Revised Common Lectionary (Complementary)
15 நல்லோரை கர்த்தர் பாதுகாக்கிறார்.
அவர்கள் ஜெபங்களை அவர் கேட்கிறார்.
16 கர்த்தர் தீயோருக்கு எதிரானவராயிருந்து
அவர்களை முற்றிலும் அழிக்கிறார்.
17 கர்த்தரிடம் ஜெபியுங்கள்.
அவர் உங்கள் விண்ணப்பங்களைக் கேட்பார்.
உங்கள் எல்லாத் தொல்லைகளிலிருந்தும் உங்களைக் காப்பார்.
18 சிலருக்குத் தொல்லைகள் மிகுதியாகும்பொழுது அவர்கள் பெருமையை விட்டொழிப்பர்.
கர்த்தர் அவர்களருகே இருந்து தாழ்மையான அந்த ஜனங்களைக் காக்கிறார்.
19 நல்லோருக்குத் தொல்லைகள் பல நேரிட்டாலும்
அவர்கள் தொல்லைகளிலிருந்து கர்த்தர் அவர்களை மீட்பார்.
20 அவர்கள் எலும்புகளில் ஒன்றும் முறிந்து போகாதபடி
கர்த்தர் அவற்றைப் பாதுகாப்பார்.
21 தீயோரைத் தொல்லைகள் கொல்லும்.
நல்லோரின் பகைவர்கள் அழிக்கப்படுவார்கள்.
22 தமது ஊழியர்களின் ஆத்துமாக்களை கர்த்தர் மீட்கிறார்.
அவரைச் சார்ந்திருக்கும் ஜனங்களை அழியவிடமாட்டார்.
10 ரூபன், காத், மனாசே கோத்திரத்தினரும் கீலேயாத் என்னும் இடத்திற்குச் சென்றார்கள். இந்த இடம் கானான் தேசத்தில் யோர்தான் நதிக்கு அருகே இருந்தது. அவ்விடத்தில் ஜனங்கள் ஓர் அழகிய பலிபீடத்தைக் கட்டினார்கள். 11 இந்த மூன்று கோத்திரங்களும் கட்டிய பலிபீடத்தைக் குறித்து சீலோவிலுள்ள பிற இஸ்ரவேலர் கேள்விப்பட்டனர். கானானின் எல்லையில் கீலேயாத் என்னுமிடத்தில் அப்பலிபீடம் இருந்தது என்பதை அறிந்தனர். அப்பலிபீடம் இஸ்ரவேலரின் நாட்டில் யோர்தான் நதிக்கருகே இருந்தது. 12 இம்மூன்று கோத்திரத்தினரிடமும் இஸ்ரவேல் ஜனங்கள் மிகுந்த கோபம் கொண்டனர். அவர்கள் ஒன்று சேர்ந்து, அவர்களுக்குகெதிராகப் போர் செய்ய முடிவெடுத்தனர்.
13 ரூபன், காத் மனாசே கோத்திரத்தினரிடமும் பேசுவதற்கு இஸ்ரவேலர் சில ஆட்களை அனுப்பினார்கள். ஆசாரியனாகிய எலெயாசாரின் குமாரன் பினெகாஸ் அவர்களுக்குத் தலைவனாகச் சென்றான். 14 அவர்கள் கோத்திரத்தின் தலைவர்கள் பத்து பேரை அவனோடே கூட அனுப்பினார்கள். சீலோவிலிருந்த இஸ்ரவேல் கோத்திரங்களிலிருந்து ஒவ்வொன்றிற்கும் ஒரு மனிதன் வீதம் சென்றான்.
15 எனவே பதினொருவர் கீலேயாத்திற்கு ரூபன், காத், மனாசே கோத்திரத்தினரிடம் பேசுவதற்காகச் சென்றனர். பதினொருவரும் அவர்களை நோக்கி: 16 “இஸ்ரவேலரின் தேவனுக்கெதிராக இக்காரியத்தை ஏன் செய்தீர்கள்? கர்த்தருக்கு எதிராக ஏன் திரும்பினீர்கள்? உங்களுக்காக ஏன் ஒரு பலிபீடத்தைக் கட்டினீர்கள்? இது தேவனின் போதனைக்கு எதிரானது என்பதை நீங்கள் அறிவீர்கள்! 17 பேயோரில் என்ன நேர்ந்தது என்பதை நினைத்துப்பாருங்கள். அப்பாவத்தால் நாம் இன்றும் துன்புறுகிறோம். அப்பெரும் பாவத்தால் இஸ்ரவேலரில் பலர் நோயுறுமாறு தேவன் செய்தார். அந்நோயால் இன்றும் நாம் துன்புறுகிறோம், 18 இப்போது நீங்களும் அதையே செய்கிறீர்கள்! கர்த்தருக்கு எதிராகத் திரும்புகிறீர்கள்! கர்த்தரை பின்பற்ற மறுப்பீர்களா? நீங்கள் செய்வதை நிறுத்தாவிட்டால், கர்த்தர் இஸ்ரவேல் ஜனம் முழுவதின் மேலும் கோபம்கொள்வார்.
19 “உங்கள் நிலம் ஆராதனைக்குச் சிறந்ததல்ல வென்றால், எங்கள் நிலத்திற்குள் வாருங்கள். கர்த்தருடைய கூடாரம் எங்கள் நிலத்தில் உள்ளது. எங்கள் நிலத்தில் சில பகுதிகளை எடுத்துக்கொண்டு இங்கு வாழலாம். ஆனால் கர்த்தருக்கு எதிராகத் திரும்பாதீர்கள். இன்னொரு பலிபீடம் கட்டாதீர்கள். ஆசரிப்புக் கூடாரத்தினருகே கர்த்தருடைய பலிபீடம் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ளது.
20 “சேராவின் குமாரனாகிய ஆகான் என்ற மனிதனை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். அழிக்கப் படவேண்டிய பொருட்களைப் பற்றிய கட்டளைக்குக் கீழ்ப்படிய அவன் மறுத்தான். அந்த ஒரு மனிதன் தேவனின் கட்டளையை மீறினான், ஆனால் இஸ்ரவேலர் எல்லோரும் தண்டிக்கப்பட்டனர். ஆகான் தன் பாவத்திற்காக மரித்தான். ஆனால் மற்றும் பலரும் மரிக்க நேரிட்டது” என்று எல்லா இஸ்ரவேலரும் உங்களிடம் கேட்கிறார்கள் என்றனர்.
11 நாம் மிக முக்கியமான காலத்தில் வாழ்ந்துகொண்டிருப்பதால் இவற்றைக் கூறுகிறேன். நீங்கள் தூக்கத்திலிருந்து எழ வேண்டிய நேரம் இதுதான். நாம் முதலில் நம்பியதைக் காட்டிலும் இரட்சிப்பின் காலம் நெருங்கிவிட்டது. 12 “இரவு” ஏறக்குறைய முடிந்து போனது. “பகல்” அநேகமாக முளைக்கத் தொடங்கி விட்டது. எனவே இருட்டுக்குச் சொந்தமான செயல்களை விட்டுவிடுவோம். வெளிச்சத்தின் ஆயுதங்களை அணிந்துகொள்வோம். 13 பகலுக்குரியவர்கள் செய்யத்தக்க செயல்களைச் சீராய் நாம் செய்வோம். களியாட்டமும், குடிவெறியும், வேசித்தனமும், காமவிகாரமும், வாக்குவாதமும், பொறாமையும் உள்ளவர்களாக நாம் இருக்கக் கூடாது. 14 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையே ஆடையாக அணிந்துகொள்ளுங்கள். உங்கள் பாவ ஆசைகளைப் பூர்த்தி செய்துகொள்வது பற்றியும் தீய காரியங்களை செய்வது பற்றியும் யோசிக்காதீர்கள்.
2008 by World Bible Translation Center