Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
யாத்திராகமம் 18

மோசேயின் மாமனாரிடமிருந்து அறிவுரை

18 மோசேயின் மாமனாராகிய எத்திரோ மீதியானில் ஒரு ஆசாரியனாக இருந்தான். மோசேக்கும், இஸ்ரவேல் ஜனங்களுக்கும் பல வகைகளில் தேவன் உதவியதையும், எகிப்திலிருந்து கர்த்தர் இஸ்ரவேலரை வழிநடத்தினதையும் எத்திரோ கேள்விப்பட்டான். எனவே தேவனின் மலைக்கருகில் (ஓரேப்) மோசே கூடாரமிட்டுத் தங்கியிருந்தபோது, எத்திரோ அவனிடம் சென்றான். அவன் மோசேயின் மனைவியாகிய சிப்போராளையும் அழைத்து வந்திருந்தான். (மோசே அவளை வீட்டிற்கு அனுப்பி விட்டிருந்தபடியால் சிப்போராள், மோசேயோடு இருக்கவில்லை.) எத்திரோ மோசேயின் இரண்டு மகன்களையும் அழைத்து வந்திருந்தான். முதல் மகனின் பெயர் கெர்சோம், ஏனெனில் அவன் பிறந்தபோது, “நான் அந்நிய தேசத்தில் பரதேசியாக உள்ளேன்” என்று மோசே கூறினான். இன்னொரு மகனின் பெயர் எலியேசர். ஏனெனில் அவன் பிறந்தபோது, மோசே, “எனது முற்பிதாக்களின் தேவன் எனக்கு உதவி, எகிப்தின் மன்னனிடமிருந்து அவர் என்னைக் காத்தார்” என்றான். மோசே தேவனின் மலைக்குப் (சீனாய்) பக்கத்திலுள்ள பாலைவனத்தில் கூடாரமிட்டுத் தங்கியிருந்தபோது, எத்திரோ அவனிடம் சென்றான். மோசேயின் மனைவியும் அவனது இரண்டு மகன்களும் எத்திரோவோடிருந்தனர்.

எத்திரோ மோசேக்குச் செய்தி சொல்லியனுப்பினான். எத்திரோ, “உனது மாமனாராகிய எத்திரோ வந்துள்ளேன். நான் உனது மனைவியையும், உனது இரண்டு மகன்களையும் உன்னிடம் அழைத்து வந்திருக்கிறேன்” என்று சொன்னான்.

எனவே மோசே மாமனாரைப் பார்ப்பதற்கு வெளியே போனான். மோசே அவனைக் குனிந்து வணங்கி, முத்தமிட்டான். இருவரும் ஒருவருக்கொருவர் சுகசெய்திகளை விசாரித்துக்கொண்டனர். பின் மோசேயின் கூடாரத்திற்குள் மேலும் அதிகமாக உரையாடும்படிக்கு நுழைந்தனர். இஸ்ரவேல் ஜனங்களினிமித்தம் கர்த்தர் பார்வோனுக்கும் எகிப்தியருக்கும் எதிராகச் செய்த எல்லாவற்றையும், பார்வோனுக்கும் எகிப்தின் ஜனங்களுக்கும் கர்த்தர் செய்தவற்றையும், வழியில் அவர்களுக்கு உண்டான பிரச்சனைகளைப்பற்றியும், துன்பம் வந்தபோதெல்லாம் கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை எப்படிக் காப்பாற்றினார் என்பதையெல்லாம் மோசே தன் மாமனாரான எத்திரோவிடம் சொன்னான்.

கர்த்தர் இஸ்ரவேலுக்காகச் செய்த எல்லா நல்ல காரியங்களையும் கேள்விப்பட்டபோது எத்திரோ மிக்க மகிழ்ச்சியடைந்தான். எகிப்தியரிடமிருந்து இஸ்ரவேல் ஜனங்களை கர்த்தர் விடுதலை செய்தார் என்பதையறிந்து அவன் மகிழ்ந்தான். 10 எத்திரோ,

“கர்த்தரை துதியுங்கள்!
    எகிப்தின் வல்லமையிலிருந்து அவர் உங்களை விடுவித்தார்.
    பார்வோனிடமிருந்து கர்த்தர் உங்களைக் காப்பாற்றினார்.
11 இப்போது மற்ற எல்லா தேவர்களையும்விட கர்த்தர் பெரியவர் என்பதை நான் அறிவேன்.
அவர்கள் அடிமைகளாக உள்ளார்கள் என எண்ணியிருந்தனர், ஆனால் தேவன் செய்ததைப் பாருங்கள்!” என்றான்.

12 எத்திரோ சில பலிகளையும், காணிக்கைகளையும் தேவனை மகிமைப்படுத்துவதற்காகக் கொண்டு வந்தான். மோசேயின் மாமனாராகிய எத்திரோவோடு சேர்ந்து உண்பதற்காக ஆரோனும் இஸ்ரவேலரின் மூப்பர்களும் (தலைவர்களும்) வந்தார்கள். அவர்கள் எல்லோரும் தேவனுடைய சந்நிதியில் சேர்ந்து உணவு உண்டார்கள்.

13 மறுநாள், ஜனங்களை நியாயந்தீர்க்கும் விசேஷ வேலை மோசேக்கு இருந்தது. நாள் முழுவதும் மோசேக்கு முன்னால் காலை முதல் மாலைவரை ஜனங்கள் கூடி நின்றனர்.

14 மோசே ஜனங்களை நியாயந்தீர்ப்பதை எத்திரோ பார்த்தான். அவன், “ஏன் இவ்வாறு செய்கிறாய்? ஏன் நீ மட்டும் நியாயந்தீர்க்க வேண்டும்? ஏன் நாள் முழுவதும் ஜனங்கள் உன்னிடம் வந்துகொண்டிருக்கின்றனர்?” என்று கேட்டான்.

15 மோசே அவனது மாமனாரை நோக்கி: “ஜனங்கள் என்னிடம் வந்து, அவர்களின் பிரச்சனைகளைப்பற்றிய தேவனின் முடிவைக் கேட்டறிந்து சொல்லுமாறு என்னைக் கேட்கிறார்கள். 16 ஜனங்கள் மத்தியில் விவாதம் எழுந்தால் அவர்கள் என்னிடம் வருகிறார்கள். எந்த மனிதன் சரியாகச் செயல்படுகிறான் என்பதை நான் முடிவு செய்வேன். இவ்வகையில் நான் ஜனங்களுக்கு தேவனின் சட்டங்களையும், போதனைகளையும் கற்பிக்கிறேன்” என்றான்.

17 ஆனால் மோசேயின் மாமனார் அவனை நோக்கி, “இதைச் செய்யும் வழி இதுவல்ல, 18 நீ ஒருவனே செய்வதற்கு இது பழுவான வேலையாகும். இவ்வேலையை நீ ஒருவனே செய்ய முடியாது. அது உன்னைக் களைப்படையச் செய்யும். ஜனங்களும் சோர்ந்து போகிறார்கள்! 19 இப்போது நான் சொல்வதைக் கேள். நான் உனக்குச் சில அறிவுரைகளைக் கூறுவேன். தேவன் உன்னோடிருக்கும் பொருட்டு நான் ஜெபம் செய்கிறேன். ஜனங்களின் பிரச்சனைகளைத் தொடர்ந்து நீ கேட்கவேண்டும், இவற்றைக் குறித்துத் தொடர்ந்து நீ தேவனிடம் பேச வேண்டும். 20 நீ தேவனின் சட்டங்களையும் போதனைகளையும் ஜனங்களுக்குக் கற்பித்துக்கொண்டிருக்க வேண்டும். சட்டங்களை மீறக்கூடாது என்று அவர்களை எச்சரித்துவிடு. தக்க நெறியில் நடக்குமாறு அவர்களுக்குக் கூறு. என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி அவர்களுக்குக் கூறு. 21 ஆனால் தலைவர்களாகவும், நீதிபதிகளாகவும் இருப்பதற்காகச் சிலரை நீ தேர்ந்தெடுத்துக்கொள்ளவும் வேண்டும்.

“உன் நம்பிக்கைக்குரிய நல்ல மனிதர்களைத் தேர்ந்தெடுத்துக்கொள். அம்மனிதர்கள் தேவனை மதிக்கிறவர்களாக இருக்க வேண்டும். பணத்திற்காக தங்கள் முடிவுகளை மாற்றாத மனிதர்களைத் தெரிந்துகொள். ஜனங்களுக்குத் தலைவர்களாக அவர்களை நியமித்துவிடு. 1,000 ஜனங்களுக்கும், 100 ஜனங்களுக்கும், 50 ஜனங்களுக்கும், 10 பேருக்கும் கூட தலைவர்கள் இருக்கட்டும். 22 இந்த அதிகாரிகள் ஜனங்களை நியாயந்தீர்க்கட்டும். மிக முக்கியமான வழக்கிருந்தால் அவர்கள் உன்னிடம் வரட்டும், நீ என்ன செய்வதென முடிவெடுக்கலாம். ஆனால் மற்ற வழக்குகளில் இம்மனிதர்கள் உனது வேலையைப் பகிர்ந்துகொள்ளட்டும். இப்படி ஜனங்களை வழி நடத்துவது உனக்கு எளிதாகும். 23 தேவ தயவால் நீ இவற்றைச் செய்தால், நீ உனது பணியை இன்னும் சிறப்பாகச் செய்ய முடியும். அதே நேரத்தில் ஜனங்களும் தங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டவர்களாய் வீடு திரும்ப முடியும்” என்றான்.

24 எனவே எத்திரோ கூறியபடியே மோசே செய்தான். 25 இஸ்ரவேல் ஜனங்களில் சில நல்ல மனிதர்களை மோசே தெரிந்தெடுத்து ஜனங்களுக்குத் தலைவர்களாக அவர்களை நியமித்தான். 1,000 பேருக்கும், 100 பேருக்கும், 50 பேருக்கும், 10 பேருக்கும் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். 26 இந்த அதிகாரிகள் ஜனங்களுக்கு நீதிபதிகளாக இருந்தனர். இந்த அதிகாரிகளிடம் ஜனங்கள் தங்கள் விவாதங்களை எந்த நேரத்திலும் முன் வைக்க முடிந்தது. மிக முக்கியமான வழக்குகளை மட்டும் மோசே தீர்த்து வைக்க வேண்டியதாயிற்று.

27 கொஞ்ச நாட்களுக்குப்பின், மோசே தன் மாமனாராகிய எத்திரோவை வழியனுப்பினான். எத்திரோ தன் வீட்டிற்குத் திரும்பினான்.

லூக்கா 21

உண்மையான ஈகை(A)

21 தேவாலயத்தில் காணிக்கைப் பெட்டியில் சில செல்வந்தர்கள் தேவனுக்காகத் தங்கள் காணிக்கைகளைப் போடுவதை இயேசு கண்டார். அப்போது இயேசு ஓர் ஏழை விதவையைக் கண்டார். பெட்டியினுள் அவள் இரண்டு சிறிய செம்பு நாணயங்களை இட்டாள். இயேசு, “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். இந்த ஏழை விதவை இரண்டு சிறிய நாணயங்களையே கொடுத்தாள். ஆனால், அச்செல்வந்தர்கள் கொடுத்தவற்றைக் காட்டிலும் அவள் உண்மையில் அதிகமாகக் கொடுத்தாள். செல்வந்தர்களிடம் மிகுதியான செல்வம் இருக்கிறது. அவர்களுக்குத் தேவையற்ற செல்வத்தையே அவர்கள் கொடுத்தார்கள். இந்தப் பெண்ணோ மிகவும் ஏழை. ஆனால் அவளுக்கிருந்த எல்லாவற்றையும் அவள் கொடுத்தாள். அவள் வாழ்க்கைக்கு அந்தப் பணம் தேவையாக இருந்தது” என்றார்.

தேவாலயத்தின் அழிவு(B)

சில சீஷர்கள் தேவாலயத்தைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள், “இது மிக நல்ல கற்களாலான ஓர் அழகான தேவாலயம். தேவனுக்கு அளிக்கப்பட்ட நல்ல காணிக்கைகளைப் பாருங்கள்” என்றனர்.

ஆனால் இயேசு, “இங்கு நீங்கள் பார்க்கிற அனைத்தும் அழிக்கப்படும் காலம் வரும். இந்தக் கட்டிடங்களின் ஒவ்வொரு கல்லும் தரையில் தள்ளப்படும். ஒரு கல்லின் மேல் மற்றொரு கல் இருக்காது” என்றார்.

சில சீஷர்கள் இயேசுவிடம், “போதகரே, இவை எப்போது நடக்கும்? இவை நடைபெறும் காலம் இதுவென எங்களுக்குக் காட்டுவது எது?” என்று கேட்டார்கள்.

இயேசு, “எச்சரிக்கையாக இருங்கள். முட்டாள் ஆக்கப்படாதீர்கள். எனது பெயரைப் பயன்படுத்திக் கொண்டு பலர் வருவார்கள். அவர்கள், ‘நானே கிறிஸ்து’ என்றும், ‘வேளை வந்தது’ என்றும் கூறுவார்கள். ஆனால் அவர்களைப் பின்பற்றாதீர்கள். யுத்தங்களையும் கலவரங்களையும் பற்றிக் கேள்விப்படும்போது பயப்படாதீர்கள். இவை முதலில் நிகழ வேண்டும். ஆனால் உடனடியாக ஒரு முடிவு வராது” என்றார்.

10 பிற்பாடு இயேசு அவர்களிடம், “தேசங்கள் வேறு தேசங்களோடு போரிடும். இராஜ்யங்கள் பிற இராஜ்யங்களோடு போர் செய்யும். 11 பூகம்பங்களும், நோய்களும், தீயகாரியங்களும் பல இடங்களில் நிகழும். சில இடங்களில் மக்கள் உண்பதற்கு உணவு கிடைக்காது. பயங்கரமானதும், ஆச்சரியமானதுமான காரியங்கள் வானில் தோன்றி மக்களை எச்சரிக்கும்.

12 “ஆனால் இவையெல்லாம் நிகழும் முன்னர் மக்கள் உங்களைக் கைது செய்வார்கள். ஜெப ஆலயங்களில் மக்கள் உங்களை நியாயந்தீர்த்து சிறையில் தள்ளுவார்கள். அரசர்களின் முன்பும், ஆளுநர்களின் முன்பும் நிற்கும்படியாகக் கட்டாயப்படுத்தப்படுவீர்கள். 13 நீங்கள் என்னைப் பின்பற்றுவதால் நீங்கள் என்னைப்பற்றிப் பிறருக்கு கூறுவதற்கு இவை உங்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தும். 14 நீங்கள் என்ன சொல்வீர்கள் என்பதைக்குறித்து நடப்பதற்கு முன்னாலேயே கவலைப்படாதீர்கள். 15 உங்கள் பகைவர்கள் பதில் கூற முடியாதபடி அல்லது மறுக்க முடியாதபடி செய்திகளைச் சொல்லும் ஞானத்தை உங்களுக்குத் தருவேன். 16 உங்கள் பெற்றோரும், சகோதரரும், உறவினரும், நண்பரும் கூட உங்களை ஏமாற்றுவார்கள். அவர்கள் உங்களில் சிலரைக் கொல்வார்கள். 17 எல்லா மக்களும் நீங்கள் என்னைப் பின்பற்றுவதால் உங்களை வெறுப்பார்கள். 18 ஆனால் இவற்றில் ஒன்றும் உண்மையில் உங்களைத் தீங்கு செய்யமுடியாது. 19 இக்காரியங்கள் மூலமாக உங்கள் நம்பிக்கையைப் பலப்படுத்துவதால் நீங்கள் உங்களை மீட்டுக்கொள்ள முடியும்.

எருசலேமின் அழிவு(C)

20 “எருசலேமைச் சுற்றிலும் படைகள் சூழ்ந்திருக்கக் காண்பீர்கள். எருசலேமின் அழிவு காலம் நெருங்கிவிட்டது என்பதை அப்போது அறிந்துகொள்வீர்கள். 21 அப்போது யூதேயாவின் மக்கள் மலைகளுக்கு ஓடிச் செல்லவேண்டும். எருசலேம் மக்கள் விரைந்து செல்லவேண்டியதிருக்கும். நீங்கள் எருசலேம் நகருக்கு வெளியே இருக்கிறவர்கள், உள்ளே போகாதீர்கள். 22 தேவன் தம் மக்களைத் தண்டிக்கும் காலத்தைக் குறித்துத் தீர்க்கதரிசிகள் நிரம்ப செய்திகளை எழுதி இருக்கிறார்கள். நான் உங்களுக்குச் சொல்லிக்கொண்டிருப்பதெல்லாம் இவை எல்லாம் நிகழவேண்டிய காலத்தைக் குறித்தாகும். 23 அந்த நேரம் கருவுற்ற பெண்களுக்கும் பாலூட்டவேண்டிய சின்னஞ் சிறு குழந்தைகளை உடைய பெண்களுக்கும் மிகவும் கொடுமையானதாக இருக்கும். ஏன்? இந்தப் பூமியில் மிகக் கொடுமையான காலம் வரும். இந்த மக்களிடம் (யூதர்களிடம்) தேவன் சினம் கொள்வார். 24 வீரர்களால் சிலர் கொல்லப்படுவார்கள். பிறர் கைதிகளாக்கப்பட்டு ஒவ்வொரு தேசத்திற்கும் கொண்டு செல்லப்படுவார்கள். தூய பட்டணமாகிய எருசலேமில் யூதரல்லாத மக்கள் அவர்கள் காலம் முடியும்மட்டும் நடந்து செல்வார்கள்.

அஞ்சாதீர்கள்(D)

25 “சூரியன், சந்திரன், விண்மீன்களில் ஆச்சரியப்படத்தக்க விஷயங்கள் நடக்கும். பூமியின் மக்கள் அகப்பட்டுக்கொண்டதாக உணர்வார்கள். சமுத்திரங்கள் கலக்கமடையும். ஏனென்று மக்கள் அறியமாட்டார்கள். 26 மக்கள் அஞ்ச ஆரம்பிப்பார்கள். உலகத்திற்கு என்ன நேரிடுமோ என்று அவர்கள் கவலைப்படுவார்கள். வானிலுள்ள ஒவ்வொரு பொருளும் வித்தியாசப்படும். 27 அப்போது மேகத்தில் மனித குமாரன் அவரது வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வந்துகொண்டிருப்பதை மக்கள் காண்பார்கள். 28 இந்தக் காரியங்கள் நிகழ ஆரம்பித்ததும் பயப்படாதீர்கள். மேலே பார்த்து மகிழுங்கள். கவலை கொள்ளாதீர்கள். தேவன் உங்களை விடுவிக்கும் நேரம் நெருங்கிக்கொண்டிருப்பதை நீங்கள் அறிந்திருப்பதால் சந்தோஷமாக இருங்கள்” என்றார்.

அழியாத தேவ வார்த்தை(E)

29 பின்பு இயேசு இவ்வுவமையைச் சொன்னார்: “எல்லா மரங்களையும் பாருங்கள், அத்தி மரம் ஒரு நல்ல உதாரணம். 30 அது பசுமை நிறமாக இருக்கும்போது கோடை நெருங்கிவிட்டது என்று உணர்வீர்கள். 31 நடக்கும் என்று நான் கூறிய காரியங்களும் அதைப் போன்றதே, இக்காரியங்கள் நடப்பதைப் பார்க்கும்போது, தேவனின் இராஜ்யம் விரைவில் வர இருப்பதை அறிவீர்கள்.

32 “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், இக்காலத்து மக்கள் வாழ்ந்துகொண்டு இருக்கும்போதே இக்காரியங்கள் எல்லாம் நடக்கும்.

33 “உலகம் முழுவதும், விண்ணும், பூமியும் அழிக்கப்படும். ஆனால், நான் கூறிய சொற்களோ, ஒரு நாளும் அழிவதில்லை.

ஆயத்தமாயிருங்கள்

34 “எச்சரிக்கையாக இருங்கள். குடித்துக்கொண்டும், குடியில் மூழ்கிக்கொண்டும் காலத்தைக் கழிக்காதீர்கள். அல்லது உலகத்துக் காரியங்களில் அதிகப்படியாக ஈடுபடாதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்தால் உங்களால் சரியானதைச் சிந்திக்க முடியாது. பிறகு முடிவு திடுமென நீங்கள் தயாராக இல்லாதபோது வரக்கூடும். 35 பூமியின் மக்களுக்கு அது ஒரு பொறியைப்போல் இருக்கும். ஏனெனில் பூமியில் உள்ள அனைவருக்கும் இந்த நாள் வரும். 36 எனவே எப்போதும் தயாராக இருங்கள். நடக்கப் போகிற இக்காரியங்களில் பாதுகாப்பாகத் தொடருவதற்கு உரிய வன்மை வேண்டுமென பிரார்த்தியுங்கள். மனிதகுமாரனுக்கு முன்பாக நிற்கும் தகுதி பெறுவதற்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்” என்றார்.

37 பகல் வேளையில் இயேசு தேவாலயத்தில் மக்களுக்குப் போதித்தார். இரவில் பட்டணத்திற்கு வெளியே சென்று இரவு முழுவதும் ஒலிவ மலையில் தங்கி இருந்தார். 38 ஒவ்வொரு காலையிலும் மக்கள் அதிகாலையில் எழுந்து தேவாலயத்தில் இயேசு கூறுவதைக் கேட்பதற்காகச் சென்றார்கள்.

யோபு 36

36 எலிகூ தன் பேச்சைத் தொடர்ந்தான். அவன்,

“என்னோடு இன்னும் கொஞ்சம் பொறுமையாயிரும்.
    இன்னும் சில வார்த்தைகளைக் கூட நான் பேச தேவன் விரும்புகிறார்.
நான் எனது அறிவை எல்லோரோடும் பகிர்ந்துக்கொள்வேன், தேவன் என்னை உண்டாக்கினார்,
    தேவன் நியாயமானவரென நான் நிரூபிப்பேன்.
யோபுவே, நான் உண்மையைக் கூறிக் கொண்டிருக்கிறேன்.
    நான் எதைக் குறித்துப் பேசுகிறேன் என்று நான் அறிவேன்.

“தேவன் மிகுந்த வல்லமையுள்ளவர், ஆனால் அவர் ஜனங்களை வெறுப்பதில்லை.
    தேவன் மிகுந்த வல்லமையுள்ளவர், ஆனால் அவர் மிகுந்த ஞானமுள்ளவர்.
தேவன் தீய ஜனங்களை வாழவிடமாட்டார்,
    தேவன் ஏழைகளை எப்போதும் நியாயமாக நடத்துகிறார்.
தக்க வழியில் நடப்போரைத் தேவன் கண்ணோக்குகிறார்.
    அவர் நல்லோரை அரசர்களாயிருக்க அனுமதிக்கிறார்.
    தேவன் நல்லோருக்கு என்றென்றும் மகிமையைக் கொடுக்கிறார்.
எனவே ஜனங்கள் தண்டிக்கப்பட்டால், அவர்கள் விலங்குகளினாலும் கயிறுகளினாலும் கட்டப்பட்டால்,
    அப்போது அவர்கள் தவறு செய்தவர்களாயிருப்பார்கள்.
அவர்கள் செய்தது என்னவென்பதை தேவன் சொல்வார்.
    அவர்கள் பாவம் செய்தார்கள் என்பதை தேவன் சொல்வார்.
    அவர்கள் பெருமையாயிருந்தார்கள் என்பதை தேவன் சொல்வார்.
10 தேவன் தனது எச்சரிக்கைக்குச் செவிசாய்க்குமாறு அந்த ஜனங்களைக் கட்டாயப்படுத்துவார்.
    அவர்கள் பாவம் செய்வதை நிறுத்துமாறு தேவன் கட்டளையிடுவார்.
11 அந்த ஜனங்கள் தேவனுக்குச் செவி கொடுத்து அவருக்குக் கீழ்ப்படிந்தால், தேவன் அவர்கள் வெற்றிக் காணச் செய்வார்.
    அவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வார்கள்.
12 ஆனால் அந்த ஜனங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிய மறுத்தால், அப்போது அவர்கள் அழிக்கப்படுவார்கள்.
    அவர்கள், அறியாமையுடையவர்களாக மரித்துப்போவார்கள்.

13 “தேவனைப்பற்றிக் கவலைப்படாத ஜனங்கள் எப்போதும் கசப்பானவர்கள்,
    தேவன் அவர்களைத் தண்டிக்கிறபோதும் கூட, அவர்கள் தேவனிடம் உதவிக்காக ஜெபம் செய்ய மறுக்கிறார்கள்.
14 அவர்கள் ஆண் விபசாரிகளைப்போல
    இளமையிலேயே மரித்துப்போவார்கள்.
15 ஆனால் தேவன் ஜனங்கள் பெறும் தொல்லைகளால் அவர்களைத் தாழ்மையானவர்களாக்குவார்.
    ஜனங்கள் எழுந்து அவருக்குச் செவிகொடுப்பதற்காக தேவன் அத்தொல்லைகளைப் பயன்படுத்துகிறார்.

16 “யோபுவே, தேவன் உனக்கு உதவ விரும்புகிறார்.
    தொல்லைகளிலிருந்து உன்னை விடுவிக்க தேவன் விரும்புகிறார்.
    உனக்கு வாழ்க்கையை எளிதாக்க தேவன் விரும்புகிறார்.
    உன் மேசையில் மிகுதியான உணவு இருக்கும்படியாகச் செய்ய தேவன் விரும்புகிறார்.
17 ஆனால் இப்போது யோபுவே, நீ குற்றவாளியாக நியாயந்தீர்க்கப்பட்டாய்.
    எனவே ஒரு தீயவனைப்போன்று நீ தண்டிக்கப்பட்டாய்.
18 யோபுவே, செல்வங்கள் உன்னை மூடனாக்கவிடாதேயும்.
    பணம் உனது மனதை மாற்றவிடாதேயும்.
19 உனது பணம் இப்போது உனக்கு உதவாது.
    வல்லமையுள்ளோர் உமக்கு உதவவும் முடியாது.
20 இரவின் வருகையை விரும்பாதேயும்.
    ஜனங்கள் இரவில் மறைந்துபோக முயல்கிறார்கள்.
    அவர்கள் தேவனிடமிருந்து ஒளிந்துக்கொள்ள முடியும் என்று நினைக்கிறார்கள்.
21 யோபுவே, நீ மிகவும் துன்புற்றிருக்கிறாய்.
    ஆனால் தீமையைத் தேர்ந்துகொள்ளாதேயும்.
    தவறு செய்யாதபடி எச்சரிக்கையாயிரும்.

22 “தேவன் தமது வல்லமையினால் மேன்மையுற்றிருக்கிறார்.
    தேவன் எல்லோரினும் மிகவும் சிறந்த போதகர்!
23 தேவன் செய்ய வேண்டுவதென்ன என்று ஒருவனும் தேவனுக்குக் கூற முடியாது.
    ‘தேவனே, நீர் தவறு செய்கிறீர்’ என்று ஒருவனும் தேவனிடம் கூற முடியாது!
24 தேவன் செய்த காரியங்களுக்காக அவரைத் துதிக்க வேண்டுமென நினைவுகூருங்கள்.
    தேவனைத் துதிக்கும் பல பாடல்களை ஜனங்கள் எழுதியிருக்கிறார்கள்.
25 தேவன் செய்தவற்றை ஒவ்வொருவனும் காண முடியும்.
    தூரத்து நாடுகளின் ஜனங்களும் அவற்றைப் பார்க்க இயலும்.
26 ஆம், தேவன் மேன்னைமயானவர்.
    ஆனால் அவரது மேன்மையை நாம் புரிந்து கொள்ள முடியாது, எத்தனை காலமாக தேவன் வாழ்ந்திருக்கிறார் என்பதையும் நாம் அறியமுடியாது.

27 “தேவன் பூமியிலிருந்து தண்ணீரை, மேலே எடுத்து,
    அதைப் பனியாகவும் மழையாகவும் மாற்றுகிறார்.
28 ஆகையால் மேகங்கள் தண்ணீரைப் பொழிகின்றன.
    மழை பலர் மீது பெய்கிறது.
29 தேவன் மேகங்களை எவ்வாறு பரப்புகிறார் என்பதையும்
    வானத்தில் இடி முழக்கம் எவ்வாறு ஏற்படுகிறது என்பதையும் ஒருவனும் புரிந்து கொள்ள முடியாது.
30 பாரும்! தேவன் பூமியின் மீது மின்னலைப் பரப்பி,
    சமுத்திரங்களின் ஆழமான பகுதிகளை மூடினார்.
31 தேசங்களை அடக்கியாள்வதற்கும்
    அங்கு மிகுதியான உணவுப் பொருட்களைக் கொடுப்பதற்கும், தேவன் அவற்றைப் பயன்படுத்துகிறார்.
32 தேவன் அவரது கைகளால் மின்னலைப் பிடிக்கிறார்,
    அவருக்கு விருப்பமான இடங்களில் தாக்குமாறு அதற்குக் கட்டளையிடுகிறார்.
33 புயல் வந்துகொண்டிருப்பதை இடி எச்சரிக்கிறது.
    அது வந்துகொண்டிருப்பதை ஆடு, மாடுகள் கூட அறிகின்றன” என்றான்.

2 கொரி 6

நாங்கள் தேவனோடு சேர்ந்து பணியாற்றுகிறவர்கள். எனவே, தேவனிடமிருந்து நீங்கள் பெற்ற கிருபையை பயனற்ற வகையில் வீணடிக்க வேண்டாம் என உங்களைக் கேட்டுக்கொள்ளுகிறேன்.

“நான் சரியான சமயத்தில் உன்னைக் கேட்டேன்.
    இரட்சிப்புக்கான நாளில் நான் உதவி செய்தேன்” (A)

என்று தேவன் கூறுகிறார்.

அவர் சொன்ன “சரியான நேரம்” என்பது இதுதான் என்று உங்களுக்குக் கூறுகிறேன். “இரட்சிப்புக்கான நாளும்” இதுதான்.

எங்களின் பணியில் எவரும் குற்றம் கண்டு பிடிப்பதை நாங்கள் விரும்பவில்லை. ஆனாலும் மற்றவர்களுக்குப் பிரச்சனையாய் இருக்கும் எதையுமே நாங்கள் செய்யவில்லை. ஆனால், அனைத்து வழிகளிலும் நாங்கள் தேவனுடைய ஊழியக்காரர்கள் என்பதைக் காட்டி வருகிறோம். பல கஷ்டங்களிலும், பிரச்சனைகளிலும், துன்பங்களிலும் இதனை நாங்கள் வெளிப்படுத்துகிறோம். நாங்கள் அடிக்கப்பட்டுச் சிறையில் தள்ளப்படுகிறோம். மக்கள் அதிர்ச்சியடைந்து எங்களுடன் மோதுகிறார்கள். நாங்கள் கடின வேலைகளைச் செய்கிறோம். சில நேரங்களில் உணவும், உறக்கமும் இல்லாமல் இருக்கிறோம். எங்கள் அறிவினாலும், பொறுமையாலும், இரக்கத்தாலும், தூய வாழ்க்கையாலும் நாங்கள் தேவனுடைய ஊழியர்கள் எனக் காட்டிக்கொள்கிறோம். நாங்கள் இதனைப் பரிசுத்த ஆவியாலும், தூய அன்பாலும், உண்மையான பேச்சாலும் தேவனுடைய வல்லமையாலும் வெளிப்படுத்துகிறோம். எங்கள் சரியான வாழ்க்கையைப் பயன்படுத்தி எல்லாவற்றிலும் இருந்தும் எங்களைக் காத்துக்கொள்கிறோம்.

சிலர் எங்களை மதிக்கிறார்கள். மற்றும் சிலர் எங்களை அவமானப்படுத்துகிறார்கள். சிலர் எங்களைப் பற்றி நல்ல செய்திகளையும் வேறு சிலர் கெட்ட செய்திகளையும் பரப்புகிறார்கள். சிலர் எங்களைப் பொய்யர்கள் என்று குற்றம் சுமத்துகிறார்கள். ஆனால் நாங்கள் உண்மையையே பேசுகிறோம். இன்னும் சிலருக்கு நாங்கள் முக்கியமற்றவர்கள். ஆனால் நாங்கள் எல்லோருக்கும் நன்கு அறிமுகமானவர்கள். நாங்கள் மடிந்து போவதுபோல் இருக்கிறோம். ஆனால் தொடர்ந்து வாழ்கிறோம். நாங்கள் தண்டிக்கப்படுகிறோம். ஆனால் கொல்லப்படவில்லை. 10 எங்களுக்கு நிறைய சோகம் உண்டு. ஆனால் நாங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். நாங்கள் ஏழைகள்தான். ஆனால் பலரைச் செல்வராக்குகிறோம். எங்களுக்கென்று எதுவுமில்லை. ஆனால் உண்மையில் எங்களுக்கு எல்லாம் இருக்கிறது.

11 கொரிந்தியர்களாகிய உங்களிடம் நாங்கள் வெளிப்படையாகப் பேசியிருக்கிறோம். எங்கள் மனதைத் திறந்து காட்டியிருக்கிறோம். 12 உங்களிடம் நாங்கள் கொண்ட அன்பு எப்பொழுதும் குறையவில்லை. அதைத் தடுத்ததும் இல்லை. ஆனால் எங்கள்மீது உங்களிடம் உள்ள அன்பே தடுக்கப்பட்டிருக்கிறது. 13 நீங்கள் எனது பிள்ளைகள் என்ற முறையில் தான் நான் பேசுகிறேன். நாங்கள் செய்வது போலவே நீங்கள் இதயங்களைத் திறந்து காட்டுவீர்களா?

கிறிஸ்தவர் அல்லாதவர்களோடு வாழ்வது எப்படி?

14 நீங்கள் விசுவாசம் இல்லாத மற்ற மக்களைப் போன்றவர்கள் அல்லர். எனவே நீங்களாகவே சென்று அவர்களோடு சேராதீர்கள். நல்லவையும் கெட்டவையும் சேரக் கூடாது. வெளிச்சமும் இருட்டும் சேர்ந்திருக்க முடியாது. 15 எப்படி கிறிஸ்துவும் சாத்தானும் உடன்பாடுகொள்ள முடியும்? ஒரு விசுவாசிக்கும், விசுவாசம் இல்லாதவனுக்கும் பொதுவாக என்ன இருக்க முடியும்? 16 தேவனுடைய ஆலயமானது வெறும் சிலைகளோடு எவ்வாறு ஒப்பந்தம் செய்ய முடியும்.? நாம் ஜீவனுள்ள தேவன் வாழும் ஆலயங்களைப் போன்றுள்ளோம்.

“நான் அவர்களோடு வாழ்வேன்; நடப்பேன்; நான் அவர்களது தேவனாக இருப்பேன்.
அவர்களே எனது மக்களாக இருப்பார்கள்.” (B)

17 “எனவே அவர்களை விட்டுவிட்டு வெளியே வாருங்கள்.
    அவர்களிடமிருந்து தனியாக உங்களைப் பிரித்துக்கொள்ளுங்கள்.
சுத்தமில்லாத எதையும் தொடவேண்டாம்.
    நான் உங்களை ஏற்றுக்கொள்வேன்”. (C)

18 “நான் உங்களின் பிதாவாக இருப்பேன். நீங்கள் எனது மகன்களாகவும்
    மகள்களாகவும் இருப்பீர்கள் என்று எல்லா வல்லமையும் கொண்ட கர்த்தர் கூறுகிறார்” (D)

என்று தேவன் கூறுகிறார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center