M’Cheyne Bible Reading Plan
தேவன் இஸ்ரவேலுக்கு வாக்குறுதி தருதல்
46 எனவே, இஸ்ரவேல் எகிப்துக்குப் பயணம் தொடங்கினான். அவன் முதலில் பெயெர்செபாவுக்குப் போனான். அவன் அங்கே தன் தகப்பனாகிய ஈசாக்கின் தேவனைத் தொழுதுகொண்டு, பலிகளும் செலுத்தினான். 2 இரவில் தேவன் கனவில் இஸ்ரவேலிடம் பேசினார். தேவன், “யாக்கோபே, யாக்கோபே” என்று கூப்பிட்டார்.
“நான் இங்கே இருக்கிறேன்” என்றான் இஸ்ரவேல்.
3 அப்பொழுது அவர், “நான் தேவன், உன் தந்தைக்கும் தேவன். எகிப்திற்குப் போகப் பயப்படவேண்டாம். அங்கு உன்னைப் பெரிய இனமாக்குவேன். 4 உன்னோடு நானும் எகிப்துக்கு வருவேன். மீண்டும் உன்னை எகிப்திலிருந்து வெளியே வரவழைப்பேன். நீ எகிப்திலேயே மரணமடைவாய். ஆனால் யோசேப்பு உன்னோடு இருப்பான். நீ மரிக்கும்போது அவன் தன் கையாலேயே உன் கண்களை மூடுவான்” என்றார்.
இஸ்ரவேல் எகிப்துக்குப் போகிறான்
5 பிறகு, யாக்கோபு பெயர்செபாவை விட்டு எகிப்துக்குப் பயணம் செய்தான். அவனது பிள்ளைகளும், பிள்ளைகளின் பிள்ளைகளும், அவர்களின் மனைவிமார்களும் எகிப்துக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் பார்வோன் மன்னன் அனுப்பிய வண்டியில் பயணம் செய்தனர். 6 தங்கள் ஆடு மாடுகளையும் கானான் பகுதியில் சம்பாதித்த பொருட்களையும் எடுத்துக்கொண்டு எகிப்துக்குப் போனார்கள். எனவே இஸ்ரவேல் தன் குடும்பத்தோடும் தன் எல்லாப் பிள்ளைகளோடும் எகிப்திற்குச் சென்றான். 7 அவர்களோடு அவனது பிள்ளைகளும் பேரன்களும், பேத்திகளும், இருந்தனர். மொத்த குடும்பமும் அவனோடு எகிப்தை அடைந்தது.
யாக்கோபின் குடும்பம்
8 எகிப்துக்கு இஸ்ரவேலோடு சென்ற அவனது மகன்களின் பெயர்களும் குடும்பத்தின் பெயர்களும் பின்வருமாறு:
ரூபன் முதல் மகன். 9 ரூபனுக்கு ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ ஆகிய மகன்கள் இருந்தனர்.
10 சிமியோனுக்கு எமுவேல், யாமின், ஓகாத், யாகீன், சொகார், கானானிய பெண்ணின் மகனான சவுல் ஆகிய பிள்ளைகள் இருந்தனர்.
11 கெர்சோன், கோகாத், மெராரி ஆகியோர் லேவியின் பிள்ளைகள்.
12 ஏர், ஓனான், சேலா, பாரேஸ், சேரா ஆகியோர் யூதாவின் பிள்ளைகள். (ஏர் மற்றும் ஓனான் கானானில் இருக்கும்போதே மரணமடைந்தனர்) எஸ்ரோன், ஆமூல் இருவரும் பாரேசுடைய குமாரர்.
13 தோலா, பூவா, யோபு, சிம்ரோன் என்பவர்கள் இசக்காரின் பிள்ளைகள்.
14 செரேத், ஏலோன், யக்லேல் ஆகியோர் செபுலோனுடைய பிள்ளைகள்.
15 யாக்கோபுக்கும் லேயாளுக்கும் பிறந்த பிள்ளைகள் ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன் ஆகியோர். அவள் இக்குழந்தைகளை பதான் ஆராமில் பெற்றாள். அவளுக்கு தீனாள் என்ற மகளும் உண்டு. மொத்தம் 33 பேர்கள் இருந்தனர்.
16 காத்துக்கு சிபியோன், அகி, சூனி, எஸ்போன், ஏரி, அரோதி, அரேலி எனும் பிள்ளைகள் இருந்தனர்.
17 ஆசேருக்கு, இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா எனும் பிள்ளைகள் இருந்தனர். இவர்களுக்கு செராக்கு எனும் சகோதரி இருந்தாள். பெரீயாவுக்கு ஏபேர், மல்கியேல் என்ற பிள்ளைகள் இருந்தனர்.
18 இவர்கள் அனைவரும் யாக்கோபின் மனைவியான லேயாளின் வேலைக்காரப் பெண் சில்பாவுக்குப் பிறந்தவர்கள். அவர்கள் மொத்தம் 16 பேர்.
19 யாக்கோபின் மனைவியான ராகேலுக்கு இரண்டு பிள்ளைகள், யோசேப்பும் பென்ய மீனும். பென்யமீன் யாக்கோபோடு இருந்தான். யோசேப்பு ஏற்கெனவே எகிப்தில் இருந்தான்.
20 எகிப்தில் யோசேப்புக்கு இரண்டு மகன்கள். அவர்கள் மனாசேயும் எப்பிராயீமும். அவன் மனைவி ஆஸ்நாத், ஓன் நகரத்து ஆசாரியனாகிய போத்திப்பிராவின் மகள்.
21 பென்யமீனுக்கு பேலா, பெகேர், அஸ்பேல், கேரா, நாகமான், ஏகி, ரோஷ், முப்பிம், உப்பிம், ஆர்து என்னும் பிள்ளைகள்.
22 இவர்கள் அனைவரும் யாக்கோபிற்கு ராகேல் மூலம் வந்தவர்கள். மொத்தம் 14 பேர்.
23 தாணின் மகன் உசீம்.
24 நப்தலியின் மகன்களான யாத்சியேல், கூனி, எத்சேர், சில்லேம் என்பவர்கள்.
25 இவர்கள் யாக்கோபிற்கும் பில்காளுக்கும் பிறந்தவர்கள். (பில்காள் ராகேலின் வேலைக்காரி.) மொத்தம் ஏழு பேர்.
26 ஆக மொத்தம் யாக்கோபு குடும்பத்தின் நேர் சந்ததியார் 66 பேர் இருந்தனர். இவர்கள் அனைவரும் எகிப்துக்குச் சென்றார்கள். இதில் யாக்கோபு மருமகள்கள் பெயர் சேர்க்கப்படவில்லை. 27 யோசேப்புக்கும் இரண்டு பிள்ளைகள். அவர்கள் எகிப்திலேயே பிறந்தவர்கள். எனவே ஒட்டுமொத்தமாக 70 பேர் யாக்கோபு குடும்பத்தில் இருந்தனர்.
இஸ்ரவேல் எகிப்து வந்தடைதல்
28 முதலில் யாக்கோபு யூதாவை யோசேப்போடு பேச அனுப்பினான். யூதா யோசேப்பிடம் போய் அவனை கோசேனில் பார்த்தான். பிறகு யாக்கோபும் மற்றவர்களும் அவனோடு போனார்கள். 29 யோசேப்பு தன் தந்தை வருவதை அறிந்து தன் தேரைத் தயார் செய்து அவரை எதிர்கொண்டழைக்கப் போனான். அவன் தன் தந்தையைப் பார்த்ததும் ஓடிப்போய் மார்போடு கட்டிப்பிடித்துக்கொண்டு நீண்ட நேரம் அழுதான்.
30 இஸ்ரவேல் யோசேப்பிடம், “இப்போது நான் சமாதானமாக மரிப்பேன். உன் முகத்தைப் பார்த்துவிட்டேன். இன்னும் நீ உயிரோடு இருக்கிறாயே” என்றான்.
31 யோசேப்பு தன் சகோதரர்களிடமும் அவர்களின் குடும்பத்தினரிடமும், “நான் இப்போது போய் பார்வோன் மன்னரிடம் நீங்கள் இங்கே இருப்பதைப்பற்றிக் கூறுவேன். அவரிடம், ‘என் சகோதரர்களும் அவர்களது குடும்பமும் கானான் நாட்டை விட்டு என்னிடம் வந்திருக்கிறார்கள். 32 அவர்கள் மேய்ப்பர் குடும்பத்தினர். அவர்கள் எப்போதும் ஆடு மாடுகள் வைத்திருப்பார்கள். அவர்கள் ஆடு மாடுகளையும் அவர்களுக்குரிய அனைத்தையும் கொண்டு வந்திருக்கிறார்கள்’ என்பேன். 33 அவர் உங்களை அழைத்து ‘நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?’ என்று கேட்டால், 34 அவரிடம் நீங்கள் ‘நாங்கள் மேய்ப்பர்கள், எங்கள் வாழ்க்கை முழுவதும் மேய்ப்பது தான் எங்கள் தொழில். எங்கள் முற்பிதாக்களும் மேய்ப்பர்கள்தான்’ என்று சொல்லுங்கள். பிறகு பார்வோன் மன்னன் உங்களை கோசேன் பகுதியில் வாழ அனுமதிப்பார். எகிப்தியர்கள் மேய்ப்பர்களை விரும்பமாட்டார்கள். எனவே நீங்கள் இங்கே கோசேனில் இருப்பதுதான் நல்லது” என்றான்.
இயேசுவின் உயிர்த்தெழுதல்(A)
16 ஓய்வு நாள் முடிந்த பிறகு மகதலேனா மரியாள், சலோமி, யாக்கோபின் தாயான மரியாள் ஆகியோர் சில வாசனைப் பொருள்களை வாங்கினர். அவற்றை இயேசுவின் சரீரத்தின் மீது பூச விரும்பினர். 2 வாரத்தின் முதல்நாளில் அப்பெண்கள் கல்லறைக்குச் சென்றனர். சூரியன் தோன்றிய காலை நேரம் அது. 3 அப்பெண்கள் ஒருவருக்கொருவர், “கல்லறையை மூடுவதற்கு பெரிய கல்லை வைத்திருந்தார்களே. நமக்காக அக்கல்லை யார் அகற்றுவார்?” என்று பேசிக்கொண்டனர்.
4 அவர்கள் கல்லறையின் அருகில் வந்தபோது வாசலில் வைத்திருந்த கல் விலக்கப்பட்டிருந்தது. அது மிகப் பெரிய கல். 5 அப்பெண்கள் கல்லறைக்குள் நுழைந்தனர். அங்கே வெள்ளை ஆடை அணிந்த ஒருவனைப் பார்த்தனர். அவன் கல்லறையின் வலதுபக்கத்தில் உட்கார்ந்து இருந்தான். அப்பெண்கள் அஞ்சினர்.
6 ஆனால் அந்த மனிதன், “அஞ்ச வேண்டாம். நீங்கள் நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள். அவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்துவிட்டார். சிலுவையில் அறையப்பட்ட அவர் இங்கில்லை. அதுதான் அவரைக் கிடத்திய இடம். 7 இப்போது சென்று அவரது சீஷர்களிடம் கூறுங்கள். பேதுருவிடம் கட்டாயம் கூறுங்கள். இயேசு கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார். உங்களுக்கு முன்னால் அவர் அங்கிருப்பார். உங்களுக்கு ஏற்கெனவே சொன்னபடி நீங்கள் அவரைப் பார்ப்பீர்கள்” என்றான்.
8 அப்பெண்கள் மிகவும் பயந்து குழப்பம் அடைந்தனர். அவர்கள் கல்லறையைவிட்டு ஓடிப் போனார்கள். அவர்கள் அச்சத்தால் யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. [a]
சீஷர்கள் இயேசுவைப் பார்த்தல்(B)
9 இயேசு மரணத்தில் இருந்து வாரத்தின் முதல் நாளே உயிர்த்தெழுந்து விட்டார். முதன் முதலாக இயேசு மகதலேனா மரியாளுக்குத் தரிசனமானார். ஒரு முறை, ஏழு பேய்களை மரியாளைவிட்டு இயேசு விரட்டினார். 10 இயேசுவைப் பார்த்தபின் மரியாள் சீஷர்களிடம் போய்ச் சொன்னாள். அச்சீஷர்கள் வெகு துக்கப்பட்டு அழுதுகொண்டிருந்தனர். 11 ஆனால் மரியாளோ, “இயேசு உயிரோடு இருக்கிறார். நான் அவரைப் பார்த்தேன்” என்றாள். அவர்களோ அவள் சொன்னதை நம்பவில்லை.
12 பின்னர் இயேசு, சீஷர்களில் இரண்டுபேர் நகரத்திற்கு நடந்துபோய்க்கொண்டிருக்கும்போது காட்சி தந்தார். இயேசு இறப்பதற்கு முன்னர் இருந்த விதமாக அவர் பார்ப்பதற்கு இல்லை. 13 அந்த இருவரும் போய் ஏனைய சீஷர்களிடம் கூறினர். எனினும் அவர்களையும் அவர்கள் நம்பவில்லை.
இயேசு சீஷர்களிடம் பேசுதல்(C)
14 பின்னர் இயேசு பதினொரு சீஷர்களுக்கும், அவர்கள் உணவு உண்ணும் தருணத்தில் காட்சியளித்தார். உயிர்த்தெழுந்திருந்த தம்மைக் கண்டவர்களை அவர்கள் நம்பாமல் போனதினிமித்தம் அவர்களுடைய அவநம்பிக்கையைக் குறித்தும் இதயக் கடினத்தைக் குறித்தும் அவர்களைக் கடிந்து கொண்டார்.
15 பின்பு அவர்களிடம், “உலகின் எல்லா பாகங்களுக்கும் செல்லுங்கள். எல்லாரிடமும் நற்செய்தியைக் கூறுங்கள். 16 எவனொருவன் இதனை விசுவாசித்து ஞானஸ்நானம் பெறுகிறானோ அவன் இரட்சிக்கப்படுவான். எவனோருவன் விசுவாசிக்கவில்லையோ அவன் கண்டிக்கப்படுவான். 17 விசுவாசிப்பவர்கள் பல அரிய செயல்களைச் செய்ய முடியும். அவர்கள் என் பெயரால் பிசாசுகளை விரட்டுவர், அவர்கள் இதுவரை இல்லாத மொழிகளைப் பேசுவர், 18 அவர்கள் எவ்விதத் துன்பமும் இல்லாமல் பாம்புகளைப் பிடிப்பர், சாவுக்குரிய நஞ்சைக் குடித்தாலும் அவர்களுக்கு ஆபத்து இல்லை, அவர்கள் தொட்டால் நோயாளிகள் குணம் பெறுவர்” என்று தம்மைப் பின்பற்றினோருக்குக் கூறினார்.
இயேசு பரலோகத்திற்குத் திரும்புதல்(D)
19 சீஷர்களிடம் இவற்றைச் சொன்ன பிறகு, இயேசு பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். அங்கு அவர் தேவனுடைய வலதுபக்கத்தில் அமர்ந்தார். 20 அவரது சீஷர்கள் எல்லா இடங்களுக்கும் சென்று நற்செய்தியைச் சொன்னார்கள். தேவன் அவர்களுக்கு உதவினார். அவர்கள் சொல்வது உண்மை என தேவன் நிரூபித்தார். சீஷர்களுக்கு அற்புதங்கள் செய்ய அதிகாரம் கொடுத்து இதை தேவன் நிரூபித்தார்.
யோபு சோப்பாருக்குப் பதிலளிக்கிறான்
12 பின்பு யோபு சோப்பாருக்குப் பதிலாக,
2 “நீங்கள் மட்டுமே ஞானவான் என நீங்கள் எண்ணுகின்றீர்கள் என நான் உறுதியாகக் கருதுகிறேன்.
நீங்கள் மரிக்கும்போது ஞானமும் உங்களோடு அழிந்துப்போகும்.
3 நானும் உன்னைப் போன்றே புத்திசாலி.
உங்களிலும் நான் தாழ்ந்தவன் அல்ல.
இப்படிப்பட்டவைகளை அறியாதவர்கள் யார்?
4 “என் நண்பர்கள் இப்போது என்னைக் கண்டு நகைக்கிறார்கள்.
அவர்கள், ‘அவன் தேவனிடம் ஜெபித்தான், அவன் பதிலைப் பெற்றான்’ என்று சொல்கிறார்கள்.
உத்தமனாகிய நீதிமான் பரியாசம் பண்ணப்படுகின்றான்.
5 தொல்லைகளற்றோர் தொல்லையுடையோரைக் கண்டு நகைக்கிறார்கள்.
அவர்கள் வீழும் மனிதனைத் தாக்குகிறார்கள்.
6 ஆனால் திருடரின் கூடாரங்கள் பாதிக்கப்படவில்லை.
தேவனை கோபங்கொள்ளச் செய்வோர் சமாதானமாக வாழ்கிறார்கள்.
அவர்களின் சொந்த வலிமையே அவர்களது ஒரே தேவன்.
7 “ஆனால் மிருகங்களைக் கேளுங்கள், அவை உங்களுக்குப் போதிக்கும்.
வானத்துப் பறவைகளைக் கேளுங்கள், அவை உங்களுக்குச் சொல்லும்.
8 அல்லது பூமியிடம் பேசுங்கள், அது உங்களுக்குக் கற்பிக்கும்.
அல்லது கடலின் மீன்கள் தங்கள் ஞானத்தை உங்களுக்குச் சொல்லட்டும்.
9 கர்த்தருடைய கரம் அவற்றை உண்டாக்கினது என்பதை ஒவ்வொருவரும் அறிகிறோம்.
10 வாழும் ஒவ்வொரு மிருகமும் மூச்சுவிடும் ஒவ்வொரு மனிதனும்
தேவனுடைய வல்லமைக்குக் கட்டுப்பட்டவர்கள்.
11 நாவு உணவைச் சுவைப்பதுப்போல
காதுகள் கேட்கும் சொற்களை ஆராய்ந்து பார்க்கும்.
12 முதிர்ந்தோர் ஞானவான்கள்,
புரிந்து கொள்ளும் ஆற்றலையுடையவருக்கு நீண்ட ஆயுள் உண்டு.
13 ஞானமும் ஆற்றலும் தேவனுக்குரியவை.
ஆலோசனையும் புரிந்துகொள்ளுதலும் அவருக்குரியவை.
14 தேவன் எதையேனும் கிழித்து அழித்தால் ஜனங்கள் அதை மீண்டும் உருவாக்க முடியாது.
தேவன் ஒருவனைச் சிறைக்குள் அகப்படுத்தினால் ஜனங்கள் அவனை விடுவிக்க முடியாது.
15 தேவன் மழையைப் பெய்யாதிருக்கச் செய்தால், பூமி உலர்ந்துபோகும்.
தேவன் மழையைத் தாராளமாகப் பெய்யச் செய்தால், அது பூமியில் வெள்ளப் பெருக்கெடுக்கும்.
16 தேவன் வல்லமையுள்ளவரும் வெற்றி பெறுபவருமாவார்.
ஏமாந்தவரும் மற்றும் ஏமாற்றுகின்றவரும் அவருக்கு கீழிருக்கிறீர்கள்.
17 தேவன் ஆலோசனைக் கூறுவோரின் ஞானத்தை அகற்றுகிறார்,
அவர் தலைவர்களை மூடர்களைப்போல் நடக்கும்படி செய்கிறார்.
18 அரசர்கள் ஜனங்களைச் சிறைகளில் அடைக்கக்கூடும்,
ஆனால் தேவன் அந்த ஜனங்களை விடுவித்து ஆற்றலுள்ளோராக்குகிறார்.
19 தேவன் ஆசாரியர் ஆற்றலை அகற்றுகிறார்.
அவர் ஆலயப் பணியாட்களை முக்கிமற்றோராக்குகிறார்.
20 நம்பிக்கையுள்ள ஆலோசகர்களை அமைதியாயிருக்கும்படி தேவன் செய்கிறார்,
முதிர்ந்தோரின் ஞானத்தை அவர் அகற்றிவிடுகிறார்.
21 தேவன் தலைவர்களை முக்கியமற்றோராக்குகிறார்,
தலைவர்களின் ஆற்றலை அவர் நீக்கிவிடுகிறார்.
22 இருண்ட இரகசியங்களையும் கூட தேவன் அறிகிறார்,
மரணம் போன்ற இருளுள்ள இடங்களிலும் அவர் ஒளியைப் பாய்ச்சுகிறார்.
23 தேவன் தேசங்களைப் பெரிதாகவும் வல்லமை மிக்கதாகவும் செய்கிறார்.
பின்பு அவர் அவற்றை அழிக்கிறார்.
அவர் தேசங்களைப் பெரிதாக வளரும்படி செய்கிறார்,
பின்பு அவர் அங்குள்ள ஜனங்களைச் சிதறடிக்கிறார்.
24 தேவன் தலைவர்களை மூடராக்குகிறார்,
அவர்கள் குறிக்கோளின்றி பாலைவனத்தில் அலையும்படிச் செய்கிறார்.
25 அத்தலைவர்கள் இருளில் தடுமாறி வழி தேடுகின்றவனைப்போல் இருக்கிறார்கள்.
குடித்து போகும்வழியை அறியாது செல்கிறவனைப்போல் இருக்கிறார்கள்” என்றான்.
பவுலின் இறுதி வார்த்தைகள்
16 நம்முடைய சகோதரி பெபெயாளைக் கிறிஸ்துவுக்குள் பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கெங்கிரேயா ஊர் சபையில் அவள் விசேஷ ஊழியக்காரி. 2 கர்த்தரில் அவளை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். தேவனுடைய பிள்ளைகளின் வழியில் அவளையும் ஏற்றுக்கொள்க. உங்களிடமிருந்து அவளுக்கு உதவிகள் தேவையென்றால் செய்யுங்கள். அவள் எனக்குப் பலமுறை உதவி செய்திருக்கிறாள். அவள் மற்றவர்ளுக்கும் உதவியாக இருந்திருக்கிறாள்.
3 பிரிஸ்கில்லாவுக்கும்Ԕஆக்கில்லாவுக்கும் என் வாழ்த்துக்களைச் சொல்லுங்கள். இயேசு கிறிஸ்துவுக்குள் இவர்கள் இருவரும் என்னோடு பணியாற்றினர். 4 எனது உயிரைக் காப்பாற்ற தங்கள் உயிரைப் பணயம் வைத்தனர். நான் அவர்களுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளேன். யூதரல்லாதவர்களின் அனைத்து சபைகளுக்கும் நன்றிக் கடன்பட்டுள்ளேன்.
5 அவர்களுடைய வீட்டிலே கூடும் சபையையும் வாழ்த்துங்கள்.
ஆசியாவிலே முதலில் கிறிஸ்துவைப் பின்பற்றியவனாகிய எப்பனெத் என்ற அந்த நண்பனையும் வாழ்த்துங்கள்.
6 மரியாளையும் வாழ்த்துங்கள். அவள் உங்களுக்காகப் பெரிதும் உழைத்தாள்.
7 அன்றோனீக்கையும் யூனியாவையும் வாழ்த்துங்கள். அவர்கள் எனது உறவினர்கள். என்னோடு சிறையில் இருந்தவர்கள். தேவனுடைய மிக முக்கியமான தொண்டர்களுள் எனக்கு முன்னரே கிறிஸ்துவை நம்பியவர்கள்.
8 அம்பிலியாவை வாழ்த்துங்கள். அவன் கர்த்தருக்குள் எனக்கு மிகவும் அன்பானவன். 9 உர்பானை வாழ்த்துங்கள். அவன் என்னோடு கிறிஸ்துவுக்காகப் பணி செய்தவன்.
எனது அன்பான நண்பனாகிய ஸ்தாக்கியை வாழ்த்துங்கள். 10 அல்பெல்லேயை வாழ்த்துங்கள். அவனது உண்மையான கிறிஸ்தவ பக்தி சோதிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.
அரிஸ்தோபூலுவின் குடும்பத்திலிலுள்ள அனைவரையும் வாழ்த்துங்கள். 11 எரோதியோனை வாழ்த்துங்கள். அவன் எனது உறவினன்.
நர்கீசுவின் குடும்பத்திலுள்ள அனைவரையும் வாழ்த்துங்கள். அவர்கள் கிறிஸ்துவுக்குட்பட்டவர்கள். 12 திரிபேனாளையும், திரிபோசாளையும் வாழ்த்துங்கள். ஏனெனில் அவர்கள் கர்த்தருக்காகக் கடினப்பட்டு உழைத்துக்கொண்டிருக்கின்றனர்.
எனது அன்புமிக்க தோழியாகிய பெர்சியாளை வாழ்த்துங்கள். அவளும் கர்த்தருக்காகக் கஷ்டப்பட்டு உழைத்தாள்.
13 ரூபஸை வாழ்த்துங்கள். அவன் கர்த்தருக்குள் சிறந்த மனிதன். அவனது தாயையும் வாழ்த்துங்கள். அவள் எனக்கும் தாய்தான்.
14 அசிங்கிரீத்து, பிலெகோன், எர்மே, பத்திரொபா, எர்மா மற்றும் அவர்களோடு இருக்கிற சகோதரர்களையும் வாழ்த்துங்கள்.
15 பிலொலோகஸ், ஜூலியா, நேரெஸ், அவனது சகோதரி, மற்றும் ஒலிம்பாஸ் ஆகியோரையும் வாழ்த்துங்கள். அவர்களோடிருக்கிற விசுவாசிகள் அனைவரையும் வாழ்த்துங்கள்.
16 ஒருவரையொருவர் பார்க்கும்பொழுது பரிசுத்தமான முத்தத்தால் வாழ்த்துங்கள்.
கிறிஸ்துவின் சபையார் உங்களை வாழ்த்துகின்றனர்.
17 சகோதர சகோதரிகளே! பிரிவினைகளை உண்டாக்குகிற மக்களைப் பற்றி நீங்கள் மிகவும் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அடுத்தவர்களின் விசுவாசத்தை குலைப்பவர்களிடமும் எச்சரிக்கையாய் தூர இருங்கள். நீங்கள் கற்ற உண்மையான போதனைக்கு அவர்கள் எதிரானவர்கள். 18 அத்தகையவர்கள் இயேசு கிறிஸ்துவுக்கு சேவை செய்ய விரும்புவதில்லை. அவர்கள் தங்களைத் திருப்திப்படுத்திக்கொள்ளவே விரும்புகிறார்கள். அவர்கள் தங்கள் நாகரிகமான பேச்சுக்களாலும், இச்சகத்தாலும் நயவஞ்சகமாக சாதாரண அப்பாவி மக்களை தவறான வழியில் நடத்தி விடுகின்றனர். 19 உங்களது கீழ்ப்படிதல் அனைத்து விசுவாசிகளாலும் அறியப்பட்டுள்ளது. ஆகவே உங்களைப் பற்றி நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் நன்மையைப் பற்றி அறிந்துகொள்வதில் ஞானிகளாக இருக்க வேண்டும். தீமையைப் பற்றி அறிந்துகொள்வதில் அப்பாவிகளாய் இருக்கவேண்டும்.
20 சமாதானத்தைத் தருகிற தேவன் விரைவில் சாத்தானைத் தோற்கடித்து அவனை உங்கள் கால்களில் கீழே நசுக்கிப் போடுவார்.
நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களோடு இருப்பதாக. ஆமென்.
21 என்னோடு ஊழியம் செய்கிற தீமோத்தேயு உங்களுக்கு வாழ்த்துதல் கூறுகிறான். லூகியும், யாசோன், சொசிபத்தர் போன்ற எனது உறவினர்களும் உங்களை வாழ்த்துகிறார்கள்.
22 பவுல் சொல்லுகிற அக்காரியங்களை எழுதுகிற தெர்தியு ஆகிய நான் கர்த்தருக்குள் உங்களை வாழ்த்துகிறேன்.
23 என்னையும், எல்லா சபைகளையும் கண்காணித்து வரும் காயுவும் உங்களை வாழ்த்துகிறான். நகரத்துப் பொருளாளரான எரஸ்துவும் சகோதரனான குவர்த்தும் உங்களை வாழ்த்துகின்றனர். 24 [a]
25 தேவனுக்கு மகிமை உண்டாவதாக. அவரே உங்களது விசுவாசத்தைப் பலப்படுத்துகிறார். நான் கற்றுத்தரும் நற்செய்தியின் மூலம் தேவன் உங்களைப் பலப்படுத்துகிறார். தேவனால் வெளிப்படுத்தப்பட்ட இரகசியமான உண்மையே கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி. இது தொடக்க கால முதல் மறைக்கப்பட்டிருந்தது. 26 ஆனால் இப்போது அந்த இரகசியம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இது அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைப் பற்றி தீர்க்கதரிசிகளும் எழுதினர். இது தேவனுடைய கட்டளை. இது அனைவருக்கும் வெளிப்பட்டால்தான் அவர்கள் தேவனை நம்பி அவருக்குப் பணிவார்கள். தேவன் என்றென்றும் இருக்கிறார். 27 தாம் ஒருவரே ஞானம் உள்ளவராய் இருக்கிற தேவனுக்கு இயேசு கிறிஸ்துவின் மூலமாய் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
2008 by World Bible Translation Center