Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
லேவியராகமம் 1

பலிகளும் காணிக்கைகளும்

தேவனாகிய கர்த்தர் மோசேயைக் கூப்பிட்டு ஆசாரிப்புக் கூடாரத்திலிருந்து அவனிடம், “நீ இஸ்ரவேல் ஜனங்களிடம் கூற வேண்டியதாவது: நீங்கள் கர்த்தருக்குப் பலி செலுத்த வரும்பொழுது அப்பலி உங்கள் மந்தையில் உள்ள பசுவாகவோ, ஆடாகவோ அல்லது வெள்ளாடாகவோ இருக்கலாம்.

“ஒருவன் தனக்குச் சொந்தமான மாடுகளில் ஒன்றைத் தகனபலியாகச் செலுத்த விரும்பினால் அது எவ்விதமான குறையுமற்ற காளையாக இருக்க வேண்டும். அந்தக் காளையை அவன் ஆசாரிப்புக் கூடார வாசலுக்குக் கொண்டு வர வேண்டும். பிறகு கர்த்தர் அதனை ஏற்றுக்கொள்வார். அம்மிருகம் பலியிடப்படும்போது அவன் அதன் தலையில் தன் கைகளை வைக்க வேண்டும். அந்த மனிதன் பரிசுத்தம் அடைவதற்கான விலையாக கர்த்தர் அதனை ஏற்றுக்கொள்வார்.

“அவன் அந்த இளம் காளையை கர்த்தருக்கு முன்பாகக் கொல்ல வேண்டும். பிறகு ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்கள் அதன் இரத்தத்தை எடுத்து ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் உள்ள பலிபீடத்தின் மேலும், அதைச் சுற்றிலும் தெளிக்க வேண்டும். அம்மிருகத்தின் தோலை வெட்டிய பிறகு ஆசாரியன் மிருகத்தை துண்டு துண்டாக வெட்டவேண்டும். ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்கள் பலிபீடத்தில் நெருப்பிட்டு கட்டைகளை அடுக்கி துண்டுகளை (மிருகத்தின் தலையையும் கொழுப்பையும்) பலிபீடத்தின் மேலுள்ள நெருப்பிலுள்ள கட்டைகளின்மேல் அடுக்கி வைக்க வேண்டும். பின் அதன் கால்களையும் உட்பகுதிகளையும் தண்ணீரால் கழுவவேண்டும். அதன் அனைத்துப் பகுதிகளையும் பலிபீடத்தின் மேல் நெருப்பில் எரிக்க வேண்டும். இது நெருப்பாலான தகனபலி. இதன் வாசனை கர்த்தருக்கு விருப்பமானதாக இருக்கும்.

10 “ஒருவன் தன் ஆட்டு மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டையோ அல்லது செம்மறியாட்டையோ நெருப்பிலிட்டு தகன பலியிட விரும்பினால் அது ஆண் மிருகமாக இருக்க வேண்டும். அதில் எவ்விதக் குறைபாடும் இருக்கக் கூடாது. 11 அதனை கர்த்தருக்கு முன்பு பலிபீடத்தின் வடக்குத் திசையில் வைத்துக் கொல்லவேண்டும். ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்கள் அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின் மேல் சுற்றிலும் தெளிக்க வேண்டும். 12 பிறகு அம்மிருகத்தை ஆசாரியன் வெட்டித் துண்டாக்க வேண்டும். அவன் அந்தத் துண்டுகளை (தலை மற்றும் கொழுப்பு) பலிபீடத்திலுள்ள நெருப்பின் மேலுள்ள கட்டைகளின் மேல் வைக்க வேண்டும். 13 அதன் கால்களையும், உட்பாகத்தையும் ஆசாரியர்கள் தண்ணீரால் கழுவ வேண்டும். பிறகு துண்டாக வெட்டப்பட்ட மிருகத்தின் எல்லா பாகங்களையும் பலிபீடத்தில் வைத்து எரிக்க வேண்டும். இது நெருப்பால் செய்யப்படுகிற தகனபலி. இதன் வாசனை கர்த்தருக்கு விருப்பமானதாக இருக்கும்.

14 “எவராவது ஒரு பறவையை கர்த்தருக்குப் பலியிட விரும்பினால் புறாவையாவது, இளம் புறாக்குஞ்சையாவது தேர்ந்தெடுக்க வேண்டும். 15 ஆசாரியன் அதனைப் பலிபீடத்திற்கு கொண்டு வந்து, அதன் தலையை கிள்ளி பலிபீடத்தில் எரிக்க வேண்டும். அப்பறவையின் இரத்தம் பலிபீடத்தின் பக்கத்தில் சிந்த வேண்டும். 16 ஆசாரியன் அப்பறவையின் இரைப்பையையும், முடிகளையும் அகற்றி பலிபீடத்தின் கிழக்குப் பக்கமாக எறிய வேண்டும். அங்கேதான் பலிபீடத்தின் சாம்பலைப் போடுவார்கள். 17 ஆசாரியன் அதன் சிறகுகளை இரண்டாகப் பிளந்துவிடாமல் கவனமுடன் கிழிக்க வேண்டும். பிறகு அப்பறவையைப் பலிபீடத்தில் கட்டைகளின் மேல் வைத்து எரிக்க வேண்டும். இது நெருப்பினால் செய்யப்படுகிற தகன பலி. இதன் வாசனை கர்த்தருக்கு விருப்பமானதாக இருக்கும்.”

யோவான் 20

இயேசுவின் உயிர்ப்பு(A)

20 வாரத்தின் முதல்நாள் அதிகாலையில் மகதலேனா மரியாள், இயேசுவின் சரீரம் இருந்த கல்லறைக்குச் சென்றாள். அது அப்பொழுதும் இருளாக இருந்தது. கல்லறை வாசலை மூடியிருந்த பெரிய கல் விலக்கி வைக்கப்பட்டிருப்பதை அவள் கண்டாள். எனவே மரியாள் சீமோன் பேதுருவிடமும் இன்னொரு சீஷனிடமும் (இயேசு நேசித்தவன்) ஓடிச் சென்று “அவர்கள் கர்த்தரது சரீரத்தைக் கல்லறையைவிட்டு அப்புறப்படுத்திவிட்டனர். அவரை எங்கே வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை” என்றாள்.

உடனே பேதுருவும் இன்னொரு சீஷனும் கல்லறையை நோக்கிப் போனார்கள். இருவரும் ஓடினாலும், பேதுருவைவிட அடுத்தவன் வேகமாக ஓடிப் போனான். எனவே அந்த சீஷன் முதலில் கல்லறையை அடைந்தான். அவன் குனிந்து கல்லறைக்குள்ளே பார்த்தான். துண்டுத்துணிகள் அங்கே கிடப்பதைக் கண்டான். ஆனால் உள்ளே அவன் போகவில்லை.

பிறகு சீமோன் பேதுரு அவனுக்குப் பின்னால் வந்தான். பேதுரு கல்லறைக்குள்ளே போனான். அங்கே துணிகள் கிடப்பதைப் பார்த்தான். தலையில் சுற்றப்பட்ட துணி தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. பிறகு அடுத்த சீஷனும் உள்ளே போனான். இந்த சீஷன்தான் கல்லறையை முதலாவது ஓடிவந்து சேர்ந்தவன். அவன் நிகழ்ந்ததை எல்லாம் பார்த்து நம்பிக்கைகொண்டான். (இந்த சீஷர்கள், வேதவாக்கியங்களின்படி இயேசு மரணத்தில் இருந்து உயிர்த்தெழவேண்டும் என்று இன்னும் புரிந்துகொள்ளாமல் இருந்தனர்)

மகதலேனா மரியாளுக்குக் காட்சி(B)

10 பிறகு அவரது சீஷர்கள் வீட்டிற்குத் திரும்பிப்போனார்கள். 11 ஆனால் மரியாள் கல்லறைக்கு வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள். அவ்வாறு அழும்போதே, அவள் குனிந்து கல்லறைக்குள்ளே பார்த்தாள். 12 வெள்ளை உடைகள் அணிந்த இரு தேவ தூதர்களைப் பார்த்தாள். இயேசுவின் சரீரம் இருந்த இடத்தில் அவர்கள் இருந்தனர். இயேசுவின் தலை இருந்த இடத்தில் ஒரு தேவதூதனும் அவரது பாதங்கள் இருந்த இடத்தில் இன்னொரு தேவதூதனும் இருப்பதைக் கண்டாள்.

13 அந்த தேவதூதர்கள் மரியாளிடம், “பெண்ணே! ஏன் அழுதுகொண்டிருக்கிறாய்?” என்று கேட்டனர்.

“சிலர் என் ஆண்டவரின் சரீரத்தை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள். அவரை எங்கே வைத்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை” என்றாள் மரியாள். 14 அவள் இவ்வாறு சொல்லிவிட்டு திரும்பியபோது இயேசு நின்றுகொண்டிருப்பதைக் கண்டாள். ஆனால் அவர்தான் இயேசு என்பதை அவள் அறிந்துகொள்ளவில்லை.

15 இயேசு அவளிடம், “பெண்ணே! ஏன் அழுகிறாய்? நீ யாரைத் தேடுகிறாய்?” என்று கேட்டார்.

மரியாள் அவரை, அந்தத் தோட்டத்தின் காவல்காரனாக இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். எனவே அவள் அவரிடம், “ஐயா, நீங்களா இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டு போனீர்கள்? அவரை எங்கே வைத்திருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள். நான் போய் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றாள்.

16 இயேசு “மரியாளே” என்று அழைத்தார்.

மரியாள் திரும்பி இயேசுவைப் பார்த்து, “ரபூனீ” என்று யூத மொழியில் கூப்பிட்டாள். (இதற்கு போதகரே என்று பொருள்)

17 இயேசு அவளிடம், “என்னைத் தொடாதே. நான் இன்னும் என் பிதாவிடம் திரும்பிச் செல்லவில்லை. ஆனால் போய் என் சகோதரர்களிடம், ‘நான் என் பிதாவிடமும் உங்களின் பிதாவிடமும் செல்கிறேன். நான் என் தேவனிடமும் உங்களின் தேவனிடமும் திரும்பிப் போகிறேன்’ என்று சொல்” என்றார்.

18 மகதலேனா மரியாள் சீஷர்களிடம் சென்று, “நான் ஆண்டவரைப் பார்த்தேன்” என்று சொன்னாள். அதோடு அவர் சொன்னவற்றையும் சொன்னாள்.

சீஷர்களுக்கு இயேசுவின் காட்சி(C)

19 அன்று வாரத்தின் முதல்நாள். அன்று மாலையில் சீஷர்கள் கூடினர். கதவுகள் அடைக்கப்பட்டன. ஏனென்றால் அவர்கள் யூதர்களுக்குப் பயந்தனர். அப்பொழுது இயேசு வந்து அவர்களின் நடுவில் நின்றார். “சமாதானம் உங்களோடு இருக்கட்டும்” என்றார். 20 அவர் இதனைச் சொன்ன பிறகு, தனது சீஷர்களிடம் தனது கைகளையும் விலாவையும் காட்டினார். அவர்கள் கர்த்தரைப் பார்த்ததும் பெரிதும் மகிழ்ந்தனர்.

21 பிறகு மீண்டும் அவர்களிடம் இயேசு, “சமாதானம் உங்களோடு இருக்கட்டும். பிதா என்னை அனுப்பினார். அதே விதமாக நான் இப்பொழுது உங்களை அனுப்புகிறேன்” என்றார். 22 இயேசு அதைச் சொன்ன பிறகு, அவர் சீஷர்கள்மேல் ஊதினார். “பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். 23 நீங்கள் மக்களது பாவங்களை மன்னித்தால் அவை மன்னிக்கப்படும். நீங்கள் மக்களது பாவங்களை மன்னிக்காவிட்டால் அவை மன்னிக்கப்படாது” என்று கூறினார்.

தோமாவுக்கு காட்சி

24 இயேசு அங்கு தோன்றியபோது தோமா சீஷர்களுடன் இல்லை. அவரது பன்னிரண்டு சீஷர்களுள் தோமாவும் ஒருவன். 25 ஏனைய சீஷர்கள் “நாங்கள் ஆண்டவரைப் பார்த்தோம்” என்று தோமாவிடம் சொன்னார்கள். அதற்கு தோமா “நான் அவரது கைகளில் ஆணிகளின் துவாரங்களைக் காணும்வரை நீங்கள் சொல்வதை நம்பமாட்டேன். அப்படிப் பார்த்தாலும் அந்த ஆணித் துவாரங்களில் எனது விரல்களையும், விலாகாயத்தில் எனது கைகளையும் வைத்துப் பார்ப்பேன். இல்லாவிட்டால் நான் நம்பமாட்டேன்” என்றான்.

26 ஒரு வாரத்திற்குப் பின் சீஷர்கள் முன்புபோல் அந்த வீட்டில் மீண்டும் கூடினர். தோமா அவர்களோடு இருந்தான். கதவுகள் மூடப்பட்டிருந்தன. ஆனால் இயேசு வந்து அவர்களின் நடுவில் நின்றார். “சமாதானம் உங்களோடு இருக்கட்டும்” என்றார். 27 பிறகு இயேசு தோமாவிடம் “உனது விரல்களை இங்கே வை. எனது கைகளைப் பார். எனது விலாவிலே உன் கையை வைத்துப் பார். சந்தேகத்தை விட்டுவிடு. விசுவாசி” என்றார்.

28 அதற்குத் தோமா இயேசுவிடம், “என் ஆண்டவரே! என் தேவனே!” என்று பதில் சொன்னான்.

29 இயேசு அவனிடம், “நீ என்னைப் பார்த்ததால் விசுவாசிக்கிறாய். என்னைப் பாராமலேயே எவர் விசுவாசிக்கிறார்களோ அவர்கள் பாக்கியவான்கள்” என்றார்.

இப்புத்தகத்தை எழுதினதின் நோக்கம்

30 இயேசு அவரது சீஷர்களுக்கு முன்பு அநேக வேறு அற்புதங்களைச் செய்து காட்டினார். அவை இந்நூலில் எழுதப்படவில்லை. 31 ஆனால் இயேசுவே கிறிஸ்து என்றும் தேவனின் குமாரன் என்றும் நீங்கள் நம்பும்படிக்கும், அதோடு நம்பிக்கையின் மூலம் அவரது பெயரால் நித்திய வாழ்வைப் பெறவும் இவைகள் எழுதப்பட்டிருக்கின்றன.

நீதிமொழிகள் 17

17 எப்பொழுதும் வாதமிடுகிறவர்களின் வீட்டில் முழுச்சாப்பாடு உண்பதைவிட, ஒரு துண்டு காய்ந்த ரொட்டியை சமாதானத்தோடு தின்பது நல்லது.

அறிவுத்திறமுள்ள வேலைக்காரன் தன் எஜமானின் மூட மகனையும் அடக்கி ஆள்வான். அவ்வேலைக்காரன் மகனைப்போல நடத்தப்பட்டு, பரம்பரைச் சொத்தில் பங்கும்பெறுவான்.

பொன்னையும் வெள்ளியையும் தூய்மைப்படுத்தவே நெருப்பில் போடுகிறார்கள். ஆனால் ஜனங்கள் இதயங்களை கர்த்தர் ஒருவரே சுத்தம் செய்கிறார்.

தீயவர்கள் மற்றவர்கள் சொல்லும் தீயவற்றையே கவனிக்கின்றனர். பொய்யர்கள் பொய்யையே கவனிக்கின்றனர்.

சிலர் ஏழை ஜனங்களைக் கேலிச் செய்வார்கள். தொல்லைகளுக்கு உள்ளானவர்களைப் பார்த்து அவர்கள் சிரிப்பார்கள். தம்மைப் படைத்த தேவனை அவர்கள் மதிப்பதில்லை என்பதையே இது காட்டுகிறது. அத்தீய ஜனங்கள் தண்டிக்கப்படுவார்கள்.

பேரப்பிள்ளைகள் முதியவர்களை மகிழ்ச்சிப்படுத்துகிறார்கள். பிள்ளைகள் தம் பெற்றோர்களைப்பற்றிப் பெருமைப்படுகிறார்கள்.

அறிவற்றவன் அதிகமாகப் பேசுவது அறிவுள்ள செயல் அல்ல. இதுபோலவே, ஆள்பவன் பொய் சொல்லுவதும் அறிவுள்ள செயல் அல்ல.

சிலர், லஞ்சத்தை இனிமையான அதிர்ஷ்டப் பொருளாக நினைக்கிறார்கள். அவர்கள் எங்கு போனாலும் அது பணியைச் செய்துமுடிக்கப் பயன்படுவதாக நினைக்கிறார்கள்.

ஒருவன் செய்த தவறை நீ மன்னித்துவிட்டால் நீங்கள் நண்பர்கள் ஆகலாம். ஆனால் அவன் செய்த தவறையே தொடர்ந்து நீ நினைத்துக்கொண்டிருந்தால் உங்கள் நட்பை அது அழித்துவிடும்.

10 சுறுசுறுப்பானவன் தன் தவறுகளிலிருந்தும் கற்றுக்கொள்கிறான். ஆனால் அறிவில்லாதவனோ, எதையும் கற்றுக்கொள்ளமாட்டான். நூறு பாடங்களுக்குப் பிறகும் கற்றுக்கொள்ளமாட்டான்.

11 தீயவன் தவறுகளைச் செய்யவே விரும்புகிறான். முடிவில் தேவன் தன் தூதனை அனுப்பி அவனைத் தண்டிப்பார்.

12 தன் குட்டிகளைப் பறிகொடுத்த கோபம் கொண்ட பெண் கரடியை எதிர்கொள்வது, மிகவும் ஆபத்தானது. ஆனால் எப்பொழுதும் மூடத்தனமான செயல்களைச் செய்யும் அறிவில்லாதவனைச் சந்திப்பதைக் காட்டிலும் அது எளிதானது.

13 உனக்கு நன்மை செய்கிறவர்களுக்கு, நீ தீமை செய்யாதே. அவ்வாறு செய்தால் நீ உனது எஞ்சிய வாழ்க்கை முழுவதும் துன்பம் அடைவாய்.

14 வாதம் செய்ய ஆரம்பிப்பது, பெரிய அணைக்கட்டில் துளை விழுந்தது போன்றாகும். அது மிகப் பெரிதாக ஆவதற்கு முன் வாதத்தை நிறுத்து.

15 தவறே செய்யாதவர்களைத் தண்டிப்பதும், குற்றம் செய்தவர்களை தப்பவிடுவதுமான இரண்டு காரியங்களும் கர்த்தரால் வெறுக்கப்படும்.

16 அறிவற்றவனிடம் செல்வம் இருந்தால் அது பயனற்றது. ஏனென்றால் அவன் தன் செல்வத்தை அறிவைப் பெறுவதற்குப் பயன்படுத்தமாட்டான்.

17 ஒரு நண்பன் எப்பொழுதும் நேசிக்கிறான். உண்மையான சகோதரன் உனக்கு எப்பொழுதும் உதவுகிறான். துன்ப காலங்களிலும்கூட உதவி செய்கிறான்.

18 அடுத்தவன் கடனுக்கு தான் பொறுப்பாளியென அறிவற்றவனே வாக்குறுதி கொடுப்பான்.

19 வாதம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறவன், பாவம் செய்வதிலும் மகிழ்ச்சியடைகிறான். நீ உன்னையே பெருமைப்படுத்திப் பேசினால் நீயே துன்பங்களை வரவழைத்துக்கொள்கிறாய்.

20 தீயவன் நன்மை பெறமட்டான். பொய்யன் துன்பமடைவான்.

21 அறிவற்றவனின் தந்தை மிகவும் சோகம் அடைவான். அறிவற்றவனின் தந்தையால் மகிழ்ச்சியாக இருக்கமுடியாது.

22 மகிழ்ச்சி என்பது நல்ல மருந்தைப் போன்றது. ஆனால் துக்கமோ நோயைப் போன்றது.

23 தீயவன் மற்றவர்களை ஏமாற்றுவதற்காக இரகசியமாகப் பணத்தைப் பெறுகிறான்.

24 அறிவுள்ளவன் மிகச்சிறந்த செயல்களைச் செய்வதைப்பற்றியே எண்ணிக்கொண்டு இருப்பான். ஆனால் அறிவற்றவனோ தூரத்து இடங்களைப்பற்றியே கனவு காண்பான்.

25 ஒரு அறிவற்ற மகன் தந்தைக்குத் துக்கத்தைத் தருகிறான். அவன் தன்னைப் பெற்றெடுத்தத் தாய்க்கும் துன்பத்தைத் தருகிறான்.

26 தவறு செய்யாதவனைத் தண்டிப்பது தப்பாகும். தலைவர்கள் நேர்மையானவர்களாக இருக்கும்போது அவர்களைத் தண்டிப்பதும் தவறாகும்.

27 அறிவுள்ளவன் தன் வார்த்தைகளைக் கவனமாகக் கையாளுகிறான். அறிவுள்ளவன் எளிதில் கோபம் கொள்ளமாட்டான்.

28 அறிவற்றவனும் அமைதியாக இருந்தால் அறிவாளியைப்போன்று தோன்றுவான். அவன் எதையும் பேசாவிட்டால், ஜனங்கள் அவனை அறிவாளியாக நினைத்துக்கொள்வார்கள்.

பிலிப்பியர் 4

செய்யத்தக்க சில

என்னுடைய அன்பான சகோதர சகோதரிகளே! நான் உங்களை நேசிக்கிறேன். உங்களைப் பார்க்க விரும்புகிறேன். நீங்கள் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தீர்கள். உங்களைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். நான் சொன்னதைப் போன்று நீங்கள் கர்த்தரைத் தொடர்ந்து பின்பற்றி வாழுங்கள்.

கர்த்தருக்குள் ஒரே சிந்தையாய் இருக்க எயோதியாளுக்கும் சிந்திகேயாளுக்கும் புத்தி சொல்லுகிறேன். ஏனென்றால் நீங்கள் என்னோடு உண்மையாய்ப் பணிபுரிகிறீர்கள். எனது நண்பர்களே! அப்பெண்களுக்கு உதவுமாறு உங்களை வேண்டிக்கொள்கிறேன். அவர்கள் நற்செய்தியை மக்களிடம் பரப்பிட உதவினார்கள். அவர்கள் கிலேமந்தோடும் மற்றவர்களோடும் சேர்ந்து எனக்கு உதவினார்கள். அவர்களின் பெயர்கள் ஜீவ புஸ்தகத்தில் [a] எழுதப்பட்டுள்ளன.

எப்பொழுதும் கர்த்தருக்குள் முழுமையான மகிழ்ச்சியோடு இருங்கள். நான் மீண்டும் கூறுகிறேன். முழு மகிழ்ச்சியோடு இருங்கள்.

நீங்கள் சாந்தமும் கருணையும் கொண்டவர்கள் என்பதை மக்கள் எல்லாரும் தெரிந்துகொள்ளட்டும். கர்த்தர் விரைவில் வருவார். நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு வேண்டிய எல்லாவற்றுக்காகவும் தேவனிடம் பிரார்த்தனை செய்து கேளுங்கள். நீங்கள் பிரார்த்தனை செய்யும் பொழுதெல்லாம் நன்றி செலுத்துங்கள். தேவனுடைய சமாதானம், உங்கள் இதயத்தையும் மனதையும் இயேசு கிறிஸ்துவுக்குள் பாதுகாக்கும். தேவன் தரும் சமாதானம் மிக உயர்ந்தது. நம்மால் புரிந்துகொள்ள முடியாதது.

இப்போது சகோதர சகோதரிகளே! தொடர்ந்து உங்கள் மனதில் உண்மையும், பெருமையும், நீதியும், தூய்மையும், அன்பும், அழகும், மரியாதையும், உயர்வும் கொண்ட எல்லாவற்றையும் சிந்தித்துக்கொள்ளுங்கள். என்னிடமிருந்து நீங்கள் கற்றவற்றையும், பெற்றவற்றையும், கண்டவற்றையும், கேட்டவற்றையும் மட்டும் நீங்கள் செய்யுங்கள். சமாதானம் கொடுக்கிற தேவன் உங்களோடிருப்பார்.

பிலிப்பியர்களுக்கு பவுலின் நன்றி

10 மீண்டும் என்னிடம் நீங்கள் அக்கறை காட்டுவதற்காக எனக்கு கர்த்தருக்குள் மிகவும் மகிழ்ச்சி. நீங்கள் எப்பொழுதும் அக்கறை கொண்டவர்கள். ஆனால் அதை வெளிப்படுத்த உங்களுக்கு வேறு வழி இருக்கவில்லை. 11 எனக்குத் தேவைகள் உள்ளன என்பதற்காக இவற்றையெல்லாம் நான் உங்களுக்குக் கூறவில்லை. எனக்கு இருக்கிற சூழ்நிலையில் நான் திருப்தி அடைந்த உணர்வில் இருக்கிறேன். 12 ஏழ்மையில் இருக்கும்போது எப்படி வாழ்வது என்று நான் அறிந்திருக்கிறேன். செல்வம் இருக்கும்போதும் எப்படி வாழ்வது என்று நான் அறிந்திருக்கிறேன். எல்லாவற்றிலும் எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருப்பது எப்படி என்று எனக்குத் தெரியும். அந்த இரகசியத்தை நான் கற்றிருக்கிறேன். எனக்கு உண்ணுவதற்கு இருந்தபோதும் சரி, இல்லாதபோதும் சரி. நான் மகிழ்ச்சியாய் இருக்கிறேன். எனக்கு தேவையானவை அனைத்தும் இருந்தபோதும் சரி, இல்லாதபோதும் சரி, மகிழ்ச்சியுடன் நான் இருக்கக் கற்றிருக்கிறேன். 13 கிறிஸ்துவின் மூலம் எனக்கு எல்லாவற்றையும் செய்ய வலிமை இருக்கிறது. ஏனென்றால் அவர் எனக்குப் பலத்தைக் கொடுக்கிறார்.

14 ஆனால் எனக்கு உதவி தேவைப்பட்டபோது நீங்கள் உதவி செய்தீர்கள் என்பது நன்று. 15 பிலிப்பியில் இருக்கிற நீங்கள், அங்கே நான் நற்செய்தியைப் பிரச்சாரம் செய்யத் தொடங்கிய நிலையை எண்ணிப் பாருங்கள். மக்கதோனியாவை விட்டு நான் வந்தபோது எனக்கு ஆதரவு கொடுத்தது, உங்கள் சபை மட்டுமே. 16 நான் தெசலோனிக்கேயில் இருந்தபோது எனக்குப் பலமுறை தேவைகளுக்கெல்லாம் அனுப்பி வைத்தீர்கள். 17 உண்மையில், நான் உங்களிடமிருந்து பரிசுப் பொருள்களை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை. ஆனால் உங்கள் கணக்குக்குப் பலன் பெருகும்படியே நாடுகிறேன். 18 எனக்குத் தேவைப்பட்டபோதெல்லாம் பொருள்கள் கிடைத்தன. தேவைக்கு அதிகமாகவும் கிடைக்கின்றன. உங்கள் பரிசை எப்பாப்பிரோதீத்து கொண்டு வந்ததன் மூலம் எனக்குத் தேவையான அனைத்தும் கிடைத்தன. உங்களது பரிசுகள் தேவனுக்கான மணமிக்க பலியைப்போல இருந்தன. அப்பலியை தேவன் ஏற்றுக்கொண்டார். அது அவருக்கு விருப்பமானதாயிற்று. 19 இயேசு கிறிஸ்துவின் மகிமையால் நமது தேவன் மிக உயர்ந்த செல்வந்தராக இருக்கிறார். அவர் அச்செல்வத்தைப் பயன்படுத்தி உமக்குத் தேவையானவற்றையெல்லாம் கொடுப்பார். 20 நமது பிதாவாகிய தேவனுக்கு மகிமை என்றென்றைக்கும் உண்டாவதாக. ஆமென்.

21 கிறிஸ்துவின் மக்கள் அனைவரும் ஒருவரையொருவர் பார்க்கும்போது வாழ்த்துதல் கூறுங்கள். என்னோடு இருக்கிற தேவனுடைய மக்களும் உங்களுக்கு வாழ்த்துதல் கூறுகிறார்கள். 22 பரிசுத்தமான அனைத்து மக்களும், சிறப்பாக இராயனுடைய அரண்மனையிலுள்ளவர்களும் உங்களுக்கு வாழ்த்து சொல்கிறார்கள்.

23 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center