Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
யாத்திராகமம் 31

பெசலெயேலும் அகோலியாபும்

31 கர்த்தர் மோசேயை நோக்கி, “யூதாவின் கோத்திரத்திலிருந்து ஒரு மனிதனை எனது விசேஷ பணிக்காகத் தெரிந்தெடுத்துள்ளேன். அவன் ஊருடைய மகனான ஊரியின் மகன் பெசலெயேல். தேவ ஆவியால் நான் பெசலெயேலை நிரப்பியுள்ளேன். எல்லாவிதமான கைவேலைகளையும் செய்யக்கூடிய திறமையையும், அறிவையும் அவனுக்குக் கொடுத்திருக்கிறேன். பெசலெயேல் கலைப் பொருட்களை வடிப்பதில் வல்லவன். பொன், வெள்ளி, வெண்கலம் ஆகியவற்றால் பொருட்களைச் செய்ய அவனுக்கு இயலும். பெசலெயேலால் அழகான அணிகலன்களை வெட்டி உருவாக்க முடியும். மரவேலைகளிலும் அவன் கை தேர்ந்தவன். அவன் எல்லாவிதமான வேலைகளையும் செய்யும் ஆற்றல்மிக்கவன். அவனுக்கு உதவி செய்வதற்கு தாண் கோத்திரத்திலிருந்து அகிசாமாக்கின் மகன் அகோலியாபை தெரிந்தெடுத்துள்ளேன். நான் உனக்குக் கூறிய எல்லாப் பொருட்களையும் செய்யும் திறமையை எல்லாப் பணியாட்களுக்கும் கொடுத்துள்ளேன். நான் உனக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் செய்வார்கள்.

ஆசாரிப்புக் கூடாரம், உடன்படிக்கைப் பெட்டி, கிருபாசனம், கூடாரத்தின் பணி முட்டுகளும்,

மேசையும் அதற்குத் தேவையான பொருட்களும், சுத்தமான குத்துவிளக்கையும் அதின் கருவிகளும், நறுமணப் பொருளை எரிக்கும் பீடம்,

காணிக்கைகளை எரிக்கும் பலிபீடம், பலிபீடத்தில் பயன்படுத்தப்படும் பொருட்கள், தொட்டியும் அதன் பீடமும்,

10 ஆசாரியனாகிய ஆரோனின் விசேஷ ஆடைகள், ஆரோனின் மகன்கள் ஆசாரியராக சேவை செய்ய அவர்களுக்கான உடைகள்,

11 நறுமணம் மிக்க அபிஷேக எண்ணெய், மகா பரிசுத்த இடத்தின் நறுமணப்பொருள் அனைத்தையும்

நான் உனக்குக் கூறிய விதத்திலேயே பணியாளர்கள் செய்ய வேண்டும்” என்றார்.

ஓய்வு நாள்

12 பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி, 13 “இஸ்ரவேல் ஜனங்களுக்கு இதைக் கூறு: ‘ஓய்வுக்குரிய விசேஷ தினங்களின் விதிகளை நீங்கள் பின்பற்ற வேண்டும். எல்லாத் தலைமுறைகளிலும் அது உங்களுக்கும் எனக்கும் மத்தியிலுள்ள அடையாளமாக விளங்கும். உங்களை எனது விசேஷமான ஜனங்களாக கர்த்தராகிய நான் ஏற்றுக்கொண்டதை இது உணர்த்தும்.

14 “‘ஒய்வு நாளை ஒரு விசேஷ நாளாக எண்ணுவாயாக. பிறநாட்களுக்கு சமமாக ஓய்வு நாளையும் ஒருவன் எண்ணினால் அம்மனிதன் கொல்லப்பட வேண்டும். ஓய்வு நாளில் வேலை செய்கிறவனை அவனது ஜனங்களிடமிருந்து ஒதுக்கிவிட வேண்டும். 15 வேலை நாட்களாக வாரத்தில் ஆறு நாட்கள் உள்ளன. ஏழாவது நாள் ஓய்வுக்குரிய விசேஷ நாளாகும். கர்த்தரை மகிமைப்படுத்தும் விசேஷ நாள் அது. ஓய்வு நாளில் வேலை செய்கிற எவனும் கொல்லப்பட வேண்டும். 16 இஸ்ரவேல் ஜனங்கள் ஓய்வு நாளை நினைவுகூர்ந்து அதை விசேஷ நாளாக்க வேண்டும். என்றென்றும் தொடர்ந்து இதைச் செய்துவர வேண்டும். என்றென்றும் எனக்கும் அவர்களுக்கும் மத்தியில் தொடர்கிற உடன்படிக்கையாக அது விளங்கும். 17 ஓய்வு நாள் எனக்கும் இஸ்ரவேலருக்கும் மத்தியில் ஒரு அடையாளமாக எப்போதும் இருக்கும். கர்த்தர் ஆறு நாட்கள் உழைத்து வானையும் பூமியையும் உண்டாக்கினார். அவர் ஏழாம் நாளில் ஓய்வாகவும் அமைதியாகவும் இருந்தார்’” என்றார்.

18 சீனாய் மலையில் கர்த்தர் மோசேயிடம் பேசி முடித்தார். உடன்படிக்கை பதித்த இரண்டு கற்பலகைகளை கர்த்தர் அவனுக்குக் கொடுத்தார். தேவன் தமது விரல்களால் அக்கற்பலகைகளில் எழுதினார்.

யோவான் 10

நல்ல மேய்ப்பனும் ஆடுகளும்

10 “உண்மையாகவே நான் உங்களுக்குக் கூறுகிறேன், ஒருவன் ஆட்டுத்தொழுவத்திற்குள் வாசல் வழியாகவே நுழையவேண்டும். வேறு வழியாக நுழைந்தால், அவன் ஒரு திருடன். அவன் ஆடுகளைத் திருடவே முயற்சி செய்வான். ஆனால் மேய்ப்பன் வாசல் வழியாக நுழைகிறவன். அவனே மேய்ப்பன். வாசலைக் காக்கிற காவல்காரன் மேய்ப்பனுக்காகக் கதவைத் திறந்துவிடுவான். ஆடுகள் மேய்ப்பனின் குரலுக்கு செவி கொடுக்கும். மேய்ப்பன் தன் சொந்த ஆடுகளை அவற்றின் பெயரைச் சொல்லி அழைப்பான். அவன் அவற்றை வெளியே நடத்திக்கொண்டு போவான். மேய்ப்பன் தனது ஆடுகளையெல்லாம் வெளியே கொண்டுவந்த பின் அவற்றுக்கு முன்னால் நடந்து அவற்றை நடத்திக்கொண்டு போகிறான். ஆடுகள் அவனது குரல் குறிப்புகளை அடையாளம் கண்டபடியால், அவை அவன் பின்னே செல்கின்றன. ஆனால் ஆடுகள் தாம் அறியாதவன் பின்னால் செல்வதில்லை. அவனைவிட்டு அவை விலகி ஓடும். ஏனென்றால் அவற்றிற்கு அவனது குரல் புரியாது” என்று

இயேசு மக்களிடம் இந்த உவமையைச் சொன்னார். இந்த உவமையின் உட்பொருளை அந்த மக்களால் அறிந்துகொள்ள முடியவில்லை.

இயேசுவே நல்ல மேய்ப்பர்

எனவே இயேசு மேலும் சொன்னார், “நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், ஆடுகளுக்கு நானே வாசலாக இருக்கிறேன். எனக்கு முன்னால் வந்தவர்கள் அனைவரும் கள்ளரும், கொள்ளைக்காரர்களுமாக இருந்தார்கள். ஆடுகள் அவர்களைக் கவனிக்கவில்லை. நானே வாசல். என் மூலமாக நுழைகிறவனே மீட்கப்படுவான். அவன் உள்ளேயும் வெளியேயும் போய் மேய்ச்சலைக் கண்டடைவான். 10 திருடன் திருடுவதற்காகவே வருகிறான். அவன் ஆடுகளைக் கொல்லவும் அழிக்கவுமே செய்வான். ஆனால் நானோ ஜீவனைக் கொடுக்க வந்துள்ளேன். அந்த ஜீவன் பூரணமும், நன்மையுமானது.

11 “நானே நல்ல மேய்ப்பன். நல்ல மேய்ப்பன் தனது ஆடுகளுக்காக ஜீவனைக் கொடுப்பான். 12 கூலிக்காக ஆடுகளைக் கவனிக்கிறவன் மேய்ப்பனைவிட வித்தியாசமானவன். கூலிக்காரனுக்கு ஆடுகள் சொந்தமானவை அல்ல. ஆகையால் ஓநாய் வருவதைக் கண்டால் கூலிக்காரன் ஆடுகளை விட்டு விட்டு ஓடிப் போவான். பிறகு ஓநாய்கள் ஆடுகளை கிழித்து கொன்று சிதறடிக்கும். 13 அந்த மனிதன் ஓடிவிடுகிறான். ஏனென்றால் அவன் கூலிக்காரன். அவனுக்கு ஆடுகளைப்பற்றிய அக்கறை இல்லை.

14-15 “ஆடுகளைப்பற்றி (மக்களைப்பற்றி) அக்கறை கொண்ட நல்ல மேய்ப்பன் நான். என் பிதா என்னை அறிந்திருப்பது போலவே நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன். நான் என் பிதாவை அறிந்திருப்பது போலவே என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. நான் என் ஆடுகளுக்காக என் ஜீவனைக் கொடுக்கிறேன். 16 எனக்கு வேறு ஆடுகளும் உள்ளன. அவை இந்த மந்தையில் இல்லை. நான் அவற்றையும் அழைத்து வர வேண்டும். அவை என் குரலைக் கவனிக்கும். வருங்காலத்தில் எல்லாம் ஒரே மந்தையாகவும் ஒரே மேய்ப்பனாகவும் இருக்கும். 17 என் பிதா என்னை நேசிக்கிறார். ஏனென்றால் நான் என் ஜீவனைக் கொடுக்கிறேன். நான் என் ஜீவனைக் கொடுப்பதால் அதனை மீண்டும் பெறுவேன். 18 என்னிடமிருந்து என் ஜீவனை எவரும் பறிக்க முடியாது. நானே என் ஜீவனைத் தாராளமாகக் கொடுக்கிறேன். அதற்கான உரிமை எனக்குண்டு. அதுபோல் அதனைத் திரும்பப் பெறுகிற உரிமையும் எனக்குண்டு. இதைத்தான் பிதா எனக்குக் கட்டளையிட்டார்” என்றார்.

19 இயேசு சொன்ன இக்காரியங்களினால் மீண்டும் யூதர்கள் பிரிந்துபோயினர். 20 பல யூதர்கள் “பிசாசு அவனுக்குள் புகுந்துகொண்டது. அவன் பைத்தியமாக உளறுகிறான். அவன் கூறுவதை ஏன் கேட்கிறீர்கள்?” என்றனர்.

21 அதற்குப் பதிலாக வேறு சில யூதர்கள், “பிசாசு பிடித்து உளறுகிறவனால் இதுபோன்ற உண்மைகளைப் பேசமுடியுமா? குருடனின் கண்களைப் பிசாசு குணமடையச் செய்யுமா? செய்யாது” என்றனர்.

யூதர்கள் இயேசுவுக்கு எதிராகுதல்

22 அது மழைக் காலமாயிருந்தது. எருசலேமில் தேவாலயப் பிரதிஷ்டை பண்டிகை வந்தது. 23 இயேசு தேவாலயத்தில் சாலமோனின் மண்டபத்திலே இருந்தார். 24 யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டனர். “இன்னும் எவ்வளவு காலம் உங்களைப்பற்றிப் புதிராக வைத்திருப்பீர்கள். நீங்கள் கிறிஸ்துவானால் எங்களுக்குத் தெளிவாகச் சொல்லும்” என்று கேட்டனர்.

25 “நான் ஏற்கெனவே கூறியிருக்கிறேன். ஆனால் நீங்கள் நம்பவில்லை. நான் என் பிதாவின் பேரில் அற்புதங்களைச் செய்கிறேன். அந்த அற்புதங்கள் நான் யாரென்று உங்களுக்கு காட்டுகின்றன. 26 ஆனால் நீங்கள் நம்புகிறதில்லை. ஏனென்றால் நீங்கள் எனது ஆடுகள் அல்ல. 27 எனது ஆடுகள் எனது குரலைக் கேட்கும். நான் அவற்றை அறிவேன். அவை என்னைப் பின் தொடரும். 28 நான் என் ஆடுகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன். அவைகள் இறந்துபோவதில்லை. அவைகளை என் கையிலிருந்து எவரும் பறித்துக்கொள்ளமுடியாது. 29 என் பிதா எனக்கு ஆடுகளைத் தந்தார். அவர் எல்லோரையும்விடப் பெரியவர். எவரும் ஆடுகளை என் பிதாவின் கைகளில் இருந்து திருடிக்கொள்ளமுடியாது. 30 நானும் பிதாவும் ஒருவர்தான்” என்றார், இயேசு.

31 மீண்டும் யூதர்கள் அவரைக் கொல்வதற்காகக் கற்களை எடுத்துக்கொண்டனர். 32 ஆனால் இயேசு அவர்களிடம், “நான் என் பிதா மூலமாகப் பல நற்செயல்களைச் செய்தேன். அந்தச் செயல்களை நீங்களும் பார்த்தீர்கள். அவற்றில் எந்த நல்ல செயலுக்காக என்னைக் கல்லெறிய விரும்புகிறீர்கள்?” எனக் கேட்டார்.

33 அதற்கு அவர்கள் “நீ செய்த எந்த நல்ல செயல்களுக்காகவும் நாங்கள் உன்னைக் கொல்லவில்லை. ஆனால் நீ சொல்லுகிறவை எல்லாம் தேவனுக்கு எதிராக இருக்கின்றன. நீ ஒரு மனிதன். ஆனால் நீ தேவன் என்று கூறுகிறாய். அதற்காகத்தான் உன்னைக் கல்லால் எறிந்து கொல்லப் பார்க்கிறோம்” என்றனர்.

34 “‘தேவர்களாயிருக்கிறீர்கள், என்று நான் சொன்னேன்’ [a] என்பதாக உங்கள் சட்டத்தில் எழுதியிருக்கிறது. 35 தேவனின் செய்தியைப் பெற்றுக்கொண்ட மக்களை தேவர்கள் என்று சொல்லலாம் என பரிசுத்த வேதவாக்கியங்கள் கூறுகின்றன. வேதவாக்கியங்கள் எப்போதும் உண்மையானவை. 36 ஆகவே, ‘நான் தேவனின் குமாரன்’ என்று கூறியதை, தேவனுக்கு எதிராகப் பேசுவது என்று நீங்கள் ஏன் கூறுகிறீர்கள்? தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த உலகத்துக்கு அனுப்பப்பட்டவன் நான்தான். 37 என்னுடடைய பிதா செய்தவற்றை நான் செய்யாவிட்டால் நீங்கள் என்னை நம்பவேண்டியதில்லை. 38 ஆனால் எனது பிதா செய்தவற்றை நானும் செய்வேனானால் நீங்கள் என்னை நம்பித்தான் ஆகவேண்டும். நீங்கள் என்னை நம்புவதில்லையானாலும் நான் செய்கின்றவற்றை நம்பித்தான் ஆகவேண்டும். நான் பிதாவிடமும் பிதா என்னிடமும் இருக்கிறார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்” என்றார், இயேசு.

39 யூதர்கள் இயேசுவைப் பிடிக்க மீண்டும் முயன்றார்கள். ஆனால் இயேசு அவர்களிடமிருந்து தப்பித்துக்கொண்டார்.

40 பிறகு இயேசு யோர்தான் நதியைக் கடந்து திரும்பிப் போனார். யோவான் முன்பு ஞானஸ்நானம் கொடுத்த இடத்துக்குப் போனார். அங்கே அவர் தங்கினார். 41 அவரிடம் பலர் வந்தனர். “யோவான் எவ்வித அற்புதமும் செய்யவில்லை. ஆனால் இயேசுவைப்பற்றி அவன் சொன்னவை எல்லாம் உண்மையாக இருக்கின்றன” என்றனர். 42 அங்கே அநேக மக்கள் இயேசுவிடம் நம்பிக்கை வைத்தனர்.

நீதிமொழிகள் 7

ஞானம் உன்னை விபச்சாரத்திலிருந்து காக்கும்

என் மகனே! எனது வார்த்தைகளை நினைவுப்படுத்திக்கொள். நான் உனக்குத் தந்த கட்டளைகளை மறக்காதே. எனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படி. உனக்கு வாழ்வு கிடைக்கும். உனது வாழ்க்கையில் எனது போதனைகளை மிக முக்கியமானதாக வைத்துக்கொள். எனது போதனைகளையும் கட்டளைகளையும் நீ எப்பொழுதும் உன்னோடேயே வைத்திரு. அவற்றை உன் விரல்களைச் சுற்றி அணிந்துகொள். அவற்றை உன் இதயத்தில் எழுதிக்கொள். ஞானத்தை உன் சகோதரியைப் போன்று நடத்து. புரிந்துகொள்ளுதலை உன் குடும்பத்திலுள்ள ஒரு பாகமாக நினைத்துக்கொள். அப்போது அவை உன்னை அந்நிய பெண்களிடமிருந்து காப்பாற்றும். பாவத்துக்கு வழிநடத்திச் செல்லும் பிற பெண்களின் மென்மையான வார்த்தைகளிலிருந்து உன்னைக் காக்கும்.

ஒரு நாள் ஜன்னல் வழியே நான் வெளியே பார்த்தேன். பல முட்டாள் இளைஞர்களையும் பார்த்தேன். அவர்களில் ஒரு இளைஞன் மிகவும் அறிவீனனாக இருந்தான். அவன் ஒரு மோசமான பெண்ணின் வீடு இருக்கும் தெருவுக்குப் போனான். அவன் அவளது வீட்டின் அருகில் போனான். அது ஏறக்குறைய இருட்டும் நேரம். சூரியன் மறைந்து, இரவு தொடங்கிவிட்டது. 10 அந்தப் பெண் அவனைச் சந்திக்க வெளியே வந்தாள். அவள் ஒரு வேசியைப்போன்று ஆடையணிந்திருந்தாள். அவள் அவனோடு பாவம் செய்யத் திட்டமிட்டாள். 11 அவள் அடங்காதவளாகவும் எதிர்ப்பவளாகவும் இருந்தாள். அவள் எப்பொழுதும் வீட்டில் தங்குவதில்லை. 12 அதனால் அவள் தெருக்களில் நடந்து அலைவாள். பிரச்சனைக்காக இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தாள். 13 அவள் அந்த இளைஞனைத் தழுவி முத்தமிட்டாள். அவள் வெட்கமில்லாமல், 14 “என்னிடம் சமாதானப் பலிகளின் விருந்து உள்ளது. நான் கொடுப்பதாக வாக்களித்தவற்றைக்கொடுத்துவிட்டேன். 15 இன்னும் என்னிடம் விருந்து மீதமுள்ளது. எனவே, என்னோடு உன்னைச் சேர்த்துக்கொள்ள அழைப்பதற்காக வெளியே வந்துள்ளேன். நான் உனக்காகவே காத்துக்கொண்டிருந்தேன். இப்போது நான் உன்னைக் கண்டு பிடித்தேன். 16 என் படுக்கையின்மேல் சுத்தமான விரிப்பை விரித்துள்ளேன். அது எகிப்திலுள்ள அழகான விரிப்பு. 17 நான் என் படுக்கையின் மேல் மணப்பொருட்களைத் தூவியுள்ளேன். வெள்ளைப்போளம், சந்தனம், இலவங்கப்பட்டை ஆகியவற்றால் என் படுக்கையை மணம் வீசச்செய்திருக்கிறேன். 18 வா, நாம் விடியும் வரை அன்போடு சேர்ந்திருப்போம். இரவு முழுவதும் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியோடு இருப்போம். 19 என் கணவன் வெளியே சென்றிருக்கிறான். அவன் வியாபாரத்திற்காகத் தூரதேசங்களுக்குச் சென்றிருக்கிறான். 20 அவன் நீண்ட பயணத்துக்குப் போதுமான பணத்தை எடுத்துப் போயிருக்கிறான். அவன் இரண்டு வாரங்களுக்கு வீட்டிற்கு வரமாட்டான்” என்றாள்.

21 அவள் இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லி அந்த இளைஞனுக்கு ஆசைகாட்டினாள். அவளது மென்மையான வார்த்தைகள் அவனைத் தூண்டின. 22 அந்த இளைஞன் அவளது வலைக்குள் விழுந்தான். பலியிடப்போகும் காளையைப் போன்று அவன் சென்றான். அவன் வலையை நோக்கிப்போகும் மானைப்போன்று சென்றான். 23 வேட்டைக்காரன் அந்த மானின் நெஞ்சில் அம்பை வீசத் தயாராக இருந்தான். அவன் வலைக்குள் பறந்துபோகும் பறவையைப்போன்று இருந்தான். அவன் தனக்கு வரப்போகும் ஆபத்தை அறிந்துகொள்ளவில்லை.

24 மகன்களே! இப்போது கவனியுங்கள். நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள். 25 ஒரு மோசமான பெண் உன்னை அழைத்துச் செல்லும்படி வைத்துக்கொள்ளாதே. அவளது வழிகளை பின்பற்றிச் செல்லாதே. 26 பல ஆண்கள் விழுவதற்குக் காரணமாக அவள் இருந்திருக்கிறாள். அவள் பல ஆண்களை அழித்திருக்கிறாள். 27 அவளது வீடு மரணத்திற்குரிய இடமாகும். அவளது பாதையானது மரணத்திற்கு நேரடியாக அழைத்துப்போகும்.

கலாத்தியர் 6

ஒருவருக்கொருவர் உதவுக

சகோதர சகோதரிகளே, உங்கள் குழுவில் உள்ள ஒருவன் தவறு செய்யலாம். ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் அவனிடம் போக வேண்டும். அவன் நல்ல வழிக்கு வர சாந்தத்தோடு உதவ வேண்டும். ஆனால் கவனமாக இருங்கள். நீங்கள் பாவம் செய்யத் தூண்டப்படலாம். உங்களுக்குச் சுமையாக இருக்கும்போது ஒருவருக்கு ஒருவர் உதவி செய்துகொள்ளுங்கள். நீங்கள் இதனைச் செய்யும்போது கிறிஸ்துவின் ஆணைகளுக்கு உண்மையாகவே கீழ்ப்படிகிறீர்கள். முக்கியத்துவம் இல்லாத ஒருவன் தன்னைப் பெரிதும் முக்கியத்துவம் கொண்டவனாக நினைத்துக்கொள்வானேயானால், அது தன்னைத் தானே முட்டாளாக்கிக்கொள்ளும் காரியமாகும். ஒருவன் தன்னை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. அவனவன் தனது செயல்களைச் சீர்தூக்கிப் பார்ப்பானாக. பிறகு அவன் தன்னால் செய்ய முடிந்த காரியங்களைப் பற்றிப் பெருமைப்பட்டுக்கொள்ள இடமிருக்கும். ஒவ்வொருவனும் தன் பொறுப்புகளை ஒப்புக்கொள்ள வேண்டும்.

வாழ்க்கை என்பது வயலில் நடுவது போன்றது

வேதவசனத்தில் போதிக்கப்படுகிறவன், போதிக்கிறவனுக்கு எல்லா நன்மைகளையும் பங்கு வைத்துக் கொடுப்பானாக.

புத்தியற்றவர்களாகாதீர்கள். உங்களால் தேவனை ஏமாற்ற முடியாது. ஒருவன் விதைக்கிறதையே அறுப்பான். பாவம் நிறைந்த தன் சுயத்தை திருப்தி செய்யும் பொருட்டு வாழத் தொடங்குவானேயானால், பாவம் நிறைந்த அவன் சுயமானது நிலையான மரணத்தையே தரும். ஆனால் பரிசுத்த ஆவியைத் திருப்திப்படுத்தும் பொருட்டு ஒருவன் வாழத் தொடங்குவானேயானால், அழிவற்ற வாழ்வை ஆவியானவரிடமிருந்து பெறுவான். நாம் நன்மையைச் செய்வதில் சோர்வடையாமல் இருந்தால் சரியான நேரத்தில் அழிவில்லாத வாழ்வு என்னும் விளைச்சலைப் பெறுவோம். நம் செயல்களில் என்றும் பின்வாங்கக் கூடாது. 10 எவர் ஒருவருக்கும் நன்மை செய்யும் வாய்ப்பு கிட்டும் போதெல்லாம், நாம் செய்ய வேண்டும். குறிப்பாக தேவனிடம் விசுவாசம் கொண்டுள்ள குடும்பங்களுக்கு நன்மை செய்யவேண்டும்.

பவுல் தன் நிருபத்தை முடித்தல்

11 இதை நானே எழுதிக்கொண்டிருக்கிறேன். கடிதங்கள் எவ்வளவு பெரியவை என்று பாருங்கள். 12 சிலர் உங்களை விருத்தசேதனம் செய்யுமாறு கட்டாயப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். சில மக்கள் தம்மை ஏற்றுக்கொள்வார்கள் என்பதன் பொருட்டு அவர்கள் இதனைச் செய்கிறார்கள். அவர்கள் கிறிஸ்துவின் சிலுவையை பிரசங்கித்தால் துன்பப்பட நேரும் என அஞ்சுகிறார்கள். 13 விருத்தசேதனம் செய்துகொண்ட அவர்களோ சட்டத்தை மேற்கொள்ளாமல் இருக்கிறார்கள். அப்படி இருந்தும் அவர்கள் உங்களை விருத்தசேதனம் செய்துகொள்ளும்படி கட்டாயப்படுத்துகிறார்கள். அவர்கள் உங்களைச் செய்ய வைப்பதில் பெருமைப்பட மட்டும் விரும்புகிறார்கள்.

14 இது போன்றவற்றைக் குறித்து நான் பெருமையடித்துக்கொள்ளமாட்டேன் என்பதில் நம்பிக்கை கொள்கிறேன். இயேசு கிறிஸ்துவின் சிலுவை ஒன்றே நான் பெருமைப்படத்தக்கது. சிலுவையில் இயேசு இறந்து போனதால் எனக்கு இந்த உலகமே செத்துப்போனது. இந்த உலகத்துக்கு நான் செத்துப்போனேன். 15 ஒரு மனிதன் விருத்தசேதனம் செய்துகொண்டவனா இல்லையா என்பது முக்கியமல்ல. தேவனால் புதுப்படைப்பாக ஆக்கப்படுவது தான் முக்கியம். 16 இந்தச் சட்டத்தின் முறைப்படி வாழ்கிற தேவனுடைய இஸ்ரவேலர்களுக்கு சமாதானமும் கிருபையும் உண்டாவதாக.

17 இனிமேல் எந்தத் தொந்தரவும் எனக்குத் தர வேண்டாம். எனது சரீரத்தில் வடுக்களை ஏற்றிருக்கிறேன். இந்த வடுக்கள் நான் இயேசு கிறிஸ்துவைச் சேர்ந்தவன் என்பதைக் காட்டும்.

18 என் சகோதர சகோதரிகளே, நம்முடைய தேவனாகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியோடு கூட இருக்கட்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். ஆமென்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center