Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 107:1-3

புத்தகம் 5

107 கர்த்தர் நல்லவர், எனவே அவருக்கு நன்றி கூறுங்கள்!
    அவரது அன்பு என்றென்றைக்கும் உள்ளது!
கர்த்தரால் மீட்கப்பட்ட ஒவ்வொரு மனிதனும் இதைத்தான் சொல்லவேண்டும்.
    கர்த்தர் பகைவரிடமிருந்து அவர்களைக் காப்பாற்றினார்.
கர்த்தர் அவரது ஜனங்களைப் பல்வேறு வித்தியாசமான நாடுகளிலுமிருந்து ஒருமித்துக் கூடும்படிச் செய்தார்.
    அவர்களைக் கிழக்கிலும் மேற்கிலுமிருந்தும் வடக்கிலும் தெற்கிலுமிருந்தும் வரச்செய்தார்.

சங்கீதம் 107:33-43

33 தேவன் நதிகளைப் பாலைவனமாக்கினார்.
    நீரூற்றுக்கள் பெருக்கெடுப்பதை தேவன் நிறுத்தினார்.
34 தேவன் வளமிக்க தேசத்தை மாற்றினார்.
    அது பயனற்ற உப்பு நிலமாக மாறிற்று. ஏனெனில் அங்குத் தீயோர் வாழ்ந்தனர்.
35 தேவன் பாலைவனத்தை மாற்றினார்.
    அது குளங்களுள்ள நிலம் ஆயிற்று.
    தேவன் உலர்ந்த நிலத்திலிருந்து நீரூற்றுக்களில் தண்ணீர் புறப்படச் செய்தார்.
36 தேவன் பசியுள்ள ஜனங்களை அந்த நல்ல தேசத்திற்கு வழிநடத்தினார்.
    அவர்கள் அங்கு வாழ ஒரு நகரத்தை அமைத்தார்கள்.
37 அவர்கள் வயல்களில் விதைகளை நட்டார்கள்.
    அவர்கள் வயல்களில் திராட்சைகளை நட்டார்கள்.
    அவர்கள் நல்ல அறுவடை செய்தார்கள்.
38 தேவன் அந்த ஜனங்களை ஆசீர்வதித்தார்.
    அவர்கள் குடும்பங்கள் பெருகின. அவர்களுக்குப் பற்பல மிருகங்கள் இருந்தன.

39 திடீரென ஏற்பட்ட பேரிழப்பினாலும், துன்பங்களினாலும்,
    அவர்கள் குடும்பங்கள் குறுகி பெலவீனமாயின.
40 தேவன் அவர்கள் தலைவர்களை அவமானப்படுத்தி, வெட்கப்படச் செய்தார்.
    பாதைகளற்ற பாலைவனத்தின் வழியாக அவர்கள் அலையும்படி தேவன் செய்தார்.
41 பின்பு தேவன் அந்த ஏழை ஜனங்களை அவர்களது துயரங்களிலிருந்து மீட்டார்.
    இப்போது அவர்கள் குடும்பங்கள் ஆட்டு மந்தைகளைப் போல் பெருகியுள்ளன.
42 நல்ல ஜனங்கள் இதைக்கண்டு மகிழ்ச்சியடைவார்கள்.
    ஆனால் தீய ஜனங்களோ இதைக் காணும்போது, என்ன சொல்வதென்று அறியார்கள்.

43 ஒருவன் ஞானமுள்ளவனாக இருந்தால் இக்காரியங்களை நினைவுகூருவான்.
    அப்போது தேவனுடைய அன்பு உண்மையாகவே இத்தகையதென்று புரிந்துகொள்ளத் தொடங்குவான்.

எண்ணாகமம் 11:16-23

16 கர்த்தர் மோசேயிடம், “இஸ்ரவேல் ஜனங்களில் 70 முதிய தலைவர்களை என்னிடம் அழைத்து வா. இவர்கள் இஸ்ரவேலர்களின் தலைவர்களாயிருக்கிறார்கள். அவர்களை ஆசரிப்புக் கூடாரத்திற்குள் அழைத்து வா. அவர்கள் உன்னோடு நிற்கட்டும். 17 பிறகு நான் இறங்கி வந்து உன்னோடு பேசுவேன். இப்போது ஆவியானவர் உன்மேல் உள்ளார். ஆனால் அவர்களுக்கும் ஆவியை அளிப்பேன். பிறகு இந்த ஜனங்களைக் கவனித்துக்கொள்கிற பொறுப்பில் அவர்கள் உனக்கு உதவுவார்கள். இவ்வகையில் நீ மட்டும் தனியாக இவர்களுக்கான பொறுப்பை ஏற்க வேண்டியதிருக்காது.”

18 “இவற்றை ஜனங்களிடம் கூறு: நாளைக்காக உன்னைத் தயார் செய்துகொள்! நாளை நீங்கள் இறைச்சி உண்பீர்கள். நீங்கள் முறையிட்டபோது கர்த்தர் அதனைக் கேட்டார். ‘எங்களுக்கு உண்ண இறைச்சி வேண்டும், எகிப்து எங்களுக்கு நன்றாக இருந்தது!’ என்று நீங்கள் சொன்ன சொற்களை கர்த்தர் கேட்டார். எனவே, இப்போது கர்த்தர் உங்களுக்கு இறைச்சியைக் கொடுப்பார். 19 நீங்கள் ஒரு நாள் அல்லது, இரு நாள் அல்லது, ஐந்து நாள் அல்லது, பத்து நாள் அல்லது, இருபது நாட்களுக்கு மேலாக இறைச்சியை உண்பீர்கள்! 20 நீங்கள் இந்த மாதம் முழுவதும்கூட இறைச்சியை உண்பீர்கள். அது உங்களுக்குத் திகட்டும்வரைக்கும் உண்பீர்கள். நீங்கள் கர்த்தருக்கு எதிராக முறையிட்டதினால் இது உங்களுக்கு ஏற்படும். கர்த்தர் உங்களோடு வாழ்கிறார். உங்களது தேவைகளை அவர் அறிவார். ஆனால் நீங்கள் அழுதீர்கள்! அவரிடம் முறையிட்டீர்கள். நாங்கள் எகிப்தை விட்டு ஏன் வந்தோம்? என்று கூறுகிறீர்கள்” என்றார்.

21 மோசே, “கர்த்தாவே இங்கே 6,00,000 மனிதர்கள் உள்ளனர். ஆனால் நீர் ‘இவர்கள் ஒரு மாதத்திற்குப் போதுமானபடி உண்ண இறைச்சியைக் கொடுப்பேன்’ என்று கூறுகிறீர். 22 நாம் இங்குள்ள அத்தனை ஆடுகளையும், மாடுகளையும் கொன்றாலும் கூட அது போதுமானதாக இராது. கடலில் உள்ள அத்தனை மீன்களையும் பிடித்தாலும்கூட அவை போதுமானதாக இராது” என்றான்.

23 ஆனால் கர்த்தர் மோசேயிடம், “கர்த்தருடைய வல்லமையைக் குறைவாக எடை போடாதே! நான் சொன்னபடி என்னால் செய்யமுடியுமா? என்பதை இப்போது காண்பாய்” என்றார்.

எண்ணாகமம் 11:31-32

காடைகள் அனுப்பப்படுதல்

31 பிறகு கடலிலிருந்து பெருங்காற்று அடிக்குமாறு கர்த்தர் செய்தார். அக்காற்று காடைகளைக் கொண்டு வந்தது. காடைகள் கூடாரத்தைச் சுற்றிலும் பறந்து வந்து தரையில் விழுந்தன. தரையின் மேல் மூன்றடி உயரத்திற்கு அவை விழுந்துகிடந்தன. ஒரு மனிதன் எல்லா திசைகளிலும் ஒரு நாள் முழுவதும் நடக்கும் தூரம்வரை அக்காடைகள் கிடந்தன. 32 ஜனங்கள் மகிழ்ச்சியோடு சென்றனர்! அவர்கள் இரவும் பகலுமாக அவற்றைச் சேகரித்தனர். ஒவ்வொருவரும் மறுநாளும் அவற்றைச் சேகரித்தனர். அவர்கள் குறைந்தபட்சம் 60 மரக்கால் அளவு சேர்த்தனர். அவற்றை வெயிலில் காயும்படி முகாம்களைச் சுற்றிலும் பரப்பி வைத்தனர்.

எபேசியர் 4:17-24

நீங்கள் வாழ வேண்டிய வழி

17 கர்த்தருக்காக நான் உங்களுக்கு இதைச் சொல்கிறேன். நான் எச்சரிப்பதாவது: நம்பிக்கை அற்றவர்களைப் போன்று நீங்களும் தொடர்ந்து வாழக் கூடாது. அவர்களது சிந்தனைகள் பயனற்றவை. 18 அந்த மக்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள். அவர்களின் மனம் மூடியது, இதயம் கடினமானது, அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. எனவே தேவன் கொடுக்கிற வாழ்க்கை அவர்களுக்கு இல்லை. 19 அவர்கள் தங்கள் வெட்க உணர்வை இழந்துவிட்டனர். தீயவற்றைச் செய்வதற்காகவே தங்கள் வாழ்க்கையைப் பயன்படுத்துகிறார்கள். எல்லா வகையான கெட்ட செயல்களையும் செய்ய அவர்கள் மேலும், மேலும் விரும்புகிறார்கள். 20 ஆனால் நீங்கள் கிறிஸ்துவின் மூலமாகக் கற்றுக் கொண்டவை அந்தக் கெட்டவற்றைப் போன்றதல்ல. 21 அவரைப் பற்றி உங்களுக்குச் சொல்லப்பட்டுள்ளது எது என்பது எனக்குத் தெரியும். நீங்கள் அவருக்குள் இருக்கிறீர்கள். எனவே உங்களுக்கு உண்மையானது கற்பிக்கப்பட்டிருக்கிறது. ஆமாம், அந்த உண்மை இயேசுவிடம் உள்ளது. 22 உங்கள் பழைய வாழ்க்கை முறைகளை விட்டுவிடவும், எப்போதும் தீமையைத் தருகிற பழைய குணங்களை ஒதுக்கவும் உங்களுக்குக் கற்பிக்கப்பட்டிருக்கிறது. அது மேலும் மோசமாகிவிட்டது. ஏனென்றால் அவர்கள் தீயவற்றால் முட்டாளாக்கப்பட்டு அவற்றையே புதுப்பிக்க விரும்புகிறார்கள். 23 ஆனால் நீங்கள் உங்கள் இதயத்தில் புதியவர்களாகும்படி கற்பிக்கப்பட்டிருக்கிறீர்கள். 24 நீங்கள் புதிய மனிதனாக இருக்கக் கற்பிக்கப்பட்டிருக்கிறீர்கள். அந்தப் புதிய மனிதன் தேவனைப்போன்று செய்யப்படுகிறான். உண்மையான நீதியிலும், பரிசுத்தத்திலும் இருக்கிறான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center