Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
யாத்திராகமம் 24

தேவனும் இஸ்ரவேலரும் உடன்படிக்கையை செய்துகொள்கிறார்கள்

24 தேவன் மோசேயை நோக்கி, “நீயும் ஆரோன், நாதாப், அபியூ, மற்றும் இஸ்ரவேலின் 70 மூப்பர்களும் (தலைவர்கள்) மலையின் மேல் வந்து என்னைத் தூரத்திலிருந்து தொழுதுகொள்ள வேண்டும். பின்பு மோசே மாத்திரம் கர்த்தரிடம் நெருங்கி வருவான். மற்றவர்கள் கர்த்தரை நெருங்கி மலை மீது ஏறி வரக்கூடாது” என்றார்.

கர்த்தர் கூறிய எல்லா விதிகளையும், கட்டளைகளையும் மோசே ஜனங்களுக்குக் கூறினான். எல்லா ஜனங்களும், “கர்த்தர் கூறின எல்லா கட்டளைகளுக்கும் நாங்கள் கீழ்ப்படிவோம்” என்று ஏகமாய் பதிலுரைத்தனர்.

எனவே மோசே ஒரு சுருளில் கர்த்தரின் கட்டளைகளை எழுதினான். மறுநாள் காலையில் மோசே எழுந்து மலையடிவாரத்தில், ஒவ்வொரு கல்லும் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களைக் குறிக்கும் வகையில் பன்னிரண்டு கற்களால் ஒரு பலிபீடத்தைக் கட்டினான். பின் மோசே இஸ்ரவேலின் வாலிபர்களைப் பலி செலுத்தவதற்காக அழைத்தனுப்பினான். தகன பலியாகவும் சமாதான பலியாகவும் அவர்கள் இளங்காளைகளைப் பலியிட்டனர்.

மோசே இம்மிருகங்களின் இரத்தத்தை எடுத்து வைத்தான். அந்த இரத்தத்தில் பாதியைக் கிண்ணங்களில் ஊற்றினான். மீதியைப் பலிபீடத்தின்மேல் தெளித்தான்.

விசேஷ உடன்படிக்கை பொருந்திய சுருளை எல்லா ஜனங்களும் கேட்கும்படியாக மோசே வாசித்தான். அதைக் கேட்டதும் ஜனங்கள், “கர்த்தர் எங்களுக்குக் கொடுத்த சட்டங்களைக் கேட்டோம். அவற்றிற்குக் கீழ்ப்படிய சம்மதிக்கிறோம்” என்றார்கள்.

பலிகளின் இரத்தத்தைச் சேகரித்து வைத்திருந்த கிண்ணத்தை மோசே உயர்த்தி, இரத்தத்தை ஜனங்கள் மீது தெளித்தான். அவன், “கர்த்தர் உங்களோடு ஒரு விசேஷ உடன்படிக்கையைச் செய்தார் என்பதை இந்த இரத்தம் குறிக்கிறது. தேவன் கொடுத்த சட்டங்கள் இந்த உடன்படிக்கையை விளக்குகின்றன” என்றான்.

பின்பு மோசே, ஆரோன், நாதாப், அபியூ மற்றும் இஸ்ரவேலின் 70 மூப்பர்களும் (தலைவர்கள்) மலையின் மீது ஏறி, 10 இஸ்ரவேலின் தேவனைக் கண்டனர். அவர் நின்றிருந்த இடம் வானத்தின் நிறமுள்ள தெளிந்த நீல இரத்தினக் கற்பாறை போன்று காணப்பட்டது! 11 இஸ்ரவேலின் மூப்பர் எல்லோரும் தேவனைக் கண்டார்கள். ஆனால் தேவன் அவர்களை அழிக்கவில்லை. அவர்கள் எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டு குடித்தார்கள்.

தேவனின் கட்டளையைப் பெறுவதற்கு மோசே போகிறான்

12 கர்த்தர் மோசேயை நோக்கி, “மலையின் உச்சியில் என்னிடம் வா. அங்கே எனது கற்பலகைகளையும், நீ அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய நியாயப்பிரமாணத்தையும், கற்பனைகளையும் நான் உனக்கு கொடுப்பேன்” என்றார்.

13 மோசேயும், அவனது உதவியாளனாகிய யோசுவாவும் தேவனின் மலையின் மீது ஏறினார்கள். 14 மோசே இஸ்ரவேல் மூப்பர்களிடம் (தலைவர்களிடம்), “இங்கே எங்களுக்காகக் காத்திருங்கள். நாங்கள் உங்களிடம் திரும்பி வருவோம். நான் இல்லாதபோது, ஆரோனும், ஊரும் உங்களைக் கண்காணிப்பார்கள். பிரச்சனை ஏதேனும் வந்தால் அவர்களிடம் செல்லுங்கள்” என்றான்.

மோசே தேவனைச் சந்திக்கிறான்

15 பின்பு மோசே மலையின் மீது ஏறினான். மேகம் மலையைச் சூழ்ந்துகொண்டது. 16 கர்த்தரின் மகிமை சீனாய் மலையின் மீது இறங்கியது. மேகம் மலையை சுற்றி ஆறு நாட்கள் சூழ்ந்திருந்தது. ஏழாவது நாளில் கர்த்தர் மேகத்திலிருந்து மோசேயிடம் பேசினார். 17 இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரின் மகிமையைக் கண்டார்கள். மலை உச்சியின் மீது எரிகிற நெருப்பைப் போன்று அது இருந்தது.

18 பின்பு மோசே மலையின் உச்சியில் மேகத்துக்குள் சென்றான். அங்கே மோசே 40 பகலையும் 40 இரவையும் கழித்தான்.

யோவான் 3

இயேசுவும் நிக்கொதேமுவும்

நிக்கொதேமு என்று ஒரு மனிதன் இருந்தான். அவன் பரிசேயர்களுள் ஒருவன். அவன் ஓர் முக்கியமான யூதத் தலைவன். ஓர் இரவு அவன் இயேசுவிடம் வந்தான். “போதகரே! நீங்கள் தேவனிடமிருந்து அனுப்பப்பட்டவர் என்பதை நாங்கள் அறிவோம். தேவனின் உதவியின்றி எவரொருவராலும் நீர் செய்வதுபோன்ற அற்புதங்களைச் செய்ய இயலாது” என்று சொன்னான்.

அதற்கு இயேசு, “நான் உனக்கு உண்மையைக் கூறுகிறேன். ஒருவன் மீண்டும் பிறக்கவேண்டும். இல்லாவிட்டால் அவன் தேவனுடைய இராஜ்யத்தில் இடம்பெற முடியாது” என்று கூறினார்.

அதற்கு நிக்கொதேமு, “ஆனால் ஒரு மனிதன் ஏற்கெனவே முதியவனாக இருந்தால் அவன் எப்படி மீண்டும் பிறக்கமுடியும்? ஒருவன் மீண்டும் தாயின் சரீரத்திற்குள் நுழையமுடியாது. ஆகையால் ஒருவன் இரண்டாம் முறையாக பிறக்க முடியாதே” என்றான்.

இதற்குப் பதிலாக இயேசு, “நான் உனக்கு ஓர் உண்மையைச் சொல்கிறேன். ஒருவன் நீரில் இருந்தும் ஆவியில் இருந்தும் பிறக்க வேண்டும். ஒருவன் இவற்றிலிருந்து பிறக்காவிடில் அவனால் தேவனின் இராஜ்யத்துக்குள் நுழைய முடியாது. ஒரு மனிதனின் சரீரமானது அவனது பெற்றோர்களிடமிருந்து கிடைக்கின்றது. ஆனால் அம்மனிதனது ஆவிக்குரிய வாழ்வோ ஆவியானவரிடமிருந்து பிறக்கிறது. நான் சொன்னதைப் பற்றி நீ வியப்பு அடையவேண்டாம். ‘நீ மறுபடியும் பிறக்க வேண்டும்.’ காற்று எங்கே செல்ல விரும்புகிறதோ அங்கே வீசும். நீ காற்றின் ஓசையைக் கேட்பாய். ஆனால் அந்தக் காற்று எங்கிருந்து வருகிறது, எங்கே போகிறது என்பதை நீ அறியமாட்டாய். இதுபோலத்தான் ஒவ்வொரு மனிதனும் ஆவியானவரிலிருந்து பிறக்கிறான்” என்றார்.

“இவை எவ்வாறு இயலும்?” என்று நிக்கொதேமு கேட்டான்.

10 “நீ யூதர்களின் முக்கியமான ஒரு போதகன். ஆனால் உன்னால் இவற்றைப்பற்றி இன்னும் புரிந்துகொள்ள முடியவில்லையே! 11 நான் உனக்கு உண்மையைக் கூறுகிறேன், நாங்கள் எங்களுக்குத் தெரிந்தவற்றைப்பற்றியே பேசுகிறோம். நாங்கள் பார்த்தவற்றை மட்டுமே சொல்லுகிறோம். ஆனால் உன்னைப்போன்றவர்கள் நாங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்வதில்லை. 12 நான் பூமியில் உள்ளவற்றைப் பற்றி உனக்குச் சொன்னேன். ஆனால் நீ என்னை நம்புகிறதில்லை. ஆகையால், நான் பரலோகத்தில் உள்ளவற்றைப்பற்றி சொன்னாலும் நீ அவற்றையும் நம்பப்போவதில்லை. 13 பரலோகத்திற்கு ஏறிச் சென்ற ஒரே ஒருவரே பரலோகத்தில் இருந்து இறங்கி வந்தவர். அவர்தான் மனிதகுமாரன்.

14 “வனாந்தரத்தில் மோசே பாம்பினை உயர்த்திப் பிடித்தான். அவ்வாறே மனிதகுமாரனும் உயர்த்தப்பட வேண்டும். [a] 15 பிறகு அந்த மனிதகுமாரன்மேல் நம்பிக்கை வைக்கிற ஒவ்வொருவரும் நித்திய ஜீவனைப் பெறமுடியும்.

16 ஆம்! தேவன் இவ்வுலகினைப் பெரிதும் நேசித்தார். எனவே தனது ஒரே குமாரனை இதற்குத் தந்தார். தேவன் தன் மகனைத் தந்ததால் அவரில் நம்பிக்கை வைக்கிற எவரும் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனைப் பெறுவர். 17 தேவன் தன் மகனை உலகிற்கு அனுப்பினார். உலகின் குற்றங்களை நியாயம் விசாரிக்க தனது மகனை அனுப்பவில்லை. இவ்வுலகம் தேவனுடைய குமாரனால் இரட்சிக்கப்படுவதற்கென்று தேவன் தன் மகனை அனுப்பினார். 18 தேவகுமாரன் மீது நம்பிக்கை வைக்கிறவர்கள் தண்டிக்கப்படுவதில்லை. ஆனால், அவர் மீது நம்பிக்கைகொள்ளாதவர்கள் ஏற்கெனவே தண்டிக்கப்பட்டுவிட்டார்கள். ஏன்? ஏனென்றால் அவர்களுக்கு தேவனுடைய ஒரே மகன் மீது நம்பிக்கை இல்லை. 19 இந்த உலகத்துக்கு ஒளி (நன்மை) வந்திருக்கிறது. ஆனால் அந்த ஒளியை மக்கள் விரும்பவில்லை. அவர்கள் இருளை (பாவத்தை) விரும்பினார்கள். ஏனென்றால் அவர்கள் தீய செயல்களைச் செய்துகொண்டிருந்தார்கள். இந்த உண்மையை வைத்தே அவர்கள் நியாயம் விசாரிக்கப்படுகிறார்கள். 20 தீமைகளைச் செய்கிற ஒவ்வொரு மனிதனும் ஒளியை வெறுக்கிறான். அவன் வெளிச்சத்துக்குள் வரமாட்டான். ஏனென்றால் ஒளி அவன் செய்த தீமைகளை வெளிப்படுத்திக்காட்டும். 21 ஆனால் உண்மை வழியைப் பின்தொடர்ந்து செல்கிறவர்கள் ஒளியிடம் வந்தடைகிறார்கள். பிறகு, அந்த ஒளி அவர்கள் செய்த செயல்கள் தேவன் மூலமாகச் செய்த நற்செயல்கள் எனக் காட்டும் [b] என்று இயேசு கூறினார்.

இயேசுவும், யோவான் ஸ்நானகனும்

22 அதற்குப் பிறகு, இயேசுவும் அவரது சீஷர்களும் யூதேயா பகுதிக்குப் போனார்கள். அங்கு இயேசு தன் சீஷர்களோடு தங்கி ஞானஸ்நானம் கொடுத்தார். 23 யோவானும் அயினோனில் ஞானஸ்நானம் கொடுத்து வந்தான். அயினோன், சாலிம் அருகில் உள்ளது. அங்கே தண்ணீர் மிகுதியாக இருந்ததால் யோவான் ஞானஸ்நானம் கொடுத்துக்கொண்டிருந்தான். மக்கள் அவனிடம் போய் ஞானஸ்நானம் பெற்றார்கள். 24 (இது யோவான் சிறையில் அடைக்கப்படும் முன்பு நிகழ்ந்தது).

25 யோவானின் சீஷர்களுள் சிலர், யூதரோடு விவாதித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் மத சம்பந்தமான முறையைப்பற்றியே விவாதித்தனர். 26 ஆகையால் யோவானிடம் அவர்கள் வந்தனர். “போதகரே! யோர்தான் நதிக்கு அக்கரையில் ஒருவர் உம்மோடு இருந்தாரே, நினைவிருக்கிறதா? நீங்கள் அந்த மனிதரைப்பற்றியும் மக்களிடம் சொல்லியிருக்கிறீர்கள். அவர் மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்துக்கொண்டிருக்கிறார். அவரிடம் ஏராளமான மக்கள் சென்றுகொண்டிருக்கின்றனர்” என்று கூறினர்.

27 “தேவன் எதை ஒருவனுக்குக் கொடுக்கிறாரோ, அதையே ஒரு மனிதன் பெற்றுக்கொள்ள முடியும். 28 ‘நான் கிறிஸ்து அல்ல’ என்று நானே கூறியதையும் நீங்கள் சோதித்து அறிந்திருக்கிறீர்கள். ‘அவருக்கான பாதையைச் செம்மை செய்வதற்காகவே தேவன் என்னை அனுப்பியிருக்கிறார்.’ 29 மணமகனுக்கே மணமகள் உரியவளாகிறாள். மணமகனுக்கு உதவி செய்கிற மாப்பிள்ளையின் தோழன், மணமகனின் வரவைக் கவனித்து எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கிறான். மணமகனின் சத்தத்தைக் கேட்டு அவன் மிகவும் மகிழ்கிறான். நானும் அதே மகிழ்ச்சியை அடைகிறேன். இதுவே எனது மகிழ்ச்சிகரமான நேரம். 30 இயேசு மேலும் பெருமை பெறவேண்டும். எனது முக்கியத்துவம் குறைந்துவிடவேண்டும்.

பரலோகத்திலிருந்து வந்தவர்

31 “பரலோகத்திலிருந்து வந்திருக்கிற இயேசு மற்ற எல்லாரையும்விடப் பெரியவர். பூமியில் இருந்து வந்தவன் பூமியைச் சார்ந்தவன். அவன் பூமியில் உள்ளவற்றைப்பற்றி மட்டுமே பேசுவான். ஆனால் பரலோகத்திலிருந்து வந்திருக்கிற இயேசுவோ மற்ற எல்லாரையும்விட உயர்ந்தவர். 32 அவர் எதைக் கண்டாரோ, கேட்டாரோ அதையே கூறுகிறார். ஆனால் எவரும் அவர் சொல்வதை ஏற்றுக்கொள்வதில்லை. 33 அவர் சொல்வதை எவனொருவன் ஒப்புக்கொள்கிறானோ அவன், தேவன் உண்மையாய் இருக்கிறார் என்று நிரூபிக்கிறான். 34 தேவன் இயேசுவை அனுப்பினார். அவர் தேவன் சொன்னதைச் சொல்கிறார். தேவன் அவருக்கு ஆவியை நிரம்பக் கொடுத்திருக்கிறார். 35 பிதாவானவர் தன் குமாரனை நேசிக்கிறார். அவர் தன் குமாரனுக்கு அனைத்தின் மேலும் அதிகாரம் கொடுத்திருக்கிறார். 36 இந்தக் குமாரனை நம்புகிற எவரும் நித்திய ஜீவனைப் பெறுவர். ஆனால் அவருக்குக் கீழ்ப்படிய மறுக்கிற எவரும் அந்த வாழ்வை ஒருபோதும் பெற முடியாது. தேவனுடைய கோபம் அவர்கள் மேல் இருக்கும்” என்று யோவான் அவர்களுக்குக் கூறினான்.

யோபு 42

யோபு கர்த்தருக்குப் பதில் கூறுகிறான்

42 அப்போது யோபு கர்த்தருக்குப் பதிலளித்தான். யோபு,

“கர்த்தாவே!Ԕநீர் எல்லாவற்றையும் செய்ய வல்லவர் என்பதை நான் அறிவேன்.
    நீர் திட்டமிடுகிறீர், எதனாலும் உமது திட்டங்களை மாற்றவோ, தடுக்கவோ முடிவதில்லை.
கர்த்தாவே, நீர் இக்கேள்வியைக் கேட்டீர்: ‘இம்மூடத்தனமான காரியங்களை சொல்லிகொண்டிருக்கும் இந்த அஞ்ஞானி யார்?’
    கர்த்தாவே, நான் புரிந்துகொள்ளாதவற்றைக் குறித்துப் பேசினேன்.
    என்னால் புரிந்துகொள்ள முடியாத மிகுந்த வியக்கத்தக்க காரியங்களைப் பற்றிப் பேசினேன்.

“கர்த்தாவே, நீர் என்னிடம், ‘யோபுவே கவனி,
    நான் உன்னோடு பேசுவேன், நான் உன்னிடம் கேள்விகளைக் கேட்பேன், நீ எனக்குப் பதில் கூறுவாய்’ என்றீர்.
கர்த்தாவே, முன்பு, நான் உம்மைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
    இப்போது என் சொந்தக் கண்களாலேயே உம்மைப் பார்க்கிறேன்!
கர்த்தாவே, நான் என்னைக் குறித்து வெட்கமுறுகிறேன்.
    கர்த்தாவே, நான் மன்னிப்புக் கேட்கிறேன்.
நான் தூசியிலும் சாம்பலிலும் உட்கார்ந்து கொண்டே,
    என் இருதயத்தையும் என் வாழ்க்கையையும் மாற்றிக்கொள்ள உறுதியளிக்கிறேன்” என்றான்.

கர்த்தர் யோபுவின் செல்வத்தை மீண்டும் அளிக்கிறார்

கர்த்தர் யோபுவிடம் பேசிமுடித்த பின்பு, அவர் தேமானிலிருந்து வந்த எலிப்பாசிடம் பேசினார். கர்த்தர் எலிப்பாசை நோக்கி, “நான் உன்னிடமும் உனது இரண்டு நண்பர்களிடமும் கோபமாயிருக்கிறேன். ஏனெனில், நீங்கள் என்னைப்பற்றிய சரியான கருத்துக்களைக் கூறவில்லை. யோபுவே என்னைப் பற்றிய சரியான செய்திகளைச் சொன்னான். ஆனால் யோபு எனது தாசன். யோபு என்னைப் பற்றிய சரியான செய்திகளைச் சொன்னான். எனவே இப்போது எலிப்பாசே, ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் கொண்டு வா. அவற்றை எனது தாசன் யோபுவிடம் கொண்டு செல். அவற்றைக் கொன்று, உனக்காக தகனபலியாகச் செலுத்து. என் தாசன் யோபு உனக்காக ஜெபம் செய்வான். நான் அவன் ஜெபத்திற்குப் பதிலளிப்பேன். உனக்குரிய தண்டனையை அப்போது நான் உனக்கு அளிக்கமாட்டேன். நீ மிகுந்த மூடனாக இருந்ததால் நீ தண்டிக்கப்படவேண்டும். நீ என்னைப்பற்றிய சரியான தகவலைக் கூறவில்லை. ஆனால் என் தாசனாகிய (பணியாளாகிய) யோபு என்னைப்பற்றிய சரியான கருத்துக்களைக் கூறினான்.” என்றார்.

எனவே தேமானின் எலிப்பாசும், சூகியனான பில்தாதும், நாகமாவின் சோப்பாரும் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தார்கள். அப்போது கர்த்தர் யோபுவின் ஜெபத்திற்குப் பதிலளித்தார்!

10 யோபு அவனது நண்பர்களுக்காக ஜெபம் செய்தான். தேவன் யோபுவை மீண்டும் வெற்றிபெறச் செய்தார். கர்த்தர் யோபுவுக்கு முன்பிருந்ததைக் காட்டிலும் இரண்டு மடங்காக எல்லாவற்றையும் கொடுத்தார். 11 யோபுவின் எல்லா சகோதரர்களும், சகோதரிகளும் அவனை அறிந்த அனைத்து ஜனங்களும் யோபுவின் வீட்டிற்கு வந்தார்கள். அவர்கள் யோபுவோடு கூட ஒரு பெரிய விருந்துணவை உட்கொண்டார்கள். அவர்கள் யோபுவுக்கு ஆறுதல் கூறினார்கள். கர்த்தர் யோபுவுக்கு மிகுந்த தொல்லைகளைக் கொடுத்ததற்காக அவர்கள் வருந்தினார்கள். ஒவ்வொருவரும் ஒரு வெள்ளிக் காசும், ஒரு பொன் மோதிரமும் யோபுவுக்குக் கொடுத்தார்கள்.

12 யோபுவின் வாழ்க்கையின் முதல் பகுதியைக் காட்டிலும் இரண்டாம் பகுதியைக் கர்த்தர் ஆசீர்வதித்தார்! யோபுவுக்கு 14,000 ஆடுகளும், 6,000 ஒட்டகங்களும், 2,000 பசுக்களும், 1,000 பெண் கழுதைகளும் சொந்தமாக இருந்தன. 13 யோபுவுக்கு ஏழு மகன்களும் மூன்று மகள்களும் இருந்தனர். 14 யோபு, முதல் மகளுக்கு எமீமாள் என்று பேரிட்டான். யோபு, இரண்டாவது மகளுக்குக் கெத்சீயாள் என்று பெயரிட்டான். மூன்றாவது மகளுக்குக் கேரேனாப்புக் என்று பெயர் கொடுத்தான். 15 தேசத்தில் யோபுவின் மகள்களே மிகுந்த அழகிகளாக இருந்தார்கள்! யோபு, அவனது மகள்களுக்கும் சொத்திலுள்ள பாகத்தைக் கொடுத்தான். அவர்களின் சகோதரர்களைப்போலவே சொத்தில் அவர்களும் பங்கைப் பெற்றார்கள்.

16 அவ்வாறு யோபு இன்னும் 140 ஆண்டுகள் வாழ்ந்தான். அவனது பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும், பேரர்களின் பிள்ளைகளையும், பேரர்களின் பேரர்களையும் பார்க்கும்படி அவன் வாழ்ந்தான். 17 பின்பு யோபு மரித்தான். யோபு ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்தான். அவன் மிகவும் முதிர்ந்தவனாகும்வரை வாழ்ந்தான்.

2 கொரி 12

பவுலின் சிறப்பான ஆசீர்வாதம்

12 நான் தொடர்ந்து என்னைப் பாராட்டிக்கொள்வது எனக்கு தகுதியாயிராது. எனினும் நான் இப்போது கர்த்தரின் தரிசனங்களையும், வெளிப்பாடுகளையும் பற்றிப் பேசுகிறேன். கிறிஸ்துவுக்கு உள்ளான ஒரு மனிதனை நான் அறிவேன். அவன் பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னரே மூன்றாவது வானம் வரை தூக்கி எடுத்துச் செல்லப்பட்டான். அவன் சரீரத்தில் இருந்தானா, சரீரத்திற்கு வெளியே இருந்தானா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் தேவனுக்குத் தெரியும். 3-4 அவன் பரலோகத்துக்குத் தூக்கி எடுத்துச் செல்லப்பட்டதை நான் அறிவேன். அப்போது அவன் சரீரத்தோடு இருந்தானா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் விளக்க இயலாத சிலவற்றை அவன் கேட்டிருக்கிறான். மனிதனால் சொல்ல அனுமதிக்கப்படாதவற்றை கேட்டிருக்கிறான். நான் இவனைப் பாராட்டிப் பேசுவேன். ஆனால் என்னைப்பற்றிப் பாராட்டிப் பேசமாட்டேன். நான் எனது பலவீனத்தைப் பற்றி மட்டுமே பாராட்டிக்கொள்வேன்.

நான் என்னையே பாராட்டிப் பேசிக்கொள்ள வேண்டும் என்று விரும்பினால் நான் முட்டாளாக இருக்கமாட்டேன். ஏனென்றால் நான் உண்மையைச் சொல்லிவிடுவேன். அதோடு நான் சொல்வதையும் செய்வதையும் காணும் மக்கள் என்னைப் பற்றி மிகுதியாக நினைத்துக்கொள்வார்கள். அதனால் என்னைப் பற்றி நானே பெருமை பேசிக்கொள்ளமாட்டேன்.

எனக்குக் காட்டப்பட்ட அதிசயங்களைக் குறித்து நான் அதிகம் பெருமைப்பட்டுக்கொள்ளக் கூடாது. வேதனை மிக்க ஒரு பிரச்சனை எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. (மாம்சத்தில் ஒரு முள் என்பது அதன் பொருள்) அது சாத்தானிடம் இருந்து அனுப்பப்பட்ட தூதுவன். நான் அதிக அளவு பெருமை பாராட்டிக்கொள்வதில் இருந்து அது என்னை அடித்துக் கட்டுப்படுத்தும். அப்பிரச்சனையில் இருந்து என்னைக் காப்பாற்றும்படி நான் மூன்று முறை கர்த்தரிடம் வேண்டிக்கொண்டேன். ஆனால் கர்த்தரோ என்னிடம், “என் கிருபை உனக்குப் போதும். நீ பலவீனப்படும்போது என் பெலன் உனக்குள் முழுமையாகும்” என்றார். எனவே நான் என் பலவீனத்தைப் பற்றி மேன்மைப்படுத்தி பேசுவதில் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கியிருக்கிறது. 10 எனவே பலவீனனாக இருக்கும்போது நான் மகிழ்ச்சியடைகிறேன். மக்கள் என்னைப்பற்றி அவதூறாகப் பேசும்போதும் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்குக் கஷ்ட காலங்கள் வரும்போது மகிழ்ச்சி அடைகிறேன். மக்கள் என்னை மோசமாக நடத்தும்போதும் நான் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்குப் பிரச்சனைகள் வரும்போது நான் மகிழ்ச்சி அடைகிறேன். இவை அனைத்தும் கிறிஸ்துவுக்காகத்தான். நான் பலவீனப்படும்போதெல்லாம், உண்மையில் பலமுள்ளவன் ஆகிறேன்.

கொரிந்து கிறிஸ்தவர்கள் மேல் பவுலின் அன்பு

11 நான் முட்டாளைப் போன்று பேசிக்கொண்டிருந்திருக்கிறேன். இவ்வாறு நீங்களே என்னைச் செய்தீர்கள். நீங்களெல்லாம் என்னைப் பாராட்டியிருக்கலாம். நான் அதற்குத் தகுதியுடையவன் அல்லன். எனினும் என்னை “அந்த மகா பிரதான அப்போஸ்தலர்களோடு” ஒப்பிடும்போது நான் குறைந்தவன் அல்லன். 12 நான் உங்களோடு இருந்த போது, நான் அப்போஸ்தலன் என்பதை நிரூபிக்கும் வகையில் பலவற்றைச் செய்தேன். நான் அடையாளங்களையும், அதிசயங்களையும், அற்புதங்களையும் பொறுமையோடு செய்தேன். 13 எனவே ஏனைய சபைகளைப் போன்று நீங்களும் எல்லாவற்றையும் பெற்றீர்கள். உங்களுக்கு எதிலும் குறைவில்லை. ஆனால் ஒரு வேறுபாடு, நான் எவ்வகையிலும் உங்களுக்குப் பாரமாக இருக்கவில்லை. இது தான் குறை. இதற்காக என்னை மன்னியுங்கள்.

14 மூன்றாவது முறையாக இப்பொழுது உங்களிடம் வர நான் தயாராக உள்ளேன். நான் உங்களுக்குப் பாரமாக இருக்கமாட்டேன். உங்களுக்கு உரிய எந்தப் பொருளையும் நான் சொந்தம் கொண்டாடமாட்டேன். நான் உங்களை மட்டுமே விரும்புகிறேன். பெற்றோருக்குப் பொருட்களைச் சேர்த்து வைக்க வேண்டியவர்கள் பிள்ளைகள் அல்ல. பெற்றோர்களே பிள்ளைகளுக்குப் பொருட்களைச் சேர்த்து வைக்கவேண்டும். 15 எனவே, நான் எனக்குரியவற்றையெல்லாம் உங்களுக்காகச் செலவு செய்வதில் மகிழ்ச்சியாக உள்ளேன். நான் என்னையும் உங்களுக்காகத் தருவேன். நான் உங்களை மிகுதியாக நேசித்தால் நீங்கள் என்னைக் குறைவாக நேசிப்பீர்களா?

16 நான் உங்களுக்குப் பாரமாக இல்லை என்பது தெளிவாயிற்று. ஆனால் என்னைத் தந்திரமானவன் என்றும், பொய் சொல்லி உங்களை வசப்படுத்திவிட்டேன் என்றும் எண்ணுகிறீர்கள். 17 நான் யாரையாவது அனுப்பி உங்களை ஏமாற்றி இருக்கிறேனா? இல்லையே. நீங்களும் அதை அறிவீர்கள். 18 உங்களிடம் செல்லுமாறு நான் தீத்துவை அனுப்பினேன். எங்கள் சகோதரனையும் அவனோடு சேர்த்து அனுப்பினேன். தீத்து உங்களை ஏமாற்றவில்லை. அல்லவா? தீத்துவும் நானும் ஒரே ஆவியால் வழி நடத்தப்பட்டு ஒரேவிதமான வாழ்வை நடத்தினோம்.

19 காலமெல்லாம் எங்களின் பாதுகாப்புக்காகப் பேசுகிறோம் என்று நினைக்கிறீர்களா? தேவனுக்கு முன்பாக கிறிஸ்துவுக்குள் பேசுகிறோம். நீங்கள் எமது பிரியமான நண்பர்கள். நாங்கள் செய்வது எல்லாம் உங்களைப் பலப்படுத்துவதற்காகத்தான். 20 நான் இவற்றையெல்லாம் ஏன் செய்கிறேன்? உங்களிடம் நான் வரும்போது, நீங்கள் எதிர்பார்க்கிறபடி நானும், நான் எதிர்பார்க்கிறபடி நீங்களும் இல்லாமல் போகக்கூடாது என்று அஞ்சுகிறேன். விரோதம், பொறாமை, கோபம், சுயநலம், தீய பேச்சு, மோசமான பெருமிதம், குழப்பம் போன்றவற்றால் நீங்கள் அழியக்கூடாது என்று அஞ்சுகிறேன். 21 மீண்டும் நான் உங்களிடம் வரும்போது தேவன் என்னை உங்கள் முன் தாழ்த்தி விடுவாரோ என்று அஞ்சுகிறேன். பலர் தாங்கள் செய்த அசுத்தம், வேசித்தனம், பாலியல் குற்றங்கள் போன்ற பாவங்களைத் தொடக்கத்தில் செய்து, பிறகு மாறாமலும் அதற்காக மனம் வருந்தாமலும் இருப்பதைப் பற்றியும் நான் துக்கப்பட வேண்டியிருக்குமோ என்று அஞ்சுகிறேன்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center