Revised Common Lectionary (Complementary)
15 நல்லோரை கர்த்தர் பாதுகாக்கிறார்.
அவர்கள் ஜெபங்களை அவர் கேட்கிறார்.
16 கர்த்தர் தீயோருக்கு எதிரானவராயிருந்து
அவர்களை முற்றிலும் அழிக்கிறார்.
17 கர்த்தரிடம் ஜெபியுங்கள்.
அவர் உங்கள் விண்ணப்பங்களைக் கேட்பார்.
உங்கள் எல்லாத் தொல்லைகளிலிருந்தும் உங்களைக் காப்பார்.
18 சிலருக்குத் தொல்லைகள் மிகுதியாகும்பொழுது அவர்கள் பெருமையை விட்டொழிப்பர்.
கர்த்தர் அவர்களருகே இருந்து தாழ்மையான அந்த ஜனங்களைக் காக்கிறார்.
19 நல்லோருக்குத் தொல்லைகள் பல நேரிட்டாலும்
அவர்கள் தொல்லைகளிலிருந்து கர்த்தர் அவர்களை மீட்பார்.
20 அவர்கள் எலும்புகளில் ஒன்றும் முறிந்து போகாதபடி
கர்த்தர் அவற்றைப் பாதுகாப்பார்.
21 தீயோரைத் தொல்லைகள் கொல்லும்.
நல்லோரின் பகைவர்கள் அழிக்கப்படுவார்கள்.
22 தமது ஊழியர்களின் ஆத்துமாக்களை கர்த்தர் மீட்கிறார்.
அவரைச் சார்ந்திருக்கும் ஜனங்களை அழியவிடமாட்டார்.
மூன்று கோத்திரங்கள் சொந்த இடத்திற்குச் செல்லுதல்
22 ரூபன், காத், மனாசே கோத்திரங்களிலிருந்த ஜனங்கள் அனைவரையும் யோசுவா ஒரு கூட்டத்திற்கு அழைத்தான். 2 யோசுவா அவர்களை நோக்கி, “மோசே கர்த்தருடைய ஊழியன். மோசே செய்யும்படி கூறியவற்றிற்கு நீங்கள் கீழ்ப்படிந்தீர்கள். எனது எல்லா கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்து நடந்தீர்கள். 3 இஸ்ரவேலரின் எல்லா ஜனங்களுக்கும் நீங்கள் உதவியாக இருந்தீர்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் இட்ட கட்டளைகளுக்குக் கவனமாகக் கீழ்ப்படிந்தீர்கள். 4 இஸ்ரவேலருக்கு அமைதி வழங்குவதாக உங்கள் தேவனாகிய கர்த்தர் வாக்களித்தார். இப்போது, கர்த்தர் தமது வாக்குறுதியை நிறைவேற்றினார். இப்போது உங்கள் வீடுகளுக்கு திரும்பிப் போகலாம். யோர்தான் நதியின் கிழக்குப் புறத்திலுள்ள நிலத்தை கர்த்தருடைய ஊழியனாகிய மோசே உங்களுக்குக் கொடுத்தார். அந்நிலத்தை உங்கள் இருப்பிடமாகக் கொண்டு நீங்கள் போகலாம். 5 ஆனால் மோசே கொடுத்த சட்டத்தைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டுமென்பதை நினைவில் வையுங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தரை நேசித்து அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுங்கள். அவரைப் பின்பற்றி முழு இதயத்துடனும் முழு ஆத்துமாவுடனும் சிறப்பாக அவருக்கு சேவை செய்வதைத் தொடர்ந்து செய்து வாருங்கள்” என்றான்.
6 பின் யோசுவா அவர்களை ஆசீர்வதித்தான். அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிப் போனார்கள். 7 பாசான் தேசத்தை, மோசே மனாசேயின் பாதிக் கோத்திரத்திற்குக் கொடுத்திருந்தான். யோர்தான் நதியின் மேற்குப் பகுதியிலுள்ள தேசத்தை யோசுவா மனாசே கோத்திரத்தின் மற்ற பாதிக் குடும்பங்களுக்கு கொடுத்தான். யோசுவா அவர்களை ஆசீர்வதித்து அவர்களை வீட்டிற்கு அனுப்பினான். 8 அவன், “நீங்கள் செல்வந்தர்கள் ஆனீர்கள். உங்களுக்கு மிருக ஜீவன்கள் பல உள்ளன. உங்களிடம் பொன்னும், வெள்ளியும், விலையுயர்ந்த நகைகளும் உள்ளன. உங்களிடம் அழகிய ஆடைகள் இருக்கின்றன. உங்கள் எதிரிகளிடமிருந்து பல பொருட்களைக் கொள்ளையடித்திருக்கிறீர்கள். உங்கள் இருப்பிடத்திற்குச் சென்று அவற்றை உங்கள் சகோதரரோடே பங்கிட்டுக் கொள்ளுங்கள்” என்றான்.
9 எனவே ரூபன், காத், மனாசே கோத்திரத்தினரும் பிற இஸ்ரவேலரைப் பிரிந்து சென்றனர். அவர்கள் கானானிலுள்ள சீலோவில் இருந்தனர். அவர்கள் அவ்விடத்தை விட்டு கீலேயாத்திற்குத் திரும்பிச் சென்றார்கள். மோசே அவர்களுக்குக் கொடுத்த அவர்கள் சொந்த இடத்திற்குப் போனார்கள். இந்நிலத்தை அவர்களுக்குக் கொடுக்கும்படியாக கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டிருந்தார்.
கர்த்தரின் வருகைக்காகத் தயாராகுங்கள்
5 சகோதர சகோதரிகளே, இப்பொழுது இவை நடக்கும் காலத்தையும் தேதியையும் எழுதத் தேவை இல்லை. 2 கர்த்தர் வரும் நாள் இரவில் திருடன் திடீரென்று வருவது போல் ஆச்சரியமாக இருக்கும் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். 3 “நாங்கள் சமாதானத்தோடும், பாதுகாப்போடும் இருக்கிறோம்” என்று மக்கள் சொல்வார்கள். அப்பொழுது அவர்களுக்கு அழிவு திடீரென வரும். அவ்வழிவு கர்ப்பவதியின் பிரசவ வேதனை போன்று திடீரென வரும். அவர்கள் தப்பமுடியாது.
4 ஆனால் நீங்கள் இருட்டில் வாழவில்லை. எனவே திருடனைப்போல அந்த நாள் உங்களுக்கு ஆச்சரியத்தைத் தராது. 5 நீங்கள் யாவரும் வெளிச்சத்தைச் சேர்ந்தவர்கள், நீங்கள் பகலுக்குரியவர்கள். நாம் இருளைச் சேர்ந்தவர்கள் இல்லை. நாம் இரவுக்குரியவர்களும் இல்லை. 6 எனவே நாம் ஏனைய மக்களைப்போன்று இருக்கக் கூடாது. நாம் தூங்கிக்கொண்டிருக்கக் கூடாது. விழிப்புடனும், சுயகட்டுப்பாட்டுடனும் இருக்கவேண்டும். 7 தூங்கும் மக்கள் இரவுப்பொழுதில் தூங்குவார்கள். குடித்து வெறிகொள்பவர்கள் இரவுப் பொழுதில் குடிப்பார்கள். 8 ஆனால் நாம் பகலுக்குரியவர்கள். எனவே நம்மை நாமே கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். நம்மைக் காத்துக்கொள்வதற்காக விசுவாசம், அன்பு என்னும் மார்புக் கவசத்தை அணிந்துகொள்வோம். நம் தலைக்கவசமாய் இட்சிப்பின் நம்பிக்கை அமையும்.
9 தேவன் தம் கோபத்தை நம்மேல் காட்டுவதற்காக நம்மைத் தேர்ந்தெடுக்கவில்லை. நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் இட்சிப்பு அடையவே தேர்ந்தெடுத்தார். 10 அவரோடு நாம் அனைவரும் இணைந்து வாழும்பொருட்டு, நமக்காக அவர் இறந்தார். எனவே, இயேசு வரும்போது, நாம் உயிருடன் இருக்கிறோமோ அல்லது இறந்துபோவோமா என்பது முக்கியமில்லை. 11 எனவே ஒருவருக்கொருவர் ஆறுதலாய் இருங்கள். மேலும் நீங்கள் செய்துகொண்டிருப்பது போல ஒருவரையொருவர் பலப்படுத்துங்கள்.
2008 by World Bible Translation Center