Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
ஆதியாகமம் 49

யாக்கோபு தன் மகன்களை ஆசீர்வதித்தல்

49 பின்பு யாக்கோபு தன் அனைத்து பிள்ளைகளையும் அழைத்து, “பிள்ளைகளே! என்னிடம் வாருங்கள். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று சொல்கிறேன்.

“சேர்ந்து வாருங்கள், கவனியுங்கள். யாக்கோபின் பிள்ளைகளே.
இஸ்ரவேலாகிய உங்கள் தந்தை சொல்வதைக் கேளுங்கள்.

ரூபன்

“ரூபனே! என் முதல் மகனே! நீ எனக்கு முதல் பிள்ளை.
    எனது மனித சக்தியின் முதல் அடையாளம் நீயே.
நீயே வல்லமையும்
    மரியாதையும் உள்ள மகனாக விளங்கியிருக்கலாம்.
ஆனால் உனது உணர்ச்சிகளை வெள்ளம்போல உன்னால் கட்டுப்படுத்த முடியாததாக இருக்கிறது.
    எனவே நீ மரியாதைக்குரியவனாக இருக்கமாட்டாய்.
நீ உன் தந்தையின் படுக்கையில் அவர் மனைவிகளுள் ஒருத்தியோடு படுத்தவன்.
    நீ எனது படுக்கைக்கே அவமானம் தேடித் தந்தவன்.

சிமியோனும் லேவியும்

“சிமியோனும் லேவியும் சகோதரர்கள்.
    அவர்கள் வாள்களால் சண்டையிடுவதை விரும்புவார்கள்.
இரகசியமாகப் பாவம் செய்யத் திட்டமிடுவார்கள்.
    அவர்களின் திட்டங்களில் என் ஆத்துமா பங்குகொள்ள விரும்பவில்லை.
அவர்களின் இரகசியக் கூட்டங்களை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். கோபமாக இருக்கும்போது மனிதர்களைக் கொல்லுகிறார்கள், மிருகங்களை வேடிக்கைக்காகவே துன்புறுத்துகிறார்கள்.
அவர்களின் கோபமே ஒரு சாபம்.
    அது வலிமையானது. அவர்கள் பைத்தியமாகும்போது கொடூரமானவர்களாகிறார்கள்.
யாக்கோபின் பூமியிலே அவர்கள் சொந்த பூமியைப் பெறமாட்டார்கள்.
    அவர்கள் இஸ்ரவேல் முழுவதும் பரவி வாழ்வார்கள்.

யூதா

“உன்னை உன் சகோதரர்கள் போற்றுவார்கள்.
    நீ உன் பகைவர்களை வெல்வாய்.
    உன் சகோதரர்கள் உனக்கு அடிபணிவார்கள்.
யூதா ஒரு சிங்கத்தைப் போன்றவன்.
    என் மகனே, தான் கொன்ற மிருகத்தின் மேல் நிற்கும் ஒரு சிங்கத்தை போன்றவன் நீ.
நீ ஓய்வெடுக்கும்போது உன்னை எவரும்
    தொந்தரவு செய்யமுடியாது.
10 யூதாவின் குடும்பத்தில் வருபவர்கள் அரசர் ஆவார்கள்.
    சமாதான கர்த்தர் வரும்வரை உன்னை விட்டு செங்கோல் நீங்குவதில்லை.
ஏராளமான ஜனங்கள் அவனுக்கு அடிபணிந்து சேவை செய்வார்கள்.
11 அவன் தன் கழுதையைத் திராட்சைக் கொடியில் கட்டி வைப்பான்.
    அவன் தன் இளைய கழுதையை சிறந்த திராட்டைக் கொடியில் கட்டி வைப்பான்.
    அவன் சிறந்த திராட்சைரசத்தை ஆடைவெளுக்கப் பயன்படுத்துவான்.
12 அவன் கண்கள் திராட்சைரசத்தினால் சிவப்பாகும்.
    அவன் பற்கள் பாலால் வெளுக்கும்.

செபுலோன்

13 “இவன் கடற்கரையில் வசிப்பான்.
    அவனது துறைமுகம் கப்பல்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
    அவனது எல்லை சீதோன்வரை இருக்கும்.

இசக்கார்

14 “இசக்கார் ஒரு கழுதையைப்போல கடினமாக உழைப்பான்.
    இரண்டு பொதியின் நடுவே படுத்திருப்பவனைப் போன்றவன்.
15 தன் ஓய்விடத்தை நன்றாக இருக்கும்படி பார்த்துக்கொள்வான்.
    தன் பூமியை செழிப்பாக வைத்துக்கொள்வான்.
அடிமையைப்போல
    வேலை செய்ய சம்மதிப்பான்.

தாண்

16 “தாண் இஸ்ரவேல் குடும்பத்தில் ஒருவனாக
    தன் சொந்த ஜனங்களையே நியாயம்தீர்ப்பான்.
17 இவன் சாலையோரத்தில் அலையும் பாம்பைப் போன்றவன்.
    இவன் பாதையிலேபடுத்திருக்கும் பாம்பைப் போன்று பயங்கரமானவன்.
இப்பாம்பு ஒரு குதிரையின் காலை கடிக்கிறது,
    சவாரி செய்தவன் கீழே விழுகிறான்.

18 “கர்த்தாவே நான் உமது இரட்சிப்புக்காகக் காத்திருக்கிறேன்.

காத்

19 “ஒரு கொள்ளைக் கூட்டம் காத்தைத் தாக்கும்.
    ஆனால் அவர்களை அவன் துரத்திவிடுவான்.

ஆசேர்

20 “இவனது நிலம் அதிகமாக விளையும்.
    ஒரு அரசனுக்கு வேண்டிய உணவு பொருட்களைத் தருவான்.

நப்தலி

21 “இவன் சுதந்திரமாக ஓடுகிற மானைப் போன்றவன்.
    அவன் வார்த்தைகள் குழந்தைகளைப் போன்று அழகானவைகள்.”

யோசேப்பு

22 “இவன் வெற்றி பெற்றவன்.
    இவன் பழத்தால் மூடப்பட்ட திராட்சைக்கொடியைப் போன்றவன்.
    நீரூற்றுக்கருகிலும் வேலிக்குள்ளும் இருக்கிற கொடியைப் போன்றவன்.
23 பலர் அவனுக்கு எதிராகப் போரிடுவார்கள்.
    வில் வீரர்களே அவன் பகைவர்.
24 ஆனால் அவன் பலம் வாய்ந்த வில்லாலும் திறமையான கைகளாலும் சண்டையில் வென்றான்.
    அவன் யாக்கோபின் வல்லவரும், மேய்ப்பரும், இஸ்ரவேலின் பாறையும் ஆனவரிடமிருந்தும் உன் பிதாவின் தேவனிடமிருந்தும் வலிமை பெற்றான்.
25 தேவன் உன்னை ஆசீர்வதிக்கிறார்.
சர்வ வல்லமையுள்ள தேவன்
    வானத்திலிருந்தும், கீழே ஆழத்திலிருந்தும் உன்னை ஆசீர்வதிக்கட்டும்.
    ஸ்தனங்களுக்கும், கர்ப்பங்களுக்குமுரிய ஆசிகளை அவர் உனக்கு வழங்கட்டும்.
26 எனது பெற்றோர்களுக்கு எவ்வளவோ நன்னமைகள் ஏற்பட்டன எனினும் எனது ஆசீர்வாதங்கள் அவற்றைவிட மேலானது.
உனது சகோதரர்கள் உன்னை எதுவுமில்லாமல் விட்டுவிட்டுப் போனார்கள்.
    ஆனால், இப்போது எனது ஆசீர்வாதங்களையெல்லாம் மலையின் உயரம்போல் கூட்டித் தருகிறேன்.

பென்யமீன்

27 “பென்யமீன் ஒரு பசித்த நரி போன்றவன்.
    காலையில் கொன்று தின்பான்.
    மாலையில் மிஞ்சியதைப் பகிர்ந்துகொள்வான்.”

28 இவர்கள் அனைவரும் இஸ்ரவேலின் 12 குடும்பத்தினர். இவ்வாறு யாக்கோபு அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவருக்குப் பொருத்தமான ஆசீர்வாதங்களைக் கொடுத்தான். 29 பின் இஸ்ரவேல் ஒரு ஆணையிட்டான். “நான் மரிக்கும்போது என் ஜனங்களோடு இருக்க விரும்புகிறேன். என் முற்பிதாக்களோடு நான் அடக்கம் செய்யப்பட வேண்டும். அந்தக் கல்லறை ஏத்தியரிடம் வாங்கிய எப்பெரோனில் உள்ளது. 30 அந்தக் குகை மம்ரேக்கு அருகில் மக்பேலா எனும் இடத்தில் வயலில் உள்ளது. இது கானான் நாட்டில் உள்ளது. இதனை ஆபிரகாம் எப்ரோனிடமிருந்து விலைக்கு வாங்கி கல்லறையாக மாற்றிவிட்டார். 31 ஆபிரகாமும் அவன் மனைவி சாராளும் அதே குகையில் அடக்கம் செய்யப்பட்டனர். ஈசாக்கும் அவர் மனைவி ரெபெக்காளும் அதே குகையில் அடக்கம் செய்யப்பட்டனர். நான் என் மனைவி லேயாளையும் அதே குகையில் அடக்கம் பண்ணினேன். 32 அந்தக் குகை இருக்கும் நிலம் ஏத்தின் மகன்களிடமிருந்து வாங்கப்பட்டது” என்றான். 33 யாக்கோபு பேசி முடித்ததும் படுத்தான். கால்களைக் கட்டிலின்மேல் மடக்கியபடியே மரணமடைந்தான்.

லூக்கா 2

இயேசுவின் பிறப்பு(A)

அக்காலத்தில் ரோம ஆளுகைக்குட்பட்ட எல்லா நாட்டினருக்கும் அகஸ்து இராயன் ஒரு கட்டளை அனுப்பினான். எல்லா மக்களும் தங்கள் பெயர்களைப் பதிவு செய்யுமாறு அக்கட்டளை கூறியது. அதுவே முதல் பதிவாக இருந்தது. சீரியாவின் ஆளுநராக சிரேனியு இருந்தபோது அது நடந்தது. எல்லா மக்களும் பதிவு செய்வதற்கென தங்கள் சொந்த நகரங்களுக்குப் பயணம் மேற்கொண்டார்கள்.

கலிலேயாவில் உள்ள நகரமாகிய நாசரேத்தை விட்டு யோசேப்பு புறப்பட்டான். யூதேயாவில் உள்ள பெத்லகேம் என்னும் நகரத்துக்குச் சென்றான். பெத்லகேம் தாவீதின் நகரம் ஆகும். தாவீதின் குடும்பத்தைச் சேர்ந்தவனாகையால் யோசேப்பு அங்கு சென்றான். மரியாள் அவனைத் திருமணம் செய்யும்பொருட்டு நிச்சயிக்கப்பட்டிருந்ததால் யோசேப்பும் மரியாளும் சேர்ந்து பதிவு செய்துகொண்டனர். (அந்தச் சமயத்தில் மரியாள் கருவுற்றிருந்தாள்.) யோசேப்பும் மரியாளும் பெத்லகேமில் இருந்தபோது மரியாளின் குழந்தைப் பேற்றுக்காலம் நெருங்கியது. அவள் தன் முதல் மகனைப் பெற்றெடுத்தாள். விடுதிகளில் அறைகள் எதுவும் கிடைக்கவில்லை. எனவே மரியாள் குழந்தையைத் துணிகளால் சுற்றி ஆடுமாடுகள் உணவு உண்ணும் ஓர் இடத்தில் வைத்தாள்.

மேய்ப்பர்களின் வருகை

அந்த இரவில் சில மேய்ப்பர்கள் வயல் வெளியில் தங்கள் ஆடுகளைக் காவல் காத்துக் கொண்டிருந்தனர். தேவதூதன் அம்மேய்ப்பர்கள் முன்னே தோன்றினான். கர்த்தரின் மகிமை அவர்களைச் சுற்றிலும் ஒளிவீசியது. மேய்ப்பர்கள் மிகவும் பயந்தனர். 10 தூதன் அவர்களை நோக்கி, “பயப்படாதீர்கள். நான் உங்களுக்கு ஒரு நற்செய்தியைக் கூறப் போகிறேன். அது எல்லாரையும் மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாக்கும். 11 தாவீதின் நகரில் இன்று உங்கள் இரட்சகர் பிறந்துள்ளார். அவரே கிறிஸ்துவாகிய கர்த்தர். 12 ஒரு குழந்தை துணிகளில் சுற்றப்பட்டு ஆடுமாடுகள் உணவுண்ணும் இடத்தில் வைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். இதுவே நீங்கள் அவரை அறிந்துகொள்ளுவதற்குரிய அடையாளம்” என்றான்.

13 அதே சமயத்தில் ஒரு பெரிய கூட்டமான தூதர்கள் பரலோகத்திலிருந்து வந்து முதல் தூதனோடு சேர்ந்துகொண்டார்கள். எல்லா தூதர்களும்,

14 “பரலோகத்தில் தேவனை மகிமைப்படுத்துங்கள்.
    பூமியில் தேவனை பிரியப்படுத்தும் மக்களுக்குச் சமாதானம் உண்டாகட்டும்”

என்று சொல்லி தேவனைப் போற்றினார்கள்.

15 தூதர்கள் மேய்ப்பர்களிடமிருந்து கிளம்பி மீண்டும் பரலோகத்திற்குச் சென்றார்கள். மேய்ப்பர்கள் ஒருவருக்கொருவர், “நாம் பெத்லகேமுக்குப் போய் கர்த்தரால் நமக்குத் தெரிவிக்கப்பட்ட இக்காரியத்தைக் காண்போம்” என்று கூறிக்கொண்டனர்.

16 எனவே மேய்ப்பர்கள் வேகமாகச் சென்று மரியாளையும் யோசேப்பையும் கண்டனர். குழந்தை ஆடுமாடுகள் உணவு உண்ணும் இடத்தில் படுத்திருந்தது. 17 மேய்ப்பர்கள் குழந்தையைப் பார்த்தனர். பின்பு தூதர்கள் குழந்தையைக்குறித்துக் கூறியவற்றை அவர்களுக்குச் சொன்னார்கள். 18 மேய்ப்பர்கள் கூறியவற்றைக் கேட்ட அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். 19 மரியாள் அவற்றைத் தன் இதயத்தில் வைத்துக்கொண்டாள். அவள் அவற்றைக்குறித்துச் சிந்தித்துக் கொண்டிருந்தாள். 20 தாங்கள் கண்டவற்றிற்காகவும் கேட்டவற்றிற்காகவும் தேவனை வாழ்த்திக்கொண்டும், அவருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டும், மேய்ப்பர்கள் தங்கள் ஆடுகள் இருந்த இடத்திற்குச் சென்றனர். தூதர்கள் அவர்களிடம் கூறியபடியே அனைத்தும் நடந்திருக்கக் கண்டனர்.

21 குழந்தைக்கு எட்டு நாட்கள் ஆனதும், விருத்தசேதனம் செய்யப்பட்டது. அதற்கு “இயேசு” என்று பெயரிட்டனர். மரியாளின் கரு உருவாகுமுன்னே தூதன் குழந்தைக்கு வைத்த பெயர் இதுவேயாகும்.

தேவாலயத்தில் இயேசு

22 குழந்தை பெற்ற பெண் சுத்தமாகும் [a] பொருட்டு மோசேயின் விதிகள் கூறியவற்றைச் செய்யும்படியான காலம் வந்தது. யோசேப்பும், மரியாளும், இயேசுவை தேவனிடம் அர்ப்பணிக்குமாறு எருசலேமுக்குக் கொண்டு வந்தனர். 23 தேவனுடைய பிரமாணத்தில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: “வீட்டின் முதற்பேறான மகன் பிறந்ததும் அவன், ‘தேவனுக்கு விசேஷமானவனாகக் கருதப்படுவான்.’”c 24 “இரண்டு காட்டு புறாக்களையாவது அல்லது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது பலியாகக் கொடுக்கக்வேண்டும்”d என்றும் கூறுகிறது. எனவே இதைச் செய்வதற்காக யோசேப்பும், மரியாளும் எருசலேமுக்குச் சென்றனர்.

சிமியோன் இயேசுவைக் காணல்

25 எருசலேமில் சிமியோன் என்னும் பெயர் கொண்ட ஒரு மனிதன் வாழ்ந்தான். அவன் நல்லவனும், பக்திமானுமாக இருந்தான். தேவன் இஸ்ரவேல் மக்களுக்கு உதவும் காலத்தை சிமியோன் எதிர்பார்த்திருந்தான். பரிசுத்த ஆவியானவர் அவனோடு இருந்தார். 26 கர்த்தரிடமிருந்து வரும் கிறிஸ்துவைக் காணுமட்டும் அவன் மரிப்பதில்லை என்று பரிசுத்த ஆவியனவர் சிமியோனுக்குக் கூறியிருந்தார். 27 ஆவியானவர் சிமியோனை தேவாலயத்திற்குள் அழைத்து வந்தார். செய்யவேண்டியவற்றை நிறைவேற்றுவதற்காக மரியாளும், யோசேப்பும் தேவாலயத்திற்குள் சென்றனர். அவர்கள் குழந்தையாகிய இயேசுவை தேவாலயத்திற்குள் கொண்டு வந்தனர். 28 சிமியோன் குழந்தையைத் தன் கரங்களில் தூக்கிக்கொண்டு,

29 “ஆண்டவரே! இப்போது, உம் ஊழியனாகிய என்னை நீர் கூறியபடியே அமைதியாக மரிக்க அனுமதியும்.
30 நீர் நல்கும் இரட்சிப்பை என் கண்களால் கண்டேன்.
31     நீர் அவரை எல்லா மக்களுக்கும் முன்பாக ஆயத்தப்படுத்தினீர்.
32 யூதரல்லாத மக்களுக்கு உம் வழியைக் காட்டும் ஒளி அவர்.
    உம் மக்களாகிய இஸ்ரவேலுக்கு பெருமையை அவர் தருவார்”

என்று தேவனுக்கு நன்றி செலுத்தினான்.

33 இயேசுவின் தந்தையும், தாயும் சிமியோன் இயேசுவைக் குறித்துக் கூறியதைக் கேட்டு வியந்தனர். 34 சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து இயேசுவின் தாயாகிய மரியாளிடம், “இந்தப் பாலகனின் நிமித்தமாக யூதர்கள் விழுவர்; பலர் எழுவர். சிலரால் ஏற்றுக்கொள்ளப்படாத தேவனின் அடையாளமாக இவர் இருப்பார். 35 இரகசியமாக மக்கள் நினைப்பவை வெளியரங்கமாகும். நடக்கவிருக்கும் காரியங்கள் உங்கள் மனதை மிகவும் துக்கப்படுத்தும்” என்றான்.

அன்னாள் இயேசுவைக் காணல்

36 தேவாலயத்தில் அன்னாள் என்னும் பெண் தீர்க்கதரிசி இருந்தாள். அவள் ஆசேர் என்னும் கோத்திரத்தைச் சார்ந்த பானுவேல் என்னும் குடும்பத்தைச் சேர்ந்தவள். அன்னாள் வயது முதிர்ந்தவள். அவள் திருமணமாகித் தன் கணவனுடன் ஏழு ஆண்டுகள் வாழ்ந்தவள். 37 பின் அவள் கணவன் இறந்து போனான். அவள் தனித்து வாழ்ந்து வந்தாள். அவள் எண்பத்து நான்கு வயது முதியவளாக இருந்தாள். அன்னாள் எப்போதும் தேவாலயத்திலேயே இருந்தாள். அவள் உபவாசமிருந்து இரவும் பகலும் தேவனை வழிபட்டுக்கொண்டிருந்தாள்.

38 தேவனுக்கு நன்றி செலுத்தியவண்ணம் அன்னாளும் அப்போது அங்கே இருந்தாள். தேவன் எருசலேமுக்கு விடுதலை அருள வேண்டும் என்று எதிர்பார்த்திருந்த எல்லா மக்களுக்கும் அவள் இயேசுவைக் குறித்துக் கூறினாள்.

யோசேப்பும் மரியாளும் வீடு திரும்பல்

39 தேவனின் பிரமாணம் கட்டளையிட்டபடியே அனைத்துக் காரியங்களையும் யோசேப்பும், மரியாளும் செய்து வந்தனர். பின்னர் கலிலேயாவில் உள்ள தங்கள் சொந்த நகரமாகிய நாசரேத்திற்குத் திரும்பினர். 40 சிறு பாலகன் வளர்ந்து வந்தார். அவர் வல்லமையும், ஞானமும் உடையவரானார். தேவனின் ஆசீர்வாதம் அவரோடிருந்தது.

சிறுவனாக இயேசு

41 ஒவ்வொரு ஆண்டும் பஸ்கா பண்டிகைக்காக இயேசுவின் பெற்றோர் எருசலேமுக்குச் சென்று வந்தனர். 42 வழக்கம் போலவே இயேசு பன்னிரண்டு வயதுச் சிறுவனாக இருந்தபோதும் அவர்கள் அப்பண்டிகைக்குச் சென்றனர். 43 பண்டிகை நாட்கள் முடிந்த பின்னர் அவர்கள் வீடு திரும்பினர். அவர்களுக்குத் தெரியாமலேயே இயேசு எருசலேமில் தங்கிவிட்டார். 44 யோசேப்பும், மரியாளும் ஒரு நாள் முழுதும் பயணம் செய்தனர். இயேசு கூட்டத்தினரோடுகூட இருப்பதாக அவர்கள் எண்ணினர். சுற்றத்தார்களிடையேயும், நெருங்கிய நண்பர்களிடமும் இயேசுவைத் தேட ஆரம்பித்தனர். 45 ஆனால் யோசேப்பும் மரியாளும் கூட்டத்தில் இயேசுவைக் காணாததால் அவரைத் தேடும்பொருட்டு எருசலேமுக்குத் திரும்பினர்.

46 மூன்று நாட்களுக்குப் பின்னர் அவரைக் கண்டனர். மத போதகர்கள் கூறுவதைக் கேட்பதும் அவர்களிடம் வினா எழுப்புவதுமாக இயேசு தேவாலயத்திற்குள் அமர்ந்திருந்தார். 47 எல்லாரும் அவர் பேசுவதைக் கேட்டனர். அவரது புரிந்துகொள்ளும் திறனையும் ஞானம் நிரம்பிய பதில்களையும் உணர்ந்து அவர்கள் வியந்தனர். 48 இயேசுவின் பெற்றோர்களும் அவரைக் கண்டதும் வியப்புற்றனர். அவரது தாய் அவரை நோக்கி, “மகனே, நீ ஏன் இதை எங்களுக்குச் செய்தாய்? உனது தந்தையும் நானும் உன்னை நினைத்துக் கவலைப்பட்டோமே. நாங்கள் உன்னைத் தேடி அலைந்து கொண்டிருந்தோம்” என்றாள்.

49 இயேசு அவர்களை நோக்கி, “ஏன் என்னைத் தேடினீர்கள்? எனது பிதாவின் வேலை இருக்கிற இடத்தில் நான் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்!” என்றார். 50 அவர் கூறியதன் ஆழமான உள் பொருளை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.

51 இயேசு அவர்களோடு நாசரேத்துக்குச் சென்றார். அவரது பெற்றோர் கூறியவற்றிற்குக் கீழ்ப்படிந்தார். அவரது தாய் நடந்த எல்லாவற்றைக் குறித்தும் சிந்தித்துக்கொண்டிருந்தாள். 52 இயேசு மேலும் மேலும் தொடர்ந்து கற்றறிந்தார். அவர் சரீரத்திலும் வளர்ச்சியுற்றார். மக்கள் இயேசுவை விரும்பினர். இயேசு தேவனைப் பிரியப்படுத்தி வாழும் வாழ்க்கைக்கு மாதிரியாயிருந்தார்.

யோபு 15

எலிப்பாஸ் யோபுக்குப் பதில் கூறுகிறான்

15 அப்போது தேமானைச் சார்ந்த எலிப்பாஸ் யோபுக்குப் பதிலாக,

“யோபுவே, நீ உண்மையாகவே ஞான முள்ளவனாக இருந்தால், நீ பிரயோஜனமற்ற வெறும் வார்த்தைகளால் பதில் கூறமாட்டாய்.
    வெப்பக் காற்று நிரம்பியவனாக ஞானவான் இருக்கமாட்டான்.
பொருளற்ற பேச்சுக்களாலும்
    தகுதியற்ற வார்த்தைகளாலும் ஒரு ஞானவான் விவாதிப்பானென்று நீ நினைக்கிறாயா?
யோபுவே, நீ கூறும்படி நடந்தால்,
    ஒருவனும் தேவனை மதித்து, அவரிடம் ஜெபிக்கமாட்டான்.
நீ கூறும் காரியங்கள் உனது பாவத்தைத் தெளிவாகக் காட்டுகின்றன.
    யோபுவே, உனது புத்திசாலித்தனமான சொற்களால் உனது பாவங்களை நீ மறைக்க முயன்றுக்கொண்டிருக்கிறாய்.
நீ செய்வது தவறென நான் உன்னிடம் நிரூபிக்கத் தேவையில்லை.
    உனது வாயினால் கூறும் சொற்களே உனது தவற்றைச் சுட்டிக்காட்டுகின்றன.
    உனது சொந்த உதடுகளே உனக்கு எதிராகப் பேசுகின்றன.

“யோபுவே, பிறந்தவர்களில் நீதான் முதல் மனிதன் என எண்ணுகிறாயா?
    மலைகள் தோன்றும் முன்னே நீ பிறந்தாயா?
நீ தேவனுடைய இரகசிய திட்டங்களுக்குச் செவிசாய்த்தாயா?
    நீ மட்டுமே ஞானமுள்ளவனென நினைக்கிறாயா?
யோபுவே, உன்னைக் காட்டிலும் நாங்கள் மிகுதியாக அறிவோம்.
    உனக்குப் புரிகின்றக் காரியங்களை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.
10 நரைமயிருள்ளோரும் வயது முதிர்ந்தோரும் எங்களோடு ஒத்திருக்கிறார்கள்.
    ஆம், உனது தந்தையைக் காட்டிலும் வயது முதிர்ந்தோரும் எங்கள் பக்கத்தில் இருக்கிறார்கள்.
11 தேவன் உனக்கு ஆறுதல் கூற முயற்சிக்கிறார், ஆனால் அது உனக்குப் போதவில்லை.
    தேவனுடைய செய்தியை நயமாக நாங்கள் உனக்குக் கூறினோம்.
12 யோபுவே, ஏன் நீ புரிந்துகொள்ளவில்லை?
    ஏன் நீ உண்மையைக் காண இயலவில்லை?
13 நீ கோபமான இந்தச் சொற்களைப் பேசும்போது
    நீ தேவனுக்கு எதிராக இருக்கிறாய்.

14 “ஒரு மனிதன் உண்மையில் தூயவனாக இருக்க முடியாது.
    பெண் வயிற்றில் பிறந்த ஒருவன் நியாயமுள்ளவனாக இருக்க முடியாது.
15 தேவன் அவரது தூதர்களைக்கூட [a] நம்புகிறதில்லை.
    வானங்களும் அவரது பார்வையில் துய்மையானவை அல்ல.
16 மனிதன் இன்னும் கேவலமானவன்,
    மனிதன் அழுக்கானவனும் அழியக்கூடியவனும் ஆவான்.
    தண்ணீரைப்போன்று அவன் கொடுமையைப் பருகுகிறான்.

17 “யோபுவே, எனக்குச் செவிகொடு, நான் உனக்கு விவரிப்பேன்.
    எனக்குத் தெரிந்ததை நான் உனக்குக் கூறுவேன்.
18 ஞானவான்கள் எனக்குக் கூறியவற்றை நான் உனக்குச் சொல்வேன்.
    ஞானவான்களின் முற்பிதாக்கள் அவர்களுக்கு இவற்றைக் கூறினார்கள்.
    அவர்கள் எந்த இரகசியங்களையும் என்னிடமிருந்து மறைக்கவில்லை.
19 அவர்கள் மட்டுமே அவர்களின் நாட்டில் வாழ்ந்தார்கள்.
    கடந்து செல்லும்போது அந்நியர்கள் அங்கு இருக்கவில்லை.
    எனவே ஒருவரும் அவர்களுக்கு வேடிக்கையான கருத்துக்களைச் சொல்லவில்லை.
20 தீயவன் வாழ்க்கை முழுவதும் துன்புறுகிறான்.
    கொடியவன் வரையறுக்கப்பட்ட அவன் ஆயுள் முழுவதும் துன்புறுகிறான்.
21 ஒவ்வொரு சத்தமும் அவனை அச்சுறுத்துகிறது,
    அவன் பாதுகாப்பாக இருப்பதாக எண்ணும்போது அவனது பகைவன் அவனைத் தாக்குவான்.
22 தீயவன் நம்பிக்கையற்றுக் கலங்குகிறான்,
    மரண இருளிலிருந்து தப்புவதற்கு அவனுக்கு எந்த நம்பிக்கையுமில்லை.
    அவனைக் கொல்லக் காத்துக் கொண்டிருக்கும் வாள் ஒன்று எங்கோ உள்ளது.
23 அவன் அங்குமிங்கும் அலைந்துத் திரிகிறான்,
    ஆனால் அவன் உடல் பருந்துகளுக்கு இரையாகும்.
    அவனது மரணம் மிக அருகாமையிலுள்ளது என்பதை அவன் அறிகிறான்.
24 கவலையும் துன்பமும் அவனை அச்சுறுத்தும்.
    அவனை அழிக்கத் தயாராயிருக்கிற அரசனைப் போன்று அவை அவனைத் தாக்கும்.
25 ஏனெனில், தீயவன் தேவனுக்குக் கீழ்ப்படியமறுக்கிறான்.
    அவன் தனது கை முட்டியைத் தேவனுக்கு எதிராக உயர்த்தி, சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு எதிராகச் செயல்படுகின்றான். தோற்கடிக்க முயல்கிறான்.
26 தீயவன் மிகவும் அடம்பிடிப்பவன்.
    அவன் கெட்டியான, வலிமையான கேடயத்தால் தேவனைத் தாக்க முயல்கிறான்.
27 அவன் செல்வந்தனும் கொழுத்தவனாகவும் இருப்பான்,
28 ஆனால் அவன் ஊர் அழிக்கப்படும், அவன் வீடு பாழாகும்,
    அவன் வீடு வெறுமையாகும்,
29 தீயவன் பலகாலம் செல்வனாக இருக்கமாட்டான்.
    அவன் செல்வம் நிலைக்காது.
    அவனது பயிர்கள் செழிப்பாக வளராது.
30 தீயவன் இருளிலிருந்து தப்பமாட்டான்.
    நோயினால் மடியும் இலைகளையும்
    காற்றினால் பறக்கடிக்கப்படும் இலைகளையும் கொண்ட மரத்தைப் போலிருப்பான்.
31 தீயவன் தகுதியற்றவற்றை நம்பி தன்னை மூடனாக்கிக்கொள்ளக் கூடாது.
    ஏனெனில் அவன் எதையும் அடையமாட்டான்.
32 அவன் வாழ்க்கை முடியும் முன்பே, தீயவன் வயதாகி வாடிப்போவான்.
    என்றும் பசுமையுற முடியாத, உலர்ந்த கிளையைப் போல அவன் இருப்பான்.
33 இன்னும் பழுக்காத திராட்சைக் கனிகளை இழக்கின்ற திராட்சைக் கொடியைப்போன்று தீயவன் இருப்பான்.
    மொட்டுக்களை இழக்கும் ஒலிவ மரத்தைப் போன்று அம்மனிதன் இருப்பான்.
34 ஏனெனில் தேவனற்ற மனிதர்களுக்கு எதுவுமில்லை (ஒன்றுமில்லை).
    பணத்தை நேசிப்போரின் வீடுகள் நெருப்பால் அழியும்.
35 தீயனச் செய்து, தொல்லை விளைவிப்பதற்குத் தீயோர் வழிகளைத் திட்டமிடுகிறார்கள்.
    ஜனங்களை ஏமாற்றும் வழிகளை அவர்கள் எப்போதும் திட்டமிடுகிறார்கள்” என்று கூறினான்.

1 கொரி 3

மனிதனைப் பின்பற்றுவது தவறு

சகோதர சகோதரிகளே, கடந்த காலத்தில்ஆன்மீகமானவர்களிடம் பேசுவதைப் போல நான் உங்களிடம் பேச முடியாமல் போயிற்று. கிறிஸ்துவில் குழந்தைகளைப் போன்று, உலகின் சாதாரண மக்களிடம் பேசுவதைப் போன்று உங்களிடம் பேச வேண்டியதாயிற்று. நான் உங்களுக்குக் கற்பித்தவை பாலைப் போன்றது, திட உணவைப் போன்றவை அல்ல. ஏனெனில் திட உணவை உட்கொள்ளுமளவிற்கு நீங்கள் பக்குவம் பெறவில்லை. இப்போதும்கூட திட உணவை ஏற்கும் தகுதியை நீங்கள் பெறவில்லை. நீங்கள் இன்னும் ஆன்மீகமான மக்கள் அல்ல. உங்களுக்குப் பொறாமையும், வாதாடுகிற குணமும் உண்டு. இது நீங்கள் ஆன்மீகமானவர்கள் அல்ல என்பதைக் காட்டுகிறது. உலகின் சாதாரண மக்களைப் போலவே நீங்களும் நடந்துகொள்கின்றீர்கள். உங்களில் ஒருவன் “நான் பவுலைப் பின்பற்றுகிறேன்”எனவும், இன்னொருவன் “அப்பொல்லோவைப் பின்பற்றுகிறேன்” எனவும் கூறுகிறீர்கள். நீங்கள் அப்படிப்பட்டவற்றைக் கூறும்போது நீங்களும் உலகின் சாதாரண மக்களைப் போல நடந்துகொள்கிறீர்கள்.

அப்பொல்லோ முக்கியமானவனா? இல்லை. பவுல் முக்கியமானவனா? இல்லை. நீங்கள் விசுவாசிப்பதற்கு உதவிய தேவனுடைய பணியாட்களே நாங்கள். தேவன் எங்களுக்கு இட்ட பணியையே நாங்கள் ஒவ்வொருவரும் செய்தோம். நான் விதையை விதைத்தபோது, அப்பொல்லோ நீரூற்றினான். ஆனால் தேவன் ஒருவரே விதையைத் துளிர்த்து வளரும்படியாகச் செய்தார். எனவே விதையை விதைக்கின்ற மனிதன் முக்கியமானவன் அல்ல. அதற்கு நீரூற்றுகின்ற மனிதனும் முக்கியமானவன் அல்ல. எல்லாவற்றையும் வளர்ச்சியுறும்படி செய்கின்றவராகிய தேவன் ஒருவரே முக்கியமானவர். விதையை விதைப்பவனுக்கும், நீரூற்றிப் பேணுபவனுக்கும் குறிக்கோள் ஒன்றே. தன் வேலைக்குரிய வெகுமதியை ஒவ்வொருவனும் பெறுவான். நாங்கள் தேவனுக்காக ஒருமித்து உழைக்கிற வேலையாட்கள். நீங்களே தேவனுக்குரிய ஒரு நிலத்தைப் போன்றவர்கள்.

நீங்களே தேவனுக்குரிய ஒரு வீட்டைப் போன்றவர்கள். 10 சிறந்த வீட்டைக் கட்டும் வேலையாளைப் போன்று நான் வீட்டின் அஸ்திபாரத்தைக் கட்டினேன். தேவன் எனக்கு அளித்த வரத்தை நான் அதற்குப் பயன்படுத்தினேன். மற்றவர்கள் அந்த அஸ்திபாரத்தின் மீது கட்டுகிறார்கள். ஆனால் ஒவ்வொருவனும் அதனை எவ்வாறு கட்டுகிறான் என்பதில் கவனம் செலுத்தவேண்டும். 11 அஸ்திபாரம் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ளது. வேறெந்த அஸ்திபாரத்தையும் ஒருவரும் அமைக்க முடியாது. ஏற்கெனவே கட்டப்பட்ட அஸ்திபாரம் இயேசு கிறிஸ்துவாகும். 12 பொன், வெள்ளி, மணிகள், மரம், புல், வைக்கோல் போன்றவற்றை பயன்படுத்தி ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மீது கட்டமுடியும். 13 ஒவ்வொருவனின் வேலையும் இறுதியில் (கிறிஸ்து மக்களை நியாயம் தீர்க்கிற நாளில்) பகிரங்கப்படுத்தப்படும். அந்த நாளில் ஒவ்வொருவனின் பணியையும் அக்கினி சோதிக்கும். 14 அஸ்திபாரத்தில் ஒருவன் கட்டிய கட்டிடம் நிலைக்குமாயின் அவன் தகுந்த நற்பலன் பெறுவான். 15 ஆனால், ஒருவனின் கட்டிடம் எரிந்து போகுமானால் அவன் நஷ்டம் அடைவான். அந்த மனிதன் காப்பாற்றப்படுவான். எனினும் அக்கினியினின்று தப்பி வந்தாற்போன்று ஒரு நிலையை அவன் அடைவான்.

16 நீங்களே தேவனுடைய ஆலயம் என்பதை நீங்கள் அறிவீர்கள். தேவனுடைய ஆவியானவர் உங்களில் வாழ்கிறார். 17 தேவனுடைய ஆலயத்தை அழிக்கும் ஒருவனை தேவன் அழிப்பார். ஏன்? தேவனுடைய ஆலயம் பரிசுத்தமானது. நீங்கள் தேவனுடைய ஆலயமாவீர்கள்.

18 உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள். உங்களில் ஒருவன் தன்னை இவ்வுலகில் ஞானமுள்ளவனாக நினைத்தால் அவன் முட்டாளாக வேண்டும். இந்த வகையில் அவன் உண்மையான ஞானியாகிறான். 19 ஏன்? ஏனெனில் இந்த உலகத்து ஞானத்தை தேவன் மடமையானதாகவே கருதுகிறார். அது வேத வாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளது. “அவர் ஞானிகள் தங்கள் தந்திர வழிகளைப் பயன்படுத்துகையில் அவர்களை மடக்கிப் பிடிக்கிறார்” [a] என்று எழுதப்பட்டிருக்கிறது. 20 தேவன் ஞானிகளின் எண்ணத்தை அறிவார். அவர்களுடைய எண்ணங்கள் பயனற்றவை என்பதை தேவன் அறிவார். [b] 21 எனவே, நீங்கள் மனிதரைப்பற்றி பெருமைப் பாராட்டாதீர்கள். எல்லாப் பொருள்களும் உங்களுக்கு உரியனவே. 22 பவுல், அப்பொல்லோ, கேபா, உலகம், வாழ்வு, மரணம், நிகழ்காலம், எதிர்காலம் இவை எல்லாம் உங்களுடையவையே. 23 நீங்கள் கிறிஸ்துவுக்குரியவர்கள். கிறிஸ்து தேவனுக்கு உரியவர்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center