M’Cheyne Bible Reading Plan
அசம்பாவிதமான பல்வேறு பாவங்கள்
5 “ஒருவன் ஒரு எச்சரிக்கையைக் கேட்டாலோ அல்லது பிறரை எச்சரிக்க வேண்டியவைகளைப் பார்த்தாலோ கேட்டாலோ அதை மற்றவர்களுக்குச் சொல்லவேண்டும். தான் கண்டதையும் கேட்டதையும் மற்றவர்களுக்குச் சொல்லாவிட்டால், பிறகு அவன் தவறு செய்வதற்கான குற்ற உணர்வைப் பெறுவான்.
2 “ஒருவன் தூய்மையற்ற ஒன்றைத் தொட்டிருக்கலாம். அது காட்டுமிருகத்தின் இறந்து போன உடலாகக் கூட இருக்கலாம். அல்லது அது தரையில் ஊர்ந்து போகும் அசுத்தமான நாட்டு மிருகத்தின் உடலாக இருக்கலாம். அவற்றைத் தொட்டதற்கான உணர்வு அவனிடம் இல்லாமல் இருக்கலாம். எனினும் அதனால் அவன் தீட்டுக்குரியவனாய் இருக்கிறான்.
3 “ஒருவன் பல காரணங்களால் அசுத்தமானவற்றைத் தொட்டதற்கான தீட்டைப் பெற்றிருக்கலாம். ஒரு மனிதன் மனிதத் தீட்டுக்களில் ஏதாகிலும் ஒன்றை அவனை அறியாமல் மற்ற மனிதனிடமிருந்து தொட்டிருக்கலாம். அவன் அதனை அறிய வரும்போது, அவன் குற்றமுடையவனாகிறான்.
4 “ஒருவன் அவசரமாக ஏதோ ஒரு காரணத்திற்காக வாக்குறுதி கொடுக்கிறான். அது நன்மைக்குரியதாகவோ தீமைக்குரியதாகவோ இருக்கலாம். ஜனங்கள் பலவிதமான அவசர வாக்குறுதிகள் வழங்குகின்றனர். ஒருவன் இவ்வாறு செய்து மறந்தும் போகலாம், அதைக் காப்பாற்றாமலும் போகலாம். பிற்காலத்தில் தான் கொடுத்த வாக்குறுதிகளை நினைத்துப்பார்க்கும்போது குற்றவாளியாகிறான். ஏனெனில் அவ்வாக்குறுதிகளின்படி அவன் செய்யவில்லை. 5 ஒருவன் இப்படிப்பட்ட ஏதாவது ஒன்றில் குற்றம் உள்ளவனாகும்போது அவன் தான் செய்தது பாவம் என்று ஒத்துக்கொள்ள வேண்டும். 6 அவன் தான் செய்த பாவத்துக்குக் குற்ற நிவாரண பலியிடவேண்டும். அதற்காக அவன் பெண் ஆட்டினை அல்லது பெண் வெள்ளாட்டுக் குட்டியை கர்த்தருக்காகப் பாவநிவாரண பலியாகக் கொண்டு வரவேண்டும். பிறகு ஆசாரியன் அவனை பரிசுத்தமாக்குவதற்கான சடங்குகளைச் செய்து அவனது பாவத்தைப் போக்கி சுத்தமாக்குவான்.
7 “ஒருவேளை அவனால் ஆட்டுக் குட்டியைக் கொண்டுவர வசதியில்லாமல் போனால், அவன் கர்த்தருக்கு இரண்டு காட்டுப் புறாக்களையாவது அல்லது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது கொண்டுவரவேண்டும். இவை அவன் பாவத்திற்கான குற்றநிவாரண பலியாகும். அவற்றில் ஒன்றை பாவப்பரிகார பலியாகவும் மற்றொன்றை தகன பலியாகவும் படைக்க வேண்டும். 8 அவன் அவற்றை ஆசாரியனிடம் கொண்டு வரவேண்டும். ஆசாரியன் பாவப்பரிகார பலிக்கானதை முதலில் செலுத்துவான். அதன் தலையைக் கழுத்திலிருந்து கிள்ளுவான். அவன் அப்புறாவை இரண்டு துண்டாக்கக் கூடாது. 9 பாவப் பரிகாரப் பலியின் இரத்தத்தில் ஆசாரியன் கொஞ்சம் எடுத்து பலிபீடத்தின் பக்கத்திலே தெளித்து, மீதி இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிடுவான். இதுவே பாவப்பரிகார பலி ஆகும். 10 பின்பு இரண்டாவது புறாவை தகன பலிக்குரிய விதிகளின்படி காணிக்கையாகச் செலுத்த வேண்டும். இதன் மூலம் ஆசாரியன் அந்த மனிதன் செய்த பாவத்திலிருந்து அவனை விடுவித்து சுத்தப்படுத்துகிறான். தேவனும் அவனை மன்னித்துவிடுவார்.
11 “இரண்டு காட்டுப் புறாக்களையோ, இரண்டு புறாக்குஞ்சுகளையோ அவனால் கொண்டுவர வசதியில்லாமல் போனால் அவன் 8 கிண்ணங்கள் அளவு மிருதுவான மாவை எடுத்து வரவேண்டும். இதுவே பாவப்பரிகாரப் பலியாக இருப்பதால் அந்த மாவின் மேல் எண்ணெய் எதையும் ஊற்றவோ, அதன்மேல் எவ்விதமான சாம்பிராணியையும் போடவோ கூடாது. 12 அவன் அந்த மாவை ஆசாரியனிடத்தில் கொண்டு வரவேண்டும். அதில் ஆசாரியன் ஒரு கைப் பிடியளவு எடுக்கவேண்டும். அது ஞாபகப் பலியாக இருக்கும். மாவை ஆசாரியன் பலிபீடத்தின் மேல் எரித்துவிடுவான். இது நெருப்பினால் கர்த்தருக்கென்று கொடுக்கும் காணிக்கையாகும். இது பாவப்பரிகாரப் பலியாகும். 13 இவ்வாறு ஆசாரியன் அம்மனிதனை சுத்தபடுத்துவான். அப்போது தேவன் அவனுக்கு மன்னிப்பார். மீதி மாவானது தானியக் காணிக்கையைப் போல ஆசாரியனுக்குச் சேரும்” என்றார்.
14 மேலும் கர்த்தர் மோசேயிடம், 15 “கர்த்தருக்குரிய பரிசுத்தமானவற்றில் ஒருவன் அசம்பாவிதமாக தவறு செய்துவிட்டால் அவன் ஒரு குறையற்ற ஆட்டுக்குட்டியைக் கொண்டு வரவேண்டும். அது கர்த்தருக்கு அவன் கொடுக்கும் குற்ற நிவாரண பலியாகும். அதிகாரப் பூர்வமான அளவைப் பயன்படுத்தி ஆட்டின் விலையை நிர்ணயிக்க வேண்டும். 16 அந்த மனிதன் தான் செய்த பாவத்திற்குரிய விலையைச் செலுத்த வேண்டும். வாக்குறுதியளித்த தொகையோடு, அதன் மதிப்பில் ஐந்தில் ஒரு பகுதியையும் கூட்டி, மொத்தப் பணத்தை ஆசாரியன் கையில் கொடுக்க வேண்டும். இம்முறையில் குற்ற நிவாரண பலியின் மூலம் அம்மனிதனை ஆசாரியன் சுத்தமாக்குகிறான். தேவனும் அம்மனிதனை மன்னிப்பார்.
17 “செய்யக்கூடாது என்று கர்த்தர் சொன்னவற்றில் ஏதாவது ஒன்றைச் செய்தால் ஒருவன் பாவியாகிறான். அவன் அறியாமல் செய்தாலும் அது பாவமே. அவன் குற்றவாளியாகிறான். அவன் தன் பாவத்தின் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். 18 அவன் ஆசாரியனிடம் ஒரு ஆட்டுக்குட்டியைக் கொண்டு வரவேண்டும். எவ்வித குறைகளும் இல்லாததாக அந்த ஆடு இருக்கவேண்டும். அந்த ஆட்டுக்குட்டி குற்ற நிவாரண பலி ஆகும். இந்த முறையில் ஆசாரியன் அவன் அறியாமல் செய்த பாவத்திலிருந்து அவனை சுத்தமாக்குவான், தேவனும் அவனை மன்னித்துவிடுவார். 19 ஒருவன் பாவம் செய்யும்போது அறியாமல் செய்தாலும் அவன் குற்றவாளிதான். எனவே அவன் கர்த்தருக்கு குற்ற நிவாரணப் பலியைச் செலுத்தியே ஆக வேண்டும்” என்று கூறினார்.
தன் குமாரனாகிய அப்சலோமிடமிருந்து தப்பிச் சென்றபோது தாவீது பாடிய பாட்டு
3 கர்த்தாவே, எனக்குப் பகைவர்கள் அநேகர்,
பல ஜனங்கள் எனக்கெதிராக எழும்புகின்றனர்.
2 பலர் என்னைக் குறித்து, “தேவன் அவனைத் தொல்லையிலிருந்து மீட்கமாட்டார்!” என்று பேசுகின்றனர்.
3 ஆனால் கர்த்தாவே, நீரே எனக்குக் கேடகம். நீரே என் மகிமை.
கர்த்தாவே, நீர் என்னை பிரதானமானவனாக்குகிறீர்!
4 நான் கர்த்தரிடம் ஜெபிப்பேன்.
அவரது பரிசுத்த மலையிலிருந்து அவர் எனக்குப் பதில் தருவார்.
5 நான் படுத்து ஓய்வெடுக்க முடியும், நான் எழும்புவேன் என்பதும் எனக்குத் தெரியும்.
இதை நான் எப்படி அறிவேன்? கர்த்தர் என்னை மூடிப் பாதுகாக்கிறார்!
6 ஆயிரம் வீரர்கள் என்னைச் சூழக்கூடும்.
ஆனால் நான் அப்பகைவர்களுக்கு அஞ்சேன்!
7 கர்த்தாவே, எழும்பும்!
எனது தேவனே, வந்து என்னைப் பாதுக்காப்பீராக!
நீர் வல்லமையுள்ளவர்!
என் தீய பகைவரைக் கன்னத்தில் நீர் அறைந்தால் அவர்கள் பற்களெல்லாம் நொறுங்கும்.
8 கர்த்தரே தம் ஜனங்களைப் பாதுக்காக்கிறார்.
கர்த்தாவே, உம்முடைய ஜனங்களுக்கு நல்லவராயிரும்.
தாவீதின் சங்கீதம். இசைக்குழுவின் தலைவனுக்கு நரம்புக் கருவிகளால் இசைக்கப்பட்டது
4 என் நல்ல தேவனே, நான் உம்மிடம் ஜெபிக்கையில் ஜெபத்தைக் கேட்டருளும்.
என் விண்ணப்பத்தைக் கேளும், என்னிடம் இரக்கமாயிரும்!
என் தொல்லைகளிலிருந்து எனக்கு சற்று விடுதலை தாரும்!
2 ஜனங்களே, எத்தனை நாள் என்னைக் குறித்து அவதூறு பேசுவீர்கள்?
என்னைப்பற்றிச் சொல்ல புதுப்புதுப் பொய்களைத் தேடிக் கொண்டிருக்கிறீர்கள்.
நீங்கள் அப்பொய்களைச் சொல்ல விரும்புகிறீர்கள்.
3 கர்த்தர் தம் நல்ல ஜனங்களின் ஜெபத்தைக் கேட்கிறார்.
கர்த்தரை நோக்கி ஜெபிக்கும்போது, எனக்குச் செவிகொடுக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
4 உங்களை ஏதோ ஒன்று துன்புறுத்துவதினால், நீங்கள் கோபங்கொண்டாலும், பாவம் செய்யாதீர்கள்.
படுக்கைக்குச் செல்கையில் அவற்றைப் பற்றிச் சிந்தியுங்கள், அப்போது அமைதி அடைவீர்கள்.
5 தேவனுக்கு நல்ல பலிகளைக் கொடுத்துக்
கர்த்தர் மேல் நம்பிக்கை வையுங்கள்!
6 “நமக்கு தேவனுடைய நன்மையைக் காட்டுவது யார்?
கர்த்தாவே! பிரகாசமான உமது முகத்தை நாங்கள் காணட்டும்!”
என்று பலர் கூறுகிறார்கள்.
7 கர்த்தாவே! நீர் எனக்கு மகிழ்ச்சியுண்டாக்கினீர்!
தானியமும் திராட்சைரசமும் பெருகிய பண்டிகை நாட்களாகிய அறுவடைக் காலத்தைக் காட்டிலும் இப்போது நான் மகிழ்கிறேன்.
8 நான் படுக்கைக்குச் சென்று சமாதானமாய் உறங்குகிறேன்.
ஏனெனில், கர்த்தாவே, நீர் என்னைப் பாதுகாப்பாய் தூங்கச் செய்கிறீர்.
20 திராட்சைரசமும் மதுவும் ஜனங்களின் சுயக் கட்டுப்பாட்டைக் குலைத்துவிடுகிறது. அவர்கள் சத்தமிட்டு ஆரவாரம் செய்வார்கள். அவர்கள் போதை ஏறி முட்டாள்தனமான செயல்களைச் செய்வார்கள்.
2 ஒரு அரசனின் கோபமானது சிங்கத்தின் கெர்ச்சினையைப் போன்றது. நீ ஒரு அரசனைக் கோபப்படுத்தினால் உன் வாழ்வை இழந்துவிடுவாய்.
3 எந்த முட்டாளும் ஒரு வாதத்தைத் தொடங்கலாம். எனவே வாதம்செய்ய மறுப்பவனை நீ மதிக்க வேண்டும்.
4 ஒரு சோம்பேறி விதைகளை விதைக்கவும் சோம்பேறித்தனமாயிருக்கிறான். அதனால், அறுவடைக் காலத்தில் உணவை எதிர்ப்பார்த்தாலும் அவன் எதையும் பெறுவதில்லை.
5 நல்ல அறிவுரையானது ஆழமான கிணற்றிலிருந்து பெறும் தண்ணீரைப் போன்றது. அதனால் ஒரு அறிவாளி அடுத்தவனிடமிருந்து கற்றுக்கொள்ள கடுமையாக முயற்சிப்பான்.
6 பலர் தம்மை உண்மையுள்ளவர்களாகவும் அன்புள்ளவர்களாகவும் கூறிக்கொள்வார்கள். ஆனால் உண்மையிலேயே அப்படிப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பது அரிது.
7 நல்லவன் நல்ல வாழ்க்கையை வாழ்கின்றான். அவன் பிள்ளைகள் ஆசீர்வதிக்கப்படுகின்றனர்.
8 ஒரு அரசன் நியாயந்தீர்க்க ஆசனத்தில் உட்காரும்போது அவன் தன் கண்களால் சகல தீமைகளையும் கவனிக்க முடியும்.
9 ஒருவன் உண்மையாகவே, தான் செய்கிறவைகளைத் தன்னாலியன்றவரை நன்றாகச் செய்கிறேன் என்று சொல்லமுடியுமா? ஒருவன் பாவம் இல்லாதவன் என்று உண்மையில் சொல்லமுடியுமா? முடியாது.
10 தவறான அளவுக் கருவிகளையும் எடைக் கற்களையும் பயன்படுத்தி மற்றவர்களை ஏமாற்றுகிறவர்களை கர்த்தர் வெறுக்கிறார்.
11 ஒரு குழந்தைகூடத் தனது செயலால் நல்லதா கெட்டதா என்று வெளிப்படுத்த முடியும். அது நல்லதா நேர்மையானதா என்பதை நீ கவனித்தால் அறிந்துகொள்ள முடியும்.
12 பார்ப்பதற்குக் கண்களையும் கேட்பதற்குக் காதுகளையும் கர்த்தர் நமக்காகப் படைத்துள்ளார்.
13 நீ தூக்கத்தை நேசித்தால், நீ ஏழையாகிவிடுவாய். உனது நேரத்தை உழைப்பதில் செலவிடு. உனக்கு உணவு ஏராளமாகக் கிடைக்கும்.
14 உன்னிடமிருந்து எதையாவது வாங்கியவன், “இது நன்றாயில்லை. இதன் விலை அதிகம்” என்கிறான். பிறகு வேறு ஆட்களிடம் போய் தான் நல்ல வியாபாரம் செய்ததாகச் சொல்லிக்கொள்வான்.
15 தங்கமும் வெள்ளியும் ஒருவனைப் பணக்காரன் ஆக்கும். ஆனால் எதைப்பற்றிப் பேசுகிறோமோ, அதை முழுக்க அறிந்துள்ள ஒருவனின் மதிப்பு மிகவும் பெரியது.
16 அடுத்தவனின் கடனுக்கு நீ பொறுப்பேற்றுக்கொண்டால், நீ உனது சட்டையையும் இழந்துவிடுவாய்.
17 ஒருவனை ஏமாற்றிப் பெற்றவை நல்லதுபோன்று தோன்றலாம். ஆனால், முடிவில் அது பயனற்றுப் போய்விடும்.
18 திட்டமிடுவதற்கு முன்பு நல்ல அறிவுரைகளைப் பெறவேண்டும். நீ ஒரு போரைத் துவங்கினால், போர் நடவடிக்கைகளில் சிறந்த அறிவுடையவர்களின் வழிகாட்டுதலைப் பெற்றுக்கொள்.
19 அடுத்தவர்களைப்பற்றி வம்பு பேசுகிறவர்கள் நம்பத்தகாதவர்கள். எனவே அதிகமாகப் பேசுபவர்களோடு நட்புகொள்ளாதே.
20 ஒருவன் தன் தந்தைக்கோ தாய்க்கோ எதிராகப் பேசினால், அவன் அணைந்துகொண்டிருக்கும் விளக்கைப் போன்றவன்.
21 உனது செல்வமானது பெறுவதற்கு எளிதானதாக இருந்தால், அது உனக்கு அத்தனை உயர்வாகத் தோன்றாது.
22 எவனாவது உனக்கு எதிராக எதையாவது செய்தால் நீயாக அவனைத் தண்டிக்க முயலாதே. கர்த்தருக்காகக் காத்திரு. இறுதியில் உன்னை அவர் வெற்றிப்பெறச் செய்வார்.
23 சிலர் சரியில்லாத அளவு முறைகளையும் எடைகளையும் பயன்படுத்துவார்கள். அதனால் அவர்கள் மற்றவர்களை ஏமாற்றுகின்றனர். கர்த்தர் இதனை வெறுக்கிறார். அது அவனை மகிழ்ச்சிக்குட்படுத்தாது.
24 ஒவ்வொருவருக்கும் என்ன நிகழும் என்பதை கர்த்தர் முடிவு செய்கிறார். எனவே ஒருவனுடைய வாழ்க்கையில் என்ன நடக்கும் என்பதை அவன் எவ்வாறு புரிந்துகொள்ள முடியும்.
25 தேவனுக்கு ஏதாவது கொடுப்பதாக வாக்குறுதி சொல்லுமுன் நன்றாகச் சிந்திக்கவேண்டும். இல்லை என்றால் இந்த வாக்குறுதியைத் தராமலேயே இருந்திருக்கலாம் என்று பின்னால் நீ வருந்துவாய்.
26 யார் தீயவர் என்னும் முடிவை அறிவாளியான அரசனே எடுப்பான். அந்த அரசனே அவர்களைத் தண்டிப்பான்.
27 ஒரு மனிதனின் ஆவி கர்த்தருக்கு முன்பாக ஒரு விளக்கைப்போலிருக்கிறது. அவனுள் இருப்பது என்ன என்பதையும் கர்த்தர் அறிவார்.
28 அரசன் உண்மையானவனாகவும் நேர்மையானவனாகவும் இருந்தால் அவன் தன் அதிகாரத்தைக் காத்துக்கொள்வான். அவனது உண்மையான அன்பு ஆட்சியைப் பலப்படுத்தும்.
29 நாம் ஒரு இளைஞனை அவனது வலிமைக்காக விரும்புகிறோம். முதியவரை அவரது முழுமையான வாழ்க்கையைக் காட்டும் நரைத்த முடிக்காக மதிக்கிறோம். அவரது நரைத்த தலைமுடி அவர் ஒரு முழுமையான வாழ்வை வாழ்ந்திருக்கிறார் என்று பொருள் தரும்.
30 நாம் தண்டிக்கப்பட்டால் தவறு செய்வதை நிறுத்திவிடுவோம். வேதனையானது ஒருவனை மாற்றும்.
கிறிஸ்துவில் புதிய வாழ்க்கை
3 கிறிஸ்துவோடு நீங்கள் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்து விட்டீர்கள். எனவே, பரலோகத்தில் உள்ளவற்றைப் பெற முயற்சி செய்யுங்கள். அங்கே தேவனுடைய வலது பக்கத்தில் கிறிஸ்து வீற்றிருக்கிறார். 2 பூமியில் உள்ளவற்றைப் பற்றி, சிந்திக்காமல் பரலோகில் உள்ளவற்றைப் பற்றிச் சிந்தியுங்கள். 3 உங்கள் பழைய பாவ சுபாவமானது இறந்துபோயிற்று. தேவனுக்குள் கிறிஸ்துவோடு உங்கள் புதிய வாழ்க்கை மறைந்திருக்கிறது. 4 கிறிஸ்துவே உங்கள் வாழ்க்கை. அவர் மீண்டும் வரும்போது அவரது மகிமையில் பங்கு கொள்வீர்கள்.
5 தீமை, பாலியல் குற்றம், பாவ காரியங்களின் ஆளுகைக்கு உள்ளாகுதல், மோகம், தீய ஆசைகள் போன்ற உங்கள் பாவங்களை வாழ்விலிருந்து விலக்குங்கள். போலியான கடவுளுக்குச் சேவை செய்வது என்பதே இவ்விருப்பங்களின் உண்மை அர்த்தம். 6 இவை தேவனைக் கோபப்படுத்தும். 7 இவற்றை நீங்களும் உங்கள் கடந்துபோன பாவ வாழ்க்கையில் செய்தீர்கள்.
8 ஆனால் இப்பொழுது கோபம், மூர்க்கம், அடுத்தவர் மனம் புண்படும்படி பேசுதல், கெட்ட வார்த்தைகளை உபயோகித்தல் ஆகியவற்றை உங்கள் வாழ்வில் இருந்து விலக்கி வையுங்கள். 9 ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதீர்கள். ஏனென்றால் முன்பு நீங்கள் செய்து வந்த பாவச் செயல்களோடு உங்கள் கடந்தகால பாவ வாழ்க்கையை விட்டிருக்கிறீர்கள். 10 நீங்கள் புதிய வாழ்க்கையை வாழ இருக்கிறீர்கள். உங்கள் புதிய வாழ்க்கையில் நீங்களும் தொடர்ச்சியாக புதியவர் ஆகிறீர்கள். நீங்கள் உங்களைப் படைத்த தேவனைப் போல மாறி வருகிறீர்கள். இப்புதிய வாழ்க்கை உங்களுக்கு தேவனைப் பற்றிய உண்மை அறிவைக் கொடுக்கும். 11 இப்புதிய வாழ்வில் கிரேக்கர்களுக்கும், யூதர்களுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை. விருத்தசேதனம் செய்தவர்களுக்கும், செய்யாதவர்களுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை. நாகரீகமுள்ளவனென்றும் நாகரீகமில்லாதவனென்றும் வேறுபாடில்லை. அடிமைகளுக்கும் சுதந்திரமானவர்களுக்கும் இடையே வேறுபாடுகள் எதுவும் இல்லை. ஆனால் விசுவாசமுள்ள அனைவரிடமும் கிறிஸ்து இருக்கிறார். எல்லாவற்றையும்விட அவரே அவர்களுக்கு முக்கியமானவர்.
12 தேவன் உங்களைத் தேர்ந்தெடுத்து, தன் பரிசுத்த மக்களாக்கினார். அவர் உங்களை நேசிக்கிறார். ஆகவே எப்பொழுதும் நல்லவற்றையே செய்யுங்கள். இரக்கத்தோடும் அருளுணர்வோடும் பிறரிடம் மனவுருக்கம், பணிவு, சாந்தம், பொறுமை ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள். 13 ஒருவர்மேல் ஒருவர் கோபப்படாதீர்கள். மன்னித்துவிடுங்கள். மற்றொருவன் உங்களுக்கு எதிராகத் தவறு செய்தால் அதை மன்னியுங்கள். நீங்கள் மற்றவர்களை மன்னிக்கவேண்டும். ஏனென்றால் கர்த்தர் உங்களை மன்னித்தார். 14 இவை அனைத்தையும் செய்யுங்கள், ஆனால் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதுதான் மிக முக்கியமானது. அன்பு ஒன்றுதான் உங்கள் அனைவரையும் முழு ஒருமையுடன் ஒற்றுமையாகச் சேர்க்க வல்லது. 15 கிறிஸ்துவின் சமாதானம் உங்கள் சிந்தனைகளை ஆள்வதாக. இதற்காக நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள். எப்போதும் நன்றியுள்ளவர்களாய் இருங்கள்.
16 கிறிஸ்துவின் போதனைகள் உங்களுக்குள் சிறந்த செல்வமாக இருக்கட்டும். ஒருவருக்கொருவர் போதிக்கவும், பலப்படுத்தவும் உங்கள் முழு ஞானத்தையும் பயன்படுத்துங்கள். உங்கள் இதயத்தில் தேவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் சங்கீதம், கீர்த்தனைகள், ஞானப்பாட்டு போன்றவற்றை தேவனைக் குறித்து உங்கள் இதயங்களில் சுரக்கும் நன்றியுணர்வோடு பாடுங்கள். 17 நீங்கள் சொல்கின்றவற்றையும் செய்கின்றவற்றையும் உங்கள் கர்த்தராகிய இயேசுவின் பெயரிலேயே செய்யுங்கள். பிதாவாகிய தேவனுக்கு இயேசுவின் மூலம் நன்றி செலுத்துங்கள்.
மற்றவர்களோடு உங்கள் புதிய வாழ்க்கை
18 மனைவிமார்களே! உங்கள் கணவரின் அதிகாரத்துக்குக் கீழ்ப்படியுங்கள். கர்த்தருக்குள் நீங்கள் செய்யத்தக்க சரியான செயல் இதுவே.
19 கணவன்மார்களே! உங்கள் மனைவியரை நேசியுங்கள். அவர்களோடு சாந்தமாய் இருங்கள்.
20 குழந்தைகளே! எல்லா வகையிலும் உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள். இதுவே கர்த்தரை மகிழ்ச்சிப்படுத்துகிறது.
21 பிதாக்களே! உங்கள் பிள்ளைகளை விரக்தியடையச் செய்யாதீர்கள். அவர்களோடு கடுமையாக இருந்தால் அவர்கள் முயற்சி செய்யும் தம் ஆவலை இழந்துவிடுவார்கள்.
22 வேலைக்கரார்களே! எல்லா வகையிலும் உங்கள் மண்ணுலக எஜமானர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள். உங்கள் எஜமானர்கள் உங்களுக்கு அருகில் இல்லாதபோதும், எல்லாக் காலங்களிலும் கீழ்ப்படியுங்கள். மனிதர்களை நீங்கள் சந்தோஷப்படுத்தவில்லை என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் அதைச் செய்துகொண்டிருப்பது நீங்கள் தேவனை மதிக்கிறீர்கள் என்பதாகும். நீங்கள் கர்த்தரை மதிப்பவர்கள்,ஆதலால் கபடமில்லாமல் பணிசெய்யுங்கள். 23 நீங்கள் எந்த வேலை செய்தாலும் அதனை இதயப்பூர்வமாகச் செய்யுங்கள். மனிதருக்காக அல்ல, கர்த்தருக்காகச் செய்கிறோம் என்று எண்ணுங்கள். 24 நீங்கள் உங்களுக்குரிய விருதை கர்த்தரிடம் இருந்து பெறுவீர்கள் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். வாக்களித்தபடி அவர் உங்களுக்குத் தருவார். நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு சேவை செய்கிறீர்கள். 25 எவனொருவன் தவறு செய்கிறானோ, அவன் அத்தவறுக்காகத் தண்டிக்கப்படுவான் என்பதை மறவாதீர்கள். கர்த்தர் அனைவரையும் சமமாகவே நடத்துகிறார்.
2008 by World Bible Translation Center