M’Cheyne Bible Reading Plan
இறைச்சி உண்பது பற்றிய விதிகள்
11 கர்த்தர் மோசேயிடமும், ஆரோனிடமும், 2 “இஸ்ரவேல் ஜனங்களிடம் நீங்கள் கூற வேண்டியதாவது: நீங்கள் உண்ணத்தக்க மிருகங்கள் பின்வருவனவாகும், 3 இரண்டாகப் பிளந்த குளம்புடைய மற்றும் அசைபோடும் மிருகங்களின் இறைச்சியை உண்ணலாம்.
4-6 “சில மிருகங்கள் அசைபோடும். ஆனால் அவற்றுக்குப் பிளந்த குளம்புகள்Ԕஇருக்காது. அவற்றை நீங்கள் உண்ணக் கூடாது. ஒட்டகம், குழிமுயல், முயல் ஆகிய மிருகங்கள் அவ்வகையைச் சார்ந்தவை. அவை தீட்டு உள்ளவை. 7 இன்னும் சில மிருகங்களுக்குக் குளம்புகள் விரிந்திருக்கும். ஆனால் அசை போடாது. அவற்றையும் நீங்கள் உண்ணக் கூடாது. பன்றிகள் இத்தகையவை. எனவே இவை தீட்டுள்ளவை. 8 அவற்றின் இறைச்சியை உண்ணாதீர்கள்! அவற்றின் பிணத்தையும் தொடாதீர்கள்! அவை உங்களுக்குத் தீட்டுள்ளவை!
கடல் உணவைப்பற்றிய விதிகள்
9 “சில மிருகங்கள் கடல் தண்ணீரிலோ, ஆற்று தண்ணீரிலோ வாழ்ந்து அவற்றுக்குச் செதில்களும், சிறகுகளும் இருந்தால் அவற்றை நீங்கள் உண்ணலாம். 10-11 ஆனால் சில மிருகங்கள் கடல் தண்ணீரிலோ, ஆற்று தண்ணீரிலோ, வாழ்ந்தும் அவற்றுக்குச் செதில்களும் சிறகுகளும் இல்லாவிட்டால் அவற்றை உண்ணக் கூடாது. கர்த்தர் இத்தகைய மிருகங்கள் உண்பதற்குத் தகுந்தவையல்ல என்கிறார். இவற்றின் இறைச்சியை உண்ணாதீர்கள். இவற்றின் பிணத்தைத் தொடவும் கூடாது. 12 எனவே தண்ணீரில் வாழ்ந்தும் செதில்களும், சிறகுகளும் இல்லாத மிருகங்களை தேவன் சொன்னபடி உண்ணத் தகாதவை என்று கருதுங்கள்.
உண்ணத் தகாத பறவைகள்
13 “தேவன் உண்ணத்தகாத மிருகங்களைப்பற்றி சொன்னது போலவே உண்ணத்தகாத பறவைகளைப்பற்றியும் கூறியிருக்கிறார். அதாவது கழுகு, கருடன், கடலுராஞ்சி, 14 பருந்து, வல்லூறு வகைகள், 15 காக வகைகள், 16 நெருப்புக் கோழி, கூகை, செம்புகம், டேகை, 17 ஆந்தைகள், நீர்க்காகம், கோட்டான், 18 நாரை, கூழக்கடா, குருகு, 19 கொக்கு, ராஜாளி வகைகள், புழுக்கொத்தி, வௌவால் ஆகியவற்றை நீங்கள் உண்ணக் கூடாது.
உண்ணத்தக்க பூச்சிகள் பற்றிய விதிகள்
20 “சிறகும் கால்களும் கொண்டு ஊர்ந்து செல்லும் பூச்சிகளை உண்ணக்கூடாது என்று தேவன் கட்டளையிட்டிருக்கிறார். 21 ஆனால் நீங்கள் தரையிலே தாவுவதற்கேற்ற வகையில் கால்களுக்கு மேல் தொடைகளைக் கொண்டவற்றை உண்ணலாம். 22 வெட்டுக்கிளி வகைகளையும், சோலையாம் என்னும் கிளி வகைகளையும் அர்கொல், ஆகாபு என்னும் கிளி வகைகளையும் நீங்கள் உண்ணலாம்.
23 “ஆனால் சிறகுகளும் கால்களும் கொண்டு ஊர்ந்து செல்லும் பூச்சிகளை, கர்த்தர் உண்ணக் கூடாது என்றார். 24 அப்பூச்சிகள் உங்களைத் தீட்டுக்குள்ளாக்கும். எவராவது இத்தகையவற்றின் பிணத்தைத் தொட்டாலும் மாலைவரை தீட்டுள்ளவர்களாவர். 25 எவராவது இத்தகையவற்றின் பிணத்தைத் தொட்டு எடுத்தால் அவர்கள் தங்கள் ஆடைகளை துவைக்க வேண்டும். அவர்கள் மாலைவரை தீட்டாக இருப்பார்கள்.
மிருகங்களைப்பற்றி மேலும் சில விதிகள்
26-27 “சில மிருகங்களுக்குப் பிளந்த குளம்புகள் இருக்கும். ஆனால் அவை சரியாக இரண்டாக பிளந்திருக்காது. சில மிருகங்கள் அசைபோடாது. சில மிருகங்கள் குளம்புகளால் நடக்காமல் உள்ளங்கால்களால் நடக்கும். இவை அனைத்தும் தீட்டுள்ளவை. அவற்றைத் தொடுகிற எவரும் மாலைவரை தீட்டுள்ளவர்களாக இருப்பார்கள். 28 எவராவது இவற்றின் சடலத்தை எடுத்தால் அவர்கள் தம் ஆடைகளைத் துவைக்க வேண்டும். அவர்களும் மாலைவரை தீட்டு உள்ளவர்களாக இருப்பார்கள். அம்மிருகங்கள் உங்களுக்கு தீட்டானவை.
ஊர்ந்து செல்லும் பிராணிகள் பற்றிய விதிகள்
29 “பெருச்சாளி, எலி, பெரிய பல்லி வகைகள், 30 உடும்பு, அழுங்கு, ஓணான், பல்லி, பச்சோந்தி 31 ஆகிய ஊர்ந்து செல்லும் பிராணிகள் அனைத்தும் உங்களுக்குத் தீட்டானவை. இவற்றின் செத்த உடலைத் தொடுகிற எவரும் மாலைவரை தீட்டுள்ளவர்களாக இருப்பார்கள்.
தீட்டான மிருகங்களைப்பற்றிய விதிகள்
32 “மேற்சொன்ன தீட்டான மிருகங்கள் செத்து எதன் மேலாவது விழுந்தாலும் அது தீட்டாகும். அவை மரப்பொருள், ஆடை, தோல், துக்க நேரத்திற்குரிய ஆடை, வேலைக்குரிய கருவி என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். எதுவானாலும் உடனடியாக அதை தண்ணீரால் கழுவ வேண்டும். அது மாலைவரை தீட்டாக இருக்கும். அதன் பிறகே அவை தீட்டு கழிந்து சுத்தமாகும். 33 அவற்றில் ஒன்று மண்பாத்திரத்தில் விழுந்தால், பாத்திரமும் அதில் உள்ள பொருளும் தீட்டாகிவிடும். எனவே அதனை உடைத்துப் போட வேண்டும். 34 தீட்டான மண்பாத்திரத்தில் இருந்து தண்ணீர் விழுந்து உணவுப் பொருட்கள் மேல் படுமேயானால், அவ்வுணவும் தீட்டாகிவிடும். 35 மரித்து தீட்டாகிப் போன மிருகத்தின் உடலானது எதன் மேலாவது விழுமானால், அதுவும் தீட்டாகிப்போகும். அது களிமண்ணாலான அடுப்பாகவோ, அல்லது மண் தொட்டியாகவோ இருக்கலாம், அவற்றை உடைத்துப் போட வேண்டும். அவை உங்களுக்குத் தீட்டாய் இருக்கட்டும்.
36 “நீரூற்றும், தண்ணீருள்ள கிணறும் சுத்தமாக இருக்கும். ஆனால் எவராவது தீட்டான மிருகத்தின் செத்த உடலைத் தொட்டால் அவர்களும் தீட்டாகிவிடுவார்கள். 37 தீட்டான மிருகங்களின் செத்த உடலானது விதைகளின் மேல் விழுந்தால் அவை தீட்டாகாது. 38 ஆனால் தீட்டான மிருகங்களின் செத்த உடலின் பாகங்கள் தண்ணீர் பட்ட விதையின்மேல் பட்டால் அது உங்களுக்குத் தீட்டாயிருக்கும்.
39 “உங்களது உணவுக்கான ஒரு மிருகம் செத்தால், அதன் உடலைத் தொடுகிறவன் மாலைவரை தீட்டாக இருப்பான். 40 அதன் இறைச்சியைத் தின்றவன் தன் ஆடைகளைத் துவைக்க வேண்டும். அவன் மாலைவரை தீட்டுள்ளவனாக இருப்பான். அம்மிருகங்களின் செத்த உடலைத் தூக்குகிறவன் தன் ஆடைகளைத் துவைக்க வேண்டும். இவனும் மாலைவரை தீட்டுள்ளவனாக இருப்பான்.
41 “தரையில் ஊர்ந்து செல்லுகிற மிருகங்களை கர்த்தர் உண்ணத்தகாதவை என்று கூறியுள்ளார். நீங்கள் அவற்றை உண்ணக் கூடாது. 42 தரையில் ஊர்ந்து செல்லும் சகல மிருகங்களிலும் வயிற்றினால் நகர்ந்து செல்லுகின்றவற்றையும் நாலு கால்களால் நடமாடுகின்றவற்றையும் பற்பல கால்கள் உள்ளவற்றையும் உண்ண வேண்டாம். அவை தீட்டுள்ளவை. 43 அவை உங்களைத் தீட்டுப் பண்ணாமல் பார்த்துக்கொள்ளுங்கள். 44 ஏனென்றால் நான் தேவனாகிய கர்த்தர். நான் பரிசுத்தமானவர் நீங்களும் உங்களைப் பரிசுத்தமானவர்களாக வைத்துக்கொள்ளுங்கள். ஊர்வனவற்றால் உங்களைத் தீட்டாக்கிக்கொள்ளாதீர்கள். 45 நான் உங்களை எகிப்திலிருந்து அழைத்து வந்தேன். நான் இதைச் செய்ததால் நீங்கள் சிறப்பான ஜனங்களாக விளங்குகிறீர்கள். உங்களது தேவனாகிய நான் பரிசுத்தமானவராக இருக்கிறேன். நீங்களும் பரிசுத்தமுள்ளவர்களாக இருங்கள்” என்றார்.
46 இவை அனைத்தும் மிருகம், பறவை, ஊர்வன பற்றிய விதிகள் ஆகும். இவை அனைத்தும் கடலிலும், தரையிலும் உள்ள மிருகங்களைப்பற்றியவை. 47 இதன் மூலம் ஜனங்கள் தீட்டுள்ள மிருகங்களுக்கும் தீட்டில்லாத மிருகங்களுக்கும் உள்ள வேறு பாட்டைக் கண்டுகொள்ளலாம். அதோடு உண்ணத் தக்க மிருகம் எது, உண்ணத்தகாத மிருகம் எது என்றும் அறிந்துகொள்ளலாம்.
புதிய தாய்மார்களுக்கு விதிகள்
12 மேலும் கர்த்தர் மோசேயிடம், 2 “இஸ்ரவேல் ஜனங்களிடம் நீ கூற வேண்டியதாவது: ஒரு பெண், ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றிருந்தால், அவள் ஏழு நாட்களுக்குத் தீட்டுள்ளவளாக இருப்பாள். இது மாதவிலக்காக இருக்கும் நாட்களைப் போல் இருக்கும். 3 எட்டாவது நாள் அந்த குழந்தை விருத்தசேதனம் பண்ணப்பட வேண்டும். 4 பிறகு அவள் முப்பத்துமூன்று நாட்கள் இரத்த சுத்திகரிப்பு நிலையில் இருக்க வேண்டும். அந்நாட்களில் அவள் பரிசுத்தமான எந்தப் பொருட்களையும் தொடவோ, பரிசுத்தமான எந்த இடத்திற்குள்ளும் நுழையவோ கூடாது. 5 அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தால் அவள் இரு வாரங்களுக்குத் தீட்டாக இருப்பாள். அந்நாட்கள் அவளுக்கு மாத விலக்கான நாட்களைப் போன்றே கருதப்படும். இரத்த சுத்திகரிப்புக்கு அவளுக்கு அறுபத்தாறு நாட்கள் தேவைப்படும்.
6 “ஒரு பெண், ஆண் அல்லது பெண் பிள்ளையைப் பெற்றதற்காக அவளுடைய சுத்திகரிப்பின் நாட்கள் முடிந்தபின் ஆசரிப்புக் கூடாரத்திற்குச் சிறப்பான பலிகளைக் கொண்டு வர வேண்டும். அவள் ஆசாரியனிடம் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் பலிகளை வழங்க வேண்டும். அவள் ஓராண்டு நிறைந்த ஆட்டுக் குட்டியை தகன பலிக்காகவும், ஒரு புறாக்குஞ்சு அல்லது காட்டுப்புறாவைப் பாவப்பரிகார பலிக்காகவும் கொண்டு வர வேண்டும். 7-8 ஒரு பெண்ணுக்கு ஆட்டுக் குட்டியைக் கொடுக்க முடியாவிட்டால் அவள் இரண்டு புறாக்களையாவது அல்லது இரண்டு புறாக் குஞ்சுகளையாவது கொண்டு வரலாம். இவற்றில் ஒரு புறா தகன பலிக்காகவும் இன்னொரு புறா பாவப்பரிகார பலிக்காகவும் பயன்படும். ஆசாரியன் இவற்றை கர்த்தரின் சந்நிதானத்தில் பலியிட வேண்டும். இதன் மூலம் ஆசாரியன் அவளுக்காக பாவ நிவாரணம் செய்ய வேண்டும். அவள் அப்படியே சுத்தமாவாள். இவையே ஆண் அல்லது பெண் குழந்தைப் பெற்ற ஒரு புதிய தாய்க்குரிய விதிகள் ஆகும்” என்று கூறினார்.
இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்
13 கர்த்தாவே, எத்தனை காலம் என்னை மறப்பீர்?
என்றென்றும் மறந்திருப்பீரோ? என்னை ஏற்க எத்தனைக் காலம் மறுப்பீர்?
2 எவ்வளவு காலத்துக்கு நீர் என்னை மறந்திருப்பீர்.
என் இருதயத்தில் எத்தனைக் காலம் துக்கம் அனுபவிக்கட்டும்?
எத்தனைக் காலம் என் பகைவன் என்னை வெற்றி கொள்வான்?
3 எனது தேவனாகிய கர்த்தாவே, என்னைப் பாரும்!
எனக்குப் பதில் தாரும்! என் பதிலை நான் அறியட்டும்!
இல்லையெனில் நான் மடிவேன்.
4 அது நடந்தால் என் பகைவன், “நான் அவனை வென்றேன்” என்பான்.
என்னைத் தோற்கடித்தால் என் பகைவன் மகிழ்வான்.
5 கர்த்தாவே, எனக்கு உதவும் உம் அன்பில் நான் நம்பிக்கை வைத்தேன்.
நீர் என்னைக் காத்து என்னை மகிழச் செய்தீர்.
6 கர்த்தர் நல்லதை எனக்குச் செய்ததால் சந்தோஷப் பாடலை கர்த்தருக்காய் பாடுவேன்.
தாவீது இராகத் தலைவனுக்கு அளித்த பாடல்
14 “தேவன் இல்லை” என்று மூடன் தன் உள்ளத்தில் சொல்லிக்கொள்வான்.
கொடிய, சீர்கெட்ட காரியங்களை மூடர்கள் செய்வார்கள்.
அவர்களுள் ஒருவனும் நல்லதைச் செய்வதில்லை.
2 கர்த்தர் பரலோகத்திலிருந்து கீழே ஜனங்களைப் பார்ப்பார்.
ஞானவானைப் பார்க்க கர்த்தர் முயன்றார்.
(ஞானமுள்ளவன் தேவனிடம் உதவி கேட்பான்.)
3 ஆனால் எல்லோரும் தேவனைவிட்டு விலகிப் போனார்கள்.
எல்லா ஜனங்களும் தீயோராய் மாறினார்கள். ஒருவன் கூட நல்லதைச் செய்யவில்லை.
4 தீயோர் என் ஜனங்களை அழித்தனர்.
அத்தீயோர் தேவனை அறியார்கள்.
தீயோருக்கு மிகுதியாய் உணவு உண்டு.
கர்த்தரை அவர்கள் ஆராதிப்பதில்லை.
5-6 ஏழையின் அறிவுரையை அத்தீயோர் கேளார்கள்.
ஏனெனில் ஏழை தேவனை நம்பி வாழ்வான்.
தேவன் நல்லவர்களோடு இருப்பார்.
எனவே தீயோர் மிகவும் அச்சம் கொள்வார்கள்.
7 சீயோன் (மலை) மேல் உள்ளவரே இஸ்ரவேலைக் காப்பாற்ற முடியும்.
கர்த்தர் தாமே இஸ்ரவேலைக் காப்பவர்!
கர்த்தருடைய ஜனங்கள் அழைத்துச் செல்லப்பட்டுச் சிறைக் கைதிகளாக்கப்பட்டனர்.
ஆனால் கர்த்தரோ தம் ஜனங்களைத் திரும்ப அழைத்து வருவார்.
அப்போது யாக்கோபுக்கு (இஸ்ரவேல்) மிகவும் மகிழ்ச்சியுண்டாகும்.
அறிவற்றவர்களைப்பற்றிய ஞான மொழிகள்
26 கோடைக்காலத்தில் பனி விழக்கூடாது. அறுவடை காலத்தில் மழை பெய்யக்கூடாது. அது போலவே ஜனங்கள் அறிவற்றவர்களைப் பெருமைப்படுத்தக் கூடாது.
2 ஒருவன் உனக்குக் கேடு ஏற்படும்படி சபித்தால் அதற்காகக் கவலைப்படாதே. நீ தவறு செய்யாமல் இருந்தால் உனக்கு எந்தக் கேடும் ஏற்படாது. அவர்களின் வார்த்தைகள் நிற்காமல் பறந்து செல்லும் தடுக்க முடியாத பறவைகளைப் போன்றிருக்கும்.
3 குதிரைக்கு ஒரு சவுக்கு வேண்டும். கழுதைக்குக் கடிவாளம் வேண்டும். முட்டாளுக்கு அடிகொடுக்க வேண்டும்.
4 இங்கே ஒரு இக்கட்டான சூழ்நிலை. ஒரு முட்டாள் மூடத்தனமான கேள்வியைக் கேட்டால் நீயும் ஒரு மூடத்தனமான பதிலைக்கொடுக்கவேண்டாம். ஏனென்றால் நீயும் முட்டாளைப்போன்று தோன்றுவாய். 5 ஆனால் ஒரு முட்டாள் ஒரு மூடத்தனமான கேள்வியைக் கேட்டால் நீயும் ஒரு மூடத்தனமான பதிலையே கூறவேண்டும். இல்லையெனில் அவன் தன்னை ஞானியாக நினைத்துக்கொள்வான்.
6 உனது செய்தியை ஒரு முட்டாள் எடுத்துச் செல்லும்படி அனுமதிக்காதே. நீ அவ்வாறு செய்தால் உனது காலை நீயே வெட்டிக்கொள்வது போன்றது. நீயே துன்பத்தைத் தேடிக்கொள்கிறாய்.
7 ஒரு முட்டாள் புத்திசாலித்தனத்தோடு பேச முயற்சிப்பது ஊனமான ஒருவன் நடக்க முயற்சிசெய்வது போன்றதாகும்.
8 ஒரு முட்டாளுக்குப் பெருமை சேர்ப்பது, கவணிலே கல்லைக் கட்டுவதுப் போல் இருக்கும்.
9 ஒரு முட்டாள் ஞானமுள்ள ஒன்றைச் சொல்ல முயல்வது ஒரு குடிகாரன் தன் கரத்திலுள்ள முள்ளை எடுக்க முயற்சி செய்வது போன்றதாகும்.
10 ஒரு முட்டாளையோ, அல்லது யாரோ ஒரு வழிப்போக்கனையோ வேலைக்கு வைத்துக்கொள்வது ஆபத்தானது. அவன் யாருக்குத் துன்பம் தருவான் என்பதைத் தீர்மானிக்க முடியாது.
11 ஒரு நாய் எதையாவது தின்னும், பிறகு அதை வாந்தி எடுக்கும், பின் அதனையே தின்னும். இது போலவே முட்டாள்களும் மூடத்தனத்தையே திரும்பத் திரும்பச் செய்வார்கள்.
12 ஞானமுள்ளவனாக ஒருவன் இல்லாமல் இருந்தும் தன்னை ஞானியாக நினைப்பது முட்டாளைவிட மோசமானது.
13 “என்னால் வீட்டைவிட்டுச் செல்ல முடியாது, தெருவில் சிங்கம் உள்ளது” என்று ஒரு சோம்பேறி கூறுகிறான்.
14 ஒரு சோம்பேறி கதவைப் போன்றவன். கதவு கீல் முனையில் அசைவதுபோன்று சோம்பேறியும் படுக்கையில் அசைந்துக்கொண்டு இருக்கிறான்.
15 சோம்பேறி தனது தட்டில் உள்ள உணவை வாயில் வைக்க முயலாமல் சோம்பேறித்தனமாக நடந்துக்கொள்கிறான்.
16 சோம்பேறி மிகுந்த புத்தியுள்ளவனாகத் தன்னை நினைத்துக்கொள்கிறான். தன் கருத்துக்களுக்கு சரியான காரணம் சொல்லும் ஏழுபேரைக் காட்டிலும் ஞானவானாகத் தன்னை நினைத்துக்கொள்கிறான்.
17 இரண்டுபேர் செய்யும் விவாதத்திற்கிடையில் சிக்கிக்கொள்வது மிகவும் ஆபத்தானது. இது தெருவில் போகும் நாயின் காதைப் பிடித்து இழுப்பது போன்றதாகும்.
18-19 ஒருவன் தந்திரமாக இன்னொருவனை வஞ்சித்துவிட்டு பிறகு வேடிக்கைக்காகச் செய்தேன் என்று கூறுவது தவறு. இது ஒரு பைத்தியகாரன் காற்றில் அம்பை எய்து யாரையாவது எதிர்பாராதவிதமாகக்கொன்று போடும் விபத்தைப் போன்றது.
20 நெருப்புக்கு விறகு இல்லாவிட்டால் அது அணைந்துப்போகும். இதுபோலவே வம்பு இல்லாவிட்டால் வாதங்களும் முடிந்துப்போகும்.
21 கரி நெருப்பை எரிய வைக்கிறது. விறகும் நெருப்பை எரிய வைக்கிறது. இது போலவே துன்பம் செய்கிறவர்கள் வாதங்களை விடாமல் வைத்துள்ளனர்.
22 ஜனங்கள் வம்புப்பேச்சை விரும்புவார்கள். அது அவர்களுக்கு நல்ல உணவு உண்பதைப்போல் இருக்கும்.
23 தீய திட்டங்களைச் சிலர் நல்ல வார்த்தைகளால் மூடி மறைத்து வைத்திருப்பார்கள். இது குறைந்த விலையுள்ள மண்பாத்திரத்தின் மீது வெள்ளியைப் பூசியதுபோன்று இருக்கும். 24 ஒரு தீயவன் தனது பேச்சின் மூலம் தன்னை நல்லவனைப்போன்று காட்டிக்கொள்ளலாம். ஆனால் அவன் தன் தீய திட்டங்களை தன் இருதயத்தில் மறைத்து வைக்கிறான். 25 அவன் சொல்லும் காரியங்கள் நலமாகத் தோன்றலாம். எனினும் அவனை நம்பவேண்டாம். அவனது மனம் முழுவதும் தீமையால் நிறைந்திருக்கும். 26 அவன் தனது தீய திட்டங்களை மென்மையான வார்த்தைகளால் மறைத்து வைத்திருக்கிறான். எனினும் அவனது கெட்டச் செயல்கள் முடிவில் ஜனங்கள் முன்பு வெளிப்பட்டுவிடும்.
27 ஒருவன் இன்னொருவனைத் தந்திரத்தால் வசப்படுத்த விரும்பினால் அவனே தந்திரத்திற்கு சிறையாவான். ஒருவன் இன்னொருவன் மீது கல்லை உருட்ட விரும்பினால் அவனே கல்லுக்கடியில் நசுங்கிப்போவான்.
28 பொய் சொல்லும் மனிதன் யாரைக் காயப்படுத்துகிறானோ அவரை வெறுக்கிறான். ஒருவன் அர்த்தமற்றவற்றைப் பேசினால் அவன் தன்னையே காயப்படுத்திக்கொள்கிறான்.
கர்த்தரின் வருகைக்காகத் தயாராகுங்கள்
5 சகோதர சகோதரிகளே, இப்பொழுது இவை நடக்கும் காலத்தையும் தேதியையும் எழுதத் தேவை இல்லை. 2 கர்த்தர் வரும் நாள் இரவில் திருடன் திடீரென்று வருவது போல் ஆச்சரியமாக இருக்கும் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். 3 “நாங்கள் சமாதானத்தோடும், பாதுகாப்போடும் இருக்கிறோம்” என்று மக்கள் சொல்வார்கள். அப்பொழுது அவர்களுக்கு அழிவு திடீரென வரும். அவ்வழிவு கர்ப்பவதியின் பிரசவ வேதனை போன்று திடீரென வரும். அவர்கள் தப்பமுடியாது.
4 ஆனால் நீங்கள் இருட்டில் வாழவில்லை. எனவே திருடனைப்போல அந்த நாள் உங்களுக்கு ஆச்சரியத்தைத் தராது. 5 நீங்கள் யாவரும் வெளிச்சத்தைச் சேர்ந்தவர்கள், நீங்கள் பகலுக்குரியவர்கள். நாம் இருளைச் சேர்ந்தவர்கள் இல்லை. நாம் இரவுக்குரியவர்களும் இல்லை. 6 எனவே நாம் ஏனைய மக்களைப்போன்று இருக்கக் கூடாது. நாம் தூங்கிக்கொண்டிருக்கக் கூடாது. விழிப்புடனும், சுயகட்டுப்பாட்டுடனும் இருக்கவேண்டும். 7 தூங்கும் மக்கள் இரவுப்பொழுதில் தூங்குவார்கள். குடித்து வெறிகொள்பவர்கள் இரவுப் பொழுதில் குடிப்பார்கள். 8 ஆனால் நாம் பகலுக்குரியவர்கள். எனவே நம்மை நாமே கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். நம்மைக் காத்துக்கொள்வதற்காக விசுவாசம், அன்பு என்னும் மார்புக் கவசத்தை அணிந்துகொள்வோம். நம் தலைக்கவசமாய் இட்சிப்பின் நம்பிக்கை அமையும்.
9 தேவன் தம் கோபத்தை நம்மேல் காட்டுவதற்காக நம்மைத் தேர்ந்தெடுக்கவில்லை. நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் இட்சிப்பு அடையவே தேர்ந்தெடுத்தார். 10 அவரோடு நாம் அனைவரும் இணைந்து வாழும்பொருட்டு, நமக்காக அவர் இறந்தார். எனவே, இயேசு வரும்போது, நாம் உயிருடன் இருக்கிறோமோ அல்லது இறந்துபோவோமா என்பது முக்கியமில்லை. 11 எனவே ஒருவருக்கொருவர் ஆறுதலாய் இருங்கள். மேலும் நீங்கள் செய்துகொண்டிருப்பது போல ஒருவரையொருவர் பலப்படுத்துங்கள்.
இறுதி அறிவிப்புகளும், வாழ்த்துக்களும்
12 சகோதர சகோதரிகளே! உங்களோடு கடுமையாய் உழைப்பவர்களுக்கு மதிப்பளியுங்கள். கர்த்தருக்குள் அவர்களே உங்கள் தலைவர்கள். ஆத்தும அளவில் அவர்களே உங்களுக்கு வழிகாட்டுகிறார்கள். 13 அவர்கள் செய்துகொண்டிருக்கிற செயலுக்காக அவர்களை அன்போடு மதியுங்கள்.
ஒருவருக்கொருவர் சமாதானமாய் வாழுங்கள். 14 சகோதர சகோதரிகளே! உழைக்காத மக்களை எச்சரிக்கை செய்யுங்கள் என்று கேட்டுக்கொள்கிறோம். அஞ்சுகிறவர்களை உற்சாகப்படுத்துங்கள். பலவீனமானவர்களுக்கு உதவுங்கள். எல்லாரிடமும் பொறுமையாய் இருங்கள். 15 ஒருவரும் தீமைக்குத் தீமை செய்யாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். ஒருவருக்கொருவர் எப்பொழுதும் நன்மை செய்துகொள்ளவும் எல்லாருக்கும் நன்மை செய்யவும் முயலுங்கள்.
16 எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருங்கள். 17 பிரார்த்தனை செய்வதை நிறுத்தாதீர்கள். 18 தேவனுக்கு எப்பொழுதும் நன்றி செலுத்துங்கள். இயேசு கிறிஸ்துவில் இதையே உங்களிடம் தேவன் விரும்புகிறார்.
19 பரிசுத்தாவியானவருக்கான வேலையை நிறுத்தாதீர்கள். 20 தீர்க்கதரிசனங்களை முக்கியமற்ற ஒன்றாக எண்ணாதீர்கள். 21 ஆனால் எல்லாவற்றையும் சோதித்து அறியுங்கள். நல்லவற்றை வைத்துக்கொள்ளுங்கள். 22 எல்லா வகையான தீமைகளில் இருந்தும் விலகி இருங்கள்.
23 சமாதானத்தின் தேவன்தாமே உங்களை முழுமையாகப் பரிசுத்தமாக்கும் பொருட்டு தேவனிடம் பிரார்த்தனை செய்கிறோம். நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வரும்போது உங்கள் ஆவி, ஆன்மா, சரீரம் முழுவதும் குற்றமில்லாததாய் இருக்கும்படி காக்கப்படுவதாக. 24 உங்களை அழைக்கிற தேவன் இவற்றை உங்களுக்குச் செய்வார். அவரை நம்புங்கள்.
25 சகோதர சகோதரிகளே! எங்களுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். 26 நீங்கள் சந்திக்கும்போது ஒருவரையொருவர் பரிசுத்தமாக முத்தமிட்டுக்கொள்ளுங்கள் 27 அனைத்து சகோதர சகோதரிகளிடமும் இந்த நிருபம் வாசிக்கப்பட வேண்டும் என்று உங்களுக்கு கர்த்தரின் அதிகாரத்தால் ஆணையிட்டுக் கூறுகிறேன். 28 நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களுடன் இருப்பதாக!
2008 by World Bible Translation Center