Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 119:97-104

மேம்

97 கர்த்தாவே, நான் உமது போதனைகளை நேசிக்கிறேன்.
    எல்லா வேளைகளிலும் நான் அவற்றைக் குறித்துப் பேசுகிறேன்.
98 கர்த்தாவே, உமது கட்டளைகள் என்னை என் பகைவரைக் காட்டிலும் ஞானமுள்ளவனாக்கும்.
    உமது சட்டம் எப்போதும் என்னோடிருக்கும்.
99 உமது உடன்படிக்கையை நான் கற்பதால் என்
    ஆசிரியர்களைக காட்டிலும் நான் ஞானமுள்ளவன்.
100 நான் உமது கட்டளைகளின்படி நடப்பதால்,
    முதியத்தலைவர்களைக் காட்டிலும் அதிகமாகப் புரிந்துக்கொள்கிறேன்.
101 வழியில் ஒவ்வொரு அடியிலும் நான் தவறான பாதையில் செல்லாதபடி காக்கிறீர்.
    எனவே, கர்த்தாவே, நீர் கூறுகின்றவற்றை நான் செய்ய முடிகிறது.
102 கர்த்தாவே, நீரே என் ஆசிரியர்.
    ஆகையால் உமது சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதை நிறுத்தமாட்டேன்.
103 என் வாயிலுள்ள தேனைக்காட்டிலும் உமது வார்த்தைகள் சுவையானவை.
104 உமது போதனைகள் என்னை ஞானமுள்ளவனாக மாற்றின.
    எனவே நான் தவறான போதனைகளை வெறுக்கிறேன்.

ஏசாயா 33:10-16

10 கர்த்தர் கூறுகிறார், “இப்போது, நான் நின்று எனது சிறப்பைக் காட்டுவேன். நான் ஜனங்களுக்கு முக்கியமானவராக இருப்பேன். 11 நீங்கள் பயனற்ற செயல்களைச் செய்திருக்கிறீர்கள். அவை பதரைப்போலவும் வைக்கோலைப்போலவும் இருக்கும். அவை எதற்கும் பயனற்றவை. உங்கள் சுவாசம் நெருப்பைப்போன்றது. அது உங்களை எரிக்கும். 12 ஜனங்கள் அவர்களது எலும்புகள் சுண்ணாம்பைப்போன்று ஆகும்வரை எரிக்கப்படுவார்கள். ஜனங்கள் விரைவாக முட்கள் மற்றும் காய்ந்த புதர்களைப்போன்று எரிக்கப்படுவார்கள்.

13 “வெகு தொலைவான நாடுகளில் உள்ள ஜனங்கள், நான் செய்திருக்கிறவற்றைப் பற்றிக் கேள்விப்படுவார்கள். என் அருகிலே இருக்கிற நீங்கள் எனது வல்லமையைப்பற்றி அறிந்துகொள்வீர்கள்.”

14 சீயோனில் உள்ள பாவிகள் பயந்துகொண்டிருக்கிறார்கள். தீயச் செயல்களைச் செய்துகொண்டிருக்கிற ஜனங்கள் அச்சத்தால் நடுங்குகிறார்கள். அவர்கள், “எங்களில் எவரும் அழிக்கும் இந்த நெருப்பினூடே உயிர் வாழ முடியுமா? என்றென்றும் எரிந்துகொண்டிருக்கிற இந்நெருப்பின் அருகில் எவரால் வாழமுடியும்?”

15 நல்லதும் நேர்மையானதுமான ஜனங்கள், பணத்துக்காக மற்றவர்களைத் துன்புறுத்தாதவர்கள் அந்த நெருப்பிலிருந்து தப்பமுடியும். அந்த ஜனங்கள் லஞ்சம் பெற மறுக்கிறார்கள். மற்றவர்களைக் கொலை செய்வதற்குரிய திட்டங்களைக் கவனிக்க மறுக்கிறார்கள். தீயவற்றைச் செய்யத் திட்டம் போடுவதைப் பார்க்க அவர்கள் மறுக்கிறார்கள். 16 உயரமான இடங்களில் அந்த ஜனங்கள் பாதுகாப்பாக வாழுவார்கள். அவர்கள் உயரமான கல்கோட்டைக்குள் பாதுகாப்பாக இருப்பார்கள். அந்த ஜனங்கள் எப்பொழுதும், உணவும் தண்ணீரும் பெற்றிருப்பார்கள்.

யோவான் 15:16-25

16 “நீங்கள் என்னைத் தேர்ந்தெடுக்கவில்லை. நானே உங்களைத் தேர்ந்தெடுத்தேன். நானே உங்களைக் கனிகொடுக்குமாறு ஏற்படுத்தினேன். உங்கள் வாழ்வில் இந்தக் கனி நிரந்தரமாக இருக்கவேண்டும். பிறகு என் பிதா என்பேரில் நீங்கள் கேட்கிற எதையும் உங்களுக்குத் தருவார். 17 இதுவே எனது கட்டளை. ஒருவரோடு ஒருவர் அன்பாயிருங்கள்.

சீஷர்களை எச்சரித்தல்

18 “இந்த உலகம் உங்களைப் பகைத்தால், அது என்னைத்தான் முதலில் பகைக்கிறது என்பதை நினைவுகொள்ளுங்கள். 19 நீங்கள் இந்த உலகத்தைச் சார்ந்தவர்களாக இருந்தால் அது தன் மனிதர்களை நேசிப்பதுபோன்று உங்களையும் நேசிக்கும். ஆனால் நான் உங்களை உலகத்திலிருந்து தேர்ந்து எடுத்துவிட்டேன். அதனால்தான் உலகம் உங்களைப் பகைக்கிறது.

20 “ஒரு வேலைக்காரன் தன் எஜமானனைவிடப் பெரியவன் அல்லன் என்று நான் சொன்ன கருத்தை நினைத்துப்பாருங்கள். மக்கள் என்னைத் துன்புறுத்தினால் அவர்கள் உங்களையும் துன்புறுத்துவார்கள். மக்கள் என் உபதேசங்களுக்குக் கீழ்ப்படிந்தால் உங்கள் உபதேசத்திற்கும் கீழ்ப்படிவார்கள். 21 மக்கள் இவற்றையெல்லாம் என்பொருட்டே உங்களுக்குச் செய்வார்கள். அவர்கள் என்னை அனுப்பியவரைப்பற்றி அறியமாட்டார்கள். 22 நான் உலகத்துக்கு வந்து மக்களிடம் பேசாமல் இருந்திருந்தால் அவர்களுக்குப் பாவம் பற்றிய எண்ணம் இல்லாமல் இருந்திருக்கும். ஆனால் இப்பொழுது நான் அவர்களிடம் பேசிவிட்டேன். எனவே அவர்கள் தம் பாவங்களுக்குச் சாக்குபோக்கு சொல்ல முடியாது.

23 “என்னை வெறுக்கிற எவனும் என் பிதாவையும் வெறுக்கிறான். 24 நான், இதுவரை எவரும் செய்யாதவற்றை மக்கள் மத்தியில் செய்திருக்கிறேன். நான் அவற்றைச் செய்யாமல் இருந்திருந்தால் மக்களுக்குத் தம் பாவத்தைப் பற்றிய குற்ற உணர்வு இல்லாமல் போயிருக்கும். ஆனால் நான் செய்தவற்றையெல்லாம் அவர்கள் பார்த்திருக்கிறார்கள். எனினும் அவர்கள் என்னையும் என் பிதாவையும் வெறுக்கிறார்கள். 25 ‘அவர்கள் காரணம் இல்லாமல் என்னை வெறுக்கிறார்கள்’ என்னும் வாக்கியம் உண்மையாகும்படி இது நடந்தது.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center