M’Cheyne Bible Reading Plan
யோசேப்பு இரண்டு கனவுகளுக்கு விளக்கம் கூறுதல்
40 பிறகு, பார்வோனுக்கு எதிராக ரொட்டி சுடுபவனும், திராட்சைரசம் கொடுப்பவனுமான இரண்டு வேலைக்காரர்கள் தவறு செய்தனர். 2 அவர்கள் மீது பார்வோனுக்கு மிகுந்த கோபம் இருந்தது. 3 அரசன் அவர்களை யோசேப்பு இருந்த சிறையிலேயே அடைத்துவிட்டான். போத்திபார் இந்தச் சிறையின் பொறுப்பாளன். 4 அதிகாரி, இந்த இருவரையும் யோசேப்பின் கண்காணிப்பில் வைத்தார். இருவரும் சிறையில் கொஞ்சக் காலம் தொடர்ந்து இருந்தனர். 5 ஓரிரவு, இருவருக்கும் கனவு வந்தது. இருவரும் வெவ்வேறு கனவுகளைக் கண்டனர். இருவரும் எகிப்திய அரசனின் வேலைக்காரர்கள். ஒருவன் ரொட்டி சுடுபவன், மற்றொருவன் திராட்சைரசம் கொடுப்பவன். ஒவ்வொன்றுக்கும் தனிதனிப் பொருள் இருந்தது. 6 மறுநாள் காலையில் யோசேப்பு அவர்களிடம் சென்றான். அவர்கள் இருவரும் கவலையாயிருப்பதைக் கண்டான். 7 அவர்களிடம், “ஏன் இவ்வாறு இன்று கவலையோடு இருக்கிறீர்கள்?” என்று கேட்டான்.
8 அவர்கள், “நேற்று நாங்கள் இருவரும் கனவு கண்டோம். அதன் பொருள் புரியவில்லை. அதின் பொருளையோ, விளக்கத்தையோ சொல்பவர்கள் யாரும் எங்களுக்கு இல்லை” என்றனர்.
யோசேப்பு அவர்களிடம், “தேவன் ஒருவரே நமது கனவுகளைப் புரிந்துகொண்டு விளக்க வல்லவர். என்னிடம் உங்கள் கனவுகளைக் கூறுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றான்.
திராட்சைரசம் பரிமாறுபவனின் கனவு
9 திராட்சைரசம் கொடுப்பவன் தன் கனவை யோசேப்பிடம் கூறினான். “என் கனவில் நான் ஒரு திராட்சைக் கொடியைக் கண்டேன். 10 அதில் மூன்று கிளைகள் இருந்தன. அவை வளர்ந்து பூக்கள் விட்டு கனிவதைக் கண்டேன். 11 நான் பார்வோனின் கோப்பையை ஏந்தியிருந்தேன். எனவே அந்தத் திராட்சையைப் பிழிந்து சாறு எடுத்தேன். பிறகு அதனைப் பார்வோனுக்குக் கொடுத்தேன்” என்றான்.
12 பிறகு யோசேப்பு, “இந்தக் கனவை உனக்கு விளக்குவேன். மூன்று கிளைகள் என்பது மூன்று நாட்கள். 13 இன்னும் மூன்று நாளில் பார்வோன் உன்னை மன்னித்து, உன்னை விடுதலை செய்து, முன்பு அவரது கிண்ணம் ஏந்துபவனாக இருந்தது போல் உன்னை ஏற்றுக்கொள்வார். 14 ஆனால் நீ விடுதலையானதும் என்னை நினைத்துக்கொள். எனக்கும் உதவி செய். பார்வோனிடம் என்னைப்பற்றிக் கூறு. அவர் என்னை விடுதலை செய்வார். 15 நான் என் சொந்த எபிரெய நாட்டைவிட்டு இங்கு பலவந்தமாக கொண்டு வரப்பட்டேன். இங்கேயும் நான் தவறு செய்யவில்லை. நான் சிறையில் இருக்க வேண்டியவன் அல்ல” என்றான்.
ரொட்டிச் சுடுபவனின் கனவு
16 ரொட்டி சுடுபவன் மற்றவனின் கனவுக்கு நல்ல பொருள் இருப்பதை அறிந்தான். தன் கனவையும் யோசேப்பிடம் கூறினான். “நானும் ஒரு கனவு கண்டேன். என் தலையில் மூன்று ரொட்டிக் கூடைகள் இருந்தன. 17 மேல் கூடையில் எல்லா வகையான சமைத்த உணவுகளும் இருந்தது. அது பார்வோனுக்கு உரியது. ஆனால் பறவைகள் அவற்றைத் தின்றுகொண்டிருந்தன” என்றான்.
18 யோசேப்பு, “நான் உனக்கு அக்கனவின் பொருளைச் சொல்கிறேன். மூன்று கூடைகள் மூன்று நாட்களைக் குறிக்கும். 19 மூன்று நாள் முடிவதற்குள் நீ வெளியே செல்வாய். அரசன் உன் தலையை வெட்டிவிடுவான். உனது உடலைக் கம்பத்தில் தொங்கவிடுவான். பறவைகள் உன் உடலைத் தின்னும்” என்று சொன்னான்.
யோசேப்பு மறக்கப்படுதல்
20 மூன்று நாளானதும் பார்வோனுடைய பிறந்த நாள் வந்தது. அவன் தன் வேலைக்காரர்களுக்கெல்லாம் விருந்து கொடுத்தான். அதனால் ரொட்டி சுடுபவனையும் திராட்சைரசம் கொடுப்பவனையும் விடுதலை செய்தான். 21 பார்வோன் திராட்சைரசம் கொடுப்பவனுக்கு மீண்டும் வேலை கொடுத்தான். அவனும் பார்வோனிடம் ஒரு கோப்பை திராட்சை ரசத்தை கொடுத்தான். 22 ஆனால் பார்வோன் ரொட்டி சுடுபவனைக் கொன்றுவிட்டான். யோசேப்பு சொன்னதுபோலவே அனைத்தும் நிகழ்ந்தது. 23 ஆனால் திராட்சைரசம் வழங்குபவன் உதவிசெய்ய மறந்துவிட்டான். அவன் யோசேப்பைப்பற்றி பார்வோனிடம் எதுவும் சொல்லவில்லை.
விவாகரத்து பற்றிய போதனை(A)
10 பிறகு அந்த இடத்தை விட்டு இயேசு வெளியேறினார். அவர் யோர்தான் ஆற்றைக் கடந்து யூதேயா பகுதிக்குள் சென்றார். அங்கு, ஏராளமான மக்கள் அவரிடம் வந்தார்கள். வழக்கம்போல இயேசு அவர்களுக்குப் போதனை செய்தார்.
2 சில பரிசேயர்கள் இயேசுவிடம் வந்தார்கள். அவர்கள், இயேசுவைத் தவறாக ஏதாவது பேசவைக்க முயன்றார்கள். அவர்கள் அவரிடம், “ஒருவன் தன் மனைவியை விவாகரத்து செய்வது சரியா?” என்று கேட்டனர்.
3 அதற்கு இயேசு அவர்களிடம், “மோசே உங்களிடம் என்ன செய்யுமாறு கட்டளை இட்டார்?” என்று கேட்டார்.
4 பரிசேயர்களோ, “ஒருவன் விவாகரத்துக்கான சான்றிதழை எழுதி அதன் மூலம் தன் மனைவியை விவாகரத்து செய்யலாம் என்று மோசே அனுமதித்து இருக்கிறார்” என்றனர்.
5 அவர்களிடம் இயேசு, “மோசே உங்களுக்காக அவ்வாறு எழுதி இருக்கிறார். ஏனென்றால் நீங்கள் தேவனின் போதனைகளை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டீர்கள். 6 ஆனால் தேவன் உலகைப் படைக்கும்போது ‘அவர் மக்களை ஆண் என்றும் பெண் என்றும் படைத்தார்.’ 7 ‘அதனால்தான் ஒருவன் தன் தாயையும் தந்தையையும் விட்டுவிட்டு மனைவியோடு சேர்ந்து கொள்கிறான். 8 இருவரும் ஒருவர் ஆகிவிடுகிறார்கள். எனவே அவர்கள் இருவராயில்லாமல் ஒருவராகி விடுகின்றனர்.’ [a] 9 தேவன் அந்த இருவரையும் ஒன்று சேர்த்துவிடுகிறார். எனவே, எவரும் அவர்களைப் பிரிக்கக்கூடாது” என்றார்.
10 பிறகு இயேசுவும், சீஷர்களும் அந்த வீட்டில் தனியே இருந்தனர். அப்போது சீஷர்கள் இயேசுவிடம் மீண்டும் விவாகரத்து பற்றிய கேள்வியைக் கேட்டனர். 11 அதற்கு இயேசு, “எவனொருவன் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இன்னொரு பெண்ணை மணந்து கொள்கிறானோ அவன் தன் மனைவிக்கு எதிரான பாவியாகிறான். அத்துடன் விபசாரமாகிய பாவத்துக்கும் ஆளாகிறான். 12 இது போலவே தன் கணவனை விவாகரத்து செய்துவிட்டு இன்னொருவனை மணந்துகொள்கிற பெண்ணும் விபசாரம் செய்யும் பாவியாகிறாள்” என்றார்.
குழந்தைகளும் இயேசுவும்(B)
13 மக்கள் தம் சிறு குழந்தைகளை இயேசு தொடுவதற்காகக் கொண்டு வந்தனர். ஆனால் இயேசுவின் சீஷர்கள் குழந்தைகளைக் கொண்டு வர வேண்டாம் என்று தடுத்தனர். 14 இதனை இயேசு கவனித்தார். சிறுவர் தம்மிடம் வருகிறதை சீஷர்கள் தடை செய்தது அவருக்கு பிரியமில்லை. எனவே அவர்களிடம், “குழந்தைகள் என்னிடம் வருவதை அனுமதியுங்கள். அவர்களைத் தடுத்து நிறுத்தாதீர்கள். ஏனென்றால் தேவனுடைய இராஜ்யம் குழந்தைகளைப் போன்றவர்களுக்குரியது. 15 நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். குழந்தைகள் எதையும் ஏற்றுக்கொள்வதைப் போன்று நீங்கள் தேவனுடைய இராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் அதற்குள் நுழைய முடியாது” என்றார். 16 பிறகு இயேசு, குழந்தைகளைக் கைகளால் அணைத்துக்கொண்டார். இயேசு அவர்கள்மீது கைகளை வைத்து ஆசீர்வாதமும் செய்தார்.
பணக்காரனும் இயேசுவும்(C)
17 இயேசு அவ்விடத்திலிருந்து புறப்பட ஆரம்பித்தார். அப்போது ஒரு மனிதன் ஓடி வந்து அவருக்கு முன்னால் முழங்காலிட்டு வணங்கினான். அவன், “நல்ல போதகரே! நான் நித்திய வாழ்வைப் பெற என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான்.
18 அதற்கு இயேசு, “என்னை நீ நல்லவர் என்று ஏன் அழைக்கிறாய்? தேவன் மட்டுமே நல்லவர். 19 ஆனால் உனது வினாவுக்கு விடையளிக்கிறேன். நீ எவரையும் கொலை செய்யாமல் இருப்பாயாக; விபச்சாரம் செய்யாமல் இருப்பாயாக, களவு செய்யாமல் இருப்பாயாக; பொய்சாட்சி சொல்லாமல் இருப்பாயாக; நீ உன் தந்தையையும் தாயையும் மரியாதை செய்வாயாக [b] என்று கட்டளைகள் சொல்வது உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார்.
20 அதற்கு அந்த மனிதன், “போதகரே! நான் குழந்தைப் பருவத்தில் இருந்தே இக்கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து வருகிறேன்” என்றான்.
21 இயேசு அவனைக் கவனித்தார். இயேசுவுக்கு அவன் மீது அன்பு பிறந்தது. இயேசு அவனிடம், “நீ செய்வதற்கு உரிய காரியம் இன்னும் ஒன்று உள்ளது. நீ போய் உனக்கு உரியவற்றையெல்லாம் விற்றுவிடு. அப்பணத்தை ஏழை மக்களுக்குக் கொடு. உனக்குப் பரலோகத்தில் நிச்சயம் பொக்கிஷமிருக்கும். பிறகு என்னைப் பின்பற்றி வா” என்றார்.
22 இயேசு இவற்றைச் சொன்னதும் அந்த மனிதன் மிகவும் வருத்தப்பட்டு அப்புறம் போனான். அவனது வருத்தத்துக்குக் காரணம் அவன் பெருஞ் செல்வந்தனாய் இருந்ததுதான்; அதோடு அச்செல்வத்தைப் பாதுகாக்கவும் நினைத்ததுதான்.
23 பிறகு இயேசு சுற்றிலும் பார்த்து தன் சீஷர்களிடம் “ஒரு பணக்காரன் தேவனுடைய இராஜ்யத்துக்குள் நுழைவது மிகவும் கடினமான ஒன்று” என்றார்.
24 இயேசு சொன்னதைக் குறித்து சீஷர்கள் அதிசயப்பட்டார்கள். இயேசு மீண்டும், “என் பிள்ளைகளே! தேவனுடைய இராஜ்யத்துக்குள் நுழைவது கடினமானது. 25 அதிலும் தேவனுடைய இராஜ்யத்துக்குள் ஒரு பணக்காரன் நுழைவது மிகவும் கடினமானது. இதைவிட, ஊசியின் காதிற்குள் ஒரு ஒட்டகம் எளிதாக நுழைந்து விடும்” என்றார்.
26 சீஷர்கள் பெரிதும் அதிசயப்பட்டார்கள். அவர்கள் தங்களுக்குள், “பிறகு யார் இரட்சிக்கப்படுவார்?” என்று கேட்டனர்.
27 இயேசு தன் சீஷர்களைப் பார்த்து, “மக்கள் தங்களால் எதுவும் செய்துகொள்ள இயலாது. அது தேவனிடமிருந்துதான் வரவேண்டும். தேவனே எல்லாவற்றையும் செய்ய வல்லவர்” என்றார்.
28 பேதுரு இயேசுவைப் பார்த்து, “நாங்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு உங்களைப் பின் தொடர்ந்து வந்திருக்கிறோம்” என்றான்.
29 இயேசு “நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். எவன் ஒருவன் தனது வீட்டையும், சகோதரர்களையும், சகோதரிகளையும், தந்தையையும், தாயையும், குழந்தைகளையும், பண்ணைகளையும் எனக்காகவும், நற்செய்திக்காகவும், தியாகம் செய்கிறானோ 30 அவனுக்கு அவன் விட்டதைவிட நூறு மடங்கு கிடைக்கும். இங்கே இந்த உலகத்தில் அவன் மிகுதியான வீடுகளையும், சகோதரர்களையும், சகோதரிகளையும், தாயார்களையும், குழந்தைகளையும், பண்ணைகளையும், பெறுவான். அதோடு பல துன்பங்களையும் அடைவான். ஆனால் அவன் நித்தியவாழ்வு என்னும் பரிசினை வரப்போகும் உலகில் பெறுவான். 31 இப்போது மிக உயர்ந்த இடத்தில் உள்ள பலர் எதிர்காலத்தில் மிகத் தாழ்ந்த இடத்துக்குச் செல்வர், மிகத் தாழ்ந்த இடத்திலுள்ள பலர் மிக உயர்ந்த இடத்துக்குச் செல்வர்” என்றார்.
மீண்டும் தன் மரணத்தைப்பற்றிப் பேசுதல்(D)
32 இயேசுவும் அவரோடு இருந்த மக்களும் அங்கிருந்து எருசலேமுக்குப் போகும் பாதையில் இருந்தனர். அவர்களுக்குத் தலைமையேற்று இயேசு அழைத்துச் சென்றார். இயேசுவின் சீஷர்கள் இதைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். ஆனால் அவர் பின்னால் போன மக்களோ அச்சப்பட்டனர். மீண்டும் இயேசு தன் பன்னிரண்டு சீஷர்களைக் கூட்டி அவர்களோடு தனியாகப் பேசினார். எருசலேமில் அவருக்கு என்ன நடக்கும் என்பதைப்பற்றிக் கூறினார். 33 “நாம் எருசலேமுக்கு போய்க் கொண்டு இருக்கிறோம். மனிதகுமாரன் அங்கே தலைமை ஆசாரியர்களிடமும், வேதபாரகர்களிடமும் ஒப்படைக்கப்படுவார். அவர்கள் மனிதகுமாரன் சாக வேண்டும் என்று தீர்ப்பளிப்பர். அவர்கள் மனிதகுமாரனை யூதரல்லாதவர்களிடம் ஒப்படைப்பார்கள். 34 அவர்கள் அவரைக் குறித்து நகைப்பர். அவர்மீது காறி உமிழ்வார்கள். வாரினால் அடிப்பார்கள். கொலை செய்வார்கள். அவரோ மரணமடைந்து மூன்றாம் நாள் உயிரோடு எழுவார்” என்றார்.
சிறப்புச் சலுகை கேட்டவர்கள்(E)
35 பிறகு செபெதேயுவின் மகன்களாகிய யாக்கோபும், யோவானும் இயேசுவிடம் வந்தார்கள். அவர்கள், “போதகரே நீங்கள் எங்களுக்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்றனர்.
36 அவர்களிடம் இயேசு, “நான் உங்களுக்காக என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?” எனக் கேட்டார்.
37 “உங்கள் இராஜ்யத்தில் உங்களுக்கென்று மகிமை உள்ளது. எங்களில் ஒருவர் உங்கள் வலது பக்கத்திலும் இன்னும் ஒருவர் இடது பக்கத்திலும் இருக்க வாய்ப்புத்தர வேண்டும்” என்றனர்.
38 அதற்கு இயேசு, “நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்பது உங்களுக்குப் புரியவில்லை. நான் ஏற்கப்போகும் பாடுகளை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா? நான் ஞானஸ்நானம் பெறும் விதத்திலேயே நீங்களும் பெற்றுக்கொள்ள முடியுமா?” என்று கேட்டார்.
39 அவர்கள், “ஆமாம், எங்களால் முடியும்” என்றனர். இயேசு அவர்களிடம், “நான் படப்போகும் துன்பங்களை எல்லாம் நீங்களும் படவேண்டியதிருக்கும். நான் பெறப்போகும் ஞானஸ்நானத்தை நீங்களும் பெறவேண்டியதிருக்கும். 40 எனக்கு வலது பக்கத்திலும், இடது பக்கத்திலும் இருக்கப்போகின்றவர்களை என்னால் தீர்மானிக்க முடியாது. அந்த இடத்திற்காகச் சிலர் இருக்கின்றார்கள். அவர்களுக்காகவே அந்த இடங்கள் தயார் செய்யப்பட்டிருக்கின்றன” என்றார்.
41 ஏனைய பத்து சீஷர்களும் இயேசு சொல்வதைக் கேட்டனர். அவர்களுக்கு யாக்கோபு மீதும், யோவான் மீதும் கோபம் ஏற்பட்டது. 42 இயேசு தன் சீஷர்களை எல்லாம் தம்மிடம் அழைத்தார். அவர்களிடம், “யூதர் அல்லாத மக்கள் ஆள்வோர்கள் எனக் கருதப்படுகின்றனர். இந்த ஆள்வோர்கள் தம் அதிகாரத்தை மக்கள்மீது செலுத்துவதையே பெரிதும் விரும்புகிறார்கள். அவர்களின் முக்கியத் தலைவர்கள் தம் அதிகாரத்தை மக்கள் மீது செலுத்துவதையே பெரிதும் விரும்புகிறார்கள் என்று நீங்கள் அறிவீர்கள். 43 ஆனால், நீங்கள் மேற்கொள்ளும் வழி இதுவாக இருக்கக் கூடாது. உங்களில் ஒருவன் பெரியவனாக விரும்பினால் அவன் ஒரு வேலைக்காரனைப்போல மற்றவர்களுக்குச் சேவைசெய்ய வேணடும். 44 உங்களில் ஒருவன் மிகவும் முக்கியஸ்தனாக விரும்பினால் அவன் அடிமையைப்போல உங்கள் எல்லாருக்கும் சேவை செய்ய வேண்டும். 45 இது போலவே, மனித குமாரன் பிறருடைய பணிவிடைகளைப் பெறுவதற்காக வரவில்லை. அவர் மற்றவர்களுக்குப் பணிவிடை செய்யவே வந்துள்ளார். அவர் பல மக்களைக் காப்பாற்றுவதற்காகத் தன் உயிரைத் தர வந்துள்ளார்” என்றார்.
குருடன் குணமாக்கப்படுதல்(F)
46 பிறகு அவர்கள் எரிகோ நகரத்துக்கு வந்தனர். இயேசு அந்த நகரத்தையும் விட்டுத் தன் சீஷர்களோடும், மற்ற சில மக்களோடும் வெளியேறினார். பர்திமேயு எனப்படும் (திமேயுவின் மகன்) ஒரு குருடன் சாலையோரத்தில் அமர்ந்திருந்தான். அவன் பிச்சைக் கேட்டுக்கொண்டிருந்தான். 47 நாசரேத் ஊரைச் சேர்ந்த இயேசு வந்துகொண்டிருப்பதை அறிந்து சத்தமிட ஆரம்பித்தான். அவன், “தாவீதின் குமாரனாகிய இயேசுவே! எனக்கு உதவி செய்யும்” என்றான்.
48 பல மக்கள் அவனைப் பேசாமலிருக்கும்படி அதட்டினார்கள். ஆனால் அந்தக் குருடன் இன்னும் சத்தமாக, “தாவீதின் குமாரனே, எனக்கு உதவி செய்யும்” என்றான்.
49 அவ்விடத்தில் இயேசு, “அந்த மனிதனை இங்கே வரச் சொல்லுங்கள்” என்றார்.
எனவே அவர்கள் அக்குருடனை அழைத்தனர். அவர்கள், “மகிழ்ச்சியாய் இரு, எழுந்து வா, இயேசு உன்னை அழைக்கிறார்” என்றனர். 50 அக்குருடன் விரைவாக எழுந்தான். அவன் தன் மேலாடையை அவ்விடத்தில் எறிந்துவிட்டு இயேசுவினருகில் சென்றான்.
51 இயேசு அவனிடம், “நான் உனக்காக என்ன செய்ய வேண்டும் என்று நீ விரும்புகிறாய்?” எனக் கேட்டார்.
அதற்கு அக்குருடன், “போதகரே! நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்” என்றான்.
52 “போ! நீ குணமானாய், ஏனெனில் நீ விசுவாசத்தோடு இருந்தாய்” என்று இயேசு சொன்னார். அதனால் அவன் பார்வை பெற்றான். அவன் இயேசுவைப் பின்தொடர்ந்து போனான்.
யோபு எலிப்பாசுக்குப் பதில் கூறுகிறான்
6 அப்போது யோபு,
2 “என் துன்பங்களை நிறுத்துப் பார்க்கக் கூடுமானால், என் தொல்லைகள் தராசில் வைக்கப்படக் கூடுமானால்,
நீ என் துயரத்தைப் புரிந்துகொள்வாய்.
3 கடற்கரை மணலைக் காட்டிலும் என் துயர் பாரமானது.
அதனால்தான் என் வார்த்தைகள் மூடத்தனமானவையாகத் தோன்றுகின்றன.
4 சர்வ வல்லமையுள்ள தேவனுடைய அம்புகள் என்னுள்ளே இருக்கின்றன.
அந்த அம்புகளின் விஷத்தை என் ஆவி பருகுகின்றது!
தேவனுடைய கொடிய ஆயுதங்கள் எனக்கெதிராக அணிவகுத்து நிற்கின்றன.
5 எந்தத் தீமையும் நிகழாதபோது நீ கூறியவற்றைச் சொல்வது சுலபம் (எளிது).
காட்டுக் கழுதையும் தின்பதற்குப் புல் அகப்படும்போது முறையிடாது.
பசுவும் தன் உணவு கிடைக்கும்போது முறையிடாது.
6 உப்பற்ற உணவு சுவைக்காது.
முட்டையின் வெண்பகுதிக்குச் சுவையில்லை.
7 நான் அதைத் தொட மறுக்கிறேன்;
அத்தகைய உணவு எனக்குச் சலிப்பைத் தருகிறது!
உனது வார்த்தைகளும் இப்போது எனக்கு அவ்வாறே உள்ளன.
8 “நான் கேட்பவை எனக்குக் கிடைக்கவேண்டுமென விரும்புகிறேன்.
நான் விரும்பியவற்றைத் தேவன் எனக்குத் தருவார் என விரும்புகிறேன்.
9 தேவன் என்னை நசுக்கிப் போடவேண்டும் என விரும்புகிறேன்.
அவருடைய கரத்தின் மூலமாக என்னை அழித்திடலாம்.
10 அவர் என்னைக் கொன்றுவிட்டால் நான் ஒரு காரியத்தைக் குறித்து ஆறுதலடைவேன்.
நான் ஒரு காரியத்தைக் குறித்து மகிழ்ச்சியடைவேன்.
இத்தனை வேதனைகளை அனுபவித்துங்கூட பரிசுத்தமானவரின் வார்த்தைகளை கீழ்ப்படிய நான் மறுக்கவில்லை.
11 “என் வலிமை குறைந்துப்போயிற்று, எனவே தொடர்ந்து வாழ்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை.
எனக்கு என்ன நேருமென அறியேன்.
எனவே, நான் பொறுமையுடன் இருப்பதற்கு காரணமில்லை.
12 நான் பாறையைப்போன்று பலம் பொருந்தியவனா?
என் உடம்பு வெண்கலத்தால் ஆனதா?
13 எனக்கு நானே உதவும் ஆற்றல் எனக்கில்லை.
ஏனெனில், வெற்றியோ என்னிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டது.
14 “ஒருவனுக்குத் தொல்லைகள் நேர்கையில், அவனது நண்பர்கள் அவனிடம் இரக்கமாயிருக்கட்டும்.
ஒருவன் அவனது நண்பனிடம், அவன் சர்வ வல்லமையுள்ள தேவனிடமிருந்து விலகிச்சென்றால் கூட, நம்பிக்கைக்குரியவனாக நடந்துக்கொள்ளட்டும்.
15 ஆனால் என் சகோதரராகிய நீங்களோ நம்பிக்கைக்குரியவர்களாக இல்லை.
நான் உங்களைச் சார்ந்திருக்க முடியாது.
சிலகாலம் பாய்ந்தும், மற்ற சிலகாலம் பாயாமலும் இருக்கின்ற நீரோடைகளைப்போல நீங்கள் காணப்படுகிறீர்கள்.
16 பனிக் கட்டியாலும் உருகும் பனியாலும் நிரம் பியிருக்கின்ற நீரூற்றுக்களைப்போல, நீங்கள் பொங்கிப் பாய்கிறீர்கள்.
17 உலர்ந்த வெப்பக்காலத்தில் தண்ணீர் பாய்வது நின்றுவிடுகிறது,
நீரூற்றும் மறைந்துவிடுகிறது.
18 வியாபாரிகள் பாலைவனத்தின் வளைவுகளையும் நெளிவுகளையும் பின்தொடர்ந்து,
காணாமல்போய்விடுகிறார்கள்.
19 தேமாவின் வியாபாரிகள் தண்ணீரைத் தேடுகிறார்கள்.
சேபாவின் பிரயாணிகள் (பயணிகள்) நம்பிக்கையோடு பார்க்கிறார்கள்.
20 அவர்கள் தண்ணீரைக் கண்டடைவதில் நம்பிக்கையோடு இருக்கிறார்கள்,
ஆனால் ஏமாற்றமடைகிறார்கள்.
21 இப்போது, நீங்கள் அந்த நீருற்றுகளைப் போல் இருக்கிறீர்கள்.
என் தொல்லைகளைக் கண்டு அஞ்சுகிறீர்கள்.
22 நான் உங்களிடம் உதவியை நாடினேனா?
எனக்காக நீங்கள் யாரிடமாவது வெகுமானம் கொடுக்க வேண்டினேனா?
23 ‘பகைவனிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்!
கொடியோரிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்!’
என்று நான் உங்களிடத்தில் கூறினேனா?
24 “எனவே இப்போது எனக்குக் கற்பியுங்கள், நான் அமைதியாக இருப்பேன்.
நான் செய்தவற்றைச் சுட்டிக்காட்டுங்கள்.
25 நேர்மையான வார்த்தைகள் ஆற்றல்மிக்கவை.
ஆனால் உங்கள் விவாதங்கள் எதையும் நிரூபிக்கவில்லை.
26 என்னை விமர்சிக்கத் திட்டமிட்டுள்ளீர்களா?
மேலும் சோர்வு தரும் வார்த்தைகளைச் சொல்லப் போகிறீர்களா?
27 தந்தைகளற்ற பிள்ளைகளின் பொருள்களைப் பெற, நீங்கள் சூதாடவும் செய்வீர்கள்.
உங்கள் சொந்த நண்பனையே விற்பீர்கள்.
28 ஆனால் இப்போது, என் முகத்தை ஆராயுங்கள்.
நான் உங்களிடம் பொய் கூறமாட்டேன்.
29 எனவே இப்போது உங்கள் மனதை மாற்றுங்கள்.
அநீதியாய் செயல்படாதீர்கள், மீண்டும் சிந்தித்துப் பாருங்கள்.
நான் தவறேதும் செய்யவில்லை.
30 நான் பொய் கூறவில்லை.
நான் சரியானவற்றை தவறுகளிலிருந்து பிரித்தறிவேன்” என்றான்.
10 சகோதர சகோதரிகளே, அனைத்து யூதர்களும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதையே நான் மிகவும் விரும்புகிறேன். அதைத் தான் தேவனிடம் வேண்டி பிரார்த்தனை செய்கிறேன். 2 யூதர்களைப் பற்றி என்னால் இவ்வாறு கூற முடியும். அவர்கள் உண்மையில் தேவனைப் பின்பற்ற விரும்புகிறார்கள். ஆனால் அவர்களுக்குச் சரியான வழி தெரியவில்லை. 3 தேவனுக்கேற்ற நீதிமான்களாகும் தேவனுடைய வழி அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் தம் சொந்த வழியிலேயே நீதிமான்களாக முயன்றனர். எனவே அவர்கள் தேவனுடைய வழியை ஏற்றுக்கொள்ளவில்லை. 4 கிறிஸ்து சட்டவிதியின் முடிவாய் இருக்கிறார். அதனால் அவரிடம் நம்பிக்கையாக இருக்கிற எவரும் தேவனுக்கேற்ற நீதிமானாக இயலும்.
5 மோசே சட்டவிதிகளைப் பின்பற்றி நீதிமானாகும் வழியைப் பற்றி எழுதியிருக்கிறார்: “சட்டவிதியைப் பின்பற்றி வாழ நினைக்கிறவன், சட்டவிதியின்படி காரியங்களையும் செய்ய வேண்டும்,” [a] 6 ஆனால் விசுவாசத்தினாலே நீதிமானாவதைப் பற்றி வேதவாக்கியம், “யார் மோட்சத்துக்குப் போகக் கூடியவன் என்று நீ உனக்குள்ளே சொல்லாதே.” (இதற்கு “எவனொருவன் மோட்சத்துக்குப் போய் கிறிஸ்துவை பூமிக்கு அழைத்து வரக்கூடியவன்?” என்று பொருள்) 7 “எவனொருவன் உலகத்துக்கும் கீழே போகக் கூடியவன் என்றும் சொல்லாதே” (இதற்கு “எவனொருவன் கீழே போய் கிறிஸ்துவை மரணத்தில் இருந்து ஏறி வரப்பண்ணுபவன்” என்று பொருள்) என்று எழுதப்பட்டுள்ளது.
8 மேலும் “தேவனுடைய போதனைகள் உங்களுக்கு அருகில் உள்ளது. அவை உங்கள் வாயிலும் இதயத்திலும் உள்ளன” என்றும் எழுதப்பட்டிருக்கின்றது. அப்போதனைகள் மக்களிடம் நாம் சொல்லத்தக்க நம்பிக்கையைப் பற்றிய போதனைகளாகும். 9 உனது வாயால் நீ “இயேசுவே கர்த்தர்” என்று சொல்வாயானால் இரட்சிக்கப்படுவாய். உனது இதயத்தில் நீ “தேவன் இயேசுவை மரணத்திலிருந்து உயிர்த்தெழச் செய்தார்” என்று நம்புவாயானால் இரட்சிக்கப்படுவாய். 10 நாம் இதயத்தில் விசுவாசித்தால் தேவனுக்கேற்ற நீதிமானாகிறோம். நாம் விசுவாசிப்பதை வாயால் சொன்னால் இரட்சிக்கப்படுகிறோம்.
11 “கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கிற எவரும் வெட்கப்படுவதில்லை” [b] என்று எழுதப்பட்டிருக்கிறது. 12 இதில் “எவரும்” என்று குறிப்பிடப்பட்டிருப்பதற்குக் காரணம் உண்டு. அவர்கள் யூதர்களாகவோ, யூதரல்லாதவர்களாகவோ இருக்கலாம். அவர் ஒருவரே அனைவருக்கும் உரிய கர்த்தராவார். தன்னிடம் நம்பிக்கை உள்ள அனைவருக்கும் ஆசீர்வாதம் தருகிறார். 13 “கர்த்தர் மேல் விசுவாசம் வைக்கும் ஒவ்வொருவரும் இரட்சிக்கப்படுவர்” [c] என்று எழுதப்பட்டிருக்கிறது.
14 மக்கள் கர்த்தர் மீது விசுவாசம் வைப்பதற்கு முன்னர் அவர்கள் அவரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும். கர்த்தரிடம் அவர்கள் நம்பிக்கை வைப்பதற்கு முன்னால் அவரைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும். எனவே மக்கள் கர்த்தரைப்பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் அவர்களுக்கு மற்றவர்கள் செய்தியைப் பரப்பவேண்டும். 15 ஒருவன் சென்று அவர்களிடம் செய்தியைப் பரப்புவதற்கு முன்பு, அவன் அனுப்பப்பட வேண்டும். “நற்செய்தியைச் சொல்ல வருகின்றவர்களின் பாதங்கள் எவ்வளவு அழகாக இருக்கின்றன” [d] என்று எழுதப்பட்டிருக்கிறது.
16 நற்செய்தியை யூதர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதைப்பற்றி ஏசாயா, “ஆண்டவரே, அவர்களுக்கு நாங்கள் சொன்னதையெல்லாம் யார் விசுவாசிக்கிறார்கள்?” [e] என்று கேட்கிறார். 17 எனவே நற்செய்தியைக் கேட்பதன் மூலமே விசுவாசம் பிறக்கிறது. ஒருவன் கிறிஸ்துவைப் பற்றிக் கூறும்போது மக்கள் நற்செய்தியைக் கேட்கிறார்கள்.
18 ஆனால் “மக்கள் நற்செய்தியைக் கேட்டதில்லையா?” என்று நான் கேட்கிறேன். ஆமாம்.
“அவர்களின் சப்தங்கள் உலகம் முழுவதும் சென்றன.
அவர்களின் வார்த்தைகள் உலகின் கடைசிவரை பரவின” (A)
என்று எழுதப்பட்டது போல் அவர்கள் கேட்டார்கள்.
19 “இஸ்ரவேல் மக்கள் அதனைப் புரிந்துகொள்ளவில்லையா?” என்று மீண்டும் நான் கேட்கிறேன். ஆமாம். அவர்கள் புரிந்துகொண்டனர்.முதலில் மோசே இதனைச் சொன்னார்.
“நீங்கள் பொறாமைப்படும் வகையில் அந்நாட்டுக்குரிமை இல்லாத மக்களைப் பயன்படுத்துவேன்.
உங்களுக்குக் கோபம் வரும் வகையில் புரிந்துகொள்ள இயலாத நாட்டு மக்களை உபயோகப்படுத்துவேன்.” (B)
20 ஏசாயாவும் தைரியத்தோடு தேவனுக்காக இதைச் சொன்னார்.
“என்னைத் தேடியலையாத மக்களால் கண்டு பிடிக்கப்பட்டேன்.
என்னை விசாரித்து வராதவர்களுக்கு என்னை வெளிப்படுத்தினேன். (C)
21 இவ்வளவு நாட்களும்
“நான் அவர்களுக்காகக் காத்திருந்தேன்.
அவர்களோ எனக்குக் கீழ்ப்படிய மறுத்து விட்டார்கள்.
என்னைப் பின்பற்றவும் மறுத்துவிட்டனர்” (D)
என்று யூத மக்களைப் பற்றி ஏசாயா வழியாக தேவன் கூறுகிறார்.
2008 by World Bible Translation Center