Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
யாத்திராகமம் 29

ஆசாரியர்களின் நியமன விழா

29 பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி, “எனக்கு ஆசாரியர்களாக விசேஷ பணிவிடையை ஆரோனும் அவன் மகன்களும் செய்யும்பொருட்டு நீ செய்ய வேண்டிய காரியங்களை நான் உனக்குக் கூறுவேன். ஒரு இளங்காளையையும், குறைகள் இல்லாத இரண்டு இளம் வெள்ளாடுகளையும் தேர்ந்தெடுத்துக்கொள். சுத்தமான கோதுமை மாவை புளிப்பில்லாத ரொட்டியாகச் செய்துகொள். அதே மாவைப் பயன்படுத்தி ஒலிவ எண்ணெயால் வார்ப்பு ரொட்டிகளையும் தயாரித்துக்கொள். சிறிய மெல்லிய அடைகளையும் எண்ணெய் பூசி உண்டாக்கு. வார்ப்பு ரொட்டிகளையும், அடைகளையும் ஒரு கூடையில் வைத்து அவைகளையும், காளையையும், இரண்டு கடாக்களையும் ஆரோனுக்கும் அவன் மகன்களுக்கும் கொடு.

“ஆசாரிப்புக் கூடாரத்தின் நுழை வாயிலுக்கு ஆரோனையும், அவனது மகன்களையும் அழைத்துவா. அவர்களை தண்ணீரில் கழுவின பின்பு ஆரோனுக்கு விசேஷ ஆடைகளை அணிவி. முழுவதும் நெய்த வெள்ளை அங்கியையும், ஏபோத்தோடு அணிய வேண்டிய நீல அங்கியையும் உடுத்திவிடு. அதன் மேல் ஏபோத்தையும், நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தையும் அணியச்செய். அழகிய அரைக்கச்சையை கட்டிவிடு. தலைப்பாகையை அவன் தலையில் வைத்து, அதன்மேல் பரிசுத்த கிரீடத்தை வை. பின்பு அபிஷேக எண்ணெயை எடுத்து ஆரோனின் தலையின்மேல் ஊற்று. கர்த்தருக்குரிய ஆசாரியப் பணிவிடைக்கு ஆரோன் பிரித்தெடுக்கப்பட்டதை இது காட்டும்.

“பின்பு ஆரோனின் மகன்களை அந்த இடத்திற்கு அழைத்து வா. முழுவதும் நெய்யப்பட்ட வெள்ளை நிற அங்கிகளை அவர்களுக்கு அணிவி. பின் அரைக்கச்சைகளைக் கட்டிவிடு. அவர்கள் அணிவதற்கான விசேஷ பாகைகளைக் கொடு. அப்போதிலிருந்து அவர்கள் ஆசாரியர்களாகப் பணி செய்ய ஆரம்பிப்பார்கள். என்றென்றைக்குமான விசேஷ சட்டப்படி அவர்கள் ஆசாரியர்களாக இருப்பார்கள். இவ்வாறு ஆரோனையும் அவன் மகன்களையும் நீ ஆசாரியர்களாக்கவேண்டும்.

10 “ஆசாரிப்புக் கூடாரத்திற்கு முன் காளையைக் கொண்டு வா. ஆரோனும், அவனது மகன்களும் தங்கள் கைகளைக் காளையின் தலையில் வைக்கட்டும். 11 ஆசாரிப்புக் கூடாரத்தின் நுழைவாயிலில் காளையைக் கொல். கர்த்தர் இதைப் பார்ப்பார். 12 காளையின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து பலிபீடத்திற்குச் செல். உனது விரல்களை இரத்தத்தில் தோய்த்து பலிபீடத்தின் கொம்புகளில் பூசு. மீதி இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிடு. 13 காளையின் உட்புறத்திலுள்ள எல்லா கொழுப்பையும், ஈரலின் மேலுள்ள சவ்வையும், சிறுநீரகங்களையும், அவைகளை சுற்றிய கொழுப்பையும் எடுத்து, பலிபீடத்தில் எரித்துவிடு. 14 பின் காளையின் மாமிசம், அதன் தோல், பிற பகுதிகளை எடுத்துவிட்டு பாளையத்துக்கு வெளியே கொண்டுபோய் அவற்றைச் சுட்டெரித்துவிடு. இதுவே ஆசாரியர்களின் பாவத்தைப் போக்குவதற்கான காணிக்கை ஆகும்.

15 “பின் ஆரோனும், அவனது மகன்களும் ஆட்டுக் கடாவின் தலையில் தம் கைகளை வைக்கும்படி சொல். 16 கடாவைக் கொன்று இரத்தத்தைச் சேகரித்துப் பலிபீடத்தைச் சுற்றிலும் நான்கு பக்கங்களிலும் அதைத் தெளித்துவிடு. 17 செம்மறி ஆட்டுக் கடாவைப் பல துண்டுகளாக்கு. அதன் எல்லா உட்பாகங்களையும், கால்களையும் கழுவு. அவற்றை செம்மறி ஆட்டுக் கடாவின் தலையோடும், அதன் மற்ற துண்டுகளோடும் வை. 18 எல்லாவற்றையும் பலிபீடத்தில் எரித்துவிடு. இது கர்த்தருக்குத் தரப்படும் தகனபலியாகும். கர்த்தருக்கு சுகந்த வாசனையாக இது இருக்கும்.

19 “ஆரோனும், அவனது மகன்களும் மற்றொரு ஆட்டுக் கடாவின்மேல் தம் கைகளை வைக்கட்டும். 20 அக்கடாவைக் கொன்று கொஞ்சம் இரத்தத்தை சேகரித்துக்கொள். அந்த இரத்தத்தை ஆரோனின் வலது காது மடலிலும், அவன் மகன்களின் வலது காது மடலிலும், அவர்களின் வலது கைப் பெரு விரல்களிலும், அவர்களின் வலது கால் பெருவிரல்களிலும் தடவு. பின்பு பலிபீடத்தின் 4 பக்கங்களின் எதிரிலும் மீதி இரத்தத்தை தெளி. 21 பிறகு சிறிது இரத்தத்தைப் பலி பீடத்திலிருந்து எடுத்து அதை விசேஷ எண்ணெயுடன் கலந்து ஆரோன் மீதும் அவன் ஆடைகள் மீதும் தெளி. பின்பு அவனது மகன்கள் மற்றும் அவர்களின் ஆடைகள் மீதும் தெளி. ஆரோனும் அவனது மகன்களும் எனக்கு விசேஷ பணிவிடை செய்பவர்கள் என்பதையும், இந்த ஆடைகள் விசேஷ காலங்களில் மாத்திரம் பயன்படுத்தப்பட வேண்டியவை என்பதையும் இது காட்டும்.

22 “பின்பு ஆட்டுக் கடாவிலிருந்து கொழுப்பை அகற்று. (ஆரோனை தலைமை ஆசாரியனாக நியமிக்கும் விழாவில் பயன்படுத்தப்படும் கடா இது.) வாலையும், உட்பாகங்களையும் சூழ்ந்திருக்கும் கொழுப்பையும், ஈரலின் மேலுள்ள சவ்வையும், சிறுநீரகங்களையும் அவைகளைச் சுற்றி இருக்கும் கொழுப்பையும் வலது காலையும் எடுத்துக்கொள். 23 பின் புளிப்பு இல்லாத ரொட்டி இருக்கும் கூடையை எடுத்துக்கொள். கர்த்தரின் முன் வைக்க வேண்டிய கூடை இது. ஒரு வார்ப்பு ரொட்டி, எண்ணெயால் செய்யப்பட்ட அடை, ஒரு சிறிய மெல்லிய அடை ஆகியவற்றைக் கூடையில் இருந்து எடுக்க வேண்டும். 24 இவற்றை ஆரோனுக்கும், அவன் மகன்களுக்கும் கையில் கொடு. இவற்றை அவர்கள் ஏந்தி நிற்கும்படி செய். கர்த்தருக்கு உகந்த அசைவாட்டும் காணிக்கையாக அவர்கள் அதை அசைவாட்ட வேண்டும். 25 பின்பு அவற்றை அவர்களிடமிருந்து வாங்கிக் ஆட்டுக்கடாவோடு பலிபீடத்தில் சுட்டெரி. இது நெருப்பின் மூலமாக தேவனுக்குத் தரப்படும் தகன பலியாகும். அதன் சுகந்த வாசனை கர்த்தருக்கு ஏற்றது.

26 “ஆட்டுக்கடாவின் (இந்தக் கடா ஆரோனை தலைமை ஆசாரியனாக்கும் விழாவில் பயன்படுத்தப்படும்) மார்புப் பகுதியை விசேஷ காணிக்கையாக கர்த்தரின் முன்னிலையில் ஏந்தி நிற்க வேண்டும். பின் அதை எடுத்து வை. மிருகத்தின் இந்தப் பகுதி உனக்குரியது. 27 ஆரோனைத் தலைமை ஆசாரியனாக்குவதற்குப் பயன்படுத்திய கடாவின் மார்புப் பகுதி, கால் ஆகியவற்றை எடுத்து அவற்றை பரிசுத்தப்படுத்து. அந்த விசேஷ பாகங்களை ஆரோனுக்கும், அவன் மகன்களுக்கும் கொடு. 28 இஸ்ரவேல் ஜனங்கள் எப்போதும் இப்பாகங்களை ஆசாரியர்களுக்கு கொடுத்துவிட வேண்டும். இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தருக்கு காணிக்கை செலுத்தும்போதெல்லாம் இப்பாகங்கள் ஆசாரியர்களுக்கு உரியவை. இவற்றை அவர்கள் ஆசாரியர்களுக்குக் கொடுக்கும்போது அது கர்த்தருக்கு கொடுப்பதற்குச் சமமாகும்.

29 “ஆரோனுக்காகச் செய்த அந்த விசேஷ ஆடைகளைப் பாதுகாப்பாக வைத்திரு. அவனுக்குப்பின் வரும் மகன்களுக்கும் அந்த ஆடைகள் உரியனவாகும். தலைமை ஆசாரியர்களாகத் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் அவற்றை அணிவார்கள். 30 ஆரோனின் மகன் அவனுக்குப்பின் தலைமை ஆசாரியனாவான். பரிசுத்த இடத்தில் பணியாற்றுவதற்காக ஆசாரிப்புக் கூடாரத்தில் பிரவேசிக்கும்போது 7 நாளளவும் அவன் அதை உடுத்த வேண்டும்.

31 “ஆரோனை தலைமை ஆசாரியனாக்க பயன்படுத்திய ஆட்டுக்கடாவின் மாம்சத்தை பரிசுத்தமான இடத்தில் சமைக்க வேண்டும். 32 முன் வாசலில் ஆரோனும் அவன் மகன்களும் அதை உண்ண வேண்டும். ஆசாரிப்புக் கூடாரத்தின் கூடையிலுள்ள ரொட்டியையும் அவர்கள் சாப்பிட வேண்டும். 33 அவர்கள் ஆசாரியர்களானபோது, அவர்கள் பாவங்களை அகற்ற இந்தக் காணிக்கை பயன்படுத்தப்பட்டது. இப்போது அவர்கள் அவற்றை உண்ண வேண்டும். அவைகள் பரிசுத்தமானதால் அந்நியன் அவைகளை உண்ணக் கூடாது. 34 மறு நாள் காலையில் கடாவின் மாமிசமோ, ரொட்டியோ மீதியிருந்தால் அது முற்றிலும் சுட்டெரிக்கப்பட வேண்டும். அதை விசேஷ காலத்தில் விசேஷ வகையில் சாப்பிட வேண்டுமாதலால் அந்த ரொட்டியையோ, மாமிசத்தையோ நீ சாப்பிடக் கூடாது.

35 “ஆரோனுக்காகவும், அவன் மகன்களுக்காகவும் நீ அவற்றைச் செய்ய வேண்டும். நான் சொன்னபடியே அவற்றைச் செய்ய வேண்டும். ஆசாரியர்களாக அவர்களை நியமிக்கும் விழா 7 நாட்கள் தொடர வேண்டும். 36 ஏழு நாட்களிலும் தினந்தோறும் ஒவ்வொரு காளையைக் கொல்ல வேண்டும். ஆரோன், அவன் மகன்களின் பாவங்களுக்காக செலுத்தப்பட்ட பலியாக இது அமையும். பலிபீடத்தைப் பரிசுத்தப் படுத்துவதற்கு இப்பலிகளை நீ பயன்படுத்த வேண்டும். அதைப் பரிசுத்தமாக்க ஒலிவ எண்ணெயை ஊற்ற வேண்டும். 37 அந்த 7 நாட்களில் பலிபீடத்தை சுத்தமாகவும், பரிசுத்தமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். அப்போது பலிபீடம் மகா பரிசுத்தமாகும். பலிபீடத்தைத் தொடும் எப்பொருளும் பரிசுத்தம் ஆகும்.

38 “ஒவ்வொரு நாளும் பலிபீடத்தில் ஒரு காணிக்கை செலுத்த வேண்டும். ஒரு வயது நிரம்பிய இரண்டு ஆட்டுக்குட்டிகளைக் கொல்ல வேண்டும். 39 ஒரு ஆட்டுக்குட்டியைக் காலையிலும் மற்றொன்றை மாலையிலும் காணிக்கையாய் செலுத்த வேண்டும். 40-41 முதல் ஆட்டுக்குட்டியைக் கொல்லும்போது, சுத்தமான அரைத்த 8 கிண்ணம் கோதுமை மாவைக் காணிக்கையாகக் கொடுக்க வேண்டும். அந்த மாவைக் கால்படி திராட்சைரசத்தோடு சேர்த்து காணிக்கையாக அளிக்க வேண்டும். மாலையில் இரண்டாவது ஆட்டுக்குட்டியைக் கொல்லும்போதும் 8 கிண்ணம் மாவையும் கால்படி திராட்சை ரசத்தையும் காலையில் செய்தது போலவே காணிக்கையாகக் கொடுக்க வேண்டும். அது கர்த்தருக்கு அளிக்கும் சுகந்த வாசனையான தகன காணிக்கையாகும். இதனை எரிக்கும்போது, கர்த்தர் வாசனையை முகருவார், அது அவரை மகிழ்விக்கும்.

42 “ஒவ்வொரு நாளும் இவற்றைச் சர்வாங்க தகனக் காணிக்கையாக எரிக்க வேண்டும். கர்த்தருக்கு முன்பாக ஆசாரிப்புக் கூடாரத்தின் நுழைவாயிலில் இதைச் செய். தொடர்ந்து உனது தலைமுறைகளுக்கும் இவ்வாறே செய். நீ காணிக்கை செலுத்தும்போது கர்த்தராகிய நான் உங்களைச் சந்தித்துப் பேசுவேன். 43 அங்கு இஸ்ரவேல் ஜனங்களைச் சந்திப்பேன். எனது மகிமை அவ்விடத்தைப் பரிசுத்தப்படுத்தும்.

44 “ஆசாரிப்புக் கூடாரத்தையும் பலிபீடத்தையும் நான் பரிசுத்தப்படுத்துவேன். ஆரோனையும், அவனது மகன்களையும் எனக்கு ஆசாரியராகப் பணியாற்றுவதற்காகப் பரிசுத்தமாக்குவேன். 45 நான் இஸ்ரவேல் ஜனங்களோடு வாழ்வேன், நான் அவர்கள் தேவனாக இருப்பேன். 46 நானே தேவனாகிய கர்த்தர் என்பதை ஜனங்கள் அறிவார்கள். அவர்களோடு வாழும்படியாக அவர்களை எகிப்திலிருந்து வழிநடத்திய தேவன் நான் என்பதை அவர்கள் அறிவார்கள். நானே அவர்கள் தேவனாகிய கர்த்தர்” என்றார்.

யோவான் 8

இயேசுவோ ஒலிவ மலைக்குப் போனார். மறுநாள் அதிகாலையில் அவர் திரும்பவும் தேவாலயத்துக்குப் போனார். அனைவரும் இயேசுவிடம் வந்தனர். இயேசு உட்கார்ந்து மக்களுக்கு உபதேசித்தார்.

வேதபாரகரும், பரிசேயரும் ஒரு பெண்ணை அவரிடம் கொண்டுவந்தனர். அவள் விபசாரம் செய்ததற்காகப் பிடிக்கப்பட்டவள். அவளை மக்களுக்கு முன்னால் நிற்கும்படி யூதர்கள் வற்புறுத்தினர். அவர்கள் இயேசுவிடம், “போதகரே, இந்தப் பெண் ஒருவனிடம் கள்ளத்தனமாக உறவுகொண்டிருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டாள். மோசேயின் சட்டப்படி இவ்வாறு பாவம் செய்கிற ஒவ்வொரு பெண்ணையும் கல் எறிந்து கொல்லவேண்டும். நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று நீர் சொல்கிறீர்?” என்று கேட்டனர்.

யூதர்கள் இந்தக் கேள்வியை இயேசுவைச் சோதிப்பதற்காகக் கேட்டனர். இயேசுவின் மீது ஏதாவது குற்றம் சுமத்தவே அவர்கள் விரும்பினர். ஆனால் இயேசுவோ குனிந்து தரையில் தன் விரலால் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். யூதத் தலைவர்கள் அதே கேள்வியை இயேசுவிடம் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தனர். ஆகையால் இயேசு எழுந்து நின்று, “பாவமே செய்யாதவன் எவனாவது இங்கே இருக்கிறானா? இருந்தால் பாவம் செய்யாத அந்த மனிதன் இவள் மீது முதல் கல்லை எறியட்டும்” என்றார். பிறகு இயேசு மறுபடியும் கீழே குனிந்து தரையில் ஏதோ எழுத ஆரம்பித்தார்.

இயேசுவின் வார்த்தைகளைக் கேட்ட மக்கள் ஒவ்வொருவராக விலகிப் போயினர். முதலில் முதியவர்கள் விலகினர்; பிறகு மற்றவர்கள் விலகினர். அந்தப் பெண்ணோடு இயேசு மட்டும் தனியாக விடப்பட்டார். அவள் அவருக்கு முன்னால் நின்றுகொண்டிருந்தாள். 10 இயேசு அவளை ஏறிட்டுப்பார்த்து, “பெண்ணே, எல்லோரும் போய்விட்டார்கள். ஒருவனும் உன்னைக் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கவில்லையா?” என்று கேட்டார்.

11 அதற்கு அவள், “ஆண்டவரே, எவரும் என்னைத் தண்டனைக்குட்படுத்தித் தீர்ப்பளிக்கவில்லை” என்றாள்.

பிறகு இயேசு, “நானும் உனக்குத் தீர்ப்பளிக்கவில்லை. இப்பொழுது நீ போகலாம், ஆனால் மறுபடியும் பாவம் செய்யாதே” என்றார்.

இயேசுவே உலகத்தின் ஒளி

12 மீண்டும் இயேசு மக்களோடு பேசினார். அவர், “நானே உலகத்துக்கு ஒளி. என்னைப் பின்பற்றி வருகிற எவனும் ஒருபோதும் இருளில் வாழமாட்டான். அவன் வாழ்வைத் தருகிற ஒளியைப் பெறுவான்” என்றார்.

13 ஆனால் பரிசேயர்கள் இயேசுவிடம், “உன்னைக்குறித்து நீ பேசும்போது நீ சொல்வதை உண்மையென்று நீ மாத்திரமே கூறுகிறாய். ஆகையால் நீ சொல்லுகின்றவற்றை நாங்கள் ஒத்துக் கொள்ளமுடியாது” என்றனர்.

14 அதற்கு இயேசு, “ஆம், என்னைப்பற்றி நானே பேசிக்கொண்டிருக்கிறேன். ஆனால் நான் சொல்லுகின்றவற்றை மக்கள் நம்ப முடியும். ஏனெனில் நான் எங்கேயிருந்து வந்தேன் என்பது எனக்குத் தெரியும். அதோடு எங்கே போகிறேன் என்றும் எனக்குத் தெரியும். நான் உங்களைப் போன்றவன் இல்லை. நான் எங்கிருந்து வந்தேன் என்றும் எங்கே போகிறேன் என்றும் உங்களுக்குத் தெரியாது. 15 சாதாரணமாக ஒருவனைப் பார்த்து கணிக்கிற விதத்திலேயே நீங்கள் என்னைப்பற்றி கணிக்கிறீர்கள். நான் எவரைப்பற்றியும் கணிப்பதில்லை. 16 ஆனால் நான் கணிக்கும்போது என் கணிப்பு உண்மையுள்ளதாக இருக்கும். ஏனென்றால் தீர்ப்பளிக்கும் காலத்தில் நான் தனியாளாக இல்லை. என்னை அனுப்பிய என் பிதா என்னோடு இருக்கிறார். 17 இரண்டு சாட்சிகள் ஒரே உண்மையைச் சொன்னால் உங்கள் சட்டம் உண்மைதான் என்று ஏற்றுக்கொள்கிறது. 18 நானும் என்னைப்பற்றி சொல்லுகிற ஒரு சாட்சி, அத்துடன் என்னை அனுப்பிய என் பிதாவும் எனது இன்னுமொரு சாட்சி” என்றார்.

19 மக்கள் அவரிடம் “உன் பிதா எங்கே இருக்கிறார்?” என்று கேட்டார்கள். “நீங்கள் என்னைப் பற்றியும் என் பிதாவைப்பற்றியும் அறியமாட்டீர்கள். ஆனால் நீங்கள் என்னை அறிந்துகொண்டால் என் பிதாவையும் அறிந்துகொள்வீர்கள்” என்று பதிலுரைத்தார். 20 இயேசு தேவாலயத்தில் உபதேசம் செய்யும்பொழுது இவற்றைச் சொன்னார். எல்லோரும் பணம் செலுத்துகிற இடத்தில் இயேசு இருந்தார். ஆனால் எவரும் அவரைக் கைதுசெய்யவில்லை. இயேசுவிற்கு அந்த வேளை இன்னும் வரவில்லை.

யூதர்களின் அறியாமை

21 மீண்டும் இயேசு மக்களிடம், “நான் உங்களை விட்டுப் போகிறேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள். நீங்கள் உங்கள் பாவங்களோடு சாவீர்கள். நான் போகிற இடத்துக்கு உங்களால் வரமுடியாது” என்றார்.

22 எனவே யூதர்கள் தங்களுக்குள், “இயேசு தன்னைத்தானே கொன்றுகொள்வாரா? அதனால்தான் நான் போகிற இடத்துக்கு உங்களால் வர முடியாது என்று கூறினாரா?” என்று கேட்டுக்கொண்டனர்.

23 அந்த யூதர்களைப் பார்த்து இயேசு, “நீங்கள் கீழே இருந்து வந்தவர்கள். ஆனால் நான் மேலே இருந்து வந்தவன். நீங்கள் இந்த உலகத்துக்கு உரியவர்கள். ஆனால் நான் இந்த உலகத்தைச் சார்ந்தவன் அல்லன். 24 நீங்கள் உங்கள் பாவங்களிலேயே மரிப்பீர்கள் என்று நான் சொல்லியிருக்கிறேன். ஆம். நானே [a] அவர் என்பதை நம்பாவிட்டால் உங்கள் பாவங்களோடேயே நீங்கள் மரணமடைவீர்கள்.”

25 அதற்கு யூதர்கள், “நீங்கள் யார்?” என்று கேட்டார்கள்.

இயேசுவோ அவர்களிடம், “நான் ஆரம்பத்திலேயே உங்களுக்குச் சொல்லியவர்தான். 26 உங்களைப்பற்றிச் சொல்ல என்னிடம் நிறைய செய்திகள் உள்ளன. நான் உங்களை நியாயம் தீர்க்கவும் முடியும். என்னை அனுப்பினவரிடமிருந்து கேட்டவற்றையே நான் மக்களுக்குச் சொல்கிறேன். அவர் உண்மையைப் பேசுகிறவர்” என்றார்.

27 இயேசு யாரைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறார் என்று யூதர்கள் அறிந்துகொள்ள முடியாமல் இருந்தனர். இயேசு அவர்களிடம் பிதாவைப்பற்றி கூறிக்கொண்டிருந்தார். 28 எனவே இயேசு மக்களிடம், “நீங்கள் மனித குமாரனைக் கொல்லும்போது நான்தான் என்று அறிந்துகொள்வீர்கள். அத்துடன் நான் இதுவரை செய்த செயல்களை என் சொந்த அதிகாரத்தில் செய்யவில்லை என்பதையும் அறிவீர்கள். பிதா எனக்குச் சொன்னவற்றையே நான் உங்களுக்குச் சொன்னேன் என்பதையும் அறிந்துகொள்வீர்கள். 29 என்னை அனுப்பிய ஒருவர் எப்போதும் என்னோடேயே இருக்கிறார். அவருக்கு விருப்பமானவற்றையே நான் எப்போதும் செய்துகொண்டிருக்கிறேன். எனவே, அவர் என்னைத் தனியாக விட்டுவிடவில்லை” என்றார். 30 இவ்வாறு இயேசு சொல்லிக்கொண்டிருந்தபோது ஏராளமான மக்கள் அவரிடம் விசுவாசம் வைத்தனர்.

பாவத்திலிருந்து விடுதலை

31 இயேசு தன்மீது நம்பிக்கை வைத்த யூதர்களைப் பார்த்து, “நீங்கள் என் உபதேசத்தைக் கைக்கொண்டு வந்தால், நீங்கள் உண்மையில் எனது சீஷர்களாக இருப்பீர்கள். 32 பின்னர் நீங்கள் உண்மையை அறிந்துகொள்வீர்கள். அந்த உண்மை உங்களுக்கு விடுதலையைத் தரும்” என்றார்.

33 “நாங்கள் ஆபிரகாமின் மக்கள். நாங்கள் ஒருபோதும் அடிமைகளாய் இருந்ததில்லை. ஆகவே நாங்கள் விடுதலை பெறுவோம் என்று ஏன் சொல்கிறீர்?” என்று யூதர்கள் கேட்டனர்.

34 அதற்குப் பதிலாக, “நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், பாவம் செய்கிற ஒவ்வொருவனும் அடிமைதான். பாவமே அவனது எஜமானன். 35 ஓர் அடிமை எப்பொழுதும் ஒரு குடும்பத்தில் நிலையாக இருக்கமாட்டான். குமாரன் என்றென்றும் குடும்பத்தில் நிலைத்திருக்கிறார். 36 எனவே குமாரன் உங்களை விடுதலை செய்தால் நீங்கள் உண்மையான விடுதலையைப் பெறுவீர்கள். 37 நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகள் என்று எனக்குத் தெரிகிறது. ஆனால் நீங்கள் என்னைக் கொல்ல விரும்புகிறீர்கள். ஏனென்றால் நீங்கள் என் உபதேசத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. 38 என் பிதா எனக்குக் காட்டியவற்றையே நான் உங்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறேன். ஆனால் உங்கள் பிதா உங்களுக்குச் சொன்னபடியே செய்துகொண்டிருக்கிறீர்கள்” என்றார்.

39 “எங்கள் பிதா ஆபிரகாம்தான்” என்றனர் யூதர்கள். இயேசு அவர்களுக்கு விடையாக “நீங்கள் உண்மையிலேயே ஆபிரகாமின் பிள்ளைகள் என்றால் அவர் செய்தவற்றையே நீங்களும் செய்ய வேண்டும். 40 நான் தேவனிடமிருந்து கேட்ட உண்மையை உங்களுக்குச் சொல்லுகிற மனிதன். ஆனால் நீங்கள் என்னைக் கொல்ல முயலுகிறீர்கள். ஆபிரகாம் இதுபோல் எதுவும் செய்யவில்லை. 41 ஆகையால் நீங்கள் உங்கள் சொந்தப் பிதா செய்ததையே செய்கிறீர்கள்” என்றார்.

ஆனால் யூதர்கள், “எங்கள் பிதா யாரென்று தெரிந்துகொள்ள இயலாத குழந்தைகள் அல்ல நாங்கள். தேவனே எங்கள் பிதா. எங்களுக்குரிய ஒரே பிதாவும் அவரே” என்றனர்.

42 இயேசு அவர்களிடம், “தேவன்தான் உங்களது உண்மையான பிதா என்றால் நீங்கள் என்மீது அன்பு செலுத்தியிருப்பீர்கள். நான் தேவனிடமிருந்து வந்தேன். இப்பொழுது இங்கே இருக்கிறேன். நான் என் சொந்த அதிகாரத்தின் பேரில் வரவில்லை. தேவன் என்னை அனுப்பினார். 43 நான் சொல்லுகிறவற்றையெல்லாம் உங்களால் புரிந்துகொள்ள முடியாது. ஏனென்றால் என் உபதேசத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. 44 பிசாசே உங்கள் பிதாவாயிருக்கிறான். நீங்கள் அவனுக்கு உரியவர்கள். அவனுக்கு விருப்பமானவற்றையே நீங்கள் செய்யவிரும்புகிறீர்கள். தொடக்கம் முதலே பிசாசானவன் கொலைகாரனாக இருக்கிறான். அவன் உண்மைக்கு எதிரானவன். அவனிடம் உண்மை இல்லை. அவன் அவனால் சொல்லப்படுகிற பொய்யைப் போன்றவன். அவன் ஒரு பொய்யன். அவன் பொய்களின் பிதா.

45 “நான் உண்மையைப் பேசுகிறேன். அதனால்தான் நீங்கள் என்னை நம்புவதில்லை. 46 உங்களில் எவராவது ஒருவர் நான் பாவம் செய்தவன் என்று நிரூபிக்க இயலுமா? நான் சொல்வது உண்மையாக இருக்கும்போது என்னை ஏன் நம்பாமல் இருக்கிறீர்கள்? 47 தேவனைச் சேர்ந்த எவனும் தேவனின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்கிறான். ஆனால் நீங்கள் தேவனின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்வதில்லை. ஏனென்றால் நீங்கள் தேவனைச் சார்ந்தவர்கள் இல்லை” என்றார்.

இயேசுவும்-ஆபிரகாமும்

48 யூதர்கள் இயேசுவிடம், “நாங்கள் உன்னை சமாரியன் என்று சொல்கிறோம். பிசாசு உன்னிடம் புகுந்ததால் நீ உளறுகிறாய் என்றும் சொல்கிறோம். நாங்கள் சொல்வது சரிதானே?” என்று கேட்டனர்.

49 “என்னிடம் எந்தப் பிசாசும் இல்லை. நான் என் பிதாவுக்கு மகிமை உண்டாக்குகிறேன். ஆனால் நீங்கள் எனக்கு மகிமையை அளிப்பதில்லை. 50 நான் எனக்கு மகிமையைச் சேர்த்துக்கொள்ள முயன்று கொண்டிருக்கவில்லை. இந்த மகிமைக்குரியவர் ஒருவர் இருக்கிறார். அவரே நீதிபதி. 51 நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். எவனொருவன் என் உபதேசத்துக்கு கீழ்ப்படிகிறானோ அவன் ஒருபோதும் இறந்துபோவதில்லை” என்றார் இயேசு.

52 யூதர்களோ இயேசுவிடம், “உனக்குப் பிசாசு பிடித்திருக்கிறது என்பது இப்பொழுது உறுதியாயிற்று. ஆபிரகாமும் தீர்க்கதரிசிகளும்கூட இறந்துபோய்விட்டார்கள். ஆனால் நீயோ, ‘என் உபதேசத்துக்குக் கீழ்ப்படிகிறவன் ஒருபோதும் இறந்துபோவதில்லை’ என்று கூறுகிறாய். 53 எங்கள் பிதா ஆபிரகாமைவிடப் பெரியவன் என்று நீ உன்னை நினைத்துக்கொள்கிறாயா? ஆபிரகாம் இறந்துபோனார். தீர்க்கதரிசிகளும் இறந்துபோயினர். உன்னை நீ யாரென்று நினைத்துக்கொண்டிருக்கிறாய்?” எனக் கேட்டனர்.

54 இயேசு அவர்களிடம், “எனக்கு நானே மகிமை அளித்துக்கொண்டால் அது வீணாகிவிடும். என் பிதா எனக்கு மகிமை அளித்துக்கொண்டிருக்கிறார். அவர் உங்கள் தேவன் என்று நீங்கள் சொல்லிக்கொள்கிறீர்கள். 55 ஆனால் அவரை நீங்கள் உண்மையில் அறிந்து கொள்ளவில்லை. நான் அவரை அறிகிறேன். நான் அவரை அறியேன் என்று சொன்னால், நான் உங்களைப் போன்றே ஒரு பொய்யனாக இருப்பேன். ஆனால் அவரை நான் அறிவேன். அவர் சொன்னவற்றுக்குக் கீழ்ப்படிகிறேன். 56 உங்கள் தந்தையாகிய ஆபிரகாம் நான் வந்த நாளைக் காண்பேன் என்று மகிழ்ச்சியடைந்தார். அவர் அந்த நாளைக் கண்டு மகிழ்ச்சியும் அடைந்தார்” என்றார்.

57 யூதர்கள் இயேசுவிடம், “என்ன சொன்னாய்? நீ ஒருபோதும் ஆபிரகாமைப் பார்த்திருக்க முடியாது. உனக்கு இன்னும் ஐம்பது வயதுகூட ஆகவில்லையே!” என்று கேட்டனர்.

58 “நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இருக்கிறேன்” என்றார் இயேசு. 59 இயேசு இதைச் சொன்னதும் மக்கள் அவர் மீதுக் கல் எறிவதற்குக் கற்களைப் பொறுக்கினார்கள். ஆனால் இயேசு மறைந்து அந்த தேவாலயத்தை விட்டு விலகிப்போனார்.

நீதிமொழிகள் 5

விபச்சாரத்தை விட்டு விலக்கும் ஞானம்

என் மகனே, எனது ஞானமுள்ள போதனையைக் கவனமுடன் கேள். அறிவைப்பற்றிய என் வார்த்தைகளில் கவனம் செலுத்து. பிறகு ஞானத்தோடு வாழ்வதற்கு நினைவுகொள்வாய். நீ என்ன சொல்வாயோ அதில் கவனமாக இருப்பாய். அடுத்தவனின் மனைவியினுடைய வார்த்தைகள் இனிமையாகத் தோன்றலாம். அவளது வார்த்தைகள் இனிப்பாகவும், கவர்ச்சியாகவும் தோன்றலாம். ஆனால் முடிவில் அவள் உனக்குக் கசப்பையும் வேதனையுமே தருவாள். அந்த வேதனையானது விஷத்தை போன்று கொடுமையானதாகவும், வாளைப் போன்று கூர்மையானதாகவும் இருக்கும். அவளது கால்கள் மரணத்தை நோக்கிப் போகும். அவள் உன்னை நேரடியாகக் கல்லறைக்கே அழைத்துச் செல்வாள். அவளைப் பின்பற்றிச் செல்லாதே. அவள் சரியான பாதையைத் தவறிவிட்டவள். அவளுக்கு அதைப்பற்றியும் தெரியாது. எச்சரிக்கையாக இரு. வாழ்வுக்கான வழியை பின்பற்றிச்செல்.

என் பிள்ளைகளே! இப்பொழுது நான் சொல்வதைக் கவனியுங்கள். நான் சொல்லுகின்றவற்றை மறந்துவிடாதீர்கள். விபச்சாரம் என்னும் பாவத்தைச் செய்கின்ற பெண்ணிடமிருந்து விலகி நில். அவளது வீட்டுக் கதவின் அருகில் போகாதே. நீ அவற்றை செய்தால் நீ பெறவேண்டிய மதிப்பை மற்ற ஜனங்கள் பெறுவார்கள். நீ வருடக்கணக்கில் உழைத்துப் பெற்றப் பொருட்களை அந்நியன் ஒருவன் பெறுவான். முடிவில் உன் வாழ்வை இழப்பாய். தீயவர்கள் உன்னிடமிருந்து அதனை எடுத்துக்கொள்வார்கள். 10 உனக்குத் தெரியாதவர்கள் வந்து உன் செல்வத்தை எடுத்துக்கொள்வார்கள். உனது உழைப்பின் பலனை மற்றவர்கள் அடைவார்கள். 11 உன் வாழ்வின் முடிவில் நீ உனது செயலைக்குறித்து வருத்தப்படுவாய். உன் வாழ்க்கையை நீயே அழித்துக்கொள்கிறாய். ஆரோக்கியமும் உனக்குச் சொந்தமான அனைத்தும் அழியும். 12-13 பிறகு நீ, “நான் ஏன் என் பெற்றோர்கள் சொன்னதைக் கேட்காமல் போனேன். என் போதகர்கள் சொன்னதை ஏன் கேட்காமல் போனேன். நான் ஒழுக்கமாய் இருக்க மறுத்தேன். நான் திருத்தப்படமறுத்தேன். 14 இப்போது ஏறக்குறைய எல்லாவித பிரச்சனைகளிலும் அகப்பட்ட எனக்கு நேர்ந்த அவமானத்தை ஜனங்கள் அனைவரும் பார்க்கின்றனர்” என்று சொல்லுவாய்.

15-16 உன் சொந்த கிணற்றில் ஊறுகிற தண்ணீரை மட்டும் குடி. உனது தண்ணீர் தெருக்களில் வழிந்து ஓடும்படி விட்டுவிடாதே. நீ உன் மனைவியிடம் மட்டும் பாலின உறவு வைத்துக்கொள்ள வேண்டும். உன் சொந்த வீட்டுக்கு வெளியே உள்ள பிள்ளைகளுக்கும் தந்தை ஆகாதே. 17 உனது பிள்ளைகள் உனக்கு மட்டுமே உரியவர்களாக இருக்க வேண்டும். உன் வீட்டுக்கு வெளியே உள்ளவர்களோடு உன் பிள்ளைகளைப் பகிர்ந்துகொள்ளாதே. 18 எனவே உன் சொந்த மனைவியோடு மகிழ்ச்சியாக இரு. நீ இளமையாக இருக்கும்போது மணந்துகொண்ட மனைவியோடு மகிழ்ச்சியாக இரு. 19 அவள் ஒரு அழகான மானைப் போன்றவள். அன்பான பெண்ணாடு போன்றவள். அவளது அன்பால் திருப்தி அடைவாய். அவளது அன்பு உன்னைக் கவரட்டும். 20 ஆனால் அந்நிய பெண்ணின் கரங்களுள் நீ தடுமாறி விழாதே. இன்னொருவனது மனைவியின் அன்பு உனக்குத் தேவையில்லை.

21 நீ செய்கிற அனைத்தையும் கர்த்தர் தெளிவாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார். நீ எங்கே போகிறாய் என்று கவனிக்கிறார். 22 கெட்டவர்களின் பாவங்கள் அவர்களைச் சிக்கவைக்கும், அப்பாவங்கள் அவர்களைக் கயிறுகளைப்போன்று கட்டிக்கொள்ளும். 23 அத்தீயவன் மரித்துப்போவான், ஏனென்றால் ஒழுக்கமாய் இருக்க அவன் மறுத்துவிட்டான். அவன் தன் சொந்த ஆசைகளிலேயே சிக்கி அழிவான்.

கலாத்தியர் 4

இதை உங்களுக்குச் சொல்ல நான் விரும்புகிறேன். ஒருவன் தன் சொத்துக்களுக்கெல்லாம் உரிமையுடையவனாய் இருந்தும் அவன் சிறுபிள்ளையாய் இருந்தால் அவனுக்கும் அடிமைக்கும் எந்த வேறுபாடும் இல்லை. ஏனென்றால் அவன் குழந்தை. அவன் தன் பாதுகாப்பாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறான். ஆனால் தன் தந்தையின்படி குறித்த வயதை அடையும்போது அவன் சுதந்தரம் உள்ளவனாக விளங்குகிறான். நாமும் இதைப் போலத்தான். நாம் எல்லாரும் குழந்தைகளைப் போன்றவர்கள். நாம் பயனற்ற சட்டங்களுக்கு அடிமையாய் இருந்தோம். ஆனால் சரியான நேரம் வந்தபோது, தேவன் தன் மகனை அனுப்பினார். தேவனுடைய குமாரன் ஒரு பெண்ணினிடத்தில் பிறந்தார். அவரும் விதிமுறைகளின்படியே வாழ்ந்தார். இதனைச் செய்ததன் மூலம், சட்டங்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்த மக்களுக்கு தேவன் விடுதலையை வழங்கினார். நம்மை அவரது பிள்ளைகளாக ஆக்கவேண்டும் என்பது தான் இவரது நோக்கம்.

நீங்கள் தேவனுடைய பிள்ளைகள். அதனால் தான் தேவன் தம் மகனின் ஆவியை நமது இதயங்களுக்குள் அனுப்பினார். ஆவியானவரும் “பிதாவே, அன்பான பிதாவே” என்று கதறுகிறார். ஆகையால் இப்பொழுது நீங்கள் முன்பு போல அடிமைகள் அல்ல. நீங்கள் தேவனுடைய பிள்ளைகள். அவர் வாக்குறுதிப்படி உங்களுக்குத் தருவார். ஏனென்றால் நீங்கள் அவரது பிள்ளைகளாயிருக்கிறீர்கள்.

கலாத்திய கிறிஸ்தவர்கள் மீது பவுலின் அன்பு

முன்பு நீங்கள் தேவனை அறிந்திருக்கவில்லை. மெய்யாகவே தேவன் அல்லாத கடவுள்களுக்கு நீங்கள் அடிமைகளாகி இருந்தீர்கள். ஆனால் இப்போது நீங்கள் உண்மையான தேவனை அறிந்துகொண்டீர்கள். உண்மையில் அவர் உங்களை அறிந்துகொண்ட தேவன். எனவே எதற்காக நீங்கள் மறுபடியும் அந்தப் பலவீனமான, மோசமான ஆவிகளுக்கு அடிமைகளாக விரும்புகிறீர்கள். 10 நீங்கள் இப்போதும் சிறப்பான நாட்கள், மாதங்கள், பருவங்கள், ஆண்டுகள் பற்றிச் சட்டங்கள் கூறுவதைப் பின்பற்ற விரும்புகிறீர்கள். 11 நான் உங்களை எண்ணி அஞ்சுகிறேன். நான் உங்களுக்காக உழைத்ததெல்லாம் வீணாய்ப் போயிற்றோ என்று அஞ்சுகிறேன்.

12 சகோதர சகோதரிகளே நானும் உங்களைப் போன்றவன். எனவே, நீங்கள் என்னைப்போல மாறுங்கள். நீங்கள் என் முன்பு நல்லவர்களாகவே இருக்கிறீர்கள். 13 உங்களிடம் நான் முதன்முதல் எதற்காக வந்தேன் என்பதை நினைத்துப் பாருங்கள். ஏனென்றால் அப்போது நான் நோயாளியாய் இருந்தேன். அப்போதுதான் நான் நற்செய்தியை உங்களுக்குப் போதித்தேன். 14 எனது நோய் உங்களுக்குப் பாரமாயிற்று. எனினும் நீங்கள் என்னை வெறுக்கவில்லை. என்னை விலக்கவில்லை. என்னை தேவதூதனைப் போல வரவேற்றீர்கள். என்னை இயேசு கிறிஸ்துவைப் போன்று ஏற்றுக்கொண்டீர்கள். 15 அப்போது நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தீர்கள். இப்போது அந்த மகிழ்ச்சி எங்கே போயிற்று? எனக்கு உதவுவதற்காக நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருந்தீர்கள் என்று நினைக்கிறேன். உங்களால் முடியுமானால் உங்கள் கண்களையும் பிடுங்கி எடுத்து எனக்குத் தரத் தயாராக இருந்தீர்கள். 16 இப்பொழுது நான் உண்மையைச் சொல்வதால் உங்களுக்கு எதிரியாகிவிட்டேனா?

17 அவர்கள் உங்களைத் தேடி கடுமையாய் உழைக்கிறார்கள். ஆனால், இது உங்கள் நன்மைக்காக அல்ல. அது எங்களுக்கு எதிராயிற்று. என்னைப் பிரிந்து நீங்கள் அவர்களைப் பின்பற்றவேண்டும் என்றே விரும்புகிறார்கள். 18 நோக்கம் நல்லதாக இருக்கும் பட்சத்தில் மக்கள் உங்களிடம் ஆர்வம் காட்டுவது நல்லது. இது எப்பொழுதும் உண்மை. உங்களோடு நான் இருக்கும்போது மட்டுமல்ல, உங்களை விட்டுவிலகிய பிறகும் அவர்கள் உங்கள் மீது ஆர்வம் காட்ட வேண்டும். 19 என் சிறு பிள்ளைகளே| மீண்டும் நான் உங்களுக்காக வேதனைப்படுகிறேன். இது ஒரு பெண்ணின் பிரசவ வேதனையைப் போன்றது. இயேசுவைப் போன்று நீங்கள் ஆகும்வரை நான் இவ்வேதனையை அடைவேன். 20 நான் இப்போது உங்களுடன் இருப்பதை விரும்புகிறேன். பின்னர் வேண்டுமானால் உங்களோடு பேசின விதத்தை மாற்றிக்கொள்ள முடியும். உங்களைக் குறித்து என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை.

ஆகார், சாராளின் சான்று

21 உங்களில் சிலர் இப்பொழுதும் மோசேயின் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டிருக்க விரும்புகிறீர்கள். எனக்குச் சொல்லுங்கள்.சட்டம் என்னச் சொல்லுகின்றது என கவனிக்கவில்லையா? 22 ஆபிரகாமுக்கு இரண்டு பிள்ளைகள் உண்டு. ஒருவனின் தாய் ஒரு அடிமைப் பெண். இன்னொருவனின் தாய் சுதந்தரமானவள். 23 அடிமைப் பெண்ணின் மகன் சாதாரண முறையில் பிறந்தான். அடுத்த பெண்ணின் மகனோ தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதியின்படி பிறந்தவன்.

24 இந்த உண்மையான சம்பவம் நமக்கு ஒரு சித்திரத்தை உருவாக்கி காட்டுகிறது. இந்த இரண்டு பெண்களும் தேவன் மனிதனோடு செய்துகொண்ட இரண்டு உடன்படிக்கைகளைப் போன்றவர்கள். ஒன்று சீனாய் மலையில் தேவன் மனிதனோடு செய்த உடன்படிக்கை. இந்த உடன்படிக்கைக்குக் கீழ்ப்பட்ட மக்கள் எல்லோரும் அடிமைகளைப் போன்றவர்கள். ஆகார் இந்த உடன்படிக்கைக்கு உரியவள். 25 ஆகையால் ஆகார் என்பவள் அரேபியாவின் சீனாய் மலையைப் போன்று விளங்கினாள். இவள் தற்போதுள்ள எருசலேம் நகரத்தின் படமாயிருக்கிறாள். இந்த நகரமும் அடிமைப்பட்டிருக்கிறது. அதிலுள்ள யூத மக்களும் அடிமைப்பட்டு இருக்கின்றனர். 26 ஆனால் மேலிருக்கிற பரலோக எருசலேம் சுதந்தரமான பெண்ணைப் போன்றது. இதுவே நமது தாய். 27 கீழ்க்கண்டவாறு எழுதப்பட்டிருக்கிறது.

“பிள்ளை பெறாத மலடியே! மகிழ்ச்சியாய் இரு.
    எப்போதும் நீ குழந்தை பெறாதவள்.
உனக்குப் பிரசவ வேதனை என்னவெனத் தெரியாது.
    அதனால் நீ மகிழ்ச்சியுடன் சத்தமிடு.
கணவனுள்ள பெண்ணைவிட தனியாக இருக்கிற
    பெண்ணுக்கே அதிகப் பிள்ளைகள் உண்டு.” (A)

வெளிப்படுத்துதல்

28-29 ஆபிரகாமின் ஒரு பிள்ளை சாதாரண முறையில் பிறந்தவன். அவரது இன்னொரு பிள்ளை தேவனுடைய வாக்குறுதிப்படி ஆவியானவரின் வல்லமையால் பிறந்தான். சகோதர சகோதரிகளே, ஈசாக்கைப் போல நீங்களும் வாக்குறுதியால் வந்த பிள்ளைகளே! சாதாரண முறையில் பிறந்தவன், ஈசாக்கை மிக மோசமாக நடத்தினான். அது போலவே இன்றும் நடைபெறுகிறது. 30 ஆனால் வேதவாக்கியங்கள் என்ன கூறுகிறது? “அடிமைப் பெண்ணையும் அவளது மகனையும் தூக்கி எறியுங்கள். அடிமையாய் இல்லாதவளின் மகன் அவனது தந்தைக்குரியவற்றை எல்லாம் பெற்றுக்கொள்வான். ஆனால் அடிமைப் பெண்ணின் மகனோ எதையும் பெற்றுக்கெள்ளமாட்டான்.” [a] 31 ஆகையால் சகோதர சகோதரிகளே, நாம் அடிமைப் பெண்ணின் பிள்ளைகள் அல்ல. நாம் சுதந்தரமான பெண்ணின் பிள்ளைகள்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center