Revised Common Lectionary (Complementary)
[a] தாவீதின் வேஷத்தைக் கண்டு அபிமெலேக்கு அவனைத் துரத்தியபோது தாவீது பாடியது. இவ்வாறு தாவீது அவனை விட்டுப் பிரிந்தான்.
34 நான் எந்த காலத்திலும் கர்த்தரை ஸ்தோத்தரிப்பேன்.
என் உதடுகள் எப்போதும் அவரைத் துதிக்கும்.
2 தாழ்மையான ஜனங்களே, செவிக்கொடுத்து மகிழுங்கள்.
என் ஆத்துமா கர்த்தரைக் குறித்துப் பெருமைகொள்ளும்.
3 தேவனுடைய மேன்மையை எனக்குக் கூறுங்கள்.
அவரது நாமத்தை என்னோடு சேர்ந்து துதியுங்கள்.
4 உதவிவேண்டி தேவனிடம் போனேன்.
அவர் கேட்டார், நான் அஞ்சிய எல்லாக் காரியங்களிலிருந்தும் அவர் என்னை மீட்டார்.
5 உதவிக்காக தேவனை நாடுங்கள்.
அவர் உங்களை ஏற்றுக்கொள்ளுவார். வெட்க மடையாதீர்கள்.
6 இந்த ஏழை உதவிக்காக கர்த்தரைக் கூப்பிட்டான்.
கர்த்தர் எனக்குச் செவிகொடுத்தார்.
என் தொல்லைகளிலிருந்து என்னை மீட்டார்.
7 கர்த்தரை நம்புவோரைச் சுற்றிலும் கர்த்தருடைய தூதன் ஒரு பாளையமிடுகிறான்.
கர்த்தருடைய தூதன் அவர்களைக் காத்து அவர்களுடைய துன்பங்களிலிருந்து விடுதலை அளிக்கிறான்.
8 கர்த்தரை நல்லவர் என்று ருசித்து அறியுங்கள்.
கர்த்தரைச் சார்ந்து வாழும் மனிதன் உண்மையாகவே சந்தோஷமடைவான்.
தாவீது ராஜாவின் மரணம்
2 தாவீது மரித்துப்போவதற்குரிய நேரம் வந்தது. எனவே அவன் சாலொமோனிடம் சொல்லும்போது 2 “நான் எல்லா மனிதரையும் போலவே மரிக்க இருக்கிறேன். ஆனால் நீ மேலும் பலத்தில் வளர்ந்து மனிதனாக இரு. 3 இப்போது, உனது தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கவனமாகக் கீழ்ப்படிந்து நட. நீ அனைத்து சட்டங்களுக்கும், கட்டளைகளுக்கும், முடிவுகளுக்கும் உடன்படிக்கைகளுக்கும் கீழ்ப்படி. மோசேயின் சட்டங்களில் எழுதப்பட்ட அனைத்திற்கும் கீழ்ப்படிந்திரு. நீ இவற்றைச் செய்தால், பின்னர் நீ செய்கிற அனைத்திலும் நீ போகிற அனைத்து திட்டங்களிலும் வெற்றிபெற்றவன் ஆவாய். 4 நீ கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தால், கர்த்தர் தன் வாக்குறுதியை காப்பாற்றுவார். கர்த்தர் என்னிடம், ‘நான் சொல்லிய வழிகளில் உன் பிள்ளைகள் கவனமாகவும் மனதுக்கு உண்மையாகவும் நடந்தால், பின்னர் இஸ்ரவேலரின் ராஜா உன் குடும்பத்தில் உள்ள ஒருவனாகவே இருப்பான்’ என்றார்” என்றான்.
5 தாவீது மேலும், “செருயாவின் குமாரனான யோவாப் எனக்கு என்ன செய்தான் என்பதை நினைத்துப் பார். அவன் இஸ்ரவேலரின் படையிலுள்ள இரண்டு தளபதிகளைக் கொன்றான். அவன் நேரின் குமாரனான அப்னேரையும் ஏத்தேரின் குமாரனான அமாசாவையும் கொன்றான். அவன் இவர்களைச் சமாதானக் காலத்தின்போது கொன்றான் என்பதை நினைத்துப்பார். இம்மனிதர்களின் இரத்தமானது அவனது அரைக்கச்சையிலும் கால்களிலுள்ள பாதரட்சைகளிலும் படிந்தது. நான் அவனைத் தண்டித்திருக்க வேண்டும். 6 ஆனால் இப்போது நீ தான் ராஜா. எனவே நீ விரும்புகிற வழியில் அவனைத் தண்டிப்பதுதான் மிகப் புத்திசாலித்தனமானது. ஆனால் அவன் கொல்லப்படவேண்டியவன் என்பதில் மட்டும் நீ உறுதியாக இருக்கவேண்டும். அவனைத் தன் முதுமையில் சமாதானத்தோடு மரிக்குமாறு விட்டுவிடாதே!
7 “கீலேயாத்தியனான பர்சிலாயின் பிள்ளைகளுக்கு இரக்கம் காட்டு. அவர்களை உனது நண்பர்களாக்கி உனது மேஜையிலேயே உணவு உண்ணச் செய். நான் உன் சகோதரனாகிய அப்சலோமிடமிருந்து ஓடிப்போகும்போது அவர்கள் எனக்கு உதவி செய்தார்கள்.
8 “கேராவின் குமாரனான சீமேயி இன்னும் இங்கே தான் இருக்கிறான் என்பதை நினைத்துக்கொள். அவன் பகூரிமின் ஊரைச் சார்ந்த பென்யமீன் கோத்திரத்திலிருந்து வந்தவன். நான் மக்னாயீமுக்குப் போகும்போது அவன் என்னை மோசமாக சபித்தான். ஆனாலும் நான் யோர்தானுக்குப் போனதும் அவன் என்னை வரவேற்றதால் நான் உன்னை வாளால் கொல்வதில்லை என்று கர்த்தர் மேல் வாக்குறுதிக் கொடுத்துவிட்டேன். 9 எனினும், அவனை குற்றமற்றவன் என்று எண்ணி நீ தண்டிக்காமல் விட்டுவிடாதே. அவனை என்ன செய்யவேண்டும் என்று உனக்குத் தெரியும். அவனையும் முதியவயதில் சமாதானத்தோடு மரிக்குமாறு விட்டுவிடாதே” என்றான்.
தேவனிடம் கேட்டுப்பெறுதல்
(லூக்கா 11:9-13)
7 “தொடர்ந்து கேளுங்கள், தேவன் கொடுப்பார். தொடர்ந்து தேடுங்கள், கிடைக்கும். தொடர்ந்து தட்டுங்கள், திறக்கப்படும். 8 ஆம், ஒருவன் தொடர்ந்து கேட்டால், அவன் அதைப் பெறுவான். ஒருவன் தொடர்ந்து தேடினால், அவன் கண்டடைவான். ஒருவன் தொடர்ந்து தட்டினால், கதவு அவனுக்காகத் திறக்கப்படும்.
9 “உங்களில் யாருக்கேனும் குமாரன் உண்டா? உங்கள் குமாரன் அப்பத்தைக் கேட்டால், அவனுக்குக் கல்லைத் தருவீர்களா? இல்லை. 10 அல்லது, உங்கள் குமாரன் மீனைக் கேட்டால், அவனுக்குப் பாம்பைக் கொடுப்பீர்களா? இல்லை. 11 நீங்கள் தேவனைப்போல அல்லாமல், பொல்லாதவர்களாய் இருக்கும் உங்களுக்கே குழந்தைகளுக்கு நற்பொருட்களைத் தரத்தெரியும்போது, பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவும் தம்மிடம் கேட்கிறவர்களுக்கு நன்மையானவற்றைக் கொடுப்பார் அன்றோ?
2008 by World Bible Translation Center