Revised Common Lectionary (Complementary)
15 நல்லோரை கர்த்தர் பாதுகாக்கிறார்.
அவர்கள் ஜெபங்களை அவர் கேட்கிறார்.
16 கர்த்தர் தீயோருக்கு எதிரானவராயிருந்து
அவர்களை முற்றிலும் அழிக்கிறார்.
17 கர்த்தரிடம் ஜெபியுங்கள்.
அவர் உங்கள் விண்ணப்பங்களைக் கேட்பார்.
உங்கள் எல்லாத் தொல்லைகளிலிருந்தும் உங்களைக் காப்பார்.
18 சிலருக்குத் தொல்லைகள் மிகுதியாகும்பொழுது அவர்கள் பெருமையை விட்டொழிப்பர்.
கர்த்தர் அவர்களருகே இருந்து தாழ்மையான அந்த ஜனங்களைக் காக்கிறார்.
19 நல்லோருக்குத் தொல்லைகள் பல நேரிட்டாலும்
அவர்கள் தொல்லைகளிலிருந்து கர்த்தர் அவர்களை மீட்பார்.
20 அவர்கள் எலும்புகளில் ஒன்றும் முறிந்து போகாதபடி
கர்த்தர் அவற்றைப் பாதுகாப்பார்.
21 தீயோரைத் தொல்லைகள் கொல்லும்.
நல்லோரின் பகைவர்கள் அழிக்கப்படுவார்கள்.
22 தமது ஊழியர்களின் ஆத்துமாக்களை கர்த்தர் மீட்கிறார்.
அவரைச் சார்ந்திருக்கும் ஜனங்களை அழியவிடமாட்டார்.
21 ரூபன், காத் மனாசே கோத்திரத்தினர், அந்தப் பதினொரு ஆட்களுக்கும் பதிலளித்தனர். அவர்கள், 22 “கர்த்தர் எங்கள் தேவன்! கர்த்தரே எங்கள் தேவன் என்று மீண்டும் சொல்கிறோம்! நாங்கள் இதைச் செய்த காரணத்தையும் தேவன் அறிவார். நீங்களும் அதை அறிய வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் செய்ததை நீங்கள் நியாயந்தீர்க்கலாம். நாங்கள் தவறேனும் செய்ததாக நீங்கள் நம்பினால், நீங்கள் எங்களைக் கொல்லலாம். 23 நாங்கள் தேவனின் சட்டங்களை மீறினால், கர்த்தரே எங்களைத் தண்டிக்கட்டும். 24 தகன பலி, தானிய காணிக்கை, சமாதான பலி ஆகியவற்றைக் கொடுப்பதற்காக நாங்கள் இந்தப் பலிபீடத்தைக் கட்டியதாக நீங்கள் நினைக்கிறீர்களா? இல்லை! அதற்காக நாங்கள் இதைக் கட்டவில்லை. நாங்கள் ஏன் இந்தப் பலிபீடத்தைக் கட்டினோம்? உங்கள் தேசத்தின் ஜனங்கள் எதிர்காலத்தில் எங்களை இஸ்ரவேலின் ஒரே பகுதியாக ஏற்றுக் கொள்ளமாட்டார்களோ என்று எண்ணி பயந்தோம். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நாங்கள் ஆராதிக்கக் கூடாது என்று உங்கள் ஜனங்கள் கூறுவார்கள் என நினைத்து பயந்தோம். 25 யோர்தான் நதிக்கு மறு பக்கத்தில் தேவன் எங்களுக்கு நிலத்தைக் கொடுத்தார். யோர்தான் நதி நம்மைப் பிரிக்கிறது. உங்கள் பிள்ளைகள் வளர்ந்து தேசத்தை ஆளும்போது, நாங்களும் உங்களைச் சார்ந்தவர்களே என்று அவர்கள் எண்ணமாட்டார்கள். அவர்கள் எங்களை நோக்கி, ‘ரூபன், காத் ஜனங்கள் இஸ்ரவேல் ஜனங்கள் அல்ல!’ என்று சொல்லக்கூடும். அப்போது எங்கள் பிள்ளைகள் கர்த்தரை ஆராதிக்க உங்கள் பிள்ளைகள் தடை செய்யக்கூடும்.
26 “எனவே இப்பலிபீடத்தைக் கட்டமுடிவெடுத்தோம். தகன பலிகளுக்கோ, மற்ற பலிகளுக்கோ இதைப் பயன்படுத்த நினைக்கவில்லை. 27 நீங்கள் ஆராதிக்கும் தேவனையே நாங்களும் ஆராதிக்கிறோம் என்பதை எங்கள் ஜனங்களுக்கு உணர்த்துவதே இப்பலிபீடத்தைக் கட்டியதன் உண்மையான காரணமாகும். கர்த்தரை நாம் ஆராதிக்கிறோம் என்பதற்குச் சான்றாக உங்களுக்கும் எங்களுக்கும், எதிர்காலத்தில் நம் பிள்ளைகளுக்கும், இப்பலிபீடம் அமையும். நமது பலிகள், தானிய காணிக்கைகள், சமாதான பலிகள் ஆகியவற்றை கர்த்தருக்கே கொடுப்போம். உங்கள் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும்போது நாங்களும் உங்களைப் போலவே இஸ்ரவேல் ஜனங்கள் என்பதை அறிந்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறோம். 28 வருங்காலத்தில், உங்கள் பிள்ளைகள் எங்கள் பிள்ளைகளைப் பார்த்து. அவர்கள் இஸ்ரவேலரல்ல என்று கூறினால், அப்போது எங்கள் பிள்ளைகள், ‘பாருங்கள்! எங்கள் பிதாக்கள் ஒரு பலிபீடத்தைக் கட்டியிருக்கிறார்கள். பரிசுத்த கூடாரத்தின் அருகேயுள்ள கர்த்தருடைய பலிபீடத்தைப் போலவே இப்பலிபீடமும் அமைந்துள்ளது. நாங்கள் இப்பலிபீடத்தைப் பலி செலுத்துவதற்குப் பயன்படுத்துவதில்லை. நாங்களும் இஸ்ரவேலரில் ஒரு பங்குடையவர்கள் என்பதற்கு இது சான்றாகும்!’ என்று சொல்லமுடியும்.
29 “உண்மையாகவே, கர்த்தருக்கு எதிராக இருப்பதற்கு எங்களுக்கு விருப்பமில்லை. அவரைப் பின்பற்றுவதை நிறுத்தும் விருப்பமும் இப்போது எங்களுக்குக் கிடையாது. பரிசுத்த கூடாரத்தின் முன்னே இருப்பது மட்டுமே உண்மையான பலிபீடம் என்பதை நாங்கள் அறிவோம். அப்பலிபீடம் நமது தேவனாகிய கர்த்தருக்கு உரியது” என்றார்கள்.
30 ரூபன், காத், மனாசே கோத்திரத்தினர் கூறியவற்றை ஆசாரியனாகிய பினெகாசும் அவனோடு வந்த தலைவர்களும் கேட்டார்கள். அந்த ஜனங்கள் உண்மையே கூறுகிறார்கள் என்று அவர்கள் திருப்தி அடைந்தார்கள். 31 எனவே ஆசாரியனாகிய பினெகாஸ், “கர்த்தர் நம்மோடிருக்கிறார் என்பதை அறிகிறோம். அவருக்கு எதிராக நீங்கள் திரும்பவில்லை என்பதையும் நாங்கள் அறிகிறோம். கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களைக் தண்டிக்கமாட்டார், என்பதால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்கள்.
32 பிறகு பினெகாசும், தலைவர்களும் அங்கிருந்து தங்கள் இருப்பிடத்திற்குத் திரும்பிச் சென்றனர். ரூபன், காத் ஜனங்களைக் கீலேயாத் தேசத்தில் விட்டு கானானுக்குப் போனார்கள் இஸ்ரவேல் ஜனங்களிடம் அவர்கள் திரும்பிப் போய் நடந்தவற்றைக் கூறினார்கள். 33 இஸ்ரவேல் ஜனங்களும் திருப்தி கொண்டனர். அவர்கள் சந்தோஷமடைந்து தேவனுக்கு நன்றி தெரிவித்தனர். ரூபன், காத், மனாசே ஆகிய ஜனங்களுக்கெதிராகப் போர் செய்ய வேண்டாமென முடிவெடுத்தனர். அந்த ஜனங்கள் வாழும் இடத்தை அழிக்க வேண்டாம் எனவும் முடிவு செய்தனர்.
34 ரூபன், காத், ஜனங்கள் பலிபீடத்திற்கு ஒரு பெயரிட்டனர். அவர்கள் அதை, “கர்த்தரே தேவன் என்ற எங்கள் நம்பிக்கைக்கு இது சான்று” என்று அழைத்தார்கள்.
தொடர்ந்து கேட்டல்
(மத்தேயு 7:7-11)
5-6 பின்பு இயேசு அவர்களை நோக்கி, “உங்களில் ஒருவன் உங்கள் நண்பனின் வீட்டுக்கு இரவில் வெகு நேரம் கழித்துச் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் அவனை நோக்கி, ‘இந்த ஊருக்குள் என் நண்பன் ஒருவன் என்னைச் சந்திக்க வந்திருக்கிறான். ஆனால் அவனுக்கு உண்பதற்காகக் கொடுக்க என்னிடம் ஒன்றும் இல்லை. தயவுசெய்து மூன்று அப்பங்களைக் கொடுங்கள்’ என்கிறீர்கள். 7 வீட்டின் உள்ளிருக்கும் உங்கள் நண்பன் பதிலாக, ‘போய்விடுங்கள்! என்னைத் தொல்லைப்படுத்தாதீர்கள். கதவு ஏற்கெனவே மூடப்பட்டிருக்கிறது. என் குழந்தைகளும், நானும் படுக்கையில் படுத்திருக்கிறோம். நான் எழுந்து உங்களுக்கு இப்போது அப்பத்தைக் கொடுக்கமுடியாது’ என்கிறான். 8 உங்கள் நட்பு ஒருவேளை அவன் எழுந்து அப்பத்தை எடுத்துக்கொடுப்பதற்குப் போதுமானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தால் அவன் கண்டிப்பாக எடுத்து உங்களுக்கு வேண்டியதைக் கொடுப்பான், என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். 9 எனவே, நான் உங்களுக்குச் சொல்வதாவது, தொடர்ந்து கேட்டுக்கொண்டிருங்கள். தேவன் உங்களுக்குக் கொடுப்பார். தேடிக் கொண்டே இருங்கள். நீங்கள் தேடியதைக் கண்டடைவீர்கள். தொடர்ந்து தட்டிக்கொண்டே இருங்கள். கதவு உங்களுக்காகத் திறக்கப்படும். 10 ஆம், ஒரு மனிதன் தொடர்ந்து கேட்டால் அவன் பெற்றுக்கொள்வான். ஒரு மனிதன் தொடர்ந்து தேடினால் அவன் தேடியதை அடைவான். ஒரு மனிதன் தொடர்ந்து தட்டினால் கதவு அவனுக்காகத் திறக்கப்படும். 11 உங்களில் யாருக்காவது மகன் இருக்கிறானா? உங்கள் மகன் உங்களிடம் மீனைக் கேட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? எந்தத் தந்தையாவது தன் மகனுக்கு பாம்பைக் கொடுப்பானா? இல்லை. அவனுக்கு மீனைக் கொடுப்பீர்கள். 12 உங்கள் மகன் முட்டையைக் கேட்டால் அவனுக்குத் தேளைக் கொடுப்பீர்களா? இல்லை. 13 நீங்கள் பொல்லாதவர்கள். ஆனால் உங்கள் பிள்ளைகளுக்கு நல்லவற்றைக் கொடுக்கவேண்டுமென்பதை அறிவீர்கள். எனவே தன்னிடம் கேட்கின்ற மக்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுக்க வேண்டுமென்பதை பரலோகப் பிதா நிச்சயமாக அறிவார்” என்றார்.
2008 by World Bible Translation Center