M’Cheyne Bible Reading Plan
பார்வோனின் முன்னே மோசேயும் ஆரோனும்
5 மோசேயும் ஆரோனும் ஜனங்களிடம் பேசிய பிறகு, பார்வோனிடம் சென்றனர். அவர்கள், “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர், ‘பாலைவனத்தில் போய் பண்டிகை கொண்டாடி என்னை கௌரவப்படுத்துவதற்கு என் ஜனங்களை நீ போகவிடு’ என்று கூறுகிறார்” என்றனர்.
2 ஆனால் பார்வோன், “யார் உங்கள் கர்த்தர்? நான் ஏன் அவருக்குக் கீழ்ப்படியவேண்டும்? இஸ்ரவேலரை நான் ஏன் போக அனுமதிக்கவேண்டும்? இந்த கர்த்தர் யாரென்று கூட எனக்குத் தெரியாது. நான் இஸ்ரவேலரைப் போக அனுமதிக்கமாட்டேன்” என்றான்.
3 அப்போது ஆரோனும் மோசேயும், “எபிரெய ஜனங்களின் தேவன் எங்களுடன் பேசினார். பாலைவனத்தில் மூன்று நாட்கள் பயணம் செல்வதற்கு எங்களை அனுமதிக்குமாறு நாங்கள் உன்னை வேண்டுகிறோம். அங்கு எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலி செலுத்துவோம். இதை நாங்கள் செய்யவில்லையென்றால், அவர் கோபங்கொண்டு நோய் அல்லது யுத்தத்தினால் நாங்கள் அழியும்படியாகச் செய்வார்” என்றனர்.
4 ஆனால் பார்வோன் அவர்களை நோக்கி, “மோசேயே, ஆரோனே, நீங்கள் வேலை செய்கிறவர்களைத் தொந்தரவு செய்கிறீர்கள். அவர்கள் அவர்களது வேலையைச் செய்யட்டும். உங்கள் வேலையை நீங்கள் கவனியுங்கள். 5 ஏராளமான வேலையாட்கள் உள்ளார்கள். தம் வேலைகளைச் செய்யாதபடி நீங்கள் அவர்களை தடுக்கிறீர்கள்” என்றான்.
பார்வோன் ஜனங்களைத் தண்டித்தல்
6 அதே நாளில் இஸ்ரவேல் ஜனங்கள் இன்னும் கடினமாக உழைக்கும்படியாக பார்வோன் ஒரு கட்டளையிட்டான். அடிமைகளின் மேற்பார்வையாளர்களிடமும் எபிரெயர்களைக் கண்காணிப்பவர்களிடமும் பார்வோன், 7 “ஜனங்களுக்கு எப்போதும் நீங்கள் வைக்கோலை கொடுத்து வந்தீர்கள். அவர்கள் அதைப் பயன்படுத்திச் செங்கல் செய்தார்கள். ஆனால் இப்போது செங்கல் செய்வதற்குத் தேவையான வைக்கோலை அவர்களே சேகரித்து வரும்படி கூறுங்கள். 8 ஆனால் முன்னால் செய்தபடியே, அதே எண்ணிக்கை செங்கற்களை தினமும் அவர்கள் செய்யவேண்டும். அவர்கள் சோம்பேறிகளாகிவிட்டனர், எனவே தான் தங்களை அனுப்பும்படியாக அவர்கள் என்னைக் கேட்கிறார்கள். அவர்கள் செய்வதற்குப் போதிய வேலை இல்லை. எனவேதான் அவர்கள் தங்கள் தேவனுக்குப் பலிகள் செலுத்தவேண்டுமென என்னைக் கேட்கிறார்கள். 9 எனவே இந்த மனிதர்கள் கடினமாக வேலை செய்யும்படிச் செய்யுங்கள். அவர்களைச் சுறுசுறுப்பாக வைத்திருங்கள். அப்போது அவர்களுக்கு மோசேயின் பொய்களை நம்புவதற்குப் போதிய நேரமிராது” என்றான்.
10 எனவே இஸ்ரவேலரின் எகிப்திய எஜமானர்களும், எபிரெய மேற்பார்வையாளர்களும் இஸ்ரவேல் ஜனங்களிடம் சென்று, “செங்கற்கள் செய்ய உங்களுக்கு வைக்கோல் தரமுடியாதென பார்வோன் முடிவு செய்துள்ளார். 11 நீங்கள் போய் உங்களுக்கு வேண்டிய வைக்கோலைக் கொண்டு வரவேண்டும். ஆனால் முன்னால் செய்தபடியே எண்ணிக்கைகளில் ஒன்றும் குறைக்கப்படுவதில்லை” என்றார்கள்.
12 வைக்கோலைக் கொண்டு வருவதற்காக ஜனங்கள் எகிப்தின் எல்லா இடங்களுக்கும் சென்றார்கள். 13 மேற்பார்வையாளர்கள் ஜனங்களை இன்னும் கடினமாக வேலைவாங்கினார்கள். முன்னால் செய்த எண்ணிக்கை அளவுக்கு செங்கற்களைச் செய்யும்படி வற்புறுத்தினார்கள். 14 இஸ்ரவேலரின் எகிப்திய எஜமானர்கள், எபிரெய மேற்பார்வையாளர்களைத் தேர்ந்தெடுத்து ஜனங்கள் செய்த வேலைக்கு அவர்களைப் பொறுப்பாளர்கள் ஆக்கினார்கள். இஸ்ரவேலரின் எகிப்திய எஜமானர்கள், எபிரெய மேற்பார்வையாளர்களை அடித்து அவர்களிடம், “முன்னால் செய்த எண்ணிக்கையளவு செங்கற்களை ஏன் நீங்கள் செய்யவில்லை? முன்பு அதனைச் செய்ய முடிந்ததென்றால், இப்போதும் உங்களால் அதைச் செய்யக் கூடும்!” என்றார்கள்.
15 அப்போது எபிரெய மேற்பார்வையாளர்கள் பார்வோனிடம் சென்று: “நாங்கள் உமது ஊழியர்கள். ஏன் எங்களை இவ்வாறு நடத்துகிறீர்? 16 எங்களுக்கு நீர் வைக்கோல் தரவில்லை. ஆனால் முன்பு செய்த எண்ணிக்கையளவுக்கு செங்கற்களை இப்போதும் செய்யும்படியாகக் கூறுகிறீர். இப்போது எங்கள் எஜமானர்கள் எங்களை அடிக்கிறார்கள். இவ்வாறு உங்கள் ஜனங்கள் செய்வது தவறானது” என்று குறை கூறினார்கள்.
17 பார்வோன், “நீங்கள் சோம்பேறிகள், உங்களுக்கு வேலைசெய்ய விருப்பமில்லை. அதனால் தான் உங்களை அனுப்பும்படி நீங்கள் என்னைக் கேட்கிறீர்கள். நீங்கள் இங்கிருந்து போய், கர்த்தருக்கு பலிசெலுத்த விரும்புகிறீர்கள். 18 இப்போது வேலை செய்யத் திரும்பி போங்கள்! உங்களுக்கு வைக்கோல் தரமாட்டோம். ஆனால் முன்பு செய்த எண்ணிக்கை அளவுக்கு செங்கற்களை நீங்கள் செய்ய வேண்டும்!” என்று பதிலளித்தான்.
19 தங்களுக்குத் தொல்லை நேர்ந்ததை எபிரெய மேற்பார்வையாளர்கள் கண்டுகொண்டார்கள். கடந்த காலத்த்தில் செய்த எண்ணிக்கை அளவுக்கு செங்கற்களைச் செய்யமுடியாது என்று அவர்கள் அறிந்திருந்தார்கள்.
20 பார்வோனைச் சந்தித்துத் திரும்பிக்கொண்டிருந்த வழியில் மோசேயும், ஆரோனும் அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருந்தார்கள். 21 அவர்கள் மோசேயையும், ஆரோனையும் நோக்கி, “நம்மைப் போகவிடும்படியாக பார்வோனைக் கேட்டபடியால் நீங்கள் பெரிய தவறு செய்துவிட்டீர்கள். பார்வோனும், அவரது ஆட்சியாளர்களும் எங்களை வெறுக்கும்படிச் செய்ததால் கர்த்தர் உங்களைத் தண்டிப்பார். எங்களைக் கொல்வதற்கு அவர்களுக்கு ஒரு தருணத்தை அளித்திருக்கிறீர்கள்” என்றனர்.
மோசே தேவனிடம் முறையிடுதல்
22 மோசே கர்த்தரிடம் ஜெபம் செய்து, “ஆண்டவரே, உமது ஜனங்களுக்கு ஏன் இந்தக் கொடுமையான காரியத்தைச் செய்தீர்? ஏன் என்னை இங்கு அனுப்பினீர்? 23 நான் பார்வோனிடம் போய் நீர் கூறும்படியாகச் சொன்னவற்றைக் கூறினேன். அப்போதிலிருந்து அவன் ஜனங்களைக் கேவலமாக நடத்துகிறான். அவர்களுக்கு உதவுவதற்கு நீர் எதையும் செய்யவில்லை!” என்றான்.
இயேசுவின் குழுவினர்
8 மறுநாள் இயேசு சில பெரிய பட்டணங்களுக்கும், சில சிறு நகரங்களுக்கும் பிரயாணம் செய்தார். தேவனின் இராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை இயேசு கூறி மக்களுக்குப் போதித்தார். பன்னிரண்டு சீஷர்களும் அவரோடு கூட இருந்தனர். 2 சில பெண்களும் அவரோடு கூட இருந்தனர். இயேசு இந்தப் பெண்களை நோய்களில் இருந்தும் பிசாசின் அசுத்த ஆவிகளில் இருந்தும் குணமாக்கி இருந்தார். இப்பெண்களுள் ஒருத்தி மரியாள். அவள் மக்தலா என்னும் நகரத்திலிருந்து வந்திருந்தாள். ஏழு அசுத்த ஆவிகள் அவளிடமிருந்து விரட்டப்பட்டிருந்தன. 3 இப்பெண்களோடுகூட கூசாவின் (ஏரோதுவின் பொருளாளர்களுள் ஒருவனாக இருந்தவன்) மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும் வேறுபல பெண்களும் இருந்தனர். இயேசுவுக்கும் அவருடைய சீஷர்களுக்கும் இவர்கள் தங்கள் பணத்தின் மூலம் சேவை செய்தனர்.
விதைத்தலின் உவமை(A)
4 கூட்டமாகப் பலர் சேர்ந்து வந்தனர். ஒவ்வொரு நகரத்திலிருந்தும் மக்கள் இயேசுவிடம் வந்தனர். இயேசு பின்வரும் உவமையை மக்களுக்குக் கூறினார்.
5 “ஓர் உழவன் விதை விதைப்பதற்குச் சென்றான். உழவன் விதைத்துக்கொண்டிருந்தபோது, பாதையின் ஓரமாகச் சில விதைகள் விழுந்தன. மக்கள் அவற்றின்மீது நடந்து சென்றனர். பறவைகள் அவற்றைத் தின்றன. 6 சில விதைகள் பாறையின்மீது விழுந்தன. அவை முளைக்க ஆரம்பித்தன. நீர் இல்லாததால் மடிந்தன. 7 முட்புதர்கள் நடுவே சில விதைகள் விழுந்தன. அவை முளைத்தன. ஆனால் பின்னர், அவை முளைக்காதபடி புதர்கள் தடுத்தன. 8 சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்து நூறு மடங்கு தானியத்தைத் தந்தன.”
இயேசு இந்த உவமையைக் கூறி முடித்தார். பின்பு இயேசு, “நான் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கிற மக்களே, கவனியுங்கள்” என்றார்.
9 இயேசுவின் சீஷர்கள் அவரை நோக்கி, “இந்த உவமையின் பொருள் என்ன?” என்று கேட்டனர்.
10 இயேசு, “தேவனுடைய இராஜ்யத்தைப்பற்றிய இரகசியங்களை அறிந்துகொள்ள நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். ஆனால், நான் பிற மக்களோடு பேசுவதற்கு உவமைகளைப் பயன்படுத்துகிறேன். நான் இவ்வாறு செய்வது ஏனென்றால்:
“‘அவர்கள் பார்ப்பார்கள்,
ஆனால் எதையும் காணமாட்டார்கள்.
அவர்கள் கவனிப்பார்கள்:
ஆனால் எதையும் புரிந்துகொள்ளமாட்டார்கள்’”(B)
என்றார்.
உவமையின் விளக்கம்(C)
11 “இந்த உவமை இவ்வாறு பொருள்படுகிறது: விதை தேவனுடைய வசனமாகும். 12 பாதையோரத்தில் விழுந்த விதை எதைக் குறிக்கிறது? அது தேவனுடைய போதனையைக் கேட்கிற மனிதர்களுக்கு ஒப்பானது. ஆனால் பிசாசு வந்து அவர்கள் இதயத்தில் இருந்து அந்த போதனையை எடுத்துப் போகிறான். எனவே அந்த மனிதர்கள் போதனையை நம்பி, இரட்சிப்படைய முடியாது. 13 பாறையில் விழுந்த விதை எதைக் குறிக்கிறது? தேவனுடைய போதனையைக் கேட்டு, மகிழ்வோடு ஏற்றுக்கொள்கிற மனிதர்களுக்கு ஒப்பானது. ஆனால், இந்த மனிதர்கள் ஆழமாக வேர் விடுவதில்லை. கொஞ்ச நேரம் நம்பிக்கை வைப்பர். ஆனால் பின்பு தொல்லைகள் வரும். நம்புவதை விடுத்து, தேவனை விட்டு விலகிச் செல்வர்.
14 “முட்புதர்களின் நடுவில் விழுந்த விதை எதைக் குறிக்கிறது? அது தேவனுடைய போதனையைக்கேட்டும், கவலை, செல்வம், இவ்வாழ்வின் களிப்பு ஆகியவற்றால் அப்போதனைகளை வளரவிடாது தடுக்கப்பட்டவர்களைக் குறிக்கிறது. எனவே, அவர்கள் ஒருபோதும் நல்ல பலன் கொடுப்பதில்லை. 15 நல்ல நிலத்தில் விழுந்த விதை எதைக் குறிக்கிறது? அது தேவனின் போதனைகளை உண்மையான நல்ல இதயத்தோடு கேட்கின்ற மக்களைப் போன்றது. அவர்கள் தேவனுடைய போதனைகளுக்குக் கீழ்ப்படிந்து பொறுமையாக நற்பலனைக் கொடுப்பவர்களாவார்கள்.
கவனிக்கும் முறை(D)
16 “எந்த மனிதனும் விளக்கைக் கொளுத்தி, ஒரு பாத்திரத்தினால் மூடி, படுக்கையின் கீழே மறைத்து வைப்பது இல்லை. ஆனால் அம்மனிதன் விளக்கை அதற்குரிய விளக்குத் தண்டின்மேல் உள்ளே நுழையும் மக்கள் அனைவருக்கும் ஒளி தரும்படியாக ஏற்றி வைப்பான். 17 மறைக்கப்பட்டவை அனைத்தும் வெளிப்படும். ஒவ்வொரு இரகசியமும் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படும். 18 எவ்வாறு கவனிக்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். புரியும் திறன் பெற்ற மனிதன் மிகுதியாக அறிந்துகொள்வான். புரியும் திறனற்ற மனிதனோ தனக்கு இருப்பதாக அவன் நினைக்கும், புரியும் திறனையும் இழந்துவிடுவான்” என்றார்.
இயேசுவின் குடும்பத்தினர்(E)
19 இயேசுவின் தாயும், சகோதரர்களும் அவரைக் காண வந்தனர். இயேசுவின் தாயும் சகோதரரும் இயேசுவை நெருங்க முடியாதபடி பல மக்கள் அவரைச் சூழ்ந்திருந்தனர். 20 ஒருவன் இயேசுவிடம், “உங்கள் தாயும், சகோதரர்களும் வெளியே நின்றுகொண்டிருக்கின்றனர். அவர்கள் உங்களைக் காண விரும்புகின்றனர்” என்றான்.
21 இயேசு அவர்களுக்கு, “தேவனுடைய போதனையைக் கேட்டு, அதன்படி கீழ்ப்படிந்து நடக்கிற மக்களே என் தாயும், சகோதரர்களும் ஆவார்கள்” என்று பதிலளித்தார்.
இயேசுவைப் பின்பற்றினோர் அவரது ஆற்றலைக் காணுதல்(F)
22 ஒரு நாள் இயேசுவும், அவரது சீஷர்களும் ஒரு படகில் அமர்ந்தனர். இயேசு அவர்களிடம், “ஏரியைக் கடந்து அக்கரை செல்ல என்னோடு வாருங்கள்” என்றார். அவர்கள் அவ்வாறே செல்ல ஆரம்பித்தனர். 23 படகு செல்கையில் இயேசு தூக்கத்தில் ஆழ்ந்தார். ஏரியின் மீது ஒரு பெரிய புயல் வீசிற்று. படகுக்குள் நீர் நிரம்ப ஆரம்பித்தது. அவர்கள் ஆபத்தில் சிக்கிக்கொண்டனர். 24 இயேசுவின் சீஷர்கள் அவரிடம் சென்று அவரை எழுப்பினர். அவர்கள், “ஐயா, ஐயா, நாம் மூழ்கிவிடப் போகிறோம்” என்றனர்.
இயேசு எழுந்தார். அவர் காற்றுக்கும், அலைகளுக்கும் கட்டளையிட்டார். உடனே காற்று ஓய்ந்தது. ஏரி அமைதியுற்றது. 25 இயேசு தன்னோடு இருந்தவர்களை நோக்கி, “உங்கள் விசுவாசம் எங்கே?” என்றார்.
இயேசுவைப் பின்பற்றி வந்தவர்களோ அச்சமும் ஆச்சரியமும் கொண்டனர். அவர்கள் ஒருவருக்கொருவர் “இம்மனிதர் எப்படிப்பட்டவர்? காற்றுக்கும், நீருக்கும் கட்டளையிட அவை அவருக்குக் கீழ்ப்படிகின்றனவே!” என்று கூறிக் கொண்டனர்.
பிசாசு பிடித்த மனிதன்(G)
26 இயேசுவும், அவரைப் பின்பற்றியவர்களும் கலிலேயாவில் இருந்து ஓர் ஏரியைக் கடந்து சென்றனர். கதரேனர் மக்கள் வாழ்கின்ற பகுதியை வந்தடைந்தனர். 27 இயேசு படகில் இருந்து இறங்கிய போது, அந்த நகரத்தைச் சேர்ந்த ஒரு மனிதன் இயேசுவிடம் வந்தான். அம்மனிதன் பிசாசுகள் பிடித்தவனாக இருந்தான். பல காலமாக அவன் ஆடைகள் எதுவும் அணியவில்லை. வீட்டில் வசிக்காமல் இறந்தவர்களைப் புதைத்த குகைகளில் வசித்தான்.
28-29 பிசாசு அவனை அடிக்கடி ஆக்கிரமித்தது. அம்மனிதனைச் சிறையில் அடைந்தனர். அவனது கைகளும், கால்களும் சங்கிலிகளால் கட்டப்பட்டன. ஆனால் அம்மனிதன் சங்கிலிகளை அறுத்து விலக்கிவிடுவான். மக்களே இல்லாத இடங்களுக்கு அம்மனிதனை அவனுக்குள் இருந்த பிசாசு இழுத்துச் சென்றது. இயேசு அந்த அசுத்த ஆவிக்கு அம்மனிதனை விட்டு வெளியே வருமாறு கட்டளையிட்டார். அம்மனிதன் இயேசுவுக்கு முன்பாக விழுந்து வணங்கி, உரத்த குரலில், “இயேசுவே, உன்னத தேவனின் குமாரனே! நீர் என்னிடம் எதிர்ப்பார்ப்பதென்ன? தயவுசெய்து என்னைக் கொடுமைப்படுத்தாதிரும்” என்றான்.
30 இயேசு அவனை நோக்கி, “உன் பெயர் என்ன?” என்று கேட்டார். அம்மனிதன், “லேகியோன்” என்று பதிலளித்தான். (அவன் பல பிசாசுகள் தன்னைப் பிடித்திருந்தமையால் தனது பெயர் “லேகியோன்” என்று குறிப்பிட்டான்) 31 நித்தியமான இருளுக்குத் தங்களை அனுப்பாதவாறு பிசாசுகள் இயேசுவை வேண்டிக்கொண்டன. 32 அம்மலையின் மீது ஒரு கூட்டமான பன்றிகள் மேய்ந்துகொண்டிருந்தன. பிசாசுகள் அப்பன்றிக் கூட்டத்தில் செல்வதற்குத் தங்களை அனுமதிக்குமாறு இயேசுவை வேண்டின. இயேசு அவ்வாறே செய்ய அனுமதித்தார். 33 பிசாசுகள் அம்மனிதனைவிட்டு வெளியேறி பன்றிகளின் உள்ளே புகுந்தன. பன்றிகள் பாறைகளில் உருண்டு ஏரிக்குள் விழுந்தன. எல்லாப் பன்றிகளும் மூழ்கி மடிந்தன.
34 பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்த மனிதர்கள் நடந்ததைப் பார்த்து அங்கிருந்து ஓடிப்போனார்கள். அவர்கள் நடந்ததை வயற்புறங்களுக்கும், நகரங்களுக்கும் சென்று மக்களுக்குக் கூறினர். 35 நடந்ததைக் காண விரும்பிய மக்கள் இயேசுவிடம் சென்றனர். அவர்கள் இயேசுவை நெருங்கியபோது இயேசுவின் பாதத்தருகே அம்மனிதன் உட்கார்ந்து இருக்கக் கண்டனர். அம்மனிதன் ஆடைகள் அணிந்தவனாக, மனநலம் பெற்றவனாகக் காணப்பட்டான். பிசாசுகள் அவனைவிட்டு நீங்கி இருந்தன. அதைக் கண்டு அச்சம் கொண்டனர் மக்கள்.
36 நடந்தவற்றைக் கண்ட மக்கள் பிறரிடம் இயேசு அந்த மனிதனைக் குணமாக்கிய வகையைக் கூறினர். 37 இயேசுவை அங்கிருந்து போய்விடுமாறு கெதரேன பகுதி மக்கள் அனைவரும் கூறினர். அவர்கள் மிகவும் பயந்தவர்களாகக் காணப்பட்டனர். எனவே இயேசு படகில் ஏறி, கலிலேயாவுக்குத் திரும்பிச் சென்றார். 38 இயேசுவால் குணம் பெற்ற மனிதன் தானும் கூடவே வர விரும்புவதாக அவரை வேண்டினான்.
ஆனால் இயேசு அந்த மனிதனிடம், 39 “வீட்டுக்குப்போய் தேவன் உனக்குச் செய்ததைப் பிறருக்குக் கூறு” என்று சொல்லி அவனை அனுப்பிவிட்டார்.
ஆகவே அவன் இயேசு தனக்குச் செய்ததை நகரமெங்கும் சென்று மக்களுக்குக் கூறினான்.
இறந்த பெண் உயிரடைதலும் நோயாளி குணப்படுதலும்(H)
40 இயேசு கலிலேயாவுக்குத் திரும்பிச் சென்றபோது மக்கள் அவரை வரவேற்றனர். ஒவ்வொருவரும் அவருக்காகக் காத்திருந்தனர். 41 யவீரு என்னும் பெயருள்ள மனிதன் இயேசுவிடம் வந்தான். ஜெப ஆலயத்தின் தலைவனாக யவீரு இருந்தான். இயேசுவின் பாதங்களில் விழுந்து வணங்கி யவீரு தன் வீட்டுக்கு வருகை தருமாறு அவரை வேண்டினான். 42 யவீருக்கு ஒரே ஒரு மகள் இருந்தாள். அவளுக்குப் பன்னிரண்டு வயதாகி இருந்தது. அவள் இறக்கும் தருவாயில் இருந்தாள். யவீருவின் வீட்டுக்குப் போய்க்கொண்டிருக்கும்போது எல்லா பக்கங்களிலிருந்தும் இயேசுவை மக்கள் சூழ்ந்து கொண்டனர். 43 இரத்தப் போக்கினால் பன்னிரண்டு ஆண்டுகள் துன்புற்றுக்கொண்டிருந்த ஒரு பெண்ணும் அவர்களுள் ஒருத்தி ஆவாள். மருத்துவர்களிடம் சென்று அவள் தனது பணத்தை எல்லாம் செலவழித்திருந்தாள். ஆனால் எந்த மருத்துவராலும் அவளைக் குணமாக்க இயலவில்லை. 44 அப்பெண் இயேசுவுக்குப் பின்னாக வந்து அவரது அங்கியின் கீழ்ப் பகுதியைத் தொட்டாள். அந்நேரமே அவளின் இரத்தப் போக்கு நின்றுவிட்டது. 45 அப்போது இயேசு, “என்னைத் தொட்டது யார்?” என்று கேட்டார். எல்லாருமே தாம் இயேசுவைத் தொடவில்லை என்று கூறினர். பேதுரு, “குருவே! உங்களைச் சுற்றிலும் மக்கள் கூட்டம் நெருக்கித் தள்ளிக்கொண்டிருக்கிறது” என்றான்.
46 அதற்கு இயேசு, “யாரோ ஒருவர் என்னைத் தொட்டது உண்மை. என்னிடமிருந்து வல்லமை வெளிப்பட்டதை நான் உணர்ந்தேன்” என்றார். 47 தன்னால் ஒளிக்க முடியாததை உணர்ந்த பெண், நடுங்கியவளாய் இயேசுவின் முன்னே விழுந்து வணங்கினாள். மக்கள் அனைவரும் கேட்கும்படி தான் இயேசுவைத் தொட்டதன் காரணத்தைக் கூறினாள். பின்னர் தான் இயேசுவைத் தொட்டவுடன் குணமடைந்ததையும் சொன்னாள். 48 இயேசு அவளை நோக்கி, “என் மகளே, நீ விசுவாசித்ததால் குணமாக்கப்பட்டாய். சமாதானத்தோடு போ” என்றார்.
49 இயேசு இவ்வாறு பேசிக்கொண்டிருக்கையில் ஜெப ஆலயத்தின் தலைவனின் வீட்டிலிருந்து ஒருவன் வந்து, “உங்கள் மகள் இறந்துவிட்டாள். போதகரை மேலும் தொல்லைப்படுத்த வேண்டாம்” என்றான்.
50 இயேசு அதைக் கேட்டார். அவர் யவீருவை நோக்கி, “பயப்படாதே, விசுவாசத்துடனிரு, உன் மகள் குணம் பெறுவாள்” என்றார்.
51 இயேசு வீட்டை அடைந்தார். பேதுரு யோவான், யாக்கோபு, பெண்ணின் தந்தை, தாய் ஆகியோரை மட்டுமே உள்ளே வர அனுமதித்தார். பிறரை உள்ளே விடவில்லை. 52 எல்லா மக்களும் அச்சிறுமி இறந்ததற்காக அழுதுகொண்டும் புலம்பிக்கொண்டும் இருந்தனர். ஆனால் இயேசு, “அழாதீர்கள். அவள் இறக்கவில்லை. அவள் உறங்கிக்கொண்டிருக்கிறாள்” என்றார்.
53 அச்சிறுமி இறந்தாள் என அறிந்திருந்ததால் மக்கள் இயேசுவைப் பார்த்துச் சிரித்தனர். 54 ஆனால் இயேசு அவளது கையைப் பிடித்து, “சிறுமியே, எழுந்து நில்” என்றார். 55 அவள் ஆவி அவளுக்குள் திரும்ப வந்தது. அவள் உடனே எழுந்து நின்றாள். இயேசு, “அவளுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்” என்றார். 56 சிறுமியின் பெற்றோர் ஆச்சரியம் அடைந்தனர். நடந்ததைப் பிறருக்குக் கூறாமல் இருக்கும்படியாக இயேசு அவர்களுக்குக் கூறினார்.
எலிப்பாஸ் பதில் கூறுகிறான்
22 அப்போது தேமானின் எலிப்பாஸ் பதிலாக,
2 “தேவனுக்கு நமது உதவி தேவையா?
இல்லை!
மிகுந்த ஞானவானும் உண்மையாகவே தேவனுக்குப் பயன்படுவதில்லை.
3 நீ தக்க நெறியில் வாழ்ந்தது தேவனுக்கு உதவுமா?
இல்லை! நீ தேவனைப் பின்பற்றுவதால் சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு ஏதேனும் கிடைக்குமா? இல்லை!
4 யோபுவே, ஏன் தேவன் உன்னைத் தண்டித்து, உன்னில் குறை காண்கிறார்?
நீ அவரை தொழுது கொள்வதாலா?
5 இல்லை! நீ மிகுதியாகப் பாவம் செய்திருப்பதால்தான்.
யோபுவே, நீ பாவம் செய்வதை நிறுத்துவதில்லை!
6 நீ உன் சகோதரன் ஒருவனுக்குக் கொஞ்சம் பணத்தைக் கடனாகக் கொடுத்து,
அவன் உனக்குத் திருப்பித் தருவதற்கு அடையாளமாக எதையேனும் கொடுக்க வற்புறுத்தியிருக்கலாம்.
நீ கடனுக்கு ஈடாக ஏதேனும் ஏழை மனிதனின் ஆடைகளை எடுத்திருக்கலாம்.
இல்லையெனில், எக்காரணமுமின்றி அவ்வாறு செய்திருக்கலாம்.
7 சோர்ந்த, பசித்த ஜனங்களுக்கு நீ தண்ணீரும், உணவும் கொடாது இருந்திருக்கலாம்.
8 யோபுவே, உனக்கு மிகுதியான விளை நிலங்கள் உண்டு,
ஜனங்கள் உன்னை மதிக்கிறார்கள்.
9 விதவைகளுக்கு எதுவும் கொடாது அவர்களை நீ துரத்தியிருக்கலாம்.
யோபுவே, நீ அநாதைகளை ஏமாற்றியிருக்கலாம்.
10 ஆகவே, உன்னைச் சுற்றிலும் கண்ணிகள் அமைந்துள்ளன,
திடீர்பயம் உன்னை அஞ்சவைக்கிறது.
11 ஆகவே, நீ பார்க்க முடியாதபடி மிகுந்த இருள் சூழ்ந்திருக்கிறது,
வெள்ளப்பெருக்கு உன்னை மூடுகிறது.
12 “தேவன் பரலேகத்தின் மிக உயர்ந்த இடத்தில் வாழ்கிறார்.
விண்மீன்கள் எத்தனை உயரத்தில் உள்ளன எனப்பாருங்கள்.
மிக உயர்ந்த நட்சத்திரத்தை தேவன் கிழே நோக்கிப்பார்க்கிறார்.
13 ஆனால் யோபுவே, நீ சொல்லலாம் ‘தேவன் என்ன அறிவார்?
இருண்ட மேகங்கள் வழியாகப் பார்த்து, தேவன் நம்மை நியாயந்தீர்க்கக் கூடுமா?
14 அடர்த்தியான மேகங்கள் அவரை நம்மிடமிருந்து மறைக்கின்றன,
எனவே, அவர் வானத்தின் விளிம்பைத் தாண்டி நடக்கிறபோது நம்மைப் பார்க்க முடிவதில்லை’ எனக் கூறுவாய்.
15 “யோபுவே, பல காலம் முன்பு தீயோர் நடந்த அந்தப் பழைய பாதையில்
நீ நடந்துக்கொண்டிருக்கிறாய்.
16 அவர்கள் இறக்கவேண்டிய காலத்திற்கு முன்னரே, அத்தீயோர் அழிக்கப்பட்டார்கள்.
அவர்கள் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டார்கள்.
17 அவர்கள் தேவனைப் பார்த்து, ‘எங்களைத் தனித்து விட்டுவிடும்!
சர்வ வல்லமையுள்ள தேவன் எங்களை என்னச் செய்யமுடியும்!’ என்பார்கள்.
18 நற்காரியங்களால் அவர்கள் வீடுகளை நிரப்பியவர் தேவனே!
இல்லை, என்னால் தீயோரின் அறிவுரையைப் பின்பற்ற முடியாது.
19 அழிவதை நல்லோர் காண்பார்கள்.
அந்த நல்ல ஜனங்கள் மகிழ்ச்சியடைவார்கள்.
களங்கமற்ற ஜனங்கள் தீயோரைக் கண்டு நகைப்பார்கள்,
20 ‘உண்மையாகவே நம் பகைவர்கள் அழிக்கப்பட்டார்கள்.
நெருப்பு அவர்களின் செல்வத்தைத் கொளுத்துகிறது!’
21 “இப்போது, யோபுவே, உன்னை தேவனுக்குக் கொடுத்து அவரோடு சமாதானம் செய்துக்கொள்.
இதைச் செய், உனக்கு நல்லவை பல வாய்க்கும்.
22 அவரது போதனையை ஏற்றுக்கொள்.
அவர் சொல்வதைக் கவனமாகக் கேள்.
23 யோபுவே, சர்வ வல்லமையுள்ள தேவனிடம் திரும்பி வா, உன் பழைய நிலைக்கு அழைத்துச் செல்லப்படுவாய்.
ஆனால், நீ உனது வீட்டிலிருந்து தீமையை அகற்ற வேண்டும்.
24 உனது பொன்னை நீ தூசியாகக் கருதவேண்டும்.
பள்ளத்தாக்கின் பாறைகளைப் போல, உனது உயர்ந்த பொன்னைக் கருதவேண்டும்.
25 சர்வ வல்லமையுள்ள தேவனே, உனக்குப் பொன்னாகட்டும்.
அவரே உனக்கு வெள்ளிக் குவியல் ஆகட்டும்.
26 அப்போது நீ சர்வ வல்லமையுள்ள தேவனில் களிகூருவாய்.
அப்போது நீ தேவனை நோக்கிப் பார்ப்பாய்.
27 நீ அவரிடம் ஜெபிப்பாய், அவர் உன்னைக் கேட்பார்.
நீ செய்வதாக உறுதியளித்த காரியங்களை, அப்போது நீ செய்யமுடியும்.
28 நீ ஏதேனும் செய்யத் தீர்மானித்தால், அது வெற்றியடையும்,
உனது எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும்.
29 பெருமையுள்ளோரை வெட்கமடையச் செய்கிறார்.
ஆனால் தேவன் எளியோருக்கு உதவுகிறார்.
30 அப்போது நீ தவறு செய்யும் ஜனங்களுக்கு உதவ முடியும்.
நீ தேவனிடம் ஜெபிப்பாய். அவர் அந்த ஜனங்களுக்கு மன்னிப்பார்.
ஏனெனில் நீ அத்தனை பரிசுத்தமாக இருப்பாய்” என்றான்.
9 நான் ஒரு சுதந்திரமான மனிதன். நான் ஒரு அப்போஸ்தலன். நமது கர்த்தராகிய இயேசுவை நான் பார்த்திருக்கிறேன். கர்த்தரில் எனது பணிக்கு நீங்கள் உதாரணமாவீர்கள். 2 மற்ற மக்கள் என்னை அப்போஸ்தலனாக ஒருவேளை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆனால், நீங்கள் நிச்சயமாக என்னை அப்போஸ்தலனாக ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள். கர்த்தரில் நான் ஒரு அப்போஸ்தலன் என்பதற்கு நீங்களே சாட்சிகள்.
3 சில மனிதர்கள் என்னை நியாயம் தீர்க்க விரும்புகிறார்கள். நான் இந்தப் பதிலை அவர்களுக்கு அளிக்கிறேன். 4 உண்ணவும், பருகவும் நமக்கு உரிமை இருக்கிறது அல்லவா? 5 நாம் பயணம் செய்யும்போது விசுவாசத்திற்குள்ளான மனைவியை அழைத்துச் செல்ல உரிமை இருக்கிறது அல்லவா? மற்ற அப்போஸ்தலர்களும், கர்த்தரின் சகோதர்களும், கேபாவும் இதைச் செய்கிறார்கள். 6 பர்னபாவும் நானும் மட்டுமே எங்கள் வாழ்க்கைக்கு சம்பாதிக்க வேண்டி இருக்கிறது. 7 படையில் சேவை புரியும் எந்த வீரனும் தன் செலவுக்குத் தன் சொந்தப் பணத்தைக் கொடுப்பதில்லை. திராட்சையை விதைக்கிற யாரும் அதன் பழத்தை உண்ணாமல் இருப்பதில்லை. மந்தையை மேய்க்கிற எவரும் அதன் பாலைப் பருகாமல் இருப்பதில்லை.
8 இவை மனிதன் நினைப்பவை மாத்திரமல்ல. தேவனின் சட்டமும் அவற்றையே கூறுகின்றன. 9 ஆம், மோசேயின் சட்டத்தில் அது எழுதப்பட்டுள்ளது “உழைக்கும் மிருகத்தை, தானியத்தைப் பிரிக்கப் பயன்படுத்தும்போது அதன் வாயை மூடாதே. அது தானியத்தை உண்ணாதபடி தடை செய்யாதே.” [a] தேவன் இதைக் கூறியபோது, அவர் உழைக்கும் மிருகங்களைப் பற்றி மட்டுமே குறிப்பிட்டாரா? இல்லை. 10 இவ்வாக்கியம் நம்மைப் பற்றிக் குறிக்கவில்லையா? ஆம் வேத வாக்கியங்கள் நமக்காக எழுதப்பட்டதால் எல்லா வகையிலும் இது நம்மையே குறிக்கிறது. தம் வேலைக்கு சிறிதளவு தானியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உழுகிறவனும், தானியத்தை அறுவடை செய்கிறவனும் அந்தந்த வேலையைச் செய்யவேண்டும். 11 நாங்கள் ஆன்மீக விதையை உங்களில் விதைத்துள்ளோம். ஆகவே இந்த வாழ்க்கையில் உங்களுடைய சில பொருள்களை நாங்கள் எங்கள் வாழ்க்கைக்காக அறுவடை செய்யக்கூடும். இது அதிகமாக ஆசைப்படுவதல்ல. 12 பிறர் உங்களிடமிருந்து பொருளைப் பெறும் உரிமையைப் பெற்றுள்ளார்கள். எனவே எங்களுக்கும் நிச்சயமாய் இந்த உரிமை உண்டு. ஆனால், இந்த உரிமையை நாங்கள் பயன்படுத்தவில்லை. இல்லை, பிறர் கிறிஸ்துவின் நற்செய்திக்குக் கீழ்ப்படிவதைத் தடுக்காமலிருப்பதற்காக எல்லாவற்றையும் நாங்கள் சகித்துக்கொள்கிறோம். 13 தேவாலயத்தில் பணிவிடை செய்பவர்களுக்கு உணவு தேவாலயத்தில் இருந்து கிடைக்கிறது. பலிபீடத்தில் பணி செய்பவருக்குப் பலிபீடத்தில் படைக்கப்பட்டவற்றில் ஒரு பகுதி கிட்டும். 14 நற்செய்தியை அறிவிப்போரின் வாழ்க்கைக்குரிய பொருள் அந்த வேலையிலிருந்தே அவர்களுக்குக் கிடைக்க வேண்டுமென கர்த்தர் கட்டளையிட்டிருக்கிறார்.
15 ஆனால் இந்த உரிமைகள் எதையும் நான் பயன்படுத்தவில்லை. இவற்றைப் பெற வேண்டுமென்று முயற்சி செய்யவும் இல்லை. இதை உங்களுக்கு எழுதுவதினால் என் நோக்கமும் அதுவல்ல. பெருமைப்படுவதற்குரிய காரணத்தை என்னிடமிருந்து அபகரித்துச் செல்லப்படுவதைவிட நான் இறப்பது நல்லதாகும். 16 நற்செய்தியைப் போதிப்பது நான் பெருமைப்படுவதற்குரிய காரணமல்ல. நற்செய்தியைப் போதிப்பது எனது கடமை. நற்செய்தியைப் போதிப்பது என்பது நான் கண்டிப்பாக செய்யவேண்டியது. அதைச் செய்யாமலிருப்பது எனக்குத் தீமையாகும். 17 நானே என் தேர்வுக்குத் தகுந்தபடி நற்செய்தியைப் போதித்தால் நான் ஒரு வெகுமதிக்குத் தகுதியுடையவனாகிறேன். ஆனால் எனக்கு வேறு வழியில்லை. நான் நற்செய்தியைப் போதிக்க வேண்டும். எனக்குக் கொடுக்கப்பட்ட கடமையை நான் செய்கிறேன். 18 எனக்கு என்ன பலன் கிடைக்கிறது? நற்செய்தியை எங்கும் பரப்புவதே எனக்கு கிட்டும் வெகுமதி. எனவே நற்செய்தி எனக்கு வழங்குகிற “பலன் பெறுதல்” என்கிற உரிமையை நான் பயன்படுத்தவில்லை.
19 நான் சுதந்திரமானவன். யாருக்கும் உரியவன் அல்ல. ஆனால் எல்லா மனிதருக்கும் என்னை அடிமையாக்குகிறேன். என்னால் இயன்ற அளவுக்கு மக்களைக் காப்பதற்காக இதைச் செய்கிறேன். 20 யூதர்களிடம் நான் யூதனைப் போலானேன். யூதர்களை காப்பதற்காக இதைச் செய்தேன். நான் சட்டத்தின் ஆளுகைக்குக் கட்டுப்படாதவன்தான். ஆனால் சட்டப்படி வாழும் மக்களின் முன்பு சட்டப்படி வாழும் மனிதனாகவே நான் ஆனேன். சட்டத்தால் ஆளப்படுகிற மக்களைக் காப்பாற்றவே நான் இதைச் செய்தேன். 21 சட்டத்தின் கீழ் இல்லாத மக்களிடம் சட்டத்தைப் பின்பற்றாதவனாக நடந்துகொண்டேன். சட்டத்தின்படி நடவாத மக்களை காப்பதற்காக நான் இதைச் செய்தேன். (ஆனால் தேவனின் சட்டத்தை நான் மீறவில்லை. கிறிஸ்துவின் சட்டப்படியே நான் ஆளப்படுகிறேன்) 22 பலவீனமான மனிதரை அவர்கள் கர்த்தருக்கென்று ஆதாயம் செய்யும்படி பலவீனமானவனைப்போல நடந்துகொண்டேன். எல்லா மனிதர்களுக்கும் நான் எல்லாரையும்போல நடந்துகொண்டேன். எந்த வகையிலாவது மனிதர்கள் இரட்சிக்கப்பட வேண்டுமென இவ்வாறு செய்தேன். 23 நற்செய்தியின் பொருட்டு இவற்றையெல்லாம் செய்கிறேன். நற்செய்தியின் ஆசீர்வாதத்தில் பங்குபெற விரும்பி இவற்றைச் செய்கிறேன்.
24 ஒரு பந்தயத்தில் எல்லா ஓட்டக்காரர்களும் ஓடுவது உங்களுக்குத் தெரியும். ஆனால் ஒருவனே பரிசைப் பெறுவான். எனவே அதைப் போன்று ஓடுங்கள். வெற்றி பெறுவதற்காக ஓடுங்கள். 25 பந்தயங்களில் பங்கு பெறுகிறவர்கள் கடுமையான பயிற்சியை மேற்கொள்வர். ஒரு கிரீடத்தை வெல்வதற்காக இதைச் செய்வார்கள். கொஞ்ச காலத்தில் அழியக் கூடிய உலக ரீதியான கிரீடம் அது. ஆனால் நாம் பெறும் கிரீடமோ அழியாது நிலைநிற்கும். 26 குறிக்கோளோடு ஓடுகிற மனிதனைப் போன்று நானும் ஓடுகிறேன். காற்றோடு மோதாமல் இலக்கில் தாக்குகிற குத்துச் சண்டை வீரனைப்போல போரிடுகிறேன். 27 எனது சொந்த சரீரத்தையே நான் அடக்குகிறேன். அதை எனக்கு அடிமையாக்குகிறேன். நான் பிறருக்குப் போதித்த பின்பு நானே புறந்தள்ளி விழாதபடிக்கு (தேவனால் அப்புறப்படுத்தப்படாதபடிக்கு) இதைச் செய்கிறேன்.
2008 by World Bible Translation Center