M’Cheyne Bible Reading Plan
வெட்டுக்கிளிகள்
10 கர்த்தர் மோசேயை நோக்கி, “பார்வோனிடம் போ. அவனையும், அவனது அதிகாரிகளையும் பிடிவாதம் உடையவர்களாக்கினேன். எனது வல்லமைமிக்க அற்புதங்களை அவர்களுக்குக் காட்டும்படியாக நான் இதைச் செய்தேன். 2 நான் எகிப்தில் செய்த அற்புதங்களையும், மற்ற அதிசயமான காரியங்களையும் குறித்து நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் சொல்வதற்காகவும் நான் இதைச் செய்தேன். அப்போது நானே கர்த்தர் என்பதை நீங்கள் எல்லாரும் அறவீர்கள்” என்றார்.
3 ஆகையால் மோசேயும், ஆரோனும் பார்வோனிடம் சென்றார்கள். அவர்கள் அவனை நோக்கி, “எபிரெய ஜனங்களின் தேவனாகிய கர்த்தர், ‘எத்தனை காலம் எனக்குக் கீழ்ப்படிய மறுப்பாய்? எனது ஜனங்கள் என்னைத் தொழுதுகொள்வதற்குப் போக அனுமதி! 4 நீ எனது ஜனங்களைப் போகவிடாவிட்டால், நாளை உனது நாட்டிற்குள் வெட்டுக்கிளிகளை அனுப்புவேன். 5 வெட்டுக்கிளிகள் நாட்டை ஆக்கிரமிக்கும். பூமியைப் பார்க்க முடியாத அளவிற்கு வெட்டுக்கிளிகள் நிரம்பும். புயலின் அழிவிற்குத் தப்பியவை அனைத்தும் வெட்டுக்கிளிகளால் அழிக்கப்படும். வயலிலுள்ள மரங்களின் இலைகள் அனைத்தையும் வெட்டுக்களிகள் தின்றுவிடும். 6 உனது வீட்டிலும், உனது அதிகாரிகளின் வீடுகளிலும், எகிப்திலுள்ள எல்லா வீடுகளிலும் வெட்டுக்கிளிகள் நிறைந்துவிடும். உங்கள் பிதாக்களோ, முற்பிதாக்களோ, பார்த்திராத அளவிற்கு வெட்டுக்கிளிகள் காணப்படும். எகிப்தில் ஜனங்கள் வாழ ஆரம்பித்த காலம் முதல் இன்றுவரை பார்த்த வெட்டுக்கிளிகளைக் காட்டிலும் அதிகமான வெட்டுக்கிளிகள் காணப்படும் என்கிறார்’” என்று சொன்னார்கள். பிறகு மோசே திரும்பி, பார்வோனை விட்டுப் புறப்பட்டான்.
7 அப்போது அதிகாரிகள் பார்வோனிடம், “இந்த ஜனங்களால் எத்தனை நாட்கள் நாம் இக்கட்டில் அகப்பட்டிருப்போம்? அவர்கள் தேவனாகிய கர்த்தரைத் தொழுதுகொள்ள அந்த ஜனங்களைப் போகவிடும். நீர் அவர்களைப் போகவிடாவிட்டால், நீர் அறிந்துகொள்ளும் முன்பு எகிப்து அழிக்கப்படும்!” என்று கூறினார்கள்.
8 எனவே பார்வோன் மோசேயையும், ஆரோனையும் திரும்பவும் தன்னிடம் அழைக்கும்படிக்கு அதிகாரிகளை அனுப்பினான். பார்வோன் அவர்களை நோக்கி, “நீங்கள் போய், உங்கள் தேவனாகிய கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள், ஆனால் யார் யார் போகப்போகிறீர்கள் என்பதைச் சரியாக எனக்குக் கூறுங்கள்” என்றான்.
9 மோசே பதிலாக, “இளைஞரும், முதியோருமாகிய எல்லா ஜனங்களும் போவோம். எங்களோடு எங்கள் மகன்களையும், மகள்களையும், ஆடுகளையும், மாடுகளையும், அழைத்துச் செல்வோம். கர்த்தரின் பண்டிகை எங்கள் எல்லோருக்கும் உரியது என்பதால் நாங்கள் எல்லோரும் போவோம்” என்று கூறினான்.
10 பார்வோன் அவர்களிடம், “நான் உங்களையும் உங்கள் ஜனங்களையும் எகிப்தைவிட்டுப் போகும்படியாக அனுமதிக்கும் முன்னர் கர்த்தர் உங்களோடு கண்டிப்பாக இருக்கவேண்டும். பாருங்கள், நீங்கள் தீமையான ஒன்றைத் திட்டமிடுகிறீர்கள். 11 ஆண்கள் மாத்திரம் போய் கர்த்தரைத் தொழுதுகொள்ளலாம். நீங்கள் முதலில் அதைத்தான் என்னிடம் கேட்டீர்கள். உங்கள் ஜனங்கள் எல்லாரும் போகமுடியாது” என்று கூறி, பார்வோன் மோசேயையும், ஆரோனையும் அனுப்பிவிட்டான்.
12 கர்த்தர் மோசேயை நோக்கி, “இப்போது உன் கைகளை எகிப்து தேசத்திற்கு மேலாக உயர்த்து, அப்போது எகிப்து நாடெங்கும் வெட்டுக்கிளிகள் வந்து பரவும். புயல் அழிக்காமல்விட்ட எல்லா தாவரங்களையும் வெட்டுக்கிளிகள் தின்றுவிடும்” என்றார்.
13 எனவே, மோசே தனது கைத்தடியை எகிப்து நாட்டிற்கு மேலாக உயர்த்தினான். கிழக்கிலிருந்து ஒரு பெருங்காற்று வீசும்படியாக கர்த்தர் செய்தார். பகலும் இரவும் காற்று வீசிற்று. காலையில் காற்று எகிப்திற்குள் வெட்டுக்கிளிகளைக் கொண்டு வந்திருந்தது. 14 வெட்டுக்கிளிகள் எகிப்து நாட்டிற்குள் வந்து பூமியில் விழுந்தன. எகிப்தில் அதுவரை அந்த அளவில் வெட்டுக்கிளிகள் வந்ததுமில்லை, இனி மேலும் அத்தனை எண்ணிக்கை வெட்டுக்கிளிகள் எகிப்தில் வருவதும் இல்லை. 15 வெட்டுக்கிளிகள் தேசம் முழுவதும் பூமி மேல் இருள் மூடும்வரை நிரப்பின. கல்மழை அழிக்காமல் விட்ட மரங்களின் கனிகளையும், பூமியிலுள்ள தாவரங்கள் அனைத்தையும் வெட்டுக்கிளிகள் தின்றுவிட்டன. எகிப்தில் எங்கும் மரங்களிலும் செடிகளிலும் ஒரு இலைகூட இருக்கவில்லை.
16 பார்வோன் அவசரமாக மோசேயையும், ஆரோனையும் அழைத்துவரச் செய்து, “நான் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கும் உங்களுக்கும் எதிராகப் பாவம் செய்தேன். 17 இம்முறை எனது பாவங்களுக்காக என்னை மன்னியுங்கள். இந்த ‘மரணத்தை’ (வெட்டுக்கிளிகளை) என்னிடமிருந்து அகற்றுவதற்கு கர்த்தரிடம் கேளுங்கள்” என்றான்.
18 மோசே பார்வோனிடமிருந்து சென்று கர்த்தரிடம் ஜெபித்தான். 19 எனவே, கர்த்தர் காற்றின் திசையை மாற்றி மேற்கிலிருந்து மிகப் பலமான காற்று ஒன்று வீசும்படியாகச் செய்தார். அது வெட்டுக்கிளிகளை எகிப்திலிருந்து அகற்றி, செங்கடலில் விழச்செய்தது. எகிப்தில் ஒரு வெட்டுக்கிளிகூட இருக்கவில்லை! 20 ஆனால், பார்வோன் மீண்டும் பிடிவாதமாக இருக்குமாறு கர்த்தர் செய்தார். இஸ்ரவேல் ஜனங்கள் போவதற்குப் பார்வோன் அனுமதிதரவில்லை.
காரிருள்
21 கர்த்தர் மோசேயை நோக்கி, “உனது கைகளை மேலே உயர்த்து. எகிப்தை இருள் மூடும். நீங்கள் உணர்ந்துகொள்ளுமளவிற்கு இருள் மிகுதியாக இருக்கும்!” என்றார்.
22 மோசே கைகளை மேலே உயர்த்தியபோது, இருண்ட மேகமானது எகிப்தை மறைத்தது. எகிப்தை மூன்று நாட்கள் இருள் மூடியது.
23 ஒருவரையொருவர் பார்க்க முடியவில்லை. மூன்று நாட்களாக எந்த இடத்திற்கும் போவதற்காக ஜனங்கள் எழுந்திருக்கவில்லை. ஆனால் இஸ்ரவேல் ஜனங்கள் வாழ்ந்த எல்லா இடங்களிலும் ஒளி இருந்தது.
24 பார்வோன் மீண்டும் மோசேயை வரவழைத்து, “நீங்கள் போய் கர்த்தரை தொழுதுகொள்ளுங்கள்! நீங்கள் உங்கள் குழந்தைகளையும் அழைத்துப்போகலாம். ஆனால் உங்கள் ஆடுகளையும், மாடுகளையும் இங்கே விட்டுச் செல்லவேண்டும்” என்றான்.
25 மோசே, “நாங்கள் போகும்போது எங்கள் ஆடுகளையும், மாடுகளையும் கொண்டு செல்வதோடு மட்டுமல்லாது, எங்கள் தேவனாகிய கர்த்தரைத் தொழுதுகொள்வதற்குப் பயன்படுத்தும்பொருட்டுப் பலிகளையும், காணிக்கைகளையும் நீங்களே கூட எங்களுக்குக் கொடுப்பீர்கள்! 26 ஆம், கர்த்தரைத் தொழுதுகொள்வதற்கு நாங்கள் எங்கள் மிருகங்களையும் கொண்டு செல்வோம். எந்த மிருகத்தின் குளம்பையும்கூட விட்டுச் செல்லமாட்டோம். கர்த்தரைத் தொழுதுகொள்வதற்குத் தேவைப்படுபவை எவை என்பதை இன்னமும் நாங்கள் சரியாக அறியவில்லை. நாங்கள் போகவிருக்கும் இடத்தை அடையும்போதுதான் அதை அறிந்துகொள்வோம், எனவே இந்தப் பொருட்கள் எல்லாவற்றையும் நாங்கள் கொண்டு செல்லவேண்டும்” என்றான்.
27 கர்த்தர் பார்வோனை இன்னும் பிடிவாதம் உடையவனாக்கினார். எனவே பார்வோன் அவர்களை அனுப்ப மறுத்தான். 28 பிறகு பார்வோன் மோசேயிடம், “இங்கிருந்து போய்விடு! நீ இங்கு மீண்டும் வருவதை நான் விரும்பவில்லை! என்னைப் பார்க்க நீ மீண்டும் வந்தால் நீ சாவாய்” என்று கூறினான்.
29 அப்போது மோசே பார்வோனை நோக்கி, “நீ ஒரு விஷயத்தைச் சரியாகச் சொன்னாய், நான் உன்னைப் பார்ப்பதற்கு மீண்டும் வரப்போவதில்லை!” என்றான்.
மனம் மாறுங்கள்
13 அப்போது இயேசுவோடு கூட மக்கள் சிலர் இருந்தனர். கலிலேயாவிலுள்ள மக்கள் சிலருக்கு நடந்ததை அவர்கள் இயேசுவுக்குக் கூறினர். அம்மக்கள் தேவனை வழிபட்டுக்கொண்டிருக்கையில் அவர்களைப் பிலாத்து கொன்றான். அவர்கள் தேவனுக்குப் பலியிட்டுக்கொண்டிருந்த மிருகங்களின் இரத்தத்தோடு அவர்களின் இரத்தத்தையும் கலந்தான். 2 இயேசு, “அந்த மக்களுக்கு இவ்வாறு நேரிட்டதால் கலிலேயாவில் உள்ள மற்ற அனைவரைக் காட்டிலும் அவர்கள் பாவம் செய்தவர்கள் என நினைக்கிறீர்களா? 3 இல்லை, அவர்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை. ஆனால் நீங்கள் அனைவரும் உங்கள் இதயங்களையும் வாழ்வையும் மாற்றிக்கொள்ளாவிட்டால் அந்த மக்களைப்போல நீங்களும் அழிக்கப்படுவீர்கள். 4 சீலோவாமிலே கோபுரம் விழுந்தபோது கொல்லப்பட்ட பதினெட்டுப் பேரின் நிலை என்ன? எருசலேமில் வசிக்கின்ற எல்லாரைக் காட்டிலும் அவர்கள் மிகுந்த பாவம் செய்தவர்கள் என நினைக்கிறீர்களா? 5 அவர்கள் அப்படியல்ல. ஆனால் நீங்கள் உங்கள் இதயங்களையும், வாழ்க்கையையும் மாற்றிக்கொள்ளவில்லையெனில், நீங்களும் கூட அழிக்கப்படுவீர்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்று பதில் கூறினார்.
பயனற்ற மரம்
6 இயேசு இந்த உவமையைச் சொன்னார்: “ஒரு மனிதனுக்கு ஓர் அத்தி மரம் இருந்தது. தனது தோட்டத்தில் அம்மரத்தை நட்டுவைத்திருந்தான். மரத்தில் சில பழங்கள் இருக்கிறதா என அம்மனிதன் பார்த்து வந்தான். அவன் கண்ணில் பழம் எதுவும் படவில்லை. 7 தோட்டத்தைக் கண்காணித்து வந்த வேலைக்காரன் ஒருவன் அம்மனிதனுக்கு இருந்தான். அம்மனிதன் வேலைக்காரனை நோக்கி, ‘மூன்று ஆண்டுகளாக இந்த மரத்தில் பழங்களுக்காகப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் ஒன்றும் என் கண்ணில் படவில்லை. அதை வெட்டி வீழ்த்திவிடு. எதற்கு அது நிலத்தைப் பாழ்படுத்த வேண்டும்?’ என்றான். 8 அதற்கு வேலைக்காரன், ‘எஜமானரே, இன்னும் ஓராண்டுக்குள் அந்த மரம் கனி கொடுக்கிறதா என்று பார்ப்போம். அதைச் சுற்றிலும் மண்ணைத் தோண்டி கொஞ்சம் உரத்தைப் போடுவேன். 9 அடுத்த ஆண்டு அந்த மரம் கனி கொடுக்கக் கூடும். அம்மரம் அப்படியும் கனிதராவிட்டால் நீங்கள் அதை வெட்டிப் போடலாம்’ என்று பதில் கூறினான்.”
ஓய்வு நாளில் குணமாக்குதல்
10 ஓய்வு நாளில் ஓர் ஆலயத்தில் இயேசு போதித்துக் கொண்டிருந்தார். 11 பிசாசினாலாகிய அசுத்த ஆவியைத் தன்னுள்ளே கொண்டிருந்த ஒரு பெண் அந்த ஜெப ஆலயத்தில் இருந்தாள். பதினெட்டு ஆண்டுகளாக அப்பெண்ணைப் பிசாசு ஊனப்படுத்திற்று. அவள் முதுகு கூனலாக இருந்தது. அவள் நிமிர்ந்து நிற்க முடியவில்லை. 12 இயேசு அவளைப் பார்த்து அழைத்தார். மேலும் அவளை நோக்கி, “பெண்ணே, உன் நோய் உன்னை விட்டு நீங்கிற்று” என்றார். 13 இயேசு தன் கைகளை அவள் மேல் வைத்தார். அதே தருணத்தில் அவளால் நிமிர்ந்து நிற்க முடிந்தது. அவள் தேவனை வாழ்த்தினாள்.
14 ஓய்வு நாளில் இயேசு அவளைக் குணமாக்கியதைக் குறித்து ஜெப ஆலயத்தின் தலைவர் கோபம் அடைந்தார். அத்தலைவர் மக்களை நோக்கி, “வேலை செய்வதற்கு ஆறு நாட்கள் உள்ளன. அந்த நாட்களில் குணம்பெற வாருங்கள். ஓய்வு நாளில் குணமடைய வராதீர்கள்” என்றார்.
15 இயேசு பதிலாக, “நீங்கள் வேஷதாரிகளான மனிதர். ஓய்வு நாளில் கூட நீங்கள் எல்லாரும் உங்கள் வீட்டில் கொட்டிலில் இருக்கும் எருதுவையோ அல்லது கழுதையையோ அவிழ்த்து நீர் பருகுவதற்கு அழைத்துச் செல்கிறீர்கள். 16 நான் குணமாக்கிய இப்பெண் நமது யூத சகோதரி. [a] ஆனால் சாத்தான் அவளைப் பதினெட்டு ஆண்டுகளாகப் பீடித்திருந்தான். ஓய்வு நாளில் அவளது நோயினின்று அவளை விடுவிப்பது நிச்சயமாகத் தவறல்ல” என்றார். 17 இயேசு இதைக் கூறியபோது அவரை விமர்சித்துக்கொண்டிருந்த அனைவரும் தங்களைக் குறித்து வெட்கமடைந்தார்கள். இயேசு செய்த அற்புதமான காரியங்களைக் குறித்து எல்லா மக்களும் மகிழ்ச்சியடைந்தார்கள்.
கடுகு விதையின் உவமை(A)
18 பின்பு இயேசு, “தேவனுடைய இராஜ்யம் எதைப் போன்றது? அதை எதனோடு ஒப்பிடுவேன்? 19 தேவனுடைய இராஜ்யம் கடுகுச் செடியின் விதையைப் போன்றது. ஒருவன் இந்த விதையை அவனது தோட்டத்தில் ஊன்றுகிறான். விதை முளைத்து மரமாகிறது. பறவைகள் அதன் கிளைகளில் கூடுகளைக் கட்டுகின்றன” என்றார்.
20 மீண்டும் இயேசு, “தேவனின் இராஜ்யத்தை எதனோடு ஒப்பிடுவேன்? 21 ஒரு பெரிய பாத்திரத்தில் அப்பத்திற்காக வைக்கப்படிருக்கும் மூன்று மடங்கு அளவுள்ள மாவோடு ஒரு பெண் கலக்கும் புளிப்பான பொருளுக்கு ஒப்பானதாக இருக்கிறது. அது மாவு முழுவதையும் புளிக்கச் செய்யும்” என்றார்.
குறுகிய வாசல்(B)
22 ஒவ்வொரு நகரத்திலும் கிராமத்திலும் இயேசு போதித்துக்கொண்டிருந்தார். அவர் எருசலேம் வழியாகப் பயணம் செய்துகொண்டிருந்தார். 23 ஒருவன் இயேசுவிடம், “ஆண்டவரே, சிலர் மட்டுமே மீட்கப்படுவார்களா?” என்று கேட்டான்.
24 இயேசு, “பரலோகத்திற்கு நேராகத் திறக்கிற குறுகிய வாசலின் வழியாக நுழைய முயலுங்கள். பலர் அதனுள் நுழைய முயல்வார்கள். ஆனால் அவர்களால் நுழைய இயலாது. 25 ஒரு மனிதன் தன் வீட்டின் கதவை மூடிக்கொண்டால் நீங்கள் வெளியே நின்று தட்டமுடியும். ஆனால் அவன் திறக்கமாட்டான். நீங்கள், ‘ஐயா, எங்களுக்காகக் கதவைத் திறக்கவும்’ என்று கேட்க முடியும். அம்மனிதன், ‘நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று எனக்குத் தெரியாது’ என்பான். 26 பிறகு நீங்கள் அவனிடம் ‘நாங்கள் உங்களோடு உண்டு, குடித்தோமே. நீங்கள் எங்களது நகரங்களில் போதித்தீர்களே’ என்று சொல்லுவீர்கள். 27 அப்போது அவன், ‘உங்களை நான் அறியேன். எங்கிருந்து வருகிறீர்கள். என்னிடமிருந்து போய்விடுங்கள். நீங்கள் பிழைகளைச் செய்கிற மனிதர்கள்’ என்பான்.
28 “நீங்கள், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, மற்றும் தீர்க்கதரிசிகளையும் தேவனின் இராஜ்யத்தில் காண்பீர்கள். ஆனால் நீங்களோ வெளியே விடப்படுவீர்கள். பயத்தாலும் கோபத்தாலும் உரக்கச் சத்தமிடுவீர்கள். 29 கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய திசைகளில் இருந்து மக்கள் வருவார்கள். தேவனுடைய இராஜ்யத்தில் மேசையருகே அவர்கள் அமர்வார்கள். 30 வாழ்க்கையில் மிகவும் தாழ்ந்த இடத்தில் இருந்த மக்களுக்கு தேவனுடைய இராஜ்யத்தில் மிகவும் உயர்ந்த இடம் கொடுக்கப்படும். இப்போது உயர்ந்த இடத்தில் இருக்கும் மக்கள் தேவனுடைய இராஜ்யத்தில் தாழ்ந்த இடத்தில் இருப்பார்கள்” என்று கூறினார்.
எருசலேமில் இயேசு மரிப்பார்(C)
31 அப்போது, சில பரிசேயர்கள், “இங்கிருந்து சென்று ஒளிந்துகொள்ளும். ஏரோது மன்னன் உம்மைக் கொல்ல விரும்புகிறான்” என்று இயேசுவிடம் வந்து சொன்னார்கள்.
32 அவர்களை நோக்கி, இயேசு, “அந்த நரியிடம் (ஏரோது) போய் ‘இன்றும், நாளையும் நான் மக்களிடமிருந்து அசுத்த ஆவிகளைத் துரத்தி, குணப்படுத்துதலாகிய என் வேலையை முடிக்க வேண்டும். மறுநாள், என் வேலை முடிந்துவிடும்’ 33 அதற்குப் பிறகு, எல்லாத் தீர்க்கதரிசிகளும் எருசலேமில் மரிக்க வேண்டும் என்பதால் நான் என் வழியில் செல்லவேண்டும் என்று சொல்லுங்கள்” என்றார்.
34 “எருசலேமே! எருசலேமே! நீ தீர்க்கதரிசிகளைக் கொலை செய்கின்றாய். தேவன் உன்னிடம் அனுப்பிய அந்த மனிதர்களைக் கல்லெறிந்து கொல்கிறாய். பற்பல வேளைகளில் உன் மக்களுக்கு உதவ விரும்பினேன். ஒரு கோழி தன் குஞ்சுகளைச் சிறகுகளின் கீழே சேர்ப்பதுபோல நான் உன் மக்களை ஒருமித்து சேர்க்க விரும்பினேன். ஆனால் நீ என்னை அனுமதிக்கவில்லை. 35 இப்போது உன் வீடு வெறுமையானதாக விடப்பட்டிருக்கும். நீங்கள், ‘தேவனின் பெயரால் வருகிறவர் தேவனால் ஆசீர்வதிக்கப்படடவர்’ என்று மீண்டும் சொல்கிறவரைக்கும், என்னைப் பார்க்கமாட்டீர்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார் இயேசு.
28 “வெள்ளியை ஜனங்கள் பெறும் சுரங்கங்கள் உண்டு,
ஜனங்கள் பொன்னை உருக்கிப் புடமிடும் (தூயதாக்கும்) இடங்கள் உண்டு.
2 மனிதர்கள் நிலத்திலிருந்து இரும்பை வெட்டியெடுக்கிறார்கள்,
செம்பு பாறையிலிருந்து உருக்கி எடுக்கப்படுகிறது.
3 வேலையாட்கள் குகைகளுக்குள் விளக்குகளை எடுத்துச்செல்கிறார்கள்.
அவைகளை குகைகளின் ஆழமான பகுதிகளில் தேடுகிறார்கள்.
ஆழ்ந்த இருளில் அவர்கள் பாறைகளைத் தேடிப்பார்க்கிறார்கள்.
4 தாது இருக்கும் பகுதிகளைத் தேடி, வேலையாட்கள் நிலத்தினுள் ஆழமாகத் தோண்டுகிறார்கள்.
ஜனங்கள் வசிக்காத (வாழாத) தூரமான இடங்களிலும், ஒருவரும் சென்றிராத இடங்களிலும், அவர்கள் நிலத்தினுள் ஆழமாகப் போகிறார்கள்.
மற்ற ஜனங்களைக் காட்டிலும் ஆழமான இடங்களில், அவர்கள் கயிறுகளிலிருந்து தொங்குகிறார்கள்.
5 நிலத்தின் மேல் உணவு விளைகிறது,
ஆனால் நிலத்திற்குக் கீழே, அனைத்தும் நெருப்பினால் உருக்கப்பட்டதுபோல, அது வேறு மாதிரியாகத் தோன்றுகிறது.
6 நிலத்தின் கீழே இந்திர நீலக்கற்கள் காணப்படும்.
அங்குத் தூயப் பொன் பொடிகள் உண்டு.
7 நிலத்தின் கீழுள்ள பாதைகளைப்பற்றிக் காட்டுப் பறவைகள் கூட அறியாது.
அந்த இருண்ட பாதைகளை வல்லூறும் பார்த்ததில்லை.
8 காட்டு மிருகங்கள் அப்பாதையில் நடந்ததில்லை.
சிங்கங்கள் அவ்வழியில் பயணம் செய்ததில்லை.
9 வேலையாட்கள் மிகக் கடினமான பாறைகளைத் தோண்டுகிறார்கள்.
அப்பணியாட்கள் பர்வதங்களை தோண்டி அதனை வெட்டாந்தரையாக்குகிறார்கள்.
10 வேலையாட்கள் பாறைகளினூடே நீர்க் கால்களை வெட்டுகிறார்கள்.
எல்லா பாறைகளின் பொக்கிஷங்களையும் அவர்கள் பார்க்கிறார்கள்.
11 பணியாட்கள் தண்ணீரைத் தடை செய்ய, அணைகளைக் கட்டுகிறார்கள்.
அவர்கள் மறை பொருளை வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறார்கள்.
12 “ஆனால் ஒருவன் ஞானத்தை எங்கே காண்பான்?
நாம் எங்கு புரிந்துகொள்ளுதலைக் காண முடியும்?
13 ஞானம் எத்தனை விலையுயர்ந்தது என நாம் அறியோம்,
பூமியின் ஜனங்கள் நிலத்தைத் தோண்டி, ஞானத்தைக் கண்டடைய முடியாது.
14 ஆழமான சமுத்திரம், ‘ஞானம் இங்கு என்னிடம் இல்லை’ என்கிறது.
கடல், ‘ஞானம் இங்கு என்னிடம் இல்லை’ என்கிறது.
15 மிகத்தூய பொன்னாலும் கூட, உங்களால் ஞானத்தை வாங்கமுடியாது!
ஞானத்தை வாங்கப் போதுமான அளவு வெள்ளி இவ்வுலகில் இராது!
16 ஓபீரின் தங்கத்தாலோ, கோமேதகத் தாலோ, இந்திர நீலக்கல்லாலோ,
நீங்கள் ஞானத்தை வாங்க முடியாது.
17 ஞானம் பொன் அல்லது படிகத்தைக் காட்டிலும் சிறப்பானது!
பொன்னில் பதிக்கப்பெற்ற விலையுயர்ந்த கற்களால் ஞானத்தை வாங்கமுடியாது.
18 பவளம், சூரியகாந்தம் ஆகியவற்றிலும் ஞானம் உயர்ந்தது.
சிவந்தக் கற்களைக் காட்டிலும் ஞானம் விலையுயர்ந்தது.
19 எத்தியோப்பியா நாட்டின் புஷ்பராகம் ஞானத்தைப்போன்று விலைமதிப்பபுடையதல்ல.
தூயப் பொன்னால் உங்களால் ஞானத்தை வாங்கமுடியாது.
20 “எனவே ஞானம் எங்கிருந்து வருகிறது?
எங்கு நாம் புரிந்துகொள்ளுதலைக் காண முடியும்?
21 பூமியின் உயிரினங்களுக்கு எல்லாம் ஞானம் மறைந்திருக்கிறது.
வானத்துப் பறவைகள் கூட ஞானத்தைக் காண முடியாது.
22 மரணமும் அழிவும், ‘நாங்கள் ஞானத்தைக் கண்டதில்லை.
நாங்கள் அதைக் குறித்த வதந்திகளைக் காதினால் மட்டும் கேட்டோம்’ என்கின்றன.
23 “தேவன் மட்டுமே ஞானத்தின் வழியை அறிகிறார்.
தேவன் மட்டுமே ஞானம் இருக்குமிடத்தை அறிகிறார்.
24 பூமியின் இறுதிப் பகுதிகளையும் தேவனால் பார்க்க முடிகிறது.
வானின் கீழுள்ள எல்லாவற்றையும் தேவன் பார்க்கிறார்.
25 தேவன் காற்றிற்கு அதன் வல்லமையை அளித்தார்.
கடல்களை எத்தனை பெரிதாக படைக்க வேண்டுமென்று தேவன் முடிவெடுத்தார்.
26 எங்கே மழையை அனுப்புவதென்றும்,
இடி முழக்கங்களை எங்கே செலுத்துவதென்றும் தேவன் முடிவெடுக்கிறார்.
27 தேவன் ஞானத்தைக் கண்டு, அதைப் பற்றி யோசித்தார்.
ஞானத்தின் மதிப்பை தேவன் கண்டு, அதனை ஏற்றுக்கொண்டார்.
28 தேவன் மனிதரை நோக்கி, ‘கர்த்தருக்கு பயப்படுங்கள், அவரை மதியுங்கள்.
அதுவே ஞானம் ஆகும், தீமைச் செய்யாதீர்கள் அதுவே புரிந்து கொள்ளும் திறன் ஆகும்!’” என்றார்.
ஆவியின் வரங்களைப் பயன்படுத்துங்கள்
14 அன்பை நாடுங்கள். ஆவியானவரின் வரங்களைப் பெற விரும்புங்கள். தீர்க்கதரிசனம் சொல்லும் வரத்திற்காகப் பெரிதும் முயலுங்கள். 2 ஏனென்று உங்களுக்கு விளக்குகிறேன். வேறு மொழியில் பேசும் வரத்தைப் பெற்றவன் மக்களிடம் அதனைப் பேசவில்லை. அவன் தேவனிடம் பேசுகிறான். வேறு எவரும் அவனைப் புரிந்துகொள்வதில்லை. அவன் ஆவியானவர் மூலமாக இரகசியங்களை வெளிப்படுத்துகிறான். 3 ஆனால் தீர்க்கதரிசனம் சொல்கிற ஒருவன் மக்களிடம் பேசுகிறான். அவன் மக்களுக்கு வல்லமை, உற்சாகம், ஆறுதல் ஆகியவற்றைக் கொடுக்கிறான். 4 வேறு மொழியில் பேசுகிறவன் அவனுக்கு மட்டுமே பயன்படுகிறான். ஆனால் தீர்க்கதரிசனம் சொல்கிறவன் சபை முழுமைக்கும் பயன்படுகிறான்.
5 நீங்கள் எல்லாரும் வேறு மொழிகளில் பேசும் வரத்தைԔபெற வேண்டுமென விரும்புகிறேன். ஆனால் நீங்கள் தீர்க்கதரிசனம் சொல்வதை இன்னும் அதிகமாய் விரும்புகிறேன். வேறு மொழிகளில் பேசுகிற மனிதனைவிட தீர்க்கதரிசனம் சொல்லக்கூடிய மனிதன் சிறந்தவன். வேறு மொழிகளைப் பேசும் மனிதன் அவற்றை விளக்கிக் கூற முடியுமானால் அவனும் தீர்க்கதரிசனம் சொல்கிறவனை ஒத்தவன். அப்போது சபையும் அவன் கூறுவதன் மூலமாகப் பயன் அடைய முடியும்.
6 சகோதர, சகோதரிகளே, நான் வெவ்வேறு மொழிகளில் பேசுபவனாக உங்களிடம் வந்தால் அது உங்களுக்குப் பயன்படுமா? இல்லை, நான் புதிய உண்மை அல்லது அறிவு, அல்லது தீர்க்கதரிசனம், அல்லது போதனை ஆகியவற்றை உரைக்கும்படியாய் உங்களிடம் வந்தால் அது உங்களுக்குப் பயன்படும். 7 குழல், வீணை ஆகிய உயிரற்ற பொருட்கள் ஒலியெழுப்புவதைப் போன்று அது அமைந்துவிடும். வெவ்வேறு விதமான இசையொலிகள் தெளிவாக எழுப்பப்படாவிட்டால், இசைக்கும் இசையை நீங்கள் புரிந்துகொள்ள இயலாது. இசையைப் புரிந்துகொள்வதற்கு ஒவ்வொரு ராகமும் தெளிவாக மீட்டப்படுதல் வேண்டும். 8 யுத்தத்தின்போது எக்காள முழக்கம் சரியாக முழக்கப்படாவிட்டால் வீரர்களுக்குப் போருக்குத் தயார் செய்துகொள்ள வேண்டிய நேரம் அதுவென்பது தெரிய வராது.
9 அதுவே உங்களுக்கும் பொருந்தும். உங்கள் வாயின் வார்த்தைகள் தெளிவாக இருக்கட்டும். நீங்கள் தெளிவாகப் பேசாவிட்டால் உங்கள் கருத்தைப் பிறர் புரிந்துகொள்ள முடியாது. 10 இவ்வுலகில் பலவகையான பேச்சு மொழிகள் உண்டு என்பதும் அவை பொருள் பொருந்தியவை என்பதும் உண்மை. 11 ஒருவன் என்னிடம் கூறுவதன் பொருளை நான் புரிந்துகொள்ள முடியாவிட்டால், அவன் விசித்திரமாகப் பேசுவதாக நானும், நான் விசித்திரமாகப் பேசுவதாய் அவனும் எண்ணக்கூடும். 12 அதுவே உங்களுக்கும் பொருந்தும். நீங்கள் ஆன்மீக வரங்களைப் பெற விரும்புகிறீர்கள். சபை உறுதியாய் வளருவதற்குரிய வரங்களைப் பெற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.
13 ஆகவே வேறு மொழியில் பேசும் வரத்தைப் பெற்ற ஒருவன் அதை விளக்கிக் கூறும் திறமையை அடையும் பொருட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும். 14 நான் வேறு மொழியில் பிரார்த்தித்தால் என் ஆவி பிரார்த்திக்கும். ஆனால் என் மனம் எச்செயலையும் செய்யாது. 15 எனவே, நான் என்ன செய்ய வேண்டும்? நான் எனது ஆவியால் பிரார்த்திக்கும்போது, என் மனதாலும் பிரார்த்திப்பேன். எனது ஆவியால் நான் பாடுகையில், என் மனதாலும் பாடுவேன். 16 உங்கள் ஆவியால் நீங்கள் தேவனை வாழ்த்தக்கூடும். நீங்கள் நன்றியறிதலுக்கான பிரார்த்தனையைக் கூறும்போது அதைப் புரிந்துகொள்ளாத ஒருவன் “ஆமென்” என்று சொல்ல முடியாது. ஏன்? அவனுக்கு நீங்கள் சொல்வது என்னவென்று தெரியாது. 17 நீங்கள் தேவனுக்கு நல்லமுறையில் நன்றி தெரிவிக்கக்கூடும். ஆனால் மற்ற மனிதன் அதனால் பயன் அடையவில்லை.
18 உங்களைக் காட்டிலும் சிறந்த முறையில் வெவ்வேறு மொழிகளைப் பேசும் வரத்தை நான் பெற்றிருப்பதற்காக தேவனுக்கு நன்றி கூறுகிறேன். 19 ஆனால், சபையின் கூட்டங்களில் நான் புரியக் கூடிய மொழியில் ஐந்து வார்த்தைகளைப் பேசுவதையே, புரியாத மொழியில் ஆயிரம் வார்த்தைகளைப் பேசுவதைக் காட்டிலும் விரும்புவேன். நான் பிறருக்குப் போதிக்கும்படியாக, எனது புரிந்துகொள்ளும் தன்மையோடு பேசுவதையே தேர்ந்துகொள்கிறேன்.
20 சகோதர சகோதரிகளே, குழந்தைகளைப் போல யோசிக்காதீர்கள். தீய காரியங்களில், குழந்தைகளைப்போல இருங்கள். ஆனால் சிந்திக்கும்போது மனிதரைப்போல சிந்தியுங்கள்.
21 “வெவ்வேறு மொழிகளைப் பேசும் மனிதர்களையும்,
வேற்று மக்களின் மொழிகளையும் பயன்படுத்தி இந்த மக்களோடு பேசுவேன்.
அப்போதும் இந்த மக்கள்
எனக்குக் கீழ்ப்படிய மாட்டார்கள்” (A)
என்று எழுதப்பட்டிருக்கிறது.
இவ்வாறு கர்த்தர் சொல்கிறார்.
22 எனவே, வெவ்வேறு மொழிகளில் பேசும் வரம் விசுவாசமற்ற மக்களுக்கு நிரூபணத்தின் ஒரு அடையாளமாகும், விசுவாசமுள்ள மக்களுக்கு அல்ல. தீர்க்கதரிசனம் விசுவாசமுள்ள மக்களுக்கேயொழிய, விசுவாசமற்ற மக்களுக்கல்ல. 23 சபையினர் எல்லோரும் கூடி இருக்கையில் நீங்கள் அனைவரும் வெவ்வேறு மொழிகளில் பேசுவதாக வைத்துக்கொள்வோம். விசுவாசமற்றவர்களோ, உங்களைப் புரிந்துகொள்ள முடியாதவர்களோ அப்போது வந்தால் அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்களாகக் கருதுவர். 24 ஆனால், நீங்கள் தீர்க்கதரிசனம் உரைக்கும்போது விசுவாசமற்றவனோ, புரிந்துகொள்ளும் தன்மை இல்லாத மனிதனோ அங்கு வந்தால் அந்த மனிதனின் பாவம் அவனுக்கு உணர்த்தப்படும். நீங்கள் கூறும் காரியங்களின்படியே அவன் நியாயம் தீர்க்கப்படுவான். 25 அவன் உள்ளத்தின் இரகசியங்கள் அவனுக்குத் தெரிவிக்கப்படும். எனவே அந்த மனிதன் தலை குனிந்து வீழ்ந்து தேவனை வணங்குவான். “உண்மையாகவே, தேவன் உங்களோடு இருக்கிறார்” என்று அவன் கூறுவான்.
உங்கள் ஐக்கியம்
26 எனவே, சகோதர சகோதரிகளே, நீங்கள் என்ன செய்ய வேண்டும்? நீங்கள் சந்திக்கும்போது ஒருவரிடம் சங்கீதம் இருக்கிறது. மற்றொருவரிடம் போதனை இருக்கிறது. இன்னொருவரிடம் தேவனிடம் இருந்து பெற்ற புதிய செய்தி இருக்கிறது. ஒருவர் வேறு மொழியைப் பேசக்கூடும். இன்னொருவர் அதனை விளக்கியுரைக்கக் கூடும். இந்தக் காரியங்களின் நோக்கம் சபை வளருவதற்கு உதவுவதாக இருக்கவேண்டும். 27 நீங்கள் சந்திக்கும்போது வேறு மொழிகளில் ஒருவர் உங்களோடு பேசினால் இருவராக மட்டுமே இருக்க வேண்டும். மூன்று பேருக்குமேல் இதைச் செய்யக்கூடாது. அவர்கள் ஒருவருக்குப்பின் ஒருவர் பேசவேண்டும். இன்னொருவர் அவர்கள் பேசுவதை விளக்க வேண்டும். 28 அவ்வாறு விளக்கக்கூடியவர் அங்கே இல்லையென்றால் சபையினர் சந்திக்கும்போது வேறு மொழியில் பேசுகின்றவர் அமைதியாக இருக்க வேண்டும். தன்னிடமும் தேவனிடமும் மட்டுமே பேசிக்கொண்டு அவர் இருத்தல் வேண்டும்.
29 இரண்டு அல்லது மூன்று தீர்க்கதரிசிகள் மட்டுமே பேசவேண்டும். அவர்கள் கூறுவதைப் பிறர் நிதானிக்கவேண்டும். 30 சபையில் இருப்பவரில் ஒருவர் தேவனிடமிருந்து ஏதேனும் செய்தியைப் பெற்றால் முதலில் பேசுகிறவர் உடனே பேசுவதை நிறுத்த வேண்டும். 31 இந்த முறையில் ஒருவருக்குப் பின் ஒருவராக நீங்கள் தீர்க்கதரிசனம் உரைக்க முடியும். அவ்வாறாக எல்லா மக்களும் பயிற்சியும், உற்சாகமும் பெறுவார்கள். 32 தீர்க்கதரிசிகளின் ஆவிகளும்கூட தீர்க்கதரிசிகளால் கட்டுப்படுத்தப்பட முடியும். 33 தேவன் குழப்பத்தின் தேவனல்ல. அவர் சமாதானத்தின் தேவனாவார்.
34 சபைக் கூட்டங்களில் பெண்கள் அமைதியாக இருக்க வேண்டும். தேவனுடைய மக்களுடைய எல்லா சபைகளிலும் அவ்வாறே இருக்கவேண்டும். பெண்கள் பேசுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். அவர்கள் அடக்கமுடையோராக இருத்தல் வேண்டும். மோசேயின் சட்டமும் இதையே கூறுகிறது. 35 பெண்கள் எதையேனும் அறிந்துகொள்ள விரும்பினால் வீட்டில் தங்கள் கணவரைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். சபைக் கூட்டத்தில் பேசுவது பெண்ணுக்கு இழுக்கானது.
36 தேவனுடைய போதனை உங்களிடமிருந்து வந்ததா? இல்லை. அல்லது தேவனுடைய போதனையைப் பெற்றவர்கள் நீங்கள் மட்டுமா? இல்லை. 37 உங்களில் ஒருவன் தன்னைத் தீர்க்கதரிசியாகக் கருதினாலோ அல்லது ஆவியின் வரம் பெற்றிருப்பதாக எண்ணினாலோ, அவன் நான் உங்களுக்கு எழுதுவதை கர்த்தரின் கட்டளையாக அடையாளம் கண்டு கொள்ளட்டும். 38 இதை அந்த மனிதன் அறியவில்லையென்றால் அவன் தேவனால் அறியப்படாதவன்.
39 எனவே, சகோதர சகோதரிகளே, நீங்கள் தீர்க்கதரிசனம் உரைப்பதை விரும்புங்கள். அதே சமயத்தில் மக்கள் வேறு மொழிகளில் பேசும் வரத்தைத் தடுக்காதீர்கள். 40 ஆனால் தகுதியானதும் ஒழுங்கானதுமான வகையில் ஒவ்வொன்றும் செய்யப்பட வேண்டும்.
2008 by World Bible Translation Center