்களுக்கும் மற்ற யூதச் சீஷர்களுக்கும் ஒரு விவாதம் நடந்தது. சீஷர்கள் ஒவ்வொரு நாளும் பெற்ற பங்கைப் போன்று அவர்களுடனிருந்த விதவைகளுக்கு அளிக்கப்படவில்லை என்று அவர்கள் கூறினர். பன்னிரண்டு அப்போஸ்தலர்களும் சீஷர்கள் கூட்டத்தை ஒருமிக்க அழைத்தனர்.

அப்போஸ்தலர்கள் அவர்களை நோக்கி, “தேவனுடைய வார்த்தையைப் போதிக்கும் எங்கள் வேலை தடையுற்றுள்ளது. அது நல்லதல்ல! மக்களுக்கு உண்பதற்கு எதையேனும் கொடுப்பதில் உதவுவதைக் காட்டிலும் தேவனுடைய வார்த்தையைத் தொடர்ந்து போதிப்பதே எங்களுக்கு நல்லது. எனவே, சகோதரர்களே, உங்களில் ஏழு பேரைத் தேர்ந்து எடுங்கள். மக்கள் நல்லவர்களெனக் கருதுவோராக அவர்கள் இருக்க வேண்டும். அவர்கள் ஆவியாலும், ஞானத்தாலும் நிரம்பப் பெற்றவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் இந்த வேலையைச் செய்யும்படியாக நாங்கள் அவர்களை நியமிப்போம். பின்னர் நாங்கள் எங்கள் முழு நேரத்தையும் பிரார்த்தனை செய்வதற்கும், தேவனுடைய வார்த்தையைப் போதிப்பதற்கும் பயன்படுத்துவோம்” என்றனர்.

கூட்டத்தினர் எல்லோரும் இந்தத் திட்டத்தை வரவேற்றனர். எனவே அவர்கள் ஏழு பேரைத் தேர்ந்தெடுத்தனர். அவர்கள் ஸ்தேவான் (நம்பிக்கை மிகுந்தவனும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டவனுமான மனிதன்), பிலிப்பு,[a] ப்ரோகோரஸ், நிகனோர், தீமோன், பர்மேனஸ், நிக்கோலஸ் (அந்தியோகியாவிலிருந்து வந்தவனும் யூதனாக மாற்றப் பட்டவனும் ஆவான்) ஆகியோராவர். அவர்கள் அந்த ஏழு பேரையும் அப்போஸ்தலர்களுக்கு முன்பாக அழைத்து வந்தனர். அப்போஸ்தலர்கள் பிரார்த்தனை செய்து தங்கள் கைகளை அவர்கள் மீது வைத்தனர்.

தேவனுடைய வார்த்தை மென்மேலும் பெரும் எண்ணிக்கையிலான மக்களை எட்டியது. எருசலேமில் சீஷர்களின் எண்ணிக்கை மேலும், மேலும் அதிகரித்தது. யூத ஆசாரியர்களில் ஒரு பெரும் கூட்டத்தினரும் கூட விசுவாசம் வைத்துக் கீழ்ப்படிந்தனர்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center