Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
யாத்திராகமம் 23

23 “பிறருக்கு விரோதமாகப் பொய் பேசாதீர்கள். சாட்சி சொல்லும்படி நீதி மன்றத்துக்கு நீங்கள் சென்றால், ஒரு தீய மனிதன் பொய் சொல்வதற்கு உதவாதீர்கள்.

“பிறர் செய்கிறார்கள் என்பதால் மட்டுமே நீங்கள் சிலவற்றைச் செய்யாதீர்கள். ஒரு கூட்டம் ஜனங்கள் தவறு செய்தால் அவர்களோடு சேராதீர்கள். அந்த ஜனங்கள் உங்களை தீயவற்றைச் செய்யும்படியாகத் தூண்டவிடாதீர்கள். எது சரியென்றும் நியாயமானதென்றும் தெரிகிறதோ, அதையே செய்யுங்கள்.

“ஒரு ஏழை நியாயந்தீர்க்கப்படுகையில் அவன் மீதுள்ள இரக்கத்தினால் ஜனங்கள் அவனுக்கு ஆதரவாக இருக்கலாம். ஆனால், நீங்கள் அவ்வாறு செய்யக்கூடாது. அவன் செய்தது சரியாக இருந்தால் மட்டுமே அவனுக்கு ஆதரவாக இருங்கள்.

“காணாமற்போன மாட்டையோ, கழுதையையோ பார்த்தீர்களானால், அதை அதன் உரிமையாளனிடம் சேர்ப்பிக்க வேண்டும். அதன் உரிமையாளன் உனது பகைவனாக இருந்தாலும், நீ அதைச் செய்ய வேண்டும்.

“மிகுந்த பாரத்தால் நடக்க முடியாத மிருகத்தைக் கண்டால் அதை நிறுத்தி அதற்கு உதவ வேண்டும். அது உனது பகைவர்களில் ஒருவனுக்குச் சொந்தமானதாக இருந்தாலும் அம்மிருகத்திற்கு நீ உதவ வேண்டும்.

“ஒரு ஏழை மனிதனுக்கு ஜனங்கள் அநியாயம் செய்ய விடாதே. அவனும் பிறரைப் போன்றே நியாயந்தீர்க்கப்பட வேண்டும்.

“ஒருவன் குற்றவாளி என நீ கூறும்போது எச்சரிக்கையாக இரு. ஒருவனுக்கு எதிராக வீண் பழி சுமத்தாதே. குற்றமற்ற ஒருவன் செய்யாத செயலுக்குத் தண்டனையாகக் கொல்லப்படுவதற்கு வகை செய்யாதே. குற்றமற்ற மனிதனைக் கொல்பவன் கொடியவன். அம்மனிதனை நான் மன்னிக்கமாட்டேன்.

“ஒருவன் தவறு செய்யும்போது அவன் செயலை ஆமோதிப்பதற்காக ஒருவன் உனக்கு லஞ்சம் கொடுக்க வந்தால் அதை ஏற்றுக்கொள்ளாதே. நீதிபதிகள் உண்மையைப் பார்க்காதபடிக்கு இத்தகைய பணம் நீதிபதிகளைக் குருடாக்கும். அந்தப் பணம் உண்மையுள்ளவர்களையும் பொய்யராக்கும்.

“அந்நியனுக்குத் தீங்குசெய்யாதீர்கள். எகிப்து தேசத்தில் வாழ்ந்தபோது நீங்களும் அந்நியராக இருந்ததை நினைவு கூருங்கள்.

விசேஷ விடுமுறைகள்

10 “விதைகளை விதையுங்கள், பயிர்களை அறுவடை செய்யுங்கள், ஆறு ஆண்டுகள் நிலத்தைப் பண்படுத்துங்கள். 11 ஆனால் ஏழாவது ஆண்டு நிலத்தைப் பண்படுத்தாதீர்கள். நிலம் ஓய்வெடுப்‌பதற்குரிய விசேஷ காலமாக ஏழாவது ஆண்டு இருக்கட்டும். அந்த ஆண்டில் உங்கள் நிலங்களில் எதையும் விதைக்காதீர்கள். ஏதேனும் பயிர்கள் அந்நிலத்தில் விளைந்தால் அதை ஏழைகள் அனுபவிக்கட்டும். மிகுதியான தானியங்களைக் காட்டுமிருகங்கள் உண்ணட்டும். உங்களுக்குச் சொந்தமான திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவமரத் தோப்புக்களையும் அவ்வாறே பயன்படுத்துங்கள்.

12 “ஆறு நாட்கள் உழையுங்கள். ஏழாவது நாளில் ஓய்வு எடுங்கள். உங்கள் அடிமைகளுக்கும், வேலையாட்களுக்கும் ஓய்வுக்கும், அமைதிக்கும் அது வழிவகுக்கும். உங்கள் மாடுகளும், கழுதைகளும் ஓய்வெடுக்க நேரம் கிடைக்கும்.

13 “இச்சட்டங்களை உறுதியாகப் பின்பற்றுங்கள் பொய்த் தேவர்களை தொழுதுகொள்ளாதீர்கள். அவைகளின் பெயர்களை உங்கள் நாவினால் உச்சரிக்கவேண்டாம்!

14 “ஒவ்வொரு ஆண்டும் மூன்று விசேஷ விடுமுறைகள் உங்களுக்கு இருக்கும். அந்நாட்களில் என்னைத் தொழுதுகொள்ளும்படி விசேஷ இடத்தில் நீங்கள் கூடுங்கள். 15 முதலாவது, புளிப்பில்லா அப்பப் பண்டிகையாகும். நான் கட்டளையிட்டபடியே இதைக் கொண்டாடவேண்டும். புளிப்புச் சேராத ரொட்டியை நீங்கள் ஏழு நாட்கள் உண்ண வேண்டும். ஆபிப் மாதத்தில் இதைச் செய்ய வேண்டும். ஏனெனில் அம்மாதத்தில்தான் நீங்கள் எகிப்தை விட்டு வெளியேறினீர்கள். அந்த சமயம் உங்களில் ஒவ்வொருவனும் ஒரு பலியைக் கொண்டு வரவேண்டும்.

16 “பெந்தெகோஸ்தே பண்டிகையானது ஆண்டின் இரண்டாவது விடுமுறை நாளாக இருக்கும். உங்கள் வயல்களில் அறுவடை ஆரம்பிக்கும் கோடையின் தொடக்கத்தில் இந்த விடுமுறை நாள் வரும்.

“ஆண்டின் மூன்றாம் விடுமுறையானது அடைக்கலக் கூடாரப் பண்டிகையாக இருக்கும். இலையுதிர் காலத்தில் உங்கள் வயல்களின் எல்லாப் பயிர்களையும் சேர்க்கும் நாட்களில் இப்பண்டிகை வரும்.

17 “ஆகவே ஆண்டிற்கு மூன்றுமுறை ஒவ்வொரு ஆண்டும் உங்கள் கர்த்தராகிய ஆண்டவரை வணங்கும்படி நீங்கள் எல்லோரும் கூடிவரவேண்டும்.

18 “ஒரு மிருகத்தைக் கொன்று அதன் இரத்தத்தைப் பலியாகக் கொடுத்தால், புளிப்புள்ள ரொட்டியை அதனோடு படைக்கக்கூடாது. இப்பலியிலிருந்து நீங்கள் மாமிசத்தை எடுத்து உண்ணும்போது, ஒரே நாளில் அதை முடித்துவிடவேண்டும். எஞ்சிய மாமிசத்தை அடுத்த நாளுக்காகப் பாதுகாக்க வேண்டாம்.

19 “அறுவடை காலத்தில் பயிர்களைச் சேர்க்கும்போது, பயிர்களில் முதலில் அறு வடை செய்பவற்றை தேவனாகிய கர்த்தரின் வீட்டிற்குக் (பரிசுத்த கூடாரத்திற்குக்) கொண்டுவர வேண்டும்.

“தாய் ஆட்டின் பாலில் வேக வைக்கப்பட்ட ஆட்டுக்குட்டியின் மாமிசத்தைச் சாப்பிடாதீர்கள்” என்றார்.

இஸ்ரவேலர் தங்கள் நாட்டைப் பெறுவதற்கு தேவன் உதவுவார்

20 தேவன், “நான் உங்களுக்கு முன்பாக ஒரு தூதனை அனுப்புவேன். நான் உங்களுக்கென தயாராக வைத்திருக்கிற இடத்திற்கு அத்தூதன் அழைத்துச் செல்வார். அந்தத் தூதன் உங்களைப் பாதுகாப்பார். 21 தூதனுக்குக் கீழ்ப்படிந்து அவரைப் பின்பற்றுங்கள். அவரை எதிர்க்காதீர்கள். நீங்கள் அவரை எதிர்த்துச் செய்கிற தவறுகளைத் தூதன் மன்னிக்கமாட்டார். அவரில் என் வல்லமை (நாமம்) இருக்கிறது. 22 அவர் சொல்கிற எல்லாவற்றிற்கும் நீங்கள் செவிகொடுக்கவேண்டும். அவ்வாறு செய்தால் நான் உங்களோடிருப்பேன். உங்கள் பகைவர்களை எதிர்ப்பேன். உங்களை எதிர்க்கிற ஒவ்வொருவருக்கும் நான் பகைவனாவேன்” என்றார்.

23 தேவன், “என் தூதன் உங்களை தேசத்தில் வழி நடத்துவார். எமோரியர், ஏத்தியர், பெரிசியர், கானானியர், ஏவியர், எபூசியர் ஆகிய வெவ்வேறு ஜனங்களுக்கு எதிராக உங்களை வழிநடத்துவார். நான் அந்த ஜனங்களை எல்லாம் தோற்கடிப்பேன்.

24 “அந்த ஜனங்களின் தேவர்களைத் தொழுதுகொள்ளாதீர்கள். அவைகளுக்கு முன்பு பணியாதீர்கள். அவர்கள் வாழுகிறபடி நீங்கள் வாழாதீர்கள். அவர்களின் விக்கிரகங்களை அழித்துவிடுங்கள். அவர்கள் தெய்வங்களின் நினைவுச் சின்னங்களை உடைத்துவிடுங்கள். 25 உங்கள் தேவனாகிய கர்த்தருக்குச் சேவை செய்யுங்கள். நீங்கள் இதைச் செய்தால், உங்களை ஏராளமான ஆகாரத்தாலும், தண்ணீராலும் ஆசீர்வதிப்பேன். உங்களிலிருந்து எல்லா நோய்களையும் அகற்றுவேன். 26 உங்களது பெண்களுக்கு குழந்தைகள் பிறக்கும், உங்களது பெண்களின் பிரசவத்தின்போது குழந்தைகள் மரிப்பதில்லை. நீங்கள் நீண்ட ஆயுளோடு இருக்கும்படிச் செய்வேன்.

27 “உங்கள் எதிரிகளோடு போரிடும்போது உங்களுக்கு முன்பாக என் வல்லமையின் செய்தியை அனுப்புவேன். போரில் உங்கள் எதிரிகள் குழப்பமுற்று ஓடுவார்கள். நான் உங்கள் பகைவர்களை வெல்ல உங்களுக்கு உதவுவேன். 28 உங்கள் பகைவர்களை விரட்ட காட்டுக் குளவிகளை [a] உங்கள் முன் அனுப்புவேன். ஏவியரும், கானானியரும் ஏத்தியரும் உங்கள் தேசத்தை விட்டுப் போவார்கள். 29 ஆனால் உங்கள் தேசத்திலிருந்து இவர்களை உடனடியாக விரட்டமாட்டேன். ஒரே ஆண்டில் நான் இதைச் செய்தால் நாடு வெறுமையாகிவிடும். எல்லாக் காட்டு மிருகங்களும் பெருகி நாட்டை ஆக்கிரமிக்கும். அவை உங்களுக்குத் தொல்லையாக மாறும். 30 எனவே உங்கள் நாட்டினின்று அந்த ஜனங்களை சிறிது சிறிதாக அனுப்புவேன். தேசத்தில் நீங்கள் தொடர்ந்து முன்னேறுவீர்கள். நீங்கள் போகுமிடமெல்லாம் அந்நியரை உங்களுக்கு முன்பாக விரட்டுவேன்.

31 “செங்கடலிலிருந்து ஐப்பிராத்து நதி வரைக்குமுள்ள நாட்டை உங்களுக்குத் தருவேன். பெலிஸ்திய கடல் (மத்திய தரைக் கடல்) மேற்கு எல்லையாகவும் அரேபிய பாலைவனம் கிழக்கு எல்லையாகவும் இருக்கும். அங்கு வாழும் ஜனங்களை நீங்கள் தோற்கடிக்கச் செய்வேன். அங்குள்ள ஜனங்களெல்லோரும் விலகிப் போகும்படி செய்வீர்கள்.

32 “அவர்களோடும், அவர்களது தேவர்களோடும் எந்த ஒப்பந்தத்தையும் செய்யாதீர்கள். 33 அவர்கள் உங்கள் நாட்டில் தங்க விடாதீர்கள். அவர்களைத் தங்க அனுமதிப்பது உங்களுக்குக் கண்ணியாக அமையும். எனக்கு விரோதமாக பாவம் செய்யவும், அந்நிய தேவர்களை நீங்கள் தொழுதுகொள்ளவும் அவர்கள் உங்களைத் தூண்டுவார்கள்” என்றார்.

யோவான் 2

கானாவூர் கல்யாணம்

கலிலேயாவிலுள்ள கானா என்ற ஊரில் இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு திருமணம் நடந்தது. இயேசுவின் தாய் அங்கே இருந்தார். இயேசுவும் அவரது சீஷர்களும் அந்தத் திருமணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். திருமண வீட்டில் திராட்சை இரசம் போதுமான அளவு இல்லை. அது முழுவதும் தீர்ந்துபோன பின்பு இயேசுவிடம் அவரது தாயார், “அவர்களிடம் வேறு திராட்சை இரசம் இல்லை” என்றார்.

“அன்பான பெண்ணே! நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு நீர் சொல்ல வேண்டாம். என் நேரம் இன்னும் வரவில்லை” என்றார் இயேசு.

“இயேசு என்ன சொல்கிறாரோ அதன்படி நீங்கள் செய்யுங்கள்” என்று இயேசுவின் தாயார் வேலையாட்களிடம் சொன்னார்.

அந்த இடத்தில் தண்ணீர் நிரப்பி வைப்பதற்கென்று கல்லால் ஆன ஆறு பெரிய (பாத்திரங்கள்) தொட்டிகள் இருந்தன. இவ்வித தண்ணீர்த் தொட்டிகளை யூதர்கள் தங்கள் சுத்திகரிப்பின் சடங்குகளில் உபயோகித்தனர். ஒவ்வொரு தொட்டியும் இரண்டு முதல் மூன்று குடம் தண்ணீரைக் கொள்வன.

இயேசு வேலைக்காரர்களைப் பார்த்து, “அந்தத் தொட்டிகளில் தண்ணீரை நிரப்புங்கள்” என்று கூறினார். அவர்களும் அவ்வாறே அத்தொட்டிகளை நிரப்பினர்.

பிறகு இயேசு வேலைக்காரர்களிடம், “இப்பொழுது இதிலிருந்து கொஞ்சம் தண்ணீரை எடுத்து அதனை விருந்தின் பொறுப்பாளியிடத்தில் கொண்டுபோங்கள்” என்றார்.

வேலையாட்கள் அவ்வாறே கொண்டு போனார்கள். அந்த விருந்தின் பொறுப்பாளன் அதைச் சுவைத்துப்பார்த்தான். அப்பொழுது தண்ணீர் திராட்சை இராசமாகியிருந்தது. அவனுக்கு அது எங்கிருந்து வந்ததென்று தெரியவில்லை. ஆனால் நீரைக் கொண்டுபோன வேலையாட்களுக்குத் தெரிந்திருந்தது. 10 விருந்தின் பொறுப்பாளன் மணமகனை அழைத்து, “என்ன இது, இவ்வாறு செய்கிறீர்கள்? எல்லோரும் நல்ல திராட்சை இரசத்தை முதலில் பரிமாறுவார்கள். விருந்தினர்கள் குடித்துத் திருப்தியடைந்த பின்னர் ருசி குறைந்த திராட்சை இரசத்தைப் பரிமாறுவார்கள். நீங்களோ நல்ல திராட்சை இரசத்தை இதுவரைக்கும் பத்திரப்படுத்தி வைத்திருந்தீர்கள்” எனறான்.

11 இதுவே இயேசு செய்த முதல் அற்புதமாகும். இயேசு இதனை கலிலேயா நாட்டில் உள்ள கானா என்ற ஊரில் நிகழ்த்தினார். இயேசு தனது மகிமையை வெளிப்படுத்தினார். அவரது சீஷர்கள் அவரை நம்பினர்.

12 பிறகு இயேசு கப்பர்நகூம் நகருக்குச் சென்றார். அவரோடு அவரது தாயும், சகோதரர்களும் சீஷர்களும் சென்றனர். அவர்கள் அங்கே கொஞ்ச நாட்கள் தங்கினர்.

தேவாலாயத்தில் இயேசு(A)

13 அப்போது யூதர்களின் பஸ்கா பண்டிகை நெருங்கிக்கொண்டிருந்தது. ஆகையால் இயேசு எருசலேமுக்குச் சென்றார். அங்கே அவர் தேவாலயத்தில் நுழைந்தார். 14 தேவாலயத்தில் வியாபாரிகள் ஆடுகள், மாடுகள், புறாக்கள் போன்றவற்றை விற்றுக்கொண்டிருந்தனர். மேசைக்கு அருகில் அமர்ந்திருக்கும் வேறு சிலரையும் இயேசு கவனித்தார். அவர்கள் பொதுமக்கள் பணத்தை பண்டமாற்று செய்தபடி இருந்தார்கள். 15 இயேசு கயிறுகளால் ஒரு சவுக்கை உருவாக்கினார். அந்த வியாபாரிகளையும் ஆடுமாடுகளையும் தேவாலயத்திற்கு வெளியே அடித்துத் துரத்தினார். அவர் மேஜைகள் பக்கம் திரும்பி காசுக்காரர்களுடைய காசுகளைக் கொட்டினார். அப்பலகைகளைக் கவிழ்த்துப்போட்டார். 16 புறா விற்கிறவர்களைப் பார்த்து, “இவற்றை எடுத்துக்கொண்டு இங்கே இருந்து வெளியே செல்லுங்கள். என் பிதாவின் வீட்டைச் சந்தைக்கடை ஆக்காதீர்கள்” என்று இயேசு கட்டளையிட்டார்.

17 இது இவ்வாறு நிகழும்போது, இயேசுவின் சீஷர்கள் ஏற்கெனவே எழுதப்பட்டிருக்கும் வேதவாக்கியங்களை நினைவுகூர்ந்தனர்.

“உமது வீட்டைக் குறித்த என் பக்தி உணர்வு என்னை வைராக்கியமுள்ளவனாக்கும்.” (B)

18 யூதர்கள் இயேசுவைப் பார்த்து, “ஓர் அடையாளமாக அதிசயம் ஒன்றை எங்களுக்குக் காட்டும். இவற்றையெல்லாம் செய்வதற்கு உமக்கு உரிமை இருக்கிறது என்பதை நிரூபித்துக்காட்டும்” என்றார்கள்.

19 “இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள். இதனை மூன்று நாட்களுக்குள் நான் மீண்டும் கட்டி முடிப்பேன்” என்றார் இயேசு.

20 அதற்குப் பதிலாக யூதர்கள், “மக்கள் நாற்பத்தாறு ஆண்டுகள் பாடுபட்டு இந்த ஆலயத்தைக் கட்டி முடித்தார்கள். இதனை உம்மால் மூன்று நாட்களில் கட்டி முடிக்க முடியும் என்று நீர் உண்மையாகவே சொல்கிறீரா?” என்று கேட்டார்கள். 21 (ஆனால் இயேசு ஆலயம் என்று கூறியது அவரது சரீரத்தை. 22 இதனை அவரது சீஷர்கள், இயேசு மரித்தபின் மூன்று நாட்களில் உயிர்த்தெழுந்தபோது அவர் சொன்னதை நினைவுபடுத்திப் புரிந்துக்கொண்டனர். ஆகையால் அவரது சீஷர்கள் ஏற்கெனவே எழுதப்பட்ட வேதவாக்கியங்களையும், இயேசுவின் வார்த்தைகளையும் நம்பினர்.)

23 இயேசு பஸ்கா பண்டிகையின்போது எருசலேமில் இருந்தார். ஏராளமான மக்கள் அவர் செய்த அற்புதங்களைக் கண்டு அவர் மீது நம்பிக்கை வைத்தனர். 24 ஆனால் இயேசு அவர்களை நம்பவில்லை. ஏனென்றால் அவர்களது எண்ணங்களை அவர் அறிந்திருந்தார். 25 இயேசுவுக்கு அம்மக்களைப்பற்றி எவரும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. ஒரு மனிதனின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அவர் அறிந்தவராயிருந்தார்.

யோபு 41

41 “யோபுவே, உன்னால் லிவியாதானை ஒரு தூண்டிலினால் பிடிக்க முடியுமா?
    அதன் நாவை உன்னால் ஒரு கயிற்றினால் கட்ட முடியுமா?
யோபுவே, லிவியாதானின் மூக்கில் ஒரு கயிற்றை நுழைக்கமுடியுமா?
    அல்லது, அதன் தாடையில் ஒரு ஆணியைச் செருகமுடியுமா?
யோபுவே, அதனை விடுதலைச் செய்யுமாறு லிவியாதான் உன்னை இரந்து வேண்டுமா?
    மென்மையான சொற்களால் அது உன்னோடு பேசுமா?
யோபுவே, லிவியாதான் உன்னோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டு
    என்றென்றும் உனக்குச் சேவை புரிய வாக்குறுதி தருமா?
யோபுவே, நீ லிவியாதானோடு ஒரு பறவையிடம் விளையாடுவதைப்போன்று விளையாடுவாயா?
    உன் பணிப்பெண்கள் அதனோடு விளையாடுமாறு அதனை ஒரு கயிற்றால் கட்டுவாயா?
யோபுவே, மீன் பிடிப்போர் உன்னிடமிருந்து லிவியாதானை வாங்க முயல்வார்களா?
    அவர்கள் அதைத் துண்டுகளாக்கி, வியாபாரிகளுக்கு அதை விற்பார்களா?
யோபுவே, நீ லிவியாதானின் தோலோ அல்லது தலையிலோ ஈட்டியை எறிய (வீச) முடியுமா?

“யோபுவே, நீ லிவியாதானைத் தாக்க ஒரு முறை முயன்றால், பின்பு ஒருபோதும் அதனைச் செய்யமாட்டாய்!
    எத்தகைய யுத்தம் நடக்கும் என்பதைச் சற்றே யோசித்துப்பார்!
நீ லிவியாதானைத் தோற்கடிக்க முடியுமென எண்ணினால் அதை மறந்துவிடு!
    எந்த நம்பிக்கையும் இல்லை!
(நம்பிக்கையற்றுப்போவாய்)!
    அதைப் பார்த்தாலே பீதி (அச்சம்) விளையும்!
10 அதனை எழுப்பிக் கோபமுறுத்த
    எந்த மனிதனுக்கும் தைரியம் (துணிவு) இல்லை.

“ஒருவனும் என்னை எதிர்த்து நிற்கமுடியாது!
11 நான் (தேவன்) ஒருவனுக்கும் கடமைப்பட்டவன் அல்லன்.
    பரலோகத்தின் கீழ் உள்ளவை அனைத்தும் எனக்குரியன.

12 “யோபுவே, லிவியாதானின் கால்களைப் பற்றியும் அதன் வலிமை, அழகிய வடிவம் ஆகியற்றைப் பற்றியும்
    நான் உனக்குக் கூறுவேன்.
13 ஒருவனும் அதன் தோலைக் குத்திப் பிளக்க முடியாது.
    அதன் தோல் ஒரு கேடயத்தைப் போன்றது!
14 லிவியாதானின் தாடையைத் திறக்குமாறு செய்ய ஒருவனும் அதனை வற்புறுத்த முடியாது.
    அதன் வாயிலுள்ள பற்கள் ஜனங்களைப் பயமுறுத்தும்.
15 லிவியாதானின் முதுகில் இறுக்கமாக இணைக்கப்பட்டுள்ள
    கேடய வரிசைகள் காணப்படும்.
16 அக்கேடயங்கள் காற்றும் நுழைய முடியாதபடி
    இறுகிப் பிணைந்திருக்கும்,
17 கேடயங்கள் ஒன்றோடொன்று இணைந்திருக்கும்.
    அவை பிரிக்க முடியாதபடி ஒன்றோடொன்று இறுக்கமாக இணைக்கப்பட்டிருக்கும்.
18 லிவியாதான் தும்மும்போது, மின்னல் மின்னுவதைப் போன்றிருக்கும்.
    அதன் கண்கள் உதயகால ஒளிபோல் பிரகாசிக்கும்.
19 அதன் வாயிலிருந்து தீப்பந்தங்கள் வெளிவரும்.
    நெருப்புப் பொறிகள் வெளிப்படும்.
20 கொதிக்கும் பானையின் அடியில் எரியும் புதரைப்போல்
    லிவியாதானின் மூக்கிலிருந்து புகை கிளம்பும்.
21 லிவியாதானின் மூச்சு நிலக்கரியை எரிக்கும்,
    அதன் வாயிலிருந்து நெருப்பு எழும்பும்.
22 லிவியாதானின் கழுத்து மிகுந்த வல்லமை கொண்டது.
    ஜனங்கள் பயந்து அதனிடமிருந்து ஓடிப்போகிறார்கள்.
23 அதன் தோலில் மிருதுவான பகுதி கிடையாது.
    அது இரும்பைப்போல கடினமானது.
24 லிவியாதானின் இருதயம் பாறையைப் போன்றது.
    அதற்கு அச்சம் கிடையாது.
(அது அஞ்சுவதில்லை).
    அது எந்திரத்தின் அடிக்கல்லைப்போல் கடினமாயிருக்கும்.
25 லிவியாதான் எழுகையில் வலியோர் அஞ்சுவார்.
    லிவியாதான் வாலை வீசும்போது அவர்கள் ஓடிவிடுவர்.
26 வாட்கள், ஈட்டிகள், மற்றும் வல்லயம் லிவியாதானைத் தாக்கும்.
    ஆனால் அவையே எகிறிவிழும்.
    அக்கருவிகள் அதைக் காயப்படுத்துவதேயில்லை!
27 லிவியாதான் இரும்பைப் புல்லைப் போல் உடைக்கும்.
    உளுத்துப்போன (அரித்துப்போன) மரத்தைப்போன்று அது வெண்கலத்தை உடைக்கும்.
28 அம்புகள் லிவியாதானை ஓடச்செய்யாது,
    உலர்ந்த புல்லாய் பாறைகள் அதனின்று விலகிவீழும்.
29 பெருந்தடிகள் லிவியாதானைத் தாக்கும்போது, அவற்றை அது புல்லாய் உணரும்.
    மனிதர் அதன் மீது ஈட்டிகளை எறியும்போது, அது சிரிக்கும்.
30 கடினமாக, கூரிய, உடைந்த, மட்பாண்டத்தின் துண்டுகளைப்போல், லிவியாதானின் உடம்பின் அடியிலுள்ள தோல் இருக்கும்.
    தாற்றுக்கோலைப் போன்று அது சேற்றின் மீது அடையாளமிட்டுச் செல்லும்.
31 கொதிக்கும் பானையைப்போன்று லிவியாதான் தண்ணீரைக் கலக்குகிறது.
    பானையின் கொதிக்கும் எண்ணெயைப் போன்று அது குமிழிகளை எழுப்பும்.
32 லிவியாதான் நீந்தும்போது, அதன் பின்னே ஒரு பாதையை விட்டுச்செல்லும்.
    அது தண்ணீரைக் கலக்கும், அதன் பின்னே வெண்மையான நுரையைத் தள்ளிச் செல்லும்.
33 லிவியாதானைப்போன்று உலகில் வேறெந்த மிருகமும் இல்லை.
    அச்சமின்றி படைக்கப்பட்ட மிருகம் அது.
34 கர்வம் மிக்க மிருகங்களையும் லிவியாதான் நகைப்போடு பார்க்கும்.
    அது எல்லா காட்டுமிருகங்களுக்கும் அரசன்.
    கர்த்தராகிய நான் லிவியாதானைப் படைத்தேன்!” என்றார்.

2 கொரி 11

பவுலும்-போலி அப்போஸ்தலர்களும்

11 நான் கொஞ்சம் முட்டாளாக இருந்தாலும் என்னை நீங்கள் பொறுத்துக்கொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன். ஏற்கெனவே என்னை நீங்கள் பொறுத்துக்கொண்டிருக்கிறீர்கள். நான் உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன். இது தேவனிடமிருந்து வந்த பெருமை ஆகும். நான் உங்களைக் கிறிஸ்துவுக்குத் தருவதாய் வாக்குறுதி கொடுத்தேன். கிறிஸ்துவே உங்களது ஒரே மணவாளன். அவரது தூய மணப் பெண்ணாக உங்களை அவருக்குக் கொடுக்க விரும்புகிறேன். எனினும் கிறிஸ்துவிடமுள்ள உங்கள் முழு அர்ப்பணிப்பில் இருந்து விலகும்படி உங்கள் மனம் கெடுக்கப்படுமோ என்று அஞ்சுகிறேன். பாம்பின் (சாத்தான்) தந்திர வழிகளின் மூலம் ஏவாள் வஞ்சிக்கப்பட்டதைப்போல உங்களுக்கும் நேரும். நாங்கள் சொன்னதற்கு மாறாக இயேசுவைப் பற்றி போதிக்க வரும் எவரையும் நம்பி சகித்துக்கொள்கிறீர்கள். நீங்கள் எங்களிடமிருந்து பெற்ற ஆவிக்கும் நற்செய்திக்கும் மாறுபட்ட ஆவியையும் நற்செய்தியையும் ஏற்றுக்கொள்கிறீர்கள். ஆகவே என்னையும் சகித்துக்கொள்ளுங்கள்.

மகாபிரதான அப்போஸ்தலரைவிட நான் ஒன்றிலும் குறைவு உள்ளவன் அல்லன் என எண்ணுகிறேன். நான் பயிற்சி பெற்ற பேச்சாளன் இல்லை என்பது உண்மைதான். ஆனால் எனக்குப் போதிய ஞானம் உண்டு. நாங்கள் அவற்றை உங்களுக்கு எல்லா வழிகளிலும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளோம்.

நான் உங்களுக்கு இலவசமாக தேவனுடைய நற்செய்தியைப் போதித்திருக்கிறேன். உங்களை உயர்த்துவதற்காக நான் பணிந்துபோயிருக்கிறேன். அதனைத் தவறு என்று எண்ணுகிறீர்களா? உங்களைக் கவனித்துக்கொள்ளும் பொருட்டு மற்ற சபைகளிடம் இருந்து பணத்தைப் பெற்றேன். நான் உங்களோடு இருக்கும்போது, எனது தேவைகளுக்காக உங்களைத் துன்புறுத்தியதில்லை. எனக்கு தேவையானவற்றையெல்லாம் மக்கதோனியாவிலிருந்து வந்த சகோதரர்கள் கொடுத்தனர். எந்த வகையிலும் நான் உங்களுக்குப் பாரமாக இருக்கவில்லை. இனிமேலும் பாரமாக இருக்கமாட்டேன். 10 இதைப் பற்றி நான் பெருமைபட்டுக்கொள்வதை அகாயாவிலுள்ள [a] எவரும் என்னைத் தடுத்து நிறுத்த முடியாது. இதனை நான் என்னோடு இருக்கிற கிறிஸ்துவின் சத்தியத்தைக்கொண்டு கூறுகிறேன். 11 உங்களுக்குப் பாரமாயிருக்க விரும்பவில்லை என்று ஏன் கூறுகிறேன். உங்கள் மீது எனக்கு அன்பில்லையா? உண்டு. அதைப்பற்றி தேவன் நன்கு அறிவார்.

12 நான் இப்பொழுது செய்வதைத் தொடர்ந்து செய்வேன். ஏனென்றால் எங்கள் மீது குற்றம் கண்டுபிடிக்கக் காரணம் தேடுகிறவர்களுக்குக் காரணம் கிடைக்கக் கூடாது. தம் வேலையைப் பற்றிப் பெருமை பேசுகிறவர்கள் தம் வேலையை நம் வேலையைப் போன்ற ஒன்றாகச் சொல்லிக்கொள்ள விரும்புவார்கள். 13 அப்படிப்பட்டவர்கள் உண்மையான அப்போஸ்தலர்கள் அல்லர்; பொய் நிறைந்த பணியாளர்கள். அவர்கள் கிறிஸ்துவினுடைய அப்போஸ்தர்களின் வேடத்தைத் தரித்துக்கொள்ளுகிறார்கள். 14 இது எங்களை வியப்படையச் செய்யவில்லை. ஏனென்றால், சாத்தானே ஒளியின் தூதனாக [b] மாறுவேடம் அணிந்திருக்கிறான். 15 எனவே சாத்தானின் வேலைக்காரர்கள் நீதியின் வேலைக்காரர்களைப் போன்று வேடமிடுவது வியப்புக்குரியதல்ல. ஆனால் இவர்கள் இறுதியில் தங்கள் செயலுக்காகத் தண்டிக்கப்படுவர்.

பவுலும்-அவரது துன்பங்களும்

16 நான் மீண்டும் கூறுகிறேன். நான் அறிவற்றவன் என்று எவரும் எண்ண வேண்டாம். ஆனால் நீ என்னை அறிவற்றவன் என்று எண்ணினால் ஒரு அறிவற்றவனை ஏற்றுக்கொள்வது போல் என்னையும் ஏற்றுக்கொள். பின்பு இதைப் பற்றி நானும் பெருமைப்பட்டுக்கொள்ளுவேன். 17 ஏனென்றால் என்னைப் பற்றி நான் உறுதியாக இருக்கிறேன். நான் கர்த்தரைப் போன்று பேசுபவன் அல்லன். நான் அறிவற்றவன் போன்றே பெருமை பாராட்டுகிறேன். 18 உலகத்தில் ஏராளமானவர்கள் தம்மைப் பற்றிப் பெருமைபட்டுக்கொள்ளுகிறார்கள். நானும் பெருமைப்பட்டுக்கொள்கிறேன். 19 நீங்கள் புத்திசாலிகள். எனவே புத்தியற்றவர்களோடு நீங்கள் சகிப்புத் தன்மையோடு நடந்துகொள்ளுங்கள். 20 நீங்கள் சகித்துக்கொள்வீர்கள் என்று எனக்குத் தெரியும். ஒருவன் உங்களைக் கட்டாயப்படுத்தி காரியங்களைச் செய்யச் சொன்னாலும், ஒருவன் உங்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டாலும், ஒருவன் உங்களை ஏமாற்றினாலும், ஒருவன் தன்னை உயர்த்திக்கொண்டாலும், ஒருவன் உங்கள் முகத்தில் அறைந்தாலும் நீங்கள் அனைத்தையும் பொறுத்துக்கொள்வீர்கள். 21 இதனைச் சொல்லவே வெட்கமாக இருக்கிறது. ஆனால் இவற்றையெல்லாம் செய்வதற்கு நாம் பலவீனம் உள்ளவர்களாய் இருக்கிறோம்.

எவனாவது தன்னைப் பாராட்டிப் பேச தைரியம் உள்ளவனாய் இருந்தால் நானும் தைரியம் உள்ளவனாய் இருப்பேன். (நான் அறிவற்றவனைப் போன்று பேசிக்கொண்டிருக்கிறேன்.) 22 அவர்கள் எபிரேயர்களாக இருந்தால் நானும் அவ்வாறே இருக்கிறேன். அவர்கள் இஸ்ரவேல் தேசத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால் நானும் அவ்வாறே இருக்கிறேன். அவர்கள் ஆபிரகாமின் குடும்பத்தில் உள்ளவர்களாக இருந்தால் நானும் அவ்வாறே இருக்கிறேன். 23 அவர்கள் கிறிஸ்துவுக்குச் சேவை செய்பவர்களானால் நான் அவர்களை விட மிகுதியாகச் செய்துகொண்டே இருக்கிறேன். (நான் பைத்தியக்காரனைப் போன்று பேசுகிறேன்) நான் அவர்களைவிடக் கடினமாக உழைத்திருக்கிறேன். நான் பல முறைகள் சிறைபட்டிருக்கிறேன். நான் மிக அதிகமாக அடி வாங்கி இருக்கிறேன். நான் பலமுறை மரணத்தின் அருகில் சென்று வந்திருக்கிறேன்.

24 நான் யூதர்களால் சவுக்கால் முப்பத்தொன்பது அடிகளை ஐந்து தடவை பெற்றிருக்கிறேன். 25 மூன்று முறை மிலாறுகளால் அடிபட்டேன். ஒருமுறை நான் கல்லால் எறியப்பட்டு ஏறக்குறைய சாகும் தருவாயில் இருந்தேன். மூன்று முறை கப்பல் விபத்தில் சிக்கிக்கொண்டேன். ஒரு முறை கடலிலேயே ஒரு இராப்பகல் முழுவதையும் கழித்தேன். 26 நான் பலமுறை பயணங்கள் செய்திருக்கிறேன். நான் ஆறுகளாலும், கள்ளர்களாலும், யூத மக்களாலும், யூதரல்லாதவர்களாலும் ஆபத்துக்குட்பட்டிருக்கிறேன். நகரங்களுக்குள்ளும், மக்களே வசிக்காத இடங்களிலும், கடலுக்குள்ளேயும், ஆபத்துகளில் சிக்கியிருக்கிறேன். சகோதரர்கள் என்று சொல்லிக்கொண்டு உண்மையில் சகோதரர்களாக இல்லாத சிலராலும் நான் ஆபத்துக்குள்ளானேன்.

27 நான் பலமுறை கடினமாக உழைக்க, கடினமான சோர்வூட்டத்தக்கவற்றைச் செய்ய நேர்ந்தது. பல தடவை நான் தூங்காமல் இருந்திருக்கிறேன். பல முறை நான் உணவில்லாமல் பட்டினியாகவும், தாகத்தோடும் இருந்திருக்கிறேன். பல சமயங்களில் உண்ணுவதற்கு எதுவுமேயற்ற நிலையில் இருந்திருக்கிறேன். குளிரில் ஆடையில்லாமல் நிர்வாணமாகவும் இருந்திருக்கிறேன். 28 இவற்றைத் தவிர மேலும் பல பிரச்சனைகளும் எனக்குண்டு. குறிப்பாக எல்லா சபைகளைப் பற்றியும் ஒவ்வொரு நாளும் கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறேன். 29 ஒருவன் பலவீனமடைவதைக் கண்டால் நானும் பலவீனனாகி விடுகிறேன். ஒருவன் பாவம் செய்வதைப் பார்த்தால் கோபத்தால் நான் எரிச்சலாகிவிடுகிறேன்.

30 நான் என்னையே பாராட்டிக்கொள்ள வேண்டுமானால் என் பலவீனத்தை வெளிப்படுத்தும் காரியங்களைக் குறித்தே பெருமை பாராட்டிக்கொள்ள வேண்டும். 31 நான் பொய் சொல்வதில்லையென்று தேவனுக்குத் தெரியும். அவரே தேவன். அவரே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதா. அவர் எக்காலத்திலும் பாராட்டுக்கு உரியவர். 32 நான் தமஸ்குவில் இருந்தபோது, அரேத்தா அரசனுடைய படைத் தளபதி என்னைக் கைது செய்ய விரும்பினான். அதற்காக நகரைச் சுற்றிக் காவலர்களை நிறுத்தினான். 33 ஆனால் சில நண்பர்கள் என்னைக் கூடைக்குள் வைத்து சுவரில் ஒரு சிறிய துளை செய்து அதன் வழியே என்னை இறக்கிவிட்டனர். எனவே நான் அந்த படைத் தளபதியிடமிருந்து தப்பினேன்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center