Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
யாத்திராகமம் 20

பத்துக் கட்டளைகள்

20 பின்பு தேவன்,

“நானே உங்கள் தேவனாகிய கர்த்தர். நீங்கள் அடிமைகளாயிருந்த எகிப்து தேசத்திலிருந்து நான் உங்களை வழிநடத்தி வந்தேன். எனவே, நீங்கள் இந்தக் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும்.

“என்னைத் தவிர வேறு தேவர்களை நீங்கள் தொழக்கூடாது.

“நீங்கள் எந்த விக்கிரகங்களையோ, படங்களையோ, சிலைகளையோ செய்யக்கூடாது. வானிலும், பூமியிலும் தண்ணீரிலுமுள்ள எந்தப் பொருளின் வடிவத்திலும் அவற்றைச் செய்யக்கூடாது. எந்த விதமான விக்கிரகத்தையும் தொழுகை செய்யவோ அதை சேவிக்கவோ கூடாது. ஏனெனில் நானே உங்கள் தேவனாகிய கர்த்தர். எனது ஜனங்கள் பிற தேவர்களைத் தொழுவதை நான் வெறுக்கிறேன். எனக்கு எதிராகப் பாவம் செய்வோர் எனது பகைவர்களாவார்கள். நான் அவர்களைத் தண்டிப்பேன். அவர்களின் பிள்ளைகளையும், பேரக் குழந்தைகளையும் அப்பேரர்களின் குழந்தைகளையும் தண்டிப்பேன். என்னிடம் அன்போடிருந்து எனது கட்டளைகளுக்கு கீழ்ப்படிகிறவர்களிடம் நான் இரக்கம் காட்டுவேன். ஆயிரம் தலைமுறை வரைக்கும் அவர்கள் குடும்பங்களிடம் கருணையோடு இருப்பேன்.

“நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பெயரைத் தகாத வழியில் பயன்படுத்தக்கூடாது. ஒருவன் அவ்வாறு பயன்படுத்தினால், அவன் குற்றவாளியாவான். கர்த்தர் அவனது குற்றத்திற்காக அவனை தண்டிப்பார்.

“ஓய்வுநாளை விசேஷ நாளாகக் கருதும்படி நீங்கள் நினைவுகூருங்கள். உங்கள் வேலையை வாரத்தின் ஆறு நாட்களும் செய்யுங்கள். 10 ஆனால் ஏழாம் நாள் தேவனாகிய கர்த்தரை மகிமைப்படுத்தும்படி ஓய்வெடுக்க வேண்டிய நாள். எனவே அந்நாளில் நீங்களும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் வேலைக்காரரும், வேலைக்காரிகளும் வேலை செய்யக்கூடாது. உங்கள் மிருகங்களையோ, உங்கள் நகரங்களில் வாழும் அந்நியர்களையோ வேலை வாங்கக்கூடாது. 11 ஏனெனில் கர்த்தர் ஆறு நாட்கள் வேலை செய்து வானம், பூமி, கடல் அவற்றிலுள்ள எல்லாவற்றையும் படைத்தார். ஏழாம் நாளில் கர்த்தர் ஓய்வெடுத்தார். இவ்வாறு கர்த்தர் ஏழாம் நாளாகிய ஓய்வு நாளை ஆசீர்வதித்தார். கர்த்தர் அதை ஒரு மிக விசேஷமான நாளாக்கினார்.

12 “உங்கள் தந்தை, தாயாரை மதிக்க வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தர் தரும் நாட்டில் நீண்டஆயுள் வாய்ப்பதற்கு இதைச் செய்தல் வேண்டும்.

13 “நீங்கள் யாரையும் கொல்லாதிருப்பீர்களாக.

14 “நீங்கள் விபச்சாரம், செய்யாதிருப்பீர்களாக.

15 “நீங்கள் எதையும் திருடாதிருப்பீர்களாக.

16 “பிற ஜனங்களைக் குறித்துப் பொய் சாட்சி பேசவேண்டாம்.

17 “அயலானின் வீட்டை இச்சிக்கக்கூடாது. அவனது மனைவியை விரும்பவேண்டாம். அவனது வேலைக்காரனையோ வேலைக்காரியையோ, ஆடு மாடுகளையோ, கழுதைகளையோ எடுக்க வேண்டாம். இன்னொருவனுக்குச் சொந்தமான எந்தப் பொருளையும் வஞ்சித்து எடுத்துக்கொள்ளக்கூடாது!” என்றார்.

ஜனங்கள் தேவனுக்கு பயப்படுதல்

18 இதுவரை, பள்ளத்தாக்கிலிருந்த ஜனங்கள் இடி முழக்கத்தைக் கேட்டார்கள், மலையின் மீது மின்னலைப் பார்த்தார்கள். மலையினின்று புகையெழும்பக் கண்டனர். ஜனங்கள் அச்சத்தால் நடுங்கினார்கள். மலையை விட்டு தூரத்தில் நின்று கவனித்தனர். 19 பின்பு ஜனங்கள் மோசேயிடம், “நீர் எங்களோடு பேசினால் நாங்கள் கேட்போம். ஆனால் தேவன் எங்களோடு நேரில் பேசவிடாதிரும். அவ்வாறு நடந்தால், நாங்கள் மரித்துப்போவோம்” என்றனர்.

20 மோசே ஜனங்களிடம், “பயப்படாதீர்கள்! கர்த்தர் உங்களை நேசிக்கிறார் என்பதைக் காண்பிக்கும்படியாக வந்திருக்கிறார். நீங்கள் அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அதினிமித்தமாக நீங்கள் பாவம் செய்யாதிருப்பீர்கள்” என்றான்.

21 தேவன் இருந்த கார்மேகத்திற்குள் மோசே போனபோது ஜனங்கள் மலையை விட்டு விலகி நின்றார்கள். 22 இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறுமாறு கர்த்தர் மோசேக்கு பின்வருமாறு கூறினார்: “பரலோகத்திலிருந்து உங்களோடு பேசினதை நீங்கள் கண்டீர்கள். 23 எனவே, பொன் அல்லது வெள்ளியால் எனக்கு இணையாக நீங்கள் விக்கிரகங்களை உண்டாக்க வேண்டாம். இந்த போலியான தெய்வங்களை நீங்கள் செய்யக்கூடாது.

24 “எனக்கென்று விசேஷ பலிபீடம் செய்யுங்கள். அதைக் கட்டும்போது மண்ணைப் பயன்படுத்துங்கள். அதன்மேல், தகன பலிகளையும், சமாதான பலிகளையும் பலியாகச் செலுத்துங்கள். உங்கள் ஆடு மாடுகளை இதற்கென்று பயன்படுத்துங்கள். என்னை நினைவு கூரும்படியாக நான் சொல்கிற இடங்களிலெல்லாம் இதைச் செய்யுங்கள். அப்போது நான் வந்து உங்களை ஆசீர்வதிப்பேன். 25 பலிபீடத்தை அமைப்பதற்கு நீங்கள் கற்களைப் பயன்படுத்தினால், இரும்புக் கருவியால் பிளக்கப்பட்ட கற்களைப் பயன்படுத்தவேண்டாம். அப்பலிபீடம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 26 பலிபீடத்திற்குப் படிகளைச் செய்யாதீர்கள். படிகள் இருந்தால் ஜனங்கள் பலிபீடத்தை ஏறிட்டு நோக்கும்போது உங்கள் நிர்வாணத்தை ஆடைகளின் கீழே அவர்கள் பார்க்கநேரிடும்” என்றார்.

லூக்கா 23

பிலாத்துவின் கேள்வி(A)

23 அந்தக் கூட்டம் முழுவதும் எழுந்து நின்று இயேசுவைப் பிலாத்துவிடம் அழைத்துச் சென்றது. அவர்கள் இயேசுவைப் பழிக்க ஆரம்பித்தார்கள் பிலாத்துவிடம் அவர்கள், “நமது மக்களைக் குழப்புகிற செய்திகளைக் கூறுகிறபடியால் இந்த மனிதனை நாங்கள் பிடித்து வந்தோம். இராயனுக்கு வரி கொடுக்கக் கூடாதென்று அவன் கூறுகிறான். அவன் தன்னைக் கிறிஸ்துவாகிய அரசர் என்று அழைக்கிறான்” என்றனர்.

பிலாத்து இயேசுவிடம், “நீ யூதரின் அரசனா?” என்று கேட்டான்.

இயேசு, “ஆம், அது சரியே” என்றார்.

அதைக் கேட்ட பிலாத்து தலைமை ஆசாரியரிடமும், மக்களிடமும் “இந்த மனிதனிடம் தவறு எதையும் நான் காணவில்லையே” என்றான்.

அவர்கள் மீண்டும் மீண்டும், “இயேசு மக்களின் மத்தியில் அமைதியின்மையை உருவாக்கிக்கொண்டுள்ளான். யூதேயாவைச் சுற்றிலும் அவன் போதிக்கிறான். அவன் கலிலேயாவில் ஆரம்பித்து இங்கு வந்திருக்கிறான்” என்றார்கள்.

ஏரோதுவின் முன் இயேசு

அதைக் கேட்ட பிலாத்து, “இயேசு கலிலேயாவிலிருந்து வந்தவரா?” என்று வினவினான். பின்பு ஏரோதின் அதிகாரத்திற்குட்பட்ட பகுதியில் இருந்து இயேசு வருவதை அறிந்தான். அப்போது ஏரோது எருசலேமில் இருந்தான். எனவே பிலாத்து, இயேசுவை அவனிடம் அனுப்பினான்.

இயேசுவைப் பார்த்ததும் ஏரோது மிகவும் மகிழ்ச்சியடைந்தான். அவரைப்பற்றி அவன் அதிகமாக கேள்விப்பட்டிருந்தபடியினாலும், இயேசு ஏதேனும் ஓர் அதிசயம் செய்வாரா எனப் பார்க்க விருப்பப்பட்டிருந்தபடியினாலும் அவரைக் காண வெகு நாளாக விருப்பம்கொண்டிருந்தான். இயேசுவிடம் பல கேள்விகளைக் கேட்டான் ஏரோது. ஆனால் இயேசு ஒன்றுமே கூறவில்லை. 10 தலைமை ஆசாரியரும், வேதபாரகரும் அங்கே நின்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் இயேசுவுக்கு எதிரானவைகளை உரக்கக் கூறிக்கொண்டிருந்தார்கள். 11 ஏரோதுவும், அவனது வீரர்களும் இயேசுவைப் பார்த்து நகைத்தார்கள். அரசனுக்குரிய ஆடைகளை அணிவித்து அவரை எள்ளி நகையாடினார்கள். பின்பு ஏரோது இயேசுவைப் பிலாத்துவிடமே திரும்ப அனுப்பினான். 12 முன்னர் பிலாத்துவும், ஏரோதுவும் பகைவர்களாக இருந்து வந்தனர். ஆனால் அன்று ஏரோதுவும், பிலாத்துவும் நண்பர்களாயினர்.

பிலாத்துவும் மக்களும்(B)

13 தலைமை ஆசாரியரையும் யூத அதிகாரிகளையும் மக்களோடு கூட பிலாத்து அழைத்தான். 14 பிலாத்து அவர்களை நோக்கி, “நீங்கள் இந்த மனிதனை (இயேசு) என்னிடம் அழைத்து வந்தீர்கள். மக்களின் நடுவில் அமைதியின்மையை விளைவிக்கிறான் என்று சொன்னீர்கள். ஆனால் உங்களுக்கு முன்பாக நான் நியாயம் தீர்த்தேன். அவன் செய்ததாக நான் எந்தக் குற்றத்தையும் கண்டு பிடிக்க முடியவில்லை. நீங்கள் புகார் சொல்கிற காரியங்களில் இயேசு குற்றவாளியாக்கப்படவில்லை. 15 மேலும் ஏரோதுவும் அவரிடம் தவறேதும் காணவில்லை. மீண்டும் இயேசுவை நம்மிடமே திருப்பி அனுப்பினான் ஏரோது. அவருக்கு மரணதண்டனை தரத் தேவையில்லை. 16 எனவே நான் அவரைச் சிறிய தண்டனை ஏதேனும் கொடுத்து விடுவித்து விடுவேன்” என்றான். 17 [a]

18 ஆனால் மக்கள் அனைவரும், “அவனைக் கொல்லுங்கள். பரபாசை விடுதலை செய்யுங்கள்” என்று சத்தமிட்டனர். 19 (நகருக்குள் கலகம் விளைவித்ததற்காக ஏற்கெனவே சிறையில் அடைக்கப்பட்டிருந்த மனிதன் பரபாஸ். அவன் சிலரைக் கொன்றுமிருந்தான்.)

20 பிலாத்து இயேசுவை விடுதலை செய்ய விரும்பினான். எனவே பிலாத்து மீண்டும் அவர்களை நோக்கி, இயேசுவை விடுவிப்பதாகக் கூறினான். 21 ஆனால் அவர்கள் மீண்டும் உரத்த குரலில், “அவனைக் கொல்லுங்கள். அவனைச் சிலுவையில் அறைந்து கொல்லுங்கள்” என்றார்கள்.

22 மூன்றாம் முறை பிலாத்து மக்களை நோக்கி, “ஏன்? அவன் என்ன தவறு செய்தான்? அவன் குற்றவாளி அல்ல. அவனைக் கொல்வதற்கேற்ற காரணம் எதையும் நான் காணவில்லை. எனவே அவனுக்குச் சிறிய தண்டனை கொடுத்து அவனை விடுதலை செய்வேன்” என்றான்.

23 ஆனால் தொடர்ந்து மக்கள் சத்தமிட்டார்கள். இயேசுவைச் சிலுவையில் அறைய வேண்டுமென வேண்டினார்கள். அவர்கள் மிகவும் உரத்த குரலில் சத்தமிட்டதைக் கேட்டதும் 24 அவர்களின் விருப்பத்தின்படியே செய்ய முடிவெடுத்தான் பிலாத்து. 25 மக்கள் அனைவரும் பரபாஸ் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று விரும்பினர். கலகம் விளைவித்ததற்காகவும் மக்களைக் கொன்றதற்காகவும் பரபாஸ் சிறையில் இருந்தான். பிலாத்து பரபாஸை விடுவித்தான். கொல்லப்படும்பொருட்டு, இயேசுவை மக்களிடம் பிலாத்து ஒப்படைத்தான். மக்களும் அதையே விரும்பினர்.

சிலுவையில் இயேசு(C)

26 இயேசுவைக் கொல்லும்பொருட்டு வீரர்கள் வெளியே அழைத்துச் சென்றனர். அப்போது வயல்களிலிருந்து நகருக்குள் ஒரு மனிதன் வந்துகொண்டிருந்தான். அவன் பெயர் சீமோன். அவன், சிரேனே நகரைச் சேர்ந்தவன். இயேசுவின் சிலுவையைச் சுமந்து அவரைத் தொடர்ந்து வருமாறு சீமோனை வீரர்கள் வற்புறுத்தினார்கள்.

27 பலரும் இயேசுவைத் தொடர்ந்தனர். சில பெண்கள் வருந்தி அழுதனர். அவர்கள் இயேசுவுக்காகக் கவலைப்பட்டனர். 28 ஆனால் இயேசு திரும்பி அப்பெண்களை நோக்கி, “எருசலேமின் பெண்களே, எனக்காக அழாதீர்கள். உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காவும் அழுங்கள். 29 ஏனெனில் பிள்ளைகளைப் பெற முடியாத பெண்கள் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள் என்றும் பிள்ளைகள் இல்லாத பெண்கள் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள் என்றும் மக்கள் பேசப்போகும் காலம் வரும். 30 அப்போது மக்கள் மலையை நோக்கி, ‘எங்கள் மேல் விழு’ என்பார்கள். சிறு குன்றுகளை நோக்கி, ‘எங்களை மறைத்துக்கொள்’ என்று சொல்லத் தொடங்குவார்கள். [b] 31 வாழ்க்கை நன்றாக இருக்கும்போது மக்கள் இவ்வாறு நடந்துகொண்டால், தீமையான காலம் வரும்போது என்ன நிகழும்?” [c] என்றார்.

32 கொல்லப்படுவதற்காக இரண்டு குற்றவாளிகளும் இயேசுவோடு வழி நடத்திச்செல்லப்பட்டார்கள். 33 இயேசுவும், அக்குற்றவாளிகளும் “கபாலம்” என்று அழைக்கப்பட்ட இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு வீரர்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தார்கள். அவர்கள் குற்றவாளிகளையும் சிலுவையில் அறைந்தார்கள். ஒரு குற்றவாளியை இயேசுவின் வலது பக்கத்திலும், இன்னொரு குற்றவாளியை இயேசுவின் இடது பக்கத்திலும் சிலுவையில் அறைந்தார்கள்.

34 இயேசு, “தந்தையே, என்னைக் கொல்கிற இந்த மக்களை மன்னித்தருளுங்கள். அவர்கள் செய்துகொண்டிருப்பதை அவர்கள் அறியாமல் இருக்கிறார்கள்” என்றார்.

இயேசுவின் ஆடைகளை எடுப்பது யார் என்று சீட்டுப்போட்டுப் பார்த்தார்கள். 35 இயேசுவைப் பார்த்தபடி மக்கள் நின்றனர். யூத அதிகாரிகள் இயேசுவைப் பார்த்து நகைத்தனர். அவர்கள், “தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிறிஸ்து என்றால் அவனே தன்னைக் காப்பாற்றிக்கொள்ளட்டும். அவன் பிற மக்களைக் காப்பாற்றவில்லையா?” என்றார்கள்.

36 வீரர்களும் கூட இயேசுவைப் பார்த்துச் சிரித்து எள்ளி நகையாடினார்கள். அவர்கள் இயேசுவை நெருங்கி புளித்த திராட்சை இரசத்தைக் கொடுத்தனர். 37 வீரர்கள், “நீ யூதர்களின் அரசனானால் உன்னைக் காப்பாற்றிக்கொள்” என்றனர். 38 சிலுவையில் மேல் பகுதியில் “இவன் யூதர்களின் அரசன்” என்ற சொற்கள் எழுதப்பட்டிருந்தன.

39 சிலுவையில் அறையப்பட்ட குற்றவாளிகளில் ஒருவன் இயேசுவுக்கு எதிராகத் தீய சொற்களைச் சொல்லிக்கொண்டிருந்தான். “நீ கிறிஸ்து அல்லவா? உன்னைக் காப்பாற்றிக்கொள். எங்களையும் காப்பாற்று” என்றான்.

40 ஆனால் இன்னொரு குற்றவாளி அவனைத் தடுத்தான். அவன், “நீ தேவனுக்கு பயப்பட வேண்டும். நாம் எல்லாரும் விரைவில் இறந்து போவோம். 41 நீயும், நானும் குற்றவாளிகள். நாம் செய்த குற்றங்களுக்கான விலையைக் கொடுக்க வேண்டியிருப்பதால் நீயும் நானும் கொல்லப்பட வேண்டியவர்கள். ஆனால் இம்மனிதரோ (இயேசு) எந்தத் தவறும் செய்ததில்லை” என்றான். 42 பின்பு இக்குற்றவாளி இயேசுவை நோக்கி, “இயேசுவே, உங்கள் இராஜ்யத்தை ஆரம்பிக்கும்போது என்னை நினைவுகூர்ந்துகொள்ளுங்கள்” என்றான்.

43 இயேசு அவனை நோக்கி, “கவனி, நான் சொல்வது உண்மை. இன்று நீ என்னோடு சேர்ந்து பரலோகத்திலிருப்பாய்” என்றார்.

இயேசு மரித்தல்(D)

44 அப்போது மதிய வேளை. ஆனால் மதிய நேரம் பின்பு மூன்று மணிவரையிலும் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்திருந்தது. 45 சூரியன் தென்படவில்லை. தேவாலயத்தின் திரை இரண்டாகக் கிழிந்தது. 46 இயேசு, “பிதாவே, என் ஆவியை உம்மிடம் தருகிறேன்” என்னும் வார்த்தையுடன் இறந்தார்.

47 அங்கு நின்ற இராணுவ அதிகாரி நடந்தவற்றை எல்லாம் பார்த்தான். அவன், “இந்த மனிதன் உண்மையிலேயே தேவ குமாரன்தான் என்பதை அறிவேன்” என்று கூறியவாறே தேவனை வாழ்த்தினான்.

48 இதைப் பார்க்கவென்று நகரிலிருந்து பலரும் வந்திருந்தார்கள். பார்த்ததும் துயரமிகுதியால் மார்பில் அறைந்தபடி வீட்டுக்குத் திரும்பினார்கள். 49 இயேசுவுக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள் அங்கு இருந்தார்கள். கலிலேயாவில் இருந்து இயேசுவைத் தொடர்ந்து வந்த சில பெண்களும் அங்கே இருந்தார்கள். அவர்கள் சிலுவைக்கு சற்றே தொலைவில் இவற்றைப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தார்கள்.

அரிமத்தியா ஊரின் யோசேப்பு(E)

50-51 அரிமத்தியா என்னும் நகரில் இருந்து ஒரு மனிதன் அங்கே வந்திருந்தான். அவன் பெயர் யோசேப்பு. அவன் நல்ல பக்தியுள்ள மனிதன். தேவனின் இராஜ்யத்தின் வருகையை எதிர் நோக்கி இருந்தான். யூதர் அவையில் அவன் ஒரு உறுப்பினன். பிற யூத அதிகாரிகள் இயேசுவைக் கொல்ல முடிவெடுத்தபோது அவன் அதை ஒப்புக்கொள்ளவில்லை. 52 இயேசுவின் உடலைக் கேட்கும்பொருட்டு யோசேப்பு பிலாத்துவிடம் சென்றான். உடலை எடுத்துக்கொள்ள பிலாத்து, யோசேப்புக்கு அனுமதி கொடுத்தான். 53 எனவே யோசேப்பு சிலுவையில் இருந்து இயேசுவின் உடலைக் கீழே இறக்கி ஒரு துணியால் உடலைச் சுற்றினான். பிறகு பாறைக்குள் தோண்டப்பட்டிருந்த ஒரு கல்லறைக்குள் இயேசுவின் உடலை வைத்தான். அக்கல்லறை அதற்கு முன் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. 54 அப்பொழுது ஆயத்த நாளின் [d] இறுதிப்பகுதி நெருங்கியது. சூரியன் மறைந்த பிறகு ஓய்வு நாள் ஆரம்பிக்கும்.

55 கலிலேயாவில் இருந்து இயேசுவோடு வந்திருந்த பெண்கள் யோசேப்பைத் தொடர்ந்தனர். அவர்கள் கல்லறையைப் பார்த்தார்கள். இயேசுவின் உடல் உள்ளே கிடத்தப்பட்டிருந்த இடத்தையும் பார்த்தார்கள். 56 இயேசுவின் உடலில் பூசுவதற்காக மணம்மிக்க பொருள்களைத் தயாரிப்பதற்காக அப்பெண்கள் சென்றார்கள்.

ஓய்வு நாளில் அவர்கள் ஓய்வெடுத்தார்கள். மோசேயின் சட்டம் இவ்வாறு செய்யுமாறு எல்லா மக்களுக்கும் கட்டளை இட்டிருந்தது.

யோபு 38

தேவன் யோபுவிடம் பேசுகிறார்

38 அப்போது கர்த்தர் சூறாவளியிலிருந்து

யோபுவிடம் பேசினார். தேவன்:

“மூடத்தனமானவற்றைக் கூறிக்கொண்டிருக்கும்,
    இந்த அறியாமையுள்ள மனிதன் (அஞ்ஞானி) யார்?
யோபுவே, நீ இடையைக் கட்டிக்கொள்
    நான் கேட்கப்போகும் கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்கு ஆயத்தமாகு.

“யோபுவே, நான் பூமியை உண்டாகினபோது, நீ எங்கே இருந்தாய்?
    நீ அத்தனை கெட்டிக்காரனானால், எனக்குப் பதில் கூறு.
நீ அத்தனை கெட்டிக்காரனானால், உலகம் எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டுமென யார் முடிவெடுத்தவர்?
    அளவு நூலால் யார் உலகை அளந்தார்?
பூமியின் அஸ்திபாரம் எங்கு நிலைத்திருக்கிறது?
    அதன் முதற்கல்லை (கோடிக் கல்லை) வைத்தவர் யார்?
காலை நட்சத்திரங்கள் சேர்ந்து பாடின,
    அது நிகழ்ந்தபோது தேவதூதர்கள் மகிழ்ச்சியால் ஆர்ப்பரித்தனர்!

“யோபுவே, கடல் பூமியின் ஆழத்திலிருந்து பாய்ந்தபோது,
    கடலைத் தடை செய்யும்பொருட்டு வாயில்களை அடைத்தது யார்?
அப்போது நான் அதனை மேகங்களால் மூடி,
    அதனை இருளால் பொதிந்து வைத்தேன்.
10 நான் கடலுக்கு எல்லையை வகுத்து,
    அதை அடைத்த வாயிலுக்கு பின்னே நிறுத்தினேன்.
11 நான் கடலிடம், ‘நீ இதுவரை வரலாம், இதற்கு அப்பால் அல்ல,
    உனது பெருமையான அலைகள் இங்கே நின்றுவிடும்’ என்றேன்.

12 “யோபுவே, உன் வாழ்க்கையில் என்றைக்காவது நீ காலையை ஆரம்பிக்கவோ,
    ஒரு நாளைத் தொடங்கவோ கூறமுடியுமா?
13 யோபுவே, பூமியைப் பிடித்து, தீயோரை அவர்கள் மறைவிடங்களிலிருந்து வெளிவருமாறு உதறிவிட
    காலையொளிக்கு நீ கூற முடியுமா?
14 மலைகளையும் பள்ளத்தாக்கையும் எளிதில் காலையொளியில் காணலாம்.
    பகலொளி பூமிக்கு வரும்போது அங்கியின் மடிப்புக்களைப்போல இந்த இடங்களின் அமைப்புக்கள் (வடிவங்கள்) வெளித்தோன்றும்.
    முத்திரையிடப்பட்ட களிமண்ணைப் போல அவ்விடங்கள் வடிவங்கொள்ளும்.
15 தீயோர் பகலொளியை விரும்பார்கள்.
    பிரகாசமாக அது ஒளிவிடும்போது, அவர்கள் தீயக் காரியங்களைச் செய்யாதபடி தடுக்கும்.

16 “யோபுவே, கடல் புறப்படும் கடலின் ஆழமான பகுதிகளுக்கு நீ எப்போதாவது சென்றிருக்கிறாயா?
    சமுத்திரத்தின் அடிப்பகுதியில் நீ எப்போதாவது நடந்திருக்கிறாயா?
17 மரித்தோரின் உலகத்திற்கு வழிகாட்டும் வாயிற் கதவுகளை நீ எப்போதாவது பார்த்திருக்கிறாயா?
    மரணத்தின் இருண்ட இடத்திற்கு வழிகாட்டும் வாயிற்கதவுகளை நீ எப்போதாவது பார்த்திருக்கிறாயா?
18 யோபுவே, பூமி எவ்வளவு பெரிய தென்று நீ உண்மையில் அறிந்திருக்கிறாயா?
    நீ இவற்றை அறிந்திருந்தால், எனக்குக் கூறு.

19 “யோபுவே, ஒளி எங்கிருந்து வருகிறது?
    எங்கிருந்து இருள் வருகிறது?
20 யோபுவே, ஒளியையும், இருளையும் அவை புறப்படும் இடத்திற்கு நீ திரும்ப கொண்டு செல்ல முடியுமா?
    அந்த இடத்திற்குப் போகும் வகையை நீ அறிவாயா?
21 யோபுவே, நீ நிச்சயமாக இக்காரியங்களை அறிவாய்.
    நீ வயது முதிர்ந்தவனும் ஞானியுமானவன்.
    நான் அவற்றை உண்டாக்கியபோது நீ உயிரோடிருந்தாய் அல்லவா?

22 “யோபுவே, பனியையும் கல்மழையையும் வைத்திருக்கும் பண்டகசாலைக்குள்
    நீ எப்போதாவது சென்றிருக்கிறாயா?
23 தொல்லைகள் மிக்க காலங்களுக்காகவும், போரும் யுத்தமும் நிரம்பிய காலங்களுக்காகவும்,
    நான் பனியையும், கல்மழையையும் சேமித்து வைக்கிறேன்.
24 யோபுவே, சூரியன் மேலெழுந்து வருமிடத்திற்கு, அது கிழக்குக் காற்றைப் பூமியெங்கும் வீசச் செய்யுமிடத்திற்கு
    நீ எப்போதாவது சென்றிருக்கிறாயா?
25 யோபுவே, மிகுந்த மழைக்காக வானத்தில் பள்ளங்களைத் தோண்டியவர் யார்?
    இடிமுழக்கத்திற்குப் பாதையை உண்டாகியவர் யார்?
26 யோபுவே, ஜனங்கள் வாழாத இடங்களிலும்,
    மழையைப் பெய்யப்பண்ணுகிறவர் யார்?
27 பாழான அந்நிலத்திற்கு மழை மிகுந்த தண்ணீரைக் கொடுக்கிறது,
    புல் முளைக்க ஆரம்பிக்கிறது.
28 யோபுவே, மழைக்குத் தகப்பன் (தந்தை) உண்டா?
    பனித்துளிகள் எங்கிருந்து தோன்றுகின்றன?
29 யோபுவே, பனிக்கட்டிக்கு தாய் உண்டா?
    வானிலிருந்து விழும் உறை பனியைப் பிறப்பிக்கிறவர் யார்?
30 பாறையைப் போல் கடினமாக நீர் உறைகிறது.
    சமுத்திரத்தின் மேற்பரப்பும் உறைந்து போகிறது!

31 “நட்சத்திர கூட்டங்களை நீ இணைக்கக் கூடுமா?
    மிருக சீரிஷத்தின் கட்டை நீ அவிழ்க்க முடியுமா?
32 யோபுவே, நீ சரியான நேரங்களில் வின்மீன் கூட்டங்களை வெளிக்கொணர முடியுமா?
    (துருவச்சக்கர நட்சத்திரமும் அதைச் சார்ந்த நட்சத்திரங்களும்) கரடியை அதன் குட்டிகளோடு நீ வெளி நடத்த இயலுமா?
33 யோபுவே, வானை ஆளுகிற விதிகளை நீ அறிவாயா?
    பூமியை அவை ஆளும்படிச் செய்ய உன்னால் முடியுமா?

34 “யோபுவே, நீ மேகங்களை உரக்கக் கூப்பிட்டு
    உன்னை மழையில் மூடும்படி கட்டளையிட முடியுமா?
35 மின்னல்களுக்கு நீ கட்டளை பிறப்பிக்கக் கூடுமா?
    அவை உன்னிடம் வந்து, ‘நாங்கள் இங்கு இருக்கிறோம், ஐயா, உனக்கு என்ன வேண்டும்’ எனக் கூறுமா?
    அவை எங்கெங்குப் போகவேண்டுமென்று நீ விரும்புகிறாயோ, அங்கெல்லாம் அவை செல்லுமா?

36 “யோபுவே, யார் ஜனங்களை ஞானிகளாக்குகிறார்?
    அவர்களுக்குள்ளே ஆழமாக ஞானத்தை வைப்பவன் யார்?
37 யோபுவே, மேகங்களை எண்ணுமளவிற்கும்
    அவற்றின் மழையைப் பொழியத் தூண்டும்படியும் ஞானம் படைத்தவன் யார்?
38 அதனால் துகள்கள் சேறாக மாறி,
    அழுக்குகள் ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்கின்றன.

39 “யோபுவே, நீ சிங்கங்களுக்கு இரை தேட முடியுமா?
    அவற்றின் பசித்த குட்டிகளுக்கு நீ உணவுக் கொடுக்கிறாயா?
40 அச்சிங்கங்கள் அவற்றின் குகைகளில் படுத்திருக்கின்றன.
    அவற்றின் இரையைத் தாக்குவதற்கு அவை புல்லினுள்ளே பதுங்கிக்கொள்கின்றன.
41 காக்கைக் குஞ்சுகள் தேவனை நோக்கிக் கத்தும்போதும், உணவின்றி அங்குமிங்கும் அலையும்போதும்
    யோபுவே, அவற்றிற்கு உணவு ஊட்டுபவன் யார்? என்றார்.

2 கொரி 8

கிறிஸ்தவர்களின் கொடுக்கும் தன்மை

சகோதர சகோதரிகளே இப்போது மக்கதோனியா சபைகளுக்கு தேவன் காட்டிய கிருபையைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். அந்த விசுவாசிகள் பெருந்தொல்லைகளால் சோதிக்கப்பட்டனர். அவர்கள் மிகவும் ஏழை மக்கள். ஆனால் தமக்குண்டான மிகுந்த மகிழ்ச்சியால் அவர்கள் அதிகமாகக் கொடுத்தார்கள். தம்மால் முடிந்த அளவு அவர்கள் கொடுத்தார்கள் என்று என்னால் சொல்ல முடியும். அந்த விசுவாசிகள் தங்களால் முடிந்த அளவுக்கும் மீறி கொடுத்தார்கள். இதனை அவர்கள் சுதந்தரமாகச் செய்தனர். எவரும் அவர்களை அவ்வாறு செய்யுமாறு வற்புறுத்தவில்லை. ஆனால் அவர்கள் மீண்டும் மீண்டும் எங்களைக் கேட்டார்கள். தேவனுடைய மக்களுக்கான சேவையில் பங்குகொள்ள அனுமதிக்க வேண்டுமென்று திரும்பத் திரும்ப வேண்டினர். நாம் எதிர்பார்த்திராத வகையில் அவர்கள் கொடுத்தார்கள். அவர்கள் தம் பணத்தைக் கொடுப்பதற்கு முன்னால் கர்த்தருக்கும் எங்களுக்கும் தம்மையே கொடுத்தார்கள். இதைத்தான் தேவனும் விரும்புகிறார்.

எனவே தீத்து இந்த நல்ல காரியத்தைத் தொடங்கினபடியே முடிக்கவும் வேண்டுமென்று கேட்டுக்கொண்டோம். நம்பிக்கையிலும், பேச்சிலும், அறிவிலும், உண்மை விருப்பத்தோடு உதவுவதிலும், எங்கள் மேலுள்ள அன்பிலும் நீங்கள் செல்வந்தராய் இருக்கிறீர்கள். இந்த கொடுக்கும் நற்காரியத்திலும் நீங்கள் செல்வந்தராய் இருக்க வேண்டும்.

கொடுக்க வேண்டுமென்று உங்களுக்குக் கட்டளையிடவில்லை, ஆனால் உங்கள் அன்பு உண்மையான அன்பென்று நாங்கள் பார்க்க விரும்புகிறோம். மற்றவர்களும் உண்மையில் உதவ விரும்புவதை உங்களுக்குக் காட்டவே இதைச் செய்கிறோம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கருணையை நீங்கள் அறிவீர்கள். கிறிஸ்து தேவனோடு செல்வந்தராயிருந்தார். ஆனால் உங்களுக்காக அவர் ஏழையானார். அதன் மூலம் அவர் உங்களைச் செல்வந்தர்களாக்க விரும்பினார்.

10 உங்கள் நன்மைக்காகவே நீங்கள் இதைச் செய்ய வேண்டுமென நான் சொல்ல விரும்புகிறேன். சென்ற ஆண்டில் கொடுக்க விரும்பியதில் நீங்களே முதலாவதாக இருந்தீர்கள். அது போல் கொடுப்பதிலும் முதலாவதாக இருந்தீர்கள். 11 எனவே, இப்பொழுது தொடங்கிய செயலை முடித்துவிடுங்கள். பிறகு உங்கள் செயலானது உங்களுடைய விருப்பத்துக்கு ஏற்றதாக அமையும். உங்களிடம் இருப்பதைக் கொடுங்கள். 12 நீங்கள் விரும்பிக் கொடுத்தால் அது ஏற்றுக்கொள்ளப்படும். உங்களது கொடுத்தலானது உங்களிடம் இல்லாததை வைத்து தீர்மானிக்கப்படாது; இருப்பதைக்கொண்டே தீர்மானிக்கப்படும். 13 மற்றவர்கள் சௌகரியமாக இருக்கையில் நீங்கள் மட்டும் தொல்லைப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எல்லாம் சமமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். 14 இப்பொழுது உங்களிடம் நிறைய உள்ளது. அவற்றைத் தேவையானவர்களுக்குக் கொடுங்கள். அவர்களிடம் மிகுதியாக இருக்கும்போது அவர்கள் உங்களுக்குத் தேவையானதைக் கொடுத்து உதவுவார்கள். இப்படியே எல்லாம் சமமாகும்.

15 “அதிகமாகச் சேர்த்தவன் எவனும் அதிகமாக வைத்திருப்பதில்லை.
குறைவாக சேர்த்தவன் எவனும் குறைவுடன் இருப்பதில்லை” என்று எழுதப்பட்டுள்ளது. (A)

தீத்துவும் அவனது குழுவும்

16 உங்கள் மீது எனக்கிருக்கும் அன்பைப் போலவே தீத்துவின் இதயத்திலும் அன்பைத் தந்ததற்காக தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். அவன் என்னைப் போலவே உங்களிடம் அன்பாய் இருக்கிறான். 17 நாங்கள் செய்யச் சொன்னதையெல்லாம் தீத்து ஏற்றுக்கொண்டான். அவன் உங்களிடம் வர பெரிதும் விரும்பினான். இது அவனது சொந்த முயற்சியே ஆகும். 18 நாங்கள் தீத்துவோடு ஒரு சகோதரனையும் அனுப்பி வைத்தோம். அச்சகோதரன் அனைத்து சபைகளாலும் அவனது சிறப்பான ஊழியத்துக்காகப் பாராட்டப்படுகிறவன். 19 அதோடு, இக்காணிக்கைப் பணத்தை சுமந்துச் செல்லும்போது எங்களுக்குத் துணையாக இருக்க சபைகளால் நியமிக்கப்பட்டவனே இச்சகோதரன் ஆவான். தேவனுக்கு மகிமை உண்டாகவே நாங்கள் இச்சேவையைச் செய்ண்டிருக்கிறோம். சேவை செய்யும் எங்கள் விருப்பத்தைப் புலப்படுத்தவும் இதைச் செய்கிறோம்.

20 இப்பெரிய தொகையை கையாள்வது குறித்து நாங்கள் கொள்ளும் அக்கறைகளைப் பற்றி யாரும் விமர்சனம் செய்துவிடக் கூடாது எனக் கூடுமான வரையில் எச்சரிக்கையாய் உள்ளோம். 21 சரியானவற்றைச் செய்யவே நாங்கள் முயல்கிறோம். தேவனுக்கு முன்பாக மட்டுமல்ல. மக்களுக்கு முன்பாகவும் நேர்மையாகப்படுவதை மட்டுமே செய்ய விரும்புகிறோம்.

22 இவர்களோடு எங்கள் சகோதரனையும் அனுப்புகிறோம். அவன் எப்பொழுதும் உதவத் தயாராய் இருப்பான். பல வழிகளில் அவன் இதை நிரூபித்திருக்கிறான். உங்கள் மீது அதிக அளவு நம்பிக்கை கொண்டிருப்பதால் அதிக அளவில் உதவ அவன் விரும்புகிறான்.

23 தீத்துவைப் பற்றிக் கூறுவதானால், அவன் எனது கூட்டாளி. உங்களுக்கு உதவுவதற்காக என்னோடு பணிபுரிபவன். மற்ற சகோதரர்களைப் பற்றி கூறுவதானால் அவர்கள் சபைகளால் அனுப்பப்பட்டவர்கள். அவர்கள் கிறிஸ்துவுக்குப் புகழ் சேர்த்தவர்கள். 24 எனவே, உங்களது உண்மையான அன்பை அவர்களுக்குக் காட்டுங்கள். ஏன் உங்களை நினைத்துப் பெருமைப் பாராட்டுகிறோம் என்பதையும் அவர்களுக்குக் காட்டுங்கள். பிறகு எல்லா சபைகளும் இதைப் பார்க்க முடியும்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center