M’Cheyne Bible Reading Plan
மனாசேயையும் எப்பிராயீமையும் ஆசீர்வதித்தல்
48 கொஞ்ச காலத்திற்குப் பிறகு, யோசேப்பு தன் தந்தை உடல் நலம் குன்றி இருப்பதை அறிந்தான். ஆகவே அவன் மனாசே மற்றும் எப்பிராயீம் எனும் தன் இரண்டு மகன்களையும் அவனிடம் அழைத்து சென்றான். 2 யோசேப்பு போய்ச் சேர்ந்தபோது ஒருவர், “உங்கள் மகன் யோசேப்பு உங்களைப் பார்க்க வந்திருக்கிறார்” என்று யாக்கோபிடம் சொன்னார். அவன் பலவீனமானவராக இருப்பினும் கஷ்டப்பட்டு எழுந்து உட்கார முயன்றான்.
3 அவன் யோசேப்பிடம், “சர்வ வல்லமையுள்ள தேவன் கானான் நாட்டிலுள்ள லூஸ் என்னுமிடத்தில் என் முன் தோன்றி அங்கே என்னை ஆசீர்வதித்தார். 4 தேவன் என்னிடம், ‘உன்னைப் பெரிய குடும்பமாக செய்வேன். நிறைய குழந்தைகளைத் தருவேன். நீங்கள் பெரிய இனமாக வருவீர்கள். உன் குடும்பம் இந்த நிலத்தைச் சொந்தமாக்கிக்கொள்ளும்’ என்றார். 5 இப்போது உனக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். நான் வருவதற்கு முன்னரே அவர்கள் இந்த எகிப்து நாட்டில் பிறந்திருக்கிறார்கள். உன் பிள்ளைகள் எனது சொந்தப் பிள்ளைகளைப் போன்றவர்கள். அவர்கள் எனக்கு சிமியோனையும் ரூபனையும் போன்றவர்கள். 6 எனவே இந்த இருவரும் என் பிள்ளைகள். எனக்குரிய அனைத்தையும் இவர்களுக்குப் பங்கிட்டுத் தருகிறேன். ஆனால் உனக்கு வேறு குழந்தைகள் பிறந்தால் அவர்கள் உன் பிள்ளைகள். ஆனால் அவர்கள் மனாசேக்கும் எப்பிராயீமுக்கும் பிள்ளைகள் போல் இருப்பார்கள். எனவே, வருங்காலத்தில் இவர்களுக்குரியவற்றை அவர்களும் பங்கிட்டுக்கொள்வார்கள். 7 பதான் அராமிலிருந்து வரும்போது ராகேல் மரித்துப்போனாள். அது என்னை மிகவும் வருத்தத்திற்குள்ளாக்கியது. அவள் கானான் நாட்டிலேயே மரித்தாள். நாங்கள் எப்பிராத்தாவை நோக்கி வந்தோம். சாலையோரத்தில் அவளை அடக்கம் செய்தோம்” என்றான். (எப்பிராத்தா என்பது பெத்லகேமைக் குறிக்கும்.)
8 பின் இஸ்ரவேல் யோசேப்பின் பிள்ளைகளைப் பார்த்து, “இவர்கள் யார்?” என்று கேட்டார்.
9 யோசேப்பு தந்தையிடம், “இவர்கள் என் பிள்ளைகள், எனக்குத் தேவன் கொடுத்த மகன்கள்” என்றான்.
இஸ்ரவேல் அவனிடம், “என்னிடம் அவர்களை அழைத்து வா, நான் அவர்களை ஆசீர்வதிக்கிறேன்” என்றான்.
10 இஸ்ரவேலுக்கு வயதானதால் கண்களும் சரியாகத் தெரியவில்லை. எனவே, யோசேப்பு தன் மகன்களை மிக அருகில் அழைத்து வந்தான். இஸ்ரவேல் அவர்களை முத்தமிட்டு அணைத்துகொண்டான். 11 பிறகு அவன் யோசேப்பிடம், “நான் உனது முகத்தை மீண்டும் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை. ஆனால் தேவன் உன்னையும் உன் பிள்ளைகளையும் பார்க்கும்படி செய்துவிட்டார்” என்றான்.
12 பிறகு யோசேப்பு தன் மகன்களை இஸ்ரவேலின் மடியில் இருந்து இறக்கிவிட்டான். அவர்கள் அவரைக் குனிந்து வணங்கினார்கள். 13 யோசேப்பு எப்பிராயீமை தனது வலது பக்கத்திலும் மனாசேயை தனது இடது பக்கத்திலும் அமர வைத்தான். 14 ஆனால் இஸ்ரவேல் தனது கைகளைக் குறுக்காக வைத்து வலது கையை இளையவன் மீதும் இடது கையை மூத்தவன் மீதும் வைத்து ஆசீர்வாதம் செய்தான். மனாசே மூத்தவனாக இருப்பினும் அவன் மீது இடது கையை வைத்து ஆசீர்வதித்தான். 15 இஸ்ரவேல் யோசேப்பையும் ஆசீர்வதித்தான். அவன்,
“என் முற்பிதாக்களான ஆபிரகாமும் ஈசாக்கும் நம் தேவனை வழிபட்டனர்.
அதே தேவன் என் வாழ்க்கை முழுவதும் என்னை வழி நடத்தினார்.
16 எனது அனைத்து துன்பங்களிலும் என்னைக் காப்பாற்றும் தேவதூதனாக இருந்தார்.
இந்தப் பிள்ளைகளை ஆசீர்வதிக்கும்படி அந்த தேவனை வேண்டுகிறேன்.
இப்போது இவர்கள் எனது பெயரையும், எனது முற்பிதாக்களான ஆபிரகாம் மற்றும் ஈசாக்கின் பெயரையும் பெறுவார்கள்.
இவர்கள் வளர்ந்து மகத்தான குடும்பமாகவும், தேசமாகவும் இப்பூமியில் விளங்கவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்” என்றான்.
17 யோசேப்பு தன் தந்தை வலது கையை எப்பிராயீம் மீது வைத்திருப்பதைப் பார்த்தான். இது யோசேப்புக்கு மகிழ்ச்சி தரவில்லை. யோசேப்பு தன் தந்தையின் வலது கையை எப்பிராயீம் தலையிலிருந்து எடுத்து மனாசேயின் தலையில் வைக்க விரும்பினான். 18 அவன் தன் தந்தையிடம், “உமது வலது கையைத் தவறாக வைத்திருக்கிறீர், மனாசேதான் முதல் மகன்” என்றான்.
19 ஆனால் யாக்கோபோ, “எனக்குத் தெரியும் மகனே! மனாசேதான் மூத்தவன், அவன் பெரியவன் ஆவான். அவனும் ஏராளமான ஜனங்களின் தந்தையாவான். ஆனால் இளையவனே மூத்தவனைவிட பெரியவனாவான். அவனது குடும்பமும் மிகப் பெரியதாக இருக்கும்” என்றான்.
20 இவ்விதமாக இஸ்ரவேல் அன்று அவர்களை ஆசீர்வதித்தான்.
“இஸ்ரவேலின் ஜனங்கள் உங்கள் பெயரைப் பயன்படுத்தி
மற்றவரை வாழ்த்துவார்கள்.
அவர்கள், ‘எப்பிராயீமும் மனாசேயும்போல
தேவன் உங்களை வாழ வைக்கட்டும் என்பார்கள்’” என்றான்.
இவ்வாறு இஸ்ரவேல் எப்பீராயிமை மனாசேயைவிடப் பெரியவனாக்கினான்.
21 பிறகு இஸ்ரவேல் யோசேப்பிடம், “பார், நான் மரிப்பதற்குரிய காலம் நெருங்கிவிட்டது. ஆனாலும் தேவன் உன்னோடு இருக்கிறார். அவர் உன்னை உன் முற்பிதாக்களின் பூமிக்கு வழி நடத்திச் செல்வார். 22 நான் உன் சகோதரர்களுக்குக் கொடுக்காத சிலவற்றை உனக்குக் கொடுத்திருக்கிறேன். எமோரிய ஜனங்களிடம் இருந்து நான் வென்ற மலையை உனக்குக் கொடுத்திருக்கிறேன். நான் என் பட்டயத்தையும், வில்லையும் பயன்படுத்தி அதை நான் வென்றேன்” என்றான்.
சகரியாவையும் எலிசபெத்தையும் மரியாள் சந்தித்தல்
39 மலைநாடான யூதேயாவில் உள்ள பட்டணத்துக்கு மரியாள் எழுந்து விரைந்து சென்றாள். 40 அவள் சகரியாவின் வீட்டுக்குள் நுழைந்து எலிசபெத்தை வாழ்த்தினாள். 41 மரியாளின் வாழ்த்துதலை எலிசபெத் கேட்டதும் இன்னும் பிறக்காமல் எலிசபெத்துக்குள் இருக்கும் குழந்தை துள்ளிக் குதித்தது.
42 எலிசபெத் உரத்த குரலில் “வேறெந்தப் பெண்ணைக் காட்டிலும் அதிகமாக தேவன் உன்னை ஆசீர்வதித்துள்ளார். உனக்குப் பிறக்கவிருக்கும் குழந்தையையும், தேவன் ஆசீர்வதித்திருக்கிறார். 43 கர்த்தரின் தாயாகிய நீ என்னிடம் வந்துள்ளாய். அத்தனை நல்ல காரியம் எனக்கு நடந்ததேன்? 44 உன் சத்தத்தை நான் கேட்டதும் எனக்குள் இருக்கும் குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. 45 உன்னிடம் கர்த்தர் கூறியதை நீ நம்பியதால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறாய். இது நடக்கக் கூடியதென நீ நம்பினாய்” என்று சொன்னாள்.
மரியாள் தேவனைப் போற்றுதல்
46 அப்போது மரியாள்,
47 “எனது ஆத்துமா கர்த்தரைப் போற்றுகிறது.
தேவன் எனது இரட்சகர். எனவே என் உள்ளம் அவரில் மகிழ்கிறது.
48 நான் முக்கியமற்றவள்,
ஆனால் தேவன் தனது கருணையைப் பணிப்பெண்ணாகிய எனக்குக் காட்டினார்.
இப்போது தொடங்கி,
எல்லா மக்களும் என்னை ஆசீர்வதிக்கப்பட்டவள் என்பர்.
49 ஏனெனில் ஆற்றல் மிகுந்தவர் எனக்காக மேன்மையான செயல்களைச் செய்தார்.
அவர் பெயர் மிகத் தூய்மையானது.
50 தேவனை வணங்கும் மக்களுக்கு அவர் எப்போதும் இரக்கம் செய்வார்.
51 தேவனின் கைகள் பலமானவை.
செருக்குற்ற மனிதர்களையும் சுயதம்பட்டக்காரர்களையும் அவர் சிதறடிக்கிறார்.
52 சிம்மாசனத்தினின்று மன்னர்களைக் கீழே இறக்குகிறார்.
தாழ்ந்தவர்களை உயர்த்துகிறார்.
53 நல்ல பொருட்களால் பசித்த மக்களை நிரப்புகிறார்.
செல்வந்தரையும், தன்னலம் மிகுந்தோரையும் எதுவுமின்றி அனுப்பிவிடுகிறார்.
54 தனக்குப் பணிசெய்வோருக்கு அவர் உதவினார்.
அவர்களுக்குத் தன் இரக்கத்தை அருளினார்.
55 நம் முன்னோருக்கும் ஆபிரகாமுக்கும் தம் குழந்தைகளுக்கும் அவர் கொடுத்த வாக்குறுதியை என்றைக்கும் நிறைவேற்றுகிறார்”
என்று சொன்னாள்.
56 மரியாள் எலிசபெத்துடன் ஏறக்குறைய மூன்று மாதகாலம்வரைக்கும் தங்கி இருந்தாள். பின்பு மரியாள் தனது வீட்டுக்குச் சென்றாள்.
யோவானின் பிறப்பு
57 குழந்தைப் பேற்றின் காலம் நெருங்கியபோது எலிசபெத் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். 58 அவளது அக்கம் பக்கத்தாரும் உறவினரும் கர்த்தர் அவளுக்குக் கருணைக் காட்டியதை கேள்விப்பட்டனர். அதைக்குறித்து மகிழ்ச்சியடைந்தனர்.
59 குழந்தைக்கு எட்டு நாட்கள் ஆனபோது அக்குழந்தையை விருத்தசேதனம் செய்யும்பொருட்டு கொண்டு வந்தனர். அவனது தந்தை பெயரால் அவனை சகரியா என்று பெயரிட்டு அழைக்க விரும்பினர். 60 ஆனால் அக்குழந்தையின் தாய், “இல்லை, அவனுக்கு யோவான் என்று பெயரிட வேண்டும்” என்றாள்.
61 மக்கள் எலிசபெத்தை நோக்கி, “உன் குடும்பத்தில் யாருக்கும் இப்பெயர் இல்லையே!” என்றனர். 62 பின்னர் அவர்கள் அக்குழந்தையின் தந்தையிடம் சென்று சைகையால், “குழந்தைக்கு என்ன பெயரிட விரும்புகிறாய்?” என்று கேட்டனர்.
63 சகரியா எழுதுவதற்கு ஏதாவது ஒன்று கொண்டு வருமாறு கேட்டான். சகரியா, “அவன் பெயர் யோவான்” என்று எழுதினான். எல்லா மக்களும் ஆச்சரியம் அடைந்தனர். 64 அப்போது சகரியாவால் மீண்டும் பேசமுடிந்தது. அவன் தேவனை வாழ்த்த ஆரம்பித்தான். 65 அவனது அக்கம் பக்கத்தார் அனைவருக்கும் பயமுண்டாயிற்று. யூதேயாவின் மலைநாட்டு மக்கள் இக்காரியங்களைக் குறித்து தொடர்ந்து பேசிக்கொண்டனர். 66 இச்செய்திகளைக் கேட்ட எல்லா மக்களும் அவற்றைக் குறித்து அதிசயப்பட்டார்கள். அவர்கள், “இக்குழந்தை எப்படிப்பட்டதாயிருக்குமோ?” என்று எண்ணினர். கர்த்தர் இந்தக் குழந்தையோடு இருந்தபடியால் அவர்கள் இதைக் கூறினர்.
சகரியா தேவனைப் போற்றுதல்
67 அப்போது யோவானின் தந்தையாகிய சகரியா பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டான். பின்னர் நடக்க இருப்பவற்றைக் குறித்து அவன் மக்களுக்குக் கூறினான்.
68 “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைப் போற்றுவோம்.
தேவன் அவரது மக்களுக்கு உதவ வந்தார். அவர்களுக்கு விடுதலை தந்தார்.
69 தேவன் நமக்கு வல்லமை பொருந்திய இரட்சகரைத் தந்தார்.
அவர் தாவீது என்னும் தேவனுடைய பணிவிடைக்காரனின் குடும்பத்தைச் சார்ந்தவர்.
70 தேவன் இதைச் செய்வதாகக் கூறினார்.
பல ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அவரது பரிசுத்த தீர்க்கதரிசிகள் மூலமாக இதை அவர் கூறினார்.
71 நம் எதிரிகளிடம் இருந்து தேவன் நம்மைக் காப்பாற்றுவார்.
நம்மை வெறுக்கும் அனைவரின் கைகளிலிருந்தும் நம்மைக் காப்பாற்றுவார்.
72 நமது தந்தையருக்கு அருள்புரிவதாக தேவன் சொன்னார்.
தனது பரிசுத்த வாக்குறுதியை அவர் நினைவுகூர்ந்தார்.
73 நமது தந்தையாகிய ஆபிரகாமுக்கு எதிரிகளின் சக்தியிலிருந்து.
74 நம்மை விடுவிப்பதாக தேவன் வாக்குறுதி தந்தார்.
அதனால் பயமின்றி நாம் அவருக்குச் சேவை செய்வோம்.
75 நாம் நம் வாழ்நாள் முழுவதும் அவருடைய முன்னிலையில் நீதியும் பரிசுத்தமும் வாய்ந்தோராக வாழ்வோம்.
76 இப்போதும் சிறுவனே, நீ உன்னதமான தேவனின் ஒரு தீர்க்கதரிசி என்று அழைக்கப்படுவாய்.
கர்த்தருக்கு முன்பாக முன்னோடியாக நீ நடப்பாய். கர்த்தரின் வருகைக்காக மக்களைத் தயார் செய்வாய்.
77 அவரது மக்கள் இரட்சிக்கப்படுவர் என்பதை அவர்களுக்கு உணர்த்துவாய். அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டு அவர்கள் இரட்சிக்கப்படுவர்.
78 நம் தேவனின் அன்பான இரக்கத்தால் பரலோகத்திலிருந்து
புதுநாள் ஒன்று நம்மீது பிரகாசிக்கும்.
79 இருளில் மரணப் பயத்திடையே வாழும் மக்களுக்கு தேவன் உதவி செய்வார்.
சமாதானத்தை நோக்கி அவர் நம்மை வழிநடத்துவார்.”
என்று சகரியா உரைத்தான்.
80 அச்சிறுவன் வளர்ந்துவருகையில் ஆவியில் வல்லமை பொருந்தியவனாக மாறினான். இஸ்ரவேல் மக்களுக்குப் போதிக்கும்பொருட்டு வளரும்மட்டும் அவன் மக்களிடமிருந்து தொலைவான இடத்தில் வாழ்ந்தான்.
14 யோபு, “நாமெல்லோரும் மனித ஜீவிகளே.
நம் வாழ்க்கை குறுகியதும் தொல்லைகள் நிரம்பியதுமாகும்.
2 மனிதனின் வாழ்க்கை ஒரு மலரைப் போன்றது.
அவன் விரைவாக வளருகிறான், பின்பு மடிந்துப் போகிறான்.
மனிதனின் வாழ்க்கை ஒரு நிழலைப் போன்றது.
அது குறுகிய காலம் இருந்து, பின்பு மறைந்துப்போகும்.
3 அது உண்மையே, ஆனால் ஒரு மனிதனாகிய என்னை தேவன் நோக்கிப்பார்ப்பாரா?
நீர் என்னோடு நியாய சபைக்கு வருவீரா?
அங்கு நாம் இருவரும் நம் விவாதங்களை முன் வைப்போம்.
4 “ஆனால் அழுக்குப்படிந்த ஒரு பொருளுக்கும்
தூய்மையான ஒரு பொருளுக்குமிடையே இருக்கும் ஒற்றுமை என்ன? ஒன்றுமில்லை!
5 மனிதனின் வாழ்க்கை ஒரு எல்லை உடையது.
தேவனே, ஒரு மனிதன் எத்தனைக் காலம் வாழ்கிறான் என்பதை நீர் முடிவு செய்கிறீர்.
ஒரு மனிதனுக்கு அந்த எல்லைகளை நீர் முடிவெடுக்கிறீர், எதுவும் அதை மாற்றமுடியாது.
6 எனவே, தேவனே எங்களைக் கவனிப்பதை நிறுத்தும்.
எங்களைத் தனித்துவிடும்.
எங்கள் காலம் முடியும் வரைக்கும் எங்கள் கடின வாழ்க்கையை நாங்கள் வாழவிடும்.
7 “ஒரு மரத்திற்கும் நம்பிக்கை உண்டு.
அது வெட்டப்பட்டால், மீண்டும் வளரக்கூடும்.
அது புது கிளைகளைப் பரப்பியபடி நிற்கும்.
8 அதன் வேர்கள் பலகாலம் மண்ணிற்குள் வளரும்,
அதன் அடிப்பகுதி புழுதியில் மடியும்.
9 ஆனால் தண்ணீரினால் அது மீண்டும் வளரும்.
புதுச்செடியைப்போன்று அதில் கிளைகள் தோன்றும்.
10 ஆனால் மனிதன் மரிக்கும்போது, அவன் அழிந்து போகிறான்.
மனிதன் மரிக்கும்போது, அவன் காணமற்போகிறான்.
11 நதிகள் வற்றிப்போகும்படியாகவும் கடல் தண்ணீர் முழுவதும் வற்றிப்போகும்படியாக தண்ணீர் இறைத்தாலும்
மனிதன் மரித்தவனாகவேகிடப்பான்.
12 ஒருவன் மரிக்கும்போது அவன் படுத்திருக்கிறான், மீண்டும் எழுகிறதில்லை.
அவர்கள் எழும்முன்னே வானங்கள் எல்லாம் மறைந்துபோகும்.
ஜனங்கள் அந்த உறக்கத்திலிருந்து எழுவதேயில்லை.
13 “நீர் என் கல்லறையில் என்னை ஒளித்து வைப்பீரென விரும்புகிறேன்.
நீர் உமது கோபம் ஆறும்வரை என்னை அங்கு ஒளித்து வைப்பீரென விரும்புகிறேன்.
பின்பு என்னை நினைவுகூரும் காலத்தை நீர் தேர்ந்தெடுக்கலாம்.
14 ஒருவன் இறந்தால், அவன் மீண்டும் வாழ்வானா?
நான் விடுதலையாகும்வரை எத்தனை காலமாயினும் காத்திருந்தேயாக வேண்டும்!
15 தேவனே, நீர் என்னைக் கூப்பிடுவீர்,
நான் உமக்குப் பதில் தருவேன்,
நீர் என்னை சிருஷ்டித்தீர்,
நான் உமக்கு முக்கியமானவன்.
16 நான் எடுக்கும் ஒவ்வோர் அடியையும் நீர் கண்ணோக்குகிறீர்.
ஆனால், நீர் என் பாவங்களை நினைவுக்கூர்வதில்லை.
17 நீர் என் பாவங்களை ஒரு பையில் கட்டி வைப்பீர்.
அதை முத்திரையிடும், அதை வீசியெறிந்துபோடும்!
18 “நொறுங்கிப்போகும்.
பெரும் பாறைகள் தளர்ந்து உடைந்துவிழும்.
19 கற்களின் மீது பாயும் வெள்ளம் அவற்றைக் குடையும்.
பெருவெள்ளம் நிலத்தின் மேற்பரப்புத்துகளை அடித்துச் (இழுத்து) செல்லும்.
தேவனே, அவ்வாறே ஒருவனின் நம்பிக்கையை நீர் அழிக்கிறீர்.
20 அவனை முற்றிலும் தோற்கடித்து, பின்பு விலகிப் போகிறீர்.
அவனைத் துயரங்கொள்ளச் செய்து, மரணத்தின் இடத்திற்கு என்றென்றைக்கும் அனுப்புகிறீர்.
21 அவன் மகன்கள் பெருமையடையும்போது, அவன் அதை அறியான்.
அவன் மகன்கள் தவறுசெய்யும்போது, அவன் அதைக் காணான்.
22 அம்மனிதன் தனது உடம்பின் வலியை மட்டுமே உணருகிறான்,
அவன் தனக்காக மட்டுமே உரக்க அழுகிறான்” என்றான்.
சிலுவையைப் பற்றிய செய்தி
2 அன்பான சகோதர சகோதரிகளே! நான் உங்களிடம் வந்தபோது தேவனுடைய உண்மையை உங்களுக்குச் சொன்னேன். ஆனால் அதிகமான ஞானத்தையோ, அழகிய வார்த்தைகளையோ நான் உபயோகிக்கவில்லை. 2 உங்களோடு இருக்கையில் இயேசு கிறிஸ்துவையும் அவரது சிலுவை மரணத்தையும் தவிர பிற அனைத்தையும் மறப்பேன் என முடிவெடுத்தேன். 3 நான் உங்களிடம் வந்தபோது மிகவும் சோர்வாகவும், பயத்தால் நடுங்கிக்கொண்டும் இருந்தேன். 4 எனது போதனையும் பேச்சும் வலியுறுத்திச் சொல்லும் ஆற்றலுள்ள ஞானம் பொருந்திய வார்த்தைகளைக்கொண்டனவாய் இருக்கவில்லை. பரிசுத்தாவி கொடுக்கின்ற வல்லமையே எனது போதனைக்கு நிரூபணம் ஆகும். 5 உங்கள் விசுவாசம் தேவனுடைய வல்லமையில் இருக்க வேண்டும் என்பதற்காகவும், மனிதனின் ஞானத்தில் இருக்கக் கூடாதென்பதற்காகவும் நான் இவ்வாறு செய்தேன்.
தேவனுடைய ஞானம்
6 பக்குவமடைந்த மக்களுக்கே நாம் ஞானத்தைப் போதிக்கிறோம். ஆனால் நாம் போதிக்கும் இந்த ஞானம் இவ்வுலகத்திலிருந்து வருவதல்ல. இந்த உலகத்து ஆட்சியாளர்களின் ஞானமும் இதுவல்ல. அந்த ஆட்சியாளர்கள் தங்கள் அதிகாரத்தை இழந்து வருகின்றனர். 7 ஆனால் நாம் தேவனுடைய இரகசியமான ஞானத்தைப் பேசுகிறோம். மக்களிடமிருந்து இந்த ஞானம் மறைக்கப்பட்டுள்ளது. நமது மகிமைக்காக தேவன் இந்த ஞானத்தைத் திட்டமிட்டார். உலகம் தோன்றுவதற்கு முன்பே தேவன் இதைத் திட்டமிட்டார். 8 இந்த உலகத்தில் எந்த ஆட்சியாளனும் இந்த ஞானத்தைப் புரிந்துகொண்டிருக்கவில்லை. அவர்கள் அதனைப் புரிந்துகொண்டிருந்தால் மகிமையின் கர்த்தரை சிலுவையில் கொன்றிருக்கமாட்டார்கள். 9 ஆனால்,
“தேவன் தன்னை நேசிக்கும் மக்களுக்காகச்
செய்த ஏற்பாட்டை எந்த கண்ணும் பார்க்கவில்லை.
எந்தக் காதும் கேட்கவில்லை,
எந்த மனிaதனும் எண்ணிப் பார்த்ததில்லை” (A)
என்று எழுதப்பட்டிருக்கிறது.
10 ஆனால், தேவன் இவற்றை ஆவியானவரின் மூலமாக எங்களுக்குக் காட்டியுள்ளார்.
ஆவியானவர் எல்லாவற்றையும் அறிவார். தேவனுடைய ஆழ்ந்த அந்தரங்கங்களையும் பரிசுத்த ஆவியானவர் அறிவார். 11 அதை இப்படி விளக்கலாம்: ஒருவர் அடுத்தவருடைய எண்ணங்களை அறிய முடியாது. அவனுக்குள்ளிருக்கிற அவனுடைய ஆவியே அறியும். அதுவே தேவனுக்கும் பொருந்தும். தேவனுடைய ஆவியானவர்தான் அந்த எண்ணங்களை அறிவார். 12 நாம் உலகின் ஆவியைக்கொண்டிருக்கவில்லை. நாம் தேவனிடமிருந்து அவரது ஆவியானவரைப் பெற்றோம். தேவன் நமக்குக் கொடுத்துள்ள பொருள்களை அறியுமாறு நாம் ஆவியானவரைப் பெற்றோம்.
13 நாம் இவற்றைப் பேசும்போது மனிதனுக்குள்ள ஞானத்தால் நாம் அறிவிக்கப்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவதில்லை. பரிசுத்த ஆவியானவர் அறிவித்துள்ள வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம். ஆன்மீகக் கருத்துகளை விளக்க ஆன்மீகமான சொற்களையே பயன்படுத்துகிறோம். 14 ஆன்மீக வாழ்க்கையில் ஈடுபடாத மனிதன் தேவனுடைய ஆவியானவரிடமிருந்து வரும் வார்த்தைகளை ஏற்றுக்கொள்வதில்லை. அவன் அவற்றை மடமையாகக் கருதுகிறான். அவன் ஆவியானவர் கருதுவனவற்றை புரிந்துகொள்ள முடியாது. ஏனெனில் அவை ஆன்மீகமாகவே புரிந்துகொள்ளப்படக் கூடும். 15 ஆனால், ஆன்மீக உணர்வுள்ளவனோ எல்லாவற்றைப் பற்றியும் நியாயம் தீர்க்கமுடியும். மற்றவர்கள் அவனை நியாயம் தீர்க்க முடியாது.
16 “யார் தேவனுடைய எண்ணத்தை அறிவார்?
யார் தேவனுக்கு அறிவுறுத்துவார்கள்?” (B)
என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் நமக்கு கிறிஸ்துவின் சிந்தனை இருக்கிறது.
2008 by World Bible Translation Center