M’Cheyne Bible Reading Plan
அசம்பாவிதமாகச் செய்த பாவங்களுக்கான காணிக்கைகள்
4 கர்த்தர் மோசேயிடம், 2 “நீ, இஸ்ரவேல் ஜனங்களிடம் கூற வேண்டியதாவது: செய்யக்கூடாது என கர்த்தர் சொன்ன காரியங்களைச் செய்ய நேர்ந்தாலும், அசம்பாவிதமாக பாவம் செய்ய நேர்ந்தாலும், ஒருவன் கீழ்க்கண்டபடி செய்ய வேண்டும்.
3 “அபிஷேகம் பெற்ற ஆசாரியன், ஜனங்கள் குற்றத்திற்கு உட்படத்தக்கதாகப் பாவம் செய்தால் அந்த ஆசாரியன் தன் பாவத்துக்காக கர்த்தருக்குச் சில காணிக்கைகளைச் செலுத்த வேண்டும். அந்த ஆசாரியன் குறையற்ற ஒரு இளங்காளையைப் பாவப் பரிகாரப் பலியாகக் கொண்டு வரவேண்டும். 4 ஆசாரியன் ஆசரிப்புக் கூடார வாசலுக்கு கர்த்தரின் சந்நிதானத்திற்கு அந்தக் காளையைக் கொண்டு வரவேண்டும். அவன் அதன் தலையின் மேல் தன் கையை வைத்து அதனைக் கொல்ல வேண்டும். 5 பின் அந்த அபிஷேகம் பெற்ற ஆசாரியன் காளையின் இரத்தத்தை எடுத்து ஆசரிப்புக் கூடாரத்திற்குள் கொண்டு வரவேண்டும். 6 அவன் தன் விரலால் அந்த இரத்தத்தைத் தொட்டு மகாபரிசுத்த ஸ்தலத்தின் திரைக்கு எதிரே கர்த்தரின் சந்நிதியில் ஏழுமுறை தெளிக்க வேண்டும். 7 பின் ஆசாரியன் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து நறுமண பலிபீடத்தின் மூலைகளில் பூச வேண்டும். (இந்த பலிபீடமானது ஆசரிப்புக் கூடாரத்திலே கர்த்தருக்கு முன் இருக்கும்.) காளையின் எல்லா இரத்தத்தையும் தகன பலிபீடத்தின் அடியில் ஊற்ற வேண்டும். (இப்பலிபீடமானது ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் இருக்கும்.) 8 அதற்குப் பிறகு, பாவப்பரிகாரப் பலியாகத் தரப்பட்ட காளையின் கொழுப்பு அனைத்தையும் எடுக்க வேண்டும். காளையின் உட்பகுதிகளிலும் அதைச் சுற்றிலும் உள்ள கொழுப்பு முழுவதையும் எடுத்து, 9 அவன் அதன் இரண்டு சிறு நீரகங்களையும் அவற்றையொட்டி கீழ்ப்புறத்திலும், மேல்புறத்திலும் ஒட்டி இருக்கிற கொழுப்பையும் கல்லீரலில் இருக்கும் கொழுப்புப் பகுதிகளையும் சிறுநீரகங்களோடு சேர்த்து, 10 சமாதானப் பலியின் போது காளையிலிருந்து எடுப்பது போன்று இப்பாகங்களை எடுத்து ஆசாரியன் பலிபீடத்தின் மேல் வைத்து எரிக்க வேண்டும். 11-12 ஆனால் ஆசாரியன் காளையின் தோலையும், அதன் குடல்களையும், கழிவுப் பொருட்களையும் தலையிலும் கால்களிலும் உள்ள மாம்சத்தையும் தனியே எடுக்க வேண்டும். அவற்றைக் கூடாரத்திற்கு வெளியே கொண்டுபோய் சாம்பல் கொட்டுகிற சிறப்புக்குரிய இடத்தில் குவிக்க வேண்டும். பின்பு ஆசாரியன் இக்குவியலை விறகுகளின் மேல் அடுக்கி எரிக்க வேண்டும். சாம்பல் குவிக்கப்பட்டிருக்கும் இடத்தில் காளை எரிக்கப்பட வேண்டும்.
13 “இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் அறியாமையால் பாவம் செய்து, கர்த்தர் எவற்றைச் செய்யக் கூடாது என்று சொன்னாரோ அவற்றை அவர்கள் தெரியாமல் செய்து பாவத்திற்குரியவர்களாகலாம். 14 அவர்கள் தங்கள் பாவங்களை அறிந்துகொள்ளும்போது, அதற்காக ஒரு இளங்காளையைப் பாவப்பரிகார பலியாக தங்கள் முழு நாட்டிற்காகவும் அளிக்க வேண்டும். அதனை அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் முன்பு கொண்டு வரவேண்டும். 15 இஸ்ரவேலின் மூப்பர்கள் கர்த்தருக்கு முன்பாக தங்கள் கைகளை அதன் தலையில் வைக்க வேண்டும். பின்னர் அதனை கர்த்தருடைய சந்நிதானத்தில் கொல்ல வேண்டும். 16 பின்னர் அபிஷேகம் பெற்ற ஆசாரியன் அக்காளையின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து ஆசரிப்புக் கூடாரத்திற்குள் கொண்டு வர வேண்டும். 17 ஆசாரியன் தனது விரலை இரத்தத்தில் தொட்டு கர்த்தருக்கு முன்னால் உள்ள திரையில் ஏழுமுறை தெளிக்க வேண்டும். 18 பிறகு ஆசாரியன் கொஞ்சம் இரத்தத்தை எடுத்து பலிபீடத்தின் மூலைப்பகுதிகளில் பூச வேண்டும். (இப்பலிபீடம் ஆசாரிப்புக் கூடாரத்திற்குள் கர்த்தருக்கு முன்னால் இருக்கும்.) பின்பு ஆசாரியன் அக்காளையின் எல்லா இரத்தத்தையும் தகனபலிபீடத்தின் அடியில் ஊற்ற வேண்டும். (இது ஆசாரிப்புக் கூடாரத்தின் வாசலில் இருக்கும்.) 19 பின் அக்காளையிடம் உள்ள கொழுப்பு முழுவதையும் எடுத்து பலிபீடத்தின் மேல் எரிக்க வேண்டும். 20 பாவப்பரிகாரப் பலியைப் போலவே ஆசாரியன் இதன் பாகங்களையும் செய்து முடிக்க வேண்டும். இதன் மூலம், ஜனங்கள் அனைவரையும் சுத்திகரிக்க முடியும். இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரையும் தேவன் மன்னிப்பார். 21 ஆசாரியன் மற்ற காளையைக் கூடாரத்திற்கு வெளியே கொண்டு சென்று முன்பு செய்தது போலவே இதையும் எரித்துவிடவேண்டும். இது முழு சமுதாயத்திற்கான பாவப்பரிகாரப் பலியாகும்.
22 “ஒரு ஆட்சியாளன் அசம்பாவிதமாக தன் தேவனாகிய கர்த்தர் செய்யவேண்டாம் என்று கூறியவற்றை மீறி செய்யத்தகாததைச் செய்து பாவத்திற்குரியவனாயிருக்கலாம். 23 அந்த ஆட்சியாளன் தனது பாவத்தைத் தெரிந்துகொண்டதும் அவன் எவ்விதக் குறைபாடும் இல்லாத ஆண் வெள்ளாட்டைக் கொண்டு வரவேண்டும். அதுவே அவனது காணிக்கை. 24 ஆட்சியாளன் தன் கையை ஆட்டின் தலைமேல் வைத்து, அதனை கர்த்தருக்கு முன்பு தகன பலியிடக் கூடிய இடத்தில் கொல்ல வேண்டும். அந்த வெள்ளாடுதான் பாவப்பரிகார பலியாகும். 25 ஆசாரியன் கொஞ்சம் இரத்தத்தைத் தன் விரலால் எடுத்து தகனபலிபீடத்தின் மூலைப் பகுதிகளில் பூச வேண்டும். மிச்சமுள்ள இரத்தத்தைத் தகன பலிபீடத்தின் அடியில் ஊற்ற வேண்டும். 26 ஆசாரியன் அந்த ஆட்டின் கொழுப்பு முழுவதையும் பலிபீடத்தின் மேல் எரிக்க வேண்டும். சமாதானப் பலியில் செய்தது போன்றே இதிலும் கொழுப்பை எரித்துவிடவேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் ஆசாரியன் ஆட்சியாளனைப் பரிசுத்தப்படுத்திவிடலாம். தேவனும் அவனை மன்னித்துவிடுவார்.
27 “பொது ஜனங்களில் ஒருவன் அசம்பாவிதமாக பாவம் செய்துவிடலாம். இப்படி அவன் கர்த்தர் சொன்னதை மீறி செய்யத் தகாததைச் செய்துவிடுகிறான். 28 அவன் தான் செய்தது பாவம் என்பதைத் தெரிந்துகொண்டவுடனே அவன் பழுதற்ற பெண் ஆட்டைக் கொண்டு வர வேண்டும். அதுவே அவனுடைய பாவப்பரிகாரப் பலி ஆகும். அவன் செய்த பாவத்திற்காக அவன் அதைக் கொண்டுவர வேண்டும். 29 அவன் தன் கையை அதன் தலைமீது வைத்து, தகன பலிக்குரிய இடத்தில் அதனைக் கொல்ல வேண்டும். 30 பிறகு ஆசாரியன் தன் விரல்களில் அதன் இரத்தத்தை எடுத்து தகன பலிபீடத்தின் கொம்புகளில் பூச வேண்டும். பின் அவன் மிச்சமுள்ள இரத்தத்தை பலிபீடத்தின் அடியில் ஊற்ற வேண்டும். 31 சமாதானப் பலியில் செய்தது போன்று ஆட்டின் கொழுப்பு முழுவதையும் பலிபீடத்தில் எரித்துவிட வேண்டும். கர்த்தருக்கு இனிய நறுமணம் தரும்படி ஆசாரியன் அதனைப் பலிபீடத்தில் எரிக்கவேண்டும். இம்முறையில் ஆசாரியன் அம்மனிதனைச் சுத்தப்படுத்தலாம். தேவன் அவனை மன்னித்துவிடுவார்.
32 “அவன் பாவப்பரிகாரப் பலியாக ஒரு ஆட்டுக் குட்டியைக் கொண்டு வருவானாகில், அது பழுதற்ற பெண் குட்டியாக இருக்க வேண்டும். 33 அதன் தலைமீது தன் கையை வைத்து, தகனபலிகளை வழங்கும் இடத்தில் அதனை பாவப்பரிகாரப் பலியாகக் கொல்ல வேண்டும். 34 ஆசாரியன் அதன் இரத்தத்தைத் தன் விரலில் எடுத்து தகன பலிபீடத்தின் மூலைகளில் தடவ வேண்டும். பின் அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் ஊற்ற வேண்டும். 35 சமாதானப் பலிகளில் செய்தது போலவே ஆட்டின் கொழுப்பை தகனபலிபீடத்தின் மேல் வைத்து எரிக்க வேண்டும். மற்ற பலி முறைகளில் செய்தது போலவே பலிபீடத்தில் வைத்ததை எரிக்க வேண்டும். இவ்வாறு ஆசாரியன் அவன் செய்த பாவத்திலிருந்து சுத்தப்படுத்தலாம். தேவனும் அவனை மன்னித்துவிடுவார்.
புத்தகம் 1
(சங்கீதம் 1-41)
சங்கீதம்
1 தீய ஜனங்களின் அறிவுரையைக் கேளாமலும், பாவிகளைப்போன்று வாழாமலும்,
தேவனை மதிக்காத ஜனங்களோடு சேராமலும், இருக்கிற மனிதன் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருப்பான்.
2 ஒரு நல்ல மனிதன் கர்த்தருடைய போதனைகளை நேசிக்கிறான்.
அவற்றைக் குறித்து அவன் இரவும் பகலும் தியானிக்கிறான்.
3 அம்மனிதன் நீரோடைகளின் கரையில் நடப்பட்ட ஒரு மரத்தைப்போன்று வலிமையுள்ளவனாக இருக்கிறான்.
தக்கசமயத்தில் பலன் தருகிற மரத்தைப்போல் அவன் காணப்படுகிறான்.
உதிராமலிருக்கிற இலைகளைக்கொண்ட மரத்தைப்போல் அவன் இருக்கிறான்.
அவன் செய்கின்ற செயல்கள் எல்லாவற்றிலும் அவன் வெற்றி பெறுவான்.
4 ஆனால் தீயோர் அப்படியிரார்கள்.
அத்தீய ஜனங்கள் காற்றில் பறக்கிற உமியைப் போன்றவர்கள்.
5 ஒரு நீதிமன்றத்தின் வழக்கை முடிவுகட்டுவதற்காக நல்ல ஜனங்கள் கூடியிருக்கும்போது தீயோர் குற்றவாளிகளாக நிரூபிக்கப்படுவார்கள்.
அந்தப் பாவிகள் குற்றமற்றவர்களாகக் கருதப்படமாட்டார்கள்.
6 ஏன்? கர்த்தர் நல்ல ஜனங்களைக் காப்பாற்றுகிறார்.
தீயோரை அவர் அழிக்கிறார்.
2 யூதரல்லாத மனிதர்கள் ஏன் இவ்வளவு கோபமாயிருக்கிறார்கள்?
ஏன் அந்தத் தேசங்கள் மதியீனமான திட்டங்களை வகுக்கின்றன?
2 அவர்களுடைய அரசர்களும், தலைவர்களும் கர்த்தரையும்,
கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசனையும் எதிர்க்க ஒன்றுகூடினார்கள்.
3 அந்நாடுகளின் தலைவர்கள், “நாம் தேவனையும், அவர் தேர்ந்தெடுத்த அரசனையும் எதிர்த்துக் கலகம் செய்வோம்.
அவரிடமிருந்து நம்மை விடுவித்துக்கொள்வோம்!” என்றார்கள்.
4 ஆனால் என் ஆண்டவர் பரலோகத்தின் அரசர்,
அவர் அந்த ஜனங்களைப் பார்த்து நகைக்கிறார்.
5-6 தேவன் கோபமடைந்து அந்த ஜனங்களை நோக்கி,
“நான் இம்மனிதனை அரசனாகத் தேர்ந்தெடுத்தேன்!
அவன் சீயோன் மலையில் அரசாளுவான்.
சீயோன் என்னுடைய பரிசுத்த மலை” என்கிறார்.
அது மற்ற தலைவர்களை பயமுறுத்தும்.
7 இப்போது கர்த்தருடைய உடன்படிக்கையை உனக்குக் கூறுவேன்.
கர்த்தர் என்னிடம், “இன்று நான் உனக்குத் தந்தையானேன்!
நீ எனக்கு மகன்.
8 நீ என்னைக் கேட்டால், நான் உனக்குத் தேசங்களையெல்லாம் கொடுப்பேன்.
பூமியின் ஜனங்களெல்லாம் உன்னுடையவர்களாவார்கள்!
9 இரும்புத் தடியால் மண்குடத்தை உடைப்பதைப்போல
நீ அத்தேசங்களை அழிக்கமுடியும்” என்றார்.
10 எனவே அரசர்களே, ஞானமுள்ளவர்களாய் இருங்கள்.
அரசாளுபவர்களே, இப்பாடத்தை கற்றுக்கொள்ளுங்கள்.
11 மிகுந்த அச்சத்தோடு கர்த்தருக்குக் கீழ்ப்படியுங்கள்.
12 தேவனுடைய குமாரனுக்கு நீங்கள் உண்மையானவர்கள் என்பதைக் காட்டுங்கள், நீங்கள் இவ்வாறு செய்யாவிட்டால் ஆண்டவர் உங்களை அழிக்க தன் கோபத்தைக் காட்டத் தயாராக இருக்கிறார்.
கர்த்தரை நம்பும் ஜனங்கள் சந்தோஷமாயிருப்பார்கள்.
ஆனால் மற்ற ஜனங்கள் கவனமாக இருக்கவேண்டும்.
கர்த்தர் தமது கோபத்தை வெளிப்படுத்தத் தயாராக இருக்கிறார்.
19 ஒரு முட்டாளாக இருந்து பிறரை ஏமாற்றிப் பொய் சொல்கிறவனாக இருப்பதைவிட ஏழையாகவும் நேர்மையானவனாகவும் இருப்பது நல்லது.
2 சிலவற்றைப்பற்றி பரவசப்படுவது போதாது. நீ செய்வது என்ன என்று உனக்குத் தெரியவேண்டும். எதையாவது அவசரமாகச் செய்வாயானால் அதைத் தவறாகச் செய்துவிடுவாய்.
3 ஒருவனது சொந்த முட்டாள்தனம் அவனது வாழ்வை அழித்துவிடும். ஆனால் அவன் கர்த்தர் மீது பழி சொல்லுவான்.
4 ஒருவன் செல்வந்தனாக இருந்தால், அவனது செல்வம் பல நண்பர்களைத் தரும். ஆனால் ஒருவன் ஏழையாக இருந்தால் எல்லா நண்பர்களும் அவனைவிட்டு விலகுவார்கள்.
5 இன்னொருவனுக்கு எதிராகப் பொய் சொல்பவன் தண்டிக்கப்படுவான். பொய் சொல்பவனுக்குப் பாதுகாப்பில்லை.
6 ஆள்பவரோடு நட்புக்கொள்ளவே பலரும் விரும்புகின்றனர். மேலும், பரிசு தருபவரோடு நட்புக்கொள்ள ஒவ்வொருவரும் விரும்புகின்றனர்.
7 ஒருவன் ஏழையாக இருந்தால், அவனது குடும்பம் கூட அவனுக்கு எதிராக இருக்கும். அவனது நண்பர்களும்கூட அவனை விட்டு விலகுவார்கள். அந்த ஏழை அவர்களிடம் உதவி கேட்கலாம். எனினும் அவனருகில் அவர்கள் போகமாட்டார்கள்.
8 ஒருவன் உண்மையிலேயே தன்னை நேசித்தால், அறிவைப்பெறக் கடுமையாக உழைக்கவேண்டும். அவன் கடினமாக முயற்சிசெய்து புரிந்துகொள்ளுதலை அடையவேண்டும். அவன் அதற்குரிய வெகுமதியைப் பெறுவான்.
9 பொய்சாட்சி சொல்பவன் தண்டிக்கப்படுவான். தொடர்ந்து பொய்சொல்பவன் அழிக்கப்படுவான்.
10 ஒரு முட்டாள் செல்வந்தனாகக் கூடாது. இது ஒரு அடிமை இளவரசனை ஆள்வதைப் போன்றது.
11 ஒருவன் அறிவுள்ளவனாக இருந்தால், அந்த அறிவு அவனுக்குப் பொறுமையைத் தரும். அவனுக்குத் தீமை செய்தவர்களை மன்னிப்பது அருமையானது.
12 ஒரு அரசன் கோபத்தோடு இருக்கும்போது, அது சிங்கத்தின் கெர்ச்சிப்பு போன்று இருக்கும். ஆனால் அவன் உன்னோடு மகிழ்ச்சியாக இருப்பது, மென்மையாக மழை பொழிவதுபோன்று இருக்கும்.
13 ஒரு முட்டாள் மகன் தன் தந்தைக்கு வெள்ளம்போல நிறையத் தொல்லைகளைக்கொண்டு வருகிறான். ஓயாது குறைகளைச் சொல்லிக்கொண்டிருக்கிற மனைவி சொட்டுச்சொட்டாக ஒழுகிக்கொண்டிருக்கும் தண்ணீர் போன்றவள். அது மிகவும் துன்புறுத்தும்.
14 ஜனங்கள் தம் பெற்றோர்களிடமிருந்து வீட்டையும் செல்வத்தையும் பெறுகிறார்கள். ஆனால் ஒரு நல்ல மனைவி கர்த்தரிடமிருந்து கிடைக்கும் வெகுமதி ஆகும்.
15 ஒரு சோம்பேறி மிகுந்த உறக்கத்தைப் பெறலாம். ஆனால் அவனுக்கு மிகுந்த பசி இருக்கும்.
16 ஒருவன் சட்டத்திற்குப் பணிந்திருந்தால், அவன் தன்னைத்தானே காத்துக்கொள்கிறான். ஆனால் ஒருவன் அதனை முக்கியமில்லை என்று கருதினால், பின் அவன் கொல்லப்படுவான்.
17 ஏழைகளுக்குப் பண உதவி செய்வது கர்த்தருக்குக் கடன் கொடுப்பது போன்றது ஆகும். அவர்கள் மீது தயவாய் இருந்ததற்காக கர்த்தர் அவற்றைத் திருப்பித் தருவார்.
18 உன் மகனுக்குக் கற்றுக்கொடு, அவன் தவறு செய்யும்போது தண்டனைகொடு. அதுதான் ஒரே நம்பிக்கை. இதனை நீ செய்ய மறுத்தால், பிறகு அவன் தன்னையே அழித்துக்கொள்ள நீ உதவுவதாக இருக்கும்.
19 ஒருவன் மிக எளிதில் கோபம் கொண்டால், அதற்குரிய விலையை அவன் கொடுக்க வேண்டியதிருக்கும். அவனை நீ துன்பத்திலிருந்து தப்புவித்தால், அவன் அதனையே மீண்டும் மீண்டும் செய்வான்.
20 அறிவுரைகளைக் கேள்; ஒழுக்கத்தை ஏற்றுக்கொள். அப்போது நீ அறிவாளி ஆவாய்.
21 ஜனங்களுக்கு பலவித எண்ணங்கள் தோன்றலாம். எனினும் கர்த்தருடைய திட்டங்களே நிறைவேறும்.
22 ஜனங்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பவனை விரும்புகிறார்கள். எனவே ஜனங்களால் நம்பப்படாதவனாக இருப்பதைவிட ஏழையாக இருப்பதே மேல்.
23 கர்த்தரை மதிக்கிறவன் நல்ல வாழ்வைப் பெறுகிறான். அவன் தன் வாழ்வில் திருப்தியடைகிறான். அவன் துன்பங்களைப்பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை.
24 சோம்பேறி, தன் உணவிற்குத் தேவையான வேலைகளைக்கூடச் செய்யமாட்டான். தட்டிலிருந்து உணவை எடுத்து வாயில் வைக்கவும் சோம்பல்படும் அளவுக்கு அவன் முழுச் சோம்பேறி ஆவான்.
25 சிலர் எதற்கும் மரியாதை காட்டமாட்டார்கள். அவர்கள் தண்டிக்கப்படவேண்டும். அறிவற்றவன் தன் பாடத்தைக் கற்றுக்கொள்ள கட்டாயப்படுத்தப்படுகிறான். ஆனால் சிறு சிட்சையே அறிவாளிகளைக் கற்றுக்கொள்ளச் செய்யும்.
26 ஒருவன் தன் தந்தையிடமிருந்து திருடி, தன் தாயை பலவந்தமாக வெளியேற்றினால் அவன் மிகவும் மோசமானவன். அவன் தனக்குத்தானே அவமானத்தையும் அவமரியாதையையும் தேடிக்கொள்கிறான்.
27 போதனைகளைக் கவனமாகக் கேட்பதை நிறுத்தினால் நீ முட்டாள்தனமான தவறுகளைச் செய்துகொண்டே இருப்பாய்.
28 சாட்சி சொல்ல வருகிறவன் நேர்மையற்றவனாக இருந்தால், தீர்ப்பும் சரியானதாக இராது. தீயவர்கள் சொல்வது தீமையைத் தரும்.
29 மற்றவர்களைவிடத் தன்னைச் சிறந்தவனாக நினைப்பவன் தண்டிக்கப்படுவான். அறிவற்றவன் தனக்கான தண்டனையைப் பெறுகிறான்.
2 உங்களுக்கு உதவ நான் கடுமையான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறேன். லவோதிக்கேயா மக்களுக்கும், என்னை இதுவரை காணாத ஏனைய மக்களுக்கும் நான் உதவி செய்ய முயல்கிறேன். 2 அவர்களை பலப்படுத்தவும், அன்புடன் ஒன்று சேர்த்துக்கொள்ளவும் விரும்புகிறேன். உறுதியான விசுவாசம் என்னும் செல்வத்தை அவர்கள் பெறவேண்டும் என்று விரும்புகிறேன். அந்த விசுவாசம் சரியான அறிவில் இருந்து பிறக்க வேண்டும் என்றும் விரும்புகிறேன். தேவன் வெளிப்படுத்திய இரகசிய உண்மையை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்றும் விரும்புகிறேன். அந்த உண்மை கிறிஸ்து தான். 3 கிறிஸ்துவுக்குள் ஞானத்தின் எல்லாக் கருவூலங்களும், அறிவும் பாதுகாக்கப்பட்டிருக்கிறது.
4 தோற்றத்தில் உண்மை போன்ற பொய்களைச் சொல்லி உங்களை யாரும் முட்டாளாக்கிவிடக் கூடாது என்பதற்காக இவ்வளவையும் உங்களுக்கு எழுதுகிறேன். 5 அங்கே நான் உங்களோடு இல்லை. எனினும் எனது இதயம் உங்களோடு உள்ளது. உங்களது நல்ல வாழ்வைக் காணும்போதும் கிறிஸ்துவுக்குள் உறுதியான விசுவாசத்தைக் காணும்போதும் நான் மகிழ்வடைகிறேன்.
கிறிஸ்துவில் தொடர்ந்து வாழுங்கள்
6 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நீங்கள் அடைந்துள்ளீர்கள். எனவே எதையும் மாற்றிக்கொள்ளாமல் தொடர்ந்து அவரைப் பின்பற்றி வாழுங்கள். 7 கிறிஸ்துவை மட்டும் நீங்கள் சார்ந்திருங்கள். வாழ்க்கையும், பலமும் அவரிடமிருந்து வருகின்றன. உங்களுக்கு அந்த உண்மை கற்பிக்கப்பட்டிருக்கிறது. அந்த உண்மையான போதனையில் நீங்கள் தொடர்ந்து உறுதியாக இருக்க வேண்டும். எப்பொழுதும் நன்றி உள்ளவர்களாய் இருங்கள்.
8 பொய்யான எண்ணங்களாலும், பொருளற்ற சொற்களாலும் எவரும் உங்களை வழி நடத்திச் செல்லாதபடி உறுதியாய் இருங்கள். இத்தகைய எண்ணங்கள் கிறிஸ்துவிடமிருந்து வராது. மக்களிடமிருந்தே வருகிறது. இவை உலக மக்களின் பயனற்ற எண்ணங்கள். 9 தேவனுடைய முழுமை கிறிஸ்துவிடம் வாழ்கிறது. 10 கிறிஸ்துவுக்குள் நீங்கள் முழுமையாக இருக்கிறீர்கள். உங்களுக்கு வேறு எதுவும் தேவை இல்லை. அனைத்து அதிகாரங்களையும் ஆள்வோர்களையும் ஆளுபவர் கிறிஸ்து ஆவார்.
11 கிறிஸ்துவுக்குள் நீங்கள் வித்தியாசமான விருத்தசேதனத்தைப் பெற்றிருக்கிறீர்கள். இதுவேறு எவரின் கையாலும் செய்யப்பட்டதன்று. உங்களுடைய பழைய பாவம் மிக்க சுபாவத்தின் சக்தியிலிருந்து கிறிஸ்துவின் விருத்தசேதனம் வழியாக விடுதலையாக்கப்பட்டீர்கள். இது கிறிஸ்துவின் விருத்தசேதனமாகும். 12 நீங்கள் ஞானஸ்நானம் பெற்றபோது உங்கள் பழைமை இறந்து கிறிஸ்துவோடு புதைக்கப்பட்டது. அந்த ஞானஸ்நானத்தில் கிறிஸ்துவுடன் நீங்களும் உயிர்த்தெழுந்தீர்கள். ஏனென்றால் நீங்கள் தேவனுடைய சக்தியில் விசுவாசமாய் இருந்தீர்கள். கிறிஸ்துவை மரணத்திலிருந்து உயிர்த்தெழச் செய்ததன்மூலம் தேவன் தன் வல்லமையை வெளிப்படுத்திவிட்டார்.
13 உங்களது பாவங்களாலும் பாவம் மிக்க சுயசுபாவத்தின் சக்தியிலிருந்தும் விடபட முடியாததாலும் ஆன்மீக நிலையில் இறந்திருந்தீர்கள். ஆனால், தேவன் உங்களைக் கிறிஸ்துவுடன் உயிருடன் இருக்கச் செய்தார். அவர் நமது பாவங்களையும் மன்னித்துவிட்டார். 14 தேவனுடைய சட்டங்களை நாம் மீறிவிட்டதால் நாம் கடன்பட்டிருந்தோம். எந்தெந்த சட்டங்களை நாம் மீறினோம் என்பதை அக்கடன் பட்டியலிட்டது. ஆனால் தேவன் அந்தக் கடனை நமக்கு மன்னித்துவிட்டார். தேவன் அக்கடனை அப்புறப்படுத்தி ஆணிகளால் சிலுவையில் அறைந்துவிட்டார். 15 தேவன் ஆன்மீக நிலையில் ஆள்வோர்களையும் அதிகாரங்களையும் தோற்கடித்தார். இவ்வெற்றியை அவர் சிலுவையின் மூலம் பெற்றார். அவை பலமற்றவை என்பதை தேவன் உலகுக்குக் காட்டினார்.
மனிதனின் சட்டத்தைப் பின்பற்றாதீர்கள்
16 ஆகையால், உண்பதைப் பற்றியும், குடிப்பதைப் பற்றியும், பண்டிகைகள், பௌர்ணமிகள், ஓய்வு நாட்கள் ஆகிய யூதர்களின் பழக்க வழக்கங்களைக் குறித்தும் எவரும் சட்டங்கள் உருவாக்க நீங்கள் அனுமதிக்காதீர்கள். மனித விதிமுறைகளைப் பின்பற்றாதீர்கள் 17 கடந்த காலத்தில், இவை நிழலாக இருந்து எதிர்காலத்தில் வருவதைச் சுட்டிக் காட்டியது. ஆனால் புதிதாக வந்தவை கிறிஸ்துவில் காணப்படுகின்றன. 18 சிலர் தாழ்மையுள்ளவர்கள் போல் நடிப்பதில் மகிழ்ச்சியடைகிறார்கள். அவர்கள் தேவ தூதர்களை வழிபட விரும்புவர். அவர்கள் எப்பொழுதும் தாங்கள் கண்ட தரிசனங்களையும், கனவுகளையும் பற்றியே பேசிக்கொண்டிருப்பர். அவர்கள் “நீங்கள் தவறானவர்கள், உங்களால் எதுவும் செய்ய முடியாது” என்று கூறுவர். எனவே அவர்களை எதுவும் சொல்ல அனுமதிக்காதீர்கள். அவர்களுக்கு எப்பொழுதும் முட்டாள்தனமான பெருமிதமே இருக்கிறது. ஏனென்றால் அவர்கள் மனிதர்களின் எண்ணங்களைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கிறார்களே ஒழிய தேவனுடைய எண்ணங்களைப் பற்றி சிந்திப்பதில்லை. 19 அவர்கள், தலையாகிய கிறிஸ்துவின் அதிகாரத்துக்குள் தம்மைக் கட்டுப்படுத்திக்கொள்வதில்லை. முழு சரீரமும் கிறிஸ்துவைச் சார்ந்துள்ளது. அவரால் நம் சரீரத்தின் எல்லா உறுப்புகளும் ஒன்றுக்கொன்று அக்கறை கொள்கிறது. மேலும் அவை ஒன்றுக்கொன்று உதவியும் செய்கிறது. இது சரீரத்தை வலிமைப்படுத்தி ஒன்றாய்ச் சேர்க்கிறது. தேவன் விரும்புகிற விதத்திலேயே சரீரம் வளருகின்றது.
20 நீங்கள் கிறிஸ்துவோடு இறந்தீர்கள். உலகத்தின் பயனற்ற சட்டதிட்டங்களில் இருந்தும் விடுதலை பெற்றீர்கள். எனினும் நீங்கள் இந்த உலகத்தைச் சார்ந்தவர்களைப் போன்று நடித்து வருகிறீர்கள். 21 “இதனை உண்ணக்கூடாது.” “அதனைச் சுவைபார்க்கக்கூடாது” “அதனைத் தொடக்கூடாது” என்கிறீர்கள். 22 ஏன் இன்னும் இது போன்ற சட்ட திட்டங்களைப் பின்பற்றுகிறீர்கள்? இவை பயன்படுத்தப்பட்டவுடன் போய்விடும். இச்சட்டதிட்டங்கள் பூலோகத்தைப் பற்றியவை. இவை மனிதர்களின் கட்டளைகளும், போதனைகளுமேயாகும். தேவனுடையவை அல்ல. 23 இவை புத்திசாலித்தனமாய்த் தோன்றலாம். ஆனால் இச்சட்டங்கள் போலிப் பணிவும் சரீரத்தைத் தண்டிக்கக் கூடியதுமான மனிதரால் உருவாக்கப்பட்ட மதத்தின் சட்டங்கள் மட்டுமே ஆகும். ஆனால் இவை மக்கள் பாவத்தில் இருந்து விடுபட உதவாது.
2008 by World Bible Translation Center