M’Cheyne Bible Reading Plan
22 ஈசோப் தழைகளை எடுத்து, அவற்றை இரத்தம் நிரம்பியிருக்கும் கிண்ணங்களில் தோய்த்து எடுத்து வாசல் நிலைக்கால்களின் பக்கங்களிலும், மேலேயும் இரத்தத்தைப் பூசுங்கள். காலை வரைக்கும் ஒருவனும் அவனது வீட்டை விட்டு எங்கும் போகக்கூடாது. 23 எகிப்தின் முதற்பேறானவற்றை அழிப்பதற்காக கர்த்தர் கடந்து செல்லும்போது அவர் வாசல் நிலைக்கால்களிலிருக்கும் இரத்தத்தைக் காண்பார். அப்போது கர்த்தர் அந்த வீட்டைப் பாதுகாப்பார். அழிக்கிறவன் உங்கள் வீட்டுக்குள் வந்து, உங்களைச் சேதப்படுத்த கர்த்தர் அவனை விடமாட்டார். 24 நீங்கள் இக்கட்டளையை நினைவுகூர வேண்டும். உங்களுக்கும், உங்கள் சந்ததிக்கும் எந்நாளும் இது சட்டமாக இருக்கும். 25 கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கிற தேசத்திற்குப் போன பிறகும் இதை நினைவுகூர்ந்து செய்ய வேண்டும். 26 உங்கள் பிள்ளைகள், ‘நீங்கள் ஏன் இந்த பண்டிகையைக் கொண்டாடுகிறீர்கள்?’ என்று உங்களைக் கேட்டால், 27 நீங்கள், ‘இந்தப் பஸ்காப் பண்டிகை கர்த்தரை மகிமைப்படுத்துவதற்குரியதாகும். ஏனெனில், நாங்கள் எகிப்தில் வாழ்ந்தபோது கர்த்தர் இஸ்ரவேலரின் வீடுகளைக் கடந்து சென்று எகிப்தியர்களைக் கொன்றார், ஆனால் அவர் நமது வீடுகளின் ஜனங்களைக் காப்பாற்றினார்.’ என்று கூறுங்கள்” என்றார்.
ஜனங்கள் கர்த்தரைப் பணிந்து தொழுதுகொள்கிறார்கள் 28 கர்த்தர் இந்தக் கட்டளையை மோசேக்கும், ஆரோனுக்கும் கொடுத்தார். எனவே இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தர் கட்டளையிட்டவற்றைச் செய்தார்கள்.
29 நள்ளிரவில் கர்த்தர் எகிப்தின் முதற்பேறானவர்களை, எகிப்தை ஆண்ட பார்வோனின் முதல் மகனிலிருந்து, சிறையிலுள்ள கைதியின் முதல் மகன் வரைக்கும் எல்லோரையும் அழித்தார். எல்லா முதற் பேறான மிருகங்களும் மரித்தன. 30 அந்த இரவில் எகிப்தின் ஒவ்வொரு வீட்டிலும் யாராவது ஒருவர் மரித்தனர். பார்வோனும், அவனது அதிகாரிகளும், எகிப்தின் எல்லா ஜனங்களும் சத்தமிட்டு அழுதனர்.
இஸ்ரவேல் எகிப்தைவிட்டுப் புறப்படுதல்
31 அந்த இரவில் பார்வோன் மோசேயையும், ஆரோனையும் வரவழைத்தான். பார்வோன் அவர்களிடம், “எழுந்து என் ஜனங்களை விட்டு விலகிப்போங்கள். நீங்கள் கூறுகிறபடியே நீங்களும் உங்கள் ஜனங்களும் செய்யலாம். போய் கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்! 32 உங்கள் ஆடுகளையும், மாடுகளையும் நீங்கள் கூறியபடியே உங்களோடு எடுத்துச் செல்லலாம், போங்கள்! என்னையும் ஆசீர்வதியுங்கள்!” என்றான். 33 எகிப்தின் ஜனங்களும் அவர்களை விரைந்து போகும்படிக் கேட்டுக்கொண்டனர். அவர்கள், “நீங்கள் போகாவிட்டால், நாங்கள் அனைவரும் மரித்துப் போவோம்!” என்று கூறினார்கள்.
34 இஸ்ரவேல் ஜனங்கள் ரொட்டியைப் புளிக்கச் செய்வதற்கும் நேரமிருக்கவில்லை. மாவிருந்த கிண்ணங்களைத் துணியால் பொதிந்து அவர்கள் தங்கள் தோள்களில் சுமந்து சென்றனர். 35 பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் மோசே கூறியபடியே செயல்பட்டனர். அவர்கள் அக்கம் பக்கத்தாராகிய எகிப்தியரிடம் சென்று ஆடைகளையும், பொன் மற்றும் வெள்ளி பொருட்களையும் கேட்டார்கள். 36 இஸ்ரவேல் ஜனங்கள் மீது எகிப்தியர்களுக்கு இரக்கம் உண்டாகுமாறு கர்த்தர் செய்தார். எனவே எகிப்தியர்கள் தங்கள் விலையுயர்ந்த பொருட்களை இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கொடுத்தனர்.
37 ராமசேசிலிருந்து சுக்கோத்துக்கு இஸ்ரவேல் ஜனங்கள் பிரயாணம் செய்தனர். சமார் 6,00,000 புருஷர்கள் இருந்தனர். குழந்தைகள் இந்த எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை. 38 ஆடுகளும், மாடுகளும், பிற பொருட்களும் மிக அதிகமாக இருந்தன. அவர்களோடு இஸ்ரவேலர் அல்லாத வெவ்வேறு இனத்து ஜனங்களும் பயணம் செய்தனர். 39 ரொட்டி மாவை புளிக்கவைக்க ஜனங்களுக்கு நேரம் இருக்கவில்லை. பயணத்திற்காக எந்த விசேஷ உணவையும் அவர்கள் தயாரிக்கவில்லை. எனவே புளிப்பற்ற ரொட்டியையே சுட்டார்கள்.
40 இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தில் 430 ஆண்டுகள் வாழ்ந்திருந்தனர். 41 சரியாக 430 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த நாளில் கர்த்தரின் சேனைகள் [a] எகிப்தை விட்டுச் சென்றனர். 42 கர்த்தர் செய்ததை ஜனங்கள் நினைவுகூரும் அந்த இரவு விசேஷமா னது. இஸ்ரவேலின் ஜனங்கள் எல்லாரும் எந்நாளும் அந்த இரவை நினைவுகூருவார்கள்.
43 கர்த்தர் மோசேயையும், ஆரோனையும் நோக்கி, “பஸ்கா பண்டிகையின் விதிகள் இவை: அந்நியன் யாரும் பஸ்காவை உண்ணக் கூடாது. 44 ஆனால் ஒருவன் ஒரு அடிமையை வாங்கி அவனுக்கு விருத்தசேதனம் செய்வித்தால், அந்த அடிமை பஸ்காவை உண்ணலாம். 45 ஆனால் ஒருவன் உங்கள் நாட்டில் வாழ்ந்தாலும், கூலி வேலைக்கு உங்களால் அமர்த்தப்பட்டவனாக இருந்தாலும், அம்மனிதன் பஸ்கா உணவை உண்ணக்கூடாது, இஸ்ரவேல் ஜனங்களுக்கு மட்டுமே பஸ்கா உரியது.
46 “ஒவ்வொரு குடும்பமும் அவர்கள் வீட்டில் அவ்வுணவை உண்ண வேண்டும். வீட்டிலிருந்து வெளியே அவ்வுணவை எடுத்துச் செல்லக் கூடாது. ஆட்டுக்குட்டியின் எலும்புகளை முறிக்க வேண்டாம். 47 இஸ்ரவேலின் எல்லா ஜனங்களும் இப்பண்டிகையைக் கொண்டாட வேண்டும். 48 உங்களோடு வசிக்கும் இஸ்ரவேலன் அல்லாத ஒருவன் கர்த்தரின் பஸ்காவில் பங்குகொள்ள விரும்பினால், அவனுக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டும். அப்போது அவன் இஸ்ரவேலின் குடிமகனாகக் கருதப்படுவான். அவன் பஸ்கா உணவில் பங்குகொள்ள முடியும். ஆனால் ஒரு மனிதன் விருத்தசேதனம் செய்துகொள்ளாவிட்டால், அவன் பஸ்கா உணவை உண்ண முடியாது. 49 இந்த விதிகள் எல்லோருக்கும் பொதுவானவை. இஸ்ரவேலின் குடி மகன் அல்லது உங்கள் நாட்டில் வசிக்கும் இஸ்ரவேல் அல்லாத எல்லோருக்கும் விதிகள் பொதுவானதாகவே இருக்கும்” என்றார்.
50 கர்த்தர் மோசேக்கும், ஆரோனுக்கும் கொடுத்த கட்டளைகளின்படி இஸ்ரவேலின் ஜனங்கள் குழுக்களாக எல்லோரும் எகிப்தை விட்டுபோனார்கள். 51 அதே நாளில் கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே வழிநடத்தினார். ஜனங்கள் குழுக்களாக புறப்பட்டனர்.
ஆடு, வெள்ளிக்காசு உவமை(A)
15 வரி வசூலிப்போர் பலரும், தீயோரும் இயேசு கூறுவதைக் கேட்க வந்தார்கள். 2 உடனே பரிசேயரும் வேதபாரகரும் குறை கூற ஆரம்பித்தவர்களாக, “பாருங்கள்! இந்த மனிதன் (இயேசு) தீயோரை வரவேற்று அவர்களோடு அமர்ந்து உணவு உண்கிறார்” என்றனர்.
3 அப்போது அவர்களுக்கு இயேசு பின்வரும் உவமையைக் கூறினார்: 4 “உங்களில் ஒருவனுக்கு நூறு ஆடுகள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். அவற்றுள் ஒன்று காணாமல் போகிறது. அப்போது அவன் மற்ற தொண்ணூற்று ஒன்பது ஆடுகளையும் தனியே விட்டுவிட்டுக் காணாமல் போன ஆட்டைத் தேடிச் செல்லமாட்டானா? அந்தக் காணாமல் போன ஆட்டைக் கண்டுபிடிக்கும்வரைக்கும் அவன் அதைத் தேடிக்கொண்டே இருப்பான். 5 அந்த ஆட்டை அவன் கண்டுபிடிக்கிறபோது மிகவும் சந்தோஷம் அடைவான். அந்த மனிதன் அந்த ஆட்டைத் தன் தோள்களில் சுமந்துக்கொண்டு தன் வீட்டை அடைவான். 6 தன் நண்பர்களையும் அக்கம் பக்கத்தவர்களையும் அழைத்து அவர்களிடம் ‘எனது காணாமல் போன ஆட்டைக் கண்டு பிடித்தேன். என்னோடுகூட சந்தோஷப்படுங்கள்’ என்று கூறுவான். 7 அவ்வாறே, ஒரு பாவி மனந்திருந்தி தனது வாழ்வை மாற்றிக்கொள்ளும்போது பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாகும் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். தங்கள் இதயத்தை மாற்றத் தேவையில்லாத தொண்ணூற்று ஒன்பது நல்ல மனிதருக்காக ஏற்படும் சந்தோஷத்தைக் காட்டிலும் அந்த ஒரு பாவிக்காக ஏற்படும் சந்தோஷம் அதிகமாக இருக்கும்.
8 “ஒரு பெண்ணிடம் பத்து வெள்ளிக் காசுகள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். அவற்றில் ஒன்றை அவள் தொலைத்து விடுகிறாள். அவள் ஒரு விளக்கை எடுத்துக்கொண்டு வீட்டைச் சுத்தம் செய்வாள் அல்லவா? அந்தக் காசு கிடைக்கும் மட்டும் கவனமாகத் தேடுவாள். 9 தொலைந்து போன அந்தக் காசைக் கண்டெடுக்கும்போது அவள் தனது நண்பர்களையும் அக்கம் பக்கத்தாரையும் ஒன்றாக அழைத்து அவர்களை நோக்கி, ‘நான் தொலைத்த காசைக் கண்டெடுத்ததால் நீங்கள் என்னோடு கூட சந்தோஷப்படுங்கள்’ என்பாள். 10 அதைப்போலவே ஒரு பாவி மனந்திருந்தி தன் வாழ்வை மாற்றினால் தேவ தூதருக்கு முன்பாக மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும்” என்றார்.
காணாமற்போன மகன்
11 அப்போது இயேசு, “ஒரு மனிதனுக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தனர். 12 இளைய மகன் தந்தையை நோக்கி, ‘நமக்குச் சொந்தமான எல்லாப் பொருட்களிலும் எனது பங்கை எனக்குத் தாருங்கள்’ என்று கூறினான். எனவே தந்தை செல்வத்தை இரண்டு பிள்ளைகளுக்கும் பங்கிட்டுக் கொடுத்தான்.
13 “சில நாட்களுக்குப் பிறகு இளைய மகன் தனக்குரிய எல்லாப் பொருட்களையும் எடுத்துக்கொண்டு வீட்டை விட்டுப் போனான். வேறொரு தூர தேசத்துக்கு அவன் பிரயாணம் செய்தான். அங்கு அவன் பணத்தை மூடனைப்போல் வீணாகச் செலவழித்தான். 14 அவன் தன்னிடமிருந்த பணம் அனைத்தையும் செலவு செய்தான். அதற்குப் பின்னர், அந்நாட்டில் வறட்சி நிலவியது. மழை பெய்யவில்லை. அந்நாட்டில் எல்லாருக்கும் தேவையான அளவுக்கு உணவு கிடைக்கவில்லை. அந்த மகன் பசியாலும், பணமின்மையாலும் துன்பப்பட்டான். 15 எனவே அந்த நாட்டில் வாழ்ந்த ஒருவனிடம் அவன் வேலைக்கு அமர்ந்தான். பன்றிகளுக்குத் தீவனமிடுமாறு அந்த மகனை அம்மனிதன் அனுப்பினான். 16 அந்த மகன் பசிமிகுதியால் பன்றிகள் சாப்பிட்டுக்கொண்டிருந்த உணவையாகிலும் உண்ண வேண்டுமென விரும்பினான். ஆனால் அவனுக்கு ஒருவரும் எந்த உணவையும் கொடுக்கவில்லை.
17 “இளைஞன் தன் மூடத்தனத்தை உணர்ந்தான். அவன், ‘என் தந்தையின் எல்லா வேலைக்காரர்களுக்கும் மிகுதியான உணவு கிடைக்கும். நானோ உணவின்றி இங்கு இறக்கும் நிலையில் இருக்கிறேன். 18 நான் இங்கிருந்து என் தந்தையிடம் போய்: தந்தையே, நான் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்தேன். உங்களிடமும் தவறு செய்தேன். 19 உங்கள் மகன் என்று அழைக்கப்படும் அளவுக்கு நான் தகுதியுள்ளவன் அல்லன். நான் உங்கள் வேலைக்காரர்களில் ஒருவனாக வாழ அனுமதியுங்கள் என்று சொல்லுவேன்’ என்று எண்ணினான். 20 எனவே அந்த மகன் அங்கிருந்து தன் தந்தையிடம் சென்றான்.
மகன் திரும்பிவருதல்
“அந்த மகன் தொலைவில் வரும்போதே அவனது தந்தை பார்த்துவிட்டார். அந்த மகனின் நிலையைக் கண்டு தந்தை வருந்தினார். எனவே தந்தை மகனிடம் ஓடினார். மகனை அரவணைத்து முத்தமிட்டார். 21 மகன், ‘தந்தையே, நான் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்தேன். உங்களுக்கும் தவறு இழைத்தேன். உங்கள் மகன் என்று அழைக்கப்படுவதற்கேற்ற தகுதி எனக்குக் கிடையாது’ என்றான்.
22 “ஆனால் தந்தை வேலைக்காரரை நோக்கி, ‘விரைந்து செல்லுங்கள். விலையுயர்ந்த ஆடைகளைக் கொண்டுவந்து அவனுக்கு உடுத்துங்கள். அவன் விரலுக்கு மோதிரம் அணிவித்துக் காலுக்கு நல்ல பாதரட்சைகளை அணியச் செய்யுங்கள். 23 நம் கொழுத்த கன்றை கொண்டுவாருங்கள். அதைச் சமைத்து திருப்தியாகச் சாப்பிடுவோம். ஒரு விருந்து வைப்போம். 24 என்னுடைய இந்த மகன் இறந்து போயிருந்தான். மீண்டும் உயிரோடு வந்துள்ளான். அவன் காணாமல் போயிருந்தான், இப்போது மீண்டும் கண்டு பிடிக்கப்பட்டான்’ என்று கூறினார். எனவே விருந்து ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார்கள்.
மூத்த மகன் வருதல்
25 “மூத்த மகன் வயலில் இருந்தான். அவன் வீட்டுக்கு அருகாமையில் திரும்பி வந்து கொண்டிருந்தான். இசை, ஆடல் ஆகியவற்றின் சத்தத்தைக் கேட்டான். 26 எனவே மூத்த மகன் வேலைக்காரச் சிறுவர்களில் ஒருவனை அழைத்து, ‘இவையெல்லாம் எதற்காக நடைபெறுகின்றன?’ என்று கேட்டான். 27 வேலைக்காரன், ‘உங்கள் சகோதரன் திரும்பி வந்துள்ளார். உங்கள் தந்தை கொழுத்த கன்றை உண்பதற்காகக் கொன்றுள்ளார். உங்கள் சகோதரன் பாதுகாப்பாகவும் நல்ல முறையிலும் மீண்டும் வீட்டுக்குத் திரும்பி இருப்பதால் உங்கள் தந்தை மகிழ்ச்சியாக இருக்கிறார்’ என்றான்.
28 “மூத்த மகன் கோபமுற்று விருந்துக்குச் செல்லவில்லை. எனவே தந்தை வெளியே வந்து அவனிடம் வற்புறுத்தினார். உள்ளே வருமாறு அழைத்தார். 29 மகன் தந்தையை நோக்கி, ‘நான் உங்களுக்கு ஓர் அடிமையைப் போல் பல ஆண்டுகள் உழைத்தேன்! உங்கள் கட்டளைக்கு எப்போதும் கீழ்ப்படிந்து நடந்தேன். ஆனால் ஒரு வெள்ளாட்டையாகிலும் நீங்கள் எனக்காகக் கொன்றதில்லை. எனக்கும் என் நண்பர்களுக்கும் நீங்கள் விருந்தளித்ததில்லை. 30 ஆனால் உங்கள் இன்னொரு மகன் பணத்தை எல்லாம் வேசிகளிடம் செலவழித்தான். பின்னர் வீடு திரும்பியதும் அவனுக்காகக் கொழுத்த கன்றுக் குட்டியை கொன்றீர்கள்’ என்றான்.
31 “ஆனால் தந்தை அவனை நோக்கி, ‘மகனே! நீ எப்போதும் என்னோடு இருக்கிறாய். எனக்குரியவை அனைத்தும் உனக்கு உரியவை. 32 நாம் சந்தோஷமாக விருந்துண்ண வேண்டும். ஏனெனில் உன் சகோதரன் இறந்து போயிருந்தான், இப்போது உயிரோடு வந்துள்ளான். காணாமல் போயிருந்தான், ஆனால் இப்போது கண்டுபிடிக்கப்பட்டான்’ என்றார்” என்று கூறினார்.
30 “ஆனால் இப்போது, என்னைக் காட்டிலும்
இளைஞர்கள் கூட என்னைக் கேலிச்செய்கிறார்கள்.
அவர்களின் தந்தைகளை நான் என் மந்தையைக் காக்கும் நாய்களோடே வைக்கவும் வெட்கப் பட்டிருப்பேன்.
2 அந்த இளைஞர்களின் தந்தைகள் எனக்கு உதவ முடியாதபடிச் சோர்ந்திருக்கிறார்கள்.
அவர்கள் வயது முதிர்ந்தவர்கள், அவர்களின் களைத்துப்போன தசைநார்கள் வலிமையும் ஆற்றலுமற்றுக் காணப்படுகின்றன.
3 அவர்கள் மரித்தவர்களைப் போலிருக்கிறார்கள், அவர்கள் உண்பதற்கு எதுவுமில்லாமல் பட்டினியாயிருக்கிறார்கள்.
எனவே அவர்கள் பாலைவனத்தின் உலர்ந்த அழுக்கை உண்கிறார்கள்.
4 அவர்கள் பாலைவனத்திலுள்ள உப்புத் தாவரங்களைப் பறித்தெடுக்கிறார்கள்.
மரத்தின் வேர்களை அவர்கள் தின்றார்கள்.
5 அவர்கள் பிற ஜனங்களிடமிருந்து துரத்தப்பட்டார்கள்.
அவர்கள் கள்ளர் என ஜனங்கள் அவர்களை உரத்தக் குரலில் சத்தமிட்டார்கள்.
6 அவர்கள் உலர்ந்த ஆற்றுப் படுகைகளிலும்,
மலைப்பக்கத்துக் குகைளிலும் நிலத்தின் துவாரங்களிலும் வாழவேண்டும்.
7 அவர்கள் புதர்களில் ஊளையிடுகிறார்கள்.
முட்புதர்களின் கீழே அவர்கள் ஒதுங்கியிருக்கிறார்கள்.
8 தங்கள் நாட்டைவிட்டு விரட்டியடிக்கப்பட்ட, பெயரற்ற,
தகுதியில்லாத ஒரு கூட்டம் ஜனங்கள் அவர்கள்!
9 “இப்போது அந்த மனிதர்களின் மகன்கள் என்னைக் கேலிச் செய்யும் பாடல்களை பாடுகிறார்கள்.
என் பெயர் அவர்களுக்கு ஒரு கெட்ட வார்த்தை ஆயிற்று.
10 அந்த இளைஞர்கள் என்னை வெறுக்கிறார்கள், அவர்கள் என்னிலிருந்து தூரத்தில் போய் நிற்கிறார்கள்.
அவர்கள் என்னைக் காட்டிலும் சிறந்தவர்கள் என நினைக்கிறார்கள்.
அவர்கள் என் முகத்தில் உமிழவும் செய்கிறார்கள்!
11 தேவன் என் வில்லின் நாணை அறுத்துப் போட்டு என்னைத் தளர்ச்சியடையச் செய்தார்.
அந்த இளைஞர்கள் நிறுத்தாது, எனக்கெதிராகத் தங்கள் கோபத்தையெல்லாம் காட்டினார்கள்.
12 அவர்கள் என் வலது பக்கத்தில் தாக்குகிறார்கள்.
அவர்கள் என் பாதங்களை அகல தள்ளிவிட்டார்கள்.
நான் தாக்கப்படும் நகரத்தைப்போல் இருக்கிறேன்.
என்னைத் தாக்கி அழிப்பதற்கு அவர்கள் என் சுவர்களுக்கெதிராக அழுக்குகளைக் கட்டுகிறார்கள்.
13 அவர்கள் என் பாதையை கெடுத்தார்கள்.
அவர்கள் என்னை அழிப்பதில் வெற்றியடைகிறார்கள்.
அவர்களுக்கு உதவுவதற்கு யாரும் தேவையில்லை.
14 அவர்கள் சுவரில் துளையிடுகிறார்கள்.
அவர்கள் அதன் வழியாக விரைந்து வருகிறார்கள்.
உடையும் கற்கள் என்மீது விழுகின்றன.
15 நான் பயத்தால் நடுங்குகிறேன்.
காற்று பொருள்களைப் பறக்கடிப்பதைப்போல அந்த இளைஞர்கள் என் மகிமையைத் துரத்திவிடுகிறார்கள்.
என் பாதுகாப்பு ஒரு மேகத்தைப்போன்று மறைகிறது.
16 “இப்போது என் உயிர் நீங்கும் நிலையில் உள்ளது.
நான் விரைவில் மடிவேன்.
துன்பத்தின் நாட்கள் என்னைப் பற்றிக்கொண்டன.
17 என் எலும்புகள் எல்லாம் இரவில் வலிக்கின்றன.
என்னைக் கடித்துக்குதறும் வேதனை நிற்கவேயில்லை.
18 தேவன் என் மேற்சட்டையின் கழுத்துப் பட்டையைப் பற்றியிழுத்து
என் ஆடைகளை உருவின்றி சிதைத்தார்.
19 தேவன் என்னைச் சேற்றினுள் தள்ளினார்.
நான் அழுக்கைப் போன்றும் சாம்பலைப் போன்றும் ஆனேன்.
20 “தேவனே, உம்மிடம் உதவிக்காக வேண்டுகிறேன், ஆனால் நீர் பதிலளிப்பதில்லை.
நான் எழுந்து நின்று ஜெபம் செய்கிறேன், ஆனால் நீர் என்னிடம் பாராமுகமாயிருக்கிறீர்.
21 தேவனே, நீர் என்னிடம் கொடுமையாக நடந்தீர்.
என்னைத் தாக்குவதற்கு நீர் உமது வல்லமையைப் பயன்படுத்தினீர்.
22 தேவனே, பலத்த காற்று என்னைப் பறக்கடிக்குமாறு செய்தீர்.
புயலில் நீர் என்னை வெளியே வீசினீர்.
23 நீர் என்னை மரணத்திற்கு வழி நடத்துவீர் என அறிவேன்.
ஒவ்வொரு மனிதனும் மடிய (மரிக்க) வேண்டும்.
24 “ஆனால், ஏற்கெனவே அழிந்தவனை
மீண்டும் நிச்சயமாய் ஒருவனும் தாக்கமாட்டான்.
25 தேவனே, தொல்லைகளுள்ள ஜனங்களுக்காக நான் அழுதேன் என்பதை நீர் அறிவீர்.
ஏழைகளுக்காக என் இருதயம் துயருற்றது என்பதை நீர் அறிவீர்.
26 நான் நல்லவற்றை எதிர்பார்த்தபோது, தீயவை நேர்ந்தன.
நான் ஒளியைத் தேடியபோது, இருள் வந்தது.
27 நான் உள்ளே கிழிந்துபோனேன், என் துன்பம் நிற்கவில்லை.
இன்னும் வரப்போகும் துன்பங்கள் மிகுதி.
28 நான் எப்போதும் துக்கமாயிருக்கிறேன், அதனால் நான் எந்த ஆறுதலும் பெறவில்லை.
நான் சபையில் எழுந்து நின்று, உதவிக்காகக் கூக்குரலிட்டேன்.
29 நான் காட்டு நாய்களைப்போலவும்
நெருப்புக் கோழிகளைபோலவும் தனித்தவனானேன்.
30 என் தோல் நெருப்பினால் எரிந்து உரிந்து கழன்றுபோகிறது.
என் உடல் காய்ச்சலால் சுடுகிறது.
31 துக்கமான பாடல்களைப் பாட என் தம்புரு மீட்டப்பட்டுள்ளது.
துக்கமான அழுகையைப் போன்று என் புல்லாங்குழலின் குரல் ஒலிக்கிறது.
பிற விசுவாசிகளின் காணிக்கை
16 தேவனுடைய மக்களுக்காகப் பணத்தை வசூலிப்பதுப்பற்றி இப்போது உங்களுக்கு எழுதுவேன். கலாத்திய சபைகளுக்கு நான் கூறியுள்ளபடியே நீங்களும் செய்யுங்கள். 2 ஒவ்வொரு வாரத்தின் முதல் நாளிலும் உங்களில் ஒவ்வொருவனும் தங்கள் வரவுக்கேற்ப எவ்வளவு பணத்தைச் சேமிக்க முடியுமோ அத்தனையையும் சேமித்து வையுங்கள். நீங்கள் இந்தப் பணத்தை ஒரு விசேஷமான இடத்தில் பாதுகாப்பாக வையுங்கள். அவ்வாறாயின் நான் வந்த பின் நீங்கள் பணத்தைத் திரட்டும் சிரமம் உங்களுக்கு இருக்காது. 3 நான் வரும்போது உங்கள் வெகுமதியை எருசலேமிற்கு எடுத்துச் செல்வதற்காகச் சில மனிதர்களை அனுப்புவேன். நீங்கள் அனுப்புவதற்கு இசைந்த மனிதர்களையே உங்களிடம் அனுப்புவேன். அறிமுகக் கடிதம் கொடுத்து அவர்களை அனுப்புவேன். 4 நானும் அவர்களோடு போவது நல்லது எனத் தோன்றினால், அந்த மனிதரை என்னோடு அழைத்துச் செல்வேன்.
பவுலின் திட்டங்கள்
5 நான் மக்கதோனியாவின் வழியாகப் போகத் திட்டமிட்டுள்ளேன். நான் மக்கதோனியா வழியாகப் போனபின் உங்களிடம் வருவேன். 6 நான் உங்களிடம் சில காலம் இருக்கக் கூடும். பனிக் காலம் முழுவதும் நான் தங்கக்கூடும். பிறகு நான் எங்கெங்கு சென்றாலும் என் பயணத்திற்கு நீங்கள் உதவமுடியும். 7 நான் இந்தச் சமயத்தில் மட்டும் போகிற வழியில் உங்களைப் பார்க்க விரும்பவில்லை. கர்த்தர் விரும்பினால் உங்களோடு நீண்ட காலம் தங்க விரும்புகிறேன். 8 பெந்தெகோஸ்து வரைக்கும் எபேசுவில் தங்கி இருப்பேன். 9 பெரிய வளர்ச்சியுறும் பணி எனக்கு இப்போது தரப்பட்டுள்ளதால் அந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்தும்படிக்கு இங்கு தங்குவேன். அதற்கு எதிராக வேலை செய்வோர் பலர் உள்ளனர்.
10 தீமோத்தேயு உங்களிடம் வரக்கூடும். அவன் உங்களோடு பயமில்லாமல் இருக்க உதவுங்கள். என்னைப்போலவே அவனும் கர்த்தருக்காகப் பணியாற்றுகிறான். 11 எனவே உங்களில் ஒருவரும் தீமோத்தேயுவை ஏற்றுக்கொள்ள மறுக்கக் கூடாது. என்னிடம் அவன் வரமுடியும் வகையில் அவனது பயணம் அமைதி நிரம்பியதாக இருப்பதற்கு உதவுங்கள். சகோதரர்களுடன் சேர்ந்து அவன் என்னிடம் வருவதை எதிர்ப்பார்க்கிறேன்.
12 இப்போது நமது சகோதரன் அப்பொல்லோவைக் குறித்து எழுதுகிறேன். பிற சகோதரர்களுடன் சேர்ந்து அவன் உங்களைச் சந்திக்க வேண்டுமென மிகவும் ஊக்கமூட்டினேன். அவன் இப்போது உங்களிடம் வருவதில்லை என உறுதியாகக் கூறினான். அவனுக்கு வாய்ப்புக் கிடைக்கும்போது அவன் உங்களிடம் வருவான்.
பவுல் கடிதத்தை முடிக்கிறார்
13 கவனமாக இருங்கள். விசுவாசத்தில் வலிவுறுங்கள். தைரியம் கொள்ளுங்கள். வன்மையுடன் இருங்கள். 14 அன்பினால் ஒவ்வொன்றையும் செய்யுங்கள்.
15 அகாயாவில் ஸ்தேவானும் அவனது குடும்பத்தாரும், முதன் முதலில் விசுவாசம் கொண்டவர்கள் என்பதை அறிவீர்கள். அவர்கள் தங்களை தேவனுடைய மக்களுக்குச் செய்யும் சேவைக்காக ஒப்புவித்துள்ளார்கள். சகோதர சகோதரிகளே! 16 இத்தகையோரின் தலைமையை ஒத்துக்கொள்ளும்படியும் அவர்களோடு சேவை செய்கிற ஒவ்வொருவரையும் ஒப்புக்கொள்ளும்படியும் நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
17 ஸ்தேவான், பொர்த்துனாத்து, அகாயுக்கு ஆகியோர் வந்ததை அறிந்து சந்தோஷப்பட்டேன். நீங்கள் இங்கு இல்லை. ஆனால் அவர்கள் உங்கள் இடத்தை நிரப்பியுள்ளார்கள். 18 எனது ஆவிக்கும் உங்கள் ஆவிக்கும் அவர்கள் ஓய்வளித்துள்ளார்கள். இத்தகைய மனிதரின் மதிப்பை நீங்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.
19 ஆசியாவின் சபையினர் உங்களை வாழ்த்துகிறார்கள். ஆக்கில்லாவும், பிரிஸ்கில்லாளும் கர்த்தருக்குள் உங்களை வாழ்த்துகிறார்கள். அவர்களின் வீட்டில் சந்திக்கிற சபையும் உங்களை வாழ்த்துகிறது. 20 இங்குள்ள எல்லா சகோதர சகோதரிகளும் உங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார்கள். நீங்கள் சந்திக்கையில் பரிசுத்த முத்தத்தின் மூலம் ஒருவரையொருவர் வாழ்த்திக்கொள்ளுங்கள்.
21 பவுல் ஆகிய நான் இந்த வாழ்த்துதலை என் சொந்தக் கையினால் எழுதுகிறேன்.
22 கர்த்தரை நேசிக்காத எவனொருவனும் தேவனிடமிருந்து எந்நாளும் பிரிந்தவனாக முற்றிலும் அழிந்துபோனவனாக இருப்பானாக.
கர்த்தரே, வாரும்.
23 கர்த்தராகிய இயேசுவின் கிருபை உங்களோடு இருப்பதாக!
24 கிறிஸ்து இயேசுவில் என் அன்பு உங்கள் அனைவரோடும்கூட இருப்பதாக!
2008 by World Bible Translation Center