M’Cheyne Bible Reading Plan
சுத்தப்படுத்துவதைப் பற்றிய விதிமுறைகள்
5 கர்த்தர் மோசேயிடம், 2 “நான் இஸ்ரவேல் ஜனங்களுக்கு கட்டளையிடுவதாவது: அவர்கள் தங்கள் முகாம்களை நோய்கள் பரவாதபடி வைத்துக்கொள்ளவேண்டும். அவர்களில் யாராவது ஒருவனுக்குத் தொழுநோய் இருந்தால், அவனை முகாமை விட்டு அனுப்பிவிட வேண்டும் என்று சொல். முகாமில் யாருக்காவது (இரத்தப் போக்கான) விலக்கு தீட்டு இருந்தால் அவர்களையும் அனுப்பிவிட வேண்டும் என்று சொல். முகாமில் யாராவது பிணத்தைத் தொட்டு அதனால் தீட்டாகியிருந்தால் அவனையும் வெளியே அனுப்பி விடவேண்டும். 3 ஆணா, பெண்ணா என்பது பற்றிக் கவலைப்படாமல் அந்த நபரை வெளியேற்ற வேண்டும். அதனால் மற்றவர்களுக்கு அந்த நோயும், தீட்டும் ஏற்படாமல் இருக்கும். நானும் உங்கள் முகாமில் உங்களோடு வாழ்வேன்” என்றார்.
4 எனவே இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தனர். அவர்கள் இத்தகையவர்களை முகாமைவிட்டு வெளியேற்றினர். கர்த்தர் மோசேயிடம் கட்டளையிட்டபடியே அவர்கள் செய்தனர்.
தவறுக்குச் செலுத்தும் அபராதம்
5 கர்த்தர் மோசேயிடம், 6 “இஸ்ரவேல் ஜனங்களில் ஒருவன் இன்னொருவனுக்குத் தீமை செய்திருந்தால் (ஒருவன் இன்னொருவனுக்குத் தீமை செய்வது என்பது உண்மையில் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்வதாகும்) அவன் தண்டனைக்கு உரியவன். 7 எனவே அவன் தான் செய்த பாவத்தைப் பற்றி ஜனங்களிடம் சொல்ல வேண்டும். பின் அதற்கான அபராதத் தொகையையும் செலுத்த வேண்டும். அதில் ஐந்தில் ஒரு பாகத்தையும் சேர்த்து பாதிக்கப்பட்டவனுக்குக் கொடுக்கவேண்டும். 8 பாதிக்கப்பட்டவன் ஒருவேளை மரித்து போயிருந்தாலோ, அத்தொகையை ஏற்றுக்கொள்ள அவனுக்கு நெருங்கிய உறவினர்கள் யாரும் இல்லாமலிருந்தாலோ, அவன் அத்தொகையை கர்த்தருக்குச் செலுத்த வேண்டும். அவன் அம்முழுத்தொகையையும் ஆசாரியனிடம் கொடுக்க வேண்டும். அந்த ஆசாரியன் அவனது பாவநிவிர்த்திக்காக ஆட்டுக் காடாவை பலியாகச் செலுத்த வேண்டும். அதனைப் பலியிடுவதன் மூலம் ஜனங்கள் செய்த பாவமானது நிவிர்த்தி செய்யப்படுகிறது. மீதி பணத்தை, ஆசாரியன் வைத்துக்கொள்ள வேண்டும்.
9 “இஸ்ரவேலனாக இருக்கும் ஒருவன் தேவனுக்கு இதுபோல் சிறப்பான அன்பளிப்புகளைச் செலுத்தினால் ஆசாரியன் அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அது அவனுக்கு உரியது. 10 ஒருவன் இது போன்ற சிறப்பு காணிக்கைகளை கொடுக்காமலும் இருக்கலாம். ஆனால் ஆசாரியனுக்குக் கொடுக்கப்பட்ட எதுவும் அவனுக்கு உரியதாகிவிடும்” என்று கூறினார்.
சந்தேகம்கொள்ளும் கணவர்கள்
11 கர்த்தர் மோசேயிடம், 12 “ஒருவனின் மனைவி அவனுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்திருக்கலாம். 13 அவள் இன்னொருவனோடு பாலின உறவு வைத்துக்கொண்டு அதனைக் கணவனுக்குத் தெரியாமல் மறைத்துவிடலாம். அவள் தனது செயலில் பிடிபடாமல் அவளுக்கு எதிராக எந்த சாட்சியும் இல்லாமல் இருக்கலாம். எனவே, அவள் செய்த பாவம் அவளது கணவனுக்குத் தெரியாமல் போய்விடலாம். அவளும் தன் கணவனுக்குத் தன் பாவம் பற்றி சொல்லாமல் இருக்கலாம். 14 ஆனால், அவளது கணவன் தனது மனைவி தனக்குத் துரோகம் செய்கிறாளோ என்று சந்தேகப்படலாம். அவள் தனக்கு உண்மையானவளாகவும், சுத்தமானவளாகவும் இல்லை என்று அவன் நினைக்கலாம். 15 இவ்வாறு நிகழ்ந்தால், அவன் தன் மனைவியை ஆசாரியனிடம் அழைத்துச் செல்லவேண்டும். அப்போது, அவன் காணிக்கையாக ஒரு எப்பா அளவான வாற் கோதுமை மாவிலே பத்தில் ஒரு பங்கைக் கொடுக்க வேண்டும். அவன் அந்த வாற்கோதுமை மாவிலே எண்ணெயோ, நறுமணப் பொருளோ போடக்கூடாது. இது கர்த்தருக்குத் தானிய காணிக்கையாக இருக்கும். கணவன் சந்தேகம் அடைந்ததால் அதற்குப் பரிகாரமாக இப்பலி அமைகின்றது. தனது மனைவி தனக்கு உண்மையில்லாதவளாக இருந்தாள் என்று அவன் எண்ணியதை இப்பலி காட்டும்.
16 “ஆசாரியன் அந்தப் பெண்ணை கர்த்தரின் முன்பு அழைத்துக்கொண்டு போய் அங்கே அவளை நிறுத்தி, 17 பிறகு ஆசாரியன் பரிசுத்த தண்ணீரை எடுத்து மண்ஜாடியில் ஊற்ற வேண்டும். பின் பரிசுத்தக் கூடாரத்தின் தரையிலிருந்து கொஞ்சம் மண்ணை எடுத்து, அப்பாத்திரத்தில் போட வேண்டும். 18 ஆசாரியன் அவளை கர்த்தர் முன் நிற்குமாறு செய்து பிறகு அவளது கூந்தலை அவிழ்க்கச் சொல்லி, அவள் கையில் தானியக் காணிக்கையை வைக்க வேண்டும். இப்பலி, அவளது கணவனால் அவனது சந்தேகத்திற்காக கர்த்தருக்குக் கொடுக்கப்பட்ட காணிக்கையாகும். அதே நேரத்தில் ஆசாரியன் தன் கையில் பரிசுத்த தண்ணீர் இருக்கும் மண் ஜாடியை வைத்திருக்க வேண்டும். அந்த பரிசுத்த தண்ணீர் அவள் பாவம் செய்திருந்தால் அவளுக்கு சாபத்தை உண்டாக்கும்.
19 “பிறகு, ஆசாரியன் அந்தப் பெண்ணிடம் அவள் பொய் சொல்லக்கூடாது என்றும், அவள் உண்மையைச் சொல்ல வேண்டுமென்றும் கட்டளையிட வேண்டும். ஆசாரியன் அவளிடம், ‘நீ இன்னொரு மனிதனோடு தொடர்பு வைக்காமல் இருந்திருந்தால், திருமணத்துக்கு பின் உன் கணவனுக்கு எதிராகப் பாவம் செய்யாமல் இருந்திருந்தால், சாபங்களைக் கொடுக்கும் இந்த தண்ணீரானது உனக்குத் தீங்கு செய்யாது. 20 ஆனால் நீ உன் கணவனுக்கு எதிராகப் பாவம் செய்திருந்தால், உன் கணவன் அல்லாத ஒருவனுடன் நீ தொடர்பு வைத்திருந்தால், நீ தூய்மையானவளல்ல. 21 இது உண்மையென்றால், இந்த பரிசுத்தமான தண்ணீரை நீ குடிப்பதால் உனக்குத் துன்பங்கள் வரும். உனக்குக் குழந்தை பெறுகிற பாக்கியம் கிடைக்காமல்போகும். ஒருவேளை நீ இப்பொழுது கருவுற்றவளாக இருந்தால் அக்குழந்தை மரித்துப்போகும். பிறகு உன் ஜனங்கள் உன்னை விலக்கி வைத்து, உன் மீது குற்றங்களைச் சுமத்துவார்கள்’ என்று கூறவேண்டும்.
“பிறகு கர்த்தருக்கு முன்பு ஒரு விசேஷ உறுதியளிக்கும்படி அப்பெண்ணிடம் ஆசாரியன் சொல்ல வேண்டும். பொய் சொன்னால் அவளுக்குத் தீமைகள் ஏற்படும் என்பதை அவள் உணரச் செய்ய வேண்டும். 22 நீ கேடு உண்டாக்கக் கூடிய தண்ணீரைக் குடிக்க வேண்டும். நீ பாவம் செய்திருந்தால், ‘உனக்குக் குழந்தை ஏற்படாமல் போகும். நீ கருவுற்றிருந்தால் அது பிறக்குமுன் மரித்துப்போகும்’ என்று ஆசாரியன் அப்பெண்ணிடம் கூறவேண்டும். அதற்கு அவள், ‘நீர் சொல்கிறபடி நான் செய்வேன்’ என்று கூற வேண்டும்.
23 “இந்த எச்சரிக்கைகளையெல்லாம் ஒரு நீண்டத் தோல் சுருளில் ஆசாரியன் எழுதி வைக்க வேண்டும். அதனைப் பிறகு பரிசுத்தத் தண்ணீரால் சிறிது கழுவ வேண்டும். 24 பின்னர் கேடு தருகிற அந்தத் தண்ணீரை அவள் குடிக்க வேண்டும். அதைக் குடித்ததும், அவள் பாவம் செய்தவளாக இருந்தால் அத்தண்ணீர் அவளுக்குப் பெருந்துன்பத்தைத் தரும்.
25 “பிறகு ஆசாரியன் அவள் கையில் உள்ள தானியக் காணிக்கையை வாங்கி அதனை கர்த்தரின் சமூகத்தில் தூக்கிப் பிடிக்க வேண்டும். பின் அதனைப் பலிபீடத்தில் வைக்க வேண்டும். 26 ஆசாரியன் அத்தானியப் பலியைக் கை நிறைய அள்ளி பலிபீடத்தின் நெருப்பில் போட்டு எரிந்துவிட வேண்டும். அதற்குப் பிறகு ஆசாரியன் அவள் தண்ணீரைக் குடிக்குமாறு கேட்டுக்கொள்ள வேண்டும். 27 அவள் தன் கணவனுக்கு எதிராகப் பாவம் செய்தவளாக இருந்தால், அந்த தண்ணீர் அவளுக்குப் பெருந்துன்பத்தை அளிக்கும். அத்தண்ணீர் அவள் உடம்புக்குள் சென்று அவளுக்குப் பெருந்துன்பத்தைக் கொடுக்கும். அவள் கருவிலுள்ள எந்தக் குழந்தையும், அது பிறக்கு முன்னரே மரித்துப்போகும். அவள் என்றென்றும் குழந்தை பெற முடியாமல் இருப்பாள். அவள் அவளது ஜனங்களின் மத்தியில் சபிக்கப்பட்டவளாக இருப்பாள். 28 ஆனால் அவள் தன் கணவனுக்கு எதிராகப் பாவம் செய்யாமல், சுத்தமானவளாக இருந்தால், ஆசாரியன் அவளைக் குற்றமற்றவள் என்று கூறுவான். பின் அவள் சாதாரணமானவளாக குழந்தைகளைப் பெறுவாள்.
29 “இதுவே பொறாமை அல்லது சந்தேகம் பற்றிய சட்டமாகும். ஒருத்தி ஒருவனுக்குத் திருமணத்தின் மூலம் மனைவியான பிறகு, அவனுக்கு எதிராகப் பாவம் செய்தால், நீங்கள் இதையே செய்ய வேண்டும். 30 ஒரு கணவன் தன் மனைவி மீது பொறாமை கொண்டு அவளைச் சந்தேகப்பட்டாலும், அவன் இந்தப் பரிகாரத்தையே செய்ய வேண்டும். ஆசாரியன் அந்தப் பெண்ணை கர்த்தரின் முன்னிலையில் நிற்கச் செய்து இவற்றையெல்லாம் செய்ய வேண்டும். இதுதான் சட்டம். 31 அவள் தவறினிமித்தம் அவள் கணவனுக்கு எதுவும் நேரிடாது. ஆனால் அந்தப் பெண்ணோ தன் பாவத்தினிமித்தம் துன்பப்படுவாள்” என்று கூறினார்.
எதுதூன் என்னும் தலைவனுக்கு தாவீதின் பாடல்
39 நான், “நான் கூறும் காரியங்களில் கவனமாக இருப்பேன்.
என் நாவினால் நான் பாவம் செய்யாதபடி நான் தீய ஜனங்களின் அருகே இருக்கையில் வாய்மூடி மௌனமாக இருப்பேன்” என்றேன்.
2 நான் பேச மறுத்தேன்.
நான் எதையும் கூறவில்லை.
ஆனால் உண்மையில் கலங்கிப் போனேன்.
3 நான் மிகவும் கோபமடைந்தேன்.
அதை நினைக்கும்போதெல்லாம் என் கோபம் பெருகியபடியால், நான் ஏதோ கூறினேன்.
4 கர்த்தாவே, எனக்கு என்ன நேரிடும்?
எத்தனை காலம் நான் வாழ்வேன் என எனக்குச் சொல்லும்.
என் ஆயுள் எவ்வளவு குறுகியதென எனக்குத் தெரியப்படுத்தும்.
5 கர்த்தாவே, எனக்கு அற்ப ஆயுளைக் கொடுத்தீர்.
என் ஆயுள் உமக்குப் பொருட்டல்ல.
ஒவ்வொருவனின் ஆயுளும் மேகத்தைப் போன்றது.
ஒருவனும் நிரந்தரமாக வாழ்வதில்லை!
6 நாம் வாழும் வாழ்க்கை கண்ணாடியில் காணும் தோற்றத்தைப் போன்றது.
நமது தொல்லைகளுக்குக் காரணமேதுமில்லை.
நாம் பொருள்களைச் சேர்த்து வைக்கிறோம்.
ஆனால் யார் அதை அனுபவிப்பாரென்பதை நாம் அறியோம்.
7 எனவே, ஆண்டவரே, நான் வேறு எதிலும் நம்பிக்கை வைக்கவில்லை.
நீரே என் நம்பிக்கை!
8 கர்த்தாவே, நான் செய்த தீய செயல்களிலிருந்து என்னைக் காப்பாற்றும்.
ஒரு துன்மார்க்கனைப் போல நான் நடத்தப்பட அனுமதியாதிரும்.
9 நான் என் வாயைத் திறந்து, எதையும் கூறப்போவதில்லை.
கர்த்தாவே, செய்ய வேண்டியதை நீர் செய்தீர்.
10 தேவனே, என்னைத் தண்டிப்பதை நிறுத்தும்.
நீர் நிறுத்தாவிட்டால் நான் அழிந்துபோவேன்.
11 கர்த்தாவே, ஜனங்கள் தவறு செய்வதனால் நீர் தண்டிக்கிறீர்.
நேர்மையான வாழ்க்கை வாழ போதிக்கிறீர்.
பூச்சி துணியை அரிப்பதுபோல் ஜனங்கள் நேசிக்கிறவற்றை அழிக்கிறீர்.
எங்களுடைய வாழ்க்கை விரைவில் மறையும் சிறு மேகம் போன்றது.
12 கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும்.
நான் உம்மை நோக்கிக் கூப்பிடும் வார்த்தைகளைக் கவனியும்.
என் கண்ணீரைப் பாரும்.
உம்மோடு வாழ்க்கையைத் தாண்டிச் செல்கிற ஒரு பயணியாகவே நான் இருக்கிறேன்.
என் முற்பிதாக்களைப்போல சில காலம் மட்டுமே இங்கு நான் வாழ்கிறேன்.
13 கர்த்தாவே, என்னிடம் பொருமையாயிரும்,
நான் மரிக்கும் முன்பு மகிழ்ச்சியாக இருக்கட்டும்.
அவள் பேசுகிறாள்
3 இரவில் என் படுக்கைமேல்
நான் நேசருக்காகக் காத்திருக்கிறேன்.
நான் அவருக்காக எதிர்பார்த்திருந்தேன்.
ஆனால் என்னால் அவரைக் கண்டுபிடிக்க இயலவில்லை.
2 இப்போது எழுந்திருந்து
நான் நகரைச் சுற்றி வருவேன்.
அங்குள்ள வீதிகளிலும் சந்துகளிலும்
என் நேசரைத் தேடுவேன்.
நான் அவருக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன்.
ஆனால் என்னால் அவரைக் காணமுடியவில்லை.
3 நகர காவலர்கள் என்னைக் கண்டார்கள்.
நான் அவர்களிடம், “எனது நேசரைக் கண்டீர்களா?” எனக் கேட்டேன்.
4 காவலர்கள் என்னைவிட்டுப் போனதும்,
நான் என் நேசரைக் கண்டுபிடித்தேன்.
அவரைப் பற்றிக்கொண்டேன்.
என் தாய் வீட்டில் என்னைப் பெற்றெடுத்த, என் தாயின் அறைக்கு அவரை நான் அழைத்துச் செல்லும்வரை நான் அவரைப் போகவிடவில்லை.
அவள் பெண்களோடு பேசுகிறாள்
5 எருசலேமின் பெண்களே, நான் தயாராகும்வரை,
என் அன்பை விழிக்கச் செய்து எழுப்பாமலிருக்க மான்களின் மீதும் மான்குட்டிகளின் மீதும் வாக்குறுதி கொடுங்கள்.
அவனும் அவனது மணப்பெண்ணும்
6 பெரும் ஜனங்கள் கூட்டத்தோடு
வனாந்தரத்திலிருந்து வருகின்ற அந்தப் பெண் யார்?
மேகங்களின் கூட்டத்தைப்போல வெள்ளைப் போளத்திலும்,
சாம்பிராணியிலும், சகல நறுமணத்திலும்,
வரும் புகைபோல அவர்களுக்குப் பின்னால் புழுதி எழும்புகிறது.
7 பார், சாலொமோனின் இந்தப் பல்லக்கு இஸ்ரவேலின் பலம்வாய்ந்த
60 வீரர்கள் அதனைச் சுற்றிப் பாதுகாத்து நிற்கிறார்கள்.
8 அவர்கள் அனைவரும் போர்ப் பயிற்சி பெற்றவர்கள்.
அவர்களின் இடுப்பில் வாள்கள் உள்ளன.
இரவில் எந்த ஆபத்துக்கும் தயாராக உள்ளனர்.
9 சாலொமோன் அரசன் தனக்காக ஒரு பல்லக்கு செய்திருக்கிறான்.
அதற்கான மரம் லீபனோனில் இருந்து கொண்டுவரப்பட்டது.
10 அதன் தூண்கள் வெள்ளியால் ஆனது.
அதன் இருக்கை நீலங்கலந்த சிவப்பு நிறமான துணியால் மூடப்பட்டிருந்தது.
எருசலேமின் பெண்கள் அதன் உட்பகுதியை மிகப் பிரியத்தோடு அன்பால் அலங்கரித்திருக்கிறார்கள்.
11 சீயோனின் பெண்களே! வெளியே வாருங்கள்.
சாலொமோன் அரசனைப் பாருங்கள்.
திருமண நாளில் அவனது தலைமேல் அவன் தாய் அணிவித்த கிரீடத்தை பாருங்கள்.
அந்த நாளில் அவன் மிகுந்த சந்தோஷமாய் இருந்தான்.
இயேசு மோசேயை விட பெரியவர்
3 எனவே, நீங்கள் அனைவரும் இயேசுவைப் பற்றி சிந்தனை செய்ய வேண்டும். தேவன் இயேசுவை நம்மிடம் அனுப்பினார். அவர் நம் விசுவாசத்தின் பிரதானஆசாரியர் ஆவார். எனது பரிசுத்தமான சகோதர சகோதரிகளே! நான் இதை உங்களுக்காகக் கூறுகிறேன். நீங்கள் தேவனால் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். 2 தேவன் இயேசுவை நம்மிடம் அனுப்பி நமது பிரதான ஆசாரியர் ஆக்கினார். மோசே போன்று உண்மையுள்ளவராய் முழுக்குடும்பத்தின் பொறுப்பும் இயேசுவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. 3 ஒருவன் ஒரு வீட்டைக் கட்டும்போது மக்கள் அந்த வீட்டை விட மனிதனையே பெரிதும் மதிப்பர். இதேபோல, மோசேயைவிட அதிக மரியாதைக்கு இயேசு தகுதியானவராக இருக்கிறார். 4 தேவன் எல்லாவற்றையும் படைக்கிறார் எனினும் ஒவ்வொரு வீடும் யாரோ ஒருவனால் கட்டப்படுகிறது. 5 மோசே தேவனுடைய வீட்டில் ஒரு பணியாளைப் போன்று உண்மையுள்ளவனாயிருந்தான். எதிர்காலத்தில் சொல்வதைப் பற்றி அவன் சொன்னான். 6 ஆனால் ஒரு மகனைப் போல தேவனுடைய குடும்பத்தை ஆள்வதில் இயேசு உண்மையுள்ளவராயிருக்கிறார். நம்மிடமுள்ள மாபெரும் நம்பிக்கையினைத் தொடர்ந்து உறுதிப்படுத்தி மேன்மையாக எண்ணினால், விசுவாசிகளாகிய நாம் தேவனுடைய குடும்பத்தவர்களாயிருப்போம்.
நாம் தேவனைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்
7 பரிசுத்த ஆவியானவர் சொல்வது போல்,
“இன்று நீங்கள் தேவனுடைய சத்தத்தைக் கேட்டால்,
8 வனாந்திரத்தில் நீங்கள் தேவனைச் சோதித்தபோது, தேவனுக்கு எதிராக நீங்கள்
கலகம் செய்த கடந்த காலத்தைப் போல உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர்கள்.
9 நாற்பது வருடங்களாக வனாந்திரத்தில் நான் செய்ததை உங்கள் மக்கள் பார்த்தார்கள்.
ஆனால் அவர்கள் என்னையும் என் பொறுமையையும் சோதித்தனர்.
10 எனவே நான் அவர்களிடம் கோபம் கொண்டேன்.
‘அம்மக்களின் சிந்தனைகள் எப்போதும் தவறாகவே இருக்கின்றன.
அம்மக்கள் என் வழிகளை எப்போதும் புரிந்துகொண்டதில்லை’ என்று நான் சொன்னேன்.
11 எனவே நான் கோபத்தோடு, ‘அவர்கள் ஒருபோதும் எனது இளைப்பாறுதலுக்குள்
நுழைய முடியாது’ என்று ஆணையிட்டேன்.” (A)
12 எனவே சகோதர சகோதரிகளே! பாவம் நிறைந்தவராகவும், ஜீவனுள்ள தேவனிடமிருந்து விலகுகிற நம்பிக்கையற்ற இருதயமுள்ளோராகவும் உங்களில் யாரும் இல்லாதபடி கவனமாயிருங்கள். 13 ஆனால் ஒவ்வொரு நாளும் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள். “இன்று” எனப்படும் நிலை இருக்கிறபோதே இதைச் செய்யுங்கள். உங்களில் யாரும் பாவத்தால் முட்டாளாக்கப்படாதிருக்கவும் உறுதியாக இருக்கவும் இதைச் செய்யுங்கள். 14 இது எதற்காக? தொடக்கத்தில் நாம் கொண்டிருந்த நம்பிக்கையைத் தொடர்ந்து உறுதியாய் பற்றிக்கொண்டிருப்போமானால் நாம் அனைவரும் கிறிஸ்துவுடன் பங்கு உள்ளவர்களாக முடியும். 15 இதைத் தான்,
“இன்று நீங்கள் தேவனுடைய சத்தத்தைக கேட்டால், தேவனுக்கு எதிராக நீங்கள்
கலகம் செய்த கடந்த காலத்தைப் போல உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர்கள்” (B)
என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டிருக்கிறது.
16 யார் தேவனுடைய செய்தியைக் கேட்டு அவருக்கு எதிராக மாறினார்கள்? எகிப்திலிருந்து மோசேயால் வழிநடத்தப்பட்டவர்கள் அனைவரும் அப்படியே இருந்தார்கள். 17 மேலும் நாற்பது வருடங்களாக தேவன் யார் மீது கோபம் கொண்டார்? பாவம் செய்தவர்கள் மீது அல்லவா? அவர்களனைவரும் வனாந்திரத்திலேயே மடிந்து போனார்கள். 18 எனது இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்க முடியாது என்று யாரிடம் தேவன் கூறினார்? அவருக்குக் கீழ்ப்படியாத மக்களிடம் மட்டும் தானே கூறினார். 19 எனவே, அந்த மக்கள் தேவனுடைய இளைப்பாறுதலுக்குள் நுழைய முடியாது என்றார். ஏன்? அவர்கள் விசுவாசம் உடையவர்களாக இருக்கவில்லை.
2008 by World Bible Translation Center