M’Cheyne Bible Reading Plan
பரிசுத்த பொருட்களுக்குரிய காணிக்கைகள்
25 கர்த்தர் மோசேயை நோக்கி, 2 “இஸ்ரவேல் ஜனங்களிடம் காணிக்கைகளைக் கொண்டு வரச் சொல். எனக்குக் கொடுக்க விரும்புவதைக் குறித்து அவனவன் தீர்மானிக்கட்டும். அவற்றை நீ எனக்காகப் பெற்றுக்கொள். 3 ஜனங்களிடமிருந்து நீ பெறக்கூடிய பொருட்களின் பட்டியல் இவை: பொன், வெள்ளி, வெண்கலம், 4 இளநீலநூல், இரத்தாம்பர நூல், சிவப்பு நூல், மெல்லிய துகில், வெள்ளாட்டு மயிர், 5 சிவப்பு சாயம் தோய்த்த ஆட்டுத் தோல், மெல்லிய தோல், சீத்திம் மரம், 6 அகல் எண்ணெய், அபிஷேக எணணெய்ப் பொருட்கள், நறுமணப்புகைப் பொருட்கள், 7 ஏபோத்திலும், நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்திலும் பதிக்கும் கோமேதகக் கற்களும் பிற இரத்தினக் கற்களும் ஆகும்” என்றார்.
பரிசுத்தக் கூடாரம்
8 மேலும் தேவன், “ஜனங்கள் எனக்காக பரிசுத்த பிரகாரத்தை ஏற்படுத்த வேண்டும். அப்போது நான் அவர்கள் மத்தியில் வாழ்வேன். 9 பரிசுத்தக் கூடாரமும் அதிலுள்ள பொருட்களும் எவ்வாறு இருக்க வேண்டுமென்பதை நான் உனக்குக் காட்டுவேன். நான் காட்டுகிற மாதிரியின்படியே எல்லாவற்றையும் தவறாமல் செய்.
உடன்படிக்கைப் பெட்டி
10 “சீத்திம் மரத்தால் விசேஷமான பெட்டி ஒன்றைச் செய். இப்பரிசுத்த பெட்டி 45 அங்குல நீளமும், 27 அங்குல அகலமும், 27 அங்குல உயரமும் இருக்க வேண்டும். 11 பெட்டியின் உட்புறத்தையும், வெளிப்புறத்தையும் மூடுவதற்காக சுத்தமான தங்கத்தை உபயோகி. பெட்டியின் விளிம்புகளையும் தங்கத் தகட்டால் மூடவேண்டும். 12 பெட்டியைத் தூக்குவதற்கு நான்கு தங்க வளையங்களைச் செய். பக்கத்திற்கு இரண்டாக நான்கு மூலைகளிலும் தங்க வளையங்களைப் போடு. பின் பெட்டியைத் தூக்கிச் செல்ல கழிகளைச் செய். இந்த கழிகள் சீத்திம் மரத்தில் செய்யப்பட்டு தங்கத்தால் மூடப்பட வேண்டும். 13 பெட்டியைச் சுமப்பதற்குத் தண்டுகளைச் செய். அவை சீத்திம் மரத்தால் செய்யப்பட்டு பொன்னால் மூடப்பட வேண்டும். 14 பெட்டியின் ஓரங்களிலுள்ள வளையங்களில் அத்தண்டுகளை நுழைக்க வேண்டும். பெட்டியைச் சுமப்பதற்கு இத்தண்டுகளைப் பயன்படுத்த வேண்டும். 15 இத்தண்டுகள் எப்போதும் பெட்டியின் வளையங்களில் இருக்க வேண்டும். தண்டுகளை அப்புறப்படுத்தக் கூடாது.
16 “நான் உனக்கு உடன்படிக்கையைக் கொடுப்பேன். அந்த உடன்படிக்கையை இப்பெட்டியில் வை. 17 பின் ஒரு கிருபாசனத்தை பசும் பொன்னால் செய். 45 அங்குல நீளமும் 27 அங்குல அகலமும் உள்ளதாக அதைச் செய். 18 பின்பு தங்கத்தினால் இரண்டு கேருபீன்களைச் செய்து அவற்றை கிருபாசனத்தின் இரு முனைகளிலும் வை. தகடாய் அடித்த பொன்னால் அவற்றைச் செய். 19 ஒரு கேருபீனை ஒரு முனையிலும் மற்ற கேருபீனை மறு முனையிலும் வை. இந்த கேருபீன்கள் ஒன்றாக இருக்கும்படி கிருபாசனத்தோடு இணை. 20 பொன் கேருபீன்களின் சிறகுகள் வானத்தை நோக்கி உயர்ந்திருக்க வேண்டும். அவை தங்கள் சிறகுகளால் பெட்டியை மூட வேண்டும். அவை ஒன்றுக்கொன்று எதிராக கிருபாசனத்தை நோக்கியபடி இருக்க வேண்டும்.
21 “நான் உனக்கு கொடுக்கும் உடன்படிக்கையைப் பரிசுத்த பெட்டிக்குள் வை. பெட்டியின் மீது கிருபாசனத்தை பொருத்து. 22 நான் உன்னைச் சந்திக்கும்போது, உடன்படிக்கைப் பெட்டியின் மேலுள்ள கேருபீன்களின் மத்தியிலிருந்து உன்னோடு பேசுவேன். அங்கிருந்து இஸ்ரவேல் ஜனங்களுக்கு எல்லாக் கட்டளைகளையும் கொடுப்பேன்.
பரிசுத்த மேசை
23 “சீத்திம் மரத்தால் ஒரு மேசையைச் செய். அது 36 அங்குல நீளமும், 18 அங்குல அகலமும், 27 அங்குல உயரமும் உள்ளதாக இருக்க வேண்டும். 24 மேசையைப் பசும் பொன்னால் மூடி, சுற்றிலும் தங்கத் தகட்டால் அழகுபடுத்து. 25 மூன்று அங்குல அகலமான சட்டத்தை மேசையைச் சுற்றிலும் வை. சட்டத்தைப் பொன் தகட்டால் அழகுபடுத்து. 26 நான்கு பொன் வளையங்களைச் செய்து அவற்றை மேசையின் நான்கு கால்கள் இருக்கும் ஓரங்களில் வை. 27 மேசையின் மேல் சட்டத்தைச் சுற்றிலும் சுருக்கமாக வளையங்களைப் பொருத்து. இந்த வளையங்கள் மேசையைச் சுமந்து செல்லும் தண்டுகளைத் தாங்கிக்கொள்ளும். 28 தண்டுகளைச் சீத்திம் மரத்தினால் செய்து அவற்றைப் பொன்னால் மூடு. தண்டுகள் மேசையைச் சுமந்து செல்லப் பயன்படும். 29 தட்டுகளையும், கரண்டிகளையும், கிண்ணங்களையும், குவளைகளையும் பசும்பொன்னால் செய். பானங்களின் காணிக்கைகளைக் கொட்டுவதற்கும், ஊற்றுவதற்கும் குவளைகளும், கிண்ணங்களும் பயன்படும். 30 பரிசுத்த ரொட்டியை எனக்கு முன்பாக மேசையின் மீது வை. அது எப்போதும் தவறாமல் எனக்கு முன்பாக இருக்க வேண்டும்.
குத்து விளக்குத் தண்டு
31 “பின் நீ விளக்குத் தண்டைச் செய்ய வேண்டும். சுத்தமான பொன்னைப் பயன்படுத்தி அதன் அடிப்பகுதியைச் சுத்தியால் அடித்துச் செய்ய வேண்டும். பூக்கள், மொக்குகள், இலைகள் பூசிய பொன்னால் அமையவேண்டும். அதிலுள்ள எல்லாவற்றையும் ஒரே துண்டாக இணைத்து அமைக்க வேண்டும்.
32 “அந்தக் குத்துவிளக்குத் தண்டுக்கு ஆறு கிளைகள் இருக்கவேண்டும். மூன்று கிளைகள் ஒரு புறமாகவும், மூன்று கிளைகள் மறு புறமாகவும் அமைய வேண்டும். 33 ஒவ்வொரு கிளையிலும் மூன்று பூக்கள் இருக்கவேண்டும். வாதுமைப் பூக்களைப் போல் மொக்குகளோடும், இதழ்களோடும் இப்பூக்களைச் செய்ய வேண்டும். 34 மேலும் நான்கு பூக்களை விளக்குத் தண்டுக்காகச் செய். இவை மொக்குகளும் இதழ்களும் கொண்ட வாதுமைப் பூக்களைப் போலிருக்கவேண்டும். 35 குத்துவிளக்கில் ஆறு கிளைகள் இருக்க வேண்டும். அடிப் பகுதியிலிருந்து மும் மூன்று கிளைகளை ஒவ்வொரு புறத்திலும் இணைக்கவேண்டும். கிளைகள் தண்டில் சேரும் மூன்று இடங்களின் அடிப்பகுதியிலும் மொக்குகளும் இதழ்களும் கொண்ட ஒவ்வொரு பூவை இணைக்கவேண்டும். 36 பூக்களும் இலைகளும் பொருத்திய குத்துவிளக்குத் தண்டானது முழுவதும் சுத்தமான பொன்னால் செய்யப்பட வேண்டும். வெவ்வேறு பாகங்களைச் சுத்தியால் அடித்து ஒன்றாக இணைக்கவேண்டும். 37 பின் குத்து விளக்குத் தண்டில் ஏழு அகல்களைப் பொருத்த வேண்டும். குத்து விளக்கின் முன்னே இந்த அகல்கள் ஒளி தரும். 38 திரிகளைக் கத்தரிக்கும் கத்தரிகளும், சாம்பல் கிண்ணங்களும் பொன்னால் செய்யப்பட வேண்டும். 39 குத்துவிளக்கையும் அதற்குத் தேவையான பொருட்களையும் செய்வதற்கு 75 பவுண்டு எடையுள்ள பசும் பொன்னைப் பயன்படுத்து. 40 மலையின் மீது உனக்கு காட்டியபடியே ஒவ்வொரு பொருளையும் செய்வதில் கவனமாயிரு” என்றார்.
சமாரியப் பெண்ணும் இயேசுவும்
4 யோவானைவிட இயேசு மிகுதியான மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதாகப் பரிசேயர்கள் கேள்விப்பட்டனர். 2 (ஆனால் உண்மையில் இயேசு எவருக்கும் ஞானஸ்நானம் கொடுக்கவில்லை. அவரது சீஷர்களே கொடுத்தனர்.) பரிசேயர்கள் கேள்விப்பட்டதைப்பற்றி இயேசுவும் அறிந்துகொண்டார். 3 ஆகையால் அவர் யூதேயாவை விட்டுத் திரும்பி கலிலேயாவுக்குச் சென்றார். 4 கலிலேயாவுக்குச் செல்கிற வழியில் இயேசு சமாரியா நாட்டைக் கடந்து செல்ல இருந்தார்.
5 சமாரியாவில் இயேசு சீகார் என்னும் பட்டணத்துக்கு வந்தார். அந்தப் பட்டணம், யாக்கோபு தன் மகன் யோசேப்புக்குக் கொடுத்த நிலத்தின் அருகில் இருந்தது. 6 யாக்கோபின் கிணறும் அங்கே இருந்தது. இயேசு தன் நீண்ட பயணத்தால் களைத்துப் போயிருந்தார். ஆகையால் இயேசு கிணற்றின் அருகில் இளைப்பாறிட அமர்ந்தார். அது மதிய வேளை. 7 ஒரு சமாரியப் பெண் தண்ணீரெடுப்பதற்காக அக்கிணற்றுக்கு வந்தாள். இயேசு அவளிடம், “தயவுசெய்து நான் குடிப்பதற்குத் தண்ணீர் கொடு” என்று கேட்டார். 8 (இயேசுவின் சீஷர்கள் பட்டணத்தில் உணவுப் பொருட்களை வாங்கிக்கொண்டிருக்கும்போது இது நடந்தது.)
9 “குடிப்பதற்கு நீங்கள் என்னிடம் கேட்பதை எண்ணி எனக்கு ஆச்சரியமாக உள்ளது. நீங்கள் ஒரு யூதர். நானோ சமாரியப் பெண்” என்று அவள் பதிலுரைத்தாள். (ஏனென்றால் யூதர்கள் சமாரியர்களோடு எப்பொழுதும் நட்புடன் இருப்பதில்லை.)
10 “தேவன் கொடுப்பவற்றைப்பற்றி நீ அறியவில்லை. குடிக்கத் தண்ணீர் கேட்கிற நான் யாரென்று உனக்குத் தெரியாது. இவற்றைப்பற்றி நீ அறிந்தால் நீ என்னிடம் தண்ணீர் கேட்டிருப்பாய். ஜீவத் தண்ணீரை நான் உனக்குக் கொடுத்திருப்பேன்” என்றார் இயேசு.
11 “ஐயா, ஜீவத் தண்ணீரை நீங்கள் எங்கிருந்து பெறுவீர்கள்? இந்தக் கிணறோ ஆழமாக இருக்கிறது. இதிலிருந்து தண்ணீர் எடுப்பதற்கும் உங்களிடம் எதுவும் இல்லையே! 12 நீங்கள் எமது மூதாதையரான யாக்கோபை விடப் பெரியவரா? அவர்தான் எங்களுக்கு இந்தக் கிணற்றைக் கொடுத்தார். அவரும் இந்தக் கிணற்றிலுள்ள தண்ணீரைத்தான் குடித்தார். அத்துடன் அவரது பிள்ளைகளும் மிருகங்களும் இதிலுள்ள தண்ணீரைத்தான் குடித்தார்கள்” என்று அந்தப் பெண் சொன்னாள்.
13 “இந்த தண்ணீரைக் குடிக்கிறவர்களுக்கு மீண்டும் தாகம் எடுக்கும். 14 ஆனால் நான் கொடுக்கிற தண்ணீரைக் குடிப்பவர்களுக்கோ மறுபடியும் தாகம் எடுப்பதில்லை. என்னால் கொடுக்கப்படுகிற தண்ணீர், அதைக் குடிப்பவனுக்குள் நீரூற்றாகப் பெருக்கெடுக்கும். அது அவனுக்கு எக்காலத்துக்கும் உரிய வாழ்க்கையைத் தரும்” என்று இயேசு பதிலுரைத்தார்.
15 “ஐயா! எனக்கு அந்தத் தண்ணீரை வழங்குங்கள். அப்போது ஒருபோதும் மறுபடியும் எனக்குத் தாகம் எடுக்காது. மிகுதியாகத் தண்ணீரெடுக்க இங்கே நான் மீண்டும் வர வேண்டியதும் இராது” எனக் கூறினாள் அந்தப் பெண்.
16 “போ, உன் கணவனோடு இங்கே திரும்ப வா” என்றார் இயேசு.
17 “ஆனால், எனக்குக் கணவன் இல்லையே” என்றாள் அப்பெண்.
“உனக்குக் கணவன் இல்லையென்று நீ சொல்வது சரிதான். 18 உண்மையில் உனக்கு ஐந்து கணவர்கள் இருந்திருக்கின்றனர். ஆனால் நீ இப்பொழுது யாரோடு வாழ்ந்துகொண்டிருக்கிறாயோ அவன் உன் கணவனல்ல. நீ என்னிடம் உண்மையைச் சொன்னாய்” என்றார் இயேசு.
19 “உம்மை நான் தீர்க்கதரிசியாகக் காண்கிறேன். 20 எங்கள் முன்னோர்கள் இந்த மலையில் வழிபட்டுவந்தனர். ஆனால் யூதராகிய நீங்களோ, எருசலேம்தான் வழிபாட்டுக்குரிய இடம் என்று கூறுகிறீர்கள்” என்றாள் அந்தப் பெண்.
21 “பெண்ணே! என்னை நம்பு. இந்த மலையிலும் எருசலேமிலும் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் பிதாவை (தேவனை) வழிபடுகிற காலம் வந்துகொண்டிருக்கிறது. 22 சமாரியர்களாகிய நீங்கள் உங்களால் புரிந்துகொள்ள முடியாததை வணங்கி வருகிறீர்கள். யூதர்களாகிய நாங்கள், எங்களால் வணங்கப்படுபவரைப் புரிந்துகொண்டிருக்கிறோம். யூதர்களிடமிருந்தே இரட்சிப்பு வருகின்றது. 23 உண்மையாக வழிபடுகிறவர்கள் (தேவனை) ஆவியோடும் உண்மையோடும் வழிபடுகிற காலம் வந்துகொண்டிருக்கிறது. அது இப்பொழுதே வந்திருக்கிறது. பிதாவும் தம்மை வழிபடுகிறவர்கள் இத்தகைய மக்களாக இருக்க விரும்புகிறார். 24 தேவன் ஆவியாயிருக்கிறார். ஆகையால் தேவனை வழிபடுகிற மக்கள் ஆவியோடும் உண்மையோடும் தேவனை வழிபடுதல் வேண்டும்” என்றார் இயேசு.
25 “கிறிஸ்து என்று அழைக்கப்படுகிற மேசியா வந்துகொண்டிருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். அவர் வந்ததும் எங்களுக்கு அனைத்தையும் விளக்குவார்” என்றாள் அப்பெண்.
26 பிறகு இயேசு, “இப்பொழுது அவர்தான் உன்னோடு பேசிக்கொண்டிருக்கிறார். நான்தான் மேசியா” என்றார்.
27 அப்பொழுது இயேசுவின் சீஷர்கள் பட்டணத்தில் இருந்து திரும்பி வந்தனர். இயேசு ஒரு பெண்ணோடு பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு அவர்கள் வியப்புற்றனர். ஆனால் எவரும், “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்றோ “ஏன் நீங்கள் அவளோடு பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?” என்றோ கேட்கவில்லை.
28 பிறகு அந்தப் பெண் தன் தண்ணீர்க் குடத்தை விட்டுவிட்டு நகருக்குத் திரும்பப் போனாள். 29 அங்கே அவள் மக்களிடம், “நான் செய்தவற்றையெல்லாம் ஒருவர் எனக்குச் சொன்னார். அவரை வந்து பாருங்கள். ஒரு வேளை அவர் கிறிஸ்துவாக இருக்கலாம்” என்றாள். 30 ஆகையால் மக்கள் நகரத்தை விட்டு வெளியேறி இயேசுவைக் காண வந்தனர்.
31 அந்தப் பெண் நகரத்திற்குள் இருந்தபோது இயேசுவின் சீஷர்கள், அவரை உண்ணும்படி வேண்டிக்கொண்டனர்.
32 ஆனால் இயேசுவோ, “என்னிடம் உண்பதற்கு உணவுண்டு. அதனைப் பற்றி உங்களுக்கு ஒன்றும் தெரியாது” என்றார்.
33 “ஏற்கெனவே வேறு யாராவது அவருக்கு உணவு கொண்டுவந்திருப்பார்கள்” என்று சீஷர் கள் தமக்குள் பேசிக்கொண்டனர்.
34 “எனது உணவு என்னை அனுப்பிய தேவன் செய்யச் சொன்னதைச் செய்வதுதான்; எனக்குக் கட்டளையிட்டபடி செய்து முடிப்பதுதான் எனது உணவாக இருக்கிறது. 35 நீங்கள் பயிரை நடும்போது ‘அறுவடைக்காக இன்னும் நான்கு மாதங்கள் காத்திருக்க வேண்டும்’ என்று சொல்வீர்களல்லாவா? ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன். கண்களைத் திறவுங்கள், மக்களைப் பாருங்கள். அவர்கள் அறுவடைக்காகத் தயாராக இருக்கிற வயலைப்போன்று இருக்கிறார்கள். 36 இப்பொழுதுகூட அறுவடை செய்கிறவன் சம்பளம் பெறுகிறான். அவன் தனது நித்திய வாழ்வுக்கு அனுகூலமாக அறுவடை செய்துகொள்கிறவன். ஆகையால் இப்பொழுது விதைக்கிறவனோடு அறுவடை செய்கிறவனும் மகிழ்ச்சியடைய இயலும். 37 விதைக்கிறவன் ஒருவன் அறுக்கிறவன் இன்னொருவன் என்கிற பழமொழி இதனால் உண்மையாகிறது. 38 நீங்கள் பாடுபட்டு விதைக்காத நிலத்தை அறுவடை செய்யுமாறு உங்களை அனுப்பினேன். மற்றவர்கள் பாடுபட்டார்கள். நீங்கள் அவர்கள் உழைப்பின் பயனை அனுபவிக்கிறீர்கள்” என்று இயேசு கூறினார்.
39 அந்நகரத்தில் உள்ள ஏராளமான மக்கள் இயேசுவின் மீது நம்பிக்கை வைத்தனர். அந்தப் பெண் இயேசுவைப்பற்றிக் கூறியவற்றால்தான் அவர்கள் அவரை நம்பினர். அவள், “நான் செய்த எல்லாவற்றையும் அவர் எனக்குச் சொல்லி விட்டார்” என்று கூறி இருந்தாள். 40 சமாரியர்கள் இயேசுவிடம் சென்றார்கள். இயேசுவை அவர்களோடு தங்கும்படி வேண்டினார்கள். ஆகையால் இயேசு அவர்களோடு இரண்டு நாட்கள் தங்கினார். 41 மேலும் மிகுதியான மக்கள், இயேசு சொன்னவற்றின் மூலம் அவரை நம்பினர்.
42 அவர்கள், “முதலில் நீ சொன்னவற்றையெல்லாம் கேட்டு இயேசுவை நம்பினோம். ஆனால் இப்பொழுது நாங்களாகவே அவர் சொன்னவற்றைக் கேட்டதால் விசுவாசிக்கிறோம். அவர் உண்மையாகவே இந்த உலகத்தை இரட்சிக்கப்போகிறவர் என்று நம்புகிறோம்” என்று அந்தப் பெண்ணிடம் சொன்னார்கள்.
அதிகாரியின் மகன் குணப்படுதல்(A)
43 இரு நாட்கள் கழிந்ததும் இயேசு அந்நகரத்தை விட்டு கலிலேயாவுக்குச் சென்றார். 44 (இயேசு ஏற்கெனவே “ஒரு தீர்க்கதரிசி தன் சொந்த ஊரில் மதிக்கப்படமாட்டான்” என்று சொல்லியிருந்தார்) 45 அவர் கலிலேயாவுக்கு வந்தபோது அங்குள்ள மக்கள் அவரை நல்ல முறையில் வரவேற்றனர். அந்த மக்கள் இயேசு எருசலேமில் பஸ்கா பண்டிகையில் செய்தவற்றையெல்லாம் நேரில் கண்டவர்கள். அந்த மக்கள் அப்பண்டிகையில் கலந்துகொண்டவர்கள்.
46 கலிலேயாவிலுள்ள கானா என்ற ஊருக்கு இயேசு மீண்டும் சென்றார். ஏற்கெனவே அவர் அங்குதான் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியிருந்தார். அரசனின் முக்கியமான அதிகாரி ஒருவன் கப்பர்நகூமில் வசித்து வந்தான். அவனது மகன் நோயுற்றிருந்தான். 47 அந்த மனிதன், இயேசு இப்பொழுது யூதேயா நாட்டிலிருந்து கலிலேயாவுக்கு வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டான். ஆகையால் அவன் கானா ஊருக்குப் போய் இயேசுவைச் சந்தித்தான். கப்பர்நகூமுக்கு வந்து தன் மகனது நோயைக் குணமாக்கும்படி இயேசுவை வேண்டினான். அவனது மகன் ஏற்கெனவே சாகும் நிலையில் இருந்தான். 48 “நீங்கள் அற்புதங்களையும் அதிசயங்களையும் காணாவிட்டால் என்னை நம்பமாட்டீர்கள்” என்று இயேசு சொன்னார்.
49 அந்த அதிகாரியோ, “ஐயா, என் சிறிய மகன் சாவதற்கு முன் என் வீட்டிற்கு வாருங்கள்” என்று அழைத்தான்.
50 அதற்கு இயேசு, “போ, உன் மகன் பிழைப்பான்” என்றார்.
அந்த மனிதன் இயேசு சொன்னதில் நம்பிக்கை வைத்து தன் வீட்டிற்குத் திரும்பினான். 51 வழியில் அவனது வேலைக்காரர்கள் எதிரில் வந்தார்கள். “உங்கள் மகன் குணமாகிவிட்டான்” என்று அவர்கள் சொன்னார்கள்.
52 “என் மகன் எப்போது குணமாகத் தொடங்கினான்?” என்று கேட்டான் அவன். “நேற்று ஒருமணி இருக்கும்போது உங்கள் மகனின் காய்ச்சல் விலகி குணமானது” என்றார்கள் வேலைக்காரர்கள்.
53 இயேசு, “உன் மகன் பிழைப்பான்” என்று சொன்ன நேரமும் ஒரு மணிதான் என்பதை அந்த அதிகாரி உணர்ந்துகொண்டான். ஆகையால் அவனும் அவனது வீட்டில் உள்ள அனைவரும் இயேசுவின்மீது விசுவாசம் வைத்தனர்.
54 யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்த பிறகு, இயேசு செய்த இரண்டாவது அற்புதம் இது.
முகவுரை
1 இவை தாவீதின் மகனான சாலொமோன் கற்பித்த ஞான போதனைகள். சாலொமோன் இஸ்ரவேலின் அரசனாக இருந்தான். 2 ஜனங்கள் புத்திசாலிகளாக இருக்கும்பொருட்டும், செய்யத்தக்க நேர்மையான காரியங்களைச் செய்யும்பொருட்டும் இந்த ஞானவார்த்தைகள் எழுதப்பட்டுள்ளன. இந்த வார்த்தைகள், ஜனங்கள் ஞான போதனைகளைப் புரிந்துகொள்ள உதவும். 3 இந்த ஞானவார்த்தைகள் ஜனங்களுக்குத் தங்களுடைய மனம் நேர்மையான வழியில் செல்ல போதிக்கும். ஜனங்கள் நேர்மையோடும், நியாயத்தோடும் நல்லவர்களாகவும் தங்கள் புத்தியைச் சரியான வழியில் செலுத்த இந்த ஞானவார்த்தைகள் போதிக்கும். 4 ஞானத்தை அடைய விரும்பும் ஜனங்களுக்கு இந்த ஞானவார்த்தைகள் போதிக்கும். இந்த ஞானவார்த்தைகள் இளந்தலைமுறையினருக்கு அவர்கள் அறிய வேண்டியவற்றையும் அதை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்பதைக் குறித்தும் போதிக்கும். 5 அறிவாளிகள்கூட இந்த வார்த்தைகளைக் கவனிக்கவேண்டும். இதை அவர்கள் கற்று மேலும் ஞானிகளாவார்கள். பிரச்சனைகளைச் சரிசெய்துகொள்ளும் திறமைகொண்ட ஜனங்கள் இவற்றின்மூலம் மேலும் புரிந்துகொள்ளும் திறமையைப் பெறலாம். 6 பின்னர் நீதிக்கதைகளையும், அதன் அர்த்தங்களையும் அந்த ஜனங்களால் புரிந்துகொள்ள முடியும். அறிவாளிகள் சொல்வதை அந்த ஜனங்களால் புரிந்துகொள்ள முடியும்.
7 ஒருவன் செய்யவேண்டிய முதலாவது காரியம், கர்த்தருக்கு கனம் செலுத்துவதையும் அவருக்குக் கீழ்ப்படிவதையும் கற்றுக்கொள்ளவேண்டும். அது தம்மை உண்மையான ஞானத்தைப்பெற வழிநடத்தும். ஆனால், தீய ஜனங்கள் உண்மையான ஞானத்தையும் ஒழுக்கத்தையும் வெறுக்கிறார்கள்.
சாலொமோன் தன் மகனுக்குச் சொன்ன அறிவுரை
8 என் மகனே! உன் தந்தை உன்னை திருத்தும்போது கீழ்ப்படியவேண்டும். நீ உன் தாயின் போதனைகளையும் தள்ளிவிடவேண்டாம். 9 உனது தாயும் தந்தையும் சொல்லுகிற வார்த்தைகள் உன் தலைக்கு அலங்காரமான கிரீடமாக இருக்கும். அவை உன் கழுத்துக்கு அழகான மாலையாக விளங்கும்.
10 என் மகனே! பாவத்தை விரும்புகிறவர்கள், அவர்கள் உன்னையும் தீயசெயல்களை செய்யும்படி தூண்டுவார்கள். நீ அவர்களைப் பின்பற்றக் கூடாது. 11 அந்தப் பாவிகள் உன்னிடம், “எங்களோடு வா, நாம் ஒளித்திருப்போம். ஒன்றும் அறியாதவர்களைக்கொல்லும்படிக் காத்திருப்போம். 12 நாம் அவர்களை மரண இடத்திற்கு அனுப்புவோம். நாம் அவர்களை அழித்து கல்லறைக்கு அனுப்புவோம். 13 நாம் விலைமதிப்புள்ள உயர்ந்த பொருட்களையெல்லாம் திருடுவோம். நாம் இவற்றால் நம் வீடுகளை நிரப்புவோம். 14 எனவே எங்களோடு வா. இவற்றைச் செய்ய உதவு. இதில் கிடைப்பதை நாம் பங்கிட்டுக்கொள்வோம்” என்பார்கள்.
15 என் மகனே அவர்களைப் பின்பற்றிச் செல்லாதே. அவர்கள் வாழ்கிற வாழ்க்கை முறையில் ஒரு அடிகூட எடுத்து வைக்காதே. 16 அந்தத் தீயவர்கள் எப்பொழுதும் தீமை செய்யவே தயாராக இருப்பார்கள். எப்பொழுதும் அவர்கள் ஜனங்களைக்கொல்வதையே விரும்புவார்கள்.
17 ஜனங்கள் வலையை விரித்துப் பறவைகளைப் பிடிக்கிறார்கள். ஆனால் பறவைகள் கவனித்துக்கொண்டிருக்கும்போது அதனைப் பிடிக்க வலையை விரிப்பது வீண். 18 அந்தத் தீயவர்கள் மறைந்துகொண்டு மற்றவர்களைக்கொல்ல வலை விரிப்பார்கள். ஆனால் அவர்கள் உண்மையில் தங்களுக்காகவே வலையை விரிக்கிறார்கள். அவர்கள் தம் சொந்த வலையாலேயே அழிந்து போவார்கள். 19 பேராசை உடையவர்கள் எப்பொழுதும் அதனாலேயே அழிந்துபோவார்கள்.
நல்ல பெண்மணியான ஞானம்
20 கவனியுங்கள்! ஞானம் ஜனங்களுக்குப் போதிக்க முயற்சி செய்கிறாள். வீதிகளிலும் சந்தையிலும் நின்று அவள் (ஞானம்) சத்தமிடுகிறாள். 21 அவள் நெரிசலான தெருமுனைகளில் நின்று கூப்பிடுகிறாள். நகர வாசல் அருகில் நின்றுகொண்டு ஜனங்கள் தன்னைக் கவனிக்கும்படி முயற்சி செய்கிறாள்.
22 ஞானம் சொல்கிறதாவது, “நீங்கள் முட்டாள்கள், நீங்கள் தொடர்ந்து எவ்வளவுகாலம் முட்டாள்தனமாக செயல்படுவீர்கள்? நீங்கள் எவ்வளவு காலம் ஞானத்தைக் கேலிச் செய்வீர்கள்? நீங்கள் தொடர்ந்து எவ்வளவு காலத்துக்கு அறிவை வெறுப்பீர்கள்? 23 நீங்கள் எனது ஆலோசனைகளையும், போதனைகளையும் கேட்டிருக்க வேண்டும். எனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் நான் உங்களுக்குச் சொல்லியிருந்திருப்பேன். என் அறிவையெல்லாம் உங்களுக்கு வழங்கியிருந்திருப்பேன்.
24 “நான் சொல்வதைக் கவனிக்க நீங்கள் மறுத்துவிட்டீர்கள். நான் உதவ முயன்றேன். நான் கைகொடுக்க வந்தேன். ஆனால் என் உதவியை ஏற்க மறுத்துவிட்டீர்கள். 25 எனது அறிவுரைகளைக் கேட்காமல் நீங்கள் திரும்பிக்கொண்டீர்கள். என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள மறுத்தீர்கள். 26 எனவே, உங்கள் துன்பத்தைக் கண்டு நான் சிரிப்பேன். உங்களுக்குத் துன்பம் வருவதைப் பார்த்து நான் மகிழ்ச்சி அடைவேன். 27 ஒரு கொடிய புயலைப்போன்று பெருந்துன்பம் உங்களுக்கு வரும். பெருங்காற்றைப்போன்று அது உங்கள் மேல் மோதும். உங்கள் துன்பமும் கவலைகளும் உங்கள் மேல் சுமையாக அழுத்தும்.
28 “இவையெல்லாம் நடக்கும்போது நீங்கள் என்னை உதவிக்காக அழைப்பீர்கள். ஆனால் நான் உதவிசெய்யமாட்டேன். என்னை நீங்கள் தேடுவீர்கள், ஆனால் உங்களால் என்னைக் கண்டு பிடிக்க முடியாது. 29 நீங்கள் என் அறிவை விரும்பாததால் நான் உதவி செய்யமாட்டேன். நீங்கள் கர்த்தருக்குப் பயப்படவும் அவரை மதிக்கவும், கனப்படுத்தவும் மறுத்தீர்கள். 30 நீங்கள் என்னுடைய அறிவுரைகளைக் கேட்க மறுத்தீர்கள். நான் உங்களுக்குச் சரியான பாதையைக் காட்டியபோது நீங்கள் கேட்கவில்லை. 31 நீங்கள் உங்கள் சொந்த வழியிலேயே செயல்களைச் செய்தீர்கள். நீங்கள் உங்கள் சொந்த ஆலோசனையைப் பின்பற்றினீர்கள். உங்கள் சொந்த செய்கைகளினால் வந்த விளைவுகளை நீங்கள் இப்பொழுது ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
32 “முட்டாள்கள் அறிவைப் பின்பற்ற மறுப்பதால் மரணமடைவார்கள். தங்கள் முட்டாள்தனமான பாதையில் தொடர்ந்து செல்வதில் அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். இது அவர்களை அழித்துவிடும். 33 ஆனால் எனக்குக் கீழ்ப்படிகிறவன் பாதுகாப்பாக இருப்பான். அவன் வசதியாக இருப்பான். அவன் தீமைக்குப் பயப்படவேண்டியதில்லை.”
இறுதி எச்சரிக்கைகளும் வாழ்த்துக்களும்
13 மூன்றாவது முறையாக நான் மீண்டும் வருவேன். “எல்லா குற்றச் சாட்டுகளும் இரண்டு மூன்று சாட்சிகளால்தான் உறுதிப்படவேண்டும்.” [a] என்பதை நினைத்துக்கொள்ளுங்கள். 2 நான் இரண்டாவது முறை உங்களோடு இருந்தபோது பாவம் செய்தவர்களை எச்சரித்திருந்தேன். இப்பொழுது உங்களிடம் இருந்து விலகி இருக்கிறேன். பாவம் செய்த மற்ற எல்லாரையும் எச்சரிக்கிறேன். நான் உங்களிடம் மீண்டும் வரும்போது உங்கள் பாவங்களுக்காக உங்களைத் தண்டிப்பேன். 3 கிறிஸ்து என் மூலம் பேசுகிறார் என்பதற்கு உங்களுக்கு ஆதாரம் வேண்டுமா? (உங்களை நான் தண்டிக்கு போது, நீங்கள் அதைப் பார்ப்பீர்கள்.) அவர் உங்களிடத்தில் பலவீனராக இல்லை; வல்லவராய் இருக்கிறார். 4 சிலுவையில் அறையப்படும்போது கிறிஸ்து பலவீனமானவராயிருந்தார் என்பது உண்மை. ஆனால் தேவனுடைய வல்லமையால் இப்போது வாழ்கிறார். நாமும் கிறிஸ்துவுக்குள் பலவீனராக இருக்கிறோம் என்பது உண்மை. ஆனால் தேவனுடைய வல்லமையால் நாங்கள் உங்களுக்காக கிறிஸ்துவுக்குள் உயிரோடு இருப்போம்.
5 நீங்கள் உங்களையே பாருங்கள். விசுவாசத்தில் வாழ்கிறீர்களா என உங்களை நீங்களே சோதித்துப் பாருங்கள். இயேசுகிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறாரா, இல்லையா என்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் சோதனையில் தோற்றுவிட்டால் கிறிஸ்து உங்களோடு இல்லை. 6 நாங்கள் சோதனையில் தோற்றவர்கள் இல்லை என்பதை நீங்கள் அடையாளம் கண்டுகொள்வீர்கள் என்று நம்புகிறேன். 7 நீங்கள் தவறாக எதுவும் செய்யக் கூடாது என்பதே தேவனிடம் எங்கள் பிரார்த்தனை. நாங்கள் சோதனையில் வெற்றி பெற்றோமா இல்லையா என்பது முக்கியமல்ல. நாங்கள் சோதனையில் தோற்றவர்கள் என மக்கள் நினைக்க நேர்ந்தாலும் கூட நீங்கள் நேர்மையானதைச் செய்ய வேண்டும் என்பதுதான் முக்கியம். 8 உண்மைக்கு எதிரானவற்றை எங்களால் செய்ய முடியாது. எங்களால் உண்மைக்குரியதை மட்டுமே செய்ய முடியும். 9 நீங்கள் பலமுள்ளவர்களாய் இருக்கும்வரை நாங்கள் பெலவீனராய் இருப்பதைக் குறித்து எங்களுக்கு மகிழ்ச்சியே. நீங்கள் மென்மேலும் பலமுள்ளவர்களாகும்படிக்கு பிரார்த்தனை செய்கிறோம். 10 நாங்கள் உங்களோடு இல்லாததால் இதை எழுதுகிறேன். எனவே உங்களிடம் வரும்போது என்னிடம் உள்ள ஆற்றலைப் பயன்படுத்தி உங்களைத் தண்டிக்கமாட்டேன். கர்த்தர் எனக்கு உங்களைப் பலப்படுத்தவே வல்லமை கொடுத்துள்ளார். உங்களை அழிக்க அல்ல.
11 சகோதர, சகோதரிகளே, மகிழ்ச்சியோடு இருங்கள். முழுமை பெற முயலுங்கள். நான் செய்யச் சொன்னவற்றைச் செய்யுங்கள். ஒருவருக்கொருவர் மனதார ஒத்துப் போங்கள். சமாதானத்தோடு வாழுங்கள். அப்பொழுது அன்புக்கும் சமாதனத்திற்கும் உரிய தேவன் உங்களோடு இருப்பார்.
12 ஒருவரையொருவர் பரிசுத்தமான முத்தத்தால் வாழ்த்துங்கள். தேவனுடைய பரிசுத்தவான்களெல்லாரும் உங்களுக்கு வாழ்த்துக்களைக் கூறுகிறார்கள்.
13 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையும், தேவனின் அன்பும், பரிசுத்த ஆவியானவரின் ஐக்கியமும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.
2008 by World Bible Translation Center