Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
யாத்திராகமம் 3

எரியும் புதர்

மோசேயின் மாமன் எத்திரோ என்ற

பெயருடையவன் ஆவான். (எத்திரோ மீதியானில் ஆசாரியனாக இருந்தான்) எத்திரோவின் ஆடுகளை மோசே கவனித்து வந்தான். ஒரு நாள், மோசே ஆடுகளைப் பாலைவனத்தின் மேற்குத் திசைக்கு அழைத்துச் சென்றான். மோசே ஓரேப் (சீனாய்) எனப்படும் தேவனின் மலைக்குப் போனான். மோசே மலையின்மேல், ஒரு எரியும் புதரில் கர்த்தருடைய தூதனைக் கண்டான். அது பின்வருமாறு நிகழ்ந்தது:

அழியாதபடி எரிந்துகொண்டிருந்த ஒரு புதரை மோசே கண்டான். மோசே புதரின் அருகே சென்று, அழியாதபடி அது எவ்வாறு எரிகிறது என்பதைப் பார்ப்பதற்குத் தீர்மானித்தான்.

புதரைப் பார்ப்பதற்கு மோசே வந்துகொண்டிருப்பதை கர்த்தர் கண்டார். எனவே, தேவன் புதரிலிருந்து, “மோசே, மோசே!” என்று கூப்பிட்டார்.

மோசே, “நான் இங்கே இருக்கிறேன்” என்றான்.

அப்போது கர்த்தர், “பக்கத்தில் நெருங்காதே. உனது செருப்புகளைக் கழற்று. நீ பரிசுத்த பூமியில் நின்றுகொண்டிருக்கிறாய். நான் உனது முற்பிதாக்களின் தேவன். நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனாகவும் இருக்கிறேன்” என்றார்.

தேவனைப் பார்ப்பதற்குப் பயந்ததால் மோசே முகத்தை மூடிக்கொண்டான்.

அப்போது கர்த்தர், “எகிப்தில் என் ஜனங்கள் படுகின்ற தொல்லைகளை நான் கண்டேன். எகிப்தியர்கள் அவர்களைத் துன்புறுத்தும்போது, அவர்களிடும் கூக் குரலை நான் கேட்டேன். அவர்கள் படும் வேதனையை நான் அறிவேன். நான் இப்போது இறங்கிப்போய், எகிப்தியரிடமிருந்து என் ஜனங்களை மீட்பேன். அந்நாட்டிலிருந்து தொல்லைகளில்லாமல் சுதந்திரமாக வாழத்தக்க ஒரு நல்ல நாட்டிற்கு அவர்களை அழைத்துச் செல்வேன். [a] அந்நாடு நல்ல பொருட்களால் நிரம்பியதாகும். கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் போன்ற ஜனங்கள் அந்நாட்டில் வாழ்கிறார்கள். நான் இஸ்ரவேல் ஜனங்களின் கூக்குரலைக் கேட்டேன். எகிப்தியர்கள் அவர்கள் வாழ்க்கையைக் கடினமாக்கியதையும் கண்டேன். 10 நான், உன்னை இப்போது பார்வோனிடம் அனுப்புகிறேன். நீ போய் எனது ஜனங்களாகிய இஸ்ரவேலரை எகிப்திலிருந்து வெளியே வழிநடத்து!” என்றார்.

11 ஆனால் மோசே தேவனிடம், “நான் பெரிய மனிதன் அல்ல, நான் எவ்வாறு பார்வோனிடம் போய், இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே வழிநடத்தக் கூடும்?” என்று கேட்டான்.

12 தேவன், “நான் உன்னோடு இருப்பேன். எனவே நீ இதைச் செய்ய முடியும். நான் உன்னை அனுப்புகிறேன் என்பதற்கு இதுவே சான்றாகும்! ஜனங்களை எகிப்திலிருந்து வழிநடத்திய பிறகு, நீ வந்து இம்மலையின் மேல் என்னைத் தொழுவாய்!” என்றார்.

13 அப்போது மோசே தேவனை நோக்கி, “நான் இஸ்ரவேல் ஜனங்களிடம் சென்று, ‘உங்கள் முற்பிதாக்களின் தேவன் என்னை அனுப்பினார்’ என்று கூறினால், அவர்கள், ‘அவரது பெயரென்ன?’ என்று கேட்டால், நான் என்ன சொல்லட்டும்?” என்று கேட்டான்.

14 அப்போது தேவன் மோசேயை நோக்கி, “அவர்களிடம் ‘இருக்கிறவராக இருக்கிறேன்’ என்று கூற வேண்டும். இஸ்ரவேல் ஜனங்களிடம் நீ போகும்போது, ‘இருக்கிறேன்’ என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார், என்று சொன்னார் என்று சொல்” என்றார். 15 மோசேயிடம் தேவன் மீண்டும், “இஸ்ரவேலர்களிடம், நீ சொல்ல வேண்டியது இதுதான்: ‘உங்களுடைய முற்பிதாக்களின் தேவனும், ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமானவர் யேகோவா என்பவர் ஆவார். என் பெயரும் எப்பொழுதும் யேகோவா ஆகும். அப்பெயரில்தான் தலைமுறை தலைமுறையாக ஜனங்கள் என்னை அறிவார்கள். யேகோவா என்னை உங்களிடம் அனுப்பினார்’ என்று ஜனங்களிடம் சொல்” என்றார்.

16 மேலும் கர்த்தர், “போய் ஜனங்களின் மூப்பர்களை (தலைவர்களை) ஒருமித்துக் கூடி வரச் செய்து அவர்களுக்கு, ‘உங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யேகோவா, எனக்குத் தரிசனமளித்தார். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, ஆகியோரின் தேவன் என்னிடம் பேசினார். கர்த்தர், ‘நான் உங்களை நினைவுகூர்ந்து, எகிப்தில் உங்களுக்கு நடந்ததையும் கண்டேன். 17 எகிப்தில் நீங்கள் அனுபவிக்கும் துன்பங்களிலிருந்து உங்களை விடுவிக்க முடிவு செய்தேன். இப்போது கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் போன்ற வெவ்வேறு ஜனங்களுக்குச் சொந்தமான தேசத்திற்கு உங்களை அழைத்துச் செல்வேன். பல நல்ல பொருட்களால் நிரம்பிய தேசத்திற்கு உங்களை வழிநடத்துவேன்’ என்று சொன்னார்” என்று சொல்.

18 “மூப்பர்கள் (தலைவர்கள்) உனக்குச் செவி கொடுப்பார்கள். பின்னர் நீயும், அவர்களும் எகிப்திய அரசனிடம் செல்லுங்கள். நீ அரசனிடம், ‘எபிரெய ஜனங்களின் தேவனாகிய யேகோவா எங்களிடம் பாலைவனத்தில் மூன்று நாட்கள் பயணப்படும்படியாகக் கூறினார். எங்கள் தேவனாகிய யேகோவாவுக்கு நாங்கள் அங்கு பலி செலுத்தவேண்டும்’ என்று சொல்லுங்கள்.

19 “ஆனால் எகிப்திய அரசன் உங்களைப் போக அனுமதிக்கமாட்டான் என்பதை அறிவேன். மிகப் பெரிய ஒரு வல்லமை மட்டுமே உங்களை அனுப்ப அவனைக் கட்டாயப்படுத்தும். 20 ஆகையால் எனது மிகுந்த வல்லமையை எகிப்துக்கு எதிராகப் பயன்படுத்துவேன். அந்த தேசத்தில் வியக்கும்படியான காரியங்கள் நிகழும்படி செய்வேன். நான் இதைச் செய்தபிறகு, அவன் உங்களைப் போக அனுமதிப்பான். 21 இஸ்ரவேல் ஜனங்களிடம் எகிப்திய ஜனங்கள் இரக்கம்கொள்ளும்படி செய்வேன். எகிப்தைவிட்டுப் புறப்படும்போது, உங்கள் ஜனங்களுக்கு எகிப்தியர்கள் பல வெகுமதிகளைக் கொடுப்பார்கள்.

22 “எல்லா எபிரெய பெண்களும் தங்கள் அண்டை வீடுகளிலும், தங்கள் வீடுகளிலும் வசிக்கும் எகிப்திய பெண்களிடம் பரிசுகளைக் கேட்க வேண்டும். அந்த எகிப்திய பெண்கள் அவர்களுக்குப் பரிசுகளைக் கொடுப்பார்கள். உன் ஜனங்கள் பொன், வெள்ளி, விலைமதிப்புள்ள ஆடைகள் ஆகியவற்றைப் பரிசாகப் பெறுவார்கள். பின் நீங்கள் எகிப்தை விட்டுப் புறப்படும்போது, உங்கள் குழந்தைகளுக்கு அப்பரிசுகளை அணிவிப்பீர்கள். இவ்வகையில் நீங்கள் எகிப்து தேசத்தின் செல்வத்தை எடுத்துச் செல்வீர்கள்” என்றார்.

லூக்கா 6

ஓய்வு நாளும் இயேசுவும்(A)

ஓய்வு நாளாகிய ஒரு தினத்தில் இயேசு தானியங்கள் விளைந்திருந்த நிலத்தின் வழியாக நடந்து கொண்டிருந்தார். அவரது சீஷர்கள் தானியத்தைக் கொய்து, தங்கள் கைகளினால் நசுக்கி அதைச் சாப்பிட்டனர். சில பரிசேயர்கள், “ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? ஓய்வு நாளன்று இவ்வாறு செய்வது மோசேயின் சட்டத்தை மீறுவதாகும்” என்று கூறினர்.

இயேசு, “தாவீதும் அவனது மக்களும் பசியுடன் இருந்தபோது செய்ததைக்குறித்து நீங்கள் படித்திருக்கிறீர்கள். தாவீது தேவாலயத்திற்குச் சென்றான். தாவீது, தேவனுக்குப் படைக்கப்பட்ட தேவனின் அப்பத்தை எடுத்து, அதைச் சாப்பிட்டான். தன்னோடு இருந்தவர்களுக்கும் சில அப்பத்தைக் கொடுத்தான். இது மோசேயின் சட்டத்திற்கு மாறானது. ஆசாரியர்கள் மட்டுமே அந்த அப்பத்தைப் புசிக்க முடியும் என்று அச்சட்டம் கூறுகின்றது” என்று பதில் சொன்னார். பின்பு இயேசு பரிசேயரை நோக்கி, “ஓய்வு நாளுக்கும் மனித குமாரன் ஆண்டவராக இருக்கிறார்” என்றார்.

ஓய்வு நாளில் குணப்படுத்துதல்(B)

மற்றொரு ஓய்வு நாள் வந்தபோது இயேசு ஜெப ஆலயத்திற்குச் சென்றார். இயேசு ஜனங்களுக்குப் போதித்தார். வலதுகை முடமான ஒருவன் அங்கிருந்தான். ஓய்வு நாளில் இயேசு அம்மனிதனைக் குணமாக்குவாரா என்பதைப் பார்ப்பதற்கு வேதபாரகர்களும், பரிசேயர்களும் காத்துக்கொண்டிருந்தனர். குற்றம் சுமத்தும்படியாக இயேசு ஏதேனும் தவறைச் செய்வாரா என அவர்கள் எதிர்ப்பார்த்திருந்தனர். அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை இயேசு அறிந்திருந்தார். அவர் முடமான கை கொண்ட அம்மனிதனை நோக்கி, “எழுந்து இம்மக்களுக்கு முன்பாக நில்” என்றார். அம்மனிதன் எழுந்து அங்கே நின்றான். பின் இயேசு அவர்களை நோக்கி, “ஓய்வு நாளில் நல்லதைச் செய்வதா, கெட்டதைச் செய்வதா, எது நல்லதென்று உங்களைக் கேட்கிறேன். ஓர் உயிரைப் பாதுகாப்பதா அல்லது அழிப்பதா எது சரியானது?” என்று கேட்டார்.

10 இயேசு சுற்றிலும் எல்லாரையும் நோக்கினார். இயேசு அந்த மனிதனை நோக்கி, “உன் கையை நான் பார்க்கட்டும்” என்றார். அம்மனிதன் கையை நீட்டினான் அந்தக் கை குணமானது. 11 பரிசேயர்களும், வேதபாரகர்களும் மிகவும் கோபமடைந்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர் “நாம் இயேசுவுக்கு என்ன செய்யக்கூடும்?” என்று கூறிக்கொண்டனர்.

அப்போஸ்தலர்களைத் தேர்ந்தெடுத்தல்(C)

12 அக்காலத்தில் இயேசு பிரார்த்தனை செய்யும்பொருட்டு ஒரு மலைக்குச் சென்றார். இரவு முழுவதும் தேவனிடம் பிரார்த்தனை செய்தவாறே அம்மலையில் இருந்தார். 13 மறு நாள் காலையில் இயேசு தனது சீஷர்களை அழைத்தார். அவர்களுள் பன்னிரண்டு பேரைத் தேர்ந்தெடுத்தார். அவர்களுக்கு “அப்போஸ்தலர்கள்” என்று பெயரிட்டார். அவர்கள்:

14 சீமோன் (இயேசு அவனுக்கு பேதுரு என்று பெயரிட்டார்)

அந்திரேயா என்னும் பேதுருவின் சகோதரன்,

யாக்கோபு,

யோவான்,

பிலிப்பு,

பர்தொலொமேயு,

15 மத்தேயு,

தோமா,

யாக்கோபு (அல்பேயுவின் மகன்),

சீமோன் (செலோத்தே என்று அழைக்கப்பட்டவன்)

16 யூதா, (யாக்கோபின் மகன்) யூதாஸ்காரியோத் என்பவர்கள் ஆவார்கள்.

இந்த யூதாஸ் இயேசுவைப் பகைவர்களிடம் ஒப்படைத்தவனாவான்.

போதனையும்-குணமாக்குதலும்(D)

17 இயேசுவும் அவருடைய சீஷர்களும் மலையிலிருந்து இறங்கினர். இயேசு சமவெளியான இடத்தில் நின்றார். அவருடைய சீஷர்கள் கூட்டமாக அங்கே குழுமியிருந்தனர். மேலும் யூதேயா, எருசலேம் ஆகிய பகுதிகளிலிருந்தும், தீரு, சீதோன் ஆகிய கடலோரத்துப் பட்டணங்களிலிருந்தும் ஏராளமான மக்கள் அங்கு வந்திருந்தனர். 18 அவர்கள் இயேசுவின் போதனைகளைக் கேட்கவும் தங்கள் நோய்களில் இருந்து குணம் பெறவும் அங்கு வந்தனர். பிசாசின் அசுத்த ஆவிகளால் துன்புற்ற மக்களை இயேசு குணமாக்கினார். 19 எல்லா மக்களும் இயேசுவைத் தொடும்படியாக முயன்றனர். ஏனெனில் அவரிடமிருந்து வல்லமை வெளிப்பட்டது. இயேசு அவர்கள் எல்லோரையும் குணப்படுத்தினார்.

20 இயேசு தம்மைப் பின்பற்றுகிறவர்களைப் பார்த்து,

“ஏழைகளே, நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
    ஏனெனில் தேவனுடைய இராஜ்யம் உங்களுக்குரியது.
21 இப்போது பசியால் வாடுகிற நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
    ஏனெனில் நீங்கள் திருப்தியடைவீர்கள்.
இப்பொழுது அழுகிற நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
    ஏனெனில் நீங்கள் சந்தோஷமாக நகைப்பீர்கள்.

22 “மக்கள் உங்களை வெறுக்கும்போதும் நிராகரிக்கும்போதும் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். நீங்கள் மனித குமாரனுக்கு உரியோர். ஆதலால் உங்களைத் தீயோர் என்றும் சொல்லுவார்கள். அவர்கள் அதைச் சொல்லும்போது நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். 23 உங்களுக்குப் பரலோகத்தில் பெரிய வெகுமதி காத்திருப்பதால் இத்தருணங்களில் நீங்கள் மகிழுங்கள். உங்களை அவர்கள் மிக இழிவான முறையில் நடத்துவதைப்போலவே அவர்கள் முன்னோர் தீர்க்கதரிசிகளையும் இழிவுபடுத்தினர்.

24 “ஆனால் செல்வந்தர்களே நீங்கள் உங்கள் வாழ்வில் சுகமாக வாழ்ந்ததால் இனிமேல் அது உங்களுக்குக் கேடாக இருக்கும்.
25 இப்போது திருப்தி பெற்ற மக்களே, அது உங்களுக்குக் கேடாக இருக்கும்.
    ஏனெனில் நீங்கள் பசியடைவீர்கள்.
தற்போது சிரிக்கும் மக்களே, அது உங்களுக்குக் கேடாக இருக்கும்.
    ஏனெனில் நீங்கள் வேதனையும் அழுகையும் அடைவீர்கள்.

26 “எல்லாரும் உங்களைக் குறித்து நல்லதாகச் சொல்லுகையில் மோசமானதே நேரும்.

    பொய் தீர்க்கதரிசிகளைக் குறித்து அவர்கள் முன்னோர் நல்லதாகவே சொன்னார்கள்” என்றார்.

உங்கள் பகைவரை நேசியுங்கள்(E)

27 “என் போதனைகளைக் கேட்கிற மக்களே உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் பகைவர்களை நேசியுங்கள். உங்களை வெறுக்கிற மக்களுக்கு நன்மை செய்யுங்கள். 28 உங்களிடம் தீயவற்றைக் கூறுகிற மக்களை ஆசீர்வதிக்குமாறு தேவனை வேண்டுங்கள். உங்களை இழிவாக நடத்துகிறவர்களுக்காகப் பிரார்த்தனை பண்ணுங்கள். 29 ஒருவன் உங்களை ஒரு கன்னத்தில் அடித்தால் அவனை மறு கன்னத்திலும் அடிக்க அனுமதியுங்கள். உங்கள் அங்கியை யாரேனும் ஒருவன் எடுத்தால் உங்கள் சட்டையையும் அவன் எடுத்துக்கொள்ள அனுமதியுங்கள். 30 உங்களிடம் கேட்கிறவனுக்குக் கொடுங்கள். உங்களுக்குரிய பொருளை ஒருவன் எடுத்துக்கொண்டால் அதைத் திரும்பக் கேட்காதீர்கள். 31 உங்களுக்குப் பிறர் எதைச் செய்ய விரும்புகிறீர்களோ அதையே பிறருக்கும் செய்யுங்கள்.

32 “உங்களை நேசிக்கிறவர்களையே நீங்களும் நேசித்தால் அதற்காக உங்களைப் புகழ வேண்டியது தேவையா? இல்லை. பாவிகளும் தங்களை நேசிக்கிறவர்களிடம் அன்பு காட்டுகிறார்களே! 33 உங்களுக்கு நல்லதைச் செய்பவர்களுக்கு நீங்களும் நன்மை செய்தால், அவ்வாறு செய்வதற்காக உங்களைப் புகழ வேண்டுமா? இல்லை. பாவிகளும் அதைச் செய்கிறார்களே! 34 திருப்பி அடைத்துவிட முடிந்தவர்களுக்கு நீங்கள் கடன் கொடுத்தால், உங்களை அதற்காகப் புகழக் கூடுமா? இல்லை. பாவிகளும் கூட பிற பாவிகளுக்கு அதே தொகையைத் திரும்பப் பெறும்படியாக கடன் உதவி செய்கிறார்களே!

35 “எனவே, பகைவர்களிடம் அன்பு காட்டுங்கள். அவர்களுக்கு நன்மை செய்யுங்கள். திரும்பக் கிடைக்கும் என்கிற நம்பிக்கை சிறிதும் இல்லாவிடினும் கூட கடன் கொடுங்கள். நீங்கள் இந்தக் காரியங்களைச் செய்தால் அதற்கு மிகுந்த பலனைப் பெறுவீர்கள். மகா உன்னதமான தேவனின் பிள்ளைகள் ஆவீர்கள். ஆம், ஏனெனில் பாவிகளுக்கும், நன்றியற்ற மனிதர்களுக்கும் தேவன் நல்லவர். 36 உங்கள் தந்தை அன்பும் இரக்கமும் உடையவராக இருப்பது போலவே, நீங்களும் அன்பும் இரக்கமும் உடையவர்களாக இருங்கள்.

உங்களையே உற்றுப் பாருங்கள்(F)

37 “மற்றவர்களை நியாயம் தீர்க்காதிருங்கள். இதனால் நீங்கள் நியாயம் தீர்க்கப்படமாட்டீர்கள். மற்றவர்களைப் பழிக்காதீர்கள். இதனால் நீங்களும் பழிக்கு ஆளாகமாட்டீர்கள். பிறரை மன்னியுங்கள். இதனால் நீங்களும் மன்னிக்கப்படுவீர்கள். 38 பிறருக்குக் கொடுங்கள். நீங்களும் பெறுவீர்கள். உங்களுக்கு மிகுதியாக அளிக்கப்படும். உங்கள் கைகளில் கொள்ளமுடியாதபடிக்கு உங்களுக்கு அள்ளி வழங்கப்படும். உங்கள் மடிகளில் கொட்டும்படிக்கு மிகுதியாக உங்களுக்குத் தரப்படும். நீங்கள் பிறருக்குக் கொடுக்கிறபடியே தேவனும் உங்களுக்குக் கொடுப்பார்” என்றார்.

39 இயேசு அவர்களுக்கு ஓர் உவமையைக் கூறினார். “ஒரு குருடன் இன்னொரு குருடனுக்கு வழிகாட்ட முடியுமா? இல்லை. இருவரும் குழிக்குள் விழுவார்கள். 40 ஆசிரியரைக் காட்டிலும் மாணவன் நன்கு கற்றுத் தேர்ந்தபோது, தனது ஆசிரியரைப்போல் விளங்குவான்.

41 “உன் கண்ணில் இருக்கிற பெரிய மரத்துண்டைக் கவனிக்க முடியாதபோது, உன் சகோதரன் கண்ணில் இருக்கிற சிறு தூசியை நீ கவனிப்பது ஏன்? 42 நீ உன் சகோதரனை நோக்கி, ‘சகோதரனே! உன் கண்ணில் இருக்கிற சிறு தூசியை எடுத்துப் போடட்டுமா?’ என்கிறாய். ஏன் இதைச் சொல்கிறாய்? நீ உன் கண்ணில் இருக்கிற பெரிய மரத்துண்டைப் பார்ப்பதில்லை. நீ வேஷமிடுகின்றாய். முதலில் உன் கண்ணில் இருக்கும் மரத்துண்டை எடுத்துவிடு. அப்போது உன் சகோதரன் கண்ணிலிருக்கும் தூசியை எடுத்துப்போடுவதற்கு நீ தெளிவாகப் பார்க்க முடியும்.

இருவகைப் பழங்கள்(G)

43 “ஒரு நல்ல மரம் கெட்ட பழத்தைக் கொடுக்காது. அவ்வாறே ஒரு கெட்ட மரமும் நல்ல பழத்தைக் கொடுக்காது. 44 ஒவ்வொரு மரமும் அது கொடுக்கிற பழத்தினால் அறியப்படும். முட்செடிகளில் இருந்து மக்கள் அத்திப் பழங்களைச் சேர்ப்பதில்லை. புதர்களிலிருந்து திராட்சைப் பழங்களை அவர்கள் பெறுவதில்லை. 45 நல்ல மனிதனின் இதயத்தில் நல்ல காரியங்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். எனவே அவன் இதயத்தில் இருந்து நல்ல காரியங்களையே வெளிப்படுத்துவான். ஆனால், தீய மனிதனின் இதயத்தில் தீய காரியங்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். எனவே அவன் தீய காரியங்களை வெளிப்படுத்துவான். ஏனெனில் ஒருவனின் வாய் வழியே வெளிப்படும் வார்த்தைகள் அவனுடைய இதயத்தில் இருப்பவற்றின் வெளிப்பாடே ஆகும்.

இருவகை மனிதர்கள்(H)

46 “நான் கூறுவதை நீங்கள் செய்யாமல் என்னை ‘ஆண்டவரே, ஆண்டவரே’ என்று ஏன் அழைக்கிறீர்கள்? 47 என்னிடம் வந்து, என் போதனைகளைக் கேட்டு, அதன்படி கீழ்ப்படிகிற ஒவ்வொரு மனிதனும், 48 வீட்டைக் கட்டுகிற ஒரு மனிதனைப் போல் இருக்கிறான். அவன் ஆழமாகத் தோண்டி, உறுதியான பாறையின் மீது அவனுடைய வீட்டைக் கட்டுகிறான். வெள்ளப்பெருக்கின்போது, அவ்வீட்டை வெள்ளம் அடித்துச் செல்ல முற்படும். ஆனால் வெள்ளப்பெருக்கு அவ்வீட்டை அசைக்க முடியாது. ஏனெனில் அவ்வீடு உறுதியாகக் கட்டப்பட்டுள்ளது.

49 “ஆனால் என் வார்த்தையைக் கேட்டு, அவற்றின்படி செய்யாத ஒவ்வொரு மனிதனும் பாறையின் மேல் தன் வீட்டைக் கட்டாத மனிதனுக்கு ஒப்பாக இருக்கிறான். வெள்ளப் பெருக்கின்போது அவ்வீடு எளிதில் இடிந்து போகும். அவ்வீடு முழுக்க நாசமாகிவிடும்” என்றார்.

யோபு 20

சோப்பார் பதிலளிக்கிறான்

20 அப்போது நாகமாவின் சோப்பார் பதிலாக:

“யோபுவே, உன்னிடம் குழப்பமான எண்ணங்கள் மிகுந்துள்ளன.
    எனவே நான் உனக்குப் பதில் கூறவேண்டும்.
    நான் நினைத்துக்கொண்டிருப்பதை விரைந்து உனக்குக் கூறவேண்டும்.
நீ உனது பதில்களால் எங்களை அவமானப்படுத்தினாய்!
    ஆனால் நான் ஞானமுள்ளவன் உனக்கு எவ்வாறு பதில் தரவேண்டும் என்பதை நான் அறிவேன்.

4-5 “தீயவனின் மகிழ்ச்சி நீண்டகாலம் நிலைக்காது என்பதை நீ அறிவாய்.
    ஆதாம், பூமியில் வந்த காலம் முதல் அதுவே உண்மையாக உள்ளது.
    தேவனைப்பற்றிக் கவலைப்படாதவனின் மகிழ்ச்சி குறுகிய காலமே நிலைக்கும்.
தீயவனின் பெருமை வானத்தை எட்டலாம்.
    அவன் தலை மேகங்களைத் தொடலாம்.
அவன் தன் மலத்தைப்போலவே, என்றென்றும் அழிக்கப்படுவான்.
    அவனை அறிந்த ஜனங்கள் ‘அவன் எங்கே?’ என்பார்கள்.
கனவைப்போன்று, அவன் பறந்துப் போவான்.
    ஒருவனும் அவனைக் கண்டடைய முடியாது.
    அவன் துரத்தப்பட்டு, ஒரு கெட்ட கனவாய் மறக்கப்படுவான்.
அவனைப் பார்த்த ஜனங்கள் மீண்டும் அவனைக் காணமாட்டார்கள்.
    அவன் குடும்பத்தினர் அவனை மீண்டும் பார்ப்பதில்லை.
10 அவன் ஏழைகளிடமிருந்து எடுத்ததை அத்தீயவனின் பிள்ளைகள் திரும்பக் கொடுப்பார்கள்.
    தீயவனின் சொந்தக் கைகளே அவனது செல்வத்தைத் திருப்பிக் கொடுக்கும்.
11 அவன் இளைஞனாயிருந்தபோது, அவன் எலும்புகள் பெலனுள்ளவையாக இருந்தன.
    ஆனால், உடம்பின் பிற பகுதிகளைப்போன்று, அவை விரைவில் துகளில் கிடக்கும்.

12 “கெட்ட மனிதனின் வாய் தீமையை இனிமையாக ருசிக்கும்.
    அவன் அதை முழுவதும் சுவைப்பதற்காக அவனது நாவின் அடியில் வைப்பான்.
13 கெட்ட மனிதன் தீமையில் களிப்பான்.
    அவன் அதை விட்டுவிட விரும்பமாட்டான்.
    அது அவனது வாய்க்குள்ளிருக்கும் இனிப்பைப் போலிருக்கும்.
14 ஆனால் அத்தீமை அவன் வயிற்றில் நஞ்சாகும்.
    பாம்பின் விஷத்தைப்போன்று அது அவனுள் கசப்பான விஷமாக மாறும்.
15 தீயவன் செல்வங்களை விழுங்கியிருக்கிறான்.
    ஆனால் அவன் அவற்றை வாந்தியெடுப்பான்.
    தீயவன் அவற்றை வாந்தியெடுக்கும்படி தேவன் செய்வார்.
16 பாம்புகளின் விஷத்தைப்போன்று, தீயவன் பருகும் பானமும் இருக்கும்.
    பாம்பின் நாக்கு அவனைக் கொல்லும்.
17 அப்போது, அத்தீயவன் தேனாலும் பாலாலும் ஓடுகிற நதிகளைக் கண்டு களிக்கமாட்டான்.
18 தீயவன், அவன் சம்பாதித்த செல்வங்களையெல்லாம் திருப்பித் தரும்படி கட்டாயப்படுத்தப்படுவான்.
    தன்னுடைய உழைப்பின் பலனை அவன் அனுபவிக்க அனுமதிக்கப்படமாட்டான்.
19 அவன் மற்றவர்கள் கட்டியிருந்த வீடுகளை அபகரித்துக்கொண்டான்.

20 “தீயவன் ஒருபோதும் திருப்தியடைவதில்லை.
    அவனது செல்வம் அவனைக் காப்பாற்றாது.
21 அவன் சாப்பிடுகிறபோது, எதுவும் மீதியாயிருப்பதில்லை.
    அவன் வெற்றி தொடராது.
22 தீயவனுக்கு மிகுதியாக இருக்கும்போது அவன் துன்பங்களால் அழுத்தப்படுவான்.
    அவனது சிக்கல்கள் அவன்மேல் வந்து அழுத்தும்!
23 தீயவன் அவனுக்குத் தேவையானவற்றையெல்லாம் உண்ட பின்பு,
    அவனுக்கெதிராக தேவன் அவரது எரியும் கோபத்தை வீசுவார்.
    தீயவன் மேல் தேவன் தண்டனையைப் பொழிவார்.
24 தீயவன் இரும்பு வாளுக்குத் தப்பி ஓடிவிடலாம்,
    ஆனால் ஒரு வெண்கல அம்பு அவனை எய்து வீழ்த்தும்.
25 அவன் உடம்பின் வழியாக அந்த வெண்கல அம்புச் சென்று முதுகின் வழியாக வெளிவரும்.
    அதன் பிரகாசிக்கும் (ஒளிவிடும்) முனை அவனது ஈரலைப் பிளக்கும்.
    அவன் பயங்கர பீதி அடைவான்.
26 அவன் பொக்கிஷங்கள் அழிந்துபோகும்.
    எந்த மனிதனும் பற்றவைக்காத ஒரு நெருப்பு அவனை அழிக்கும்.
    அவன் வீட்டில் மீந்திருக்கும் ஒவ்வொரு பொருளையும் அந்த நெருப்பு அழிக்கும்.
27 தீயவன் குற்றவாளி என்று பரலோகம் நிரூபிக்கும் (நிறுவும்)
    பூமி அவனுக்கெதிராக சாட்சிச் சொல்லும்.
28 தேவனுடைய கோப வெள்ளத்தில்
    அவன் வீட்டிலுள்ளவை எல்லாம் இழுத்துச் செல்லப்படும்.
29 தீயோருக்கு தேவன் இவற்றைச் செய்யத் திட்டமிடுகிறார்.
    அவர்களுக்கு அதையே கொடுக்க தேவன் திட்டமிடுகிறார்” என்றான்.

1 கொரி 7

திருமணம் குறித்த போதனைகள்

இப்போது, நீங்கள் எனக்கு எழுதிய விஷயங்களைக் குறித்து விவாதிப்பேன். ஒரு மனிதன் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது நல்லது. ஆனால் பாலுறவினால் ஏற்படும் பாவம் எப்போதும் ஆபத்துக்குரியதென்பதால் ஒவ்வொரு ஆணும் தன் சொந்த மனைவியோடு வாழ்தல் வேண்டும். ஒவ்வொரு பெண்ணும் அவளது சொந்தக் கணவனோடு இருத்தல் வேண்டும். ஒரு மனைவி என்கிற அளவில் எவற்றையெல்லாம் கணவனிடமிருந்து பெறக்கூடுமோ, அவை அனைத்தையும் கணவன் அவனது மனைவிக்கு வழங்கவேண்டும். அவ்வாறே ஒரு கணவன் என்கிற அளவில் எவற்றையெல்லாம் மனைவியிடமிருந்து பெறக் கூடுமோ அவை அனைத்தையும் மனைவி தன் கணவனுக்கு வழங்குதல் வேண்டும். மனைவிக்கு அவளது சரீரத்தின் மீது சொந்தம் பாராட்டும் அதிகாரம் கிடையாது. அவள் சரீரத்தின் மீது அவளது கணவனுக்கே அதிகாரம் உண்டு. கணவனுக்கு அவன் சரீரத்தின் மீது எந்த அதிகாரமும் கிடையாது. அவன் மனைவிக்கே அவனது சரீரத்தின்மீது அதிகாரம் உண்டு. கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் சரீரத்தைப் பகிர்ந்துகொள்ள மறுப்பு தெரிவிக்காதீர்கள். ஆனால் விதிவிலக்காக சில காலத்திற்குப் பாலுறவில் ஈடுபடாமல் இருப்பதென்றால் நீங்கள் இருவருமாக ஒப்பந்தத்திற்கு வரவேண்டும். பிரார்த்தனையில் ஈடுபடுவதற்காக இதை நீங்கள் செய்யலாம். பின்னர் இருவரும் ஒருமித்து வாழ்தல் வேண்டும். இது எதற்காக எனில், பலவீனமான தருணங்களில் உங்களை சாத்தான் கவர்ந்திழுத்துவிடாமல் இருப்பதற்காகும். நீங்கள் சில காலம் பிரிந்திருப்பதற்கு அனுமதி அளிப்பதற்காகவே நான் இதனைச் சொல்கிறேன். இது கட்டளை அல்ல. எல்லோரும் என்னைப் போல் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் ஒவ்வொருவனும் அவனுக்குரிய வரத்தை தேவனிடம் இருந்து பெற்றிருக்கிறான். ஒருவனுக்கு ஒரு வகை வரமும், இன்னொருவனுக்கு வேறு வகை வரமும் அளிக்கப்படுள்ளன.

திருமணம் செய்யாதவர்களுக்காகவும், விதவைகளுக்காகவும் இப்போது இதனைக் கூறுகின்றேன். என்னைப்போல தனித்து வாழ்தல் அவர்களுக்கு நல்லது. ஆனால் சுய கட்டுப்பாடு இல்லையெனில், அவர்கள் திருமணம் செய்துகொள்ளவேண்டும். பாலுறவு ஆசையினால் வெந்துபோவதைக் காட்டிலும் திருமணம் புரிந்துகொள்வது நல்லது.

10 திருமணம் புரிந்தவர்களுக்காக இப்போது இந்தக் கட்டளையை இடுகிறேன். (இந்த ஆணை என்னுடையதன்று, ஆனால் கர்த்தருடையது) மனைவி கணவனை விட்டுப் பிரியக் கூடாது. 11 ஆனால், மனைவி கணவனைப் பிரிந்தால் அவள் மீண்டும் திருமணம் செய்துகொள்ளக் கூடாது. அல்லது, அவளுடைய கணவனோடேயே நல்லுறவுடன் மீண்டும் வாழவேண்டும். கணவனும் மனைவியை விவாகரத்து செய்யக் கூடாது.

12 மற்ற எல்லாருக்காகவும் இதனைக் கூறுகிறேன். (நானே இவற்றைக் கூறுகிறேன். கர்த்தர் அல்ல) கிறிஸ்துவுக்குள்ளான ஒரு சகோதரன் விசுவாசமற்ற ஒருத்தியை மணந்திருக்கக்கூடும். அவள் அவனோடு வாழ விரும்பினால் அவன் அவளை விவாகரத்து செய்யக்கூடாது. 13 விசுவாசமற்ற கணவனோடு ஒரு பெண் வாழ்தல் கூடும். அவளோடு அவன் வாழ விரும்பினால், அவனை அவள் விவாகரத்து செய்யக் கூடாது. 14 விசுவாசமற்ற கணவன் விசுவாசம் உள்ள மனைவி மூலமாக பரிசுத்தமாக்கப்படுவான். விசுவாசமற்ற மனைவி விசுவாசமுள்ள கணவனால் பரிசுத்தமாக்கப்படுவாள். இது உண்மையில்லையெனில் உங்கள் பிள்ளைகள் பரிசுத்தமற்றவர்களாகி விடுவார்கள். ஆனால் இப்போது உங்கள் பிள்ளைகள் பரிசுத்தமானவர்கள்.

15 விசுவாசமற்ற ஒருவன் விலக எண்ணினால், அவன் விலகி வாழட்டும். அவ்வாறு நிகழ்ந்தால் கிறிஸ்துவுக்குள்ளான சகோதரனோ அல்லது சகோதரியோ விடுதலை பெறுவார். அமைதி நிரம்பிய வாழ்க்கைக்காக தேவன் நம்மை அழைத்தார். 16 மனைவியே! நீ ஒருவேளை உன் கணவனை காப்பாற்றக் கூடும். கணவனே, நீ ஒருவேளை உன் மனைவியை காப்பாற்றக் கூடும். பிற்காலத்தில் நிகழப்போவதை நீங்கள் தற்சமயம் அறியமாட்டீர்கள்.

தேவன் அழைத்தபடியே வாழுங்கள்

17 தேவன் உங்களுக்குத் தந்த வாழ்வின்படியே ஒவ்வொருவனும் வாழ்ந்துகொண்டிருக்கட்டும். தேவன் உங்களை அழைத்தபோது நீங்கள் இருந்தபடியே வாழுங்கள். எல்லா சபைகளிலும் நான் உருவாக்கிய விதி இது தான். 18 அழைக்கப்பட்டபோது ஒருவன் விருத்தசேதனம் செய்யப்பட்டவனாக இருந்தால், பின்னர் அதன் அடையாளங்களை மாற்ற அவன் முயற்சி செய்யக் கூடாது. அழைக்கப்பட்டபோது விருத்தசேதனம் செய்யப்படாதவனாக இருந்தால், பிறகு அவன் விருத்தசேதனம் செய்துகொள்ளக் கூடாது. 19 ஒருவன் விருத்தசேதனம் செய்யப்பட்டவனா, செய்யப்படாதவனா என்பது முக்கியமில்லை. தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதே முக்கியமான காரியம். 20 தேவன் அழைத்தபோது இருந்தபடியே ஒவ்வொருவனும் இருக்கட்டும். 21 தேவன் அழைத்தபோது நீ அடிமையாய் இருந்தால் நீ அதுபற்றிக் கவலைப்படாதே. ஆனால் நீ சுதந்தரமானவனாக இருந்தால், பிறகு எல்லாவகையிலும் வாய்ப்பைப் பயன்படுத்து. 22 கர்த்தர் அழைத்தபோது அடிமையாய் இருந்தவன் கர்த்தருக்குள் சுதந்தர மனிதனாக இருக்கிறான். அவன் கர்த்தருக்குரியவன். அழைக்கப்பட்டபோது சுதந்திர மனிதனாக இருந்தவனோ இப்போது கிறிஸ்துவுக்கு அடிமையாக இருக்கிறான். 23 நீங்கள் விலை கொடுத்து வாங்கப்பட்டீர்கள். எனவே மனிதருக்கு அடிமை ஆகாதீர்கள். 24 சகோதரர்களே, சகோதரிகளே! தேவனோடான உங்கள் புது வாழ்க்கையில், உங்களில் ஒவ்வொருவரும் நீங்கள் அழைக்கப்பட்டபோது இருந்தபடியே வாழ்க்கையைத் தொடரவேண்டும்.

திருமணம் குறித்த கேள்விகள்

25 திருமணம் செய்துகொள்ளாதவர்களைப் பற்றி இப்போது எழுதுகின்றேன். கர்த்தரிடமிருந்து இது பற்றிய கட்டளை எதுவும் எனக்கு வரவில்லை. ஆனால், என் கருத்தைச் சொல்கிறேன். கர்த்தர் என்னிடம் இரக்கம் காட்டுவதால் என்னை நீங்கள் நம்பலாம். 26 இது சச்சரவுகளின் காலம். எனவே நீங்கள் இருக்கிறபடியே வாழ்வது உங்களுக்கு நல்லது என நினைக்கிறேன். 27 உங்களுக்கு மனைவி இருந்தால் அவளை விலக்கி வைக்க முற்படாதீர்கள். நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால் ஒரு மனைவியைத் தேட முயலாதீர்கள். 28 ஆனால் நீங்கள் திருமணம் செய்ய முடிவுசெய்தால், அது பாவமல்ல திருமணமாகாத ஒரு பெண் திருமணம் செய்துகொள்வதும் பாவமல்ல. ஆனால் திருமணம் செய்துகொள்பவர்களுக்கோ இந்த வாழ்க்கையில் ஏராளமான தொல்லைகள். நீங்கள் அத்தொல்லைகளிலிருந்து விடுபட்டவர்களாய் இருக்க வேண்டுமென விரும்புகிறேன்.

29 சகோதர சகோதரிகளே, நான் கருதுவது இதுதான். நமக்கு அதிக காலம் தரப்படவில்லை. இப்போதிருந்தே மனைவியுள்ளவர்கள் மனைவி இல்லாதவர்களைப்போல தங்கள் நேரத்தை கர்த்தரின் சேவைக்காகப் பயன்படுத்துதல் வேண்டும். 30 துக்கம் உடையவர்கள் துக்கமில்லாதவர்களைப்போல வாழ்தல் வேண்டும். சந்தோஷம் உடையவர்கள் சந்தோஷம் அற்றவர்களைப் போல வாழவேண்டும். பொருள்களை வாங்கும் மனிதர்கள் ஏதுமற்றவர்கள்போல இருக்கவேண்டும். 31 இந்த உலகப் பொருள்களைப் பயன்படுத்துபவர்கள், அந்தப் பொருட்கள் முக்கியமானவை அல்ல என்பது போன்று வாழவேண்டும். இந்த உலகமும் இந்த உலகத்தின் வழிகளும் மறைந்துபோகும். எனவே, நீங்கள் இவ்வாறு வாழ வேண்டும்.

32 நீங்கள் கவலையினின்று விடுபட வேண்டுமென நான் விரும்புகிறேன். திருமணம்Ԕஆகாதவன் கர்த்தரின் வேலையில் மும்முரமாய் ஈடுபடுகிறான். அவன் கர்த்தரை மகிழ்ச்சிப்படுத்த முயற்சி செய்கிறான். 33 ஆனால், திருமணமானவனோ உலகத்துப் பொருள்கள் தொடர்பான வேலைகளில் மும்முரமாய் ஈடுபடுகிறான். அவன் மனைவியை மகிழ்ச்சிப்படுத்த முயற்சிக்கிறான். 34 அவன் இரண்டு காரியங்களை நினைவில் கொள்ள வேண்டும். மனைவியை மகிழ்ச்சிப்படுத்துவதும், கர்த்தரை மகிழ்ச்சிப்படுத்துவதும் ஆகியவை அவை. திருமணம் ஆகாத பெண்ணோ, ஒரு இளம்பெண்ணோ கர்த்தரின் வேலையில் முனைவாள். கர்த்தருக்கு சரீரத்தையும் ஆன்மாவையும் முழுக்க அர்ப்பணிக்க விரும்புகிறாள். ஆனால், திருமணமான பெண்ணோ உலகக் காரியங்களில் தீவிரமாக ஈடுபடுகிறாள். அவள் கணவனை மகிழ்ச்சிப்படுத்த முயற்சி செய்கிறாள். 35 உங்களுக்கு உதவிசெய்வதற்காகவே இவற்றைச் சொல்கிறேன். உங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அல்ல. ஆனால் நீங்கள் தக்க வழியில் நடக்க வேண்டுமென விரும்புகிறேன். உங்கள் நேரத்தைப் பிற பொருள்களுக்காகச் செலவிடாமல் உங்களை முழுக்க தேவனுக்குக் கொடுக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்.

36 ஒருவனின் மகள் திருமணமாகும் வயதைக் கடந்துவிட்டபட்சத்தில், அப்பெண்ணின் தந்தை அவளுக்குச் செய்யவேண்டியதைச் செய்யவில்லை என நினைக்கலாம். திருமணம் என்பது முக்கியமானது என அவன் நினைக்கலாம். தனக்கு விருப்பமானதைச் செய்யவேண்டும். திருமணம் செய்துகொள்ள அவளை அனுமதிக்க வேண்டும். அது பாவமல்ல. 37 ஆனால் இன்னொரு மனிதன் மனதில் திடமானவனாக இருக்கக்கூடும். அங்கு திருமணத்துக்குத் தேவையிராது. அவன் விருப்பப்படியே செய்ய அவனுக்கு உரிமையுண்டு. தனது கன்னிப் பெண்ணுக்குத் திருமணம் முடித்துவைக்க அவன் விரும்பாவிட்டால் அப்போது அவன் சரியான செயலையே செய்கிறான். 38 தனது கன்னிப் பெண்ணாகிய மகளைத் திருமணம் முடித்து வைப்பவனும் சரியான செயலைச் செய்கிறான். தனது கன்னிப் பெண்ணாகிய மகளைத் திருமணம் முடித்து வைக்காதவன் அதைக் காட்டிலும் சிறப்பான செயலைச் செய்கிறான். [a]

39 எவ்வளவு காலம் கணவன் உயிரோடு இருக்கிறானோ அதுவரைக்கும் ஒரு பெண் அவனோடு சேர்ந்து வாழ்தல் வேண்டும். ஆனால் அவள் கணவன் இறந்தால், அப்பெண் தான் விரும்புகிற யாரையேனும் மணந்துகொள்ளும் உரிமை பெறுகின்றாள். ஆனால், கர்த்தருக்குள் அவள் திருமணம் செய்துகொள்ள வேண்டும். 40 பெண் மீண்டும் திருமணம் செய்துகொள்ளாவிட்டால் சந்தோஷமாய் இருக்கிறாள். இது எனது கருத்து. தேவனுடைய ஆவி எனக்குள் இருப்பதாக நான் நம்புகிறேன்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center