Revised Common Lectionary (Complementary)
இராகத் தலைவனுக்கு, கர்த்தருடைய ஊழியனாகிய தாவீது கொடுத்த பாடல்.
36 தீயவன் ஒருவன் தனக்குள், “நான் தேவனுக்கு பயப்படவோ, அவரை மதிக்கவோமாட்டேன்” எனக் கூறும்போது
அவன் மிகத்தீமையான காரியத்தைச் செய்கிறான்.
2 அம்மனிதன் தனக்குத்தானே பொய் பேசுகிறான்.
அம்மனிதன் தனது சொந்த தவறுகளைப் பார்ப்பதில்லை.
எனவே அவன் மன்னிப்பும் கேட்பதில்லை.
3 அவன் வார்த்தைகள் பயனற்ற பொய்களாகும்.
அவன் ஞானம் பெறவுமில்லை, நல்லதைச் செய்யக் கற்றுக்கொள்ளவுமில்லை.
4 இரவில், அவன் தீய செயல்களைத் திட்டமிடுகிறான்.
எழுந்து, நல்லவற்றைச் செய்வதில்லை.
ஆனால் தீயவற்றைச் செய்வதற்கு அவன் மறுப்பதில்லை.
5 கர்த்தாவே, உமது உண்மை அன்பு வானத்திலும் உயர்ந்தது.
உம் நேர்மை மேகங்களிலும் உயர்ந்தது.
6 கர்த்தாவே, உமது நன்மை உயரமான மலைகளைக் காட்டிலும் உயர்ந்தது.
உமது நியாயம் ஆழமான சமுத்திரத்திலும் ஆழமானது.
கர்த்தாவே, நீர் மனிதனையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர்.
7 உமது அன்பான இரக்கத்தைக் காட்டிலும் விலையுயர்ந்தது எதுவுமில்லை.
ஜனங்கள் உம்மிடத்தில் அடைக்கலம் புகுகின்றனர்.
உமது கருணையான பாதுகாப்பில் மகிழ்கிறார்கள்.
8 கர்த்தாவே, உம் வீட்டின் நற்காரியங்களால் அவர்கள் புதுவலிமை பெறுகிறார்கள்.
அற்புதமான நதியிலிருந்து அவர்களைப் பருகப்பண்ணுவீர்.
9 கர்த்தாவே, ஜீவஊற்று உம்மிடமிருந்து புறப்படுகிறது.
உமது வெளிச்சம் நாங்கள் ஒளியைக் காண உதவுகிறது.
10 கர்த்தாவே, உம்மை உண்மையில் அறியும் ஜனங்களைத் தொடர்ந்து நேசியும்.
உமக்கு உண்மையாயிருக்கிற அந்த ஜனங்களுக்கு உமது நன்மை எப்போதும் இருக்கட்டும்.
11 கர்த்தாவே, பெருமை நிரம்பியோர் என்னை அகப்படுத்தாதிருக்கட்டும்.
தீயவர்கள் என்னைப் பிடிக்கவிடாதிரும்.
12 “துன்மார்க்கர் இங்கே விழுந்து நசுக்கப்பட்டனர்.
அவர்கள் மீண்டும் எழுந்திருப்பதில்லை” என்பதை அவர்கள் கல்லறைகளில் பொறித்து வையுங்கள்.
யோசேப்பு பார்வோனுக்காக நிலம் வாங்குதல்
13 பஞ்சம் மிகவும் மோசமாகியது. பூமியில் எங்கும் உணவு இல்லை. எகிப்தும் கானானும் இக்காலத்தில் மிகவும் மோசமாகியது. 14 ஜனங்கள் நிறைய தானியங்களை விலைக்கு வாங்கினார்கள். யோசேப்பு அச்செல்வத்தைச் சேர்த்து வைத்து பார்வோனின் வீட்டிற்குக் கொண்டு வந்தான். 15 கொஞ்ச காலத்தில் எகிப்திலும் கானானிலும் உள்ள ஜனங்களிடம் தானியம் வாங்கப் பணம் இல்லை. தம்மிடம் இருந்த பணத்தை ஏற்கெனவே தானியம் வாங்குவதில் செலவழித்திருந்தார்கள். எனவே அவர்கள் யோசேப்பிடம் சென்று, “தயவு செய்து தானியம் கொடுங்கள். எங்கள் பணம் தீர்ந்துவிட்டது. நாங்கள் உணவு உண்ணாவிட்டால் உங்கள் முன்னாலேயே மரித்துவிடுவோம்” என்று வேண்டினார்கள்.
16 ஆனால் யோசேப்போ, “உங்கள் ஆடு மாடுகளைக் கொடுங்கள் உணவு தருகிறேன்” என்றான். 17 எனவே ஜனங்கள் தங்கள் ஆடு மாடுகளையும் குதிரைகளையும் மற்ற மிருகங்களையும் உணவுக்காக விற்றனர். யோசேப்பு அவற்றை வாங்கிக்கொண்டு உணவைக் கொடுத்தான்.
18 ஆனால் அடுத்த ஆண்டு அவர்களிடம் விற்க மிருகங்களும் இல்லை. எனவே, யோசேப்பிடம் ஜனங்கள் போய், “எங்களிடம் உணவு வாங்கப் பணம் இல்லை. எங்களது மிருகங்களோ உங்களிடம் உள்ளது. எங்களிடம் எதுவும் இல்லை. எங்கள் சரீரமும், நிலங்களும் மட்டுமே உள்ளது. 19 நீங்கள் பார்க்கும்போதே நாங்கள் மரித்துவிடுவோம். ஆனால் நீங்கள் உணவு கொடுத்தால் பார்வோன் மன்னருக்கு எங்கள் நிலங்களைக் கொடுப்போம். நாங்கள் அவரது அடிமைகளாக இருப்போம். விதை கொடுங்கள் விதைக்கிறோம். பிறகு நாங்கள் மரிக்காமல் உயிர் வாழ்வோம். நிலத்தில் மீண்டும் உணவு விளையும்” என்றனர்.
20 எனவே, யோசேப்பு எகிப்தில் உள்ள எல்லா நிலங்களையும் பார்வோனுக்காக வாங்கிவிட்டான். அனைவரும் தங்கள் நிலங்களை யோசேப்பிடம் விற்றுவிட்டார்கள், அவர்கள் பசியாய் இருந்ததால் இவ்வாறு செய்தார்கள். 21 எகிப்திலே, எல்லோரும் பார்வோன் மன்னனின் அடிமைகள் ஆனார்கள். 22 ஆசாரியர்களுக்கு உரிய நிலத்தை மட்டுமே யோசேப்பு வாங்கவில்லை. அவர்களின் உணவுக்கு ஆசாரியர்கள் தங்கள் நிலத்தை விற்கவேண்டிய தேவை ஏற்படவில்லை. ஏனெனில் மன்னன் தேவையானவற்றைச் சம்பளமாகக் கொடுத்து வந்தான். அதையே உணவு வாங்க வைத்துக்கொண்டனர்.
23 யோசேப்பு ஜனங்களிடம், “இப்போது நான் உங்கள் நிலத்தையும் உங்களையும் பார்வோனுக்காக வாங்கிவிட்டேன். எனவே விதை கொடுக்கிறேன். நீங்கள் அந்நிலங்களில் பயிர் செய்யுங்கள். 24 அறுவடைக் காலத்தில், நீங்கள் ஐந்தில் ஒரு பாகம் எங்களுக்குக் கொடுக்க வேண்டும். ஐந்தில் நான்கு பாகம் நீங்கள் வைத்துக்கொள்ளலாம். அதில் விதை வைத்திருந்து அடுத்த ஆண்டுக்குப் பயன்படுத்தலாம். இப்போது உங்கள் குழந்தைகளுக்கும் குடும்பத்துக்கும் உணவு கொடுக்கலாம்” என்றான்.
25 ஜனங்களோ, “எங்கள் உயிரைக் காப்பாற்றினீர்கள். நாங்கள் பார்வோனுக்கு அடிமையாக இருப்பதில் மகிழ்கிறோம்” என்றனர்.
26 எனவே, யோசேப்பு அப்போது ஒரு சட்டத்தை இயற்றினான். அது இன்றும் உள்ளது. அதன்படி நில வருவாயில் ஐந்தில் ஒரு பாகமானது பார்வோனுக்குரியது. பார்வோனுக்கு எல்லா நிலமும் சொந்தமாக இருக்கும். ஆசாரியர்களின் நிலம் மட்டுமே, பார்வோனுக்குச் சொந்தமாகவில்லை.
யூதத் தலைவர்களைப் பற்றிய எச்சரிக்கை
(மத்தேயு 16:5-12)
14 அவர்கள் படகில் போகும்போது, சீஷர்களிடம் ஒரே ஒரு அப்பம் மட்டுமே இருந்தது, அவர்கள் போதுமான அப்பங்களைக் கொண்டுவர மறந்துவிட்டார்கள். 15 அவர்களை இயேசு எச்சரித்தார். “கவனமாக இருங்கள். நீங்கள் பரிசேயருடைய புளித்த மாவைக் குறித்தும் ஏரோதின் புளித்த மாவைக் குறித்தும் எச்சரிக்கையாய் இருங்கள்” என்றார்.
16 இயேசுவின் சீஷர்கள் இதன் பொருளைப்பற்றித் தங்களுக்குள் விவாதம் செய்தார்கள். அவர்கள், “நம்மிடம் அப்பம் இல்லாததால்தான் இயேசு இவ்வாறு கூறுகிறார்” என்று முடிவு செய்தனர்.
17 இதுபற்றி இயேசுவும் அறிந்து கொண்டார். எனவே, “அப்பம் இல்லாததைப்பற்றி ஏன் விவாதித்துக் கொள்கிறீர்கள்? உங்களால் இன்னும் உண்மையைப் பார்க்கவோ, புரிந்துகொள்ளவோ முடியவில்லையே! 18 உங்களுக்குக் கண்கள் இருந்தும் காணமுடியாமல் இருக்கிறீர்களா? காதுகள் இருந்தும் கேட்கமுடியாமல் இருக்கிறீர்களா? நான் இதற்கு முன்னால் செய்தவற்றை நினைத்துப் பாருங்கள். நம்மிடம் போதுமான அப்பங்கள் இல்லாதபோது என்ன செய்தேன்? 19 ஐந்து அப்பங்களை ஐயாயிரம் மக்களுக்கு நான் பங்கிட்டுக் கொடுக்கவில்லையா? உண்டு மீதியான அப்பங்களை எத்தனைக் கூடைகளில் நிறைத்தீர்கள் என்று நினைத்துப் பாருங்கள்” என்றார்.
அதற்குச் சீஷர்கள், “நாங்கள் மீதியான உணவுப்பொருள்களை பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினோம்” என்றார்கள்.
20 மேலும் இயேசு, “நான் ஏழு அப்பங்களை நாலாயிரம் மக்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்ததை நினைத்துப் பாருங்கள். அப்போது எஞ்சிய உணவுப்பொருளை எத்தனைக் கூடைகளில் நிறைத்து வைத்தீர்கள்?” என்று கேட்டார்.
அதற்குச் சீஷர்கள், “அவற்றை ஏழு கூடைகளில் நிறைத்து வைத்தோம்” என்றனர்.
21 இயேசு அவர்களிடம், “நான் செய்தவற்றையெல்லாம் நினைவில் வைத்துள்ளீர்கள். ஆனால் இன்னமும் உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையா?” என்றார்.
2008 by World Bible Translation Center