Revised Common Lectionary (Complementary)
இராகத் தலைவனுக்கு, கர்த்தருடைய ஊழியனாகிய தாவீது கொடுத்த பாடல்.
36 தீயவன் ஒருவன் தனக்குள், “நான் தேவனுக்கு பயப்படவோ, அவரை மதிக்கவோமாட்டேன்” எனக் கூறும்போது
அவன் மிகத்தீமையான காரியத்தைச் செய்கிறான்.
2 அம்மனிதன் தனக்குத்தானே பொய் பேசுகிறான்.
அம்மனிதன் தனது சொந்த தவறுகளைப் பார்ப்பதில்லை.
எனவே அவன் மன்னிப்பும் கேட்பதில்லை.
3 அவன் வார்த்தைகள் பயனற்ற பொய்களாகும்.
அவன் ஞானம் பெறவுமில்லை, நல்லதைச் செய்யக் கற்றுக்கொள்ளவுமில்லை.
4 இரவில், அவன் தீய செயல்களைத் திட்டமிடுகிறான்.
எழுந்து, நல்லவற்றைச் செய்வதில்லை.
ஆனால் தீயவற்றைச் செய்வதற்கு அவன் மறுப்பதில்லை.
5 கர்த்தாவே, உமது உண்மை அன்பு வானத்திலும் உயர்ந்தது.
உம் நேர்மை மேகங்களிலும் உயர்ந்தது.
6 கர்த்தாவே, உமது நன்மை உயரமான மலைகளைக் காட்டிலும் உயர்ந்தது.
உமது நியாயம் ஆழமான சமுத்திரத்திலும் ஆழமானது.
கர்த்தாவே, நீர் மனிதனையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர்.
7 உமது அன்பான இரக்கத்தைக் காட்டிலும் விலையுயர்ந்தது எதுவுமில்லை.
ஜனங்கள் உம்மிடத்தில் அடைக்கலம் புகுகின்றனர்.
உமது கருணையான பாதுகாப்பில் மகிழ்கிறார்கள்.
8 கர்த்தாவே, உம் வீட்டின் நற்காரியங்களால் அவர்கள் புதுவலிமை பெறுகிறார்கள்.
அற்புதமான நதியிலிருந்து அவர்களைப் பருகப்பண்ணுவீர்.
9 கர்த்தாவே, ஜீவஊற்று உம்மிடமிருந்து புறப்படுகிறது.
உமது வெளிச்சம் நாங்கள் ஒளியைக் காண உதவுகிறது.
10 கர்த்தாவே, உம்மை உண்மையில் அறியும் ஜனங்களைத் தொடர்ந்து நேசியும்.
உமக்கு உண்மையாயிருக்கிற அந்த ஜனங்களுக்கு உமது நன்மை எப்போதும் இருக்கட்டும்.
11 கர்த்தாவே, பெருமை நிரம்பியோர் என்னை அகப்படுத்தாதிருக்கட்டும்.
தீயவர்கள் என்னைப் பிடிக்கவிடாதிரும்.
12 “துன்மார்க்கர் இங்கே விழுந்து நசுக்கப்பட்டனர்.
அவர்கள் மீண்டும் எழுந்திருப்பதில்லை” என்பதை அவர்கள் கல்லறைகளில் பொறித்து வையுங்கள்.
தான் யாரென்று யோசேப்பு சொல்கிறான்
45 யோசேப்பு அதிக நேரம் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. அங்கிருந்தவர்களின் முன்னால் அவன் உள்ளம் உடைந்து கண்ணீர் சிந்தினான். யோசேப்பு “எல்லோரையும் வெளியே போகச்சொல்” என்று கட்டளையிட்டான். அனைவரும் வெளியேறினர். அச்சகோதரர்கள் மட்டுமே அங்கிருந்தார்கள். பிறகு அவன் தன்னை யாரென்று சொன்னான். 2 யோசேப்பு தொடர்ந்து அழுதான். அந்த வீட்டில் உள்ள எகிப்தியர்கள் அனைவரும் அதைக் கேட்டனர். 3 யோசேப்பு தனது சகோதரர்களிடம், “நான் உங்களின் சகோதரன் யோசேப்பு. என் தந்தை உயிரோடு நலமாக இருக்கிறாரா?” என்று கேட்டான். சகோதரர்கள் அவனுக்குப் பதில் சொல்லவில்லை. அவர்கள் குழப்பமும் பயமும் கொண்டனர்.
4 யோசேப்பு மீண்டும், “என்னருகே வாருங்கள். கெஞ்சி கேட்கிறேன், வாருங்கள்” என்றான். சகோதரர்கள் அவனருகே வந்தனர். அவர்களிடம், “நான் உங்கள் சகோதரன் யோசேப்பு. எகிப்திய வியாபாரிகளிடம் உங்களால் விற்கப்பட்டவன். 5 இப்போது அதற்காக வருத்தப்படாதீர்கள். நீங்கள் செய்தவற்றுக்காக உங்களையே கோபித்துக்கொள்ளாதீர்கள். இங்கே நான் வரவேண்டும் என்பது தேவனின் திட்டம். உங்கள் வாழ்க்கையைக் காப்பாற்றவே இங்கே இருக்கிறேன். 6 இந்தப் பஞ்சம் இரண்டு ஆண்டுகளாக இருக்கின்றன. இன்னும் ஐந்து ஆண்டுகள் இருக்கும். 7 ஆகவே தேவன் என்னை உங்களுக்கு முன்னதாக அனுப்பி இருக்கிறார். அதனால் உங்களை காப்பாற்றமுடியும். 8 என்னை இங்கே அனுப்பியது உங்களது தவறு அல்ல. இது தேவனின் திட்டம். பார்வோன் மன்னருக்கே தந்தை போன்று நான் இங்கே இருக்கிறேன். நான் அரண்மனைக்கும் இந்த நாட்டிற்கும் ஆளுநராக இருக்கிறேன்” என்றான்.
இஸ்ரவேல் எகிப்திற்கு அழைக்கப்படுதல்
9 யோசேப்பு அவர்களிடம், “வேகமாக என் தந்தையிடம் போங்கள். அவரது குமாரன் யோசேப்பு இந்தச் செய்தியை அனுப்பியதாகக் கூறுங்கள்: ‘தேவன் என்னை எகிப்தின் ஆளுநராக ஆக்கினார். எனவே என்னிடம் வாருங்கள். காத்திருக்க வேண்டாம். இப்போதே வாருங்கள். 10 என்னருகில் கோசேன் நிலப்பகுதியில் வாழலாம். நீங்களும், உங்கள் பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும், மிருகங்களும் இங்கே வரவேற்கப்படுகிறீர்கள். 11 இனிவரும் ஐந்தாண்டு பஞ்சத்திலும் உங்கள் அனைவரையும் பாதுகாத்துக்கொள்வேன். எனவே, நீங்களும் உங்கள் குடும்பமும் உங்களுக்குரிய எதையும் இழக்கமாட்டீர்கள்’ என்று கூறுங்கள்” என்றான்.
12 யோசேப்பு தன் சகோதரர்களிடம், “நன்றாக உறுதி செய்துகொள்ளுங்கள். நான் தான் யோசேப்பு. உங்கள் சகோதரனாகிய எனது வாய்தான் பேசுகிறது என்பதை நீங்களும் பென்யமீனும் கண்களால் காண்கிறீர்கள். 13 எகிப்திலே எனக்குள்ள மரியாதையையும் இங்கே நீங்கள் பார்க்கின்றவற்றையும் தந்தையிடம் சொல்லுங்கள். வேகமாகப் போய் தந்தையை அழைத்து வாருங்கள்” என்று சொன்னான். 14 பிறகு தன் தம்பி பென்யமீனை அணைத்துக்கொண்டான். இருவரும் அழுதார்கள். 15 பிறகு அவன் சகோதரர்கள் அனைவரையும் முத்தமிட்டான். அவர்களுக்காக அழுதான். இதற்குப் பிறகு அவர்கள் அவனோடு பேசத் தொடங்கினார்கள்.
9 “இந்தத் தந்தையர் யோசேப்பைக் (அவர்களது இளைய சகோதரன்) கண்டு பொறாமை கொண்டனர். எகிப்தில் ஒரு அடிமையாக யோசேப்பை அவர்கள் விற்றனர். ஆனால் தேவன் யோசேப்போடு இருந்தார். 10 யோசேப்புக்கு அங்கு பல தொல்லைகள் நேர்ந்தாலும், தேவன் அத்தொல்லைகள் எல்லாவற்றிலிருந்தும் அவரைக் காப்பாற்றினார். பார்வோன் எகிப்தின் ராஜாவாக இருந்தான். அவன் யோசேப்புக்கு தேவன் கொடுத்த ஞானத்தைக் கண்டு அவரை விரும்பவும் நேசிக்கவும் செய்தான். எகிப்தின் ஆளுநர் வேலையைப் பார்வோன் யோசேப்புக்குக் கொடுத்தான். பார்வோனின் வீட்டிலுள்ள எல்லா மக்களையும் ஆளுவதற்கும் யோசேப்பை பார்வோன் அனுமதித்தான். 11 ஆனால் எகிப்திலும், கானானிலுமிருந்த எல்லா நிலங்களும் வறண்டு போயின. அங்கு உணவு தானியங்கள் வளர முடியாதபடிக்கு நாடு வறட்சியுற்றது. இது மக்களுக்குப் பெரும் துன்பத்தை விளைவித்தது. நமது தந்தையருக்கு உண்பதற்கு எதுவும் அகப்படவில்லை.
12 “ஆனால் எகிப்தில் உணவு சேமித்து வைக்கப்பட்டிருப்பதை யாக்கோபு கேள்விப்பட்டார். எனவே அவர் நமது தந்தையரை அங்கு அனுப்பினார். (இது எகிப்துக்கு அவர்களின் முதற்பயணமாயிருந்தது.) 13 பின்னர், அவர்கள் இரண்டாம் முறையாகவும் அங்கு சென்றார்கள். இந்தத் தடவை யோசேப்பு தன் சகோதரர்களிடம் தான் யாரென்பதைக் கூறினான். பார்வோனுக்கும் யோசேப்பின் குடும்பத்தைக் குறித்துத் தெரிய வந்தது. 14 பின் யோசேப்பு தன் தந்தையாகிய யாக்கோபை எகிப்துக்கு அழைத்து வருவதற்கென்று சில மனிதர்களை அனுப்பினார். தன் எல்லா உறவினர்களையும் கூட (அங்கு மொத்தம் 75 பேர்) அழைத்தார். 15 எனவே யாக்கோபு எகிப்திற்குப் போனார். யாக்கோபும் நமது தந்தையரும் அவர்களின் மரணம் மட்டும் அங்கு வாழ்ந்தனர். 16 பின்னர் அவர்கள் சரீரங்கள் சீகேமுக்கு அனுப்பப்பட்டன. அவர்கள் அங்கு ஒரு கல்லறையில் வைக்கப்பட்டனர். (வெள்ளியைக் கொடுத்து ஏமோரின் குமாரர்களிடமிருந்து சீகேமில் ஆபிரகாம் வாங்கிய கல்லறை அது.)
2008 by World Bible Translation Center