M’Cheyne Bible Reading Plan
யாக்கோபு தனது தைரியத்தைக் காட்டுதல்
33 யாக்கோபு, ஏசா வருவதைப் பார்த்தான். அவனோடு 400 ஆட்கள் வந்தனர். யாக்கோபு தனது குடும்பத்தை நான்கு குழுக்களாகப் பிரித்தான். லேயாளும் அவள் குழந்தைகளும் ஒரு குழு. ராகேலும் யோசேப்பும் இன்னொரு குழு. இரண்டு வேலைக்காரிகளும் அவர்களின் பிள்ளைகளும் தனித்தனியாக இரண்டு குழுக்கள். 2 யாக்கோபு முதலில் வேலைக்காரிகளையும் பிள்ளைகளையும் நிற்க வைத்தான். பின் லேயாளும் அவள் பிள்ளைகளும். கடைசியில் ராகேல் மற்றும் யோசேப்பு இருவரையும் நிற்க வைத்தான்.
3 யாக்கோபு ஏசாவிடம் முதலில் போனான். அவன் போகும்போதே ஏழுமுறை தரையில் குனிந்து வணங்கினான்.
4 அப்போது ஏசா எதிர்கொண்டு ஓடிவந்து அவனைத் தழுவிக்கொண்டான். ஏசா யாக்கோபை கைகளால் கழுத்தில் அணைத்துக்கொண்டு முத்தமிட்டான். பின் இருவரும் அழுதனர். 5 ஏசா ஏறிட்டுப் பார்த்து பெண்களையும் குழந்தைகளையும் கவனித்தான். “இவர்கள் அனைவரும் யார்?” எனக் கேட்டான்.
யாக்கோபு, “இவர்கள் தேவன் கொடுத்த என் பிள்ளைகள். தேவன் எனக்கு நன்மை செய்திருக்கிறார்” என்றான்.
6 பிறகு இரு வேலைக்காரிகளும் குழந்தைகளும் ஏசாவின் அருகில் சென்று அவன் முன் கீழே குனிந்து வணங்கினார்கள். 7 பிறகு லேயாளும் அவளது பிள்ளைகளும் போய் பணிந்து வணங்கினார்கள். பின்னர் ராகேலும், யோசேப்பும் ஏசாவின் அருகில் சென்று பணிந்து வணங்கினார்கள்.
8 ஏசா அவனிடம், “நான் வரும்போது பார்க்க நேர்ந்த இந்த மனிதர்கள் எல்லாம் யார்? இந்த மிருகங்கள் எல்லாம் எதற்காக?” என்று கேட்டான்.
யாக்கோபு, “என்னை நீர் ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக இப்பரிசுப் பொருட்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றான்.
9 ஆனால் ஏசாவோ, “எனக்கு நீ பரிசுப் பொருட்கள் கொடுக்க வேண்டிய தேவையில்லை. என்னிடம் போதுமான அளவு இருக்கிறது” என்றான்.
10 அதற்கு யாக்கோபு, “இல்லை. நான் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன், என்னை நீர் உண்மையில் ஏற்றுக்கொள்வதானால் இப்பொருட்களையும் ஏற்றுக்கொள்ளும். உமது முகத்தை மீண்டும் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இது தேவனின் முகத்தைப் பார்ப்பதுபோல் இருக்கிறது. என்னை நீர் ஏற்றுக்கொண்டதைப் பார்த்து மிகவும் சந்தோஷப்படுகிறேன். 11 ஆகையால் நான் கொடுக்கும் பரிசுப் பொருட்களையும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறேன். தேவன் எனக்கு நிறைய நன்மைகள் செய்திருக்கிறார். தேவைக்குமேல் என்னிடம் உள்ளது” என்றான். இவ்வாறு யாக்கோபு கெஞ்சியதால் ஏசா பரிசுப் பொருட்களை ஏற்றுக்கொண்டான்.
12 ஏசா, “இப்போது உனது பயணத்தைத் தொடரலாம். நான் உனக்கு முன் வருவேன்” என்றான்.
13 ஆனால் யாக்கோபோ, “எனது குழந்தைகள் பலவீனமாய் இருக்கிறார்கள் என்பது உமக்குத் தெரியும். எனது மந்தைகளைப்பற்றியும், அவற்றின் இளம் கன்றுகளைப்பற்றியும் நான் கவனமாக இருக்க வேண்டும். நான் அவற்றை ஒரு நாளில் அதிக தூரம் நடக்க வைத்தால் எல்லா விலங்குகளும் மரித்துப்போகும். 14 எனவே நீங்கள் போய்க்கொண்டே இருங்கள், நான் மெதுவாகப் பின் தொடர்ந்து வருகிறேன். ஆடுமாடுகளும் மற்ற மிருகங்களும் பாதுகாப்பாக இருக்கும் வகையில் நான் மெதுவாக வருகிறேன். என் குழந்தைகள் மிகவும் சோர்ந்து போகாதபடி மெதுவாக வருகிறேன். நான் உங்களை சேயீரில் சந்திப்பேன்” என்றான்.
15 எனவே ஏசா, “பிறகு நான் எனது சில மனிதர்களை உனக்கு உதவியாக விட்டுவிட்டுப் போகிறேன்” என்றான்.
ஆனால் யாக்கோபு, “உம் அன்புக்காக நன்றி, ஆனால் அது தேவையில்லை” என்றான். 16 எனவே அன்று ஏசா சேயீருக்குப் பயணம் புறப்பட்டான். 17 ஆனால் யாக்கோபோ சுக்கோத்திற்குப் பயணம் செய்தான். அங்கே அவன் தனக்கென்று வீடு கட்டிக்கொண்டதுடன், மிருகங்களுக்கும் தொழுவம் அமைத்துக்கொண்டான். எனவே அந்த இடம் சுக்கோத் என்று பெயர் பெற்றது.
18 யாக்கோபு தனது பயணத்தைச் சுகமாக பதான் அராமிலிருந்து கானான் நாட்டிலிலுள்ள சீகேம் பட்டணத்திற்கு அருகில் முடித்துவிட்டான். நகரத்திற்கு அருகிலுள்ள வயலில் தன் கூடாரத்தைப் போட்டான். 19 யாக்கோபு அந்த வயலைச் சீகேமின் தந்தையான ஏமோரிடமிருந்து விலைக்கு வாங்கினான். அவன் அதற்கு 100 வெள்ளிக் காசுகள் கொடுத்தான். 20 யாக்கோபு தேவனைத் தொழுதுகொள்ள அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டினான். யாக்கோபு அந்த இடத்திற்கு “ஏல் எல்லோகே இஸ்ரவேல்” என்று பெயரிட்டான்.
உழவன்-விதை பற்றிய உவமை(A)
4 இயேசு மறுபடியும் கடற்கரையோரத்தில் போதிக்கத் தொடங்கினார். ஏராளமான மக்கள் இயேசுவைச் சூழ்ந்துகொண்டார்கள். ஆகையால் இயேசு படகில் ஏறி ஏரிக்குள் சென்றார். எல்லா மக்களும் ஏரிக்கரையில் நின்றுகொண்டனர். 2 இயேசு படகில் இருந்த வண்ணம் மக்களுக்குப் போதிக்கத் தொடங்கினார். அவர் மக்களுக்குப் போதிக்கும் பொருட்டு பல உவமைகளைப் பயன்படுத்தினார்.
3 அவர் சொன்னார், “கேளுங்கள், ஓர் உழவன் தன் விதையை விதைக்கச் சென்றான். 4 உழவன் விதைத்துக் கொண்டு இருக்கும்போது சில விதைகள் பாதையில் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றைத் தின்றுவிட்டுச் சென்றன. 5 சில விதைகள் பாறை போன்ற நிலத்தில் விழுந்தன. அதில் போதிய ஆழமான மண்ணில்லை. அதனால் அந்த விதைகள் வேகமாக முளைத்தன. 6 ஆனால் சூரியன் ஏற வெப்பத்தால் அவை கருகிவிட்டன. அவற்றுக்கு ஆழமான வேர் இல்லாததால் பிழைக்கவில்லை. 7 சில விதைகள் முட்புதர்களில் விழுந்தன. முட்புதர்கள் வளர்ந்து, விதைகள் முளைத்து வளராதபடி முடக்கிவிட்டன. எனவே, விதைகள் தானியங்களைத் தரவில்லை. 8 சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. விதைகள் அவற்றில் நன்றாக வளர ஆரம்பித்தன. அவை வளர்ந்து பலன் தர ஆரம்பித்தது. சில செடிகள் முப்பது தானியங்களையும், சில அறுபது தானியங்களையும், சில நூறு தானியங்களையும் தந்தன,”
9 பிறகு இயேசு, “நான் சொல்வதைக் கேட்கத்தக்கவர்கள் கவனிக்கட்டும்” என்றார்.
உவமைகள் ஏன்-விளக்கம்(B)
10 பிறகு இயேசு மக்களைவிட்டுத் தொலைவாகச் சென்றார். பன்னிரண்டு சீஷர்களும் மற்றும் அவரைச் சுற்றி இருந்தவர்களும் அவர் பயன்படுத்தும் உவமைகளைப் பற்றிக் கேட்டார்கள்.
11 இயேசு, “உங்களால் மட்டுமே தேவனின் இராஜ்யத்தைப் பற்றிய இரகசிய உண்மைகளை அறிந்து கொள்ளமுடியும். ஆனால் மற்ற மக்களால் அறிந்துகொள்ள இயலாது. எனவே நான் அவர்களுக்கு உவமைகளின் மூலம் கூறுகிறேன். 12 நான் இதனைச் செய்கிறேன். ஏனென்றால்:
“‘அவர்கள் பார்ப்பார்கள், பார்ப்பார்கள். ஆனால் உண்மையில் ஒருபோதும் பார்க்க முடியாது.
அவர்கள் கேட்பார்கள், கேட்பார்கள். ஆனால் ஒருபோதும் புரிந்துகொள்ளமாட்டார்கள்.
அவர்கள் பார்த்துப் புரிந்துகொண்டிருப்பார்களேயானால் அவர்கள் மாறி இருக்கக்கூடும்,
மன்னிக்கப்பட்டிருக்கவும்கூடும்’” (C)
என்றார்.
விதைபற்றிய உவமை-விளக்கம்(D)
13 இயேசு தன் சீஷர்களிடம், “உங்களால் இந்த உவமையைப் புரிந்துகொள்ள முடிகிறதா? முடியாவிடில் மற்ற உவமைகளை நீங்கள் எப்படி புரிந்துகொள்ளப் போகிறீர்கள்? 14 இதில் உழவன் என்பவன் தேவனுடைய போதனைகளை மக்களிடம் நடுபவனே. 15 சில நேரங்களில் அப்போதனை வழிப்பாதையில் விழும். சிலர் தேவனின் போதனைகளைக் கேட்பார்கள். ஆனால் சாத்தான் வந்து அப்போதனை வளராதபடி எடுத்துச் சென்றுவிடுவான்.
16 “பாறைகளில் விழுந்த விதைகளைப்போலச் சிலர் காதில் போதனை விழுகின்றன. அவர்கள் அவற்றை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வர். 17 ஆனால் அவர்கள் அப்போதனைகள் அவர்களது வாழ்வில் ஆழமாகச் செல்ல அனுமதிக்கமாட்டார்கள். அவர்கள் அவற்றைக் கொஞ்ச காலமே வைத்திருப்பர். ஆனால் அந்தப் போதனையை ஏற்றதால் கஷ்டமோ, பிறர் மூலம் துன்பமோ வரும்போது அவர்கள் அவற்றை உடனே கைவிட்டு விடுவர்.
18 “இன்னும் சிலரோ, முட்செடிகளில் விழுந்த விதைகளைப்போன்று போதனையைக் கேட்டுக்கொள்கின்றனர். 19 வாழ்க்கைத் துன்பங்களும், பண ஆசைகளும் பிற எல்லாவிதமான காரியங்களின் மீதுள்ள விருப்பங்களும் இவர்களிடம் போதனைகள் வளராமல் செய்துவிடுகின்றன. எனவே இவர்கள் வாழ்க்கையில் போதனை எந்தவிதமான பலனையும் உண்டாக்குவதில்லை.
20 “மற்றவர்கள் நல்ல நிலத்தில் விழுந்த விதைகளைப் போன்று இருக்கின்றனர். அவர்கள் போதனையைக் கேட்டு, ஏற்றுக்கொள்கின்றனர். அவர்கள் முப்பது மடங்காகவும், சிலர் அறுபது மடங்காகவும், சிலர் நூறு மடங்காகவும் பலன் தருகின்றனர்” என்றார்.
இருப்பதைப் பயன்படுத்துதல்(E)
21 மேலும் இயேசு, “நீங்கள் விளக்கை எடுத்து மரக்காலுக்கு (பாத்திரத்துக்கு) அடியிலோ, படுக்கையின் அடியிலோ மறைத்து வைப்பீர்களா? இல்லை. நீங்கள் விளக்கை மேஜையின் மீதே வைப்பீர்கள். 22 மறைக்கப்படுகிற எந்தக் காரியமும் வெளியே வரும். எல்லா இரகசியங்களும் தெரிவிக்கப்படும். 23 கேட்க முடிந்தவர்கள், நான் சொல்வதைக் கவனித்துக் கேளுங்கள். 24 நீங்கள் கேட்கிறவற்றைப் பற்றிக் கவனமாய் சிந்தியுங்கள். நீங்கள் எப்படிக் கொடுக்கிறீர்களோ அந்தப்படியே தேவன் உங்களுக்குக் கொடுப்பார். ஆனால் நீங்கள் கொடுப்பதைக் காட்டிலும் அதிகமாக தேவன் உங்களுக்குக் கொடுப்பார். 25 ஏற்கெனவே உள்ளவன் மேலும் பெற்றுக்கொள்வான். எவனிடம் மிகுதியாக இல்லையோ அவனிடமிருந்து இருக்கும் சிறு அளவும் எடுத்துக்கொள்ளப்படும்.”
விதை பற்றிய உவமை
26 பிறகு இயேசு, “தேவனுடைய இராஜ்யமானது ஒரு மனிதன் நிலத்தில் விதைக்கும் ஒரு விதையைப் போன்றது. 27 விதையானது வளரத்தொடங்கும். அது இரவும் பகலும் வளரும். அந்த மனிதன் விழித்திருக்கிறானா அல்லது தூங்குகிறானா என்பது முக்கியமல்ல. விதை வளர்ந்து கொண்டே இருக்கும். விதை எவ்வாறு வளர்கிறது என்பதும், அந்த மனிதனுக்குத் தெரியாது. 28 எவ்வித உதவியும் இல்லாமல் அந்த நிலம் விதையை வளர்க்கிறது. முதலில் விதையில் இருந்து செடி முளைக்கிறது. பிறகு கதிர், அதன் பிறகு கதிர் முழுதும் தானியங்கள். 29 தானியம் விளைந்ததும் மனிதன் அவற்றை அறுவடை செய்கிறான். இது அறுவடைக் காலம்” என்றார்.
கடுகு விதையின் உவமை(F)
30 மேலும் இயேசு, “தேவனுடைய இராஜ்யம் எத்தகையது என்று உங்களுக்குப் புரிய வைக்க நான் எந்த உவமையைப் பயன்படுத்துவேன்? 31 தேவனுடைய இராஜ்யம் ஒரு கடுகு விதையைப் போன்றது. கடுகு மிகச் சிறிய விதைதான். அதை நிலத்தில் விதைக்கிறீர்கள். 32 ஆனால் இதை நீங்கள் விதைத்த பிறகு அது வளர்ந்து, உங்கள் தோட்டத்தில் உள்ள அனைத்துச் செடிகளையும் விட பெரியதாகும். அதன் கிளைகள் மிகப் பெரிதாக விரியும். காட்டுப் பறவைகள் அதன் கிளைகளில் கூடுகட்டித் தங்கமுடியும். அத்தோடு அவைகளை வெயிலில் இருந்தும் பாதுகாக்கும்” என்றார்.
33 மக்களுக்குப் போதிக்கும் பொருட்டு இது போன்ற பல உவமைகளையும் இயேசு பயன்படுத்தினார். அவர்களுக்குப் புரிகிற வகையில் அவர் கற்றுத்தந்தார். 34 இயேசு எப்பொழுதும் உவமைகளை உபயோகித்து மக்களுக்குப் போதித்தார். தன் சீஷர்களோடு தனியாக இருக்கும்போது, எல்லாவற்றையும் அவர்களுக்கு விவரித்துச் சொன்னார்.
புயலை அமர்த்துதல்(G)
35 அன்று மாலையில் இயேசு தன் சீஷர்களிடம், “என்னோடு வாருங்கள். இக்கடலைக் கடந்து அக்கரைக்குச் செல்வோம்” என்றார். 36 இயேசுவும் அவரது சீஷர்களும் அங்கே மக்களை விட்டுவிட்டுச் சென்றனர். இயேசு ஏற்கெனவே இருந்த படகிலேயே அவர்கள் ஏறிச் சென்றனர். அவர்களோடு வேறு பல படகுகளும் இருந்தன. 37 மோசமான காற்று வீச ஆரம்பித்தது. அதனால் பெரும் அலைகள் எழும்பி, படகின் வெளியேயும், உள்ளேயும், தாக்க ஆரம்பித்தன. படகில் நீர் நிறையத் தொடங்கியது. 38 இயேசு கப்பலின் பின்பகுதியில் தலையணையில் தலை வைத்துப் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார். சீஷர்கள் அவரிடம் போய் அவரை எழுப்பினார்கள். அவர்கள், “போதகரே, உங்களுக்கு எங்களைப் பற்றிய அக்கறை இல்லையா? நாங்கள் மூழ்கும் நிலையில் உள்ளோம்” என்றனர்.
39 இயேசு எழுந்து புயலுக்கும், அலைகளுக்கும் ஆணையிட்டார். “இரையாதே, அமைதியாய் இரு” என்று இயேசு ஆணையிட்டார். உடனே புயல் நின்றது. கடலும் அமைதியானது.
40 இயேசு தம் சீஷர்களிடம், “நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் விசுவாசம் இல்லையா?” என்று கேட்டார்.
41 சீஷர்கள் பெரிதும் அஞ்சினர். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து, “இவர் எத்தகைய மனிதர்? காற்றும் கடலும் கூட இவருக்குக் கீழ்ப்படிகிறதே” என்றனர்.
யூதர்களுக்கு வெற்றி
9 ஆதார் என்னும் 12ஆம் மாதத்தின் 13வது நாள், ஜனங்கள் அரசனது கட்டளைக்குக் கட்டுப்பட வேண்டும். அன்றுதான் யூதர்களின் பகைவர்கள் அவர்களைத் தோற்கடிக்க நம்பியிருந்த நாள். இப்பொழுது அந்த நிலைமாறி யூதர்கள் தம்மை வெறுத்த பகைவர்களைவிட பலமுள்ளவர்களானார்கள். 2 யூதர்கள் அகாஸ்வேரு அரசனின் நாடுகளில் எல்லாம் ஒன்று கூடினர். நம்மை அழிக்க நினைத்தவர்களைத் தாக்க போதுமான பலமுடையவர்களாயினர். எனவே, அவர்களுக்கு எதிராக நிற்க எவருக்கும் பலமில்லை. அந்த ஜனங்கள் யூதர்களுக்குப் பயந்தனர். 3 எல்லா மாகாணங்களின் அதிகாரிகளும், தலைவர்களும், ஆளுநர்களும், யூதர்களுக்கு உதவினார்கள். ஏனென்றால் அவர்கள் மொர்தெகாய்க்கும் பயந்தனர். 4 அரசனது அரண்மனையில் மொர்தெகாய் மிக முக்கியமான நபராகிவிட்டான். அரசனது மாகாணங்களிலுள்ள அனைவரும் அவனது பெயரையும், அவன் எவ்வளவு முக்கியமானவன் என்பதையும் அறிந்திருந்தனர். மொர்தெகாய் மேலும் மேலும் அதிகாரம் உள்ளவன் ஆனான்.
5 யூதர்கள் தம் பகைவர்கள் அனைவரையும் தோற்கடித்தனர். அவர்கள் தம் பகைவரைக் கொன்று அழிக்க வாளைப் பயன்படுத்தினார்கள். தம்மை வெறுத்த ஜனங்களைத் தம் விருப்பம்போல் யூதர்கள் செய்தார்கள். 6 யூதர்கள் சூசான் தலைநகரில் 500 பேரை கொன்றழித்தார்கள். 7 யூதர்கள் கீழ்க்கண்டவர்களைக் கொன்றனர்: பர்சர்ன்தாத்தா, தல்போன், அஸ்பாதா, 8 பொராதா, அதலியா, அரிதாத்தா, 9 பர்மஷ்டா, அரிசாய், அரிதாய், வாய்சாதா, 10 இவர்கள் ஆமானின் 10 மகன்கள். அம்மெதாத்தாவின் மகனான ஆமான் யூதர்களின் பகைவன். யூதர்கள் இவர்கள் அனைவரையும் கொன்றனர். ஆனால் அவர்களது பொருட்கள் எதையும் கொள்ளையடிக்கவில்லை.
11 தலைநகரமான சூசானில் எத்தனை பேர் கொன்று அழிக்கப்பட்டனர் என்று அரசன் கேள்விப்பட்டான். 12 எனவே, அரசன் எஸ்தர் அரசியிடம், “யூதர்கள் சூசானில் ஆமானின் 10 மகன்களையும் சேர்த்து 500 பேரை கொன்றுள்ளனர். இப்பொழுது வேறு மாகாணங்களில் என்ன செய்ய வேண்டும் என்று நீ விரும்புகிறாய்? எனக்குச் சொல், நான் அதனை நடத்துவேன். சொல் நான் அதனைச் செய்வேன்” என்றான்.
13 எஸ்தர், “அரசருக்கு விருப்பமானால், சூசானில் யூதர்கள் இதைப்போன்றே நாளையும் செய்ய அனுமதி கொடுக்கவேண்டும். ஆமானின் 10 மகன்களின் உடலையும் தூக்கில் தொங்கவிட அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டாள்.
14 எனவே, அரசன் அந்த கட்டளையைக் கொடுத்தான். அந்தச் சட்டம் அடுத்த நாளும் இருந்தது. அவர்கள் ஆமானின் 10 மகன்களின் உடல்களை தொங்கவிட்டனர். 15 சூசானிலுள்ள யூதர்கள் ஆதார் மாதத்தின் 14வது நாளில் ஒன்று கூடினார்கள். அவர்கள் சூசானில் 300 பேரைக் கொன்றனர். ஆனால் அவர்கள் கொள்ளை அடிக்கவில்லை.
16 அதே நேரத்தில் வேறு நாடுகளில் வாழ்ந்த யூதர்களும் ஒன்று கூடினார்கள். அதனால் தம்மைக் காத்துக்கொள்ளும் அளவு பலமுள்ளவர்களாக இருந்தனர். எனவே, அவர்கள் பகைவர்களைத் தாக்கமுடிந்தது. யூதர்கள் தம் பகைவரான 75,000 பேரைக் கொன்றனர். ஆனால் அவர்கள் கொள்ளை அடிக்கவில்லை. 17 இது ஆதார் மாதத்தின் 13வது நாளில் நடைபெற்றது, 14வது நாள் அவர்கள் ஓய்வு எடுத்தனர். யூதர்கள் அந்நாளை மகிழ்ச்சிகரமான விடுமுறை நாளாக ஆக்கினார்கள்.
பூரீம் விழா
18 சூசானிலுள்ள யூதர்கள் ஆதார் மாதத்தின் 13 மற்றும் 14ஆம் நாட்களில் ஒன்று கூடினார்கள். 15வது நாள் அவர்கள் ஓய்வெடுத்தனர். அவர்கள் 15வது நாளை மகிழ்ச்சிகரமான விடுமுறைநாள் ஆக்கினர். 19 எனவே, நகரங்களிலும் கிராமங்களிலும் வாழ்ந்த யூதர்கள் 14வது நாளை பூரீம் விழாவாகக் கொண்டாடினார்கள். அதனை மகிழ்ச்சிகரமான விடுமுறைநாள் ஆக்கினார்கள். அன்று விருந்தும் ஒருவர்கொருவர் அன்பளிப்பும் கொடுத்து மகிழ்ந்தனர்.
20 மொர்தெகாய் நிகழ்ந்த எல்லாவற்றையும் எழுதினான். பிறகு அவன் அகாஸ்வேரு அரசனின் மாகாணங்களில் உள்ள அனைத்து யூதர்களுக்கும் கடிதம் எழுதினான். அவன் அருகிலும் தொலைவிலும் உள்ள அனைவருக்கும் கடிதம் அனுப்பினான். 21 மொர்தெகாய் அதில் யூதர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆதார் மாதத்தின் 14 மற்றும் 15ஆம் நாட்களில் பூரீம் விழாவை கொண்டாடும்படி எழுதினான். 22 யூதர்கள் அந்நாட்களைக் கொண்டாடினார்கள். ஏனென்றால், அந்நாட்களில் அவர்கள் தம் பகைவர்களை அழித்தனர். அம்மாதத்தில் அவர்களின் துயரமெல்லாம் மகிழ்ச்சியாக மாறியதால் அம்மாதத்தைக் கொண்டாடினார்கள். இம்மாதத்தில் அவர்களது அழுகை மாறி குதூகலமாய் கொண்டாடும் மாதமாக மாறிற்று. மொர்தெகாய் அனைத்து யூதர்களுக்கும் கடிதம் எழுதினான். அவன் அவர்களிடம் அந்நாளை மகிழ்ச்சிகரமான விடுமுறைநாளாக கொண்டாடச் சொன்னான். அவர்கள் ஒருவருக்கொருவர் விருந்தும் அன்பளிப்பும் கொடுத்து, ஏழைகளுக்குப் பரிசு கொடுத்து அந்த நாளை கொண்டாடச் சொன்னான்.
23 எனவே யூதர்கள் மொர்தெகாய் எழுதியவற்றை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் தொடங்கிய விழாவை தொடர ஒப்புக்கொண்டனர்.
24 அம்மெதாத்தாவின் மகனான ஆமான் என்னும் ஆகாகியன் யூதர்களின் பகைவன். யூதர்களை அழிக்க அவன் ஒரு தீய திட்டத்தை வைத்திருந்தான். அவன் யூதர்களை அழிக்கும் நாளை குலுக்கல் சீட்டு போட்டு தேர்ந்தெடுத்து வைத்திருந்தான். அக்காலத்தில் குலுக்கல் சீட்டானது “பூர்” என்று அழைக்கப்பட்டது. எனவே, விடுமுறைநாளும் “பூரீம்” என அழைக்கப்பட்டது. 25 ஆமான் அவற்றைச் செய்தான். ஆனால் எஸ்தர் அரசனிடம் பேசச் சென்றாள். எனவே, அவன் புதிய கட்டளைகளை அனுப்பினான். அந்த கட்டளைகள் ஆமானின் திட்டத்தை அழித்ததோடு, ஆமானுக்கும் அவனது குடும்பத்திற்கும், அதே தீமை ஏற்படும்படியும் ஆயிற்று. எனவே, ஆமானும் அவனது மகன்களும் தூக்கு மரத்தில் தொங்கினார்கள்.
26-27 இப்போது, குலுக்கல் சீட்டு “பூரீம்” என்று அழைக்கப்பட்டது. எனவே, இந்த விடுமுறை நாளும் “பூரீம்” என்று அழைக்கப்பட்டது. மொர்தெகாய் யூதர்களுக்கு கடிதம் எழுதி இந்நாளைக் கொண்டாடச் சொன்னான். எனவே, யூதர்கள் ஆண்டில் இரண்டு நாளைக் கொண்டாடும் வழக்கத்தைக்கொண்டனர். 28 இது அவர்கள் தங்களுக்கு நேர்ந்ததை நினைவுப்படுத்துவதாக இருந்தது. யூதர்களும் மற்ற ஜனங்களும் சேர்ந்து சரியான காலத்தில் சரியான முறையில் ஒவ்வொரு ஆண்டும் இரு நாட்கள் கொண்டாடினார்கள். ஒவ்வொரு தலைமுறையில் ஒவ்வொரு குடும்பமும் இந்த இரண்டு நாட்களையும் நினைவுபடுத்தினர். அவர்கள் இந்த விடுமுறையை ஒவ்வொரு மாகாணத்திலும், ஒவ்வொரு நகரிலும் கொண்டாடினார்கள் யூதர்கள் என்றென்றும் பூரீம் விழாவைக் கொண்டாடுவதை நிறுத்தக் கூடாது. யூதர்களின் சந்ததிகளும் எப்பொழுதும் இவ்விடுமுறையை நினைத்துக்கொள்ள வேண்டும்.
29 எனவே அபியாயேலின் மகளான எஸ்தர் அரசியும், யூதனான மொர்தெகாயும் பூரீம் பற்றிய ஒரு அதிகாரப் பூர்வமான கடிதத்தை எழுதினார்கள். இரண்டாவது கடிதம் உண்மையானது என்பதை நிரூபிக்க அரசனின் முழு அதிகாரத்ததோடு கடிதம் எழுதினார்கள். 30 எனவே, மொர்தெகாய் அகாஸ்வேரு அரசனின் 127 மாகாணங்களுக்கும் கடிதம் அனுப்பினான். அந்த விழா யூதர்களிடம் சமாதானத்தையும், ஒருவர் மீது ஒருவருக்கு நம்பிக்கையையும் உருவாக்கும் என்று மொர்தெகாய் எழுதினான். 31 மொர்தெகாய் யூதர்களுக்குப் பூரீம் விழாவை கொண்டாட ஆரம்பிக்கும்படி எழுதினான். எப்பொழுது இப்புதிய விடுமுறை நாளை கொண்டாட வேண்டும் என்றும் எழுதினான். யூதனான மொர்தெகாயும் அரசியான எஸ்தரும் யூதர்களுக்கு இக்கட்டளையை இட்டனர். அவர்கள் இவ்விரு நாட்களையும் விடுமுறை கொண்டாட்டமாக தங்களுக்கும், தங்கள் சந்ததிகளுக்கும் எற்படுத்தவேண்டும். அவர்கள் மற்ற விடுமுறை நாட்களில் உபவாசம் இருந்து, அழுது, நடந்த தீமைகளுக்கு இரங்கி நினைப்பதுபோன்று இந்த இரு நாட்களையும் கொண்டாடுவார்கள். 32 எஸ்தரின் கடிதம் பூரீம் விழாவின் விதிகளை அதிகாரப் பூர்வமானதாக ஆக்கிற்று. இவை ஒரு புத்தகத்தில் எழுதப்பட்டன.
மொர்தெகாய் கௌரவிக்கப்படுகிறான்
10 அகாஸ்வேரு அரசன் ஜனங்களை வரி செலுத்தும்படி செய்தான். அவனது இராஜ்யத்திலுள்ள அனைத்து ஜனங்களும் தொலை தூரத்தில் கடல் கடந்து வாழும் ஜனங்களும், வரிசெலுத்தி வந்தனர். 2 அரசன் அகாஸ்வேரு செய்த அரும்பெரும் செயல்கள் மேதியா மற்றும் பெரிசியா அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்தில் எழுதப்பட்டன. அந்த வரலாற்றுப் புத்தகங்களில் மொர்தெகாய் செய்தவையும் எழுதப்பட்டன. அரசன் மொர்தெகாயைப் பெரிய மனிதனாக்கினான். 3 யூதனான மொர்தெகாய் அரசனுக்கு அடுத்த இரண்டாவது முக்கிய மனிதனானான். யூதர்களில் மொர்தெகாய் மிக முக்கிய மனிதன் ஆனான். அவனை மற்ற யூதர்கள் மிகவும் மதித்தனர். அவர்கள் மொர்தெகாயை மதித்தனர். ஏனென்றால், அவன் தன் ஜனங்களின் நன்மைக்காக கடினமான வேலைகளைச் செய்தான். மொர்தெகாய் அனைத்து யூதர்களுக்கும் சமாதானத்தைக் கொண்டுவந்தான்.
ஆபிரகாமின் உதாரணம்
4 நமக்கெல்லாம் தந்தையான ஆபிரகாம் பற்றி நாம் என்ன சொல்லமுடியும்? அவர் விசுவாசத்தைப் பற்றி என்ன அறிந்திருந்தார்? 2 ஆபிரகாம் தனது செயல்களினால் நீதிமானானால் அவர் தன்னைப்பற்றிப் பெருமையாகப் பேசிக்கொள்ள முடியும். ஆனாலும் தேவனுக்கு முன்னால் பெருமை பாராட்டிக்கொள்ள ஏதுமில்லை. 3 வேதவாக்கியங்கள் என்ன சொல்கிறது? “ஆபிரகாம் தேவனில் விசுவாசம் வைத்தான். அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.” [a]
4 ஒரு காரியத்தைச் செய்கிறவனுக்கு அவனுக்குரிய சம்பளத்தை யாரும் பரிசாகக் கொடுப்பதில்லை. அதை சம்பாதித்தே அவன் அடைகிறான். 5 தேவனுக்கு வேண்டிய நீதிமானாக ஒருவன் மாற காரியரீதியாக அவன் எதையும் செய்ய முடியாது. அவன் தேவன் மீது விசுவாசம் வைக்க வேண்டும். பின்னரே தேவன் அவனை நீதிமானாக ஏற்பார். தேவன் ஒருவரால்தான் பாவியை நீதிமானாக மாற்ற முடியும். 6 தாவீதும் இதையே சொன்னார். ஒரு மனிதனின் செயல்களை தேவன் கவனிக்காவிட்டால் அவன் உண்மையிலேயே மகிழ்ச்சி அடையலாம். இந்த வழி அவனை நல்லவனாக ஏற்றுக்கொள்ளப்படச் செய்கிறது.
7 “எப்பொழுது அவர்களின் சட்டத்துக்கு மாறான செயல்கள் மன்னிக்கப்படுகிறதோ,
எப்பொழுது அவர்களின் பாவங்கள் மூடப்படுகிறதோ,
அப்பொழுது மக்கள் உண்மையில் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.
8 யாருடைய பாவங்களை தேவன் அவனுக்கு எதிராக எண்ணுவதில்லையோ,
அவனே உண்மையில் ஆசீர்வதிக்கப்பட்டவன்.” (A)
9 இந்தப் பாக்கியம் விருத்தசேதனமுள்ளவனுக்கு மட்டும் வருவதில்லை. விருத்தசேதனம் செய்யாதவர்களுக்கும் வரும். ஆபிரகாமின் விசுவாசம் தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவனும் நீதிமான் ஆனான். 10 எனவே, இது எவ்வாறு ஆயிற்று? ஆபிரகாமை விருத்தசேதனத்திற்கு முன்னரா, பின்னரா, தேவன் எப்பொழுது ஏற்றுக்கொண்டார்? முன்னர் தானே. 11 தேவன் தன்னை ஏற்றுக்கொண்டார் என்று காட்டுவதற்காக ஆபிரகாம் பின்னர் விருத்தசேதனம் செய்துகொண்டான். விருத்தசேதனம் செய்வதற்கு முன்பாக, விசுவாசத்தின் மூலம் தேவனுடன் சரியாக இருந்தான் என்பதற்கு விருத்தசேதனம் ஒரு அடையாளமாக இருந்தது. எனவே ஆபிரகாம் விருத்தசேதனம் செய்யாத, ஆனால் விசுவாசிக்கிற அனைவருக்கும் தந்தையாக இருக்கிறார். அந்த மக்கள் விசுவாசித்து தேவனுக்கு உகந்த மக்களாக ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். 12 விருத்தசேதனம் செய்துகொண்டவர்களுக்கும் அவர் தந்தையாகக் கருதப்படுகிறார். இதில் அவர்கள் விருத்தசேதனம் செய்துகொண்டதால் மட்டும் ஆபிரகாம் தந்தையாகவில்லை. ஆபிரகாம் விருத்தசேதனம் செய்துகொள்ளுமுன் வைத்திருந்த விசுவாசத்தைப் போன்று அவர்களும் விசுவாசம் வைத்திருந்ததால் ஆபிரகாம் அவர்களது தந்தையானான்.
விசுவாசத்தின் மூலம் நீதி
13 ஆபிரகாமுக்கும் அவனது சந்ததியினருக்கும் முழு உலகமும் கிட்டும் என்ற தேவனுடைய வாக்குறுதி கிடைத்தது. ஆபிரகாம் சட்டவிதிகளைக் கடைப்பிடித்ததால் அவனுக்கு அவ்வாக்குறுதி கிடைக்கவில்லை. அவன் தனது விசுவாசத்தால் தேவனுக்கு முன் நீதிமானாக இருந்தபடியால் இது கிடைத்தது. 14 சட்டவிதிகளைக் கடைப்பிடிப்பதன் மூலமே தேவனுடைய வாக்குறுதியை மக்கள் பெற்றுக்கொள்ள முடியுமென்றால் பிறகு விசுவாசத்தால், பயனில்லாமல் போகும். ஆபிரகாமுக்கு தேவனுடைய வாக்குறுதியும் பயனில்லாமல் போகும். 15 ஏனென்றால் சட்டவிதியானது, அதைக் கடைப்பிடிக்காதவர்களிடம் தேவனுடைய கோபத்தையே உருவாக்கும். எனவே சட்டவிதி இல்லாவிட்டால் பின்னர் கீழ்ப்படியாமையும் இல்லாமல் போகும்.
16 எனவே மக்கள் தேவனுடைய வாக்குறுதியை விசுவாசத்தின் மூலம் பெறுகின்றனர். இவ்வாறு நிகழ்வதால் இதுகொடையாகிறது. இது இலவசமான கொடையானால் இதனை ஆபிரகாமின் பிள்ளைகளாய் விளங்கும் அத்தனை பேரும் பெற்றுக்கொள்கின்றனர். இவ்வாக்குறுதி மோசேயின் சட்டவிதிகளுக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் கிடைக்கிறது. ஆபிரகாமைப் போன்று விசுவாசம் கொள்ளும் அனைவரும் அதனைப் பெறலாம். அதனால்தான் ஆபிரகாம் அனைவருக்கும் தந்தையாகிறான். 17 “அநேக தேசத்து மக்களுக்கு நான் உன்னைத் தகப்பனாக உருவாக்கினேன்” [b] என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டிருக்கின்றது. இது தேவனுக்கு முன் உண்மையாகின்றது. தேவனால் இறந்தவரை உயிர்த்தெழச் செய்யமுடியும். இதுவரை இல்லாதவற்றை இருப்பதாகக் கொண்டுவர இயலும் என்பதை ஆபிரகாம் நம்பினான்.
18 ஆபிரகாமுக்குப் பிள்ளைகள் பிறப்பார்கள் என்ற நம்பிக்கை இல்லை. ஆனால் அவன் தேவனை நம்பினான். அதனால்தான் அவன் பல தேசத்து மக்களுக்கும் தந்தையானான். தேவன் “உனக்கு அநேக சந்ததிகள் ஏற்படும்” [c] என்று சொன்னபடி ஆயிற்று. 19 அவன் ஏறக்குறைய 100 வயதுள்ளவனாய் இருந்தான். அவ்வயதில் பிள்ளைகள் உருவாக உயிர் சக்தியில்லை. அதே சமயத்தில் சாராளாலும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது. ஆபிரகாம் இதைப்பற்றியும் நினைத்துப் பார்த்தான். ஆனால் தேவன் மேல் வைத்த விசுவாசம் மட்டும் குறையவே இல்லை. 20 வாக்குக் கொடுத்தபடி தேவன் நடந்துகொள்வார் என்பதில் ஆபிரகாமுக்கு சந்தேகம் வந்ததே கிடையாது. அவன் தன் விசுவாசத்தை இழக்கவில்லை. அவன் தன் விசுவாசத்தில் மேலும் மேலும் பலமுள்ளவன் ஆனான். தேவனைப் புகழ்ந்தான். 21 தேவன் வாக்குரைத்தபடி செய்ய வல்லவர் என்பதில் உறுதியான நம்பிக்கை உடையவனாக இருந்தான். 22 எனவே “தேவன் ஆபிரகாமின் விசுவாசத்தை ஏற்றுக்கொண்டார். அது அவனை தேவனுக்கு முன் நீதிமான் ஆக்கிற்று.” [d] 23 இது ஆபிரகாமுக்காக மட்டும் எழுதப்படவில்லை. நமக்காகவும் எழுதப்பட்டது. 24 நம்முடைய விசுவாசத்தின் பொருட்டு தேவன் நம்மையும் ஏற்றுக்கொள்வார். நம் கர்த்தராகிய இயேசுவை மரணத்திலிருந்து எழுப்பிய அத்தேவனை நம்புகிற நமக்கும் அப்படியே எண்ணப்படும். 25 நமது பாவங்களுக்காக இயேசு மரணத்திற்கு ஒப்படைக்கப்பட்டார். நம்மை நீதிமான்களாக்க அவர் மரணத்திலிருந்து எழுப்பப்பட்டார்.
2008 by World Bible Translation Center