Revised Common Lectionary (Complementary)
9 கர்த்தருடைய பரிசுத்த ஜனங்கள் அவரைத் தொழுதுகொள்ளட்டும்.
கர்த்தரைப் பின்பற்றுவோருக்கு வேறெந்த அடைக்கலமும் தேவையில்லை.
10 வல்லமையுள்ள ஜனங்கள் சோர்ந்து பசியடைவார்கள்.
ஆனால் தேவனிடம் உதவி வேண்டிச் செல்வோர் நல்லவற்றையெல்லாம் அடைவார்கள்.
11 பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்.
கர்த்தரை எப்படி மதிக்கவேண்டுமென்று உங்களுக்குப் போதிப்பேன்.
12 தன் வாழ்க்கையை நேசித்து, நீண்ட ஆயுளை விரும்பும்,
13 மனிதன் தீயவற்றைப் பேசக்கூடாது.
அம்மனிதன் பொய் பேசக்கூடாது.
14 தீமை செய்வதை அவன் விட்டுவிட வேண்டும்.
நல்லவற்றைச் செய். சமாதானத்திற்காகப் பாடுபடு.
அதை அடையும்வரை அதற்கென முயற்சி செய்.
13 யோபு, “நான் இவற்றையெல்லாம் முன்னரே பார்த்திருக்கிறேன்.
நீங்கள் கூறுகின்றவற்றையெல்லாம் நான் ஏற்கெனவே கேட்டிருக்கிறேன்.
அவற்றையெல்லாம் நான் புரிந்துகொள்கிறேன்.
2 உங்களுக்கு தெரிந்தவற்றை நான் அறிவேன்.
நானும் உங்களைப் போலவே புத்திசாலி.
3 ஆனால் நான் உங்களோடு வாதாட விரும்பவில்லை.
சர்வ வல்லமையுள்ள தேவனோடு நான் பேச விரும்புகிறேன்.
என் தொல்லைகளைப்பற்றி நான் தேவனோடு வாதாட விரும்புகிறேன்.
4 ஆனால் நீங்கள் மூவரும் உங்கள் அறியாமையைப் பொய்களால் மறைக்க முயல்கிறீர்கள்.
ஒருவரையும் குணப்படுத்த முடியாத தகுதியற்ற மருத்துவர்களைப்போல் இருக்கிறீர்கள்.
5 நீங்கள் அமைதியாயிருக்க வேண்டும் என விரும்புகிறேன்.
நீங்கள் செய்யத்தக்க மிகுந்த ஞானமுள்ள காரியம் அதுவேயாகும்.
6 “இப்போது என் விவாதத்திற்கும் செவிகொடுங்கள்.
நான் சொல்லவேண்டியவற்றிற்குச் செவிகொடுங்கள்.
7 நீங்கள் தேவனுக்காகப் பொய் கூறுவீர்களா?
நீங்கள் கூறும் பொய்களை, நீங்கள் கூறவேண்டுமென்று தேவன் விரும்பியதாக நீங்கள் உண்மையாகவே நம்புகிறீர்களா?
8 எனக்கெதிராக தேவனை ஆதரித்துப் பேச முயன்றுகொண்டிருக்கிறீர்களா?
தேவனுக்காக வழக்குகள் கொண்டுவர முடியுமா?
9 உங்களை தேவன் கூர்ந்து ஆராய்ந்தால், நீங்கள் சரியானவர்கள் என காண்பிப்பாரா?
நீங்கள் ஜனங்களை மூடராக்குவது போல் தேவனை முட்டாளாக்க முடியும் என உண்மையாகவே எண்ணுகிறீர்களா?
10 ஒரு மனிதன் முக்கியமானவன் என்பதால் மட்டும் நீதிமன்றத்தில் இரகசியமாக அவன் பக்கம் சாய முடிவுசெய்தால்,
தேவன் உங்களை விசாரணை செய்வார் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
11 தேவனுடைய மகத்துவம் (முக்கியத்துவம்) உங்களை அச்சுறுத்துகிறது.
நீங்கள் அவரைக் கண்டு பயப்படுகிறீர்கள்.
12 உங்கள் வாக்குவாதங்கள் சாம்பலைப் போல் எந்தப் பயனுமற்றவை.
உங்கள் பதில்கள் சேற்றுக்குவியல்கள் போலப் பயனற்றவை.
13 “அமைதியாயிருங்கள், என்னைப் பேச விடுங்கள்!
பிறகு எனக்கு நேரிடும் அனைத்தையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.
14 நான் என்னை ஆபத்திற்குட்படுத்தி
என் உயிரை என் கைகளில் எடுப்பேன்.
15 தேவன் என்னைக் கொன்றாலும் நான் அவரைத் தொடர்ந்து நம்புவேன்.
அவருக்கு முன்பாக என் பொருட்டு வாதாடுவேன்.
16 தேவன் என்னை வாழவிட்டால், அது நான் அவரிடம் துணிந்து பேசியதன் விளைவாகும்.
தீயவன் ஒருவனும் தேவனை முகத்துக்கு முகம் பார்க்கத் துணிவதில்லை.
17 நான் சொல்கின்றவற்றிற்குக் கவனமாகச் செவி கொடுங்கள்.
நான் விவரித்துத் கூற அனுமதியுங்கள்.
18 நான் எனக்காக வாதாட தயாராயிருக்கிறேன்.
எனது வாதங்களைக் கவனமாகச் சொல்வேன்.
நான் குற்றமற்றவன் என்று தீர்க்கப்படுவேனென்று அறிவேன்.
19 நான் தவறென யாரேனும் நிரூபித்தால்
உடனே நான் வாய் பேசாதிருப்பேன் (அமைதியாக இருப்பேன்)
7 ஒரு சமாரியப் பெண் தண்ணீரெடுப்பதற்காக அக்கிணற்றுக்கு வந்தாள். இயேசு அவளிடம், “தயவுசெய்து நான் குடிப்பதற்குத் தண்ணீர் கொடு” என்று கேட்டார். 8 (இயேசுவின் சீஷர்கள் பட்டணத்தில் உணவுப் பொருட்களை வாங்கிக்கொண்டிருக்கும்போது இது நடந்தது.)
9 “குடிப்பதற்கு நீங்கள் என்னிடம் கேட்பதை எண்ணி எனக்கு ஆச்சரியமாக உள்ளது. நீங்கள் ஒரு யூதர். நானோ சமாரியப் பெண்” என்று அவள் பதிலுரைத்தாள். (ஏனென்றால் யூதர்கள் சமாரியர்களோடு எப்பொழுதும் நட்புடன் இருப்பதில்லை.)
10 “தேவன் கொடுப்பவற்றைப்பற்றி நீ அறியவில்லை. குடிக்கத் தண்ணீர் கேட்கிற நான் யாரென்று உனக்குத் தெரியாது. இவற்றைப்பற்றி நீ அறிந்தால் நீ என்னிடம் தண்ணீர் கேட்டிருப்பாய். ஜீவத் தண்ணீரை நான் உனக்குக் கொடுத்திருப்பேன்” என்றார் இயேசு.
11 “ஐயா, ஜீவத் தண்ணீரை நீங்கள் எங்கிருந்து பெறுவீர்கள்? இந்தக் கிணறோ ஆழமாக இருக்கிறது. இதிலிருந்து தண்ணீர் எடுப்பதற்கும் உங்களிடம் எதுவும் இல்லையே! 12 நீங்கள் எமது மூதாதையரான யாக்கோபை விடப் பெரியவரா? அவர்தான் எங்களுக்கு இந்தக் கிணற்றைக் கொடுத்தார். அவரும் இந்தக் கிணற்றிலுள்ள தண்ணீரைத்தான் குடித்தார். அத்துடன் அவரது பிள்ளைகளும் மிருகங்களும் இதிலுள்ள தண்ணீரைத்தான் குடித்தார்கள்” என்று அந்தப் பெண் சொன்னாள்.
13 “இந்த தண்ணீரைக் குடிக்கிறவர்களுக்கு மீண்டும் தாகம் எடுக்கும். 14 ஆனால் நான் கொடுக்கிற தண்ணீரைக் குடிப்பவர்களுக்கோ மறுபடியும் தாகம் எடுப்பதில்லை. என்னால் கொடுக்கப்படுகிற தண்ணீர், அதைக் குடிப்பவனுக்குள் நீரூற்றாகப் பெருக்கெடுக்கும். அது அவனுக்கு எக்காலத்துக்கும் உரிய வாழ்க்கையைத் தரும்” என்று இயேசு பதிலுரைத்தார்.
15 “ஐயா! எனக்கு அந்தத் தண்ணீரை வழங்குங்கள். அப்போது ஒருபோதும் மறுபடியும் எனக்குத் தாகம் எடுக்காது. மிகுதியாகத் தண்ணீரெடுக்க இங்கே நான் மீண்டும் வர வேண்டியதும் இராது” எனக் கூறினாள் அந்தப் பெண்.
16 “போ, உன் கணவனோடு இங்கே திரும்ப வா” என்றார் இயேசு.
17 “ஆனால், எனக்குக் கணவன் இல்லையே” என்றாள் அப்பெண்.
“உனக்குக் கணவன் இல்லையென்று நீ சொல்வது சரிதான். 18 உண்மையில் உனக்கு ஐந்து கணவர்கள் இருந்திருக்கின்றனர். ஆனால் நீ இப்பொழுது யாரோடு வாழ்ந்துகொண்டிருக்கிறாயோ அவன் உன் கணவனல்ல. நீ என்னிடம் உண்மையைச் சொன்னாய்” என்றார் இயேசு.
19 “உம்மை நான் தீர்க்கதரிசியாகக் காண்கிறேன். 20 எங்கள் முன்னோர்கள் இந்த மலையில் வழிபட்டுவந்தனர். ஆனால் யூதராகிய நீங்களோ, எருசலேம்தான் வழிபாட்டுக்குரிய இடம் என்று கூறுகிறீர்கள்” என்றாள் அந்தப் பெண்.
21 “பெண்ணே! என்னை நம்பு. இந்த மலையிலும் எருசலேமிலும் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் பிதாவை (தேவனை) வழிபடுகிற காலம் வந்துகொண்டிருக்கிறது. 22 சமாரியர்களாகிய நீங்கள் உங்களால் புரிந்துகொள்ள முடியாததை வணங்கி வருகிறீர்கள். யூதர்களாகிய நாங்கள், எங்களால் வணங்கப்படுபவரைப் புரிந்துகொண்டிருக்கிறோம். யூதர்களிடமிருந்தே இரட்சிப்பு வருகின்றது. 23 உண்மையாக வழிபடுகிறவர்கள் (தேவனை) ஆவியோடும் உண்மையோடும் வழிபடுகிற காலம் வந்துகொண்டிருக்கிறது. அது இப்பொழுதே வந்திருக்கிறது. பிதாவும் தம்மை வழிபடுகிறவர்கள் இத்தகைய மக்களாக இருக்க விரும்புகிறார். 24 தேவன் ஆவியாயிருக்கிறார். ஆகையால் தேவனை வழிபடுகிற மக்கள் ஆவியோடும் உண்மையோடும் தேவனை வழிபடுதல் வேண்டும்” என்றார் இயேசு.
25 “கிறிஸ்து என்று அழைக்கப்படுகிற மேசியா வந்துகொண்டிருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். அவர் வந்ததும் எங்களுக்கு அனைத்தையும் விளக்குவார்” என்றாள் அப்பெண்.
26 பிறகு இயேசு, “இப்பொழுது அவர்தான் உன்னோடு பேசிக்கொண்டிருக்கிறார். நான்தான் மேசியா” என்றார்.
2008 by World Bible Translation Center