M’Cheyne Bible Reading Plan
இஸ்ரவேலரை மோசே கணக்கிடுதல்
1 ஆசரிப்புக் கூடாரத்திலே கர்த்தர் மோசேயிடம் பேசினார். இது சீனாய் பாலைவனத்தில் நடந்தது. இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தை விட்டுப் புறப்பட்ட இரண்டாவது ஆண்டின் இரண்டாம் மாதத்தின் முதல் நாளில் இது நடந்தது. கர்த்தர் மோசேயிடம், 2 “இஸ்ரவேல் ஜனங்கள் தொகையை கணக்கிடு. ஒவ்வொரு மனிதனையும் அவனது குடும்பத்தோடும் கோத்திரங்களோடும் பட்டியலிடு. 3 இஸ்ரவேல் ஜனங்களில் இருபது வயது அல்லது அதற்கு மேலுள்ள எல்லா ஆண்களையும் நீயும் ஆரோனும் எண்ணிக் கணக்கிடுங்கள். (இந்த ஆண்கள்தான் இஸ்ரவேல் படையில் பணிபுரிய வேண்டும்.) இவர்களை குழுவின்படி கணக்கிடுக. 4 ஒவ்வொரு கோத்திரத்திற்கும் ஒவ்வொரு மனிதன் உங்களுக்கு உதவுவான். அவனே அந்தக் கோத்திரத்துக்குத் தலைவனாக இருப்பான். 5 உங்களுக்குத் துணையாக நின்று உங்களுக்கு உதவி செய்பவர்களின் பெயர்கள் பின்வருவதாகும்.
ரூபனின் கோத்திரத்திலிருந்து சேதேயூருடைய மகன் எலிசூர்;
6 சிமியோனின் கோத்திரத்திலிருந்து சூரிஷதாயின் மகன் செலூமியேல்;
7 யூதாவின் கோத்திரத்திலிருந்து அம்மினதாபின் மகன் நகசோன்;
8 இசக்காரின் கோத்திரத்திலிருந்து சூவாரின் மகன் நெதனெயேல்;
9 செபுலோனின் கோத்திரத்திலிருந்து ஏலோனின் மகன் எலியாப்;
10 யோசேப்பின் சந்ததியிலிருந்து யோசேப்பின்
மகனான எப்பிராயீமின் கோத்திரத்திலிருந்து அம்மியூதின் மகன் எலிஷாமா;
யோசேப்பின் மகனான மனாசேயின் கோத்திரத்திலிருந்து பெதாசூரின் மகன் கமாலியேல்;
11 பென்யமீனின் கோத்திரத்திலிருந்து கீதெயோனின் மகன் அபீதான்;
12 தாணின் கோத்திரத்திலிருந்து அம்மிஷதாயின் மகன் அகியேசேர்;
13 ஆசேரின் கோத்திரத்திலிருந்து ஓகிரானின் மகன் பாகியேல்
14 காத்தின் கோத்திரத்திலிருந்து தேகுவேலின் மகன் எலியாசாப்;
15 நப்தலியின் கோத்திரத்திலிருந்து ஏனானின் மகன் அகீரா” என்று கூறினார்.
16 இவர்கள் அனைவரும் தங்களுடைய கோத்திரங்களுக்கு தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 17 மோசேயும் ஆரோனும் இவர்களைத் தலைவர்களாக ஏற்றுக்கொண்டனர். 18 மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் ஜனங்களைச் சேர்த்துக் கூட்டினர். பிறகு, அவர்கள் தங்கள் குடும்பம், மற்றும் கோத்திரங்களின்படி பட்டியலிடப்பட்டனர். இருபது வயதும் அதற்கு மேலும் உள்ள எல்லா ஆண்களும் பட்டியலிடப்பட்டனர். 19 கர்த்தருடைய கட்டளையின்படியே மோசே சரியாக செய்து முடித்தான். ஜனங்கள் சீனாய் பாலைவனத்தில் இருக்கும்போதே, மோசே அவர்களை எண்ணிக் கணக்கிட்டான்.
20 அவர்கள் ரூபனின் கோத்திரத்தைக் கணக்கிட்டார்கள். (இஸ்ரவேலின் மூத்த மகன் ரூபன்.) இருபது வயதும் அதற்கு மேலும் உள்ள படையில் பணியாற்றும் தகுதியுடைய எல்லா ஆண்களும் எண்ணிக் கணக்கிடப்பட்டனர். அவர்கள் தம் கும்பத்தாரோடும், கோத்திரங்களோடும் எண்ணி பட்டியலிடப்பட்டனர். 21 ரூபனின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 46,500.
22 சிமியோனின் கோத்திரத்தில் உள்ளவர்களை எண்ணினர். இருபது வயதும் அதற்கு மேலும் உள்ள படையில் பணியாற்றும் தகுதியுடைய எல்லா ஆண்களும் பட்டியலிடப்பட்டனர். அவர்கள் தங்கள் குடும்பத்தாரோடும், கோத்திரங்களோடும் எண்ணிப் பட்டியலிடப்பட்டனர். 23 சிமியோனின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களில் மொத்த எண்ணிக்கை 59,300.
24 காத்தின் கோத்திரத்தில் உள்ளவர்களை எண்ணினார்கள். இருபது வயதும், அதற்கு மேலும் உள்ள படையில் பணியாற்றும் தகுதியுடைய எல்லா ஆண்களும் எண்ணிப் பட்டியலிடப்பட்டனர். அவர்கள் தங்கள் குடும்பத்தாரோடும், கோத்திரங்களோடும் எண்ணிப் பட்டியலிடப்பட்டனர். 25 காத்தின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 45,650.
26 யூதாவின் கோத்திரத்தில் இருபது வயதும், அதற்கு மேலும் உள்ள படையில் பணியாற்றும் தகுதியுடைய எல்லா ஆண்களையும் பட்டியலிட்டனர். அவர்கள் குடும்பத்தாரோடும், கோத்திரங்களோடும் எண்ணிப் பட்டியலிடப்பட்டனர். 27 யூதாவின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 74,600.
28 இசக்காரின் கோத்திரத்தில் உள்ளவர்களை எண்ணினார்கள். இருபது வயதும் அதற்கு மேலும் உள்ள படையில் பணியாற்றும் தகுதியுடைய எல்லா ஆண்களையும் பட்டியலிட்டனர். அவர்கள் குடும்பத்தாரோடும், கோத்திரங்களோடும் எண்ணிப் பட்டியலிடப்பட்டனர். 29 இசக்காரின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 54,400.
30 செபுலோனின் கோத்திரத்தில் உள்ளவர்களை எண்ணினார்கள். இருபது வயதும் அதற்கு மேலும் உள்ள படையில் பணியாற்றும் தகுதியுடைய எல்லா ஆண்களையும் பட்டியலிட்டனர். அவர்கள் குடும்பத்தாரோடும், கோத்திரங்களோடும் எண்ணிப் பட்டியலிடப்பட்டனர். 31 செபுலோனின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 57,400.
32 எப்பிராயீமின் கோத்திரத்தில் உள்ளவர்களை எண்ணினார்கள். (இவன் யோசேப்பின் மகன்) இருபது வயதும், அதற்கு மேலும் உள்ள படையில் பணியாற்றும் தகுதியுடைய எல்லா ஆண்களையும் பட்டியலிட்டனர். அவர்கள் குடும்பத்தாரோடும், கோத்திரங்களோடும் எண்ணிப் பட்டியலிடப்பட்டனர். 33 எப்பிராயீமின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 40,500.
34 மனாசேயின் கோத்திரத்தில் உள்ளவர்களை அவர்கள் எண்ணினார்கள். (மனாசேயும் யோசேப்பின் மகன்.) இருபது வயதும், அதற்கு மேலும் உள்ள படையில் பணியாற்றும் தகுதியுடைய எல்லா ஆண்களையும் பட்டியலிட்டனர். அவர்கள் குடும்பத்தினரோடும், கோத்திரங்களோடும் எண்ணிப் பட்டியலிடப்பட்டனர். 35 மனாசேயின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 32,200.
36 அவர்கள் பென்யமீனின் கோத்திரத்தில் உள்ளவர்களை எண்ணினார்கள். இருபது வயதும் அதற்கு மேலும் உள்ள படையில் பணியாற்றும் தகுதியுடைய எல்லா ஆண்களையும் பட்டியலிட்டனர். அவர்கள் குடும்பத்தினரோடும், கோத்திரங்களோடும் எண்ணிப் பட்டியலிடப்பட்டனர். 37 பென்யமீனின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 35,400.
38 அவர்கள் தாணின் கோத்திரத்தில் உள்ளவர்களை எண்ணினார்கள். இருபது வயதும், அதற்கு மேலும் உள்ள படையில் பணியாற்றும் தகுதியுடைய எல்லா ஆண்களையும் பட்டியலிட்டனர். அவர்கள் குடும்பத்தினரோடும், கோத்திரங்களோடும் எண்ணிப் பட்டியலிடப்பட்டனர். 39 தாணின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 62,700.
40 ஆசேரின் கோத்திரத்தில் உள்ளவர்களை அவர்கள் எண்ணினார்கள். இருபது வயதும், அதற்கு மேலும் உள்ள படையில் பணியாற்றும் தகுதியுடைய எல்லா ஆண்களையும் பட்டியலிட்டனர். அவர்கள் குடும்பத்தினரோடும், கோத்திரங்களோடும் எண்ணிப் பட்டியலிடப்பட்டனர். 41 ஆசேரின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 41,500.
42 அவர்கள் நப்தலியின் கோத்திரத்தில் உள்ளவர்களை எண்ணினார்கள். இருபது வயதும், அதற்கு மேலும் உள்ள படையில் பணியாற்றும் தகுதியுடைய எல்லா ஆண்களையும் பட்டியலிட்டனர். அவர்கள் குடும்பத்தினரோடும், கோத்திரங்களோடும் எண்ணிப் பட்டியலிடப்பட்டனர். 43 நப்தலியின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 53,400.
44 மோசேயும், ஆரோனும், பன்னிரண்டு இஸ்ரவேல் தலைவர்களும், இந்த ஜனங்களை எண்ணினார்கள். (ஒவ்வொரு கோத்திரத்துக்கும் ஒவ்வொரு தலைவர் இருந்தனர்.) 45 அவர்கள் இருபது வயதும் அதற்கு மேலும் உள்ள படையில் பணியாற்றும் தகுதி கொண்டவர்களை எண்ணினார்கள். ஒவ்வொருவனும், தனது குடும்பத்தோடு பட்டியலிடப்பட்டனர். 46 அவர்கள் கணக்கிட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 603,550.
47 லேவி கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் இஸ்ரவேலர்களோடு சேர்த்து எண்ணப்படவில்லை. 48 கர்த்தர் மோசேயிடம், 49 “லேவியின் கோத்திரத்தில் உள்ள ஆண்களை எண்ணவேண்டாம். அவர்களை இஸ்ரவேல் ஜனங்களோடு சேர்க்க வேண்டாம். 50 லேவியர்களிடம், அவர்கள் உடன்படிக்கையின் பரிசுத்தக் கூடாரத்திற்கு பொறுப்பானவர்கள் என்று சொல். அவர்கள் அக்கூடாரத்தையும், அதற்குரிய வேலைகளையும் கவனித்துக்கொள்ள வேண்டும். அவர்கள் பரிசுத்தக் கூடாரத்தையும், அதிலுள்ள பொருட்களையும் சுமக்கவேண்டும். அவர்கள் தங்கள் முகாமை அக்கூடாரத்தைச் சுற்றிலும் அமைத்து தங்கியிருந்து, அவற்றைக் கவனித்துக்கொள்ள வேண்டும். 51 பரிசுத்தக் கூடாரமானது இடம் பெயரும்போதும், அதற்கான வேலைகளை லேவியர்களே செய்யவேண்டும். பரிசுத்தக் கூடாரமானது நிறுவப்படும்போதெல்லாம் அதற்குரிய வேலைகளையும் லேவியர்களே செய்ய வேண்டும். அவர்களே பரிசுத்தக் கூடாரத்தின் சகல பொறுப்புகளுக்கும் உரியவர்கள். லேவியின் கோத்திரத்தைச் சேராத ஒருவன், பரிசுத்தக் கூடாரத்தின் வேலைகளைச் செய்ய முயன்றால் அவன் கொல்லப்படவேண்டும். 52 இஸ்ரவேல் ஜனங்கள், தனித்தனிக் குழுக்களாக தங்கள் முகாமை அமைத்துக்கொள்ள வேண்டும். தங்கள் குடும்பக் கொடியின் அருகிலேயே ஒவ்வொருவனும் தங்கவேண்டும். 53 ஆனால், லேவியர்கள் தங்கள் முகாமை பரிசுத்தக் கூடாரத்தைச் சுற்றியே அமைத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் உடன்படிக்கையின் பரிசுத்தக் கூடாரத்தைப் பாதுகாக்கவேண்டும். அதனால் இஸ்ரவேல் ஜனங்களுக்கு எவ்விதத் தீமையும் ஏற்படாமல் இருக்கும்” என்றார்.
54 இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும், மோசேக்கு கர்த்தர் கட்டளையிட்டபடியே கீழ்ப்படிந்தனர்.
தாவீதின் பாடல்
35 கர்த்தாவே, என் யுத்தங்களையும்
என் போர்களையும் நீரே நடத்தும்.
2 கர்த்தாவே, சிறியதும் பெரியதுமான கேடகத்தை எடுத்துக்கொள்ளும்.
எழுந்திருந்து எனக்கு உதவும்.
3 ஈட்டியை எடுத்து என்னைத் துரத்தும் ஜனங்களோடு போரிடும்.
கர்த்தாவே, என் ஆத்துமாவை நோக்கி, “நான் உன்னைக் காப்பாற்றுவேன்” என்று கூறும்.
4 சிலர் என்னைக் கொல்ல முயல்கிறார்கள்.
அவர்கள் ஏமாறவும் வெட்கமடையவும் செய்யும். அவர்கள் திரும்பி ஓடிவிடச் செய்யும்.
அவர்கள் என்னைக் காயப்படுத்தத் திட்டமிடுகிறார்கள்.
அவர்களை வெட்கமடையச் செய்யும்.
5 காற்றால் பறக்கடிக்கும் பதரைப்போல் அவர்களை மாற்றும்.
கர்த்தருடைய தூதன் அவர்களைத் துரத்தட்டும்.
6 கர்த்தாவே, அவர்களின் பாதை இருளாகவும், வழுக்கலுடையதாகவும் ஆகட்டும்.
கர்த்தருடைய தூதன் அவர்களைத் துரத்தட்டும்.
7 நான் பிழையேதும் செய்யவில்லை.
ஆனால் அவர்கள் என்னைத் தங்கள் கண்ணியில் சிக்கவைக்க முயல்கிறார்கள்.
காரணமின்றி அவர்கள் என்னைச் சிக்கவைக்க முயல்கிறார்கள்.
8 எனவே கர்த்தாவே, அவர்களே தங்கள் கண்ணிகளில் விழட்டும்.
அவர்கள் தங்கள் வலைகளில் தடுமாறட்டும்.
அறியாத தீங்கு அவர்களைப் பிடிக்கட்டும்.
9 அப்போது நான் கர்த்தரில் களிகூருவேன்.
அவர் என்னை மீட்கும்போது நான் சந்தோஷம்கொள்வேன்.
10 “கர்த்தாவே, உம்மைப் போன்றோர் யாருமில்லை.
கர்த்தாவே, பலமான ஜனங்களிடமிருந்து நீர் ஏழையைக் காப்பாற்றுகிறீர்.
ஏழையினும் கீழ்ப்பட்ட ஏழைகளின் பொருள்களைக் கவரும் கயவர்களிடமிருந்து
அவர்களைக் காப்பாற்றுகிறீர்” என்று என் முழு மனதோடும் கூறுவேன்.
11 சாட்சிகள் சிலர் என்னைத் துன்புறுத்தத் திட்டமிடுகின்றனர்.
அந்த ஜனங்கள் கேள்விகள் எழுப்புகின்றனர்.
அவர்கள் பேசுவதைக் குறித்து நான் அறியேன்.
12 நான் நற்காரியங்களையே செய்திருக்கிறேன்.
ஆனால் அந்த ஜனங்கள் எனக்குத் தீய காரியங்களைச் செய்கின்றனர்.
கர்த்தாவே, தகுதியான நற்காரியங்களை எனக்குத் தாரும்.
13 அந்த ஜனங்கள் நோயுற்றபோது, அவர்களுக்காக வருந்தினேன்.
உணவு உண்ணாமல் என் துக்கத்தை வெளிப்படுத்தினேன்.
அவர்களுக்காக ஜெபித்ததினால் நான் பெறும் பலன் இதுவா?
14 அந்த ஜனங்களுக்காகத் துக்கத்தின் ஆடைகளை உடுத்திக்கொண்டேன்.
அந்த ஜனங்களை என் நண்பர்களைப் போலவும், என் சகோதரர்களைப்போலவும் நடத்தினேன்.
தாயை இழந்த மனிதன் அழுவதைப்போன்று நான் துக்கமுற்றேன்.
அந்த ஜனங்களுக்காக என் துக்கத்தை வெளிப்படுத்துவதற்குக் கறுப்பு நிற ஆடைகளை உடுத்திக் கொண்டேன்.
துக்கத்தால் தலை குனிந்து நடந்தேன்.
15 ஆனால் என் தவற்றுக்கு அந்த ஜனங்கள் நகைத்தனர்.
அந்த ஜனங்கள் உண்மை நண்பர்கள் அல்ல.
ஜனங்களை நான் அறிந்திருக்கவில்லை.
அந்த ஜனங்கள் என்னைச் சூழ்ந்து தாக்கினார்கள்.
16 அவர்கள் தீய மொழிகளைப் பேசி என்னைப் பரிகசித்தார்கள்.
அவர்கள் பற்களைக் கடித்துத் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினார்கள்.
17 என் ஆண்டவரே, அத்தீய காரியங்கள் நடப்பதை எத்தனைக் காலம் பொறுத்திருப்பீர்?
அந்த ஜனங்கள் என்னை அழிக்க முயலுகிறார்கள்.
கர்த்தாவே, என் உயிரைக் காப்பாற்றும் குரூரமான சிங்கம் போன்றவர்களாகிய அத்தீயோரிடமிருந்து என் ஆருயிரைக் காப்பாற்றும்.
18 கர்த்தாவே, பெரும் சபையில் உம்மைத் துதிப்பேன்.
வல்லமைமிக்க ஜனங்கள் மத்தியில் உம்மைத் துதிப்பேன்.
19 பொய் பேசுகிற என் பகைவர்கள் எப்போதும் நகைத்துக்கொண்டிருக்க முடியாது.
தங்களின் இரகசிய திட்டங்களுக்காக என் பகைவர்கள் கண்டிப்பாகத் தண்டனை பெறுவார்கள்.
20 என் பகைவர்கள் சமாதானத்திற்கான திட்டங்களை நிச்சயமாக வகுக்கவில்லை.
இந்நாட்டிலுள்ள சமாதானமான ஜனங்களுக்குத் தீமைகள் செய்வதற்கு இரகசிய திட்டங்களை அவர்கள் வகுக்கிறார்கள்.
21 என் பகைவர்கள் என்னைக்குறித்துத் தீய காரியங்களையே பேசுகிறார்கள்.
அவர்கள் மகிழ்ச்சியடைந்து “ஆஹா!
நீ என்ன செய்கிறாய் என்பதை நாங்கள் அறிவோம்” என்கிறார்கள்.
22 கர்த்தாவே, உண்மையில் நடப்பவற்றை நீர் நிச்சயமாகப் பார்க்கமுடியும்.
எனவே சும்மா இராதேயும்.
என்னை விட்டு விலகாதேயும்.
23 கர்த்தாவே விழித்தெழும், எழுந்திரும்.
என் தேவனே, என் ஆண்டவரே, எனக்காகப் போரிட்டு நியாயமளியும்.
24 எனது தேவனாகிய கர்த்தாவே, தக்க முறையில் என்னை நியாயந்தீரும்.
அந்த ஜனங்கள் என்னைப் பார்த்து நகைக்கவிடாதேயும்.
25 அந்த ஜனங்கள், “ஆஹா!
எங்களுக்கு வேண்டியதைப் பெற்றோம்” எனக் கூறவிடாதேயும்.
கர்த்தாவே, “நாங்கள் அவனை அழித்தோம்!”
என அவர்கள் கூறவிடாதேயும்.
26 என் பகைவர்கள் வெட்கி, நாணுவார்கள் என நம்புகிறேன்.
எனக்குத் தீயக் காரியங்கள் நிகழ்ந்தபோது அந்த ஜனங்கள் மகிழ்ச்சியடைந்தார்கள்.
என்னைக் காட்டிலும் தாங்கள் சிறந்தவர்கள் என்று அவர்கள் எண்ணினார்கள்.
எனவே அந்த ஜனங்கள் வெட்கத்தினாலும் இழிவினாலும் மூடப்படட்டும்.
27 எனக்கு நல்ல காரியங்கள் நிகழட்டுமென்று சில ஜனங்கள் விரும்புகிறார்கள்.
அந்த ஜனங்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு வாழுவார்கள் என நான் நம்புகிறேன்.
அந்த ஜனங்கள் எப்போதும், “கர்த்தர் மேன்மையானவர்!
அவரது வேலையாளுக்கு நல்லது எதுவோ அதையே அவர் விரும்புவார்” என்று கூறுகிறார்கள்.
28 எனவே கர்த்தாவே, நீர் எவ்வளவு நல்லவர் என்பதை ஜனங்களுக்குக் கூறுவேன்.
ஒவ்வொரு நாளும் நான் உம்மைத் துதிப்பேன்.
எதிர்காலத்தைத் தைரியமாக எதிர்கொள்
11 நீ எங்கு சென்றாலும் நல்லவற்றையே செய். அப்போது நீ செய்த நன்மைகள் உனக்கே திரும்பவரும்.
2 உனக்குரிய பொருட்களைப் பல்வேறு நற்காரியங்களுக்காகப் பங்கிட்டுக்கொடு. பூமியில் என்னென்ன கேடுகள் நடைபெறும் என்று உனக்குத் தெரியாது.
3 நீ சிலவற்றை உறுதிப்படுத்திக்கொள்ளலாம். மேகம் மழையால் நிறைந்திருந்தால், அது பூமியில் தண்ணீரை ஊற்றும். மரமானது வடக்கே விழுந்தாலும் தெற்கே விழுந்தாலும் விழுந்த இடத்திலேயே கிடக்கும்.
4 ஆனால் சிலவற்றைப்பற்றி உன்னால் உறுதியாகக் கூறமுடியாது. நீ ஒரு வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். ஒருவன் சரியான பருவம் வரட்டுமென்று காத்திருந்தால் அவனால் விதைக்க முடியாது. ஒவ்வொரு மேகத்தையும் பார்த்து மழை வருமோ என்று அஞ்சுகிறவன் ஒருபோதும் அறுவடை செய்யமாட்டான்.
5 காற்றின்வழி யாதென்று உனக்குத் தெரியாது. தாயின் கருவிலே ஒரு குழந்தை எவ்வாறு வளர்கின்றது என்பதும் உனக்குத் தெரியாது. இதைப்போலவே, தேவன் என்ன செய்வார் என்பதும் உனக்குத் தெரியாது. அவர் எல்லாவற்றையும் நிறைவேற்றுவார்.
6 எனவே அதிகாலையிலே நடுவை செய். மாலைவரை உன் வேலையை நிறுத்தாமல் செய். ஏனென்றால், எது உன்னை செல்வந்தனாக்கும் என்பதும் உனக்குத் தெரியாது. நீ செய்கிற அனைத்துமே உனக்கு வெற்றியைத் தரலாம்.
7 உயிரோடு இருப்பது நல்லது. சூரிய வெளிச்சத்தைப் பார்த்துக்கொண்டிருப்பது நல்லது. 8 உன் வாழ்நாளில் உள்ள ஒவ்வொரு நாளையும் நீ அனுபவிக்கவேண்டும். எவ்வளவுகாலம் வாழ்வாய் என்பதுபற்றிக் கவலையில்லை. ஆனால் நீ மரித்துப் போவாய் என்பதை நினைத்துக்கொள். நீ உயிரோடிருக்கும் நாட்களைவிட மரித்த பின் உள்ள நாட்களே மிக அதிகம். நீ மரித்த பிறகு எதையும் செய்யமுடியாது.
இளமையாக இருக்கும்போது தேவனுக்குச் சேவை செய்
9 இளைஞர்களே! இளமையாய் இருக்கும்போதே மகிழ்ச்சியாக இருங்கள். அனுபவியுங்கள். உங்கள் மனம் போனபடி இருங்கள். நீங்கள் விரும்புகிறவற்றைச் செய்யுங்கள். ஆனால் உங்கள் செயல்களையெல்லாம் தேவன் நியாயந்தீர்ப்பார் என்பதை மறந்துவிடாதீர்கள். 10 உங்கள் கோபம் உங்களைக் கட்டுப்படுத்தும்படி விடாதீர்கள். உங்கள் உடல் உங்களைப் பாவம் செய்யத் தூண்டும்படி விடாதீர்கள். ஜனங்கள், இளமையாய் இருக்கும்போது முட்டாள்தனமானவற்றையே செய்வார்கள்.
வாழ்வதற்கேற்ற சரியான வழி
3 கீழ்க்கண்டவற்றைச் செய்ய நினைவில் வைக்கும்படி மக்களிடம் சொல். ஆள்வோரின் அதிகாரிகளுக்கும் அரசு அலுவலகர்களுக்கும் அடங்கி இருக்கவும், நன்மை செய்யத் தயாராக இருக்கவும், 2 யாருக்கும் எதிராகத் தீமையைப் பேசாமல் இருக்கவும், கீழ்ப்படியவும், மற்றவர்களோடு சமாதானமாகவும், மென்மையாகவும் எல்லா மனிதர்களிடமும் மரியாதை காட்டவும் இதனை விசுவாசிகளிடம் கூறு.
3 கடந்த காலத்தில் நாமும் முட்டாளாக இருந்தோம். நம்மிடம் கீழ்ப்படிதல் இல்லை. தவறுகிறவர்களாக நாம் இருந்தோம். பலவித ஆசைகளுக்கும் இன்பங்களுக்கும் அடிமைப்பட்டுக் கிடந்தோம். தீயவற்றைச் செய்து, பொறாமையோடு வாழ்ந்தோம். மக்கள் நம்மை வெறுத்தார்கள். நாமும் ஒருவரையொருவர் வெறுத்தோம். 4 ஆனால் பிறகு, இரட்சகராகிய தேவனுடைய கிருபையும், அன்பும் வெளிப்படுத்தப்பட்டன. 5 தேவனுடன் சரியான வகையில் இருக்கும்பொருட்டு நாம் செய்த எந்த நல்ல செயல்களாலும் இரட்சிக்கப்படவில்லை. அவருடைய கிருபையால் நாம் இரட்சிக்கப்பட்டோம். நம்மைப் புதிய மனிதர்களாக்கும் சுத்திகரிப்பின் மூலமும், பரிசுத்த ஆவியின் புதுப்பிக்கும் வல்லமை மூலமும், அவர் இரட்சித்தார். 6 அவர் நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் அந்தப் பரிசுத்த ஆவியை நம் மீது முழுமையாகப் பொழிந்தார். 7 தேவனது கிருபையால் நாம் அவரோடு நீதிமான்களானோம். தேவன் நமக்கு ஆவியைக் கொடுத்தார். அதனால் நாம் நித்திய வாழ்வைப் பெறமுடியும். அதுவே நாம் நம்பிக்கொண்டிருப்பதும் ஆகும். 8 இந்தப் போதனை உண்மையானது.
மக்கள் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும். இதனை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அப்பொழுது தேவனை நம்பும் மக்கள் தம் வாழ்வை நன்மை செய்வதற்குப் பயன்படுத்த எச்சரிக்கையாக இருப்பர். இவை நல்லவை, எல்லா மக்களுக்கும் பயன் உள்ளவை.
9 முட்டாள்தனமாக வாக்குவாதம் செய்வோர், பயனற்ற குடும்பக் கதைகளைப் பேசுவோர், சண்டைகளைத் தூண்டி விடுவோர், மோசேயின் சட்டங்களைக் குறித்து வாக்குவாதம் செய்வோர் ஆகியோரிடமிருந்து விலகி இரு. அவை எதற்கும் பயனற்றவை, யாருக்கும் உதவாதவை. 10 எவனாவது வாக்குவாதங்களை உருவாக்கினால் அவனை எச்சரிக்கை செய். அவன் மீண்டும் வாக்குவாதம் செய்தால் மேலும் அவனை எச்சரிக்கை செய். அவன் மீண்டும் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தால் அவனது தொடர்பை விட்டுவிடு. 11 ஏனென்றால் இப்படிப்பட்ட ஒருவன் நிலை தவறி, பாவம் செய்கிறவனாக இருக்கிறான் என்பதை நீ அறிந்திருக்கிறாய். இவனது பாவங்களே இவன் தவறானவன் என்பதை நிரூபிக்கிறது.
நினைவில் வைக்கவேண்டியவை
12 நான் உங்களிடம் அர்த்தெமாவையும் தீகிக்குவையும் அனுப்புவேன். அவர்களை நான் அனுப்புகிறபொழுது நீ நிக்கொப்போலிக்கு வந்து என்னைப் பார்க்க முயற்சி செய். நான் மழைக்காலத்தில் அங்கே இருப்பது என்று முடிவு செய்துள்ளேன். 13 வழக்கறிஞனான சேனாவுக்கும், அப்பொல்லோவுக்கும் எவ்விதக் குறைவும் இல்லாதபடி அவர்களை அனுப்பிவை. தமக்குத் தேவையான அனைத்தையும் அடைய அவர்களுக்கு உன்னால் முடிந்த அளவு உதவிசெய். 14 நன்மை செய்வதற்குரியதாகத் தம் வாழ்வைப் பயன்படுத்தும்படி நம் மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும். தேவையானவர்களுக்கு நன்மை செய்யவேண்டும். பிறகு அவர்களின் வாழ்வு பயனற்றதாக இருக்காது.
15 என்னுடன் இருக்கிற எல்லாரும் உனக்கு வாழ்த்து கூறுகின்றனர். விசுவாசத்தில் நம்மை சிநேகிக்கிறவர்களுக்கு நீயும் வாழ்த்து கூறு.
உங்கள் அனைவரோடும் தேவனுடைய கிருபை இருப்பதாக.
2008 by World Bible Translation Center